Tiruchitrampalakkovai of Manivachakar (Thirukkovaiyar)
(in Tamil Script, unicode format)

மணிவாசகர் பாடிய திருக்கோவையார்
(திருச்சிற்றம்பலக்கோவையார்)


இருபத்திநான்கம் அதிகாரம்
24. பொருள் வயின் பிரிவு

பேரின்பக் கிளவி
பொருட்பிரிவு இருபதும் அருட்பிரி வுயிரே
ஆனந்த மாகி அதுவே தானாய்த்
தானே அதுவாய்ப் பேசிய கருணை.

1. வாட்டங் கூறல்
முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்னான் முடியுமெனப்
பனிவருங் கண்பர மன்திருச் சிற்றம் பலமனையாய்
துனிவரு நீர்மையி(து) என்னென்று தூநீர் தெளித்தளிப்ப
நனிவரு நாளிது வோஎன்று வந்திக்கும் நன்னுதலே. ... 332

பிரிவு கேட்ட அரிவை வாட்டம்
நீங்கல் உற்றவன் பாங்கிக்கு உரைத்தது.

2. பிரிவு நினைவுரைத்தல்
வறியார் இருமை அறியார் எனமன்னும் மாநிதிக்கு
நெறியார் அருஞ்சுரம் செல்லலுற் றார்நமர் நீண்டிருவர்
அறியா அளவுநின் றோன்தில்லைச் சிற்றம்பலம் அனைய
செறிவார் கருங்குழல் வெண்ணகைக் செவ்வாய்த் திருநுதலே. ... 333

பொருள்வயின் பிரியும் பொருவே லவனெனக்
கருளுறு குழலிக்குத் தோழி சொல்லியது.

3. ஆற்றாது புலம்பல்
சிறுவாள் உகிருற்(று) உறாமுன்னம் சின்னப் படுங்குவளைக்(கு)
எறிவாள் கழித்தனள் தோழி எழுதிற் கரப்பதற்கே
அறிவாள் ஒழுகுவ(து) அஞ்சனம் அம்பல வர்ப்பணியார்
குறியாழ் நெறிசெல்வர் அன்பரென்(று) அம்ம கொடியவளே. ... 334

பொருள்தரப் பிரியும் அருள்தரு பவளெனப்
பாங்கி பகரப் பூங்கொடி புலம்பியது.

4. ஆற்றாமை கூறல்
வானக் கடிமதில் தில்லைஎம் கூத்தனை ஏத்தலர்போல்
கானக் கடஞ்செல்வர் காதலர் என்னக் கதிர்முலைகள்
மானக் கனகம் தரும்மலர்க் கண்கள்முத் தம்வளர்க்கும்
தேனக்க தார்மன்னன் என்னோ இனிச் சென்று தேர்பொருளே. ... 335

ஏழை யழுங்கத் தோழி சொல்லியது.

5. திணை பெயர்த்து உரைத்தல்
கருள்தரு செஞ்சடை வெண்சுடர் அம்பல வன்மலயத்(து)
இருள்தரு பூம்பொழில் இன்னுயிர் போலக் கலந்திசைத்த
அருள்தரும் இன்சொற்கள் அத்தனை யும்மறந்து அத்தம்சென்றோ
பொருள்தரக் கிற்கின் றதுவினை யேற்குப் புரவலரே. ... 336

துணைவன் பிரியத் துயருறு மனத்தோடு
திணை பெயர்த்திட்டுத் தேமொழி மொழிந்தது.

6. பொருத்தம் அறிந்து உரைத்தல்
மூவர்நின்(று) ஏத்த முதலவன் ஆடமுப் பத்துமுல்லைத்
தேவர்சென்(று) ஏத்தும் சிவன்தில்லை அம்பலம் சீர்வழுத்தாப்
பாவர்சென்(று) அல்கும் நரகம் அனைய புனையழற்கான்
போவர்நம் காதலர் என்நாம் உரைப்பது பூங்கொடியே. ... 337

பொருள்வயின் பிரிவோன் பொருத்த நினைந்து
கருளுறு குழலிக்குத் தோழி சொல்லியது.

7. பிரிந்தமை கூறல்
தென்மாத் திசைவசை தீர்தரத் தில்லைச்சிற் றம்பலத்துள்
என்மாத் தலைக்கழல் வைத்தெரி யாடும் இறைதிகழும்
பொன்மாப் புரிசைப் பொழில்திருப் பூவணம் அன்னபொன்னே
வன்மாக் களிற்றொடு சென்றனர் இன்றுநம் மன்னவரே. ... 338

எதிர் நின்று பிரியின் கதிர் நீ வாடுதற்கு
உணர்த்தா(து) அகன்றான் மணித்தேரோன் என்றது.

8. இரவுறு துயரத்திற்கு இரங்கி உரைத்தல்
ஆழியொன்(று) ஈர்அடி யும்இலன் பாகன்முக் கண்தில்லையோன்
ஊழியொன் றாதன நான்கும்ஐம் பூதமும் ஆறொடுங்கும்
ஏழியன் றாழ்கட லும்எண் திசையும் திரிந்திளைத்து
வாழியன் றோஅருக் கன்பெருந் தேர்வந்து வைகுவதே. ... 339

அயில்தரு கண்ணியைப் பயில்தரும் இரவினுள்
தாங்குவ(து) அரிதெனப் பாங்கி பகர்ந்தது.

