|
272 |
வெங்கள் விம்மு வெறியார் பொழிற்சோலைத்
திங்க ளோடு திளைக்குந் திருப்புத்தூர்க்
கங்கை தங்கு முடியா ரவர்போலும்
எங்கள் உச்சி உறையும் இறையாரே. | 1.26.1 |
273 |
வேனல் விம்மு வெறியார் பொழிற்சோலைத்
தேனும் வண்டுந் திளைக்குந் திருப்புத்தூர்
ஊனம் இன்றி யுறைவா ரவர்போலும்
ஏன முள்ளும் எயிறும் புனைவாரே. | 1.26.2
| 274 |
பாங்கு நல்ல வரிவண் டிசைபாடத்
தேங்கொள் கொன்றை திளைக்குந் திருப்புத்தூர்
ஓங்கு கோயில் உறைவா ரவர்போலுந்
தாங்கு திங்கள் தவழ்புன் சடையாரே. | 1.26.3
| 275 |
நாற விண்ட நறுமா மலர்கவ்வித்
தேறல் வண்டு திளைக்குந் திருப்புத்தூர்
ஊறல் வாழ்க்கை யுடையா ரவர்போலும்
ஏறு கொண்ட கொடியெம் இறையாரே. | 1.26.4
| 276 |
இசை விளங்கும் எழில்சூழ்ந் தியல்பாகத்
திசை விளங்கும் பொழில்சூழ் திருப்புத்தூர்
பசை விளங்கப் படித்தா ரவர்போலும்
வசை விளங்கும் வடிசேர் நுதலாரே. | 1.26.5
| 277 |
வெண்ணி றத்த விரையோ டலருந்தித்
தெண்ணி றத்த புனல்பாய் திருப்புத்தூர்
ஒண்ணி றத்த ஒளியா ரவர்போலும்
வெண்ணி றத்த விடைசேர் கொடியாரே. | 1.26.6
| 278 |
நெய்த லாம்பல் கழுநீர் மலர்ந்தெங்குஞ்
செய்கண் மல்கு சிவனார் திருப்புத்தூர்த்
தையல் பாகம் மகிழ்ந்தா ரவர்போலும்
மையுண் நஞ்சம் மருவும் மிடற்றாரே. | 1.26.7
| 279 |
கருக்கம் எல்லாங் கமழும் பொழிற்சோலைத்
திருக்கொள் செம்மை விழவார் திருப்புத்தூர்
இருக்க வல்ல இறைவ ரவர்போலும்
அரக்கன் ஒல்க விரலால் அடர்த்தாரே. | 1.26.8
| 280 |
மருவி யெங்கும் வளரும் மடமஞ்ஞை
தெருவு தோறுந் திளைக்குந் திருப்புத்தூர்ப்
பெருகி வாழும் பெருமா னவன்போலும்
பிரமன் மாலும் அறியாப் பெரியோனே. | 1.26.9
| 281 |
கூறை போர்க்குந் தொழிலா ரமண்கூறல்
தேறல் வேண்டா தெளிமின் திருப்புத்தூர்
ஆறும் நான்கும் அமர்ந்தா ரவர்போலும்
ஏறு கொண்ட கொடியெம் இறையாரே. | 1.26.10
| 282 |
நல்ல கேள்வி ஞான சம்பந்தன்
செல்வர் சேடர் உறையுந் திருப்புத்தூர்ச்
சொல்லல் பாடல் வல்லார் தமக்கென்றும்
அல்லல் தீரும் அவலம் அடையாவே. | 1.26.11
|