Kovaiyar of MAnikkavasagar (Thiruchitrampalakkovaiyar)
(in Tamil Script, unicode format)

திருக்கோவையார் (திருச்சிற்றம்பலக் கோவையார்)
(மணிவாசகர் அருளியது)


ஏழாம் அதிகாரம்
7. குறையுற வுணர்தல்

நூற்பா
குறையற்று நிற்றல் அவன்குறிப்பு அறிதல்
அவள் குறிப்(பு) அறிதலோ(டு) அவர்நினை(வ) எண்ணல்
கூறிய நான்கும் குறையுற உணர்வெனத்
தேறிய பொருளிற் தெளிந்திசி னோரே.

பேரின்பக் கிளவி
குறையுற உணர்தல் துறைஒரு நான்கும்
உயிர்சிவத்(து) இடைசென்(று) ஒருப்படுந் தன்மை
பணியாற் கண்டு பரிவால் வினாயது.

1. குறையுற்று நிற்றல்
மடுக்கோ கடலின் விடுதிமில் அன்றி மறிதிரைமீன்
படுக்கோ பணிலம் பலகுளிக் கோபரன் தில்லைமுன்றில்
கொடுக்கோ வளைமற்று நும்ஐயர்க்(கு) ஆயகுற் றேவல் செய்கோ
தொடுக்கோ பணியீர் அணியீர் மலர்நும் கரிகுழற்கே. .. 63

கறையற்ற வேலவன் குறையுற்றது.

2. அவன் குறிப்பறிதல்
அளியமன் னும்மொன்று உடைத்(து) அண்ணல் எண்ணரன் தில்லையன்னாள்
கிளிமைமன்னுங்கடியச் செல்ல நிற்பின் கிளர்அளகத்(து)
அளியமர்ந்(து) ஏறின் வறிதே யிருப்பின் பளிங்கடுத்த
ஒளியமர்ந் தாங்கொன்று போன்றுறொன்று தோன்றும் ஒளிமுகத்தே. .. 64

பொற்றொடித் தோளிதன் சிற்றிடைப் பாங்கி
வெறிப்பூஞ் சிலம்பன் குறிப்ப றிந்தது.

3. அவள் குறிப்பறிதல்
பிழைகொண்(டு) ஒருவிக் கெடா(து)அன்பு செய்யின் பிறவியென்னும்
முழைகொண்(டு) ஒருவன்செல் லாமைநின்(று) அம்பலத்(து) ஆடுமுன்னோன்
உழைகொண்(டு) ஒருங்(கு)இரு நோக்கம் பயின்றஎம் ஒண்ணுதல்மாந்
தழைகொண்(டு) ஒருவன்என் னாமுன்னம் உள்ளம் தழைத்திடுமே. .. 65

ஆங்கவள் குறிப்புப் பாங்கி பகர்ந்தது.

4. இருவர் நினைவும் ஒருவழி உணர்தல்
மெய்யே இவற்(கு)இல்லை வேட்டையின் மேல்மனம் மீட்(டு) இவளும்
பொய்யே புனத்தினை காப்பது இறைபுலி யூர்அனையாள்
மையேர் குவளைக்கண் வண்டினம் வாழும்செந் தாமரைவாய்
எய்யேம் எனினும் குடைந்தின்பத் தேனுண்(டு) எழில்தருமே. .. 66

அன்புறு நோக்(கு) ஆங்கறிந்(து)
இன்புறு தோழி எண்ணியது.
-------------------

எட்டாம் அதிகாரம்
8. நாண நாட்டம்

பேரின்பக் கிளவி
நாண நாட்டத் துறையோர் ஐந்து
மருள சிவத்தை அதிசயத்(து) உயிரின்
பக்குவந் தன்னைப் பலவும் வியந்தது.

