Kovai of Manikkavachakar (Thiruchitrambalakkovaiyar)
(in Tamil Script, unicode format)

திருக்கோவையார் (திருச்சிற்றம்பலக் கோவையார்)
(மாணிக்க வாசகர் அருளியது)


பதின்மூன்றாம் அதிகாரம்
13. பகற்குறி

பேரின்பக் கிளவி
பகற்குறித் துறைமுப் பதினோ(டு) இரண்டு
இயற்கைபோல் சிவத்தோ(டு) இயலுறுக் கூட்டிப்
பிரித்த அருளின் பெரும்பகற் குறியே.

1. குறியிடங் கூறல்
வானுழை வாள்அம்ப லத்தரன் குன்றென்று வட்கிவெய்யோன்
தானுழை யாஇரு ளாய்ப்புற நாப்பண்வண் தாரகை போல்
தேனுழை நாக மலர்ந்து திகழ்பளிங் கான்மதியோன்
கானுழை வாழ்வுபெற் றாங்கெழில் காட்டுமொர் கார்ப்பொழிலே. .. 116

வாடிடத்(து) அண்ணல் வண்தழை எதிர்ந்தவள்
ஆடிடத்(து) இன்னியல்(பு) அறிய உரைத்தது.

2. ஆடிடம் படர்தல்
புயல்வளர் ஊசல்முன் ஆடிப்பொன் னேபின்னைப் போய்ப்பொலியும்
அயல்வளர் குன்றில்நின் றேற்றும் அருவி திருவுருவில்
கயல்வளர் வாட்கண்ணி போதரு காதரம் தீர்த்தருளும்
தயல்வளர் மேனியன் அம்பலத் தான்வரைத் தண்புனத்தே. .. 117

வண்தழை எதிர்த்த ஒண்டொடிப் பாங்கி
நீடமைத் தோளியொ(டு) ஆடிடம் படர்ந்தது.

3. குறியிடத்துக் கொண்டு சேறல்
தினைவளங் காத்துச் சிலம்பெதிர் கூஉய்ச்சிற்றில் முற்றிழைத்துச்
கனைவளம் பாய்ந்து துணைமலர் கொய்து தொழுதெழுவர்
வினைவளம் நீறெழ நீறணி அம்பல வன்தன்வெற்பில்
புனைவளர் கொம்பர்அன் னாய்அன்ன காண்டும் புனமயிலே. .. 118

அணிவளர் ஆடிடத்(து) ஆய வெள்ளம்
மணிவளர் கொங்கையை மருங்குஅ கன்றது.

4. இடத்துய்த்து நீங்கல்
நரல்வேய் இனநின தோட்(டு)உடைந்(து) உக்கநன் முத்தம்சிந்திப்
பரல்வேய் அறையுறைக் கும்பஞ் சடிப்பரன் தில்லையன்னாய்
வரல்வேய் தருவன்இங் கேநில்உங் கேசென்றுன் வார்குழற்(கு)ஈர்ங்
குரல்வேய் அளிமுரல் கொங்கார் தடமலர் கொண்டுவந்தே. .. 119

மடத்தகை மாதரை இடத்தகத்து உய்த்து
நீங்கல் உற்ற பாங்கி பகர்ந்தது.

5. உவந்துரைத்தல்
படமா கணப்பள்ளி இக்குவ டாக்கியப் பங்கயக்கண்
நெடுமால் எனஎன்னை நீநினைந் தோநெஞ்சத் தாமரையே
இடமா இருக்கலுற் றோதில்லை நின்றவன் ஈர்ங்கயிலை
வடமார் முலைமட வாய்வந்து வைஇற்றுஇவ் வார்பொழிற்கே. .. 120

களிமயிற் சாயலை ஒருசிறைக் கண்ட
ஒளிமலர்த் தாரோன் உவந்துரைத்தல். 5

16. மருங்கணைதல்
தொத்தீன் மலர்ப்பொழில் தில்லைத்தொல் லோன்அருள் என்னமுன்னி
முத்தீன் குவளைமென் காந்தளின் மூடித்தன் ஏர்அளப்பான்
ஒத்(து)ஈர்ங் கொடியின் ஒதுங்குகின் றாள்மருங் குல்நெருங்கப்
பித்தீர் பணைமுலை காள்என்னுக்கு இன்னும் பெருக்கின்றதே. .. 121

வாணுதல் அரிவை நாணுதல் கண்ட
கோதை வேலவன் ஆதர வுரைத்தது.

7. பாங்கியறிவுரைத்தல்
அளிநீ(டு) அளகத்தின் அட்டிய தாதும் அணியணியும்
ஒளிநீள் கரிகுழல் சூழ்ந்தஒண் மாலையும் தண்நறவுண்
களிநீ யெனச்செய் தவன்கடல் தில்லையன் னாய்கலங்கல்
தெளிநீ அனையபொன் னேபண்ணு கோலம் திருநுதலே. .. 122

நெறி குழற் பாங்கி அறிவறி வித்தது.

8. உண்மகிழ்ந்துரைத்தல்
செழுநீர் மதிக்கண்ணிச் சிற்றம் பலவன் திருக்கழலே
கெழுநீர் மையில்சென்று கிண்கிணி வாய்க் கொள்ளும் கள்ளகத்த
கழுநீர் மலரிவள் யானதன் கண்மரு விப்பிரியாக்
கொழுநீர் நறப்பரு கும்பெரு நீர்மை அளிகுவமே. .. 123

தண்மலர்க் கோதையை
உண்மகிழ்ந்(து) உரைத்தது.

9. ஆயத்து உய்த்தல்
கொழுந்தா ரகைமுகை கொண்டலம் பாசடை விண்மடுவில்
எழுந்தார் மதிக்கம லம்எழில் தந்தென இப்பிறப்பில்
அழுந்தா வகையெனை ஆண்டவன் சிற்றம் பலம்அனையாய்
செழுந்தா(து) அவிழ்பொழில் ஆயத்துச் சேர்க் திருத்தகவே. .. 124

கனைகடல் அன்ன கார்மயில் கணத்துப்
புனைமட மானைப் புகவிட்டது.