9. இகழ்ச்சி நினைந்து அழிதல்
பிரியார் எனஇகழ்ந் தேன்முன்னம் யான்பின்னை எற்பிரியின்
தரியாள் எனஇகழ்ந் தார்மன்னர் தாந்தக்கன் வேள்விமிக்க
எரியார் எழில்அழிக் கும்எழில் அம்பலத் தோன்எவர்க்கும்
அரியான் அருளிலர் போலன்ன என்னை அழிவித்தவே. ... 340

உணர்த்தாது பிரிந்தாரென
மணித்தாழ் குழலி வாடியது.

10. உறவு வெளிப்பட்டு நிற்றல்
சேணும் திகழ்மதில் சிற்றம் பலவன்தெண் ணீர்க் கடல்நஞ்(சு)
ஊணும் திருத்தும் ஒருவன் திருத்தும் உலகின்னல்லாம்
காணும் திசைதொறும் கார்க்கய லும்செங் கனியொடுபைம்
பூணும் புணர்முலை யுங்கொண்டு தோன்றுமொர் பூங்கொடியே. ... 341

பொருள்வயின் பிரிந்த ஒளியுறு வேலவன்
ஓங்கழற் கடத்துப் பூங்கொடியை நினைந்தது.

11. நெஞ்சொடு நோதல்
பொன்னணி ஈட்டிய ஒட்டரும் நெஞ்சம்இப் பொங்குவெங்கா
னின்னணி நிற்கும்இ(து) என்னென்ப தேஇமை யோர்இறைஞ்சும்
மன்னணி தில்லை வளநகர் அன்னஅன் னந் நடையாள்
மின்னணி நுண்ணிடைக் கோபொருட் கோநீ விரைகின்றதே. ... 342

வல்லழற் கடத்து மெல்லியலை நினைந்து
வெஞ்சுடர் வேலோன் நெஞ்சொடு நொந்தது.

12. நெஞ்சொடு புலத்தல்
நாய்வயின் உள்ள குணமும்இல் லேனைநற் றொண்டுகொண்ட
தீவயின் மேனியன் சிற்றம் பலமன்ன சின்மொழியைப்
பேய்வயி னும்அரி தாகும் பிரி(வு)எளி தாக்குவித்துச்
சேய்வயின் போந்தநெஞ் செஅஞ்சத் தக்க(துஐஉன் சிக்கெனவே. ... 343

அழறகடத்(து) அழுக்க மிக்கு நிழற்கதிர் வேலோன் நீடு வாடியது.

13. நெஞ்சொடு மறுத்தல்
தீமே வியநிருத் தன்திருச் சிற்றம் பலம்அனைய
பூமே வியபொன்னை விட்டுப்பொன் தேடியிப் பொங்குவெங்கான்
நாமே நடக்க ஒழிந்தனம் யாம்நெஞ்சம் வஞ்சியன்ன
வாமே கலையைவிட் டோபொருள் தேர்ந்தெம்மை வாழ்விப்பதே. ... 344

நீணெறி சென்ற நாறிணர்த் தாரோன்
சேணெறி யஞ்சி மீணெறி சென்றது.

14. நாள் எண்ணி வருந்தல்
தெண்ணீர் அணிசிவன் சிற்றம் பலம்சிந்தி யாதவரின்
பண்ணீர் மொழியிவ ளைப்பையுள் எய்தப் பனித்தடங்கண்
உண்ணீர் உகஒளி வாடிய நீடுசென் றார்சென்றநாள்
எண்ணீர் மையின்நிலனுங் குழி யும்விரல் இட்டறவே. ... 345

சென்றவர் திறத்து நின்றுநணி வாடும்
குழிருங் கூந்தற்குத் தோழிநனி வாடியது.

15. ஏறு வரவு கண்டு இரங்கி உரைத்தல்
சுற்றம் பலம்இன்மை காட்டித்தன் தொல்கழல் தந்ததொல்லோன்
சிற்றம் பலமனை யாள்பர மன்றுதிண் கோட்டின்வண்ணப்
புற்றங்(கு) உதர்த்துநல் நாகொடும் பொன்னார் மணிபுலம்பக்
கொற்றம் மருவுகொல் ஏறுசெல்லா நின்ற கூர்ஞ்செக்கரே. ... 346

நீடிய பொன்னின் நெஞ்சம் நெகிழ்ந்து
வாடியவன் வரவுற்றது.

16. பருவங் கண்டு இரங்கல்
கண்ணுழை யாதுவிண் மேகம் கலந்து கணமயில்தொக்(கு)
எண்ணுழை யாத்தழை கோலிநின்(று) ஆலும் இனமலர்வாய்
மண்ணுழை யாவும் அறிதில்லை மன்னன(து) இன்னருள்போல்
பண்ணுழை யாமொழி யாள்என்ன ளாங்கொல்மன் பாவியற்கே. ... 347

மன்னிய பருவம் முன்னிய செலவின்
இன்னல் எய்தி மன்னன் ஏகியது.

17. முகிலொடு கூறல்
அற்படு காட்டில்நின்(று) ஆடிசிற் ற்ம்பலத் தான்மிடற்றின்
முற்படு நீள்முகில் என்னின்முன் னேல்முது வோர்குழுமி
விற்படு வாணுத லாள்செல்லல் தீர்ப்பான் விரைமலர்தூய்
நெற்படு வான்பலி செய்(து)அய ராநிற்கும் நீள்நகர்க்கே. ... 348

எனைப்பல துயரமோ(டு) ஏகா நின்றவன்
துனைக்கார் அதற்குத் துணிந்துசொல் லியது.