1. பிறை தொழுகென்றல்
மைவார் கருங்கண்ணி செங்கரம் கூப்பு மறந்துமற்றப்
பொய்வா னவரிற் புகாதுதன் பொற்கழற் கேயடியேன்
உய்வான் புகவொளிர் தில்லைநின் றோன்சடை மேல(து)ஒத்துச்
செவ்வான் அடைந்த பசுங்கதிர் வெள்ளைச் சிறுபிறைக்கே. .. 67

பிறைதொழு கென்று பேதை மாதரை
நறுநுதற் பாங்கி நாண நாட்டியது 1

2. வேறுபடுத்துக் கூறல்
அக்கின்ற வாமணி சேர்கண்டன் அம்பல வன்மலயத்து
இக்குன்ற வாணர் கொழுந்திச் செழுந்தண் புனமுடையாள்
அக்குன்ற ஆ(று)அமர்ந்(து) ஆடச்சென் றாள்அங்கம் அவ்அவையே
ஒக்கின்ற ஆரணங் கேஇணங் காகும் உனக்கவளே. .. 68

வேய்வளைத் தோளியை வேறு பாடுகண்(டு)
ஆய்வளைத் தோழி அணங்கென்றது.

3. கனையாடல் கூறி நகைத்தல்
செந்நிற மேனிவெண் ணீறணி வோன்தில்லை அம்பலம்போல்
அந்நிற மேனிநின் கொங்கையில் அங்கழி குங்குமமும்
மைந்நிற வார்குழல் மாலையும் தாதும் வளாய்மதஞ்சேர்
இந்நிற மும்பெறின் யானும் குடைவன் இருஞ்சுனையே. .. 69

மாண நாட்டிய வார்குழல் பேதையை
நாண நாட்டி நகைசெய்தது.

4. புணர்ச்சி உரைத்தல்
பருங்கண் கவர்கொலை வேழப் படையோன் படப்படர்தீத்
தருங்கண் ணுதல்தில்லை அம்பலத் தோன்தட மால்வரைவாய்க்
கருங்கண் சிவப்பக் கனிவாய் விளர்ப்பகண் ணார்அளிபின்
வருங்கண் மலைமலர் சூட்டவற் றோமற்றவ் வான்கனையே. .. 70

மணக்குறி நோக்கிப் புணர்ச்சி உரைத்தது.

5. மதியுடம் படுதல்
காகத்(து) இருகண் ணிற்(கு) ஒன்றே மணிகலந் தாங்(கு)இருவர்
ஆகத்து ளோர்உயிர் கண்டனம் யாமின்றி யாவையுமாம்
ஏகத்தொருவன் இரும்பொழில் அம்பல வன்மலையில்
தோகைக்கும் தோன்றற்கும் ஒன்றாய் வரும்இன்பத் துன்பங்களே. .. 71

அயில்வே கண்ணியொடு ஆடவன் தனக்கு உயிர் ஒன்றென
மயிலியல் தோழி மதியுடம் பட்டது.
----------------

ஒன்பதாம் அதிகாரம்
9. நடுங்க நாட்டம்

1.
ஆவா இருவர் அறியா அடிதில்லை அம்பலத்து
மூவா யிரவர் வணங்கநின் றோனையுன் னாரின் முன்னித்
தீவாய் உழுவை கிழித்த(து)அந் தோசிறி தேபிழைப்பித்(து)
ஆவா மணிவேல் பணிகொண்ட வாறின்றோர் ஆண்டகையே. .. 72

நுடங்கிடைப்பாங்கி நடுங்க நாடியது.
--------------------

பத்தாம் அதிகாரம்
10. மடல் திறம்

பேரின்பக் கிளவி
மடல்துறை ஒன்பதும் சிவத்தினுட் மோக
முற்ற உயிரருள் பற்றி உரைத்தது.

1. ஆற்றாது உரைத்தல்
பொருளா எனைப்புகுந்(து) ஆண்டு புரந்தரன் மாலயன்பால்
இருளாய் இருக்கும் ஒளிநின்ற சிற்றம் பலமெனலாம்
சுருளார் கருங்குழல் வெண்ணகைச் செவ்வாய்த் துடியிடையீர்
அருளா(து) ஒழியின் ஒழியா(து) அழியும்என் ஆருயிரே. .. 73

மல்லல்திரள் வரைத்தோளவன் சொல்லற்றாது சொல்லியது.