10. தோழி வந்து கூடல்
பொன்அனை யான்தில்லைப் பொங்கர வம்புன் சடைமிடைந்த
மின்னனை யான்அருள் மேலவர் போன்மெல் விரல் வருந்த
மென்னனை யாய்மறி யேபறி யேல்வெறி யார்மலர்கள்
இன்னன யான்கொணர்ந் தேன்மணந் தாழ்குழற்(கு) ஏய்வனவே. .. 125

நெறியுறு குழலியை நின்றிடத்(து) உய்த்துப்
பிறைநுதற் பாங்கி பெயர்ந்தவட்(கு) உரைத்தது.

11. ஆடிடம் புகுதல்
அறுகால் நிறைமலர் ஐம்பால் நிறையணிந் தேன் அணியார்
துறுகான் மலர்த்தொத்துத் தோகைதொல் லாயம்மெல் லப்புகுக
சிறுகால் மருங்குல் வருந்தா வகைமிக என்சிரத்தின்
உறுகால் பிறர்க்(கு)அரி யோன்புலி யூரன்ன ஒண்ணுதலே. .. 126

தனிவிளை யாடிய தாழ்குழல் தோழி
பனிமதி நுதலியொ(டு) ஆடிடம் படர்ந்தது.

12. தனிகண்டு உரைத்தல்
தழங்கும் அருவிஎம் சீறூர் பெரும இதுமதுவும்
கிழங்கும் அருந்தி இருந்(து) எம்மோ(டு) இன்று கிளர்ந்துகுன்றர்
முழங்கும் குரவை இரவிற்கண்(டு) ஏகுக முத்தன்முத்தி
வழங்கும் பிரான்எரி யாடிதென் தில்லை மணிநகர்க்கே. .. 127

வேயொத்த தோளியை ஆயத்து உயத்துக்
குனிசிலை அண்ணலைத் தனிகண்(டு) உரைத்தது.

13. பருவங் கூறி வரவு விலக்கல்
தள்ளி மணிசிந்தம் உந்தித் தறுகண் கரிமருப்புத்
தெள்ளி நறவம் திசைதிசை பாயும் மலைச்சிலம்பா
வெள்ளி மலையன்ன மால்விடை யோன்புலி யூர்விளங்கும்
வள்ளி மருங்குல் வருத்துவ போன்ற வனமுலையே. .. 128

மாந்தளிர் மேனியை வரைந்(து) எய்தா(து)
ஏந்தல் இவ்வா(று) இயங்கல் என்றது. 13

14. வரைவு உடம்படாது மிகுத்துக் கூறல்
மாடஞ்செய் பொன்னக ரும்நிக ரில்லைஇம் மாதர்க்கென்னப்
பீடஞ்செய் தாமரை யோன்பெற்ற பிள்ளையை உள்ளவரைக்
கீடஞ்செய் தென்பிறப் புக்கெடத் தில்லைநின் றோன்கயிலைக்
கூடஞ்செய் சாரல் கொடிச்சியென் றோநின்று கூறுவதே. .. 129

வரைவு கடாய வாணுதல் தோழிக்கு
விரைமலர்த் தாரோன் மிகுத்துரைத்தது.

15. உண்மை கூறி வரைவு கடாதல்
வேய்தந்த வெண்முத்தம் சிந்துபைங் கார்வரை மீன்பரப்பிச்
சேய்தந்த வானக மானும் சிலம்பதன் சேவடிக்கே
ஆய்தந்த அன்புதந் தாட்கொண்ட அம்பல வன்மலையில்
தாய்தந்தை கானவர் ஏனல்எங் காவல்இத் தாழ்வரையே. .. 130

கல்வரை நாடன் இல்ல(து) உரைப்ப
ஆங்கவள் உண்மை பாங்கி பகர்ந்தது.

16. வருத்தங் கூறி வரைவு கடாதல்
மன்னும் திருவருந் தும்வரை யாவிடின் நீர்வரைவென்(று)
உன்னும் அதற்குத் தளர்ந்தொளி வாடுதிர் உம்பரெலாம்
பன்னும் புகழ்ப்பர மன்பரஞ் சோதிசிற் றம்பலத்தான்
பொன்னங் கழல்வழுத் தார்புலன் என்னப் புலம்புவனே. .. 131

கினங்குழை முகத்தவள் மனங்குழை வுணர்த்தி
நிரைவளைத் தோளி வரைவு கடாயது.

17. தாய் அச்சங்கூறி வரைவு கடாதல்
பனித்துண்டம் சூடும் படர்சடை அம்பல வன்உலகம்
தனித்துண் டவன்தொழும் தாளோன் கயிலைப் பயில்சிலம்பா
கனித்தொண்டை வாய்ச்சி கதிர்முலைப் பாரிப்புக் கண்டழிவுற்(று)
இனிக்கண் டிலம்பற்றுச் சிற்றிடைக்(கு) என்றஞ்சும் எம்அனையே. .. 132

மடத்தகை மாதர்க்கு அடுப்பன அறியா
வேற்கண் பாங்கி ஏற்க உரைத்தது.

18. இற்செறி அறிவித்து வரைவு கடாதல்
ஈவிளை யாட நறவிளை(வு) ஓர்ந்தெமர் மால்பியற்றும்
வேய்விளை யாடும்வெற் பாவுற்று நோக்கிஎம் மெல்லியலைப்
போய்விளை யாடல்என் றாள்அன்னை அம்பலத் தான்புரத்தில்
தீவிளை யாட நின் றேவிளை யாடி திருமலைக்கே. .. 133

விற்செறி நுதலியை இற்செறி உரைத்தது.

19. தமர் நினைவு உரைத்து வரைவு கடாதல்
சுற்றும் சடைக்கற்றைச் சிற்றம் பலவன் தொழாதுதொல்சீர்
கற்றும் அறியல ரின்சிலம் பாஇடை நைவதுகண்(டு)
எற்றும் திரையின் அமிர்தை இனித்தமர் இற்செறிப்பார்
மற்றும் சிலபல சீறூர் பகர்பெரு வார்த்தைகளே. .. 134

விற்செறி நுதலியை இற்செறி விப்பரென்(று)
ஒளிவே லவற்கு வெளியே உரைத்தது.

