|
228 |
சிலைதனை நடுவிடை நிறுவியொர் சினமலி அரவது கொடுதிவி
தலமலி சுரரசு ரர்களொலி சலசல கடல்கடை வுழிமிகு
கொலைமலி விடமெழ அவருடல் குலைதர வதுநுகர் பவனெழில்
மலைமலி மதில்புடை தழுவிய மறைவனம் அமர்தரு பரமனே. | 1.22.1 |
229 |
கரமுத லியஅவ யவமவை கடுவிட அரவது கொடுவரு
வரல்முறை அணிதரு மவனடல் வலிமிகு புலியத ளுடையினன்
இரவலர் துயர்கெடு வகைநினை இமையவர் புரமெழில் பெறவளர்
மரநிகர் கொடைமனி தர்கள்பயில் மறைவனம் அமர்தரு பரமனே. | 1.22.2
| 230 |
இழைவளர் தருமுலை மலைமக ளினிதுறை தருமெழி லுருவினன்
முழையினின் மிகுதுயி லுறுமரி முசிவொடும் எழமுள ரியொடெழு
கழைநுகர் தருகரி யிரிதரு கயிலையின் மலிபவ னிருளுறும்
மழைதவழ் தருபொழில் நிலவிய மறைவனம் அமர்தரு பரமனே. | 1.22.3
| 231 |
நலமிகு திருவித ழியின்மலர் நகுதலை யொடுகன கியின்முகை
பலசுர நதிபட அரவொடு மதிபொதி சடைமுடி யினன்மிகு
தலநில வியமனி தர்களொடு தவமுயல் தருமுனி வர்கள்தம
மலமறு வகைமனம் நினைதரு மறைவன மமர்தரு பரமனே. | 1.22.4
| 232 |
கதிமலி களிறது பிளிறிட வுரிசெய்த அதிகுண னுயர்பசு
பதியதன் மிசைவரு பசுபதி பலகலை யவைமுறை முறையுணர்
விதியறி தருநெறி யமர்முனி கணனொடு மிகுதவ முயல்தரும்
அதிநிபு ணர்கள்வழி படவளர் மறைவனம் அமர்தரு பரமனே. | 1.22.5
| 233 |
கறைமலி திரிசிகை படையடல் கனல்மழு வெழுதர வெறிமறி
முறைமுறை யொலிதம ருகமுடை தலைமுகிழ் மலிகணி வடமுகம்
உறைதரு கரனுல கினிலுய ரொளிபெறு வகைநினை வொடுமலர்
மறையவன் மறைவழி வழிபடு மறைவனம் அமர்தரு பரமனே. | 1.22.6
| 234 |
இருநில னதுபுன லிடைமடி தரஎரி புகஎரி யதுமிகு
பெருவளி யினிலவி தரவளி கெடவிய னிடைமுழு வதுகெட
இருவர்க ளுடல்பொறை யொடுதிரி யெழிலுரு வுடையவன் இனமலர்
மருவிய அறுபதம் இசைமுரல் மறைவனம் அமர்தரு பரமனே. | 1.22.7
| 235 |
சனம்வெரு வுறவரு தசமுக னொருபது முடியொடு மிருபது
கனமரு வியபுயம் நெரிவகை கழலடி யிலொர்விரல் நிறுவினன்
இனமலி கணநிசி சரன்மகிழ் வுறவருள் செய்தகரு ணையனென
மனமகிழ் வொடுமறை முறையுணர் மறைவனம் அமர்தரு பரமனே. | 1.22.8
| 236 |
அணிமலர் மகள்தலை மகனயன் அறிவரி யதொர்பரி சினிலெரி
திணிதரு திரளுரு வளர்தர அவர்வெரு வுறலொடு துதிசெய்து
பணியுற வெளியுரு வியபர னவனுரை மலிகடல் திரளெழும்
மணிவள ரொளிவெயில் மிகுதரு மறைவனம் அமர்தரு பரமனே. | 1.22.9
| 237 |
இயல்வழி தரவிது செலவுற இனமயி லிறகுறு தழையொடு
செயல்மரு வியசிறு கடமுடி யடைகையர் தலைபறி செய்துதவம்
முயல்பவர் துவர்படம் உடல்பொதி பவரறி வருபர னவனணி
வயலினில் வளைவளம் மருவிய மறைவனம் அமர்தரு பரமனே. | 1.22.10
| 238 |
வசையறு மலர்மகள் நிலவிய மறைவனம் அமர்பர மனைநினை
பசையொடு மிகுகலை பலபயில் புலவர்கள் புகழ்வழி வளர்தரு
இசையமர் கழுமல நகரிறை தமிழ்விர கனதுரை யியல்வல
இசைமலி தமிழொரு பதும்வல அவருல கினிலெழில் பெறுவரே. | 1.22.11
|