Thiruchitrambalakkovaiyar of Manikkavachagar
(in Tamil Script, unicode format)

திருக்கோவையார் (திருச்சிற்றம்பலக் கோவையார்)
(மாணிக்கவாசகர் அருளியது)


பதினாறாம் அதிகாரம்
16. உடன் போக்கு

பேரின்பக் கிளவி
உடன்போக்(கு) ஐம்பதோ(டு) ஆறு துறையும்
அருள்உயிர்க்(கு) அருமை அறிய உணர்த்தலும்
ஆனந் தத்திடை அழுத்திற் திரோதை
பரைவழி யாக பண்புணர்த் தியது.

1. பருவங் கூறல்
ஓராகம் இரண்டெழி லாய்ஒளிர் வோன்தில்லை ஒண்ணுதல்அங்
கராகம் பயின்(று) அமிழ் தம்பொதிந்(து) ஈர்ஞ்சுணங்(கு) ஆடகத்தின்
பராகம் சிதர்ந்த பயோதரம் இப்பரி சேபணத்த
இராகங்கண் டால்வள்ள லேஇல்லை யேஎமர் எண்ணுவதே. .. 194

உருவது கண்டவள்
அருமை உரைத்தது.

2. மகட் பேச்சுரைத்தல்
மணிஅக்(கு) அணியும் அரன்நஞ்சம் அஞ்சி மறுகிவிண்ணோர்
பணியக் கருணை தரும்பரன் தில்லையன் னாள்திறத்துத்
துணியக் கருதுவ(து) இன்றே துணிதுறை வாநிறைபொன்
அணியக் கருதுநின் றார்பலர் மேன்மேல் அயலவரே. .. 195

படைத்துமொழி கிளவில் பணிமொழிப் பாங்கி
அடற்கதிர் வேலோற்(கு) அறிய உரைத்தது.

3. பொன்னணி உரைத்தல்
பாப்பணி யோன்தில்லைப் பல்பூ மருவுசில் ஓதியைநற்
காப்பணிந் தார்பொன் அணிவார் இனிக்கமழ் பூந்துறைவ
கோப்பணிவான் தோய்கொடி முன்றில் நின்றிவை ஏர்குழுமி
மாப்பணி லங்கள் முழுங்கத் தழங்கும் மணமுரசே. .. 196

பலபரி சினமலும் மலர்நெடுங் கண்ணியை
நன்னுதற் பாங்கி பொன்னணிவர் என்றது.

4. அருவிலை உரைத்தல்
எலும்பால் அணியிறை அம்பலத் தோன்எல்லை செல்குறுவோர்
நலம்பா வியமுற்றும் நல்கினும் கல்வரை நாடர்அம்ம
சிலம்பா வடிக்கண்ணி சிற்றிடைக் கேவிலை செப்பல்ஒட்டார்
கலம்பா வியமுலை யின்விலை என்நீ கருதுவதே. .. 197

பேதையர் அறிவு பேதைமை உடைத்தென
ஆதரத் தோழி அருவிலை உரைத்தது.

5. அருமை கேட்டழிதல்
விசும்புற்ற திங்கட்(கு) அழும்மழப் போன்(று)இனி விம்மிவிம்மி
அசும்புற்ற கண்ணோ(டு) அலறாய் கிடந்(து)அரன் தில்லையன்னாள்
குயம்புற் றர(வு)இடை கூர்எயிற்(று) ஊறல் குழல்மொழியின்
நயம்பற்றி நின்று நடுங்கித் தளர்கின்ற நன்னெஞ்சமே. .. 198

பெருமை நாட் டத்தவள் அருமைகேட்(டு) அழிந்தது.

6. தளர்வறிந்துரைத்தல்
மைதயங் கும்திரை வாரியை நோக்கி மடல்அவிழ்பூங்
கைதை அங் கானலை நோக்கிக்கண் ணீர்கொண்(டு)எங் கண்டர்தில்லைப்
பொய்தயங் கும்நுண் மருங்குல்நல் லாரையெல் லாம்புல்லினாள்
பைதயங் கும்அர வம்புரை யும்அல்குல் பைந்தொடியே. .. 199

தண்துறைவன் தளர்வறிந்து கொண்டு நீங்கெனக் குறித்துரைத்தது.

7. குறிப்புரைத்தல்
மாவைவந் தாண்டமென் னோக்கிதன் பங்கர்வண் தில்லைமல்லற்
கோவைவந் தாண்டசெவ் வாய்க்கருங் கண்ணி குறிப்பறி யேன்
பூவைதந் தாள்பொன்னம் பந்துதந் தாள்என்னைப் புல்லிக்கொண்டு
பாவைதந் தாள்பைங் கிளியளித் தாள்இன்றென் பைந்தொடியே. .. 200

நறைக் குழலி குறிப்புரைத்தது.

8. அருமை உரைத்தல்
மெல்லியல் கொங்கை பெரியமின் நேரிடை மெல்லடிபூக்
கல்லியல் வெம்மைக் கடங்கடும் தீக்கற்று வானம்எல்லாம்
சொல்லிய சீர்ச்சுடர் திங்கள் அங் கண்ணித்தொல் லோன்புலியூர்
அல்லியங் கோதைநல் லாய்எல்லை சேய்த்துஎம் அகல்நகரே. .. 201

கானின் கடுமையும் மானின் மென்மையும்
பதியின் சேட்சியும் இதுவென உரைத்தது.