20. எதிர்கோள் கூறி வரைவு கடாதல்
வழியும் அதுஅன்னை என்னின் மகிழ்வும்வந்(து) எந்தையும்நின்
மொழியின் வழிநிற்கும் சுற்றம்முன்னேவயம் அம்பலத்துக்
குழிஉம்பர் ஏத்தும்எம் கூத்தன்குற் றாலமுற் றும்அறியக்
கெழி உம்ம வேபணைத் தோள்பல என்னோ கிளக்கின்றதே. .. 135

ஏந்திழைத் தோழி ஏந்தலை முன்னிக்
கடியா மாறு நொடிதுஏ(கு) என்றது.

21. ஏறுகோள் கூறி வரைவு கடாதல்
படையார் கருங்கண்ணி வண்ணப் பயோதரப் பாரமும் நுண்
இடையார் மெலிவுகண்(டு) அண்டர்கள் ஈர்முல்லை வேலிஎம்முர்
விடையார் மருப்புத் திருத்திவிட் டார்வியன் தென்புலியூர்
உடையார் கடவி வருவது போலும் உருவினதே. .. 136

என்னையர் துணிவு இன்ன(து) என்றது.

22. அயல் உரை உரைத்து வரைவு கடாதல்
உருப்பனை அன்னகைக் குன்றொன்(று) உரித்(து)உர ஊர்எரித்த
நெருப்பனை அம்பலத்(து) ஆதியை உம்பர்சென்(று) ஏத்திநிற்கும்
திருப்பனை யூர்அனை யாளைப்பொன் னாளைப் புனைதல் செப்பிப்
பொருப்பனை முன்னின்(று) என் னோவினை யேன்யான் புகல்வதுவே. .. 137

கயல்புரை கண்ணியை அயலுரை உரைத்தது.

23. தினை முதிர்வு வரைவு கடாதல்
மாதிடம் கொண்(டு)அம் பலத்துநின் றோன்வட வான்கயிலைப்
போதிடம் கொண்டபொன் வேங்கை தினைப்புனம் கொய்கஎன்று
தாதிடம் கொண்டுபொன் வீசித்தன் கள்வாய் சொரியநின்று
சோதிடம் கொண்(டு)இதுஎம் மைக்கெடு வித்தது தூமொழியே. .. 138

ஏனல் விளையாட்(டு) இனிஇல் லையென
மானல் தோழி மடந்தைக்(கு) உரைத்தது.

24. பகல் வரல் விலக்கி வரைவு கடாதல்
வடிவார் வயல்தில்லை யோன்மல யத்துநின் றும்வருதேன்
கடிவார் களிவண்டு நின்றலர் தூற்றப் பெருங்கணியார்
நொடிவார் நமக்கினி நோதக யான்உமக்(கு) என்னுரைக்கேன்
தடிவார் தினைஎமர் காவேம் பெருமஇத் தண்புனமே. .. 139

அகல்வரை நாடனைப் பகல்வரல் என்றது.

25. தினையொடு வெறுத்து வரைவு கடாதல்
நினைவித்துத் தன்னைஎன் நெஞ்சத்து இருந்(து)அம் பலத்துநின்று
புனைவித்த ஈசன் பொதியின் மலைப்பொருப் பன்விருப்பில்
தினைவித்திக் காத்துச் சிறந்துநின் றேமுக்குச் சென்றுசென்று
வினைவித்திக் காத்து விளைவுண்ட தாகி விளைந்ததுவே. .. 140

தண்புனத் தோடு தளர்வுற்றுப்
பண்புனை மொழிப் பாங்கி பகர்ந்தது.

26. வேங்கையொடு வெறுத்து வரைவு கடாதல்
கனைகடற் செய்தநஞ் சுண்டுகண் டார்க்(கு)அம் பலத்(துஐ அமிழ்தாய்
வினைகெடச் செய்தவன் விண்தோய் கயிலை மயிலனையாய்
நனைகெடச் செய்தனம் ஆயின் நமைக்கெடச் செய்திடுவான்
தினைகெடச் செய்திடு மாறும்உண் டோஇத் திருக்கணியே. .. 141

நீங்குக இனிநெடுந் தகையென
வேங்கை மேல்வைத்து விளம்பியது

27. இரக்கமுற்று வரைவு கடாதல்
வழுவா இயல்எம் மலையர் விதைப்பமற்(று) யாம் வளர்த்த
கொழுவார் தினையின் குழாங்கள்எல் லாம்எம் குழாம்வணங்கும்
செழுவார் கழல்தில்லைச் சிற்றம் பலவரைச் சென்றுநின்று
தொழுவார் வினைநிற்கி லேநிற்ப தாவ(து)இத் தொல்புனத்தே. .. 142

செழுமலை நாடற்குக் கழுமலுற்(று) இரங்கியது.

28. கொய்தமை கூறி வரைவு கடாதல்
பொருப்பர்க்(கு) யாம் ஒன்று மாட்டோம் புகலப் புகல்எமக்காம்
விருப்பர்க்(கு) யாவர்க்கும் மேலவர்க்கு மேல்வரும் ஊர்எரித்த
நெருப்பர்க்கு நீ(டு)அம் பலவருக்(கு) அன்பர் குலநிலத்துக்
கருப்பற்று விட்டெனக் கொய்தற்ற தின்றிக் கடிப்பினமே. .. 143

நீடிரும் புனத்தினி ஆடேம் என்று
வரைவு தோன்ற வுரைசெய்தது.

29. பிரிவு அருமை கூறி வரைவு கடாதல்
பரிவுசெய்(து) ஆண்(டு)அம் பலத்துப் பயில்வோன் பரங்குன்றின்வாய்
அருவிசெய் தாழ்புனத்(து) ஐவனம் கொய்யவும் இவ்வனத்தே
பிரிவுசெய் தால்அரி தேகொள்க போயொடும் என்றும்பெற்றி
இருவிசெய் தாளின் இருந்(து)இன்று காட்டும் இளங்கிளியே. .. 144

மறைப்புறக் கிளவியின் சிறைப்புறத்(து) உரைத்தது.

