Kovaiyar of Manikkavachakar (Thiruchitrampalakkovai)
(in Tamil Script, unicode format)

மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
(திருச்சிற்றம்பலக் கோவையார்)


பதினெட்டாம் அதிகாரம்
18. வரை பொருட் பிரிதல்

பேரின்பக் கிளவி
வரைபொருட் பிரிதல் துறைமுப் பத்து
மூன்றுங் கருணை தோன்ற அருளே
உணர்த்தலும் உணர்தலும் திரோதையும் பரையும்
தெரிசன மாகித் திவ்விய இன்பம்
கூடும் குறியும் குலவி யுணர்தல்.

1. முலை விலை கூறல்
குறைவிற்கும் கல்விக்கும் செல்விற்கும் நின்குலத் திற்கும் வந்தோர்
நிறைவிற்கும் மேதகு நீதிக்கும் ஏற்பின்அல் லால்நினையின்
இறைவிற் குலாவரை யேந்திவண் தில்லையன் ஏழ்பொழிலும்
உறைவிற் குலாநுத லாள்விலை யோமெய்ம்மை யோதுநர்க்கே. .. 266

கொலைவேற் கண்ணிக்கு விலையிலை என்றது.

2. வருமது கூறி வரைவுடம்படுத்தல்
வடுத்தன நீள்வகிர்க் கண்ணிவெண் நித்தில வாள்நகைக்குத்
தொடுத்தன நீவிடுத் தெய்தத் துணியென்னைத் தன்தொழும்பிற்
படுத்தநன் நீள்கழல் ஈசர்சிற் றம்பலம் தாம்பணியார்க்(கு)
அடுத்தன தாம்வரின் பொல்லா(து) இரவின்நின் ஆரருளே. .. 267

தொடுத்தன விடுத்துத் தோகை தோளெய்(து)
இடுக்கண் பெரிது இரவரின் என்றது.

3. வரைபொருட் பிரிவை உரையெனக் கூறல்
குன்றங் கிடையும் கடந்துமர் கூறும் நிதிகொணர்ந்து
மின்தங் கிடைநும் மையும் வந்து மேவுவன் அம்பலம்சேர்
மன்தங்(கு) இடைமரு(து) ஏகம்பம் வாஞ்சியம் அன்னபொன்னச்
சென்(று)அங்(கு) இடைகொண்டு வாடா வகைசெப்பு தேமொழியே. .. 268

ஆங்க வள்வயின் நீங்கல் உற்றவன்
இன்னுயிர்த் தோழிக்கு முன்னி மொழிந்தது.

4. நீயே கூறு என்றல்
கேழ்ஏ வரையும்இல் லோன்புலி யூர்பயில் கிள்ளையன்ன
யாழேர் மொழியாள் இரவரி னும்பகற் சேறியென்று
வாழேன் எனஇருக் கும்வரிக் கண்ணியை நீவருட்டித்
தாழேன் எனஇடைக் கண்சொல்லி ஏகு தனிவள்ளலே. .. 269

காய்கதிர் வேலோய் கனங்குழை அவட்கு
நீயே உரை நின்செலவு என்றது.

5. சொல்லாது ஏகல்
வருட்டின் திகைக்கும் வசிக்கின் துளங்கும் மனமகிழ்ந்து
தெருட்டின் தெளியலள் செப்பும் வகையில்லை சீரருக்கன்
குருட்டின் புகச்செற்ற கோன்புலி யூர்குரு கார்மனம் போன்(று)
இருட்டிற் புரிகுழ லாட்(கு)எங்ங னேசொல்லி ஏகுவனே. .. 270

நிரைவளை வாட உரையா(து) அகன்றது.

6. பிரிந்தமை கூறல்
நல்லாய் நமக்குற்ற(து) என்னென்(று) உரைக்கேன் நமர்தொடுத்த
எல்லா நிதியும் உடன்விடுப் பான்இமை யோர் இறைஞ்சும்
மல்லார் கழல்அழல் வண்ணர்வண் தில்லை தொழார்கள் அல்லால்
சொல்லா அழற்கடம் இன்றுசென் றார் சிறந்தவரே. .. 271

தேங்கமழ் குழலிக்குப் பாங்கி பகர்ந்தது.

7. நெஞ்சொடு கூறல்
அருந்தும் விடம்அணி யாம்மணிகண்டன்மற்(று) அண்டர்க்கெல்லாம்
மருந்தும் அமிர்தமும் ஆகும்முன் னோன்தில்லை வாழ்த்தும்வள்ளல்
திருந்தும் கடன்நெறி செல்லும்இவ் வாறு சிதைக்குமென்றால்
வருந்தும் மடநெஞ்ச மேயென்ன யாம்இனி வாழ்வகையே. .. 272

கல்வரை நாடன் சொல்லா(து) அகல
மின்னொளி மருங்குல் தன்னொளி தளர்ந்து.

8. நெஞ்சொடு வருந்தல்
ஏர்ப்பின்னை தோள்முன் மணந்தவன் ஏத்த எழில்திகழும்
சீர்ப்பொன்னை வென்ற செறிகழ லோன்தில்லைச் சூழ்பொழில்வாய்க்
கார்ப்புன்னை பொன்னவிழ் முத்த மணலிற் கலந்தகன்றார்
தேர்ப் பின்னைச் சென்றஎன்
நெஞ்(சு)என் கொலாம்இன்று செய்கின்றதே. .. 273

வெற்பன் நீங்கப் பொற்பு வாடியது.