9. ஆதரங் கூறல்
பிணையும் கலையும்வன் பேய்த்தே ரினைப்பெரு நீர்நசையால்
அணையும் முரம்பு நிரம்பிய அத்தமும் ஐயமெய்யே
இணையும் அளவும் இல் லாஇறை யோன்உறை தில்லைத்தண்பூம்
பணையும் தடமும்அன் றேநின்னோ(டு) ஏகின்எம் பைந்தொடிக்கே. .. 202

அழல்தடம் புரையும் அருஞ்சுரம் அதுவும்
நிழல்தடம் அவட்கு நின்னொ(டு)ஏகின் என்றது.

10. இறந்துபாடு உரைத்தல்
இங்(கு)அயல் என்நீ பணிக்கின்ற(து) ஏந்தல் இணைப்பதில்லாக்
கங்கைஅம் செஞ்சடைக் கண்ணுதல் அண்ணல் கடிகொள்தில்லைப்
பங்கயப் பாசடைப் பாய்தடம் நீஅப் படர்தடத்துச்
செங்கயல் அன்றே கருங்கயல் கண்ணித் திருநுதலே. .. 203

கார்த் தடமும் கயலும் போன்றீர்
வார்த்தட முலையும் மன்னனும் என்றது.

11. கற்பு நலன் உரைத்தல்
தாயிற் சிறந்தன்று நாண்தைய லாருக்(கு)அந் நாண்தகைசால்
வேயிற் சிறந்தமென் தோளி திண் கற்பின் விழுமிதன்(று)ஈங்
கோயில் சிறந்துசிற் றம்பலத்(து) ஆடும்எம் கூத்தப்பிரான்
வாயில் சிறந்த மதியில் சிறந்த மதிநுதலே. .. 204

பொய்யொத்தஇடை போக்குத்துணிய
வையத்திடை வழக்குரைத்தது.

12. துணிந்தமை கூறல்
குறப்பாவை நின்குழல் வேங்கையம் போதொடு கோங்கம்விராய்
நறப்பா டலம்புனை வார்நினை வார்தம் பிரான்புலியூர்
மறப்பான் அடுப்பதோர் தீவினை வந்திடின் சென்றுசென்று
பிறப்பான் அடுப்பினும் பின்னும்துன் னத்தகும் பெற்றியரே. .. 205

பொருவேல் அண்ணல் போக்குத் துணிந்தமை
செருவேற் கண்ணிக்குச் சென்று செப்பியது.

13. துணிவொடு வினாவல்
நிழல்தலை தீநெறி நீரில்லை கானகம் ஓரிகத்தும்
அழல்தலை வெம்பரற் றென்பர்என் னோதில்லை அம்பலத்தான்
கழல்தலை வைத்துக்கைப் போதுகள் கூப்பக்கல் லாதவர்போல்
குழல்தலைச் சொல்லிசெல் லக்குறிப் பாகும் நம்கொற்றவர்க்கே. .. 206

சிலம்பன் துணிவொடு செல்கரம் நினைந்து
கலம்புனை கொம்பர் கலக்க முற்றது.

14. போக்கு அறிவித்தல்
காயமும் ஆவியும் நீங்கள் சிற்றம்பல வன்கயிலைச்
சீயமும் மாவும் வெரீஇவரல் என்பல் செறிதிரைநீர்த்
தேயமும் யாவும் பெறினும் கொடார்நமர் இன்னசெப்பில்
தோயமும் நாடும்இல் லாச்சுரம் போக்குத் துணிவித்தவே. .. 207

பொருசுடர் வேலவன் போக்குத் துணிந்தமை
அரிவைக்(கு) அவள் அறிய உரைத்தது.

15. நாணிழந்து வருந்தல்
மற்பாய் விடையோன் மகிழ்புலி யூர்என் னொடும்வளர்ந்த
பொற்பார் திருநாண் பொருப்பர் விருப்புப் புகுந்துநுந்தக்
கற்பார் கடுங்கால் கலக்கிப் பறித்தெறி யக்கழிக
இற்பாற் பிறவற்க ஏழையர் வாழி எழுமையுமே. .. 208

கற்பு நாணினும் முற்சிறந் தமையின்
சேண்நெறி செல்ல வாணுதல் துணிந்தது.

16. துணிவெடுத்து உரைத்தல்
கம்பம் சிவந்த சலந்தரன் ஆகம் கறுத்ததில்லை
நம்பன் சிவநகர் நற்றளிர் கற்சுரம் ஆகும்நம்பா
அம்பஞ்சி ஆவம் புகமிக நீண்(டு)அரி சிந்துகண்ணாள்
செம்பஞ்சி யின்மிதிக் கிற்பதைக் கும்மலர்ச் சீறடிக்கே. .. 209

செல்வ மாதர் செல்லத் துணிந்தமை
தொல்வரை நாடற்குத் தோழிசொல் லியது.

17. குறியிடங் கூறல்
முன்னோன் மணிகண்டம் ஒத்தவன் அம்பலம் தம்முடிதாழ்த்(து)
உன்னா தவர்வினை போல்பரந்(து) ஓங்கும் எனதுயிரே
அன்னாள் அரும்பெறல் ஆவியன் னாய்அருள் ஆசையினால்
பொன்னார் மணிமகிழ்ப் பூவிழ யாம்விழை பொங்கிருளே. .. 210

மன்னிய இருளில் துன்னிய குறியில்
கோங்கிவர் கொங்கையை நீங்குகொண் டென்றது.

