ThirukkOvaiyAr of mAnikkavasakar (Thiruchitrambalakkovaiyar)
(in Tamil Script, unicode format)

திருக்கோவையார் (திருச்சிற்றம்பலக் கோவையார்)
(மாணிக்கவாசகர் அருளியது)


கட்டளைக் கலித்துறை யாப்பு

விநாயகர் வணக்கம்

எண்ணிறைந்த தில்லை எழுகோ புரந்திகழக்
கண்ணிறைந்து நின்றருளும் கற்பகமே - நண்ணியசீர்த்
தேனூறு செஞ்சொல் திருக்கோவை என்கின்ற
நானூறும் என்மனத்தே நல்கு 1

நூற்சிறப்பு

ஆரணங் காணென்பர் அந்தணர்; யோகியர் ஆகமத்தின்
காரணங் காணென்பர்; காமுகர் காமநன் னூலதென்பர்;
ஏரணங் காணென்பர் எண்ணர் எழுத்தென்பர் இன்புலவோர்;
சீரணங் காயசிற் றம்பலக் கோவையைச் செப்பிடினே. 2

களவியல் (1 முதல் 18 அதிகாரங்கள்)

முதல் அதிகாரம்
1. இயற்கைப் புணர்ச்சி

1. காட்சி
திருவளர் தாமரை சீர்வளர் காவிகள் ஈசர்தில்லைக்
குருவளர் பூங்குமிழ் கோங்குபைங் காந்தள்கொண்டு ஓங்குதெய்வ
மருவளர் மாலையொர் வல்லியின் ஒல்கி அனநடை வாய்ந்து
உருவளர் காமன்தன் வென்றிக் கொடிபோன்று ஒளிர்கின்றதே. .. 1

மதிவாணுதல் வளர்வஞ்சியைக்
கதிர் வேலவன் கண்ணுற்றது

2. ஐயம்
போதா விசும்போ புனலோ பணிக ளதுபதியோ
யாதோ அறிகுவ(து) ஏதும் அரிதி யமன்விடுத்த
தூதோ அனங்கன் துணையோ இணையிலி தொல்லைத்தில்லை
மாதோ மடமயி லோஎன நின்றவர் வாழ்பதியே. .. 2

தெரியஅரியதோர் தெய்வமன்ன
அருவரைநாடன் ஐயுற்றது.

3. தெளிதல்
பாயும் விடையரன் தில்லையன் னாள்படைக் கண்ணிமைக்கும்
தோயும் நிலத்தடி தூமலர் வாடும் துயரமெய்தி
ஆயும் மனனே அணங்கல்லள் அம்மா முலைசுமந்து
தேயும் மருங்குல் பெரும்பணைத் தோளிச் சிறுநுதலே. .. 3

அணங்கல்லள்என்(று) அயில்வேலவன்
குணங்களை நோக்கிக் குறித்துரைத்தது.

4. நயப்பு
அகல்கின்ற அல்குல் தடமது கொங்கை அவைஅலம்நீ
புகல்கின்ற(து) என்னைநெஞ்(சு) உண்டே இடைஅடை யார்புரங்கள்
இகல்குன்ற வில்லில்செற் றோன்தில்லை ஈசன்எம் மான்எதிர்த்த
பகல்குன்றப் பல்உகுத் தோன்பழ னம்அன்ன பல்வளைக்கே. .. 4

வண்டமர் புரிகுழல் ஒண்டொடி மடந்தையை
நயந்த அண்ணல் வியந்துள் ளியது.

5. உட்கோள்
அணியும் அமிழ்தும்என் ஆவியம் ஆயவன் தில்லைச்சிந்தா
மணிஉம்ப ரார்அறி யாமறை யோன்அடி வாழ்த்தலரின்
பிணியும் அதற்கு மருந்தும் பிறழப் பிறழமின்னும்
பணியும் புரைமருங் குல்பெருந் தோளி படைக்கண்களே. .. 5

இறைதிருக் கரத்து மறிமான் நோக்கி
உள்ளக்கருத்து வள்ளல் அறிந்தது.