2. உலகின்மேல் வைத்துரைத்தல்
காய்சின வேலன்ன மின்னியல் கண்ணின் வலைகலந்து
வீசின போதுள்ள மீனிழந் தார்வியன் தென்புலியூர்
ஈசன சாந்தும் எருக்கும் அணிந்தோர் கிழ்¢பிடித்துப்
பாய்ச்சின மாவென ஏறுவர் சீறூர்ப் பனைமடலே. .. 74

3. தன் துணிபு உரைத்தல்
விண்ணை மடங்க விரிநீர் பரந்துவெற் புக்கரப்ப
மண்ணை மடங்க வரும்ஒரு காலத்து மன்னிநிற்கும்
அண்ணல் மடங்கல் அதள்அம் பலவன் அருளிலர்போல்
பெண்ணை மடன்மிசை யான்வரப் பண்ணிற்றோர் பெண்கொடியே. .. 75

மான வேலவன் மடம்மாமிசை
யானும் ஏறுவன் என்ன உரைத்தது.

4. மடலேறும் வகையரைத்தல்
கழிகின்ற என்னையும் நின்றநின் கார்மயில் தன்னையும் யான்
கிழியொன்ற நாடி எழுதிக்கைக் கொண்டென் பிறவிகெட்டின்(று)
அழிகின்ற(து) ஆக்கிய தாள்அம் பலவன் கயிலையந்தேன்
பொழிகின்ற சாரல்நும் சீறூர்த் தெருவிடைப் போதுவனே. .. 76

அடல்வேலன் அழிவுற்று
மடலேறும் வகையுரைத்தது.

5. அருளால் அரிதென விலக்கல்
நடனாம் வணங்கும்தொல் லோன்எல்லை நான்முகன் மாலறியாக்
கடனாம் உருவத்(து) அரன்தில்லை மல்லற் கண் ணார்ந்த பெண்ணை
உடனாம் பெடையொ(டு)ஆண் சேவலும் முட்டையும் கட்டழித்து
மடனாம் புனைதரின் யார்கண்ண தோமன்ன இன்னருளே. ... 77

அடல்வேல் அண்ணல் அருளுடை மையின்
மடல் ஏற்றுனக்(கு) அரிதென்றது.

6. மொழிநடை எழுதல் அரிதென விலக்கல்
அடிச்சந்தம் மால்கண் டிலாதன காட்டிவந்(து) ஆண்டுகொண்டென்
முடிச்சந்த மாமலர் ஆக்குமுன் னோன்புலி யூர்புரையும்
கடிச்சந்த யாழ்கற்ற மென்மொழிக் கன்னி அனநடைக்குப்
படிச்சந்தம் ஆக்கும் படம்உள வோநும் பரிசகத்தே. .. 78

அவயவம் அரிதின் அண்ணல் தீட்டினும்
இவையிவை தீட்டல் இயலா(து) என்றது.

7. அவயவம் எழுதல் அரிதென விலக்கல்
யாழும் எழுதி எழில்முத்(து) எழுதி இருளின்மென்பூச்
சூழும் எழுதியொர் தொண்டையும் தீட்டியென் தொல்பிறவி
ஏழும் எழுதா வகைசிதைத் தோன்புலி யூரிளமாம்
போழும் எழுதிற்றொர் கொம்பருண் டேற்கொண்டு போதுகவே. .. 79

அவயவம் ஆனவை இவைஇவை என்றது.

8. உடம்படாது விலக்கல்
ஊர்வாய் ஒழிவாய் உயர்பெண்ணைத் திண்மடல் நின்குறிப்புச்
சீர்வாய் சிலம்ப திருத்த இருந்திலம் ஈசாதில்லைக்
கார்வாய் குழலிக்குன்ஆதர(வு) ஒதிக்கற் பித்துக்கண்டால்
ஆர்வாய் தரின்அறி வார்பின்னைச் செய்க அறிந்தனவே. .. 80

அடுபடை அண்ணல் அழிதுயர் ஒழிகென
மடநடைத் தோழி மடல்வி லக்கியது.

9. உடம்பட்டு விலக்கல்
பைந்நாண் அரவன் படுகடல் வாய்ப்படு நஞ்சமுதாம்
மைந்நாண் மணிகண்டன் மன்னும் புலியூர் மணந்தபொன்இம்
மொய்ந்நாண் முதுதிரை வாயான் அழுந்தினும் என்னின்முன்னும்
இந்நாள் இதுமது வார்குழ லாட்(கு)என்கண் இன்னருளே. ... 81

அரவரு நுண்ணிடை குரவரு கூந்தல் என்
உள்ளக் கருத்து விள்ளாள் என்றது.
-----------------------------

பதினொன்றாம் அதிகாரம்
11. குறை நயப்புக் கூறல்

பேரின்பக் கிளவி
குறைநயப் புத்துறை அவை இரு நான்கும்
சிவந்தோ(டு) உயிரைச் சேர்க்க வேண்டி
உயிர்ப்பரிவு எடுத்தெடுத்(து) உரைத்(து)அறி உறுத்தல்.