9. வருத்தம் கண்டு உரைத்தல்
கானமர் குன்றர் செவியுற வாங்கு கணைதுணையா
மானமர் நோக்கியர் நோக்கென மான்நல் தொடைமடக்கும்
வானவர் வெற்பர்வண் தில்லையின் மன்னை வணங்கலர் போல்
தேனமர் சொல்லிசெல் லார்செல்லல் செல்லல் திருநுதலே. .. 274

அழலுறு கோதையின் விழுமுறு பேதையை
நீங்கலரெனப் பாங்கி பகர்ந்தது. 9

10. வழியொழுகி வற்புறுத்தல்
மதுமலர்ச் சோலையும் வாய்மையும் அன்பும் மருவி வெங்கான்
கதுமெனப் போக்கும் நிதியின் அருக்குமுன் னிக்கலுழ்ந்தால்
நொதுமலர் நோக்கமொர் மூன்றுடை யோன்தில்லை நோக்கலர்போல்
இதுமலர்ப் பாவைக்(கு)என் னோவந்த வாறென்பர் ஏந்திழையே. .. 275

சூழிருங் கூந்தலைத் தோழி தெருட்டியது.

11. வன்புறை எதிர் அழிந்து இரங்கல்
வந்(து)ஆய் பவரைஇல்லாமயில் முட்டை இளையமந்தி
பந்தா(டு) இரும்பொழில் பல்வரை நாடன்பண் போஇனிதே
கொந்தார் நறுங்கொன்றைக் கூத்தன்தென் தில்லை தொழார்குழுப்போல்
சிந்தா குலமுற்றப் பற்றின்றி நையும் திருவினர்க்கே. .. 276

வன்கறை வேலோன் வரைவு நீட
வன்புறை அழிந்தவள் மனம்அழுங் கியது.

12. வாய்மை கூறி வருத்தம் தணித்தல்
மொய்யென் பதேஇழை கொண்டவன் என்னைத்தன் மொய்கழற்(கு)ஆட்
செய்என் பதேசெய் தவன்தில்லைச் சூழ்கடற் சேர்ப்பர்சொல்லும்
பொய்என்ப தேகருத்தாயின் புரிகுழற் பொற்றொடியாய்
மெய்என்ப(து) ஏதுமற்(று) இல்லைகொலாம்இவ் வியவிடத்தே. .. 277

வேற்றடங் கண்ணியை ஆற்று வித்தது.

13. தேறாது புலம்பல்
மன்செய்த முன்னாள் மொழிவழி யேஅன்ன வாய்மைகண்டும்
என்செய்த நெஞ்சும் நிறையும்நில் லாஎன(து) இன்னுயிரும்
பொன்செய்த மேனியன் தில்லை யுறாரின் பொறைஅரிதாம்
முன்செய்த தீங்குகொல் காலத்து நீர்மைகொல் மொய்குழலே. .. 278

தீதறு குழலி தேற்றத் தேறாது
போதுறு குழலி புலம்பியது.

14. காலம் மறைத்துரைத்தல்
கருந்தினை ஓம்பக் கடவுள் பராவி நமர்கலிப்பச்
சொரிந்தன கொண்மூச் சுரந்ததன் பேரரு ளால்தொழும்பிற்
பரிந்தெனை யாண்டசிற் றம்பலத் தான்பரங் குன்றில்துன்றி
விரிந்தன காந்தள் வெருவரல் காரென வெள்வளையே. .. 279

காந்தள் கருவுறக் கடவுள் மழைக்கென்(று)
ஏந்திழைப் பாங்கி இனிதியம் பியது.

15. தூது வர உரைத்தல்
வென்றவர் முப்புரம் சிற்றம் பலத்திற்நின் றாடும்வெள்ளிக்
குன்றவர் குன்றா அருள்தரக் கூடினர் நம்மகன்று
சென்றவர் தூதுகொல் லோஇருந் தேமையும் செல்லல்செப்பா
நின்றவர் தூதுகொல் லோவந்து தோன்றும் நிரைவளையே. .. 280

ஆங்கொரு தூதுவரப் பாங்கிகண் டுரைத்தது.

16. தூது கண்டழுங்கல்
வருவன செல்வன தூதுகள் ஏதில வான்புலியூர்
ஒருவனது அன்பரின் இன்பக் கலவிகள் உள்ளுருகத்
தருவன செய்தன(து) ஆவிகொண்(டு) ஏகிஎன் நெஞ்சில்தம்மை
இருவின காதலர் ஏதுசெய் வான்இன்(று) இருக்கின்றதே. .. 281

அயலுற்ற தூதுவரக் கயலுற்றகண்ணி மயலுற்றது.

17. மெலிவு கண்டு செவிலி கூறல்
வேயின மென்தோள் மெலிந்தோளி வாடி விழிபிறிதாய்ப்
பாயின மேகலை பண்டையள் அல்லள் பவளச்செவ்வி
ஆயின ஈசன் அமரர்க்(கு) அமரன்சிற் றம்பலத்தான்
சேயின(து) ஆட்சியில் பட்டன ளாம்இத் திருந்திழையே. .. 282

வண்டமர் புரிகுழல் ஒண்டொடி மேவிய
வாடா நின்ற கோடாய் கூறியது.

