திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

(முதல் திருமுறை)

1.4 திருப்புகலியும் - திருவீழிமிழலையும்


வினாவுரை

பண் - நட்டபாடை

34

மைம்மரு பூங்குழல் கற்றைதுற்ற வாணுதல் மான்விழி மங்கையோடும்
பொய்ம்மொழி யாமறை யோர்களேத்தப் புகலி நிலாவிய புண்ணியனே
எம்மிறை யேயிமை யாதமுக்கண் ஈசவென்நேச விதென்கொல் சொல்லாய்
மெய்ம்மொழி நான்மறை யோர்மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே.

1.4.1
35

கழன்மல்கு பந்தொடம் மானைமுற்றில் கற்றவர் சிற்றிடைக் கன்னிமார்கள்
பொழின்மல்கு கிள்ளையைச் சொற்பயிற்றும் புகலி நிலாவிய புண்ணியனே
எழின்மல ரோன்சிர மேந்தியுண்டோ ர் இன்புறு செல்வமி தென்கொல்சொல்லாய்
மிழலையுள் வேதிய ரேத்திவாழ்த்த விண்ணிழி கோயில் விரும்பியதே.

1.4.2
36

கன்னிய ராடல் கலந்துமிக்க கந்துக வாடை கலந்துதுங்கப்
பொன்னியல் மாடம் நெருங்குசெல்வப் புகலி நிலாவிய புண்ணியனே
இன்னிசை யாழ்மொழி யாளோர்பாகத் தெம்மிறையேயிது வென்கொல் சொல்லாய்
மின்னியல் நுண்ணிடை யார்மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே.

1.4.3
37

நாகப ணந்திகழ் அல்குல்மல்கும் நன்னுதல் மான்விழி மங்கையோடும்
பூகவ ளம்பொழில் சூழ்ந்தஅந்தண் புகலிநி லாவிய புண்ணியனே
ஏகபெ ருந்தகை யாயபெம்மான் எம்மிறையேயிது வென்கொல் சொல்லாய்
மேகமு ரிஞ்செயில் சூழ்மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே.

1.4.4
38

சந்தள றேறுத டங்கொள்கொங்கைத் தையலோடுந் தளராத வாய்மைப்
புந்தியி னான்மறை யோர்களேத்தும் புகலி நிலாவிய புண்ணியனே
எந்தமை யாளுடை ஈசஎம்மான் எம்மிறை யேயிது வென்கொல்சொல்லாய்
வெந்தவெண் ணீறணி வார்மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே.

1.4.5
39

சங்கொலி இப்பிசு றாமகரந் தாங்கி நிரந்து தரங்கம்மேன்மேற்
பொங்கொலி நீர்சுமந் தோங்குசெம்மைப் புகலி நிலாவிய புண்ணியனே
எங்கள்பி ரானிமை யோர்கள்பெம்மான் எம்மிறையேயிது வென்கொல் சொல்லாய்
வெங்கதிர் தோய்பொழில் சூழ்மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே.

1.4.6
40

காமனெ ரிப்பிழம் பாகநோக்கிக் காம்பன தோளியொ டுங்கலந்து
பூமரு நான்முகன் போல்வரேத்தப் புகலி நிலாவிய புண்ணியனே
ஈமவ னத்தெரி யாட்டுகந்த எம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
வீமரு தண்பொழில் சூழ்மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே.

1.4.7
41

இலங்கையர் வேந்தெழில் வாய்த்ததிண்டோ ள் இற்றல றவ்விர லொற்றியைந்து
புலங்களைக் கட்டவர் போற்றஅந்தண் புகலி நிலாவிய புண்ணியனே
இலங்கெரி யேந்திநின் றெல்லியாடும் எம்மிறை யேயிது வென்கொல்சொல்லாய்
விலங்கலொண் மாளிகை சூழ்மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே.

1.4.8
42

செறிமுள ரித்தவி சேறியாறுஞ் செற்றதில் வீற்றிருந் தானும்மற்றைப்
பொறியர வத்தணை யானுங்காணாப் புகலி நிலாவிய புண்ணியனே
எறிமழு வோடிள மான்கையின்றி இருந்தபி ரானிது வென்கொல்சொல்லாய்
வெறிகமழ் பூம்பொழில் சூழ்மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே.

1.4.9
43

பத்தர்க ணம்பணிந் தேத்தவாய்த்த பான்மைய தன்றியும் பல்சமணும்
புத்தரும் நின்றலர் தூற்றஅந்தண் புகலி நிலாவிய புண்ணியனே
எத்தவத் தோர்க்குமி லக்காய்நின்ற எம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
வித்தகர் வாழ்பொழில் சூழ்மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே.

1.4.10
44

விண்ணிழி கோயில் விரும்பிமேவும் வித்தக மென்கொலி தென்றுசொல்லிப்
புண்ணிய னைப்புக லிந்நிலாவு பூங்கொடி யோடிருந் தானைப்போற்றி
நண்ணிய கீர்த்தி நலங்கொள்கேள்வி நான்மறை ஞானசம் பந்தன்சொன்ன
பண்ணியல் பாடல்வல் லார்களிந்தப் பாரொடு விண்பரி பாலகரே.

1.4.11

இவ்விரண்டும் சோழநாட்டிலுள்ளவை. புகலி என்பது சீகாழிக்கொருபெயர்
வீழிமிழலையில் சுவாமிபெயர் - வீழியழகர், தேவியார் - சுந்தரகுசாம்பிகை

திருச்சிற்றம்பலம்

Back to Complete First thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page