1. குறிப்பறிதல்
தாதேய் மலர்க்குஞ்சி அஞ்சிறை வண்டுதன் தேன்பருகித்
தேதே எனும்தில்லை யோன்சேய் எனச்சின் வேல்ஒருவர்
மாதே புனத்திடை வாளா மருவர்வந்(து) யாதும்சொல்லார்
யாதே செயத்தக் கதுமது வார்குழல் ஏந்தியே. .. 82

நறைவளர் கோதையைக் குறைநயப் பித்தற்(கு)
உள்ளறி குற்ற ஒள்ளிழை யுரைத்தது.

2. மென்மொழியால் கூறல்
வரிசேர் தடங்கண்ணி மம்மர்கைம் மிக்கென்ன மாயங்கோலோ
எரிசேர் தளிரென்ன மேனியென் ஈர்ந்தழை யன்புலியூர்ப்
புரிசேர் சடையோன் புதல்வன்கொல் பூங்கணை வேள்கொலென்னத்
தெரியேம் உரையன் பிரியான் ஒருவன்இத் தேம்புனமே. .. 83

ஒளிருறு வேலவன் தளர்வறு கின்றமை
இன்மொழி யவட்கு மென்மொழி மொழிந்தது.

3. விரவிக் கூறல்
நீகண் டணையெனின் வாழலை நேரிழை அம்பலத்தான்
சேய்கண் டனை யன்சென் றாங்கோர் அலவன்தன் சீர்ப்பெடையின்
வாய்கண் டனையதோர் நாவற் கனிநனி நல்கக்கண்டு
பேய்கண்(டு) அனையதொன் றாகிநின் றான்அப் பெருந்தகையே. .. 84

வன்மொழியன்மனம் மெலிவ(து) அஞ்சி
மென்மொழி விரவி மிகுந்து ரைத்தது.

4. அறியாள் போறல்
சங்கம் தருமுத்தி யாம்பெற வான்வழி தான்கெழுமிப்
பொங்கும் புனற்கங்கை தாங்கிப் பொலிகழிப் பாறுலவு
துங்க மலிதலை யேந்தலின் ஏந்திழை தொல்லைப்பன்மா
வங்கம் மலிகலி நீர்தில்லை வானவன் நேர்வருமே. .. 85

அறியாள் போன்று குறியாள் கூறியது.

5. வஞ்சித்து உரைத்தல்
புரங்கடந் தான்அடி காண்பான் புவிவிண்டு புக்கறியா(து)
இரங்கி(டு)எந் தாய்என்(று) இரப்பத்தன் ஈரடிக்(கு) என்இரண்டு
கரங்கள்தந் தான் ஒன்று காட்டமற்(று) ஆங்கதும் காட்டிடென்று
வரங்கிடந் தான்தில்லை அம்பல முன்றில் அம் மாயவனே. .. 86

நெஞ்சம் நெகிழ்வகை வஞ்சித்(து) இவையிவை
செஞ்சடை யோன்புகழ் வஞ்சிக்(கு) உரைத்தது.

6. புலந்து கூறல்
உள்ளப் படுவன வுள்ளி உரைத்தக் கவர்க்குரைத்து
மெள்ளப் படிறு துணிதுணி யேல்இது வேண்டுவல்யான்
கள்ளப் படிறர்க்(கு) அருளா அரன்தில்லை காணலர்போல்
கொள்ளப் படாது மறப்ப(து) அறிவிலென் கூற்றுக்களே. .. 87

திருந்திய சொல்லில் செவ்வி பெறாது
வருந்திய சொல்லின் வகுத்து ரைத்தது.