18. கட்டு வைப்பித்தல்
கணங்குற்ற கொங்கைகள் சூதுற் றிலசொல் தெளிவுற்றில
குணங்குற்றம் கொள்ளும் பருவமு றாள்குறு காஅசுரர்
நிணங்குற்ற வேல்சிவன் சிற்றம் பலநெஞ் சுறாதவர்போல்
அணங்குற்ற நோய்அறி வுற்றுரை யாடுமின் அன்னையரே. .. 283

மால்கொண்ட கட்டுக் கால்கொண்டது.

19. கலக்கமுற்று நிறுத்தல்
மாட்டியன் றேஎம் வயின்பெரு நாணினி மாக்குடிமா
சூட்டியன் றேநிற்ப(து) ஓடிய வா(று)இவள் உள்ளமெல்லாம்
காட்டியன் றேநின்ற தில்லைச்தொல் லோனைக்கல் லாதவர்போல்
வாட்டியன்(று) ஏர்குழ லார்மொழி யாதன வாய்திறந்தே. .. 284

தெய்வத்தில் தெரியுமென
எவ்வத்தின் மெலிவுற்றது.

20. கட்டுவித்திக் கூறல்
குயிலிதன் றேயென்ன லாம்சொல்லி கூறன்சிற் றம்பலத்தான்
இயலிதன் றேயென்ன லாகா இறைவிறற் சேய்கடவும்
மயிலிதன் றேகொடி வாரணம் காண்கவன் சூர்தடிந்த
அயிலிதன் றேயிதன் றேநெல்லில் தோன்றும் அவன்வடிவே. .. 285

கட்டு வித்தி விட்டு ரைத்தது.

21. வேலனை அழைத்தல்
வேலன் புகுந்து வெறியா டுகவெண் மறியறுக்க
காலன் புகுந்(து)அவி யக்கழல் வைத்தெழில் தில்லைநின்ற
மேலன் புகுந்தென்கண் நின்றான் இருந்தவெண் காடனைய
பாலன் புகுந்திப் பரிசினின் நிற்பித்த பண்பினுக்கே. .. 286

வெறியாடிய வேலனைக் கூஉய்
நெறியார் குழலி தாயர் நின்றது.

22. இன்னல் எய்தல்
அயர்ந்தும் வெறிமறி ஆவி செகுத்தும் விளர்ப்(பு)அயலார்
பெயர்ந்தும் ஒழியா விடின்என்னை பேசுவ பேர்ந்திருவர்
உயர்ந்தும் பணிந்தும் உணரான(து) அம்பலம் உன்னலரின்
துயர்ந்தும் பிறிதின் ஒழியினென் ஆதும் துறைவனுக்கே. .. 287

ஆடிய வெறியிற் கூடுவ(து) அறியாது
நன்னறுங் கோதை இன்னல் எய்தியது.

23. வெறி விலக்குவிக்க நினைதல்
சென்றார் திருத்திய செல்லல்நின் றார்கள் சிதைப்பரென்றால்
நன்றா அழகிதன் றேஇறை தில்லை தொழாரின்நைந்தும்
ஒன்றாம் இவட்கும் மொழிதல்இல் லேன்மொழி யாதும்உய்யேன்
குன்றார் துறைவர்க்(கு) உறுவேன் உரைப்பன் இக் கூர்மறையே. .. 288

அயல்திரு வெறியின் மயல்தரு மென
விலக்கல் உற்ற குலக்கொடி நினைந்தது.

24. அறத்தொடு நிற்றலை உரைத்தல்
யாயும் தெறுக அயலவர் ஏசுக ஊர்நகுக
நீயும் முனிக நிகழ்ந்தது கூறுவல் என்னுடைய
வாயும் மனமும் பிரியா இறைதில்லை வாழ்த்துநர்போல்
தூயன் நினக்குக் கடுஞ்சூள் தருவன் சுடர்க்குழையே. .. 289

வெறித்தலை வெரீஇ வெருவரு தோழிக்(கு)
அறத்தொடு நின்ற ஆயிழை உரைத்தது.

25. அறத்தொடு நிற்றல்
வண்டலுற் றேம்எங்கண் வந்தொரு தோன்றல் வரிவளையீர்
உண்டலுற் றேமென்று நின்றதோர் போழ்(து)உடை யான்புலியூர்க்
கொண்டலுற்(று) ஏறும் கடல்வர எம்உயிர் கொண்டுதந்து
கண்டலுற்(று) ஏர்நின்ற சேரிச்சென் றான்ஓர் கழலவனே. .. 290

செய்த வெறியின் எய்துவது அறியாது
நிறத்தொடித் தோழிக்(கு) அறத்தொடு நின்றது.

26. ஐயந்தீரக் கூறல்
குடிக்கலர் கூறினும் கூறா வியன்தில்லைக் கூத்தன்தாள்
முடிக்(கு)அல ராக்கும்மொய் பூந்துறை வற்கு முரிபுருவ
வடிக்கலர் வேற்கண்ணி வந்தன சென்றுநம் யாய்அறியும்
படிக்கல ராம்இவை என்நாம் மறைக்கும் பரிசுகளே. .. 291

விலங்குதல் விரும்பு மேதரு தோழி
அலங்கற் குழலிக்(கு) அறிய உரைத்தது.