30. மயிலொடு கூறி வரைவு கடாதல்
கணியார் கருத்தின்று முற்றிற்று யாம்சென்றும் கார்ப்புனமே
மணியார் பொழில்காள் மறத்திற்கண் டீர்மன்னும் அம்பலத்தோன்
அணியார் கயிலை மயில்காள் அயில்வேல் ஒருவர்வந்தால்
துணியா தனதுணிந் தார்என்னும் நீர்மைகள் சொல்லுமினே. .. 145

நீங்கரும் புனம்விடு நீள்பெருந் துயரம்
பாங்கி பகர்ந்து பருவரல் உற்றது.

31. வறும்புனம் கண்டு வருந்தல்
பொதுவினில் தீர்த்(து)என்னை யாண்டோன் புலியூர் அரன்பொருப்பே
இதுவெனில் என்னின்(று) இருக்கின்ற வா(று)எம் இரும்பொழிலே
எதநுமக்(கு)எய்திய(து) என்உற் றனிர்அறை ஈண்டருவி
மதுவினில் கைப்புவைத் தாலொத்த வாமற்(று)இவ் வான்புனமே. .. 146

மென்புனம் விடுத்து மெல்லியல் செல்ல
மின்பொலி வேலோன் மெலிவுற்றது.

32. பதி நோக்கி வருந்தல்
ஆனந்த மாக்கடல் ஆடுசிற் றம்பலம் அன்னபொன்னின்
தேனுந்து மாமலைச் சீறூர் இதுசெய்ய லாவதில்லை
வானுந்து மாமதி வேண்டி அழும்மழப் போலுமன்னோ
நானுந் தளர்ந்தனன் நீயும் தளர்ந்தனை நன்னெஞ்சமே. .. 147

மதிநுதல் அரிவை பதிபுகல் அரிதென
மதிநனி கலங்கிப் பதிமிக வாடியது.
------------------------------

பதினென்காம் அதிகாரம்
14. இரவுக் குறி

பேரின்பக் கிளவி
இரவுக் குறித்துறை முப்பத்திமூன்றும்
அருளே சிவத்தோ(டு) ஆக்கியல் அருமை
தெரியவற் புறுத்திச் சிவனது கருணையின்
இச்சை பலவும் எடுத்தெடுத்(து) அருளல்.

1. இரவுக் குறி வேண்டல்
மருந்துநம் அல்லற் பிறவிப் பிணிக்(குஅம் பலத்(து)அமிர்தாய்
இருந்தனர் குன்றின்நின்(று) ஏங்கும் அருவிசென்(று) ஏர்திகழப்
பொருந்தின மேகம் புதைத்திருள் தூங்கும் புனை இறும்பின்
விருந்தின் யான்உங்கள் சீறூர் அதனுக்கு வெள்வளையே. .. 148

நள்ளிருள் குறியை வள்ளல் நினைந்து
வீங்கு மென்முலைப் பாங்கிற்(கு) உரைத்தது.

2. வழியருமை கூறி மறுத்தல்
விசும்பினுக்(கு) ஏணி நெறியன்ன சின்னெறி மேல்மழைதூங்(கு)
அசும்பினில் துன்னி அளைநுழைந் தால் ஒக்கும் ஐயமெய்யே
இசும் பினில் சிந்தைக்கும் ஏறற்(கு) அரி(து)எழில் அம்பலத்துப்
பசும்பனிக் கோடு மிலைந்தான் மலயத்(து)எம் வாழ்பதியே .. 149

இரவரல் ஏந்தல் கருதி உரைப்பப்
பருவரல் பாங்கி அருமை உரைத்தது.

3. நின்று நெஞ்சுடைதல்
மாற்றேன் எனவந்த காலனை ஓலம் இடஅடர்த்த
கோலதேன் குளிர்தில்லைக் கூத்தன் கொடுங்குன்றின் நீள்குடுமி
மேல்தேன் விரும்பும் முடவனைப் போல மெலியும் நெஞ்சே
ஆற்றேன் அரிய அரிவைக்கு நீவைத்த அன்பினுக்கே. .. 150

பாங்கி விலங்கப் பருவரை நாடன்
நீங்கி விலங்காது நெஞ்சு டைந்தது.

4. இரவுக்குறி நேர்தல்
கூளி நிரைக்கநின்(று) அம்பலத்(து) ஆடி குறைகழற்கீழ்த்
தூளி நிறைத்த சுடர்முடி யோஇவள் தோள்நசையால்
ஆளி நிரைத்தடல் ஆனைகள் தேரும் இரவில்வந்து
மீளி யுரைத்தி வினையேன் உரைப்பதென் மெல்லியற்கே. .. 151

தடவரை நாடன் தளர்வு தீர
மடநடைப் பாங்கி வகுத்துரைத்தது.

5. உட்கோள் வினாதல்
வரையன்(று) ஒருகால் இருகால் வளைய நிமிர்ந்துவட்கார்
நிரையன்(று) அழல்எழ எய்துநின் றோன்தில்லை அன்னநின்னூர்
விரையென்ன மென்னிழல் என்ன வெறியறு தாதிவர்போ(து)
உரையென்ன வோசிலம் பாநலம் பாவி ஒளிர்வனவே. .. 152

நெறி விலக்(கு) உற்றவன் உறுதுயர் நோக்கி
யாங்கொரு சூழல் பாங்கி பகர்ந்தது.

6. உட்கொண்டு வினாதல்
செம்மலர் ஆயிரம் தூய்க்கரு மால்திருக் கண்அணியும்
மொய்ம்மலர் ஈர்ங்கழல் அம்பலத் தோன்மன்னு தென்மலயத்(து)
எம்மலர் சூடிநின்(று) எச்சாந்(து) அணிந்(து)என்ன நன்னிழல்வாய்
அம்மலர் வாட்கண்நல் லாய்எல்லி வாய்நுமர் ஆடுவதே. .. 153

தன்னை வினவத் தான்அவள் குறிப்பறிந்(து)
என்னை நின்னாட்(டு) இயல்அணி என்றது.