18. தேர் வரவு கூறல்
பாவியை வெல்லும் பரிசில்லை யேமுகில் பாவையஞ்சீர்
ஆவியை வெல்லக் கறுக்கின்ற போழ்தத்தின் அம்பலத்துக்
காவியை வெல்லும் மிடற்றோன் அருளிற் கதுமெனப் போய்
மேவிய மாநிதி யோ(டு)அன்பர் தேர்வந்து மேவினதே. ... 350

வேந்தன் பொருளோடு விரும்பி வருமென
ஏந்திழைப் பாங்கிஇனி(து)இயம் பியது.

19. இளையர் எதிர்கோடல்
யாழின் மொழிமங்கை பங்கன்சிற் றம்பலத் தான்அமைத்த
ஊழின் வலியதொன்(று) என்னை ஒளிமே கலையுகளும்
வீழும் வரிவளை மெல்லியல் ஆவிசெல் லாதமுன்ன
சூழும் தொகுநிதி யோ(டு)அன்பர் தேர்வந்து தோன்றியதே. ... 351

செறிக ழலவன் திருநகர் புகுதர
ஏறிவேல் இளைஞர் எதிர்கொண்டது.

20. உள் மகிழ்ந்து உரைத்தல்
மயில் மன்னு சாயல்இம் மானைப் பிரிந்து பொருள்வளர்ப்பான்
வெயில் மன்னு வெஞ்சுரம் சென்றதெல்லாம் விடை யோன்புலியூர்க்
குயில் மன்னு சொல்லிமென் கொங்கைஎன் அங்கத் திடைகுளிப்பத்
துயில் மன்னு பூவணை மேலணை யாமுன் துவள் உற்றதே. ... 352

பெருநிதி யோடு திருமனை புகுந்தவன்
வளமனைக் கிழத்தியோ(டு) உள்மகிழ்ந்(து) உரைத்தது.
---------------

இருபத்தைந்தாம் அதிகாரம்
25. பரத்தையிற் பிரிவு

பேரின்பக் கிளவி
பரத்தையிற் பிரிதல் எண்ணா(று) ஒன்றும்
உரைத்த சிவானந்தம் உற்றது வாம்பின்
எப்பதம் எவ்வுயிர் எவ்வுல(கு) யாவும்
அப்படி யேகண்(டு) அறிவு பூரணம்
ஆகி நின்(று) அளவில் அனுபவம் பெற்று
நின்ற தன்மை நிலைமை உரைத்தது.

1. கண்டவர் கூறல்
உடுத்தணி வாளர வன்தில்லை யூரன் வரஓருங்கே
எடுத்தணி கையே றினவளை ஆர்ப்ப இளமயிலேர்
கடுத்தணி காமர் கரும்புரு வச்சிலை கண்மலர் அம்பு
அடுத்தணி வாள்இளை யோர்சுற்றும் பற்றினர் மாதிரமே. ... 352

உரத்தகு வேலோன் பரத்தையிற் பிரியத்
திண்தேர் வீதியில் கண்டோர் உரைத்தது.

2. பொறை உவந்து உரைத்தல்
கரும்புறு கொன்றையன் தொல்புலி யூர்சுருங் கும்மருங்குல்
பெரும்பொறை யாட்டியை யென்இன்று பேசுவ பேரொலிநீர்க்
கரும்புறை யுரன் கலந்தகன் றானென்று கண்மணியும்
அரும்பொறை யாகும்என் ஆலியும் தேய்வுற்(று) அழிகின்றதே. ... 353

கள்ளவிழ்க் கோதையைக் காதல் தோழி
உள்ளவிழ் பொறைகண்(டு) உவந்து ரைத்தது.

3. பொதுப்படக் கூறி வாடி யழுங்கல்
அப்புற்ற சென்னியன் தில்லை உறாரின் அவர்உறுநோய்
ஒப்புற்று எழில்நலம் ஊரன் கவரஉள் ளும்புறம்பும்
வெப்புற்று வெய்துயிர்ப் புற்றத்தம் மெல்லணை யேதுணையாச்
செப்புற்ற கொங்கையர் யாவர்கொல் ஆருயிர் தேய்பவரே. ... 354

பொற்றிகழ் அரவன் மற்றிகழ் தில்லைப்
பிரிந்த ஊரனோ(டு) இருந்துவா டியது.

4. கன விழந்து உரைத்தல்
தேவா சுரர்இறைஞ் சும்கழ லோன்தில்லை சேரலர்போல்
ஆவாகனவும் இழந்தேன் நனவென்(று) அமளியின்மேல்
பூவார் அகலம்வந்(து) ஊரன் தரப்புலம் பாய்நலம்பாய்
பாவாய் தழுவிற் றிலேன் விழித் தேன்அரும் பாவியனே. ... 355

சினவில் தடக்கைத் தீம்புனல் ஊரனைக்
கனவில் கண்ட காரிகை உரைத்தது.

5. விளக்கொடு வெறுத்தல்
செய்ம்முக நீல மலர்தில்லைச் சிற்றம் பலத்தரற்குக்
கைம்முகங் கூம்பக் கழல்பணி யாரிற் கலந்தவர்க்குப்
பொய்ம்முகங் காட்டிக் கரத்தல் பொருத்தம்அன்(று) என்றில்லையே
நெய்ம்முக மாந்தி இருள்முகங் கீழும் நெடுஞ்சுடரே. ... 356

பஞ்சணைத் துயின்ற பஞ்சின் மெல்லடி
அன்பனோ(டு) அழுங்கிச் செஞ்சுடர்க்(கு) உரைத்தது.