7. வன்மொழியாற் கூறல்
மேவிஅம் தோல் உடுக் கும்தில்லை யான்பொடி மெய்யிற்கையில்
ஓவியம் தோன்றும் கிழிநின் எழில்என்(று) உரையுளதால்
தூவியம் தோகையன் னாய்என்ன பாவம்சொல் ஆடல்செய்யான்
பாவிஅந் தோபனை மாமடல் ஏறக்கொல் பாவித்ததே. .. 88

கடல்உல(கு) அறியக் கமழலந் துறைவன்
மடலே றும்என வன்மொழி மொழிந்தது.

8. மனத்தொடு நேர்தல்
பொன்னார் சடையோன் புலியூர் புகழார் எனப்புரிநோய்
என்னால் அறிவில்லை யானொன்று உரைக்கிலன் வந்தயலார்
சொன்னார் எனும்இத் துரிகதுன் னாமைத் துணைமனனே
என்ஆழ் துயர்வல்லை யேற்சொல்லு நீர்மை இனியவர்க்கே. .. 89

அடல்வேலவன் ஆற்றானெனக்
கடல்அமிழ் தன்னவன் காணல் உற்றது.
-----------------------

பன்னிரண்டாம் அதிகாரம்
12. சேட்படை

பேரின்பக் கிளவி
சேட்படை இருபத் தாறு துறையும்
கிடையா இன்பம் கிடைத்தலால் உயிரை
அருமை காட்டி அறியாள் போலப்
பலபல அருமை பற்றி உரைத்த
அருளே சிவத்தோ(டு) ஆக்க அருளல்.

1. தழைகொண்டு சேறல்
தேமென் கிளவிதன் பங்கத்(து) இறையுறை தில்லையன்னீர்
பூமென் தழையும்அம் போதும்கொள் ளீர்தமி யேன்புலம்ப
ஆமென்(று) அருங்கோடும் பாடுகள் செய்துநும் கண்மலராம்
காமன் கணைகொண்(டு) அலைகொள்ள வோமுற்றக் கற்றதுவே. .. 90

கொய்ம் மலர்க் குழலி குறைந யந்தபின்
கையுறை யோடு காளை சென்றது.

2. சந்தனத் தழை தகாதென்று மறுத்தல்
ஆரத் தழையராப் பூண்(டு)அம் பலத்(து)அன லாடிஅன்பர்க்(கு)
ஆரத் தழையன்(பு) அருளிநின் றோன்சென்ற மாமலயத்(து)
ஆரத் தழையண்ணல் தந்தால் இவைஅவள் அல்குல்கண்டால்
ஆரத் தழைகொடு வந்தார் எனவரும் ஐயுறவே. .. 91

பிறை நுதற் பே¨¡தயைக் குறைநயப் பித்தது
உள்ளறி குற்றம் ஒள்ளிழை யுரைத்தது.

3. நிலத்தின்மை கூறிமறுத்தல்
முன்தகர்த்(து) எல்லா இமையோரை யும்பின்னைத் தக்கன்முத்தீச்
சென்(று)அகத்(து) இல்லா வகைசினத்த தோன்திருந்(து) அம்பலவன்
குன்றகத்(து) இல்லாத் தழைஅண் ணல்தந்தால் கொடிச்சியருக்(கு)
இன்(று)அகத்(து) இல்லாப் பழிவந்து மூடும்என்(று) எள்குதுமே. .. 92

கொங்கலர் தாரோய் கொணர்ந்த கொய்தழை
எங்குலத் தாருக்(கு) ஏலாது என்றது.

4. நினைவறிவு கூறி மறுத்தல்
யாழார் மொழிமங்கை பங்கத்(து) இறைவன் எறிதிரைநீர்
ஏழாய் எழுமொழி லாய்இருந் தோன்நின்ற தில்லையன்ன
சூழார் குழல்எழில் தொண்டைச்செவ் வாய்நவ்வி சொல்லறிந்தால்
தாழா(து) எதிர்வந்து கோடும் சிலம்ப தரும்தழையே. ... 93

மைதழைக் கண்ணி மனமறிந்(து) அல்லது
கொய்தழை தந்தால் கொள்ளேம் என்றது.

5. படைத்து மொழியான் மறுத்தல்
எழில்வாய் இளவஞ்சி யும்விரும் பும்மற்று இறைகுறையுண்டு
அழல்வாய் அவிரொளி அம்பலத்து ஆடும்அம் சோதி அம்தீம்
குழல்வாய் மொழிமங்கை பங்கன்குற் றாலத்துக் கோலப்பிண்டிப்
பொழில்வாய் தடவரை வாயல்ல(து) இல்லைஇப் பூந்தழையே. ... 94

அருந்தழை மேன்மேல் பெருந்தகை கொணரப்
படைத்துமொழி கிளவியில் தடுத்தவள் மொழிந்தது.

