|
316 |
விதியாய் விளைவாய் விளைவின் பயனாகிக்
கொதியா வருகூற் றையுதைத் தவர்சேரும்
பதியா வதுபங் கயநின் றலரத்தேன்
பொதியார் பொழில்சூழ் புகலிந் நகர்தானே. | 1.30.1 |
317 |
ஒன்னார்புர மூன்று மெரித்த ஒருவன்
மின்னாரிடை யாளொடுங் கூடிய வேடந்
தன்னாலுறை வாவது தண்கடல் சூழ்ந்த
பொன்னார் வயற்பூம் புகலிந் நகர்தானே. | 1.30.2
| 318 |
வலியின்மதி செஞ்சடை வைத்தம ணாளன்
புலியின்னதள் கொண்டரை யார்த்த புனிதன்
மலியும்பதி மாமறை யோர்நிறைந் தீண்டிப்
பொலியும்புனற் பூம்புக லிந்நகர் தானே. | 1.30.3
| 319 |
கயலார்தடங் கண்ணி யொடும்மெரு தேறி
அயலார்கடை யிற்பலி கொண்ட அழகன்
இயலாலுறை யும்மிடம் எண்டிசை யோர்க்கும்
புயலார்கடற் பூம்புக லிந்நகர் தானே. | 1.30.4
| 320 |
காதார்கன பொற்குழை தோட திலங்கத்
தாதார்மலர் தண்சடை யேற முடித்து
(*)நாதான்உறை யும்மிட மாவது நாளும்
போதார்பொழிற் பூம்புக லிந்நகர் தானே.
(*) நாதன் - நாதான் என நீண்டது. | 1.30.5
| 321 |
வலமார்படை மான்மழு ஏந்திய மைந்தன்
கலமார்கடல் நஞ்சமு துண்ட கருத்தன்
குலமார்பதி கொன்றைகள் பொன்சொரி யத்தேன்
புலமார்வயற் பூம்புக லிந்நகர் தானே. | 1.30.6
| 322 |
கறுத்தான்கன லால்மதில் மூன்றையும் வேவச்
செறுத்தான்திக ழுங்கடல் நஞ்சமு தாக
அறுத்தான்அயன் தன்சிரம் ஐந்திலும் ஒன்றைப்
பொறுத்தானிடம் பூம்புக லிந்நகர் தானே. | 1.30.7
| 323 |
தொழிலால்மிகு தொண்டர்கள் தோத்திரஞ் சொல்ல
எழிலார்வரை யாலன் றரக்கனைச் செற்ற
கழலானுறை யும்மிடங் கண்டல்கள் மிண்டி
பொழிலால்மலி பூம்புக லிந்நகர் தானே. | 1.30.8
| 324 |
மாண்டார்சுட லைப்பொடி பூசி மயானத்
தீண்டாநட மாடிய வேந்தன்றன் மேனி
நீண்டானிரு வர்க்கெரி யாய்அர வாரம்
பூண்டான்நகர் பூம்புக லிந்நகர் தானே. | 1.30.9
| 325 |
உடையார்துகில் போர்த்துழல் வார்சமண் கையர்
அடையாதன சொல்லுவர் ஆதர்கள் ஓத்தைக்
கிடையாதவன் றன்னகர் நன்மலி பூகம்
புடையார்தரு பூம்புக லிந்நகர் தானே. | 1.30.10
| 326 |
இரைக்கும்புனல் செஞ்சடை வைத்தஎம் மான்றன்
புரைக்கும்பொழில் பூம்புக லிந்நகர் தன்மேல்
உரைக்குந்தமிழ் ஞானசம் பந்தனொண் மாலை
வரைக்குந்தொழில் வல்லவர் நல்லவர் தாமே. | 1.30.11
|