6. வாரம் பகர்ந்து வாயில் மறுத்துரைத்தல்
பூங்குவ ளைப்பொலி மாலையும் ஊரன்பொற் றோளிணையும்
ஆங்கு வளைத்துவைத் தாரேனும் கொள்கநள் ளார் அரணம்
தீங்கு வளைத்தவில் லோன்தில்லைச் சிற்றம் பலத்தயல்வாய்
ஓங்கு வளைக்கரத் தார்க்கடுத் தோம்மன் உறாவரையே. ... 357

வார்புன லூரன் ஏர்திகழ் தோள்வயின்
கார்புரை குழலி வாரம் பகர்ந்தது.

7. பள்ளியிடத்து ஊடல்
தவஞ்செய் திலாதவெந் தீவினை யேம்புன்மைத் தன்மைக்(கு)எள்ளா(து)
எவம்செய்து நின்(று)இனி இன்(று)உனை நோவ(து)என் அத்தன்முத்தன்
சிவன்செய்த சீரரு ளார்தில்லை யூரநின் சேயிழையார்
நவம்செய்த புல்லங்கள் மாட்டேம் தொடல்விடு நற்கலையே. ... 358

பீடிவர் கற்பின் தோடிவர் கோதை
ஆடவன் தன்னோ(டு) ஊடி உரைத்தது.

8. செவ்வணி விடுக்க இல்லோர் கூறல்
தணியுறப் பொங்கும்இக் கொங்கைகள் தாங்கித் தளர்மருங்குல்
பிணியுறப் பேதைசென்(று) இன்றெய்து மால்அர வும்பிறையும்
அணியுறக் கொண்டவன் தில்லைத்தொல் லாயநல் லார்கண்முன்னே
பணியுறத் தோன்றும் நுடங்கிடை யார்கள் பயின்மனைக்கே. ... 359

பாற்செலு மொழியார் மேற்செல விரும்பல்
பொல்லா தென்ன இல்லோர் புகன்றது.

9. அயல் அறிவுரைத்து அவள் அழுக்கம் எய்தல்
இரவணை யும்மதி யேர்நுத லார்நுதிக் கோலஞ் செய்து
குரவணை யுங்குழல் இங்(கு)இவ ளால்இக் குறியறிவித்(து)
அரவணை யும்சடை யோன்தில்லை யூரனை ஆங்கொருத்தி
தரஅணை யும்பரி சாயின வாறுநம் தன்மைகளே. ... 360

உலகியல் அறியச் செலவிடல் உற்ற
விழுத்தகை மாதர்க்கு அழுக்கஞ் சென்றது. 9

10. செவ்வணி கண்ட வாயிலவர் கூறல்
சிவந்தபொன் மேனி மணிதிருச் சிற்றம் பலமுடையான்
சிவந்தஅம் தாளணி ஊரற்(கு) உலகிய லாறுரைப்பான்
சிவந்தபைம் போதும் அம் செம்மலர்ப் பட்டும்கட் டார்முலைமேல்
சிவந்தஅச் சாந்தமும் தோன்றின வந்து திருமனைக்கே. ... 361

மணிக்குழை பூப்பியல் உணர்த்த வந்த
ஆயிழையைக் கண்ட வாயிலவர் உரைத்தது.

11. மனை புகல் கண்ட வாயிலவர் கூறல்
குராப்பயில் கூழை இவளின்மிக்(கு) அம்பலத் தான்குழையாம்
அராப்பயில் நுண்ணிடை யார்அடங் கார்எவ ரேயினிப்பண்(டு)
இராப்பகல் நின்றுணங்(கு) ஈர்ங்கடை யித்துணைப் போழ்திற்சென்று
கராப்பயில் பூம்புன லூரன் புகும்இக் கடிமனைக்கே. ... 362

கடனறிந்(து) ஊரன் கடிமனை புகுதர
வாய்ந்த வாயி லவர்ஆய்ந்(து) உரைத்தது.

12. முகமலர்ச்சி கூறல்
வந்தான் வயலணி ஊரன் எனச்சின வாள்மலர்க்கண்
செந்தா மரைச்செவ்வி சென்றசிற்றம்பல வன்அருளான்
முந்தா யினவியன்நோக்கெதிர் நோக்க முகமடுவின்
பைந்தாள் குவளைகள் பூத்திருள் சூழ்ந்து பயின்றனவே. ... 363

பூம்புன லூரன் புகமுகம் மலர்ந்த
தேம்புனை கோதை திறம்பிறர் உரைத்தது.

13. கால நிகழ்வு உரைத்தல்
வில்லிகைப் போதின் விரும்பா அரும்பா வியர்கள் அன்பில்
செல்லிகைப் போதின் எரியுடை யோன்தில்லை அம்பலம்சூழ்
மல்லிகைப் போதின்வெண் சங்கம்வண்(டு) ஊதவிண் தோய்பிறையோ(டு)
எல்லிகைப் போதியல் வேல்வயல் ஊரற்(கு) எதிர் கொண்டதே. ... 364

இகழ்வ(து) எவன்கொல் நிகழ்வதில் வாறெனச்
செழுமலர்க் கோதை உழையர் உரைத்தது.

14. எய்தல் எடுத்துரைத்தல்
புலவித் திரைபொரச் சீறடிப் பூங்கலம் சென்னி உய்ப்பக்
கலவிக்கடலுள் கலிங்கஞ் சென்(று) எய்திக் கதிர்கொள்முத்தம்
நிலவி நிறைமது ஆர்ந்(து)அம் பலத்துநின்றோன் அருள்போன்(று)
உலவிய லாத்தனம் சென்றெய்தல் ஆயின ஊரனுக்கே. ... 365

சீரியல் உலகில் திகழ்கரக் கூடி
வார்புனல் ஊரன் மகிழ்வுற்றது.