6. நாணுரைத்து மறுத்தல்
உறுங்கள்நி வந்த கணையுர வோன்பொடி யாய் ஒடுங்கத்
தெறுங்கண்நி வந்தசிற்றம்பல வன்மலைச் சிற்றிலின்வாய்
நறுங்கண்ணி சூட்டினும் நாணும்என் வாணுதல் நாகத்தொண்பூங்
குறுங்கண்ணி வேயந்திள மந்திகள் நாணும்இக் குன்றிடத்தே. .. 95

வாணுதற் பேதையை நாணுதல் உரைத்தது

7. இசையாமை கூறி மறுத்தல்
நறமனை வேங்கையின் பூப்பயில் பாறையை நாகநண்ணி
மறமனை வேங்கை எனநனி அஞ்சும்அஞ் சார்சிலம்பா
குறமனை வேங்கைச் சுணங்கொடு அணங்கலர் கூட்டுபவோ
நிறமனை வேங்கை அதள்அம் பலவன் நெடுவ ரையே. .. 96

வசைநீர் குலத்திற்(கு) இசையா(து) என்றது.

8. செவ்வியிலள் என்று மறுத்தல்
சுற்றில கண்டன்னம் மென்னடை கண்மலர் நோக்கருளப்
பெற்றில மென்பிணை பேச்சுப் பெறாகிள்ளை பிள்ளையின்றொன்(று)
உற்றிபள் உற்ற(து) அறிந்திலள் ஆகத்(து) ஒளிமிளுரும்
புற்றில வாளர வன்புலி யூரன்ன பூங்கொடியே. ... 97

நவ்வி நோக்கி செவ்வியிலள் என்றது.

9. காப்புடைத்தென்று மறுத்தல்
முனிதரும் அன்னையும் என்ஐயர் சாலவும் மூர்க்கர்இன்னே
தனிதரும் இந்நிலத் தன்(று)ஐய குன்றமும் தாழ்சடைமேல்
பனிதரு திங்கள் அணிஅம் பலவர் பகைசெகுக்கும்
குனிதரு திண்சிலைக் கோடுசென் றான்சுடர்க் கொற்றவனே. .. 98

காப்புடைத் தென்று சேட்ப டுத்தது.

10. நீயே கூறென்று மறுத்தல்
அந்தியின் வாயெழில் அம்பலத்(து) எம்பரன் அம்பொன்வெற்பின்
பந்தியின் வாய்ப்பல வின்சுளை பைந்தே னொடும்கடுவன்
மந்தியின் வாய்க்கொடுத்(து) ஓம்பும் சிலம்ப மனம்கனிய
முந்தியின் வாய்மொழி நீயே மொழிசென்றம் மொய்குழற்கே. .. 99

அஞ்சுதும் பெரும பஞ்சின்மெல் லடியைக்
கூறுவ நீயே கூறு கென்றது.

11. குலமுறை கூறி மறுத்தல்
தெங்கம் பழம்கமு கின்குலை சாடிக் கதலிசெற்றுக்
கொங்கம் பழனத்(து) ஒளிர்குளிர் நாட்டினை நீயுமைகூர்
பங்கம் பலவன் பரங்குன்றில் குன்றன்ன மாபதைப்பச்
சிங்கம் திரிதரு சீறூர்ச் சிறுமிஎம் தேமொழியே. .. 100

தொழுகுலத்தீர் சொற்காகேம்
இழிகுலத்தேம் என்வுரைத்தது.

12. நகையாடி மறுத்தல்
சிலையொன்று வாணுதல் பங்கன்சிற் றம்பல வன்கயிலை
மலையொன்று மாமுகத்(து) எம்ஐயர் எய்கணை மண்குளிக்கும்
கலையொன்று வெங்கணை யோடு கடுகிட்ட தென்னிற்கெட்டேன்
கொலையென்று திண்ணிய வா(று)ஐயர் கையிற் கொடுஞ்சிலையே. .. 101

வாள்தழை எதிராது சேட்படுத் தற்கு
மென்னகைத் தோழி இன்னகை செய்தது.

