|
305 |
ஊரு லாவு பலிகொண் டுலகேத்த
நீரு லாவு நிமிர்புன் சடையண்ணல்
சீரு லாவு மறையோர் நறையூரிற்
சேருஞ் சித்தீச் சரஞ்சென் றடைநெஞ்சே. | 1.29.1 |
306 |
காடு நாடுங் கலக்கப் பலிநண்ணி
ஓடு கங்கை ஒளிர்புன் சடைதாழ
வீடு மாக மறையோர் நறையூரில்
நீடுஞ் சித்தீச் சரமே நினைநெஞ்சே. | 1.29.2
| 307 |
கல்வி யாளர் கனக மழல்மேனி
புல்கு கங்கை புரிபுன் சடையானூர்
மல்கு திங்கள் பொழில்சூழ் நறையூரிற்
செல்வர் சித்தீச் சரஞ்சென் றடைநெஞ்சே. | 1.29.3
| 308 |
நீட வல்ல நிமிர்புன் சடைதாழ
ஆட வல்ல அடிக ளிடமாகும்
பாடல் வண்டு பயிலும் நறையூரிற்
சேடர் சித்தீச் சரமே தெளிநெஞ்சே. | 1.29.4
| 309 |
உம்ப ராலும் உலகின் னவராலும்
தம்பெ ருமைய ளத்தற் கரியானூர்
நண்பு லாவு மறையோர் நறையூரிற்
செம்பொன் சித்தீச் சரமே தெளிநெஞ்சே. | 1.29.5
| 310 |
கூரு லாவு படையான் விடையேறிப்
போரு லாவு மழுவான் அனலாடி
பேரு லாவு பெருமான் நறையூரிற்
சேருஞ் சித்தீச் சரமே யிடமாமே. | 1.29.6
| 311 |
*அன்றி நின்ற அவுணர் புரமெய்த
வென்றி வில்லி விமலன் விரும்புமூர்
மன்றில் வாச மணமார் நறையூரிற்
சென்று சித்தீச் சரமே தெளிநெஞ்சே.
(*) அன்றி நின்ற - பகைத்து நின்ற | 1.29.7
| 312 |
அரக்கன் ஆண்மை யழிய வரைதன்னால்
நெருக்க வூன்றும் விரலான் விரும்புமூர்
பரக்குங் கீர்த்தி யுடையார் நறையூரிற்
திருக்கொள் சித்தீச் சரமே தெளிநெஞ்சே. | 1.29.8
| 313 |
ஆழி யானும் அலரின் உறைவானும்
ஊழி நாடி உணரார் திரிந்துமேல்
சூழு நேட எரியாம் ஒருவன்சீர்
நீழல் சித்தீச் சரமே நினைநெஞ்சே. | 1.29.9
| 314 |
மெய்யின் மாசர் விரிநுண் துகிலிலார்
கையி லுண்டு கழறும் உரைகொள்ளேல்
உய்ய வேண்டில் இறைவன் நறையூரிற்
செய்யுஞ் சித்தீச் சரமே தவமாமே. | 1.29.10
| 315 |
மெய்த்து லாவு மறையோர் நறையூரிற்
சித்தன் சித்தீச் சரத்தை உயர்காழி
அத்தன் பாதம் அணிஞான சம்பந்தன்
பத்தும் பாடப் பறையும் பாவமே. | 1.29.11
|