|
393 |
அரவச் சடைமேல் மதிமத்தம்
விரவிப் பொலிகின் றவனூராம்
நிரவிப் பலதொண் டர்கள்நாளும்
பரவிப் பொலியும் பனையூரே. | 1.37.1 |
394 |
எண்ணொன் றிநினைந் தவர்தம்பால்
உண்ணின் றுமகிழ்ந் தவனூராம்
கண்ணின் றெழுசோ லையில்வண்டு
பண்ணின் றொலிசெய் பனையூரே. | 1.37.2
| 395 |
அலரும் மெறிசெஞ் சடைதன்மேல்
மலரும் பிறையொன் றுடையானூர்
சிலரென் றுமிருந் தடிபேணப்
பலரும் பரவும் பனையூரே. | 1.37.3
| 396 |
இடியார் கடல்நஞ் சமுதுண்டு
பொடியா டியமே னியினானூர்
அடியார் தொழமன் னவரேத்தப்
படியார் பணியும் பனையூரே. | 1.37.4
| 397 |
அறையார் கழல்மே லரவாட
இறையார் பலிதேர்ந் தவனூராம்
பொறையார் மிகுசீர் விழமல்கப்
பறையா ரொலிசெய் பனையூரே. | 1.37.5
| 398 |
அணியார் தொழவல் லவரேத்த
மணியார் மிடறொன் றுடையானூர்
தணியார் மலர்கொண் டிருபோதும்
பணிவார் பயிலும் பனையூரே. | 1.37.6
| 399 |
அடையா தவர்மூ வெயில்சீறும்
விடையான் விறலார் கரியின்தோல்
(*)உடையா னவனெண் பலபூதப்
படையா னவனூர் பனையூரே.
(*) உடையா னவனொண் பலபூத என்றும் பாடம். | 1.37.7
| 400 |
இலகும் முடிபத் துடையானை
அலல்கண் டருள்செய் தவெம்மண்ணல்
உலகில் லுயிர்நீர் நிலமற்றும்
பலகண் டவனூர் பனையூரே. | 1.37.8
| 401 |
வரமுன் னிமகிழ்ந் தெழுவீர்காள்
சிரமுன் னடிதா ழவணங்கும்
பிரமன் னொடுமா லறியாத
பரமன் னுறையும் பனையூரே. | 1.37.9
| 402 |
*அழிவல் லமண ரொடுதேரர்
மொழிவல் லனசொல் லியபோதும்
இழிவில் லதொர்செம் மையினானூர்
பழியில் லவர்சேர் பனையூரே.
(*) அழிவில் லமணஃ தொடுதேரர் என்றும் பாடம். | 1.37.10
| 403 |
பாரார் *விடையான் பனையூர்மேல்
சீரார் தமிழ்ஞா னசம்பந்தன்
ஆரா தசொன்மா லைகள்பத்தும்
ஊரூர் நினைவா ருயர்வாரே.
(*) விடையார் என்றும் பாடம். | 1.37.11
|
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.