27. வெறி விலக்கல்
விதியுடை யார்உண்க வேரி விலக்கலம் அம்பலத்துப்
பதியுடை யான்பரங் குன்றினில் பாய்புனல் யாம் ஒழுகக்
கதியுடை யான்கதிர்த் தோள்நிற்க வேறு கருதுநின்னின்
மதியுண்டை யார்தெய்வ மேயில்லை கொல்இனி வையகத்தே. .. 292

அறத்தொடு நின்ற திறத்தினிற் பாங்கி
வெறி விலக்கப் பிறிதுரைத்தது.

28. செவிலிக்குத் தோழி அறத்தொடு நிற்றல்
மனக்களி யாய்இன் றியான்மகிழ் தூங்கத்தன் வார்கழல்கள்
எனக்களி யாநிற்கும் அம்பலத் தோன்இருந் தண்கயிலைச்
சினக்களி யானை கடிந்தார் ஒருவர்செவ் வாய்ப்பசிய
புனக்கிளி யாங்கடி யும்வரைச் சாரற் பொருப்பிடத்தே. .. 293

சிறப்புடைச் செவிலிக்(கு) அறத்தொடு நின்றது.

29. நற்றாய்க்குச் செவிலி அறத்தொடு நிற்றல்
இளையாள் இவளைஎன் சொல்லிப் பரவுதும் ஈர்எயிறு
முளையா அளவின் முதுக்குறைந் தாள்முடி சாய்த்திமையோர்
வளையா வழுத்தா வருதிருச் சிற்றம் பலத்துமன்னன்
திளையா வரும்அரு விக்கயி லைப்பயில் செல்வியையே. ... 294

கற்பினின் வழாமை நிற்பித்து எடுத்தோள்
குலக்கொடி தாயர்க்(கு) அறத்தொடு நின்றது.

30. தேர் வரவு கூறல்
கள்ளினம் ஆர்த்துண்ணும் வண்கொன்றை யோன்தில்லைக் கார்க்கடல்வாய்ப்
புள்ளினம் ஆர்ப்பப் பொருதிரை யார்ப்பப் புலவர்கள்தம்
வள்ளினம் ஆர்ப்ப மதுகரம் ஆர்ப்ப வலம்புரியின்
வெள்ளினம் ஆர்ப்ப வரும்பெரும் தேரின்று மெல்லியலே. ... 295

மணிநெடுந் தேரோன் அணிதிணின் வருமென
யாழியல் மொழிக்குத் தோழி சொல்லியது.

31. மணமுரசு கேட்டு மகிழ்ந்துரைத்தல்
பூரண பொற்குடம் வைக்க மணிமுத்தம் பொன்பொதிந்த
தோரணம் நீடுக தூரியம் ஆர்க்கதொன் மால்அயற்கும்
காரணன் ஏரணி கண்ணுத லோன்கடல் திலலையன்ன
வாரண வும்முலை மன்றலென்(று) ஏங்கும் மணமுரசே. ... 296

நிலங்காவலர் நீண்மணத்தின்
நலங்கண்டவர் நயந்துரைத்தது.

32. ஐயுற்றுக் கலங்கல்
அடற்களி யாவர்க்கும் அன்பர்க்(கு) அளிப்பவன் துன்பஇன்பம்
படக்களி யாவண் டறைபொழில் தில்லைப் பரமன்வெற்பில்
கடக்களி யானை கடிந்தவர்க் கோஅன்றி நின்றவர்க்கோ
விடக்களி யாம்நம் விழுநகர் ஆர்க்கும் வியன்முரசே. ... 297

நல்லவர் முரசுமற்(று) அல்லவர் முரசெனத்
தெரிவ ரிதென அரிவை கலங்கியது.

33. நிதி வரவு கூறா நிற்றல்
என்கடைக் கண்ணினும் யான்பிற ஏத்தா வகையிரங்கித்
தன்கடைக் கண்வைத்த தண்தில்லைச் சங்கரன் தாழ்கயிலைக்
கொன்கடைக் கண்தரும் யானை கடிந்தார் கொணர்ந்திறுத்தார்
முன்கடைக் கண்ணிது காண்வந்து தோன்றும் முழுநிதியே. ... 298

மகிழ்தரு மனத்தொடு வண்புகழ்த் தோழி
திகழ் நிதி மடந்தைக்குத் தெரிய உரைத்தது.
-----------------------------

கற்பியல் ( 19 - 25 அதிகாரங்கள்)

பத்தொன்பதாம் அதிகாரம்
19. மணம் சிறப்புரைத்தல்

பேரின்பக் கிளவி
மணஞ்சிறப் புரைத்தல் வரும் ஓர் ஒன்பதும்
உயிர்சிவ மணம்பெற்(று) உண்மைஇன் பாகிய
பரைகடந் தின்பப் பண்பாய் நிற்றல்.

