|
382 |
கலையார் மதியோ டுரநீரும்
நிலையார் சடையா ரிடமாகும்
மலையா ரமுமா மணிசந்தோ
டலையார் புனல்சே ருமையாறே. | 1.36.1 |
383 |
மதியொன் றியகொன் றைவடத்தன்
மதியொன் றவுதைத் தவர்வாழ்வும்
மதியின் னொடுசேர் கொடிமாடம்
மதியம் பயில்கின் றவையாறே. | 1.36.2
| 384 |
கொக்கின் னிறகின் னொடுவன்னி
புக்க சடையார்க் கிடமாகுந்
திக்கின் னிசைதே வர்வணங்கும்
அக்கின் னரையா ரதையாறே. | 1.36.3
| 385 |
சிறைகொண் டபுரம் மவைசிந்தக்
கறைகொண் டவர்கா தல்செய்கோயில்
மறைகொண் டநல்வா னவர்தம்மில்
அறையும் மொலிசே ருமையாறே. | 1.36.4
| 386 |
உமையா ளொருபா கமதாகச்
சமைவார் அவர்சார் விடமாகும்
அமையா ருடல்சோர் தரமுத்தம்
அமையா வருமந் தணையாறே. | 1.36.5
| 387 |
தலையின் தொடைமா லையணிந்து
கலைகொண் டதொர்கை யினர்சேர்வாம்
நிலைகொண் டமனத் தவர்நித்தம்
மலர்கொண் டுவணங் குமையாறே. | 1.36.6
| 388 |
வரமொன் றியமா மலரோன்றன்
சிரமொன் றையறுத் தவர்சேர்வாம்
வரைநின் றிழிவார் தருபொன்னி
அரவங் கொடுசே ருமையாறே. | 1.36.7
| 389 |
வரையொன் றதெடுத் தஅரக்கன்
சிரமங் கநெரித் தவர்சேர்வாம்
விரையின் மலர்மே தகுபொன்னித்
திரைதன் னொடுசே ருமையாறே. | 1.36.8
| 390 |
(*)சங்கக் கயனும் மறியாமைப்
பொங்குஞ் சுடரா னவர்கோயில்
கொங்கிற் பொலியும் புனல்கொண்டு
அங்கிக் கெதிர்காட் டுமையாறே.
(*) சங்கத்தயனும் என்றும் பாடம். | 1.36.9
| 391 |
துவரா டையர்தோ லுடையார்கள்
கவர்வாய் மொழிகா தல்செய்யாதே
தவரா சர்கள்தா மரையானோ
டவர்தா மணையந் தணையாறே. | 1.36.10
| 392 |
கலையார் கலிக்கா ழியர்மன்னன்
நலமார் தருஞான சம்பந்தன்
அலையார் புனல்சூ ழுமையாற்றைச்
சொலுமா லைவல்லார் துயர்வீடே. | 1.36.11
|