6. தெய்வத்தை மகிழ்தல்
வளைபயில் கீழ்கடல் நின்றிட மேல்கடல் வான்நுகத்தின்
துளைவழி நேர்கழி கோத்தெனத் தில்லைத்தொல் லோன்கயிலைக்
கிளைவயின் நீக்கிஇக் கொண்டைஅங் கண்ணியைக் கொண்டுதந்த
விளைவயல் வால்விய வேன்நய வேன்தெய்வம் மிக்கனவே. .. 6

அன்ன மென்னடை அரிவையைத் தந்த
மன்னிருந் தெய்வத்தை மகிழ்ந்து ரைத்தது.

7. புணர்ச்சி துணிதல்
ஏழுடை யான்பொழில் எட்டுடை யான்புயம் என்னைமுன்ஆள்
ஊழுடை யான்புலி யூர்அன்ன பொன்இவ் உயிர்பொழில் ஆகச்
சூழுடை ஆயத்தை நீக்கும் விதிதுணை யாமனனே
யாழுடை யார்மணம் காண்அணங்(கு) ஆய்வந்(து) அகப்பட்டதே. .. 7

கொவ்வைச் செவ்வாய்க் கொடியிடைப் பேதையைத்
தெய்வப் புணர்ச்சி செம்மல் துணிந்தது.

8. கல்வியுரைத்தல்
சொற்பால் அழுதிவள் யான்சுவை என்னத் துணிந்திங்ஙனே
நற்பால் வினைத்தெய்வம் தந்தின்று நானிவ ளாம்பகுதிப்
பொற்பார் அறிவார் புலியூர்ப் புனிதன் பொதியில்வெற்பில்
கற்பா வியவரை வாய்க்கடி(து) ஓட்ட களவகத்தே. .. 8

கொலைவேலவன் கொடியிடையொடு
கலவியன்பம் கட்டுரைத்தது

9. இருவயின் ஒத்தல்
உணர்ந்தார்க்(கு) உணர்வரி யோன்தில்லைச் சிற்றம் பலத்தொருத்தன்
குணந்தான் வெளிப்பட்ட கொவ்வைச்செவ் வாயிக் கொடியிடைதோள்
புணர்ந்தால் புணரும் தொறும்பெரும் போகம்பின் னும்புதிதாய்
மணந்தாழ் புரிகுழ லாள் அல்குல் போல வளர்கின்றதே. . . 9

ஆராஇன்பத்து அன்புமீதூர
வாரார்முல்லை மகிழ்ந்துரைத்தது.

10. கிளவி வேட்டல்
அளவியை யார்க்கும் அறி(வு )அரி யோன்தில்லை அம்பலம்போல்
வளவிய வான்கொங்கை வாள்தடங் கண்நுதல் மாமதியின்
பிள(வு)இயல் மின்இடை பேரமை தோளிது பெற்றியென்றால்
கிளவியை யென்றோ இனிக்கிள்ளை யார்வாயிற் கேட்கின்றதே. .. 10

அன்னம்அன்னவள் அவயவம் கண்டு
மென்மொழி கேட்க விருப்புற்றது.

11. நலம் புனைந்துரைத்தல்
கூம்பலங் கைத்தலத்து அன்பர்என்(பு) ஊடுரு கக்குனிக்கும்
பாம்பலங் காரப் பரன்தில்லை அம்பலம் பாடலரின்
தேம்பலம் சிற்றிடை ஈங்கிவள் தீங்கனி வாய்கமழும்
ஆம்பலம் போதுள வோஅளி காள்நும் அகன்பணையே. .. 11

பொங்கிழையைப் புனைநலம் புகழ்ந்(து)
அங்கதிர்வேலோன் அயர்வுநீங்கியது.

