திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

(முதல் திருமுறை)

1.2 திருப்புகலூர்


பண் - நட்டபாடை

12

குறிகலந்தஇசை பாடலினான்நசை யாலிவ்வுல கெல்லாம்
நெறிகலந்ததொரு நீர்மையனாயெரு தேறும்பலி பேணி
முறிகலந்ததொரு தோலரைமேலுடை யானிடம்மொய்ம் மலரின்
பொறிகலந்தபொழில் சூழ்ந்தயலேபுய லாரும்புக லூரே.

1.2.1
13

காதிலங்குகுழை யன்னிழைசேர்திரு மார்பன்னொரு பாகம்
மாதிலங்குதிரு மேனியினான்கரு மானின்னுரி யாடை
மீதிலங்கவணிந் தானிமையோர்தொழ மேவும்மிடஞ் சோலைப்
போதிலங்குநசை யால்வரிவண்டிசை பாடும்புக லூரே.

1.2.2
14

பண்ணிலாவுமறை பாடலினானிறை சேரும்வளை யங்கைப்
பெண்ணிலாவவுடை யான்பெரியார்கழ லென்றுந்தொழு தேத்த
உண்ணிலாவியவர் சிந்தையுள்நீங்கா வொருவற்கிட மென்பர்
மண்ணிலாவும்அடி யார்குடிமைத்தொழில் மல்கும்புக லூரே.

1.2.3
15

நீரின்மல்குசடை யன்விடையன்னடை யார்தம்அரண் மூன்றுஞ்
சீரின்மல்குமலை யேசிலையாக முனிந்தன்றுல குய்யக்(*)
காரின்மல்குகடல் நஞ்சமதுண்ட கடவுள்ளிட மென்பர்
ஊரின்மல்கிவளர் செம்மையினாலுயர் வெய்தும்புக லூரே.
(*) முனிந்தானுலகுய்ய என்றும் பாடம்.

1.2.4
16

செய்யமேனிவெளி யபொடிப்பூசுவர் சேரும்மடி யார்மேல்
பையநின்றவினை பாற்றுவர்போற்றிசைத் தென்றும்பணி வாரை
மெய்யநின்றபெரு மானுறையும்மிட மென்பரருள் பேணிப்
பொய்யிலாதமனத் தார்பிரியாதுபொ ருந்தும்புக லூரே.

1.2.5
17

கழலினோசைசிலம் பின்னொலியோசை கலிக்கப்பயில் கானிற்
குழலினோசைகுறட் பாரிடம்போற்றக் குனித்தாரிட மென்பர்
விழவினோசையடி யார்மிடைவுற்று விரும்பிப்பொலிந் தெங்கும்
முழவினோசைமுந் நீரயர்வெய்த முழங்கும்புக லூரே.

1.2.6
18

வெள்ளமார்ந்துமிளிர் செஞ்சடைதன்மேல் விளங்கும்மதி சூடி
உள்ளமார்ந்தஅடி யார்தொழுதேத்த உகக்கும்அருள் தந்தெங்
கள்ளமார்ந்துகழி யப்பழிதீர்த்த கடவுட்கிட மென்பர்
புள்ளையார்ந்தவய லின்விளைவால்வளம் மல்கும்புக லூரே.

1.2.7
19

தென்னிலங்கையரை யன்வரைபற்றி யெடுத்தான்முடி திண்டோ ள்
தன்னிலங்குவிர லால்நெரிவித்திசை கேட்டன்றருள் செய்த
மின்னிலங்குசடை யான்மடமாதொடு மேவும்மிட மென்பர்
பொன்னிலங்குமணி மாளிகைமேல்மதி தோயும்புக லூரே.

1.2.8
20

நாகம்வைத்தமுடி யானடிகைதொழு தேத்தும்மடி யார்கள்
ஆகம்வைத்தபெரு மான்பிரமன்னொடு மாலுந்தொழு தேத்த
ஏகம்வைத்தஎரி யாய்மிகவோங்கிய எம்மானிடம் போலும்
போகம்வைத்தபொழி லின்நிழலான்மது வாரும்புக லூரே.

1.2.9
21

செய்தவத்தர்மிகு தேரர்கள்சாக்கியர் செப்பிற்பொரு ளல்லாக்
கைதவத்தர்மொழி யைத்தவிர்வார்கள் கடவுள்ளிடம் போலுங்
கொய்துபத்தர்மல ரும்புனலுங்கொடு தூவித்துதி செய்து
மெய்தவத்தின்முயல் வாருயர்வானக மெய்தும்புக லூரே.

1.2.10
22

புற்றில்வாழும்அர வம்மரையார்த்தவன் மேவும்புக லூரைக்
கற்றுநல்லவவர் காழியுள்ஞானசம் பந்தன்தமிழ் மாலை
பற்றியென்றுமிசை பாடியமாந்தர் பரமன்னடி சேர்ந்து
குற்றமின்றிக்குறை பாடொழியாப்புக ழோங்கிப்பொலி வாரே.

1.2.11

காவிரி தென்கரைத் தலம்.
சுவாமிபெயர் - அக்கினீசுவரர்; தேவியார் - கருந்தார்க்குழலியம்மை

திருச்சிற்றம்பலம்

Back to Complete First thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page