7. குறியிடங்கூறல்
பனைவளர் கைம்மாப் படாத்(து)அம் பலத்தரன் பாதம்விண்ணோர்
புனைவளர் சாரல் பொதியின் மலைப்பொலி சந்தணிந்து
கனைவளர் காவிகள் சூடிப்பைந் தோகை துயில்பயிலும்
சினைவளர் வேங்கைகள் யாங்கள்நின்(று) ஆடும் செழும்பொழிலே. .. 154

இரவுக் குறியிவண் என்று பாங்கி
அரவக் கழலவற்(கு) அறிய வுரைத்தது.

8. இரவுக் குறி ஏற்பித்தல்
மலவன் குரம்பையை மாற்றிஅம் மால்முதல் வானர்க்(கு) அப்பால்
செலஅன்பர்க்(கு) ஒக்கும் சிவன்தில்லைக் கானலிற் சீர்ப்பெடையோ(டு)
அலவன் பயில்வது கண்(டு)அஞர் கூர்ந்(து)அயில் வேல்உரவோன்
செலஅந்தி வாய்க்கண் டனன்என்ன(து) ஆங்கொல்மன் சேர்துயிலே. .. 155

அரவக் கழலவன் ஆற்றானென
இரவுக் குறி ஏற்பித்தது.

9. இரவரவு உரைத்தல்
மோட்டங் கதிர்முலைப் பங்குடைத் தில்லைமுன் னோன்கழற்கே
கோட்டந் தரும்நம் குருமுடி வெற்பன் மழைகுழுமி
நாட்டம் புதைத்தன்ன நள்ளிருள் நாகம் நடுங்கச் சிங்கம்
வேட்டம் திரிசரி வாய்வரு வான்சொல்லு மெல்லியலே. .. 156

குருவரு குழலிக்(கு) இரவர வுரைத்தது.

10. ஏதங்கூறி மறுத்தல்
செழுங்கார் முழவதிர் சிற்றம் பலத்துப் பெருந்திருமால்
கொழுங்கான் மலரிடக் கூத்தயர் வோன்கழல் ஏத்தலர்போல்
முழங்கார் அரிமுரண் வாரண வேட்டைசெய் மொய்இருள்வாய்
வழங்கா அதரின் வழங்கென்று மோஇன்(று)எம் வள்ளலையே. .. 157

இழுக்கம் பெரி(து)இர வரின்என
அழுக்கம் எய்தி அரிவை உரைத்தது.

11. குறை நேர்தல்
ஓங்கும் ஒருவிடம் உண்(டு)அம் பலத்(து)உம்பர் உய்யஅன்று
தாங்கும் ஒருவன் தடவரை வாய்த்தழங் கும்அருவி
வீங்கும் கனைபுனல் வீழ்ந்(து)அன்(று) அழங்கப் பிடித்தெடுத்து
வாங்கும் அவர்க்(கு)அறி யேன்சிறி யேன்சொல்லும் வாசகமே. .. 158

அலைவேல் அண்ணல் நிலைமை கேட்டு
கொலைவேற் கண்ணி குறைந யந்தது.

12. குறை நேர்ந்தமை கூறல்
ஏனற் பசுங்கதிர் என்றூழ்க் கழிய எழிலியுன்னிக்
கானக் குறவர்கள் கம்பலை செய்யும்வம் பார்சிலம்பா
யான்இற்றை யாமத்து நின்னருள் மேல்நிற்க லுற்றுச் சென்றேன்
தேனக்க கொன்றையன் தில்லை யுறார்செல்லும் செல்லல்களே. .. 159

குறைந யந்தனள் நெறிகு ழலியென
எறிவேல் அண்ணற்(கு) அறிய உரைத்தது.

13. வரவுணர்ந்து உரைத்தல்
முன்னும் ஒருவர் இரும்பொழில் மூன்றற்கு முற்றும்இற்றால்
பின்னும் ஒருவர்சிற் றம்பலத் தார்தரும் பேரருள்போல்
துன்னுமோர் இன்பம்என் தோகைதம் தோகைக்குச் சொல்லுவபோல்
மன்னும் அரவத்த வாய்த்துயில் பேரும் மயிலினமே. .. 160

வளமயில் எடுப்ப இளமயிற் பாங்கி
செருவேல் அண்ணல் வரவு ரைத்தது.

14. தாய் துயில் அறிதல்
கூடார் அரண்எரி கூடக் கொடுஞ்சிலை கொண்டஅண்டன்
சேடார் மதின்மல்லல் தில்லைஅன் னாய்சிறு கண்பெருவெண்
கோடார் கரிகுரு மாமணி ஊசலைக் கோப்பழித்துத்
தோடார் மதுமலர் நாகத்தை நூக்குநம் சூழ்பொழிற்கே. .. 161

ஊசல் மிசைவைத்(து) ஒள்அ மளியில்
தாய துதுயில் தான் அறிந்தது.

15. துயிலெடுத்துச் சேறல்
விண்ணுக்கு மேல்வியன் பாதலக் கீழ்விரி நீர்உடுத்த
மண்ணுக்கு நாப்பண் நயந்துதென் தில்லைநின் றோன் மிடற்றின்
வண்ணக் குவளை மலர்க்கின் றனசிவ வாண்மிளிர்நின்
கண்ணோர்க்கு மேற்கண்டு காண்வண்டு வாழும் கருங்குழலே. .. 162

தாய்துயில் அறிந்(து)ஆய் தருபவள்
மெல்லியற்குச் சொல்லியது.

14. இடத்துய்த்து நீங்கல்
நந்தீ வரமென்னும் நாரணன் நாண்மலர்க் கண்ணிற்(கு) எ·கம்
தந்தீ வரன்புலி யூரன்ன யாய்தடங் கண்கடந்த
இந்தீ வரமிவை காணின் இருள்சேர் குழற்கெழில்சேர்
சந்தீ வரமுறி யும்வெறி வீயும் தருகுவனே. .. 163

மைத்தடங் கண்ணியை உய்த்திடத்து ஒருபால்
நீங்கல் உற்ற பாங்கி பகர்ந்தது.