1. மணமுரசு கூறல்
பிரசம் திகழும் வரைபுரை யானையின் பீடழித்தார்
முரசம் திகழும் முருகியம் நீங்கும் எவர்க்குமுன்னாம்
அர(சு)அம் பலத்துநின்(று) ஆடும் பிரானருள் பெற்றவரின்
புரைசந்த மேகலை யாய்துயர் தீரப் புகுந்துநின்றே. ... 299

வரைவு தோன்ற மகிழ்வுறு தோழி
நிரைவ ளைக்கு நின்று ரைத்தது.

2. மகிழ்ந்துரைத்தல்
இருந்துதி என்வயின் கொண்டவன் யான்எப் பொழுதும்உன்னும்
மருந்து திசைமுகன் மாற்கரி யோன்தில்லை வாழ்த்தினர்போல்
இருந்து திவண்டன வால்எரி முன்வலம் செய்(து)இடப்பால்
அருந்துதி காணும் அளவும் சிலம்பன் அருந்தழையே. ... 300

மன்னிய கடியிற் பொன்னறுங் கோதையை
நன்னுதல் தோழி தன்னின் மகிழ்ந்தது.

3. வழிபாடு கூறல்
சீரியல் ஆவியும் யாக்கையும் என்ன சிறந்தமையால்
காரியல் வாட்கண்ணி எண்ணக லார்கம லங்கலந்த
வேரியம் சந்தும் வியல்தந் தெனக்கற்பின் நிற்பர்அன்னே
காரியல் கண்டவர்வண் தில்லை வணங்கும்எம் காவலரே. ... 301

மணமனை காண வந்தசெவி லிக்குத்
துணைமலர்க் குழலி தோழி சொல்லியது.

4. வாழ்க்கை நலங்கூறல்
தொண்டினம் மேவும் கடர்க்கழ லோன்தில்லைத் தொல்நகரில்
கண்டின மேவும்இல் நீஅவள் நின்கொழு நன்செழுமெல்
தண்டின மேவுதிண் தோளவன் யானவள் தற்பணிவோள்
வண்டின மேவும் குழலாள் அயல்மன்னும் இவ்அயலே. ... 302

மணமனைச் சென்று மகிழ்தரு செவிலி
அணிமனைக் கிழத்திக்(கு) அதன்சிறப்(பு) உரைத்தது.

5. காதல் கட்டுரைத்தல்
பொட்டணி யான்நுதல் போயிறும் பொய்போல் இடையெனப்பூண்
இட்டணி யான்தவி சின்மலர் அன்றி மிதிப்பக் கொடான்
மட்டணி வார்குழல் வையான் மலர்வண் டுறுதல் அஞ்சிக்
கட்டணி வார்சடை யோன்தில்லை போலிதன் காதலனே. ... 303

சோதி வேலவன் காதல்கட் டுரைத்தது.

6. கற்பறிவித்தல்
தெய்வம் பணிகழ லோன்தில்லைச் சிற்றம் பலம்அனையாள்
தெய்வம் பணிந்தறி யாள்என்று நின்று திறைவழங்காத்
தெய்வம் பணியச்சென் றாலும்மன் வந்தன்றிச் சேர்ந்தறியான்
பெளவம் பணிமணி யன்னார் பரி(சு)இன்ன பான்மைகளே. ... 304

விற்பொல நுதலி கற்பறி வித்தது.

7. கற்புப் பயப்புரைத்தல்
சிற்பம் திகழ்தரு திண்மதில் தில்லைச் சிற்றம்பலத்துப்
பொற்பந்தி யன்ன சடையவன் பூவணம் அன்னபொன்னின்
கற்பந்தி வாய்வட மீனும் கடக்கும் படிகடந்தும்
இற்பந்தி வாயன்றி வைகல் செல்லாதவன் ஈர்ங்களிறே. ... 305

கற்புப் பயந்த அற்புதம் உரைத்தது.

8. மருவுதல் உரைத்தல்
மன்னவன் தெம்முனை மேற்செல்லு மாயினும் மாலரியே(று)
அன்னவன் தேர்புறத்(து) அல்கல்செல் லாது வரகுணனாம்
தென்னவன் ஏத்துசிற்றம் பலம் தான்மற்றைத் தேவர்க்கெல்லாம்
முன்னவன் மூவல்அன் னாளும்மற்(று) ஓர் தெய்வம் முன்னலளே. ... 306

இருவர் காதலும் மருவுதல் உரைத்தது.

9. கலவி இன்பம் கூறல்
ஆனந்த வெள்ளத்(து) அழுந்தும்ஓர் ஆருயிர் ஈருருக் கொண்(டு)
ஆனந்த வெள்ளத் திடைத்திளைத் தால்ஒக்கும் அம்பலஞ்சேர்
ஆனந்த வெள்ளத்(து) அறைகழ லோன்அருள் பெற்றவரின்
ஆனந்த வெள்ளம்வற் றாதுமுற்றா(து)இவ் வணிநலமே. ... 307

நன்னுதல் மடந்தை தன்னலங் கண்டு
மகிழ்தூங்(கு) உளத்தோ(டு) இகுளை கூறியது.
------------------

இருபதாம் அதிகாரம்
20. ஓதற் பிரிவு

பேரின்பக் கிளவி
கல்வியில் பிரிவொரு நான்கும் காதல்
புல்லும் ஆனந்த இன்பப் பூரணம்
சொல்லும் பயனின் திறம்பா ராட்டல்.