15. கலவி கருதிப் புலத்தல்
செவ்வாய் துடிப்பக்கருங்கண் பிறழச்சிற் றம்பலத்(து)எம்
மொய்வார் சடையோன் அருளின் முயங்கி மயங்குகின்றாள்
வெவ்வாய் உயிர்ப்பொடு விம்மிக் கலுழ்ந்து புலந்துநைந்தாள்
இவ்வா(று) அருள்பிறர்க்(கு) ஆகு மென நினைந்து இன்னகையே. ... 366

மன்னிய உலகில் துன்னிய அன்பொடு
கலவி கருதிப் புலவி எய்தியது.

16. குறிப்பறிந்து புலந்தமை கூறல்
மலரைப் பொறாஅடி மானும் தமியன்மன் னன்ஒருவன்
பலரைப் பொறா(து)என்(று) இழிந்துநின் றாள்பள்ளி காமன்எய்த
அலரைப் பொறா(து)அன்(று) அழல்விழித் தோன்அம்பலம் வணங்காக்
கலரைப் பொறாச்சிறி யாள்என்னை கொல்லோ கருதியதே. ... 367

குறப்பினிற் குறிப்பு நெறிப்பட நோக்கி
மலர்நெடுங் கண்ணி புலவி யுற்றது.

17. வாயிலவர் வாழ்த்தல்
வில்லைப் பொலிநுதல் வேற்பொலி கண்ணி மெலிவறிந்து
வல்லைப் பொலிவொடு வந்தமை யான்நின்று வான்வழுத்தும்
தில்லைப் பொலிசிவன் சிற்றம்பலம்சிந்தை செய்பவரின்
மல்லைப் பொலிவய லூரன்மெய்யேதக்க வாய்மையனே. ... 368

தலை மகனது தகவுடைமை
நிலைதரு வாயில் நின்றோர் உரைத்தது.

18. புனல் வரவுரைத்தல்
சூன்முதிர் துள்ளு நடைப்பெடைக்(கு) இல்துணைச் சேவல் செய்வான்
தேன்முதிர் வேழத்தின் மென்பூக்குதர் செம்ம லூரன் திண்தோள்
மான்முதிர் நோக்கின்நல் லார்மகிழத் தில்லை யான் அருளே
போன்முதிர் பொய்கையில் பாய்ந்தது வாய்ந்த புதுப்புனலே. ... 369

புனலா டுகஎனப் புனைந்து கொண்டு
மனைபுகுந் தவனை வையம் உரைத்தது.

19. தேர் வரவு கண்டு மகிழ்ந்து கூறல்
சேயே எனமன்னு தீம்புன லூரன்திண் தோள்இணைகள்
தோயீர் புணர்தவம் தொன்மைசெய் தீர்சுடர் கின்றகோலம்
தீயே எனமன்னு சிற்றம்பலவர்தில்லைந்நகர் வாய்
வீயே எனஅடி யீர்நெடுந் தேர்வந்து மேவினதே. ... 370

பயில்மணித் தேர்செலப் பரத்தையர் சேரிக்
கயல் மணிக் கண்ணியர் கட்டுரைத்தது.

20. புனல் விளையாட்டில் தம்முள் உரைத்தல்
அரமங் கையரென வந்து விழாப்புகும் அவ்வவர்வான்
அரமங் கையரென வந்தணு கும்அவள் அன்(று)உகிரால்
சிரம்அங்(கு) அயனைச் செற்றோன் தில்லைச் சிற்றம் பலம்வழுத்தாப்
புரமங் கையரின்நை யாதுஐய காத்துநம் பொற்பரையே. ... 371

தீம்புனல் வாயில் சேயிழை வருமெனச்
காம்பன தோளியர் கலந்து கட்டுரைத்தது.

21. தன்னை வியந்துரைத்தல்
கனலூர் கணைதுணை யூர்கெடச் செற்றசிற் றம்பலத்தெம்
அனலூர் சடையோன் அருள்பெற் றவரின் அமரப்புல்லும்
மினலூர் நகையவர் தம்பால் அருள்விலக் காவிடின்யான்
புனலூ ரனைப் பிரி யும்புன லூர்கணப் பூங்கொடியே. ... 372

அரத்தத் துவர்வாய்ப் பரத்தைத் தலைவி
முனிவு தோன்ற நனிபு கன்றது.

22. நகைத்துரைத்தல்
இறுமாப்(பு) ஒழியும்அன் றேதங்கை தோன்றின்என் எங்கையங்கைச்
சிறுமான் தரித்தசிற் றம்பலத் தான்தில்லை யூரன்திண்தோள்
பெறு மாத் தொடும்தன்ன பேரணுக் குப்பெற்ற பெற்றியனோ(டு)
இறுமாப்(பு) ஒழிய இறுமாப்(பு) ஒழிந்த இணைமுலையே. ... 373

வேந்தன் பிரிய ஏந்திழை மடந்தை
பரத்தையை நோக்கி விரித்து ரைத்தது.

23. நாணுதல் கண்டு மிகுத்துரைத்தல்
வேயாது செப்பின் அடைத்துத் தமிவைகும் வீயன்அன்ன
தீயாடி சிற்றம் பலமனை யாள்தில்லை யூரனுக்கின்(று)
ஏயாப் பழியென நாணியென் கண்ணிங்ங னேமறைத்தாள்
யாயாம் இயல்பிவள் கற்புநற் பால இயல்புகளே. ... 374

மன்னவன் பிரிய நன்மனைக் கிழத்தியை
நாணுதல் கண்ட வாணுதல் உரைத்தது.