17. தளர்வகன்று உரைத்தல்
காமரை வென்றகண் ணோன்தில்லைப் பல்கதி ரோன்அடைத்த
தாமரை இல்லின் இதழ்க்கத வம்திறந் தோதமியே
பாமரை மேகலை பற்றிச் சிலம்பொதுக் கிப்பையவே
நாமரை யாமத்(து)என் னோவந்து வைகி நயந்ததுவே. .. 164

வடுவகிர் அனைய வரிநெடுங் கண்ணியைத்
நடுவரி அன்பொடு தளர்வகன்(று) உரைத்தது.

18. மருங்கணைதல்
அகலின் புகைவிம்மி ஆய்மலர் வேய்ந்(து)அஞ் சனம்எழுதத்
தகிலும் தனிவடம் பூட்டத் தகாள்சங் கரன்புலியூர்
இகலும் அவரில் தளரும்இத் தேம்பல்இடைஞெமியப்
புகலும் மிகஇங்ங னேயிறு மாக்கும் புணர்முலையே. .. 165

அன்பு மிகுதியின் அளவளாய் அவளைப்
பொன்புனை வேலோன் புகழ்ந்துரைத்தது.

19. முகங்கொண்டு மகிழ்தல்
அழுந்தேன் நரகத்து யானென்(று) இருப்பவந்(து) ஆண்டுகொண்ட
செழுந்தேன் திகழ்பொழில் தில்லைப் புறவில் செறுவகத்த
கொழுந்தேன் மலர்வாய்க் குமுதம் இவள்யான் குருஉச்சுடர்கொண்(டு)
எழுந்(து)ஆங் கதுமலர்த் தும்உயர் வானத்(து) இளமதியே. .. 166

முகையவிழ் குழலி முகமதி கண்டு
திகழ்வேல் அண்ணல் மகிழ்வுற்றது.

20. பள்ளியிடத்து உய்த்தல்
கரும்புறு நீலம் கொய்யல் தமிநின்று துயில்பயின்மோ
அரும்பெறல் தோழியொ(டு) ஆயத்து நாப்பண் அமரர்ஒன்னார்
இரும்புறு மாமதிப் பொன்இஞ்சி வெள்ளிப் புரிசையன்றோர்
துரும்புறச் செற்றகொற் றத்(து)எம் பிரான்தில்லைச் சூழ்பொழிற்கே. .. 167

பிரிவது கருதிய பெருவரை நாடன்
ஒள்ளிழைப் பாங்கியொடு பள்ளிகொள் கென்றது.

21. வரவு விலக்கல்
நற்பகல் சோமன் எரிதரு நாட்டத்தன் தில்லையன்ன
விற்பகைத்(து) ஓங்கும் புருவத்(து) இவளின் மெய்யேஎளிதே
வெற்பகச் சோலையின் வேய்வளர் தீச்சென்று விண்ணினின்ற
கற்பகச் சோலை கதுவுங்கல் நாடஇக் கல்லதரே. .. 168

தெய்வம் அன் னாளைத் திருந்(து)அமளி சேர்த்தி
மைவரை நாடனை வரவுவிலக் கியது.

22. ஆற்றாது உரைத்தல்
பைவாய் அரவுஅரை அம்பலத்(து) எம்பரன் பைங்கயிலைச்
செவ்வாய்க் கருங்கண் பெரும்பணைத் தோள்சிற் றிடைக்கொடியை
மொய்வார் கமலத்து முற்றிழை இன்றென்முன் னைத்தவத்தால்
இவ்வா(று) இருக்கும்என் றேநிற்ப(து) என்றும்என் இன்னுயிரே. .. 169

வரைவு கடாய வாணுதல்தோழிக்(கு)
அருவரை நாடன் ஆற்றா(து) உரைத்தது.

23. இரக்கங்கூறி வரைவு கடாதல்
பைவாய் அரவும் மறியும் மழுவும் பயின்மலர்க்கை
மொய்வார் சடைமுடி முன்னவன் தில்லையின் முன்னினக்கால்
செவ்வாய் கருவுயிர்ச் சேர்த்திச் சிறியாள் பெருமலர்க்கண்
மைவார் குவளை விடும்மன்ன நீண்முத்த மாலைகளே. .. 170

அதிர்க ழலவன் அகன்றவழி
எதிர்வ(து) அறியா(து) இரங்கி உரைத்தது.

24. நிலவு வெளிப்பட வருந்தல்
நாகம் தொழஎழில் அம்பலம் நண்ணி நடம்வில்வோன்
நாகம் இதுமதி யேமதி யேநவில் வேற்கைஎங்கள்
நாகம் வரஎதிர் நாங்கொள்ளும் நள்ளிருள் வாய்நறவார்
நாகம் மலிபொழில் வாயெழில் வாய்த்தநின் நாயகமே. .. 171

தனிவே லவற்குத் தந்தளர்(வு) அறியப்
பனிமதி விளக்கம் பாங்கி பகர்ந்தது.

25. அல்லகுறி அறிவித்தல்
மின்அங்(கு) அலரும் சடைமுடி யோன்வியன் தில்லையன்னாய்
என்அங்(கு) அலமரல் எய்திய தோஎழில் முத்தம்தொத்திப்
பொன்அங்(கு) அலர்புன்னைச் சேக்கையின் வாய்ப்புலம் புற்றுமுற்றும்
அன்னம் புலரும் அளவும் துயிலா(து) அழுங்கினவே. .. 172

வள்ளி யன்னவள் அல்ல குறிப்பொடு
அறைப்புனல் துறைவற்குச் சிறைப்புறத்(து) உரைத்தது.

26. கடலிடை வைத்துத் துயர் அறிவித்தல்
சோத்துன் அடியம் என் றோரைக் குழுமித்தொல் வானவர்சூழ்ந்(து)
ஏத்தும் படிநிற்ப வன்தில்லை யன்னாள் இவள்துவள
ஆர்த்துண் அமிழ்தும் திருவும் மதியும் இழந்தவம்நீ
பேர்த்தும் இரைப்பொழி யாய்பழி நோக்காய் பெருங்கடலே. .. 173

எறிகடல் மேல்வைத்து இரவரு துயரம்
அறைக ழலவற்(கு) அறிய உரைத்தது.