1. கல்வி நலங்கூறல்
சீரள வில்லாத் திகழ்தரு கல்விச்செம் பொன்வரையின்
ஆரள வில்லா அளவுசென் றார்அம் பலத்துள்நின்ற
ஓரள வில்லா ஓருவன் இருங்கழல் உன்னினர்போல்
ஏரள வில்லா அளவினர் ஆகுவர் ஏந்திழையே. ... 308

கல்விக்(கு) அகல்வர் செல்வத் தவரெனச்
செறிகுழற் பாங்கிக்(கு) அறிவறி வித்தது.

2. பிரிவு நினைவுரைத்தல்
வீதலுற் றார்தலை மாலையன் தில்லைமிக் கோன்கழற்கே
காதலுற் றார்நன்மை கல்விசெல் வீதரும் என்பதுகொண்டு
ஓதலுற் றார்உற் றுணர்தலுற் றார்செல்லல் மல்லழற்கான்
போதலுற் றார்நின் புணர்முலை யுற்ற புரவலரே. ... 309

கல்விக்(கு) அகல்வர் செல்வத் தவரெனப்
பூங்குழல் மடந்தைக்குப் பாங்கி பகர்ந்தது.

3. கலக்கம் கண்டுரைத்தல்
கற்பா மதில் தில்லைச் சிற்றம் பலமது காதல்செய்த
விற்பா விலங்கல்எங் கோனை விரும்பலர் போலஅன்பர்
சொற்பா விரும்பினர் என்னமெல் லோதி செவிப்புறத்துக்
கொற்பா இலங்கிலை வேல்குளித் தாங்குக் குறுகியதே. ... 310

ஓதற்(கு) அகல்வர் மேதக் கவரெனப்
பூங்கொடி கலக்கம் பாங்கிகண்(டு) உரைத்தது.

4. வாய்வழி கூறித் தலைமகள் வருந்தல்
பிரியா மையும்உயிர் ஒன்றா வதும்பிரி யிற்பெரிதும்
தரியா மையும்ஒருங் கேநின்று சாற்றினர் தையல்மெய்யிற்
பிரியாமை செய்து நின்றோன் தில்லைப் பேரியல் ஊரர்அன்ன
புரியா மையும்இது வேயினி என்னாம் புகல்வதுவே. ... 311

தீதறு கல்விக்குச் செல்வன் செல்லுமெனப்
போதுறு குழலி புலம்பியது.
---------------------

இருபத்தொன்றாம் அதிகாரம்
21. காவற்பிரிவு

பேரின்பக் கிளவி
காவற் பிரிவுத் துறையோர் இரண்டும்
இன்பத் திறத்தை எங்கும் காண்டல்.

1. பிரிவு அறிவித்தல்
மூப்பான் இளையவன் முன்னவன் பின்னவன் முப்புரங்கள்
வீப்பான் வியன்தில்லை யான்அரு ளால்விரி நீர்உலகம்
காப்பான் பிரியக் கருதுகின் றார்நமர் கார்கயற்கண்
பூப்பால் நலம்ஒளி ரும்புரி தாழ்குழல் பூங்கொடியே. ... 312

இருநிலம் காவற்(கு) ஏகுவர் நமரெனப்
பொருகடர் வேலோன் போக்(கு)அறி வித்தது.

2. பிரிவு கேட்டு இரங்கல்
சிறுகண் பெருங்கைத்திண் கோட்டுக் குழைசெவிச் செம்முகமாத்
தெறுகட் டழியமுன் னுய்யச்செய் தோர்கருப் புச்சிலையோன்
உறுகண் தழலுடை யோன்உறை அம்பலம் உன்னலரின்
துறுகள் புரிகுழ லாய்இது வோஇன்று சூழ்கின்றதே. ... 313

மன்னவன் பிரிவு நன்னுதல் அறிந்து
பழங்கண் எய்தி அழுங்கல் சென்றது. 2
-----------------

இருபத்திரண்டாம் அதிகாரம்
22. பகை தணி வினைப் பிரிவு

பேரின்பக் கிளவி
பகைதணி வித்தல் துறையோர் இரண்டும்
எங்கும் இன்பக் கனமென் றியறல்.

1. பிரிவு கூறல்
மிகைதணித் தற்(கு)அரி தாம்இரு வேந்தர்வெம் போர்மிடைந்த
பகைதணித் தற்குப் படர்தலுற் றார்நமர் பல்பிறவித்
தொகைதணித் தற்(கு)என்னை ஆண்டுகொண் டோன்தில்லைச் சூழ்பொழில்வாய்
முகைதணித் தற்(கு)அரி தாம்புரி தாழ்தரு மொய்குழலே. ... 314

துன்னு பகை தணிப்ப மன்னவன் பிரிவு
நன்னறுங் கோதைக்கு முன்னி மொழிந்தது.