18. அடியொடு வழிநினைந்(து) அவன் உளம் வாடல்
பனிச்சந் திரனொடு பாய்புனல் சூடும் பரன்புலியூர்
அனிச்சம் திகழும் அம் சீறடி ஆவ அழல்பழுத்த
கனிச்செந் திரளன்ன கற்கடம் போந்து கடக்குமென்றால்
இனிச் சந்த மேகலை யாட்(கு)என்கொ லாம்புகுந்(து) எய்துவதே. .. 211

நெறியுறு குழலியொடு நீங்கத் துணிந்த
உறுசுடர் வேலோன் உள்ளம் வாடியது.

19. கொண்டு சென்று உய்த்தல்
வைவந்த வேலவர் சூழ்வரத் தேர்வரும் வள்ளல்உள்ளம்
தெய்வம் தரும்இருள் தூங்கும் முழுதும் செழுமிடற்றின்
மைவந்த கோன்தில்லை வாழ்த்தார் மனத்தின் வழுத்துநர் போல்
மொய்வந்த வாவி தெளியும் துயிலும்இம் முதெயிலே. .. 212

வண்டமர் குழலியைக் கண்டுகொள் கென்றது.

20. ஒம்படுத் துரைத்தல்
பறந்திருந்(து) உம்பர் பதைப்பப் படரும் புரங்கரப்பச்
சிறந்(து)எரி யாடிதென் தில்லையன் னாள்திறத் துச்சிலம்பா
அறம்திருந்(து) உன்னரு ளும்பிறி தாயின் அருமறையின்
திறம்திரிந் தார்கலி யும்முற்றும் வற்றும்இச் சேணிலத்தே. .. 213

தேம்படு கோதையை ஓம்ப டுத்தது.

21. வழிப்படுத்துரைத்தல்
ஈண்டொல்லை ஆயமும் ஒளவையும் நீங்கஇவ் ஒர்கவ்வைதீர்த்(து)
ஆண்டொல்லை கண்டிடக் கூடுக நும்மைஎம் மைப்பிடித்தின்(று)
ஆண்டெல்லை தீர்இன்பம் தந்தவன் சிற்றம் பலம்நிலவு
சேண்தில்லை மாநகர் வாய்ச்சென்று சேர்க திருத்தகவே. .. 214

மதிநுதலியை வழிப்படுத்துப்
பதிவயிற் பெயரும் பாங்கி பகர்ந்தது.

22 மெல்லக் கொண்டேகல்
பேணத் திருத்திய சீறடி மெல்லச்செல் பேரரவம்
பூணத் திருத்திய பொங்கொளி யோன்புலி யூர்புரையும்
மாணத் திருத்திய வான்பதி சேரும் இருமருங்கும்
காணத் திருத்திய போலும் முன் னாமன்னு கானங்களே. .. 215

பஞ்சி மெல்லடிப் பணைத் தோளியை
வெஞ்சுரத்திடை மெலிவு அகற்றியது.

23. அடலெடுத்துரைத்தல்
கொடித்தேர் மறவர் சூழாம்வெங் கரிநிரை கூடின்என்கை
வடித்தேர் இலங்கெ·தின் வாய்க்குத வாமன்னும் அம்பலத்தோன்
அடித்தேர் அலரென்ன அஞ்சுவன் நின்ஐயர் என்னின்மன்னும்
கடித்தேர் குழன்மங்கை கண்டி(டு)இவ் விண்தோய் கனவரையே. .. 216

வரிசிலையவர் வருகுவரெனப்
புரிதரு குழலிக்(கு) அருளுவன் உரைத்தது.

24. அயர்வு அகற்றல்
முன்னோன் அருள்முன்னும் உன்னா வினையின் முகர்துன்னும்
இன்னாக் கடறி(து)இப் போழ்தே கடந்தின்று காண்டும்சென்று
பொன்னார் அணிமணி மாளிகைத் தென்புலி யூர்ப்புகழ்வார்
தென்னா எனஉடை யான்நட மாடுசிற் றம்பலமே. .. 217

இன்னல் வெங்க டந்தெறி வேலவன்
அன்னம் அன்னவள் அயர்(வு)அ கற்றியது.

25. நெறி விலக்கிக் கூறல்
விடலைஉற் றாரில்லை வெம்முனை வேடர் தமியைமென்பூ
மடலையுற் றார்குழல் வாடினள் மன்றுசிற் றம்பலவர்க்கு
அடலையுற் றாரின் எறிப்(பு)ஒழிந் தாங்(கு)அருக் கன்கருக்கிக்
கடலையுற் றான்கடப் பாரில்லை இன்றிக் கடுஞ்சுரமே. .. 218

சுரத்திடைக் கண்டவர் சுடர்க்குழை மாதொடு
சரத்தணி வில்லோய் தங்கு கென்றது.

26. கண்டவர் மகிழ்தல்
அன்பணைத்(து) அம்சொல்லி பின்செல்லும் ஆடவன் நீடவன்தன்
பின்பணைத் தோளி வரும்இப் பெருஞ்சுரம் செல்வதன்று
பொன்பணைத் தன்ன இறையுறை தில்லைப் பொலிமலர்மேல்
நன்பணைத் தண்ணற(வு) உண்அளி போன்றொளிர் நாடகமே. .. 219

மண்டழற் கடத்துக் கண்டவர் உரைத்தது.