27. காமம் மிக்க கழிபடர் கிளவி
மாதுற்ற மேனி வரையுற்ற வில்லிதில் லைநகர்சூழ்
போதுற்ற பூம்பொழில் காள்கழி காள்எழிற் புள்ளினங்காள்
ஏதுற்(று) அழிதிஎன் னீர்மன்னும் ஈர்ந்துறை வர்க்(கு) இவளோ
தீதுற்ற(து) என்னுக்(கு)என் னீர்இது வோநன்மை செப்புமினே. .. 174

தாமம் மிக்க தாழ்குழல் ஏழை
காமம் மிக்க கழிபடர் கிளவி.

28. காப்புச் சிறைமிக்க கையறு கிளவி
இன்னற வார்பொழில் தில்லை நகரிறை சீர்விழவில்
பன்னிற மாலைத் தொகைபக லாம்பல் விளக்கிருளின்
துன்னற வுய்க்கும்இல் லோரும் துயிலில் துறைவர்மிக்க
கொன்னிற வேலொடு வந்திடின் ஞாளி குரை தருமே. .. 175

மெய்யறு காவலில் கையறு கிளவி.

29. ஆறுபார்த்துற்ற அச்சக் கிளவி
தாருறு கொன்றையன் தில்லைச் சடைமுடி யோன்கயிலை
நீருறு கான்யா(று) அளவில் நீந்திவந் தால்நினது
போருறு வேல்வயப் பொங்குரும் அஞ்சுகம் அஞ்சிவரும்
சூருறு சோலையின் வாய்வரற் பாற்றன்று தூங்கிருளே. .. 176

நாறு வார்குழல் நவ்வி நோக்கி
ஆறுபார்த் துற்ற அச்சக் கிளவி.

30. தன்னுள் கையாறு எய்திடு கிளவி
விண்டலை யாவர்க்கும் வேந்தர்வண் தில்லைமெல் லங்கழிசூழ்
கண்டலை யேகரி யாக்கன்னிப் புன்னைக் கலந்தகள்வர்
கண்டிலை யேவரக் கங்குல்எல் லாம்மங்குல் வாய்விளக்கும்
மண்டல மேபணி யாய்தமி யேற்கொரு வாசகமே. .. 177

மின்னுப் புரையும் அந்நுண் மருங்குல்
தன்னுட் கையாறு எய்திடு கிளவி.

31. நிலைகண்டு உரைத்தல்
பற்றொன்றி லார்பற்றும் தில்லைப் பரன்பரம் குன்றில்நின்ற
புற்றொன்று அரவன் புதல்வ னெனநீ புகுந்துநின்றால்
மற்றொன்று மாமலர் இட்டுன்னை வாழ்த்திவந் தித்திலன்றி
மற்றொன்று சிந்திப்ப ரேல்வல்ல ளோமங்கை வாழ்வகையே. .. 178

நின்னின் அழிந்தனள் மின்னிடை மாதென
வரைவு தோன்ற வுரை செய்தது.

32. இரவுறு துயரம் கடலொடு சேர்த்தல்
பூங்கணை வேளைப் பொடியாய் விழவிழித் தோன்புலியூர்
ஓங்கணை மேவிப் புரண்டு விழுந்தெழுந்(து) ஓலமிட்டுத்
தீங்கணைந் தோர்அல்லும் தேறாய் கலங்கிச் செறிகடலே
ஆங்கணைந் தார்நின்னை யும்உள ரோசென்(று) அகன்றவரே. .. 179

எறிவேற் கண்ணி இரவரு துயரம்
செறிக டலிடைச் சேர்த்தி யுரைத்தது.

33. அலர் அறிவுறுத்தல்
அலர்ஆ யிரம்தந்து வந்தித்து மால்ஆ யிரங்கரத்தால்
அலரார் கழல்வழி பாடுசெய் தாற்(கு)அள வில்ஒளிகள்
அலரா யிருக்கும் படைகொடுத் தோன்தில்லை யான்அருள்போன்(று)
அலராய் விளைகின்ற(து) அம்பல்கைம் மிக்(கு)ஐய மெய்யருளே. .. 180

அலைவேல் அண்ணல் மனம கிழருள்
பலரால் அறியப் பட்ட(து) என்றது.
-----------------------------

பதினைந்தாம் அதிகாரம்
15. ஒருவழித் தணத்தல்

பேரின்பக் கிளவி
ஒருவழித் தணத்தல் ஒருபதின் மூன்றும்
சிவனது கருணை அருள்தெரி வித்தது.

1. அகன்று அணைவு கூறல்
புகழும் பழியும் பெருக்கில் பெருகும் பெருகிநின்று
நிகழும் நிகழா நிகழ்த்தின்அல் லால்இது நீநினைப்பின்
அகழும் மதிலும் அணிதில்லை யோன்அடிப் போதுசென்னித்
திகழும் அவர்செல்லல் போலில்லை யாம்பழி சின்மொழிக்கே. .. 181

வழிவேறு படமன்னும் பழிவேறு படும்என்றது.

2. கடலொடு வரவு கேட்டல்
ஆரம் பரந்து திரைபொரு நீர்முகில் மீன்பரப்பிச்
சீரம் பரத்தின் திகழ்ந்தொளி தோன்றும் துறைவர்சென்றார்
போரும் பரிசு புகன்றன ரோபுலி யூர்ப்புனிதன்
சீரம்பல் சுற்றி எற்றிச் சிறந்தார்க்கும் செறிகடலே. .. 182

மணந்தவர் ஒருவழித் தணந்ததற்(கு) இரங்கி
மறிதிரை சேரும் எறிகடற்(கு) இயம்பியது.

3. கடலொடு புலத்தல்
பாணிகர் வண்டினம் பாடப்பைம் பொன்தரு வெண்கிழிதம்
சேணிகர் காவின் வழங்கும்புன் னைத்துறைச் சேர்ப்பர்திங்கள்
வாணிகர் வெள்வளை கொண்டகன் றார்திறம் வாய்திறவாய்
பூணிகர் வாளர வன்புலி யூர்சுற்றும் போர்க்கடலே. .. 183

செறிவளைச் சின்மொழி எறிகடற்(கு) இயம்பியது.