2. வருத்தம் தணித்தல்
நெருப்புறு வெண்ணெயும் நீருறும் உப்பு மெனஇங்ஙனே
பொருப்புறு தோகை புலம்புறல் பொய்யன்பர் போக்குமிக்க
விருப்புறு வோரைவிண் ணோரின் மிகுத்துநண் ணார்கழியத்
திருப்புறு சூலத்தி னோன்தில்லை போலும் திருநுதலே. ... 315

மணிப்பூண் மன்னவன் தணப்ப தில்லை
அஞ்சல் பொய்யென வஞ்சியைத் தணித்தது.
----------------

இருபத்திமூன்றாம் அதிகாரம்
23. வேந்தற்கு உற்றுழிப் பிரிவு

பேரின்பக் கிளவி
உற்றுழிப் பிரிவார் எட்டும் ஆனந்தம்
பெற்றவா ராமை முற்றும் உரைத்தல்.

1. பிரிந்தமை கூறல்
போது குலாய புனைமுடி வேந்தர்தம் போர்முனைமேல்
மாது குலாயமென் னோர்க்கிசென் றார்நமர் வண்புலியூர்க்
காதுகுலாய குழைஎழி லோனைக் கருதலர்போல்
ஏதுகொ லாவிளை கின்ற(து)இன்(று) ஒன்னார் இடுமதிலே. ... 316

விறல்வேந்தர் வெம்முணைக்கண்
திறல் வேந்தர் செல்வர் என்றது.

2. பிரிவாற்றாமை கார்மிசை வைத்தல்
பொன்னி வளைத்த புனல்சூழ் நிலவிப் பொலிபுலியூர்
வன்னி வளைத்த வளர்சடை யோனை வணங்கலர்போல்
துன்னி வளைத்தநம் தோன்றற்குப் பாசறை தோன்றுங் கொலோ
மின்னி வளைத்து விரிநீர் கவரும் வியன்முகிலே. ... 317

வேந்தற்கு உற்றுழி விறலோன் பிரிய
ஏந்திழை பாங்கிக்(கு) எடுத்து ரைத்தது.

3. வான் நோக்கி வருந்தல்
கோலித் திகழ்கிற(கு) ஒன்றின் ஒடுக்கிப் பெடைக் குருகு
பாலித் திரும்பனி பார்ப்பொடு சேவல் பயில்இரவின்
மாலித் தனையறி யாமறை யோன்உறை அம்பலமே
போலித் திருநுத லாட்(கு)என்ன தாங்கொல்என் போதரவே. ... 318

மானோக்கி வடிவு நினைத்தோன்
வானோக்கி வருந்தியது.

4. கூதிர் கண்டு கவறல்
கருப்பினம் மேவும் பொழில்தில்லை மன்னன்கண் ணார்அருளால்
விருப்பினம் மேவச்சென் றார்க்கும்சென்(று) அல்குங்கொல் வீழ்பனிவாய்
நெருப்பினம் மேய்நடு மால்எழில் தோன்றச்சென் றாங்குநின்ற
பொருப்பினம் ஏறித் தமியரைப் பார்க்கும் புயலினமே. ... 319

இருங்கூதிர் எதிர்வு கண்டு
கருங்குழலி கவலை யுற்றது.

5. முன் பனிக்கு நொந்துரைத்தல்
கற்றின வீழ்பனி தூங்கத் துவண்டு துயர்கஎன்று
பெற்றவ ளேஎனைப் பெற்றாள் பெடைசிற கான்ஒடுக்கிப்
புற்றில வாளர வன்தில்லைப் புள்ளும்தம் பிள்ளைதழீஇ
மற்றினம் சூழ்ந்து துயிலப் பெறும்இம் மயங்கிருளே. ... 320

ஆன்றபனிக்(கு) ஆற்றா(து) அழிந்(து)
ஈன்றவளை ஏழை நொந்தது.

6. பின்பனி நினைந்து இரங்கல்
புரமன்(று) அயரப் பொருப்புவில் ஏந்திப் புத் தேளிர்நாப்பண்
சிரம்அன்(று) அயனைச்செற் றோன்தில்லைச் சிற்றம்பலம்அனையாள்
பரம்அன்(று) இரும்பனி பாரித்த வாபரந்(து) எங்கும்வையம்
சரமின்றி வான்தரு மேலாக்கும் மிக்க தமியருக்கே. ... 321

இரும்பனியின் எதிர்வு கண்டு
கரும்பிவர் குழலி துயரம் நினைந்தது.

7. இளவேனில் கண்டு இன்னல் எய்தல்
வாழும் படியொன்றும் கண்டிலம் வாழிஇம் மாம்பொழில்தேன்
சூழும் முகச்சுற்றும் பற்றின வால்தொண்டை யங்கனிவாய்
யாழின் மொழிமங்கை பங்கன்சிற் றம்பலம் ஆதரியாக்
கூழின் மலிமனம் போன்(று)இருளா நின்ற கோகிலமே. ... 322

இன்னிள வேனில் முன்னுவது கண்டு
மென்னகைப் பேதை இன்னல் எய்தியது.

8. பருவங் காட்டி வற்புறுத்தல்
பூண்பதென் றேகொண்ட பரம்பன் புலியூர் அரன் மிடற்றின்
மாண்பதென் றேஎன வானின் மலரும் மணந்தவர்தேர்
காண்பதன் றேயின்று நாளையிங் கேவரக் கார்மலர்த்தேன்
பாண்பதன் தேர்குழ லாய்எழில் வாய்த்த பனிமுகிலே. ... 323

கார்வருமெனக் கலங்கு மாதரைத் தேர் வருமெனத் தெளிவித்தது.

