திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருப்பாம்புரம் தேவாரத் திருப்பதிகம்

(முதல் திருமுறை 41வது திருப்பதிகம்)

1.41 திருப்பாம்புரம்

பண் - தக்கராகம்

437

சீரணி திகழ்திரு மார்பில் வெண்ணூலர் திரிபுர மெரிசெய்த செல்வர்
வாரணி வனமுலை மங்கையோர் பங்கர் மான்மறி யேந்திய மைந்தர்
காரணி மணிதிகழ் மிடறுடை யண்ணல் கண்ணுதல் விண்ணவ ரேத்தும்
பாரணி திகழ்தரு நான்மறை யாளர் பாம்புர நன்னக ராரே.

1.41.1
438

கொக்கிற கோடு கூவிள மத்தங் கொன்றையொ டெருக்கணி சடையர்
அக்கினொ டாமை பூண்டழ காக அனலது ஆடுமெம் மடிகள்
மிக்கநல் வேத வேள்வியு ளெங்கும் விண்ணவர் விரைமலர் தூவப்
பக்கம்பல் பூதம் பாடிட வருவார் பாம்புர நன்னக ராரே.

1.41.2
439

துன்னலி னாடை யுடுத்ததன் மேலோர் சூறைநல் லரவது சுற்றிப்
பின்னுவார் சடைகள் தாழவிட் டாடிப் பித்தராய்த் திரியுமெம் பெருமான்
மன்னுமா மலர்கள் தூவிட நாளும் மாமலை யாட்டியுந் தாமும்
பன்னுநான் மறைகள் பாடிட வருவார் பாம்புர நன்னக ராரே.

1.41.3
440

துஞ்சுநாள் துறந்து தோற்றமு மில்லாச் சுடர்விடு சோதியெம் பெருமான்
நஞ்சுசேர் கண்ட முடையவென் நாதர் நள்ளிருள் நடஞ்செயும் நம்பர்
மஞ்சுதோய் சோலை மாமயி லாட மாடமா ளிகைதன்மே லேறி
பஞ்சுசேர் மெல்லடிப் பாவையர் பயிலும் பாம்புர நன்னக ராரே.

1.41.4
441

நதியத னயலே நகுதலை மாலை நாண்மதி சடைமிசை யணிந்து
கதியது வாகக் காளிமுன் காணக் கானிடை நடஞ்செய்த கருத்தர்
விதியது வழுவா வேதியர் வேள்வி செய்தவர் ஓத்தொலி ஓவாப்
பதியது வாகப் பாவையுந் தாமும் பாம்புர நன்னக ராரே.

1.41.5
442

ஓதிநன் குணர்வார்க் குணர்வுடை யொருவர் ஒளிதிகழ் உருவஞ் சேரொருவர்
மாதினை யிடமா வைத்தவெம் வள்ளல் மான்மறி யேந்திய மைந்தர்
ஆதிநீ யருளென் றமரர்கள் பணிய அலைகடல் கடையவன் றெழுந்த
பாதிவெண் பிறைசடை வைத்தவெம் பரமர் பாம்புர நன்னக ராரே.

1.41.6
443

மாலினுக் கன்று சக்கர மீந்து மலரவற் கொருமுக மொழித்து
ஆலின்கீ ழறமோர் நால்வருக் கருளி அனலது ஆடுமெம் மடிகள்
காலனைக் காய்ந்து தங்கழ லடியாற் காமனைப் பொடிபட நோக்கிப்
பாலனுக் கருள்கள் செய்தவெம் மடிகள் பாம்புர நன்னக ராரே.

1.41.7
444

விடைத்தவல் லரக்கன் வெற்பினை யெடுக்க மெல்லிய திருவிர லூன்றி
அடர்த்தவன் றனக்கன் றருள்செய்த வடிகள் அனலது ஆடுமெம் மண்ணல்
மடக்கொடி யவர்கள் வருபுன லாட வந்திழி அரிசிலின் கரைமேற்
படப்பையிற் கொணர்ந்து பருமணி சிதறும் பாம்புர நன்னக ராரே.

1.41.8
445

கடிபடு கமலத் தயனொடு மாலுங் காதலோ டடிமுடி தேடச்
செடிபடு வினைகள் தீர்த்தருள் செய்யுந் தீவணர் எம்முடைச் செல்வர்
முடியுடையமரர் முனிகணத் தவர்கள் முறைமுறை யடிபணிந் தேத்தப்
படியது வாகப் பாவையுந் தாமும் பாம்புர நன்னக ராரே.

1.41.9
446

குண்டர்சாக் கியருங் குணமிலா தாருங் குற்றுவிட் டுடுக்கையர் தாமுங்
கண்டவா றுரைத்துக் கால்நிமிர்த் துண்ணுங் கையர்தாம் உள்ளவா றறியார்
வண்டுசேர் குழலி மலைமகள் நடுங்க வாரணம் உரிசெய்து போர்த்தார்
பண்டுநாம் செய்த பாவங்கள் தீர்ப்பார் பாம்புர நன்னக ராரே.

1.41.10
447

பார்மலிந் தோங்கிப் பருமதில் சூழ்ந்த பாம்புர நன்னக ராரைக்
கார்மலிந் தழகார் கழனிசூழ் மாடக் கழுமல முதுபதிக் கவுணி
நார்மலிந் தோங்கும் நால்மறை ஞான சம்பந்தன் செந்தமிழ் வல்லார்
சீர்மலிந் தழகார் செல்வம தோங்கிச் சிவனடி நண்ணுவர் தாமே.

1.41.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - பாம்புரேசர்,
பாம்புரநாதர் என்றும் பாடம். தேவியார் - வண்டமர்பூங்குழலம்மை,
வண்டார்பூங்குழலி என்றும் பாடம்.

திருச்சிற்றம்பலம்

Back to Complete First thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Home Page