திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

(முதல் திருமுறை)

1.14 திருக்கொடுங்குன்றம்


பண் - நட்டபாடை

141

வானிற்பொலி வெய்தும்மழை மேகங்கிழித் தோடிக்
கூனற்பிறை சேருங்குளிர் சாரற்கொடுங் குன்றம்
ஆனிற்பொலி வைந்தும்மமர்ந் தாடியுல கேத்தத்
தேனிற்பொலி மொழியாளொடு மேயான்திரு நகரே.

1.14.1
142

மயில்புல்குதண் பெடையோடுடன் ஆடும்வளர் சாரல்
குயிலின்னிசை பாடுங்குளிர் சோலைக்கொடுங் குன்றம்
அயில்வேல்மலி நெடுவெஞ்சுடர் அனலேந்திநின் றாடி
எயில்முன்பட எய்தானவன் மேயவ்வெழில் நகரே.

1.14.2
143

மிளிரும்மணி பைம்பொன்னொடு விரைமாமல ருந்திக்
குளிரும்புனல் பாயுங்குளிர் சாரற்கொடுங் குன்றம்
கிளர்கங்கையொ டிளவெண்மதி கெழுவுஞ்சடை தன்மேல்
வளர்கொன்றையும் மதமத்தமும் வைத்தான்வள நகரே.

1.14.3
144

பருமாமத கரியோடரி யிழியும்விரி சாரல்
குருமாமணி பொன்னோடிழி யருவிக்கொடுங் குன்றம்
பொருமாஎயில் வரைவிற்றரு கணையிற்பொடி செய்த
பெருமானவன் உமையாளொடு மேவும்பெரு நகரே.

1.14.4
145

மேகத்திடி குரல்வந்தெழ வெருவிவ்வரை யிழியும்
கூகைக்குலம் ஓடித்திரி சாரற்கொடுங் குன்றம்
நாகத்தொடும் இளவெண்பிறை சூடிந்நல மங்கை
பாகத்தவன் இமையோர்தொழ மேவும்பழ நகரே.

1.14.5
146

கைம்மாமத கரியின்னினம் இடியின்குர லதிரக்
கொய்ம்மாமலர்ச் சோலைபுக மண்டுங்கொடுங் குன்றம்
அம்மானென உள்கித்தொழு வார்கட்கருள் செய்யும்
பெம்மானவன் இமையோர்தொழ மேவும்பெரு நகரே.

1.14.6
147

மரவத்தொடு மணமாதவி மௌவல்லது விண்ட
குரவத்தொடு விரவும்பொழில் சூழ்தண்கொடுங் குன்றம்
அரவத்தொடு மிளவெண்பிறை விரவும்மலர்க் கொன்றை
நிரவச்சடை முடிமேலுடன் வைத்தான்நெடு நகரே.

1.14.7
148

முட்டாமுது கரியின்னினம் முதுவேய்களை முனிந்து
குட்டாச்சுனை யவைமண்டிநின் றாடுங்கொடுங் குன்றம்
ஒட்டாவரக் கன்றன்முடி ஒருபஃதவை யுடனே
பிட்டானவன் உமையாளொடு மேவும்பெரு நகரே.

1.14.8
149

அறையும்மரி குரலோசையை அஞ்சியடும் ஆனை
குறையும்மன மாகிம்முழை வைகுங்கொடுங் குன்றம்
மறையும்மவை யுடையானென நெடியானென இவர்கள்
இறையும்மறி வொண்ணாதவன் மேயவ்வெழில் நகரே.

1.14.9
150

மத்தக்களி றாளிவ்வர வஞ்சிம்மலை தன்னைக்
குத்திப்பெரு முழைதன்னிடை வைகுங்கொடுங் குன்றம்
புத்தரொடு பொல்லாமனச் சமணர்புறங் கூறப்
பத்தர்க்கருள் செய்தானவன் மேயபழ நகரே.

1.14.10
151

கூனற்பிறை சடைமேல்மிக வுடையான்கொடுங் குன்றைக்
கானற்கழு மலமாநகர்த் தலைவன்நல கவுணி
ஞானத்துயர் சம்பந்தன நலங்கொள்தமிழ் வல்லார்
ஊனத்தொடு துயர்தீர்ந்துல கேத்தும்மெழி லோரே.

1.14.11

இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கொடுங்குன்றேசுவரர்; கொடுங்குன்றீசர் என்றும் பாடம்.
தேவியார் - அமுதவல்லியம்மை; குயிலமுதநாயகி என்றும் பாடம்.

திருச்சிற்றம்பலம்

Back to Complete First thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Page