|
217 |
புவம்வளி கனல்புனல் புவி(*)கலை யுரைமறை திரிகுணம் அமர்நெறி
திவமலி தருசுரர் முதலியர் திகழ்தரும் உயிரவை யவைதம
பவமலி தொழிலது நினைவொடு பதுமநன் மலரது மருவிய
சிவனது சிவபுரம் நினைபவர் செழுநில னினில்நிலை பெறுவரே. 01
(*) கலைபுரை என்றும் பாடம். | 1.21.1 |
218 |
மலைபல வளர்தரு புவியிடை மறைதரு வழிமலி மனிதர்கள்
நிலைமலி சுரர்முதல் உலகுகள் நிலைபெறு வகைநினை வொடுமிகும்
அலைகடல் நடுவறி துயிலமர் அரியுரு வியல்பர னுறைபதி
சிலைமலி மதிள்சிவ புரம்நினை பவர்திரு மகளொடு திகழ்வரே. | 1.21.2
| 219 |
பழுதில கடல்புடை தழுவிய படிமுத லியவுல குகள்மலி
குழுவிய சுரர்பிறர் மனிதர்கள் குலம்மலி தருமுயி ரவையவை
முழுவதும் அழிவகை நினைவொடு *முதலுரு வியல்பர னுறைபதி
செழுமணி யணிசிவ புரநகர் தொழுமவர் புகழ்மிகு முலகிலே.
(*) முதலுருவிய வரனுரைபதி என்றும் பாடம். | 1.21.3
| 220 |
நறைமலி தருமள றொடுமுகை நகுமலர் புகைமிகு வளரொளி
நிறைபுனல் கொடுதனை நினைவொடு நியதமும் வழிபடும் அடியவர்
குறைவில பதமணை தரஅருள் குணமுடை யிறையுறை வனபதி
சிறைபுன லமர்சிவ புரமது நினைபவர் செயமகள் தலைவரே. | 1.21.4
| 221 |
சினமலி யறுபகை மிகுபொறி சிதைதரு வகைவளி நிறுவிய
மனனுணர் வொடுமலர் மிசையெழு தருபொருள் நியதமும் உணர்பவர்
தனதெழி லுருவது கொடுஅடை தகுபர னுறைவது நகர்மதில்
கனமரு வியசிவ புரம்நினை பவர்கலை மகள்தர நிகழ்வரே. | 1.21.5
| 222 |
சுருதிகள் பலநல முதல்கலை துகளறு வகைபயில் வொடுமிகு
உருவிய லுலகவை புகழ்தர வழியொழு குமெயுறு பொறியொழி
அருதவ முயல்பவர் தனதடி யடைவகை நினையர னுறைபதி
திருவளர் சிவபுரம் நினைபவர் திகழ்குலன் நிலனிடை நிகழுமே. | 1.21.6
| 223 |
கதமிகு கருவுரு வொடு*வுகி ரிடைவட வரைகண கணவென
மதமிகு நெடுமுக னமர்வளை மதிதிகழ் எயிறதன் நுதிமிசை
இதமமர் புவியது நிறுவிய எழிலரி வழிபட அருள்செய்த
பதமுடை யவனமர் சிவபுரம் நினைபவர் நிலவுவர் படியிலே.
(*) உகிரிடவட என்றும் படம். | 1.21.7
| 224 |
அசைவுறு தவமுயல் வினிலயன் அருளினில் வருவலி கொடுசிவன்
இசைகயி லையையெழு தருவகை இருபது கரமவை நிறுவிய
நிசிசரன் முடியுடை தரவொரு விரல்பணி கொளுமவ னுறைபதி
திசைமலி சிவபுரம் நினைபவர் செழுநில னினில்நிகழ் வுடையரே. | 1.21.8
| 225 |
அடல்மலி படையரி அயனொடும் அறிவரி யதொரழல் மலிதரு
சுடருரு வொடுநிகழ் தரவவர் வெருவொடு துதியது செயவெதிர்
விடமலி களநுத லமர்கண துடையுரு வெளிபடு மவன்நகர்
திடமலி பொழிலெழில் சிவபுரம் நினைபவர் வழிபுவி திகழுமே. | 1.21.9
| 226 |
குணமறி வுகள்நிலை யிலபொரு ளுரைமரு வியபொருள் களுமில
திணமெனு மவரொடு செதுமதி மிகுசம ணருமலி தமதுகை
உணலுடை யவருணர் வருபர னுறைதரு பதியுல கினில்நல
கணமரு வியசிவ புரம்நினை பவரெழி லுருவுடை யவர்களே. | 1.21.10
| 227 |
திகழ்சிவ புரநகர் மருவிய சிவனடி யிணைபணி சிரபுர
நகரிறை தமிழ்விர கனதுரை நலமலி யொருபதும் நவில்பவர்
நிகழ்குல நிலநிறை திருவுரு நிகரில கொடைமிகு சயமகள்
புகழ்புவி வளர்வழி யடிமையின் மிகைபுணர் தரநலம் மிகுவரே. | 1.21.11
|