திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

(முதல் திருமுறை)

1.7 திருநள்ளாறும் - திருஆலவாயும்

இப்பாடலைக் கேட்க:-

Get the Flash Player to see this player.

வினாவுரை

பண் - நட்டபாடை

பாடக மெல்லடிப் பாவையோடும் 	
   படுபிணக் காடிடம் பற்றிநின்று	
நாடகம் ஆடுநள் ளாறுடைய 	
   நம்பெரு மானிது என்கொல்சொல்லாய்	
சூடகம் முன்கை மடந்தைமார்கள் 	
   துணைவ ரொடுந்தொழு தேத்திவாழ்த்த	
ஆடக மாடம் நெருங்குகூடல் 	
   ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.	 1.7.1
	
திங்களம் போதுஞ் செழும்புனலுஞ் 	
   செஞ்சடை மாட்டயல் வைத்துகந்து	
நங்கண் மகிழுநள் ளாறுடைய 	
   நம்பெரு மானிது என்கொல்சொல்லாய்	
பொங்கிள மென்முலை யார்களோடும் 	
   புனமயி லாட நிலாமுளைக்கும்	
அங்கழ கச்சுதை1 மாடக்கூடல் 	
   ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.	1.7.2
	
தண்ணறு2  மத்தமுங் கூவிளமும்	
   வெண்டலை மாலையுந் தாங்கியார்க்கும்	
நண்ணல் அரியநள் ளாறுடைய	
   நம்பெரு மானிது என்கொல்சொல்லாய்	
புண்ணிய வாணரும் மாதவரும் 	
   புகுந்துட னேத்தப் புனையிழையார்	
அண்ணலின் பாட லெடுக்குங்கூடல்	
   ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.	1.7.3
	
பூவினில் வாசம் புனலிற்பொற்புப்	
   புதுவிரைச் சாந்தினின் நாற்றத்தோடு	
நாவினிற் பாடல்நள் ளாறுடைய 	
   நம்பெரு மானிது என்கொல்சொல்லாய்	
தேவர்கள் தானவர் சித்தர்விச்சா 	
   தரர்கணத் தோடுஞ் சிறந்துபொங்கி	
ஆவினில் ஐந்துகந் தாட்டுங்கூடல்	
   ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.	1.7.4
	
செம்பொன்செய் மாலையும் வாசிகையுந் 	
   திருந்து புகையு மவியும்பாட்டும்	
நம்பும்பெருமைநள் ளாறுடைய	
   நம்பெரு மானிது என்கொல்சொல்லாய்	
உம்பரும் நாக ருலகந்தானும் 	
   ஒலிகடல் சூழ்ந்த வுலகத்தோரும்	
அம்புத நால்களால் நீடுங்கூடல்	
   ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.	1.7.5
	
பாகமுந் தேவியை வைத்துக்கொண்டு 	
   பைவிரி துத்திப் பரியபேழ்வாய்	
நாகமும் பூண்டநள் ளாறுடைய	
   நம்பெரு மானிது என்கொல்சொல்லாய்	
போகமும் நின்னை மனத்துவைத்துப் 	
   புண்ணியர்நண்ணும் புணர்வுபூண்ட	
ஆகமு டையவர் சேருங்கூடல்	
   ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.	1.7.6
	
கோவண ஆடையும் நீறுப்பூச்சுங் 	
   கொடுமழு ஏந்தலுஞ் செஞ்சடையும்	
நாவணப் பாட்டுநள் ளாறுடைய	
   நம்பெரு மானிது என்கொல்சொல்லாய்	
பூவண மேனி இளையமாதர் 	
   பொன்னும் மணியுங் கொழித்தெடுத்து	
ஆவண வீதியி லாடுங்கூடல்	
   ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.	1.7.7
	
இலங்கை இராவணன் வெற்பெடுக்க 	
   எழில்விர லூன்றி யிசைவிரும்பி	
நலங்கொளச் சேர்ந்தநள் ளாறுடைய	
   நம்பெரு மானிது என்கொல்சொல்லாய்	
புலன்களைச் செற்றுப் பொறியைநீக்கிப் 	
   புந்தியி லுந்நினைச் சிந்தைசெய்யும்	
அலங்கல்நல் லார்கள் அமருங்கூடல்	
   ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.	1.7.8
	
பணியுடை மாலும் மலரினோனும்	
   பன்றியும் வென்றிப் பறவையாயும்	
நணுகல் அரியநள் ளாறுடைய	
   நம்பெரு மானிது என்கொல்சொல்லாய்	
மணியொலி சங்கொலி யோடுமற்றை	
   மாமுர சின்னொலி யென்றும்ஓவா	
தணிகிளர் வேந்தர் புகுதுங்கூடல்	
   ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.	1.7.9
	
தடுக்குடைக் கையருஞ் சாக்கியருஞ்	
   சாதியில் நீங்கிய வத்தவத்தர்	
நடுக்குற நின்றநள் ளாறுடைய	
   நம்பெரு மானிது என்கொல்சொல்லாய்	
எடுக்கும் விழவும்நன் னாள்விழவும் 	
   இரும்பலி யின்பினோ3 டெத்திசையும்	
அடுக்கும் பெருமைசேர் மாடக்கூடல்	
   ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.	1.7.10
	
அன்புடை யானை அரனைக்கூடல் 	
   ஆலவாய் மேவிய தென்கொலென்று	
நன்பொனை நாதனை நள்ளாற்றானை 	
   நயம்பெறப் போற்றி நலங்குலாவும்	
பொன்புடை சூழ்தரு மாடக்காழிப் 	
   பூசுரன் ஞானசம் பந்தன்சொன்ன	
இன்புடைப் பாடல்கள் பத்தும்வல்லார் 	
   இமையவ ரேத்த இருப்பர்தாமே.	1.7.11
	
	    - திருச்சிற்றம்பலம் -
பாடம்: 1. அங்களபச்சுதை. 2. தண்ணுறு, 3. பலியன்பினோ. இதுவுஞ் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - தெர்ப்பாரணியேசுவரர்;
தேவியார் - போகமார்த்தபூண்முலையம்மை.


Back to Thirugnanasambandar Thevaram Page
Back to Thirumurai Main Page
Back to Thamizh Shaivite Literature Page
Back to Shaiva Siddhanta Home Page
Back to Shaivam Home Page