திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

(முதல் திருமுறை)

இசைப் பயிற்சி:-

Get the Flash Player to see this player.

1.11 திருவீழிமிழலை


பண் - நட்டபாடை

சடையார்புன லுடையானொரு சரிகோவணம்  உடையான்	
படையார்மழு வுடையான்பல பூதப்படை யுடையான்	
மடமான்விழி யுமைமாதிடம் உடையானெனை யுடையான்	
விடையார்கொடி யுடையானிடம் வீழிம்மிழ லையே.	  1.11.1
	
ஈறாய்முத லொன்றாயிரு பெண்ணாண்குண மூன்றாய்	
மாறாமறை நான்காய்வரு பூதம்மவை ஐந்தாய்	
ஆறார்சுவை ஏழோசையொ டெட்டுத்திசை தானாய்	
வேறாய்உடன் ஆனான்இடம் வீழிம்மிழ லையே.	1.11.2
	
வம்மின்னடி யீர்நாண்மல ரிட்டுத்தொழு துய்ய	
உம்மன்பினோ டெம்மன்புசெய் தீசன்உறை கோயில்	
மும்மென்றிசை முரல்வண்டுகள் கெண்டித் திசையெங்கும்	
விம்மும்பொழில் சூழ்தண்வயல் வீழிம்மிழ லையே.	1.11.3
	
பண்ணும்பதம் ஏழும்பல வோசைத்தமி ழவையும்	
உண்ணின்றதொர் சுவையும்முறு தாளத்தொலி பலவும்	
மண்ணும்புனல் உயிரும்வரு காற்றுஞ்சுடர் மூன்றும்	
விண்ணும்முழு தானானிடம் வீழிம்மிழ லையே.	1.11.4
	
ஆயாதன சமயம்பல அறியாதவ னெறியின்	1.11.5
தாயானவன் உயிர்கட்குமுன் தலையானவன் மறைமுத்	
தீயானவன் சிவனெம்மிறை செல்வத்திரு ஆரூர்	
மேயானவன் உறையும்மிடம் வீழிம்மிழ லையே.	
	
கல்லால்நிழற் கீழாயிடர் காவாயென வானோர்	
எல்லாம்ஒரு தேராயயன் மறைபூட்டிநின் றுய்ப்ப	
வல்லாய்1 எரி காற்றீர்க்கரி கோல்வாசுகி நாண்கல்	
வில்லால்எயில் எய்தானிடம் வீழிம்மிழ லையே.	1.11.6
	
கரத்தான்மலி சிரத்தான்கரி யுரித்தாயதொர் படத்தான்	
புரத்தார்பொடி படத்தன்னடி பணிமூவர்கட் கோவா	
வரத்தான்மிக அளித்தானிடம் வளர்புன்னைமுத் தரும்பி	
விரைத்தாதுபொன் மணியீன்றணி வீழிம்மிழ லையே.	1.11.7
        	
முன்னிற்பவர் இல்லாமுரண் அரக்கன்வட கயிலை	
தன்னைப்பிடித் தெடுத்தான்முடி தடந்தோளிற வூன்றிப்	
பின்னைப்பணிந் தேத்தப்பெரு வாள்பேரொடுங் கொடுத்த	
மின்னிற்பொலி சடையானிடம் வீழிம்மிழ லையே.	1.11.8
	
பண்டேழுல குண்டானவை கண்டானுமுன் அறியா	
ஒண்டீயுரு வானான்உறை கோயில்நிறை பொய்கை	
வண்டாமரை மலர்மேல்மட அன்னம்நடை பயில	
வெண்டாமரை செந்தாதுதிர் வீழிம்மிழ லையே.	1.11.9
	
மசங்கற் சமண் மண்டைக்கையர் குண்டக்குண மிலிகள்	
இசங்கும்பிறப் பறுத்தானிட மிருந்தேன்களித் திரைத்துப்	
பசும்பொற்கிளி களிமஞ்ஞைகள் ஒளிகொண்டெழு பகலோன்	
விசும்பைப்பொலி விக்கும்பொழில் வீழிம்மிழ லையே.	1.11.10
	
வீழிம்மிழ லைம்மேவிய விகிர்தன்றனை விரைசேர்	1.11.11
காழிந்நகர்க் கலைஞானசம் பந்தன்தமிழ் பத்தும்	
யாழின்இசை வல்லார்சொலக் கேட்டாரவ ரெல்லாம்	
ஊழின்மலி2 வினைபோயிட வுயர்வானடை வாரே.	
	
	        - திருச்சிற்றம்பலம் -
பாடம்: 1. வல்வாய், 2. ஊழின்வலி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீழியழகர்,
தேவியார் - சுந்தரகுசாம்பிகை.


Back to Thirugnanasambandar Thevaram Page
Back to Thirumurai Main Page
Back to Thamizh Shaivite Literature Page
Back to Shaiva Siddhanta Home Page
Back to Shaivam Home Page