24. பாணன் வரவுரைத்தல்
விறலியும் பாணனும் வேந்தற்குத் தில்லை இறைஅமைத்த
திறலியல் யாழ்கொண்டு வந்துநின் றார்சென் றிராத்திசைபோம்
பறலியல் வாவல் பகலுறை மாமரம் போலும்மன்னோ
அறலியல் கூழைநல் லாய் தமியோமை யறிந்திலரே. ... 375

இகல்வே லவன் அகல்(வு) அறியாப் பாணனைப்
பூங்குழல் மாதர்க்குப் பாங்கி உரைத்தது.

25. தோழி இயற்பழித்தல்
திக்கின் இலங்குதண் தோள்இறை தில்லைச்சிற் றம்பலத்துக்
கொக்கின் இறக(து) அணிந்துநின் றாடிதென் கூடலன்ன
அக்கின் நகையிவள் நைய அயல்வயின் நல்குதலால்
தக்கின் றிருந்ததிலன் நின்றசெவ்வேல் எம் தனிவள்ளலே. ... 376

தலைமகனைத் தகவிலன்எனச்
சிலைநுதற் பாங்கி தீங்கு செப்பியது.

26. உழையர் இயற்பழித்தல்
அன்புடை நெஞ்சத்து இவள்பே துற அம் பலத்தடியார்
என்பிடை வந்(து)அமிழ்(து) ஊறநின்(று) ஆடி இருஞ்சுழியல்
தன்பெடை நையத் தகவழிந்(து) அன்னம் சலஞ்சலத்தின்
வன்பெடை மேல்துயி லும்வய லூரன் வரம்பிலனே. ... 377

அரத்தவேல் அண்ணல் பரத்தையிற் பிரியக்
குழைமுகத் தவளுக்(கு) உழையர் உரைத்தது.
பாடபேதம்
அரத்தவேல் அண்ணல் பரத்தையிற் பிரியக்
திண்தேர் வீதியில் கண்டோர் உரைத்தது.

27. இயற்பட மொழிதல்
அஞ்சார் புரஞ்செற்ற சிற்றம் பலவர்அந் தண்கயிலை
மஞ்சார் புனத்தன்று மாந்தழை யேந்திவந் தார்அவரென்
நெஞ்சார் விலக்கினும் நீங்கார் நனவு கனவும்உண்டேல்
பஞ்சார் அமளிப் பிரிதலுண் டோஎம் பயோதரமே. ... 378

வரிசிலை யுரன் பரிசு பழித்த
உழையர் கேட்ப எழில்நகை உரைத்தது.

28. நினைந்து வியந்துரைத்தல்
தெள்ளம் புனற்கங்கை தங்கும் சடையன்சிற் றம்பலத்தான்
கள்ளம் புகுநெஞ்சர் காணா இறையுறை காழியன்னாள்
உள்ளம் புகும்ஒரு காற்பிரி யாதுள்ளி உள்ளுதொறும்
பள்ளம் புகும்புனல் போன்(று)அகத் தேவரும் பான்மையளே. ... 379

மெல்லியற் பரத்தையை விரும்பி மேவினோன்
அல்லியற் கோதையை அகனமர்ந்(து) உரைத்தது.

29. வாயில் பெறாது மகன் திறம் நினைதல்
தேன்வண்(டு) உறைதரு கொன்றையன் சிற்றம்பலம் வழுத்தும்
வான்வள் துறைதரு வாய்மையன் மன்னு குதலை யின்வா
யான்வள் துறைதரு மால்அமு தன்னவன் வந்தணையான்
நான்வண்(டு) உறைதரு கொங்கைஎவ் வாறுகொல் நண்ணுவதே. ... 380

பொற்றொடி மாதர் நற்கடை குறுகி
நீடிய வாயிலின் வாடினள் மொழிந்தது.

30. வாயிற்கண் நின்று தோழிக்கு உரைத்தல்
கயல்வந்த கண்ணியர் கண்ணிணை யால்மிகு காதரத்தால்
மயல்வந்த வாட்டம் அகற்றா விரதம்என் மாமதியின்
அயல்வந்த ஆடர(வு) ஆடவைத் தோன்அம் பலம்நிலவு
புயல்வந்த மாமதில் தில்லைநன் னாட்டுப் பொலிபவரே. ... 381

பெருந்தகை வாயில் பெறாது நின்று
அருந்தகைப் பாங்கிக்(கு) அறிய உரைத்தது.

31. வாயில் வேண்டத் தோழி கூறல்
கூற்றா யினசின ஆளியெண் ணீர்கண்கள் கோள்இழித்தால்
போல்தான் செறியிருள் பொக்கம்எண் ணீர்கன்(று) அகன்றபுனிற்(று)
ஈற்றா வெனநீர் வருவது பண்(டு)இன்(று)எம் ஈசர்தில்லைத்
தேற்றார் கொடிநெடுவீதியில் போதிர்அத் தேர்மிசையே. ... 382

வைவேல் அண்ணல் வாயில் வேண்டப்
பையரவு அல்குல் பாங்கி பகர்ந்தது.