27. வழிவிளையாடல்
கண்கள்தம் மாற்பயன் கொண்டனம் கண்டினிக் காரிகைநின்
பண்கட மென்மொழி ஆரப் பருக வருகஇன்னே
விண்கள்தம் நாயகன் தில்லையின் மெல்லியல் பங்கன்எங்கோன்
தண்கடம் பைத்தடம் போற்கடுங் கானகம் தண்ணெனவே. .. 220

வன்தழற் கடத்து வடிவேல் அண்ணல்
மின்தங்(கு) இடையொடு விளையாடி யது.

28. நகரணிமை கூறல்
மின்தங்(கு) இடையொடு நீவியன் தில்லைச்சிற் றம்பலவர்
குன்றம் கடந்துசென் றால்நின்று தோன்றும் குரூஉக்கமலம்
துன்(று)அம் கிடங்கும் துறைதுறை வள்ளைவெள் ளைநகையார்
சென்(று)அங்(கு) அடைதட மும்புடை சூழ்தரு சேண்நகரே. .. 221

வண்டமர் குழலியொடு கண்டவர் உரைத்தது.

29. நகர் காட்டல்
மின்போல் கொடிநெடு வானக் கடலுள் திரைவிரிப்பப்
பொன்போல் புரிசை வடவரை காட்டப் பொலிபுலியூர்
மன்போற் பிறையணி மாளிகை சூலத்த வாய்மடவாய்
நின்போல் நடைஅன்னம் துன்னிமுன் தோன்றும்நல் நீள்நகரே. .. 222

கொடுங்கடம் கடந்த குழைமுக மாதர்க்குத்
தடம்கி டங்குசூழ் தன்னகர் காட்டியது.

30. பதிபரிசுரைத்தல்
செய்குன்(று) உவைஇவை சீர்மலர் வாவி விசும்பியங்கி
நைகின்ற திங்கள்எய்ப்(பு) ஆறும் பொழில்அவை ஞாங்கர்எங்கும்
பொய்குன்ற வேதியர் ஓதிடம் உந்திடம் இந்திடமும்
எய்குன்ற வார்சிலை அம்பல வற்(கு)இடம் ஏந்திழையே. .. 223

கண்ணிவர் வளநகர் கண்டுசென்(று(அடைந்து
பண்ணிவர் மொழிக்குப் பதிபரி(சு)உரைத்தது.

31. செவிலி தேடல்
மயிலெனப் பேர்ந்(து)இள வல்லியின் ஒல்கிமென் மான்விழித்துக்
குயிலெனப் பேசும்எங் குட்டன்எங் குற்றதென் னெஞ்சகத்தே
பயிலெனப் பேர்ந்தறி யாதவன் தில்லைப்பல் பூங்குழலாய்
அயிலெனப் பேருங்கண் ணாய்என் கொலாம்இன்(று) அயர்கின்றதே. .. 224

கவலை யுற்ற காதல் தோழியைச்
செவிலி யுற்றுத் தெரிந்து வினாயது.

32. அறத்தொடு நிற்றல்
ஆளரிக் கும்அரி தாய்த்தில்லை யாவருக் கும்எளிதாம்
தாளர்இக் குன்றில்தன் பாவைக்கு மேவித் தழல்திகழ்வேல்
கோளரிக் கும்நிகர் அன்னார் ஒருவர் குரூஉமலர்த்தார்
வாளரிக் கண்ணிகொண் டாள்வண்டல் ஆயத்(து)எம் வாணுதலே. .. 225

சுடர்க்குழைப் பாங்கி படைத்துமொழி கிளவியல்
சிறப்புடைச் செவிலிக்கு அறத்தொடு நின்றது.

33. கற்பு நிலைக்கு இரங்கல்
வடுத்தான் வகிர்மலர் கண்ணிக்குத் தக்கின்று தக்கன்முத்தீக்
கெடுத்தான் கெடலில்தொல் லோன்தில்லைப் பன்மலர் கேழ்கிளர
மடுத்தான் குடைந்தன் றழுங்க அழுங்கித் தழீஇமகிழ்வுற்(று)
எடுத்தாற்(கு) இனியன வேயினி யாவன எம்மனைக்கே. .. 226

விற்புரை நுதலி கற்புநிலை கேட்டுக்
கோடா யுள்ள நீடாய் அழுங்கியது

34. கவன்றுரைத்தல்
முறுவல்அக் கால்தந்து வந்தென் முலைமுழு வித்தழுவிச்
சிறுவலக் காரங்கள் செய்தஎல் லாம்முழு தும்திதையத்
தெறுவலக் காலனைச் செற்றவன் சிற்றம் பலஞ்சிந்தியார்
உறுவலக் கானகம் தான்படர் வானாம் ஒளியிழையே. .. 227

அவள் நிலை நினைந்து செவிலி கவன்றது.

35. அடிநினைந்திரங்கல்
தாமே தமக்(கு)ஒப்பு மற்றில் லவர்தில்லைத் தண்அனிச்சப்
பூமேல் மிதிக்கின் பதைத்தடி பொங்கும்நங் காய் எரியும்
தீமேல் அயில்போல் செறிபரல் கானிற் சிலம்படியாய்
ஆமே நடக்க அருவினை யேன்பெற்ற அம்மனைக்கே. .. 228

வெஞ்சுரமும் அவள் பஞ்சுமெல் அடியும்
செவிலி நினைந்து கவலை யுற்றது.

36. நற்றாய்க்கு உரைத்தல்
தழுவின கையிறை சோரின் தமியம்என் றேதளர்வுற்(று)
அழுவினை செய்யும்நை யாஅம்சொல் பேதை அறிவுவிண்ணோர்
குழுவினை உய்யநஞ் சுண்(டு)அம் பலத்துக் குனிக்கும்பிரான்
செழுவின தாள்பணி யார்பிணி யாலுற்றுத் தேய்வித்ததே. .. 229

முகிழ்முலை மடந்தைக்கு முன்னிய(து) அறியத்
திகழ்மனைக் கிழத்திக்குச் செவிலி செப்பியது.

