திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

(முதல் திருமுறை)

1.16 திருப்புள்ளமங்கை - திரு ஆலந்துறை


பண் - நட்டபாடை

163

பாலுந்துறு திரளாயின பரமன்பிர மன்தான்
போலுந்திற லவர்வாழ்தரு பொழில்சூழ்புள மங்கைக்
காலன்திற லறச்சாடிய கடவுள்ளிடங் கருதில்
ஆலந்துறை தொழுவார்தமை யடையாவினை தானே.

1.16.1
164

மலையான்மகள் கணவன்மலி கடல்சூழ்தரு தன்மைப்
புலையாயின களைவானிடம் பொழில்சூழ்புள மங்கைக்
கலையால்மலி மறையோரவர் கருதித்தொழு தேத்த
அலையார்புனல் வருகாவிரி ஆலந்துறை அதுவே.

1.16.2
165

கறையார்மிட றுடையான்கமழ் கொன்றைச்சடை முடிமேல்
பொறையார்தரு கங்கைப்புன லுடையான்புள மங்கைச்
சிறையார்தரு களிவண்டறை பொழில்சூழ்திரு வாலந்
துறையானவன் நறையார்கழல் தொழுமின்துதி செய்தே.

1.16.3
166

தணியார்மதி அரவின்னொடு வைத்தானிடம் மொய்த்தெம்
பணியாயவன் அடியார்தொழு தேத்தும்புள மங்கை
மணியார்தரு கனகம்மவை வயிரத்திர ளோடும்
அணியார்மணல் அணைகாவிரி யாலந்துறை யதுவே.

1.16.4
167

மெய்த்தன்னுறும் வினைதீர்வகை தொழுமின்செழு மலரின்
கொத்தின்னொடு சந்தாரகில் கொணர்காவிரிக் கரைமேல்
பொத்தின்னிடை யாந்தைபல பாடும்புள மங்கை
அத்தன்நமை யாள்வானிடம் ஆலந்துறை யதுவே.

1.16.5
168

மன்னானவன் உலகிற்கொரு மழையானவன் பிழையில்
பொன்னானவன் முதலானவன் பொழில்சூழ்புள மங்கை
என்னானவன் இசையானவன் இளஞாயிறின் சோதி
அன்னானவன் உறையும்மிடம் ஆலந்துறை யதுவே.

1.16.6
169

முடியார்தரு சடைமேல்முளை இளவெண்மதி சூடி
பொடியாடிய திருமேனியர் பொழில்சூழ்புள மங்கை
கடியார்மலர் புனல்கொண்டுதன் கழலேதொழு தேத்தும்
அடியார்தமக் கினியானிடம் ஆலந்துறை யதுவே.

1.16.7
170

இலங்கைமன்னன் முடிதோளிற எழிலார்திரு விரலால்
விலங்கல்லிடை அடர்த்தானிடம் வேதம்பயின் றேத்திப்
புலன்கள்தமை வென்றார்புக ழவர்வாழ்புள மங்கை
அலங்கல்மலி சடையானிடம் ஆலந்துறை யதுவே.

1.16.8
171

செறியார்தரு வெள்ளைத்திரு நீற்றின்திரு முண்டப்
பொறியார்தரு புரிநூல்வரை மார்பன்புள மங்கை
வெறியார்தரு கமலத்தயன் மாலுந்தனை நாடி
அறியாவகை நின்றானிடம் ஆலந்துறை யதுவே.

1.16.9
172

நீதியறி யாதாரமண் கையரொடு மண்டைப்
போதியவ ரோதும்முரை கொள்ளார்புள மங்கை
ஆதியவர் கோயில்திரு ஆலந்துறை தொழுமின்
சாதிம்மிகு வானோர்தொழு தன்மைபெற லாமே.

1.16.10
173

பொந்தின்னிடைத் தேனூறிய பொழில்சூழ்புள மங்கை
அந்தண்புனல் வருகாவிரி யாலந்துறை யானைக்
கந்தம்மலி கமழ்காழியுள் கலைஞானசம் பந்தன்
சந்தம்மலி பாடல்சொலி ஆடத்தவ மாமே.

1.16.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பசுபதிநாயகர்,
தேவியார் - பால்வளைநாயகியம்மை.
பல்வளைநாயகியம்மை என்றும் பாடம்.

திருச்சிற்றம்பலம்

Back to Complete First thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Page