திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருவலிதாயம் தேவாரத் திருப்பதிகம்

(முதல் திருமுறை 3வது திருப்பதிகம்)

1.3 திருவலிதாயம்

பண் - நட்டபாடை

 
பத்தரோடுபல ரும்பொலியம்மலர் அங்கைப் புனல்தூவி	
ஒத்தசொல்லியுல கத்தவர்தாந்தொழு தேத்த உயர்சென்னி	
மத்தம்வைத்தபெரு மான்பிரியாதுறை கின்ற வலிதாயம்	
சித்தம்வைத்தஅடி யாரவர் மேலடை யாமற் றிடர்நோயே.	  1.3.1
	
படையிலங்குகரம் எட்டுடை யான்படி றாகக் கனலேந்திக்	
கடையிலங்குமனையிற்பலிகொண்டுணுங் கள்வன்னுறை கோயில்	
மடையிலங்குபொழி லின்நிழல்வாய்மது வீசும் வலிதாயம்	
அடையநின்றஅடி யார்க்கடையாவினை அல்லல் துயர்தானே.	1.3.2
	
ஐயனொய்யன்அணி யன்பிணியில்லவ ரென்றுந் தொழுதேத்தச்	
செய்யன்வெய்யபடை யேந்தவல்லான்திரு மாதோ டுறைகோயில்	
வையம்வந்துபணி யப்பிணிதீர்த்துயர் கின்ற வலிதாயம்	
உய்யும்வண்ணம்நினை மின்நினைந்தால்வினை தீருந் நலமாமே.	1.3.3
	
ஒற்றைஏறதுடை யான்நடமாடியோர் பூதப் படைசூழப்	
புற்றில்நாகம்அரை யார்த்துழல்கின்றஎம் பெம்மான் மடவாளோ	
டுற்றகோயிலுல கத்தொளிமல்கிட உள்கும் வலிதாயம்	
பற்றிவாழும்அது வேசரணாவது பாடும் மடியார்க்கே.	1.3.4
	
புந்தியொன்றிநினை வார்வினையாயின தீரப் பொருளாய	
அந்தியன்னதொரு பேரொளியான்அமர் கோயில் அயலெங்கும்	
மந்திவந்துகடு வன்னொடுங்கூடி வணங்கும் வலிதாயஞ்	
சிந்தியாதஅவர் தம்மடும்வெந்துயர் தீர்த லெளிதன்றே.	1.3.5
	
ஊனியன்றதலை யிற்பலிகொண்டுல கத்துள் ளவரேத்தக்	
கானியன்றகரி யின்னுரிபோர்த்துழல் கள்வன் சடைதன்மேல்	
வானியன்றபிறை வைத்தஎம்மாதி மகிழும் வலிதாயம்	
தேனியன்றநறு மாமலர்கொண்டுநின் றேத்தத் தெளிவாமே.	1.3.6
	
கண்ணிறைந்தவிழி யின்னழலால்வரு காமன் னுயிர்வீட்டிப்	
பெண்ணிறைந்தவொரு பால்மகிழ்வெய்திய பெம்மா னுறைகோயில்	
மண்ணிறைந்தபுகழ் கொண்டடியார்கள் வணங்கும் வலிதாயத்	
துண்ணிறைந்தபெரு மான்கழலேத்தநம் உண்மைக் கதியாமே.	1.3.7
        	
கடலில்நஞ்சமமு துண்டிமையோர்தொழு தேத்த நடமாடி	
அடலிலங்கையரை யன்வலிசெற்றருள் அம்மா னமர்கோயில்	
மடலிலங்குகமு கின்பலவின்மது விம்மும் வலிதாயம்	
உடலிலங்கும் உயிர்ருள்ளளவுந்தொழ உள்ளத் துயர்போமே.	1.3.8
	
பெரியமேருவரை யேசிலையாமலை வுற்றா ரெயில்மூன்றும்	
எரியஎய்தவொரு வன்னிருவர்க்கறி வொண்ணா வடிவாகும்	
எரியதாகியுற வோங்கியவன்வலி தாயந் தொழுதேத்த	
உரியராகவுடை யார்பெரியாரென உள்கும் முலகோரே.	1.3.9
	
ஆசியாரமொழி யாரமண் சாக்கிய ரல்லா தவர்கூடி	
ஏசியீரமில ராய்மொழிசெய்தவர் சொல்லைப் பொருளென்னேல்	
வாசிதீர அடியார்க்கருள்செய்து வளர்ந்தான் வலிதாயம்	
பேசும் ஆர்வமுடை யாரடியாரெனப் பேணும் பெரியோரே.	1.3.10
	
வண்டுவைகும்மணம் மல்கியசோலை வளரும் வலிதாயத்	1.3.11
தண்டவாணனடி யுள்குதலால்அருள் மாலைத் தமிழாகக்	
கண்டல்வைகுகடற் காழியுள்ஞானசம் பந்தன் தமிழ்பத்துங்	
கொண்டுவைகியிசை பாடவல்லார்குளிர் வானத் துயர்வாரே.	

	        - திருச்சிற்றம்பலம் -
இத்தலம் தொண்டைநாட்டில் பாடியென வழங்கப்பட்டிருக்கின்றது.
சுவாமிபெயர் - வலிதாயநாதர்,
தேவியார் - தாயம்மை


Back to Thirugnanasambandar Thevaram Page
Back to Thirumurai Main Page
Back to Thamizh Shaivite Literature Page
Back to Shaiva Siddhanta Home Page
Back to Shaivam Home Page