37. நற்றாய் வருந்தல்
யாழியல் மென்மொழி வன்மனப் பேதையொர் ஏதிலம்பின்
தோழியை நீத்(து)என்னை முன்னே துறந்துதுன் னார்கண்முன்னே
வாழிஇம் மூதூர் மறுகச்சென் றாள்அன்று மால்வணங்க
ஆழிதந் தான்அம் பலம்பணி யாரின் அருஞ்சுரமே. .. 230

கோடாய் கூற நீடாய் வாடியது.

38. கிளி மொழிக்கு இரங்கல்
கொன்னுனை வேல்அம் பலவன் தொழாரின்குன் றம்கொடியோள்
என்னணம் சென்றனள் என்னணம் சேரும் எனஅயரா
என்னனை போயினள் யாண்டையள் என்னைப் பருந்தடும்என்(று)
என்னனை போக்கன்றிக் கிள்ளைஎன் உள்ளத்தை ஈர்க்கின்றதே. .. 231

மெய்த்தகை மாது வெஞ்சுரம் செல்லத்
தத்தையை நோக்கித் தாய்புலம் பியது.

39. சுடரோடு இரத்தல்
பெற்றே னொடுங்கிள்ளை வாட முதுக்குறை பெற்றிமிக்கு
நற்றேள் மொழியழல் கான்நடந் தாள்முகம் நானணுகப்
பெற்றேன் பிறவி பெறாமற்செய் தோன்தில்லைத் தேன்பிறங்கு
மற்றேன் மலரின் மலர்த்(து)இரந் தேன்சுடர் வானவனே. .. 232

வெஞ்சுரத் தணிக்கெனச் செஞ்சுடர் அவற்கு
வேயமர் தோளி தாயர் பராயது.

40. பருவம் நினைந்து கவறல்
வைம்மலர் வாட்படை யூரற்குச் செய்யும்குற் றேவல்மற்றென்
மைம்மலர் வாட்கண்ணி வல்லள்கொல் லாம்தில்லை யான்மலைவாய்
மொய்ம்மலர்க் காந்தளைப் பாந்தளென்(று) எண்ணித்துண் ணென்றொளித்துக்
கைம்மல ரால்கண் புதைத்துப் பதைக்கும்எம் கார்மயிலே. .. 233

முற்றா முலைக்கு நற்றாய் கவன்றது.

41. நாடத் துணிதல்
வேயின தோளி மெலியல்விண் ணோர்தக்கன் வேள்வியின்வாய்ப்
பாயின சீர்த்தியன் அம்பலத் தானைப் பழித்துமும்மைத்
தீயின(து) ஆற்றல் சிரம்கண்இழிந்து திசைதிசைதாம்
போயின எல்லையெல் லாம்புக்கு நாடுவன் பொன்னினையே. .. 234

கோடாய் மடந்தையை நாடத் துணிந்தது.

42. கொடிக்குறி பார்த்தல்
பணங்கள்அஞ் சாலும் பருஅர(வு) ஆர்த்தவன் தில்லையன்ன
மணங்கொள்அஞ் சாயலும் மன்னனும் இன்னஏ வரக்கரைந்தால்
உணங்கல்அஞ் சா(து)உண்ண லாம்ஒள் நிணப்பலி ஒக்குவல்மாக்
குணங்கள்அஞ் சாற்பொலி யும்நல சேட்டைக் குலக்கொடியே. .. 235

நற்றாய் நயந்து சொற்புட் பராயது.

43. சோதிடங் கேட்டல்
முன்னும் கடுவிடம் உண்டதென் தில்லைமுன் னோன்அருளால்
இன்னும் கடியிக் கடிமனைக் கேமற்(று) யாம்அயர
மன்னும் கடிமலர்க் கூந்தலைத் தான்பெறு மாறும்உண்டேல்
உன்னுங்கள் தீதின்றி ஓதுங்கள் நான்மறை உத்தமரே. .. 236

சித்தம் தளர்ந்து தேடும் கோடாய்
உய்த்துணர் வோரை உரைமின் என்றது.

44. சுவடு கண்டறிதல்
தெள்வன் புனற்சென்னி யோன்அம் பலம்சிந்தி யார்இனஞ்சேர்
முள்வன் பரல்முரம் பத்தின்முன் செய்வினை யேன்எடுத்த
ஒள்வன் படைக்கண்ணி சீறடி இங்கிவை உங்குவை அக்
கள்வன் பகட்டுர வோன்அடி யென்று கருதுவனே. .. 237

சுவடுபடு கடத்துச் செவிலி கண் டறிந்தது.

45. சுவடு கண்டிரங்கல்
பாலொத்த நீற்றம் பலவன் கழல்பணி யார்பிணிவாய்க்
கோலத் தவிசின் மிதிக்கின் பதைத்தடி கொப்புள்கொள்ளும்
வேலொத்த வெம்பரல் கானத்தின் நின்றோர் விடலைபின்போம்
காலொத் தனவினை யேன்பெற்ற மாணிழை கால்மலரே. .. 238

கடத்திடைக் காரிகை அடித்தலம் கண்டு
மன்னருள் கோடாய் இன்னல் எய்தியது.