32. தோழி வாயில் வேண்டல்
வியந்தலை நீர்வையம் மெய்யே இறைஞ்சவிண் தோய்குடைக்கீழ்
வயந்தலை கூர்ந்தொன்றும் வாய்திற வார்வந்த வாளரக்கன்
புயந்தலை தீரப் புலியூர் அரன்இருக் கும்பொருப்பிற்
கயந்தலை யானை கடிந்த விருந்தினர் கார்மயிலே. ... 383

வாயில் பெறாது மன்னவன் நிற்ப
ஆயிழை அவட்குத் தோழி சொல்லியது.

33. மனையவர் மகிழ்தல்
தேவியங் கண்திகழ் மேனியன் சிற்றம் பலத்தெழுதும்
ஓவியம் கண்டன்ன ஒண்ணுத லாள்தனக்(கு) ஒகையுய்ப்பான்
மேவியம் கண்டனை யோவந் தனன்என வெய்துயிர்த்துக்
காவியம் கண்கழு நீர்ச்செவ்வி வெளவுதல் கற்றனவே. ... 384

கன்னி மானோக்கி கனன்று நோக்க
மன்னிய மனையவர் மகிழ்ந்து ரைத்தது.

34. வாயின் மறுத்துரைத்தல்
உடைமணி கட்டிச் சிறுதேர் உருட்டி உலாத்தரும்இந்
நடைமணி யைத்தந்த பின்னர்முன் நான்முகன் மால்அறியா
விடைமணி கண்டர்வண் தில்லைமென் தோகையன் னார்கண்முன்நம்
கடைமணி வாள்நகை யாய்இன்று கண்டனர் காதலரே. ... 385

மடவரல் தோழி வாயில் வேண்ட
அடல்வே லவனார் அருளு ரைத்தது.

35. பாணனொடு வெகுளுதல்
மைகொண்ட கண்டர் வயல்கொண்ட தில்லைமல்(கு) ஊரர்நின்வாய்
மெய்கொண்ட அன்பினர் என்பதென் விள்ளா அருள்பெரியர்
வைகொண்ட ஊசிகொல் சேரியில் விற்றெம்இல் வண்ணவண்ணப்
பொய்கொண்டு நிற்கலுற் றோபுலை ஆத்தின்னி போந்ததுவே. ... 386

மன்னியாழ்ப் பாணன் வாயில் வேண்ட
மின்னிடை மடந்தை வெகுண்டு ரைத்தது.

36. பாணன் புலந்துரைத்தல்
கொல்லாண் டிலங்கு மழுப்படை யோன்குளிர் தில்லையன்னாய்
வில்லாண் டிலங்கு புருவம் நெரியச்செல் வாய்துடிப்பக்
கல்லாண்(டு) எடேல்கருங் கண்சிவப் பாற்று கறுப்பதன்று
பல்லாண்(டு) அடியேன் அடிவலம் கொள்வன் பணிமொழியே. ... 387

கருமமலர்க் கண்ணி கனன்றுகட் டுரைப்பப்
புரியாழ்ப் பாணன் புறப்பட்டது.

37. விருந்தொடு செல்லத் துணிந்தமை கூறல்
மத்தக் கரியுரி யோன்தில்லை யூரன் வரவெனலும்
தத்தைக் கிளவி முகத்தா மரைத்தழல் வேல்மிளிர்ந்து
முத்தம் பயக்கும் கழுநீர் விருந்தொடென் னாதமுன்னம்
இந்தக் கருங்குவ ளைச் செவ்வி யோடிக் கெழுமினவே. ... 388

பல்வளை பரிசுகண்டு இல்லோர் இயம்பியது.

38. ஊடல் தணிவித்தல்
கவலங்கொள் பேய்த்தொகை பாய்தரக் காட்டிடை ஆட்டுவந்த
தவலங்கிலாச்சிவன் தில்லையன் னாய்தழு விம்முழுவிச்
கவலங் கிருந்தநம் தோன்றல் துணையெனத் தோன்றுதலால்
அவலங் களைந்து பணிசெயற் பாலை அரசனுக்கே. ... 389

தோன்றலைத் துணையொடு தோழி கண்டு
வான்தகை மடந்தையை வருத்தம் தணித்தது.

39. அணைந்த வழி யூடல்
சேல்தான் திகழ்வயல் சிற்றம் பலவர்தில் லைநகர்வாய்
வேல்தான் திகழ்கண் இளையார் வெகுள்வர்மெய்ப் பாலன்செய்த
பால்தான் திகழும் பரிசினம் மேவும் படி(று)உவவேம்
கால்தான் தொடல்தொட ரேல்விடு தீண்டல் எம் கைத்தலமே. ... 390

தெளிபுனல் ஊரன் சென்றணைந் தவழி
ஒளிமதி நுதலி ஊடி உரைத்தது. 39

40. புனலாட்டுவித்தமை கூறிப் புலத்தல்
செந்தார் நறுங்கொன்றைச் சிற்றம் பலவர்தில் லைநகரோர்
பந்தார் விரலியைப் பாய்புன லாட்டிமன் பாவி எற்கு
வந்தார் பரிசும் அன் றாய்நிற்கும் ஆறென் வளமனையில்
கொந்தார் தடந்தோள் விடங்கால் அயிற்படைக் கொற்றவரே. ... 391

ஆங்கதனுக்(கு) அமுக்கம் எய்தி
வீங்கு மென்முலை விட்டுரைத்தது.

41. கலவி கருதிப் புலத்தல்
மின்துன் னியசெஞ் சடைவெண் மதியன் விதியுடையோர்
சென்றுன் னிய கழற் சிற்றம் பலவன்தென்னம் பொதியில்
நன்றும் சிறியவர் இல்எம(து) இல்லம்நல் லூரமன்னோ
இன்றுன் திருவருள் இத்துணை சாலுமன் எங்களுக்கே. ... 392

கலைவளர் அல்குல் தலைமகன் தன்னொடு
கலவி கருதிப் புலவி புகன்றது.

