|
294 |
செப்ப நெஞ்சே நெறிகொள் சிற்றின்பம்
துப்ப னென்னா தருளே துணையாக
ஒப்ப ரொப்பர் பெருமான் ஒளிவெண்ணீற்
றப்பர் சோற்றுத் துறைசென் றடைவோமே. | 1.28.1 |
295 |
பாலும் நெய்யுந் தயிரும் பயின்றாடித்
தோலும் நூலுந் துதைந்த வரைமார்பர்
மாலுஞ் சோலை புடைசூழ் மடமஞ்ஞை
ஆலுஞ் சோற்றுத் துறைசென் றடைவோமே. | 1.28.2
| 296 |
செய்யர் செய்ய சடையர் விடையூர்வர்
கைகொள் வேலர் கழலர் கரிகாடர்
தைய லாளொர் பாக மாயஎம்
ஐயர் சோற்றுத் துறைசென் றடைவோமே. | 1.28.3
| 297 |
பிணிகொ ளாக்கை யொழியப் பிறப்புளீர்
துணிகொள் போரார் துளங்கு மழுவாளர்
மணிகொள் கண்டர் மேய வார்பொழில்
அணிகொள் சோற்றுத் துறைசென் றடைவோமே. | 1.28.4
| 298 |
பிறையும் அரவும் புனலுஞ் சடைவைத்து
மறையும் ஓதி மயானம் இடமாக
உறையுஞ் செல்வம் உடையார் காவிரி
அறையும் சோற்றுத் துறைசென் றடைவோமே. | 1.28.5
| 299 |
துடிக ளோடு முழவம் விம்மவே
பொடிகள் பூசிப் புறங்கா டரங்காகப்
படிகொள் பாணி பாடல் பயின்றாடும்
அடிகள் சோற்றுத் துறைசென் றடைவோமே. | 1.28.6
| 300 |
சாடிக் காலன் மாளத் தலைமாலை
சூடி மிக்குச் சுவண்டாய் வருவார்தாம்
பாடி ஆடிப் பரவு வாருள்ளத்
தாடி சோற்றுத் துறைசென் றடைவோமே. | 1.28.7
| 301 |
பெண்ணோர் பாகம் உடையார் பிறைச்சென்னிக்
கண்ணோர் பாகங் கலந்த நுதலினார்
எண்ணா தரக்கன் எடுக்க வூன்றிய
அண்ணல் சோற்றுத் துறைசென் றடைவோமே. | 1.28.8
| 302 |
தொழுவா ரிருவர் துயரம் நீங்கவே
அழலா யோங்கி அருள்கள் செய்தவன்
விழவார் மறுகில் விதியால் மிக்கஎம்
எழிலார் சோற்றுத் துறைசென் றடைவோமே. | 1.28.9
| 303 |
(*)கோது சாற்றித் திரிவார் அமண்குண்டர்
ஓதும் ஓத்தை யுணரா தெழுநெஞ்சே
நீதி நின்று நினைவார் வேடமாம்
ஆதி சோற்றுத் துறைசென் றடைவோமே.
(*) போதுசாற்றி என்றும் பாடம். | 1.28.10
| 304 |
அந்தண் சோற்றுத் துறையெம் மாதியைச்
சிந்தை செய்ம்மின் அடியீ ராயினீர்
சந்தம் பரவு ஞான சம்பந்தன்
வந்த வாறே புனைதல் வழிபாடே. | 1.28.11
|