46. வேட்ட மாதரைக் கேட்டல்
பேதைப் பருவம் பின்சென் றதுமுன்றில் எனைப்பிரிந்தால்
ஊதைக்(கு) அலமரும் வல்லியொப் பாள்முத்தன் தில்லையன்னாள்
ஏதிற் கரத்தய லானொ(டு)இன்(று) ஏகினள் கண்டனையே
போதிற் பொலியும் தொழிற்புலிப் பல்குரல் பொற்றொடியே. .. 239

மென்மலர் கொய்யும் வேட்ட மாதரைப்
பின்வரு செவிலி பெற்றி வினாயது.

47. புறவொடு புலத்தல்
புயலன்(று) அலர்சடை ஏற்றவன் தில்லைப் பொருப்பரசி
பயலன் தலைப்பணி யாதவர் போல்மிகு பாவம்செய்தேற்(கு)
அயலன் தமியன்அம் சொல்துணை வெஞ்சுரம் மாதர்சென்றால்
இயலன்(று) எனக்கிற் றிலைமற்று வாழி எழிற்புறவே. .. 240

காட்டுப் புறவொடு வாட்டம் உரைத்தது.

48. குரவொடு வருந்தல்
பாயும் விடையோன் புலியூர் அனையஎன் பாவைமுன்னே
காயும் கடத்திடை யாடிக் கடப்பவும் கண்டுநின்று
வாயும் திறவாய் குழைஎழில் வீசவண்(டு) ஓலுறுத்த
நீயும்நின் பாவையும் நின்று நிலாவிடும் நீள்குரவே. .. 241

தேடிச் சென்ற செவிலித் தாயர்
ஆடற் குரவொடு வாடி உரைத்தது.

49. விரதியரை வினாவல்
கத்திய பொக்கணத்(து) என்(பு)அணி கட்டங்கம் சூழ்சடைவெண்
பொத்திய கோலத்தி னீர்புலி யூர்அம் பலவர்க்குற்ற
பத்தியர் போலப் பணைத்திறு மாந்த பயோதரத்தோர்
பித்திதன் பின்வர முன்வரு மோஓர் பெருந்தகையே. .. 242

வழிவரு கின்ற மாவிர தியரை
மொழிமின்கள் என்று முன்னி மொழிந்தது.

50. வேதியரை வினாவல்
வெதிரேய் கரத்துமென் தோல்ஏய் சுவல்வெள்ளை நூலிற்கொண்மூ
அதிரேய் மறையின்இவ் வாறுசெல் வீர்தில்லை அம்பலத்துக்
கதிரேய் சடையோன் கரமான் எனஒரு மான்மயில்போல்
எதிரே வருமே சுரமே வெறுப்பவொர் ஏந்தலோடே. .. 243

மாதின்பின் வரும்செவிலி வேதியரை விரும்பி வினாவியது.

51. புணர்ந்துடன் வருவோரைப் பொருந்தி வினாவல்
மீண்டார் எனஉவந் §ன்கண்டு நும்மைஇம் மேதகவே
பூண்டார் இருவர்முன் போயின ரேபுலி யூர்எனைநின்(று)
ஆண்டான் அருவரை ஆளியன் னாளுக்கண்டேன்அயலே
தூண்டா விளக்கனை யாய்என்னை யோஅன்னை சொல்லியதே. .. 244

புணர்ந்து டன்வரும் புரவலன் ஒருபால்
அணங்கமர் கோதையை ஆராய்ந்தது.

52. வியந்துரைத்தல்
பூங்கயி லாயப் பொருப்பன் திருப்புலி யூரதென்னத்
தீங்கை இலாச்சிறி யாள்நின்ற(து) இவ்விடம் சென்றெதிர்ந்த
வேங்கையின் வாயின் வியன்னகம் மடுத்துக் கிடந்தலற
ஆங்(கு)அயி லாற்பணி கொண்டது திண்திறல் ஆண்தகையே. .. 245

வேங்கை பட்டதும் பூங்கொடி நிலையும்
நாடா வரும் கோடாய் கூறியது.

53. இயைபு எடுத்துரைத்தல்
மின்தொத்(து) இடுகழல் நூபுரம் வெள்ளைசெம் பட்டுமின்ன
ஒன்(று)ஒத் திடவுடை யாள(டு)ஒன் றாம்புலி யூரன்என்றே
நன்(று)ஒத் தெழிலைத் தொழவுற் றனம்என்ன தோர்நன்மைதான்
குன்றத் திடைக்கண் டனம்அன்னை நீசொன்ன கொள்கையரே. .. 246

சேயிழை யோடு செம்மல் போதர
ஆயிழை பங்கன்என்(று) அயிர்த்தேம் என்றது.

54. மீள உரைத்தல்
மீள்வது செல்வதன்(று) அன்னைஇவ் வெங்கடத்(து) அக்கடமாக்
கீள்வது செய்த கிழவோ னொடுங்கிளர் கெண்டையன்ன
நீள்வது செய்தகண் ணாள்இந் நெடுஞ்சுரம் நீந்தியெம்மை
ஆள்வது செய்தவன் தில்லையின் எல்லை அணுகுவரே. .. 247

கடுங்கடம் கடந்தமை கைத்தாய்க்(கு) உரைத்து
நடுங்கன்மின் மீண்டும் நடமின் என்றது.

