|
206 |
தடநில வியமலை நிறுவியொர் தழலுமிழ் தருபட அரவுகொ
டடல்அசு ரரொடம ரர்கள்அலை கடல்கடை வுழியெழு மிகுசின
விடமடை தருமிட றுடையவன் விடைமிசை வருமவ னுறைபதி
திடமலி தருமறை முறையுணர் மறையவர் நிறைதிரு மிழலையே. | 1.20.1 |
207 |
தரையொடு திவிதல நலிதரு தகுதிற லுறுசல தரனது
வரையன தலைவிசை யொடுவரு திகிரியை அரிபெற அருளினன்
உரைமலி தருசுர நதிமதி பொதிசடை யவனுறை பதிமிகு
திரைமலி கடல்மண லணிதரு பெறுதிடர் வளர்திரு மிழலையே. | 1.20.2
| 208 |
மலைமகள் தனையிகழ் வதுசெய்த மதியறு சிறுமன வனதுயர்
தலையினொ டழலுரு வனகரம் அறமுனி வுசெய்தவ னுறைபதி
கலைநில வியபுல வர்களிடர் களைதரு கொடைபயில் பவர்மிகு
சிலைமலி மதில்புடை தழுவிய திகழ்பொழில் வளர்திரு மிழலையே. | 1.20.3
| 209 |
மருவலர் புரமெரி யினின்மடி தரவொரு கணைசெல நிறுவிய
பெருவலி யினன்நலம் மலிதரு கரனுர மிகுபிணம் அமர்வன
இருளிடை யடையுற வொடுநட விசையுறு பரனினி துறைபதி
தெருவினில் வருபெரு விழவொலி மலிதர வளர்திரு மிழலையே. | 1.20.4
| 210 |
அணிபெறு வடமர நிழலினி லமர்வொடு மடியிணை யிருவர்கள்
பணிதர அறநெறி மறையொடு மருளிய பரனுறை விடமொளி
மணிபொரு வருமர கதநில மலிபுன லணைதரு வயலணி
திணிபொழில் தருமணம் மதுநுக ரறுபத முரல்திரு மிழலையே. | 1.20.5
| 211 |
வசையறு வலிவன சரவுரு வதுகொடு நினைவரு தவமுயல்
விசையன திறன்மலை மகளறி வுறுதிற லமர்மிடல்கொடுசெய்து
அசைவில படையருள் புரிதரு மவனுறை பதியது மிகுதரு
திசையினின் மலர்குல வியசெறி பொழின்மலி தருதிரு மிழலையே. | 1.20.6
| 212 |
நலமலி தருமறை மொழியொடு நதியுறு புனல்புகை ஒளிமுதல்
மலரவை கொடுவழி படுதிறன் மறையவ னுயிரது கொளவரு
சலமலி தருமற லிதனுயிர் கெடவுதை செய்தவர னுறைபதி
(*)திலகமி தெனவுல குகள்புகழ் தருபொழி லணிதிரு மிழலையே.
(*) திலதமிதென என்றும் பாடம். | 1.20.7
| 213 |
அரனுறை தருகயி லையைநிலை குலைவது செய்ததச முகனது
கரமிரு பதுநெரி தரவிரல் நிறுவிய கழலடி யுடையவன்
வரன்முறை யுலகவை தருமலர் வளர்மறை யவன்வழி வழுவிய
சிரமது கொடுபலி திரிதரு சிவனுறை பதிதிரு மிழலையே. | 1.20.8
| 214 |
அயனொடும் எழிலமர் மலர்மகள் மகிழ்கண னளவிட லொழியவொர்
பயமுறு வகைதழல் நிகழ்வதொர் படியுரு வதுவர வரன்முறை
சயசய வெனமிகு துதிசெய வெளியுரு வியவவ னுறைபதி
செயநில வியமதில் மதியது தவழ்தர வுயர்திரு மிழலையே. | 1.20.9
| 215 |
இகழுரு வொடுபறி தலைகொடு மிழிதொழில் மலிசமண் விரகினர்
திகழ்துவ ருடையுடல் பொதிபவர் கெடஅடி யவர்மிக அருளிய
புகழுடை யிறையுறை பதிபுன லணிகடல் புடைதழு வியபுவி
திகழ்சுரர் தருநிகர் கொடையினர் செறிவொடு திகழ்திரு மிழலையே. | 1.20.10
| 216 |
சினமலி கரியுரி செய்தசிவ னுறைதரு திருமிழ லையைமிகு
தனமனர் சிரபுர நகரிறை தமிழ்விர கனதுரை யொருபதும்
மனமகிழ் வொடுபயில் பவரெழின் மலர்மகள் கலைமகள் சயமகள்
இனமலி புகழ்மக ளிசைதர இருநில னிடையினி தமர்வரே. | 1.20.11
|