42. மிகுத்துரைத்து ஊடல்
செழுமிய மாளிகைச் சிற்றம் பலவர்சென்(று) அன்பர்சிந்தைக்
கழுமிய கூத்தர் கடிபொழில் ஏழினும் வாழியரோ
விழுமிய நாட்டு விழுமிய நல்லூர் விழுக்குடியீர்
வழுமிய அல்லகொல் லோஇன்ன வாறு விரும்புவதே. ... 393

நாடும் ஊரும் இல்லும் சுட்டி
ஆடற் பூங்கொடி ஊடி உரைத்தது.

43. ஊடல் நீட வாடி உரைத்தல்
திருந்தேன் உயநின்ற சிற்றம் பலவர்தென் னம்பொதியில்
இருந்தேன் உயவந்(து) இணைமலர்க் கண்ணின்இன் நோக்கருளிப்
பெருந்தேன் எனநெஞ் சுகப்பிடித்(து) ஆண்டநம் பெண்ணமிழ்தம்
வருந்தேல் அதுவன்(று) இதுவோ வருவதோர் வஞ்சனையே. ... 394

வாடா ஊடல் நீடா வாடியது.

44. துனியொழிந்து உரைத்தல்
இயல்மன்னும் அன்புதந் தார்க்(கு)என் நிலைஇமை யோர்இறைஞ்சும்
செயல்மன்னும் சீர்க்கழல் சிற்றம் பலவர்தென் னம்பொதியில்
புயல்மன்னு குன்றில் பொருவேல் துணையாப்பொம் மென்இருள்வாய்
அயல்மன்னும் யானை துரந்(து)அரி தேரும் அதரகத்தே. ... 395

தகுதியின் ஊரன் மிகுபதம் நோக்கிப்
பனிமலர்க்கோதை துனியொ ழிந்தது.

45. புதல்வன்மேல் வைத்துப் புலவிதீர்தல்
கதிர்த்த நகைமன்னும் சிற்றவ்வை மார்களைக் கண்பிழைப்பித்(து)
எதிர்த்(து)எங்கு நின்(று)எப் பரிசளித் தான்இமை யோர்இறைஞ்சும்
மதுத்தங் கியகொன்றை வார்சடை ஈசர்வண் தில்லைநல்லார்
பொதுத்தம்ப லங்கொணர்ந் தோபுதல்வர் எம்மைப் பூசிப்பதே. ... 396

புதல்வனது திறம்புகன்று
மதரரிக் கண்ணி வாட்டந் தவிர்ந்தது.

46. கலவி இடத்து ஊடல்
சிலைமலி வாணுதல் எங்கைய(து) ஆகம் எனச் செழும்பூண்
மலைமலி மார்பின் உதைப்பத்தந் தான்தலை மன்னர்தில்லை
உலைமலி வேற்படை ஊரனின் கள்வர்இல் என்ன உன்னிக்
கலைமலி காரிகை கண்முத்த மாலை கலுழ்ந்தனவே. ... 397

சீறடிக்(கு) உடைந்த நாறிணர் தாரவன்
தன்மை கண்டு பின்னும் தளர்ந்தது.

47. முன்னிகழ்வு உரைத்து ஊடல் தீர்தல்
ஆறூர் சடைமுடி அம்பலத்(து) அண்டர்அண்டம்பெறினும்
மாறூர் மழலிடை யாய்கண் டிலம்வண் கதிர்வெதுப்பு
நீறூர் கொடிநெறி சென்றிச் செறிமென் முலைநெருங்கச்
சீறூர் மரையத ளில்தங்கு கங்குற் சிறுதுயிலே. ... 398

முன்னி கழ்ந்தது நன்னுதற்(கு) உரைத்து
மன்னு புனலூரன் மகிழ்வுற்றது.

48. பரத்தையைக் கண்டமை கூறிப் புலத்தல்
ஐயுர வாய்நம் அகன்கடைக் கண்டுவண் தேர் உருட்டும்
மையுறு வாட்கண் மழவைத் தழுவமற்(று) உன்மகனே
மெய்யுற வாம்இதுன் இல்லே வருகென வெள்கிச்சென்றாள்
கையுறு மான்மறி யோன்புலி யூரன்ன காரிகையே. ... 399

பரத்தையைக் கண்ட பவளவாய் மாதர்
அரத்த நெடுவேல் அண்ணற்(கு) உரைத்தது. 48.

49. ஊதியம் எடுத்துரைத்து ஊடல் தீர்த்தல்
காரணி கற்பகம் கற்றவர் நற்றுணை பாணர்ஒக்கல்
சீரணி சிந்தா மணியணி தில்லைச் சிவனடிக்குத்
தாரணி கொன்றையன் தக்கோர்தம் சங்க நிதிவிதிசேர்
ஊருணி உற்றவர்க்(கு) ஊரன்மற்(று) யாவர்க்கும் ஊதியமே. ... 400

இரும்பரிசில் ஏற்றவர்க்(கு) அருளி
விரும்பினர் மகிழ மேவுதல் உரைத்தது.

திருச்சிற்றம்பலக்கோவையார் முற்றுப் பெற்றது.
திருச்சிற்றம்பலம்Back to thirukovaiyar Page
Back to 8th thirumuRai Page
Back to thirumuRai Home Page
Back to Shaiva Sidhdhantha Home Page