55. உலகியல்பு உரைத்தல்
கரும்பிவர் சந்தும் தொடுகடல் முத்தும்வெண் சங்கும்எங்கும்
விரும்பினர் பாற்சென்று மெய்க்(கு)அணி யாம்வியன் கங்கையென்னும்
பெரும்புனல் சூடும் பிரான்சிவன் சிற்றம் பலம்அனைய
கரும்பன மென்மொழி யாரும்அந் நீர்மையர் காணுநர்க்கே. .. 248

செவிலியது கவலை தீர
மன்னிய உலகியல் முன்னி உரைத்தது.

56. அழுங்கு தாய்க்கு உரைத்தல்
ஆண்(டு)இல் எடுத்தவ ராம்இவர் தாம்அவர் அல்குவர்போய்த்
தீண்டில் எடுத்தவர் தீவினை தீர்ப்பவன் தில்லையின்வாய்த்
தூண்டில் எடுத்தவ ரால்தொங்கொ(டு) எற்றப் பழம்விழுந்து
பாண்டில் எடுத்தபல் தாமரை கீழும் பழனங்களே. .. 249

செழும்பணை அணைந்தமை
அழுங்கு தாய்க்(கு) உரைத்தது.
------------------------------

பதினேழாம் அதிகாரம்
17. வரைவு முடுக்கம்

பேரின்பக் கிளவி
வரைவு முடுக்கம் ஒருபதி னாறும்
சிவனது கருணை தெரிய உரைத்தல்
இன்பம் பெறஅருள் எடுத்தியம் பியது.

1. வருத்த மிகுதி கூறி வரைவு கடாதல்
எழுங்குலை வாழையின் இன்கனி தின்(று)இள மந்திஅந்தண்
செழுங்குலை வாழை நிழலில் துயில்சிலம் பாமுனைமேல்
உழுங்கொலை வேல்திருச் சிற்றம் பலவரை உன்னலர்போல்
அழுங்குலை வேலன்ன கண்ணிக்(கு)என் னோநின் னருள் வகையே. .. 250

இரவுக் குறியிடத்(து) ஏந்திழைப் பாங்கி
வரைவு வேண்டுதல் வரவு ரைத்தது.

2. பெரும்பான்மை கூறி மறுத்தல்
பரம்பயன் தன்னடி யேனுக்குப் பார்விசும் பூடுருவி
வரம்பயன் மாலறி யாத்தில்லை வானவன் வானகஞ்சேர்
அரம்பையர் தம்மிட மோஅன்றி வேழத்தின் என்புநட்ட
குரம்பையர் தம்மிட மோஇடம் தோன்றும்இக் குன்றிடத்தே. .. 251

குலம்புரி கொம்பர்க்குச் சிலம்பின் செப்பியது.

3. உள்ளது கூறி வரைவு கூடாதல்
சிறார்கவண் வாய்த்த மணியிற் சிதை பெருந் தேனிழும்என்(று)
இறால்கழி வுற்(று)எம் சிறுகுடில் உந்தும் இடமி(து)எந்தை
உறாவரை யுற்றார் குறவர்பெற் றாளும் கொடிச்சி உம்பர்
பெறாஅருள் அம்பல வன்மலைக் காத்தும் பெரும்புனமே. .. 252

இன்மை உரைத்த மன்னனுக்கு
மாழை நோக்கி தோழி உரைத்தது.

4. ஏதங்கூறி இரவரவு விலக்கல்
கடந்தொறும் வாரண வல்சியின் நாடிப்பல் சீயம்கங்குல்
இடம்தொறும் பார்க்கும் இயவொரு நீஎழில் வேலின்வந்தால்
படந்தொறும் தீஅர வன்னம் பலம்பணி யாரின்எம்மைத்
தொடர்ந்தொறும் துன்(பு)என் பதேஅன்ப நின்னருள் தோன்றுவதே. .. 253

இரவரு துயரம் ஏந்தலுக்(கு) எண்ணிப்
பருவரல் எய்திப் பாங்கி பகர்ந்தது.

5. பழிவரவுரைத்ததுப் பகல்வரவு விலக்கல்
களிறுற்ற செல்லல் களைவயின் பெண்மரங் கைஞ்ஞெமிர்த்துப்
பிளிறுற்ற வானப் பெருவரை நாட பெடைநடையோ(டு)
ஒளிறுற்ற மேனியின் சிற்றம் பலம்நெஞ் சுறாதவர்போல்
வெளிறுற்ற வான்பழி யாம்பகல் நீசெய்யும் மெய்யருளே. .. 254

ஆங்ஙனம் ஒழுகும் அடல்வேல் அண்ணலைப்
பாங்கி ஐய பகல்வரல் என்றது.

6. தொழுதிரந்து கூறல்
கழிகண் தலைமலை வோன்புலி யூர்கரு தாதவர்போல்
குழிகண் களிறு வெரீஇஅரி யாளி குழீஇவழங்காக்
கழிகட் டிரவின்வரல்கழல் கைதொழு தேயிரந்தேன்
பொழிகட் புயலின் மயிலில் துவளும் இவள்பொருட்டே. .. 255

இரவரவின் ஏதம் அஞ்சிச்
சுரிதருகுழல் தோழி சொல்லியது.

7. தாய் அறிவு கூறல்
விண்ணும் செலவறி யாவெறி யார்கழல் வீழ்சடைத்தீ
வண்ணன் சிவன்தில்லை மல்லெழில் கானல் அரையிரவில்
அண்ணல் மணிநெடுந் தேர்வந்த துண்டாம் எனச்சிறிது
கண்ணும் சிவந்தன்னை என்னையும் நோக்கினள் கார்மயிலே. .. 256

சிறைப்பு றத்துச் செம்மல் கேட்ப
வெறிக்குறல் பாங்கி மெல்லியற்(கு) உரைத்தது.

