|
119 |
மத்தாவரை நிறுவிக்கடல் கடைந்தவ்விடம் உண்ட
தொத்தார்தரு மணிநீண்முடிச் சுடர்வண்ணன திடமாங்
கொத்தார்மலர் குளிர்சந்தகில் ஒளிர்குங்குமங் கொண்டு
முத்தாறுவந் தடிவீழ்தரு முதுகுன்றடை வோமே. | 1.12.1 |
120 |
தழையார்வட வியவீதனில் தவமேபுரி சைவன்
இழையாரிடை மடவாளொடும் இனிதாவுறை விடமாம்
மழைவானிடை முழவவ்வெழில் வளைவாளுகிர் எரிகண்
முழைவாளரி குமிறும்முயர் முதுகுன்றடை வோமே. | 1.12.2
| 121 |
விளையாததொர் பரிசில்வரு பசுபாசவே தனையொண்
டளையாயின தவிரவ்வருள் தலைவன்னது சார்பாம்
களையார்தரு கதிராயிரம் உடையவ்வவ னோடு
முளைமாமதி தவழும்முயர் முதுகுன்றடை வோமே. | 1.12.3
| 122 |
சுரர்மாதவர் தொகுகின்னரர் அவரோதொலை வில்லா
நரரானபன் முனிவர்தொழ இருந்தானிடம் நலமார்
அரசார்வர அணிபொற்கல னவைகொண்டுபன் னாளும்
முரசார்வரு மணமொய்ம்புடை முதுகுன்றடை வோமே. | 1.12.4
| 123 |
அறையார்கழல் அந்தன்றனை அயில்மூவிலை யழகார்
கறையார்நெடு வேலின்மிசை யேற்றானிடங் கருதில்
மறையாயின பலசொல்லியொண் மலர்சாந்தவை கொண்டு
முறையால்மிகு முனிவர்தொழு முதுகுன்றடை வோமே. | 1.12.5
| 124 |
ஏவார்சிலை எயினன்னுரு வாகியெழில் விசயற்
கோவாதவின் னருள்செய்தஎம் மொருவற்கிடம் உலகில்
சாவாதவர் பிறவாதவர் தவமேமிக வுடையார்
மூவாதபன் முனிவர்தொழு முதுகுன்றடை வோமே. | 1.12.6
| 125 |
தழல்சேர்தரு திருமேனியர் சசிசேர்சடை (*)முடிய
மழமால்விடை மிகவேறிய மறையோனுறை கோயில்
விழவோடொலி மிகுமங்கையர் தகுமாடக சாலை
முழவோடிசை (**)நடமுஞ்செயும் முதுகுன்றடை வோமே.
(*) முடியர் என்றும் பாடம்.
(**) நடமுன் செயும் என்றும் பாடம். | 1.12.7
| 126 |
செதுவாய்மைகள் கருதிவ்வரை யெடுத்ததிற லரக்கன்
கதுவாய்கள்பத் தலறியிடக் கண்டானுறை கோயில்
மதுவாயசெங் காந்தள்மலர் நிறையக்குறை வில்லா (*)
முதுவேய்கள்முத் துதிரும்பொழில் முதுகுன்றடை வோமே.
(*) குறை யில்லா என்றும் பாடம். | 1.12.8
| 127 |
இயலாடிய பிரமன்னரி இருவர்க்கறி வரிய
செயலாடிய தீயாருரு வாகியெழு செல்வன்
புயலாடுவண் பொழில்சூழ்புனற் படப்பைத்தடத் தருகே
முயலோடவெண் கயல்பாய்தரு முதுகுன்றடை வோமே. | 1.12.9
| 128 |
அருகரொடு புத்தரவ ரறியாவரன் மலையான்
மருகன்வரும் இடபக்கொடி யுடையானிடம் மலரார்
கருகுகுழன் மடவார்கடி குறிஞ்சியது பாடி
முருகன்னது பெருமைபகர் முதுகுன்றடை வோமே. | 1.12.10
| 129 |
முகில்சேர்தரு முதுகுன்றுடை யானைம்மிகு தொல்சீர்ப்
புகலிந்நகர் மறைஞானசம் பந்தன்னுரை செய்த
நிகரில்லன தமிழ்மாலைகள் இசையோடிவை பத்தும்
பகரும்மடி யவர்கட்கிடர் பாவம்மடை யாவே. | 1.12.11
|