திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

(முதல் திருமுறை)

1.17 திருஇடும்பாவனம்


பண் - நட்டபாடை

174

மனமார்தரு மடவாரொடு மகிழ்மைந்தர்கள் மலர்தூய்த்
தனமார்தரு சங்கக்கடல் வங்கத்திர ளுந்திச்
சினமார்தரு திறல்வாளெயிற் றரக்கன்மிகு குன்றில்
இனமாதவர் இறைவர்க்கிடம் இடும்பாவன மிதுவே.

1.17.1
175

மலையார்தரு மடவாளொரு பாகம்மகிழ் வெய்தி
நிலையார்தரு நிமலன்வலி நிலவும்புகழ் ஒளிசேர்
கலையார்தரு புலவோரவர் காவல்மிகு குன்றில்
இலையார்தரு பொழில்சூழ்வரும் இடும்பாவன மிதுவே.

1.17.2
176

சீலம்மிகு சித்தத்தவர் சிந்தித்தெழும் எந்தை
ஞாலம்மிகு கடல்சூழ்தரும் உலகத்தவர் நலமார்
கோலம்மிகு மலர்மென்முலை மடவார்மிகு குன்றில்
ஏலங்கமழ் பொழில்சூழ்தரும் இடும்பாவன மிதுவே.

1.17.3
177

பொழிலார்தரு குலைவாழைகள் எழிலார்திகழ் போழ்தில்
தொழிலான்மிகு தொண்டரவர் தொழுதாடிய முன்றில்
குழலார்தரு மலர்மென்முலை மடவார்மிகு குன்றில்
எழிலார்தரும் இறைவர்க்கிடம் இடும்பாவன மிதுவே.

1.17.4
178

பந்தார்விரல் உமையாளொரு பங்காகங்கை முடிமேல்
செந்தாமரை மலர்மல்கிய செழுநீர்வயற் கரைமேல்
கொந்தார்மலர் புன்னைமகிழ் குரவங்கமழ் குன்றில்
எந்தாயென இருந்தானிடம் இடும்பாவன மிதுவே.

1.17.5
179

நெறிநீர்மையர் நீள்வானவர் நினையுந்நினை வாகி
அறிநீர்மையி லெய்தும்மவர்க் கறியும்மறி வருளிக்
குறிநீர்மையர் (*)குணமார்தரு மணமார்தரு குன்றில்
எறிநீர்வயல் புடைசூழ்தரும் இடும்பாவன மிதுவே.
(*) குளமார்தரும் என்றும் பாடம்.

1.17.6
180

நீறேறிய திருமேனியர் நிலவும்முல கெல்லாம்
பாறேறிய படுவெண்டலை கையிற்பலி வாங்காக்
கூறேறிய மடவாளொரு பாகம்மகிழ் வெய்தி
ஏறேறிய இறைவர்க்கிடம் இடும்பாவன மிதுவே.

1.17.7
181

தேரார்தரு திகழ்வாளெயிற் றரக்கன்சிவன் மலையை
ஓராதெடுத் தார்த்தான்முடி யொருபஃதவை நெரித்துக்
கூரார்தரு கொலைவாளொடு குணநாமமுங் கொடுத்த
ஏரார்தரும் இறைவர்க்கிடம் இடும்பாவன மிதுவே.

1.17.8
182

பொருளார்தரு மறையோர்புகழ் விருத்தர்பொலி மலிசீர்த்
தெருளார்தரு சிந்தையொடு சந்தம்மலர் பலதூய்
மருளார்தரு மாயன்னயன் காணார்மய லெய்த
இருளார்தரு கண்டர்க்கிடம் இடும்பாவன மிதுவே.

1.17.9
183

தடுக்கையுடன் இடுக்கித்தலை பறித்துச்(*)சம ணடப்பர்
உடுக்கைபல துவர்க்கூறைகள் உடம்பிட்டுழல் வாரும்
மடுக்கண்மலர் வயல்சேர்செந்நெல் மலிநீர்மலர்க் கரைமேல்
இடுக்கண்பல களைவானிடம் இடும்பாவன மிதுவே. 10
(*) சமண்டப்பர் என்றும் பாடம்.

1.17.10
184

கொடியார்நெடு மாடக்குன்ற ளூரிற்கரைக் கோல
இடியார்கட லடிவீழ்தரும் இடும்பாவனத் திறையை
அடியாயுமந் தணர்காழியுள் அணிஞானசம் பந்தன்
படியாற்சொன்ன பாடல்சொலப் பறையும்வினை தானே.

1.17.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சற்குணநாதர்,
தேவியார் - மங்களநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

Back to Complete First thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Page