13. இரக்கத்தோடு மறுத்தல்
மைத்தழை யாநின்ற மாமிடற்(று) அம்பல வன்கழற்கே
மெய்த்தழை யாநின்ற அன்பினர் போல விதிர்விதிர்த்துக்
கைத்தழை யேந்திக் கடமா வினாய்க் கையில் வில்லின்றியே
பித்தழை யாநிற்ப ரால்என்ன பாவம் பெரியவரே. .. 102

கையுறை எதிராது காதல் தோழி ஐய நீபெரி(து) அயர்த்தனை என்றது.

14. சிறப்பின்மை கூறி மறுத்தல்
அக்கும் அரவும் அணிமணிக் கூத்தன்சிற் றம்பலமே
ஓக்கும் இவள(து) ஒளிர்உரு அஞ்சி மஞ் சார்சிலம்பா
கொக்கும் சுனையும் குளிர்தளி ரும்கொழும் போதுகளும்
இக்குன்றில் என்றும் மலர்ந்தறி யாத இயல்பினவே. .. 103

மாந்தளிரும் மலர்நீலமும் ஏந்தல் இம்மலை இல்லை என்றது.

15. இளமை கூறி மறுத்தல்
உருகு தலைச்சென்ற உள்ளத்தும் அம்பலத் தும்ஒளியே
பெருகு தலைச்சென்று நின்றோன் பெருந்துறைப் பிள்ளைகள்ளார்
முருகு தலைச்சென்ற கூழை முடியா முலைபொடியா
ஒருகு தலைச்சின் மழலைக் கென் னோஐய ஓதுவதே. .. 104

முளைஎயிற்(று) அரிவை விளைவிலள் என்றது.

16. மறைத்தமை கூறி நகைத்துரைத்தல்
பண்(டு)ஆல் இயலும் இலைவளர் பாலகன் பார்கிழித்துத்
தொண்டால் இயலும் சுடர்க்கழ லோன்தொல்லைத் தில்லையின்வாய்
வண்டால் இயலும் வளர்புந் துறைவ மறைக்கின்என்னைக்
கண்டால் இயலும் கடனில்லை கொல்லோ கருதியதே. .. 105

என்னை மறைத்தபின் எண்ணியது அரிதென
நன்னுதல் தோழி நகைசெய்தது.

17. நகை கண்டு மகிழ்தல்
மத்தகம் சேர்தனி நோக்கினன் வாக்கிறந்(து) ஊறமுதே
ஒத்தகம் சேர்ந்தென்னை உய்யநின் றோன்தில்லை ஒத்திலங்கு
முத்தகம் சேர்மென் னகைப் பெருந் தோளி முகமதியின்
வித்தகம் சேர்மெல்லென் நோக்கமன்றோஎன் விழுத்துணையே. .. 106

இன்னகைத் தோழி மென்னகை கண்டு
வண்ணக் கதிர்வேல் அண்ணல் உரைத்தது.

18. அறியாள் போன்று நினைவு கேட்டல்
விண்இறந் தார்நிலம் விண்டலர் என்றுமிக் கார்இருவர்
கண்இறந் தார்தில்லை அம்பலத் தார்கழுக் குன்றினின்று
தண்நறுந் தா(து)இவர் சந்தனச் சோலைப்பந் தாடுகின்றார்
எண்இறந் தார்அவர் யார்கண்ண தோமன்ன நின்னருளே. .. 107

வேந்தன் சொன்ன மாந்தளிர் மேனியை
வெறியார் கோதை யறியேன் என்றது.

19. அவயவம் கூறல்
குவவின கொங்கை குரும்பை குழல்கொன்றை கொவ்வைசெவ்வாய்
கவவின வாள்நகை வெண்முத்தம் கண்மலர் செங்கழுநீர்
தவவினை தீர்ப்பவன் தாழ்பொழில் சிற்றம்பலம் அனையாட்(கு)
உவவின நாள்மதி போன்றொளிர் கின்ற(து) ஒளிமுகமே. .. 108

அவயவம் அவளுக்(கு) இவைஇவை என்றது

20. கண் நயந்து உரைத்தல்
ஈசற்(கு) யான்வைத்த அன்பின் அகன்றவன் வாங்கியஎன்
பாசத்தின் காரென்(று) அவன்தில்லை யின்ஒளி போன்றவன்தோள்
பூ(க)அத் திருநீ(று) எனவெளுத்(து) அங்கவன் பூங்கழல்யாம்
பே(சு)அத் திருவார்த்தை யிற்பெரு நீளம் பெருங்கண்களே. .. 109

கண்இணை பிறழ்வன வண்ணம் உரைத்தது.