9. பருவம் அன்று என்று கூறல்
தெளிதரல் காரெனச் சீர்அனம் சிற்றம் பலத்தடியேன்
களிதரக் கார்மிடற் றோன்நட மாடக்கண் ணார்முழவம்
துளிதரல் காரென ஆர்த்தன ஆர்ப்பத்தொக்(கு) உன்குழல்போன்(று)
அளிதரக் காந்தளும் பாந்தளைப் பாரித்(து) அலர்ந்தனவே. ... 324

காரெனக் கலங்கும் ஏரெழில் கண்ணிக்கு
இன்துணைத் தோழி அன்றென்று மறுத்தது.

10. மறுத்துக் கூறல்
தேன்திக்(கு) இலங்கு கழல்அழல் வண்ணன்சிற் றம்பலத்(து)எங்
கோன்திக்(கு) இலங்குதிண் தோள் கொண்டல் கண்டன் குழைஎழில்நாண்
போன்(று)இக் கடிமலர்க் காந்தளும் போந்தவன் கையனல் போல்
தோன்றிக் கடிமல ரும்பொய்ம்மை யோமெய்யில் தோன்றுவதே. ... 325

பருவம் அன்றென்று பாங்கி பகர
மருவமர் கோதை மறுத்து ரைத்தது.

11. தேர் வரவு கூறல்
திருமால் அறியாச் செறிகழல் தில்லைச் சிற்றம்பலத்(து)எம்
கருமால் விடையடை யோன்கண்டம் போற்கொண்டல் எண்டிசையும்
வருமால் உடன்மன் பொருந்தல் திருந்த மணந்தவர்தேர்
பொருமால் அயிற்கண்நல் லாய்இன்று தோன்றும்நம் பொன்னாகர்க்கே. ... 326

பூங்கொடி மருளப் பாங்கி தெருட்டியது.

12. வினை முற்றி நினைதல்
புயலோங்(கு) அலர்சடை ஏற்றவன் சிற்றம் பலம்புகழும்
மயலோங்கு இருங்களி யானை வரகுணண் வெற்பின்வைத்த
கயலோங்(கு) இருஞ்சிலை கொண்டுமன் கோபமும் காட்டிவரும்
செயலோங்(கு) எயில்எரி செய்தபின் இன்றோர் திருமுகமே. ... 327

பாசறை முற்றிப் படைப்போர் வேந்தன்
மாசறு பூண்முலை மதிமுகம் நினைந்தது.

13. நிலைலமை நினைந்து கூறல்
சிறப்பின் திகழ்சிவன் சிற்றம் பலஞ்சென்று சேர்ந்தவர்தம்
பிறப்பின் துனைந்து பெருகுக தேர்பிறங் கும்ஒளியார்
நிறப்பொன் புரிசை மறுகினில் துன்னி மடநடைப்புள்
இறப்பின் துயின்றுமுற் றத்(து)இரை தேரும் எழில் நகர்க்கே. ... 328

பொற்றொடி நிலைமை மற்றவன் நினைந்து
திருந்துதேர் பாகற்கு வருந்து புகன்றது.

14. முகிலொடு கூறல்
அருந்(து)ஏர் அழிந்தனம் ஆலம்என்(று) ஓல மிடும்இமையோர்
மருந்(து)ஏர் அணிஅம் பலத்தோன் மலர்த்தாள் வணங்கலர்போல்
திருந்(து)ஏர் அழிந்து பழங்கண் தரும்செல்வி சீர்நகர்(கு)என்
வரும்தேர் இதன்முன் வழங்கேல் முழங்கேல் வளமுகிலே. ... 329

முனைவற்கு உற்றுழி வினைமுற்றி வருவோன்
கழுமல் எய்திச் செழுமுகிற்(கு) உரைத்தது.

15. வரவெடுத்துரைத்தல்
பணிவார் குழைஎழி லோன்தில்லைச் சிற்றம் பலம்அனைய
மணிவார் குழல்மட மாதே பொலிகநம் மன்னர்முன்னாப்
பணிவார் திறையும் பகைத்தவர் சின்னமுரம் கொண்டுவண்தேர்
அணிவார் முரிசினொ(டு) ஆலிக்கும் மாவோ(டு) அணுகினரே. ... 330

வினைமுற்றிய வேந்தன் வரவு
புழையிழைத் தோழி பொற்றொடிக்(கு) உரைத்தது.

16. மறவாமை கூறல்
கருங்குவ ளைக்கடி மாமலர் முத்தங் கலந்திலங்க
நெருங்கு வளைக்கிள்ளை நீங்கற் றிலள்நின்று நான்முகனோ(டு)
ஒருங்கு வளைக்கரத் தான் உண ராதவன் தில்லையொப்பாய்
மருங்கு வளைத்துமன் பாசறை நீடிய வைகலுமே. ... 331

பாசறை முற்றிப் பைந்தொடியோ(டு) இருந்து
மாசறு தோழிக்கு வள்ளல் உரைத்தது.
------------------Back to thirukovaiyar Page
Back to 8th thirumuRai Page
Back to thirumuRai Home Page
Back to Shaiva Sidhdhantha Home Page