|
338 |
ஓடேகலன் உண்பதும் ஊரிடு பிச்சை
காடேயிட மாவது கல்லால் நிழற்கீழ்
வாடாமுலை மங்கையுந் தானும் மகிழ்ந்
தீடாவுறை கின்ற இடைமரு தீதோ. | 1.32.1 |
339 |
தடம்கொண்டதொர் தாமரைப் பொன்முடி தன்மேல்
குடங்கொண்டடி யார்குளிர் நீர்சுமந் தாட்டப்
படங்கொண்டதொர் பாம்பரை யார்த்த பரமன்
இடங்கொண்டிருந் தான்றன் இடைமரு தீதோ. | 1.32.2
| 340 |
வெண்கோவணங் கொண்டொரு வெண்டலை யேந்தி
அங்கோல்வளை யாளையொர் பாகம் அமர்ந்து
பொங்காவரு காவிரிக் கோலக் கரைமேல்
எங்கோ னுறைகின்ற இடைமரு தீதோ. | 1.32.3
| 341 |
அந்தம்மறி யாத அருங்கல முந்திக்
கந்தங்கமழ் காவிரிக் கோலக் கரைமேல்
வெந்தபொடிப் பூசிய வேத முதல்வன்
எந்தையுறை கின்ற இடைமரு தீதோ. | 1.32.4
| 342 |
வாசங்கமழ் மாமலர்ச் சோலையில் வண்டே
தேசம்புகுந் தீண்டியொர் செம்மை யுடைத்தாய்
பூசம்புகுந் தாடிப் பொலிந்தழ காய
ஈசனுறை கின்ற இடைமரு தீதோ. | 1.32.5
| 343 |
வன்புற்றிள நாகம் அசைத் தழகாக
என்பிற்பல மாலையும் பூண்டெரு தேறி
அன்பிற்பிரி யாதவ ளோடு முடனாய்
இன்புற்றிருந் தான்றன் இடைமரு தீதோ. | 1.32.6
| 344 |
தேக்குந்திமி லும்பல வுஞ்சுமந் துந்திப்
போக்கிப்புறம் பூச லடிப்ப வருமால்
ஆர்க்குந்திரைக் காவிரிக் கோலக் கரைமேல்
ஏற்கஇருந் தான்றன் இடைமரு தீதோ. | 1.32.7
| 345 |
பூவார்குழ லாரகில் கொண்டு புகைப்ப
ஓவாதடி யாரடி யுள்குளிர்ந் தேத்த
ஆவாஅரக் கன்றனை ஆற்ற லழித்த
ஏவார்சிலை யான்றன் இடைமரு தீதோ. | 1.32.8
| 346 |
முற்றாததொர் பால்மதி சூடு முதல்வன்
நற்றாமரை யானொடு மால்நயந் தேத்தப்
பொற்றோளியுந் தானும் பொலிந்தழ காக
எற்றேயுறை கின்ற இடைமரு தீதோ. | 1.32.9
| 347 |
சிறுதேரரும் சில்சம ணும்புறங் கூற
நெறியேபல பத்தர்கள் கைதொழு தேத்த
வெறியாவரு காவிரிக் கோலக் கரைமேல்
எறியார்மழு வாளன் இடைமரு தீதோ. | 1.32.10
| 348 |
கண்ணார்கமழ் காழியுள் ஞானசம் பந்தன்
எண்ணார்புக ழெந்தை யிடைமரு தின்மேல்
பண்ணோடிசை பாடிய பத்தும்வல் லார்கள்
விண்ணோருல கத்தினில் வீற்றிருப் பாரே. | 1.32.11
|