|
239 |
மடையில் வாளை பாய மாதரார்
குடையும் பொய்கைக் கோலக் காவுளான்
சடையும் பிறையுஞ் சாம்பற் பூச்சுங்கீழ்
உடையுங் கொண்ட வுருவ மென்கொலோ. | 1.23.1 |
240 |
பெண்டான் பாகமாகப் பிறைச் சென்னி
கொண்டான் கோலக் காவு கோயிலாக்
கண்டான் பாதங் கையாற் கூப்பவே
உண்டான் நஞ்சை உலக முய்யவே. | 1.23.2
| 241 |
பூணற் பொறிகொள் அரவம் புன்சடைக்
கோணற் பிறையன் குழகன் கோலக்கா
மாணப் பாடி மறைவல் லானையே
பேணப் பறையும் பிணிக ளானவே. | 1.23.3
| 242 |
தழுக்கொள் பாவந் தளர வேண்டுவீர்
மழுக்கொள் செல்வன் மறிசே ரங்கையான்
குழுக்கொள் பூதப் படையான் கோலக்கா
இழுக்கா வண்ணம் ஏத்தி வாழ்மினே. | 1.23.4
| 243 |
மயிலார் சாயல் மாதோர் பாகமா
எயிலார் சாய எரித்த எந்தைதன்
குயிலார் சோலைக் கோலக் காவையே
பயிலா நிற்கப் பறையும் பாவமே. | 1.23.5
| 244 |
வெடிகொள் வினையை வீட்ட வேண்டுவீர்
கடிகொள் கொன்றை கலந்த சென்னியான்
கொடிகொள் விழவார் கோலக் காவுளெம்
அடிகள் பாதம் அடைந்து வாழ்மினே. | 1.23.6
| 245 |
நிழலார் சோலை நீல வண்டினங்
குழலார் பண்செய் கோலக் காவுளான்
கழலால் மொய்த்த பாதங் கைகளாற்
தொழலார் பக்கல் துயர மில்லையே. | 1.23.7
| 246 |
எறியார் கடல்சூழ் இலங்கைக் கோன்றனை
முறியார் தடக்கை யடர்த்த மூர்த்திதன்
குறியார் பண்செய் கோலக் காவையே
நெறியால் தொழுவார் வினைகள் நீங்குமே. | 1.23.8
| 247 |
நாற்ற மலர்மேல் அயனும் நாகத்தில்
ஆற்ற லணைமே லவனுங் காண்கிலாக்
கூற்ற முதைத்த குழகன் கோலக்கா
ஏற்றான் பாதம் ஏத்தி வாழ்மினே. | 1.23.9
| 248 |
பெற்ற மாசு பிறக்குஞ் சமணரும்
உற்ற துவர்தோ யுருவி லாளருங்
குற்ற நெறியார் கொள்ளார் கோலக்காப்
பற்றிப் பரவப் பறையும் பாவமே. | 1.23.10
| 249 |
நலங்கொள் காழி ஞான சம்பந்தன்
குலங்கொள் கோலக் காவு ளானையே
வலங்கொள் பாடல் வல்ல வாய்மையார்
உலங்கொள் வினைபோய் ஓங்கி வாழ்வரே. | 1.23.11
|