4. அன்னமோடு ஆய்தல்
பகன்தர மரைக்கண் கெடக்கடந் தோன்புலி யூர்ப்பழனத்(து)
அகன்தா மரையென்ன மேவண்டு நீல மணியணிந்து
முகன்தாழ் குழைச்செம்பொன் முத்தணி புன்னகையின் னும்உரையாது
அகன்றார் அகன்றே ஒழிவர்கொல் லோநம் அகன்துறையே. .. 184

மின்னடை மடந்தை அன்னமோ(டு) ஆய்ந்தது.

5. தேர்வழி நோக்கிக் கடலொடு கூறல்
உள்ளும் உருகி உரோமம் சிலிர்ப்ப உடையவன் ஆட்
கொள்ளும் அவரிலோர் கூட்டம்தந் தான்குனி கும்புலியூர்
விள்ளும் பரிசுசென் றார்வியன் தேர்வழி தூரல்கண்டாய்
புள்ளும் திரையும் பொரச்சங்கம் ஆர்க்கும் பொருகடலே. .. 185

மீன்தோய் துறைவர் மீளும் அளவும்
மான்தேர் வழியை அழியேல் என்றது.

6. கூடல் இழைத்தல்
ஆழி திருத்தும் புலியூர் உடையான் அருளின் அளித்(து)
ஆழி திருத்தும் மணற்குன்றின் நீத்தகன் றார்வருகென்(று)
ஆழி திருத்திச் சுழிக்கணக்(கு) ஓதிநை யாமல்ஐய
வாழி திருத்தித் தரக்கிற்றி யோஉள்ளம் வள்ளலையே. .. 186

நீடலந் துறையில் கூடல் இழைத்தது.

7. சுடரொடு புலம்பல்
கார்த்தரங் கம்திரை தோணி சுறாக்கடல் மீன்எறிவோர்
போர்த்த(ரு)அங் கம்துறைமானும் துறைவர்தம் போக்குமிக்க
தீர்த்தர்அங் கன்தில்லைப் பல்பூம் பொழிற்செப்பும் வஞ்சினமும்
ஆர்த்தர் அங் கம்செய்யு மால்உய்யு மா(று)என்கொல் ஆழ்சுடரே. .. 187

குணகடல் எழுசுடர் குடகடல் குளிப்ப
மணமலி குழலி மனம்புலம் பியது.

8. பொழுது கண்டு மயங்கல்
பகலோன் கரந்தனன் காப்பவர் சேயர்பற் றவர்க்குப்
புகலோன் புகுநர்க்குப் போக்கரி யோன்எவ ரும்புகலத்
தகலோன் பயில்தில்லைப் பைம்பொழிற் சேக்கைகள் நோக்கினவால்
அகலோங்(கு) இருங்கழி வாய்க்கொழு மீனுண்ட அன்னங்களே. .. 188

மயல்தரு மாலை வருவது கண்டு
கயல்தரு கண்ணி கவலை யுற்றது.

9. பறவையொடு வருந்தல்
பொன்னும் மணியும் பவளமும் போன்று பொலிந்திலங்கி
மின்னும் சடையோன் புலியூர் விரவா தவரினுள்நோய்
இன்னும் அறிகில வால்என்னை பாவம் இருங்கழிவாய்
மன்னும் பகலே மகிழ்ந்திரை தேரும்வண் டானங்களே. .. 189

செறிபிணி கைம்மிகச் சிற்றிடை பேதை
பறவைமேல் வைத்துப் பையுள்எய் தியது.

10. பங்கயத்தோடு பரிவுற்று உரைத்தல்
கருங்கழி காதல்பைங் கானவில் தில்லைஎம் கண்டர்விண்டார்
ஒருங்கழி காதர மூவெயில் செற்றஒற் றைச்சிலைசூழ்ந்(து)
அருங்கழி காதம் அகலும்என் றூழ்என்(று) அலந்துகண்ணீர்
வருங்கழி காதல் வனசங்கள் கூப்பும் மலர்க்கைகளே. .. 190

முருகவிழ் கானல் ஒடுபரி வுற்றது.

11 அன்னமோடு அழிதல்
மூவல் தழீஇய அருள்முத லோன்தில்லைச் செல்வன்முந்தீர்
நாவல் தழீஇயஇந் நானிலம் துஞ்சும் நயந்த இன்பச்
சேவல் தழீஇச்சென்று தான்துஞ்சும் யான்துயி லாச்செயிர்எம்
காவல் தழீஇயவர்க்(கு) ஓதா(து) அளிய களியன்னமே. .. 191

இன்ன கையவள் இரவரு துயரம்
அன்னத்தோ(டு) அழிந்துரைத்தது.

12. வரவு உணர்ந்து உரைத்தல்
நில்லா வளைநெஞ்சம் நெக்குரு கும்நெடுங் கண்துயிலது
கல்லா கதிர்முத்தம் காற்றும் எனக்கட் டுரைக்கதில்லைத்
தொல்லோன் அருள்களில் லாரிற்சென் றார்சென்ற செல்லல்கண்டாய்
எல்லார் மதியே இதுநின்னை யான்இன்(று) இரக்கின்றதே. .. 192

சென்றவர் வரவுணர்ந்து நின்றவள் நிலைமை
சிறப்புடைப் பாங்கி சிறைப்புறத்(து) உரைத்தது.

13. வருத்தமிகுதி கூறல்
வளரும் கறியறி யாமந்தி தின்றுமம் மர்க்(கு)இடமாய்த்
தளரும் தடவரைத் தண்சிலம் பாதன(து) அங்கம்எங்கும்
விளரும் விழும்எழும் விம்மும் மெலியும்வெண் மாமதிநின்(று)
ஒளிரும் சடைமுடி யோன்புலி யூர்அன்ன ஒண்ணுதலே. .. 193

நீங்கி அணைந்தவற்குப் பாங்கி பகர்ந்தது.
--------------------------Back to thirukovaiyar Page
Back to 8th thirumuRai Page
Back to thirumuRai Home Page
Back to Shaiva Sidhdhantha Home Page