திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருப்பேணுபெருந்துறை தேவாரத் திருப்பதிகம்

(முதல் திருமுறை 42வது திருப்பதிகம்)

1.42 திருப்பேணுபெருந்துறை

பண் - தக்கராகம்

448

பைம்மா நாகம் பன்மலர்க் கொன்றை பன்றிவெண் கொம்பொன்று பூண்டு
செம்மாந் தையம் பெய்கென்று சொல்லிச் செய்தொழில் பேணியோர் செல்வர்
அம்மா னோக்கிய அந்தளிர் மேனி அரிவையோர் பாக மமர்ந்த
பெம்மான் நல்கிய தொல்புக ழாளர் பேணு பெருந்துறை யாரே.

1.42.1
449

மூவரு மாகி இருவரு மாகி முதல்வனு மாய்நின்ற மூர்த்தி
பாவங்கள் தீர்தர நல்வினை நல்கி பல்கணம் நின்று பணியச்
சாவம தாகிய மால்வரை கொண்டு தண்மதில் மூன்று மெரித்த
தேவர்கள் தேவர் எம்பெரு மானார் தீதில் பெருந்துறை யாரே.

1.42.2
450

செய்பூங் கொன்றை கூவிள மாலை சென்னியுட் சேர்புனல் சேர்த்திக்
கொய்பூங் கோதை மாதுமை பாகங் கூடியோர் பீடுடை வேடர்
கைபோ னான்ற கனிகுலை வாழை காய்குலை யிற்கமு கீனப்
பெய்பூம் பாளை பாய்ந்திழி தேறல் பில்கு பெருந்துறை யாரே.

1.42.3
451

நிலனொடு வானும் நீரொடு தீயும் வாயுவு மாகியோ ரைந்து
புலனொடு வென்று பொய்ம்மைகள் தீர்ந்த புண்ணியர் வெண்பொடிப் பூசி
நலனொடு தீங்குந் தானல தின்றி நன்கெழு சிந்தைய ராகி
மலனொடு மாசும் இல்லவர் வாழும் மல்கு பெருந்துறை யாரே.

1.42.4
452

பணிவா யுள்ள நன்கெழு நாவின் பத்தர்கள் பத்திமை செய்யத்
துணியார் தங்கள் உள்ள மிலாத சுமடர்கள் சோதிப் பரியார்
அணியார் நீல மாகிய கண்டர் அரிசி லுரிஞ்சு கரைமேல்
மணிவாய் நீலம் வாய்கமழ் தேறல் மல்கு பெருந்துறை யாரே.

1.42.5
453

எண்ணார் தங்கள் மும்மதில் வேவ ஏவலங் காட்டிய எந்தை
விண்ணோர் சாரத் தன்னருள் செய்த வித்தகர் வேத முதல்வர்
பண்ணார் பாடல் ஆடல றாத பசுபதி ஈசனோர் பாகம்
பெண்ணாண் ஆய வார்சடை யண்ணல் பேணு பெருந்துறை யாரே.

1.42.6
454

விழையா ருள்ளம் நன்கெழு நாவில் வினைகெட வேதமா றங்கம்
பிழையா வண்ணம் பண்ணிய வாற்றல் பெரியோ ரேத்தும் பெருமான்
தழையார் மாவின் தாழ்கனி யுந்தித் தண்(*)அரி சில்புடை சூழ்ந்த
குழையார் சோலை மென்னடை யன்னங் கூடு பெருந்துறை யாரே.

(*) அரிசில் என்பது ஒரு நதி. அது அரிசொல்ல வந்ததினால்
அரிசொல் நதியென்று கும்பகோணப் புராணத்திற் சொல்லப்படுகின்றது.

1.42.7
455

பொன்னங் கானல் வெண்டிரை சூழ்ந்த பொருகடல் வேலி இலங்கை
மன்ன னொல்க மால்வரை யூன்றி மாமுரண் ஆகமுந் தோளும்
முன்னவை வாட்டிப் பின்னருள் செய்த மூவிலை வேலுடை மூர்த்தி
அன்னங் கன்னிப் பேடையொ டாடி அணவு பெருந்துறை யாரே.

1.42.8
456

புள்வாய் போழ்ந்து மாநிலங் கீண்ட பொருகடல் வண்ணனும் பூவின்
உள்வா யல்லி மேலுறை வானும் உணர்வரி யான்உமை கேள்வன்
முள்வாய் தாளில் தாமரை மொட்டின் முகம்மல ரக்கயல் பாயக்
கள்வாய் நீலம் கண்மல ரேய்க்குங் காமர் பெருந்துறை யாரே.

1.42.9
457

குண்டுந் தேருங் கூறை களைந்துங் கூப்பிலர் செப்பில ராகி
மிண்டும் மிண்டர் மிண்டவை கண்டு மிண்டு செயாது விரும்பும்
தண்டும் பாம்பும் வெண்டலை சூலந் தாங்கிய தேவர் தலைவர்
வண்டுந் தேனும் வாழ்பொழிற் சோலை மல்கு பெருந்துறை யாரே.

1.42.10
458

கடையார் மாடம் நன்கெழு வீதிக் கழுமல வூரன் கலந்து
நடையா ரின்சொல் ஞானசம் பந்தன் நல்ல பெருந்துறை மேய
படையார் சூலம் வல்லவன் பாதம் பரவிய பத்திவை வல்லார்
உடையா ராகி உள்ளமு மொன்றி உலகினில் மன்னுவர் தாமே.

1.42.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சிவாநந்தநாதர், தேவியார் - மலையரசியம்மை.

திருச்சிற்றம்பலம்

Back to Complete First thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Home Page