திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

(முதல் திருமுறை)

இசைப் பயிற்சி:-

Get the Flash Player to see this player.

1.18 திருநின்றியூர்


பண் - நட்டபாடை

சூலம்படை சுண்ணப்பொடி சாந்தஞ்சுடு நீறு	
பாலம்மதி பவளச்சடை முடிமேலது பண்டைக்	
காலன்வலி காலின்னொடு போக்கிக்கடி கமழும்	
நீலம்மலர்ப் பொய்கைநின்றி யூரின்நிலை யோர்க்கே. 	1.18.1
	
அச்சம்மிலர் பாவம்மிலர் கேடும்மில ரடியார்	
நிச்சம்முறு நோயும்மிலர் தாமுந்நின்றி யூரில்	
நச்சம்மிட றுடையார்நறுங் கொன்றைநயந் தாளும்1	
பச்சம்முடை யடிகள்திருப் பாதம்பணி வாரே. 	1.18.2
	
பறையின்னொலி சங்கின்னொலி பாங்காரவு மார	
அறையும்மொலி யெங்கும்மவை யறிவாரவர் தன்மை	
நிறையும்புனல் சடைமேலுடை யடிகள்நின்றி யூரில்	
உறையும்மிறை யல்லாதென துள்ளம்முண ராதே.	1.18.3
	
பூண்டவ்வரை மார்பிற்புரி நூலன்விரி கொன்றை	
ஈண்டவ்வத னோடும்மொரு பாலம்மதி யதனைத்	
தீண்டும்பொழில் சூழ்ந்ததிரு நின்றியது தன்னில்	
ஆண்டகழல் தொழலல்லது2 அறியாரவ ரறிவே.	1.18.4
	
குழலின்னிசை வண்டின்னிசை கண்டுகுயில் கூவும்	
நிழலின்னெழில் தாழ்ந்தபொழில் சூழ்ந்தநின்றி யூரில்	
அழலின்வலன் அங்கையது ஏந்தியன லாடுங்	
கழலின்னோலி யாடும்புரி கடவுள்களை கண்ணே. 	1.18.5
	
மூரன்முறு வல்வெண்ணகை யுடையாளொரு பாகம்	
சாரல்மதி யதனோடுடன் சலவஞ்சடை வைத்த	
வீரன்மலி யழகார்பொழில் மிடையுந்திரு நின்றி	
ஊரன்கழ லல்லாதென துள்ளம் முணராதே.	1.18.6
	
பற்றியொரு தலைகையினில் ஏந்திப்பலி தேரும்	
பெற்றியது வாகித்திரி தேவர்பெரு மானார்	
சுற்றியொரு வேங்கையத ளோடும்பிறை சூடும்	
நெற்றியொரு கண்ணார்நின்றி யூரின்நிலை யாரே.	1.18.7
	
* இப்பதிகத்தில் 8-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.	
	
நல்லம்மலர் மேலானொடு ஞாலம்மது வுண்டான்	
அல்லரென ஆவரென நின்றும்மறி வரிய	
நெல்லின்பொழில் சூழ்ந்தநின்றி யூரில்நிலை யாரெம்	
செல்வரடி யல்லாதென சிந்தையுண ராதே.	1.18.8
	
நெறியில்வரு பேராவகை நினையாநினை வொன்றை	
அறிவில்சமண் ஆதருரை கேட்டும்மய ராதே	
நெறியில்லவர் குறிகள்நினை யாதேநின்றியூரில்	
மறியேந்திய கையானடி வாழ்த்தும்மது வாழ்த்தே.	1.18.10
	
குன்றம்மது எடுத்தானுடல் தோளுந்நெரி வாக	
நின்றங்கொரு விரலாலுற வைத்தான்நின்றி யூரை	
நன்றார்தரு புகலித்தமிழ் ஞானம்மிகு பந்தன்	
குன்றாத் தமிழ் சொல்லக்குறை வின்றிநிறை புகழே.	1.18.11
	
	        - திருச்சிற்றம்பலம் -
பாடம்: 1. நயந்தானாம், 2. தொழலல்லது. இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - இலட்சுமியீசுவரர்,
தேவியார் - உலகநாயகியம்மை.


Back to Thirugnanasambandar Thevaram Page
Back to Thirumurai Main Page
Back to Thamizh Shaivite Literature Page
Back to Shaiva Siddhanta Home Page
Back to Shaivam Home Page