8. மந்தி மேல் வைத்து வரைவு கடாதல்
வான்தோய் பொழில்எழில் மாங்கனி மந்தியின் வாய்க்கடுவன்
தேன்தோய்த்(து) அருத்தி மகிழ்வகண் டாள்திரு நீள்முடிமேல்
மீன்தோய் புனற்பெண்ணை வைத்துடை யானையும் மேனியைத்தான்
வான்தோய் மதில்தில்லை மாநகர் போலும் வரிவளையே. .. 257

வரிவளையை வரைவு கடாவி
அரிவை தோழி உரை பகர்ந்தது.

9. காவல் மேல் வைத்துக் கண் துயிலாமை கூறல்
நறைக்கண் மலிகொன்றை யோன்நின்று நாடக மாடுதில்லைச்
சிறைக்கண் மலிபுனல் சீர்நகர் காக்கும்செவ் வேல்கிளைஞர்
பறைக்கண் படும்படும் தோறும் படாமுலைப் பைந்தொடியாள்
கறைக்கண் மலிகதிர் வேற்கண் படாது கலங்கினவே. .. 258

நகர்காவலின் மிகுகழி காதல்.

10. பகல் உடம்பட்டாள் போன்று இரவரவு விலக்கல்
கரலா யினர்நினை யாத்தில்லை அம்பலத் தான்கழற்(கு)அன்
பிலரா யினர்வினை போலிருள் தூங்கி முழங்கிமின்னிப்
புலரா இரவும் பொழியா மழையும்புண் ணில்நுழைவேல்
மலரா வரும்மருந் தும்இல்லை யோநும் வரையிடத்தே. .. 259

விரைதரு தாரோய் இரவரல் என்றது.

11. இரவு உடம்பட்டாள் போன்று பகல் வரவு விலக்கல்
இறவரை உம்பர்க் கடவுட் பராய்நின்(று) எழிலியுன்னிக்
குறவரை ஆர்க்கும் குளிர்வரை நாட கொழும்பவள
நிறவரை மேனியன் சிற்றம் பலம்நெஞ்(சு) உறாதவர்போல்
உறவரை மேகலை யாட்(கு)அலராம்பகல் உள்ளருளே. .. 260

இகலடு வேலோய் பகல்வரல் என்றது.

12. இரவும் பகலும் வரவு விலக்கல்
கழியா வருபெரு நீர்சென்னி வைத்தென்னைத் தன்தொழும்பில்
கழியா அருள்வைத்த சிற்றம் பலவன் கரந்தருமான்
விழியா வரும்புரி மென்குழ லாள்திறத்(து) ஐயமெய்யே
பழியாம் பகல்வரில் நீயிர(வு) ஏதும் பயனில்லையே. .. 261

இரவும் பகலும் வரவொழி கென்றது.

13. காலங் கூறி வரைவு கடாதல்
மையார் கதலி வனத்து வருக்கைப் பழம்விழுதேன்
எய்யா(து) அயின்றன மந்திகள் சோரும் இருஞ்சிலம்பா
மெய்யா அரியதென் அம்பலத் தான்மதி யூர்கொள் வெற்பின்
மொய்யார் வளரிள வேங்கைபொன் மாலையின் முன்னினவே. .. 262

முந்திய பொருளைச் சிந்தையில் வைத்து
வரைதரு கிளவியில் தெரிய உரைத்தது.

14. கூறுவிக் குற்றல்
தேமாம் பொழில்தில்லைச் சிற்றம் பலத்துவிண் ணோர்வணங்க
நாமா தரிக்க நடம்பயில் வோனைநண் ணாதவரின்
வாமாண் கலைசெல்ல நின்றார் கிடந்தநம் அல்லல்கண்டால்
தாமா அறிகில ராயின்என்னாம் சொல்லும் தன்மைகளே. .. 263

ஒத்த(து) ஒவ்வா(து) உரைத்த தோழி
கொத்தவிழ் கோதையால் கூறுவிக் குற்றது.

15. செலவு நினைந்து உரைத்தல்
வல்சியின் எண்கு வளர்புற்(று) அகழமல் கும்இருள்வாய்ச்
செல்(வு)அரி தன்றுமன் சிற்றம் பலவரைச் சேரலர்போல்
கொல்கரி சீயங் குறுகா வகைபிடி தானிடைச்செல்
கல்லதர் என்வந்த வாறென் பவர்ப்பெறின் கார்மயிலே. .. 264

பாங்கி நெருங்கப் பணிமொழி மொழிந்து
தேங்கமழ் சிலம்பற்குச் சிறைபுறக் கிளவி.

16 பொலிவழிவு உரைத்து வரைவு கடாதல்
வாரிக் களிற்றின் மருப்புகு முத்தம் வரைமகளிர்
வேரிக்(கு) அளிக்கும் விழுமலை நாட விரிதிரையிண்
நாரிக்(கு) அளிக்கமர் நன்மாச் சடைமுடி நம்பர்தில்லை
ஏரிக் களிக்கரு மஞ்ஞைஇந் நீர்மைஎன் எய்துவதே. .. 265

வரைவு விரும்பு மன்னுயிர்ப் பாங்கி
விரைதரு குழலி மெலிவு ரைத்தது.
-----------------------Back to thirukovaiyar Page
Back to 8th thirumuRai Page
Back to thirumuRai Home Page
Back to Shaiva Sidhdhantha Home Page