திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

(முதல் திருமுறை)

இசைப் பயிற்சி:-

Get the Flash Player to see this player.

1.9 திருவேணுபுரம்


பண் - நட்டபாடை

வண்டார்குழ லரிவையொடும் பிரியாவகை பாகம்	
பெண்டான்மிக ஆனான்பிறைச் சென்னிப்பெரு மானூர்	
தண்டாமரை மலராளுறை தவளந்நெடு மாடம்	
விண்டாங்குவ போலும் மிகு வேணுபுரம் அதுவே.	  1.9.1
	
படைப்பும்நிலை யிறுதிப்பயன் பருமையொடு நேர்மை	
கிடைப்பல்கண முடையான்கிறி பூதப்படை யானூர்	
புடைப்பாளையின் கமுகின்னொடு புன்னைமலர் நாற்றம்	
விடைத்தேவரு தென்றல்மிகு வேணுபுரம் அதுவே.	1.9.2
	
கடந்தாங்கிய கரியையவர் வெருவவுரி போர்த்துப்	
படந்தாங்கிய அரவக்குழைப் பரமேட்டிதன் பழவூர்	
நடந்தாங்கிய நடையார்நல பவளத்துவர் வாய்மேல்	
விடந்தாங்கிய கண்ணார்பயில் வேணுபுரம் அதுவே.	1.9.3
	
தக்கன்தன சிரமொன்றினை அரிவித்தவன் தனக்கு	
மிக்கவ்வரம் அருள்செய்தஎம் விண்ணோர்பெரு மானூர்	
பக்கம்பல மயிலாடிட மேகம்முழ வதிர	
மிக்கம்மது வண்டார்பொழில் வேணுபுரம் அதுவே.	1.9.4
	
நானாவித உருவாய்நமை1 யாள்வான்நணு காதார்	1.9.5
வானார்திரி புரமூன்றெரி யுண்ணச்சிலை தொட்டான்	
தேனார்ந்தெழு கதலிக்கனி யுண்பான்திகழ் மந்தி	
மேனோக்கிநின் றிரங்கும்பொழில் வேணுபுரம் அதுவே.	
	
மண்ணோர்களும் விண்ணோர்களும்2 வெருவிம்மிக அஞ்சக்	
கண்ணார்சல மூடிக்கட லோங்கவ்வுயர்ந் தானூர்	
தண்ணார்நறுங் கமலம்மலர் சாயவ்விள வாளை	
விண்ணார்குதி கொள்ளும்வியன் வேணுபுரம் அதுவே.	1.9.6
	
இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.	1.9.7
        	
மலையான்மகள் அஞ்சவ்வரை எடுத்தவ்வலி யரக்கன்	
தலைதோளவை நெரியச்சரண் உகிர்வைத்தவன் தன்னூர்	
கலையாறொடு சுருதித்தொகை கற்றோர்மிகு கூட்டம்	
விலையாயின சொற்றேர்தரு வேணுபுரம் அதுவே.	1.9.8
	
வயமுண்டவ மாலும்அடி காணாதல மாக்கும்	
பயனாகிய பிரமன்படு தலையேந்திய பரனூர்	
கயமேவிய3 சங்கந்தரு கழிவிட்டுயர் செந்நெல்	
வியன்மேவி4வந் துறங்கும் பொழில் வேணுபுரம் அதுவே.	1.9.9
	
மாசேறிய வுடலாரமண் குழுக்களொடு தேரர்	
தேசேறிய பாதம்வணங் காமைத்தெரி யானூர்	
தூசேறிய அல்குல்துடி இடையார்துணை முலையார்	
வீசேறிய புருவத்தவர் வேணுபுரம் அதுவே.	1.9.10
	
வேதத்தொலி யானும்மிகு வேணுபுரந் தன்னைப்	1.9.11
பாதத்தினின் மனம்வைத்தெழு பந்தன்தன5 பாடல்	
ஏதத்தினை இல்லாஇவை பத்தும்இசை வல்லார்	
கேதத்தினை இல்லார்சிவ கெதியைப்பெறு வாரே.	
	
	        - திருச்சிற்றம்பலம் -
பாடம்: 1. உருவான்நமை; 2. விண்ணோர்களும் மண்ணோர்களும்; 3. சயமேவிய; 4. வயல்மேவி; 5. தொழுசம்பந்தன்.

வேணுபுரம் என்பது சீகாழிக்கொருபெயர்


Back to Thirugnanasambandar Thevaram Page
Back to Thirumurai Main Page
Back to Thamizh Shaivite Literature Page
Back to Shaiva Siddhanta Home Page
Back to Shaivam Home Page