21. தழையெதிர்தல்
தோலாக் கரிவென்ற தற்கும் துவள்விற்கும் இல்லின்தொன்மைக்(கு)
ஏலாப் பரி(சு)உள வேயன்றி ஏலேம் இருஞ்சிலம்ப
மாலார்க்(கு) அரிய மலர்க்கழல் அம்பல வன்மலையில்
கோலாப் பிரசம் அன் னாட்(கு)ஐய நீதந்த கொய் தழையே. .. 110

அகன்ற இடத்(து) ஆற்றாமை கண்டு கவன்ற தோழி கையுறை எதிர்ந்தது

22. குறிப்பறிதல்
கழைகாண் டலும்சுளி யுங்களி யானையன் னான்கரத்தில்
தழைகாண் டலும்பொய் தழைப்பமுன் காண்பன்இன்(று) அம்பலத்தான்
உழைகாண் டலும்நினைப் பாகும்மெல் நோக்கிமன் நோக்கங்கண்டால்
இழைகாண் பணைமுலை யாய்அறி யேன்சொல்லும் ஈடவற்கே. .. 111

தழை எதிரா(து) ஒழிவதற்கோர்
சொல்லறி யேனெனப் பல்வளைக்(கு) உரைத்தது.

23. குறிப்பறிந்து கூறல்
தவளத்த நீறணி யும்தடந் தோள்அண்ணல் தன்னொருபால்
அவள்அத்த னாம்மக னாம்தில்லை யான்அன்(று) உரித்ததன்ன
கவளத்த யானை கடிந்தார் கரத்தகண் ணார்தழையும்
துவளத் தகுவன வோசுரும் பார்குழல் தூமொழியே. .. 112

ஏழைக்(கு) இருந்தழை தோழிகொண்(டு) உரைத்தது. 23

24. வகுத்துறைத்தல்
ஏறும் பழிதழை யேன்பின்மற்(று) ஏலா விடின்மடன்மா
ஏறும் அவன்இட பங்கொடி ஏற்றிவந்(து) அம்பலத்துள்
ஏறும் அரன்மன்னும் ஈங்கோய் மலைநம் இரும்புனம்காய்ந்(து)
ஏறும் மலைதொலைத் தாற்(கு)என்னை யாம்செய்வ(து) ஏந்திழையே. .. 113

கடித்தழை கொணர்ந்த காதல் தோழி
மடக்கொடி மாதர்க்கு வகுத்துரைத்தது.

25. தழையேற்பித்தல்
தெவ்வரை மெய்யெரி காய்சிலை ஆண்டென்னை ஆண்டுகொண்ட
செவ்வரை மேனியன் சிற்றம் பலவன் செழுங்கயிலை
அவ்வரை மேலன்றி யில்லைகண் டாய்உள்ள வா(று)அருளான்
இவ்வரை மேற்சிலம் பன்எளி தில்தந்த ஈர்ந்தழையே. .. 114

கருங்குழல் மடந்தைக்(கு) அரும்பெறல் தோழி
இருந்தழை கொள்கென விரும்பிக் கொடுத்தது.

26. தழை விருப்புரைத்தல்
பாசத் தளையறுத்(து) ஆண்டுகொண் டோன்தில்லை அம்பலம் சூழ்
தேசத் தனசெம்மல் நீதந் தனசென்(று) யான்கொடுத்தேன்
பேசிற் பெருகும் சுருங்கு மருங்குழல் பெயர்ந்தரைத்துப்
பூசிற் றிலள்அன்றிச் செய்யா தனஇல்லை பூந்தழையே. .. 115

விருப்பவள் தோழி பொருப்பற்(கு) உரைத்தது.
---------------Back to thirukovaiyar Page
Back to 8th thirumuRai Page
Back to thirumuRai Home Page
Back to Shaiva Sidhdhantha Home Page