திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

(முதல் திருமுறை)

இசைப் பயிற்சி:-

Get the Flash Player to see this player.

1.39 திருவேட்களம்

பண் - தக்கராகம்

அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல்	
  ஆரழல் அங்கை அமர்ந்திலங்க	
மந்த முழவம் இயம்ப	
  மலைமகள் காண நின்றாடிச்	
சந்த மிலங்கு நகுதலை கங்கை	
  தண்மதி யம்மய லேததும்ப	
வெந்தவெண் ணீறுமெய் பூசும்	
  வேட்கள நன்னக ராரே.	1.39.1
	
சடைதனைத் தாழ்தலும் ஏறமு டித்துச்	
  சங்கவெண் தோடு சரிந்திலங்கப்	
புடைதனிற் பாரிடஞ் சூழப்	
  போதரு மாறிவர் போல்வார்	
உடைதனில் நால்விரற் கோவண ஆடை	
  உண்பதும் ஊரிடு பிச்சைவெள்ளை	
விடைதனை யூர்தி நயந்தார்	
  வேட்கள நன்னக ராரே.	1.39.2
	
பூதமும் பல்கண மும்புடை சூழப்	
  பூமியும் விண்ணும் உடன்பொருந்தச்	
சீதமும் வெம்மையு மாகிச்	
  சீரொடு நின்றவெஞ் செல்வர்	
ஓதமுங் கானலுஞ் சூழ்தரு வேலை	
  உள்ளங் கலந்திசை யாலெழுந்த	
வேதமும் வேள்வியும் ஓவா	
  வேட்கள நன்னக ராரே.	1.39.3
	
அரைபுல்கும் ஐந்தலை யாட லரவம்	
  அமையவெண் கோவணத் தோடசைத்து	
வரைபுல்கு மார்பிலொராமை	
  வாங்கி யணிந்த வர்தாந்	
திரைபுல்கு தெண்கடல் தண்கழி யோதந்	
  தேனலங் கானலில் வண்டுபண்செய்ய	
விரைபுல்கு பைம்பொழில் சூழ்ந்த	
  வேட்கள நன்னக ராரே.	1.39.4
	
பண்ணுறு வண்டறை கொன்றை யலங்கல்	
  பால்புரை நீறுவெண் ணூல்கிடந்த	
பெண்ணுறு மார்பினர் பேணார்	
  மும்மதி லெய்த பெருமான்	
கண்ணுறு நெற்றி கலந்தவெண் திங்கட்	
  கண்ணியர் விண்ணவர் கைதொழு தேத்தும்	
வெண்ணிற மால்விடை அண்ணல்	
  வேட்கள நன்னக ராரே.	1.39.5
	
கறிவளர் குன்றம் எடுத்தவன் காதற்	
  கண்கவ ரைங்கணை யோனுடலம்	
பொறிவளர் ஆரழ லுண்ணப்	
  பொங்கியபூத புராணர்	
மறிவள ரங்கையர் மங்கையொர் பங்கர்	
  மைஞ்ஞிற மானுரி தோலுடையாடை	
வெறிவளர் கொன்றையந் தாரார்	
  வேட்கள நன்னக ராரே.	1.39.6
	
மண்பொடிக் கொண்டெரித் தோர்சுடலை	
  மாமலை வேந்தன் மகள்மகிழ	
நுண்பொடிச் சேரநின் றாடி	
  நொய்யன செய்யல் உகந்தார்	
கண்பொடி வெண்டலை யோடுகை யேந்திக்	
  காலனைக் காலாற் கடிந்துகந்தார்	
வெண்பொடிச் சேர்திரு மார்பர்	
  வேட்கள நன்னக ராரே.	1.39.7
	
ஆழ்தரு மால்கடல் நஞ்சினை யுண்டார்	
  அமுத மமரர்க் கருளி	
சூழ்தரு பாம்பரை யார்த்துச்	
  சூலமோ டொண்மழு வேந்தித்	
தாழ்தரு புன்சடை யொன்றினை வாங்கித்	
  தண்மதி யம்மய லேததும்ப	
வீழ்தரு கங்கை கரந்தார்	
  வேட்கள நன்னக ராரே.	1.39.8

திருவொளி காணிய பேதுறு கின்ற	
  திசைமுக னுந்திசை மேலளந்த	
கருவரை யேந்திய மாலுங்	
  கைதொழ நின்றது மல்லால்	
அருவரை யொல்க எடுத்த அரக்கன்	
  ஆடெழிற் றோள்க ளாழத்தழுந்த	
வெருவுற வூன்றிய பெம்மான்	
  வேட்கள நன்னக ராரே.	1.39.9
	
அத்தமண் தோய்துவ ரார்அமண் குண்டர்	
  யாதுமல் லாவுரை யேயுரைத்துப்	
பொய்த்தவம் பேசுவ தல்லாற்	
  புறனுரை யாதொன்றுங் கொள்ளேல்	
முத்தன வெண்முறு வல்லுமை யஞ்ச	
  மூரிவல் லானையின் ஈருரிபோர்த்த	
வித்தகர் வேத முதல்வர்	
  வேட்கள நன்னக ராரே.	1.39.10
	
விண்ணியன் மாடம் விளங்கொளி வீதி	
  வெண்கொடி யெங்கும் விரிந்திலங்க	
நண்ணிய சீர்வளர் காழி	
  நற்றமிழ் ஞானசம் பந்தன்	
பெண்ணின்நல் லாளொரு பாகமமர்ந்து	
  பேணிய வேட்கள மேல்மொழிந்த	
பண்ணியல் பாடல்வல் லார்கள்	
  பழியொடு பாவமி லாரே.	1.39.11

- திருச்சிற்றம்பலம் -

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பாசுபதேசுவரர், தேவியார் - நல்லநாயகியம்மை.

Back to Complete First thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page