12. பிரிவுணர்த்தல்
சிந்தா மணிதெள் கடல்அமிர் தம்தில்லை யான்அருளால்
வந்தால் இகழப் படுமே மடமான் விழிமயிலே
அந்தா மரையன்ன மேநின்னை யான் அகன்(று) ஆற்றுவனோ
சிந்தா குலமுற்றென் னோஎன்னை வாட்டம் திருத்துவதே. .. 12

பணிவரல்அல்குலைப் பயிர்ப்புறுத்திப்
பிணிமலர்த் தாரோன் பிரிவுணர்த்தியது.

13. பருவரல் அறிதல்
கோங்கின் பொலிஅரும்(பு) ஏய்கொங்கை பங்கன் குறுகலர்ஊர்
தீங்கில் புகச்செற்ற கொற்றவன் சிற்றம் பலம் அனையாள்
நீங்கின் புணர்(வு)அரி(து) என்றோ நெடி(து)இங்ங னேயிருந்தால்
ஆங்குஇற் பழியாம் எனவோ அறியேன் அயர்கின்றதே. .. 13

பிரிவுணர்ந்த பெண்கொடி தன்
பருவரலின் பரிசு நினைந்தது.

14. அருட்குணம் உரைத்தல்
தேவரில் பெற்றநம் செல்வக் கடிவடி வால்திருவே
யாவரின் பெற்றினி யார்சிதைப் பார்இமை யாதமுக்கண்
மூவரின் பெற்றவர் சிற்றம் பலம்அணி மொய்பொழில்வாய்ப்
பூஅரில் பெற்ற குழலிஎன் வாடிப் புலம்புவதே. .. 14

கூட்டிய தெய்வத் தின்அ ருட்குணம்
வாட்டம் இன்மை வள்ளல் உரைத்தது.

15. இடம் அணித்துக் கூறி வற்புறுத்தல்
வருங்குன்றம் ஒன்றுரித் தோன்தில்லை அம்பல வன்மலயத்(து)
இருங்குன்ற வாணர் இளங்கொடி யேஇடர் எய்தல்எம்மூர்ப்
பருங்குன்ற மாளிகை நுண்கள பத்தொளி பாயநும்மூர்க்
கருங்குன்றம் வெண்ணிறக் கஞ்சுகம் ஏய்க்கும் களங்குழையே. .. 15

மடவரலை வற்புறுத்தி
இடமணித்துஎன்று அவன்இயம்பியது.

16. ஆடு இடத்து உய்த்தல்
தெளிவளர் வான்சிலை செங்கனி வெண்முத்தம், திங்களின்வாய்ந்(து)
அளிவளர் வல்லிஅன் னாய் முன்னி யாடுபின் யான்அளவா
ஒளிவளர் தில்லை ஒருவன் கயிலை யுகுபெருந்தேன்
துளிவளர் சாரல் கரந்துங்ங னேவந்து தோன்றுவனே. .. 16

வன்புறையின் வற்புறுத்தி
அன்புறு மொழியை அருகு அகன்றது.

17. அருமை அறிதல்
புணர்ப்போன் நிலனும் விசும்பும் பொருப்புந்தன் பூங்கழலின்
துணர்ப்போ தெனக்கணி யாக்குந்தொல் லோன்தில்லைச் சூழ்பொழில்வாய்
இணர்ப்போ(து) அணிசூழல் ஏழைதன் நீர்மைஇந் நீர்மையென்றால்
புணர்ப்போ கனவோ பிறிதோ அறியேன் புகுந்ததுவே. .. 17

கற்றமும் இடனும் சூழலும் நோக்கி
மற்றவன் அருமை மன்னன் அறிந்தது.

18. பாங்கியை அறிதல்
உயிரொன்(று) உளமும்ஒன்(று) ஒன்றே சிறப்(பு)இவட்(கு) என்னோடென்னப்
பயில்கின்ற சென்று செவியுற நீள்படைக் கண்கள்விண்வாய்ச்
செயிர்ஒன்று முப்புரம் செற்றவன் தில்லைச்சிற் றம்பலத்துப்
பயில்கின்ற கூத்தன் அருளென லாகும் பணிமொழிக்கே. .. 18

கடல்புரை ஆயத்துக் காதல் தோழியை
மடவரல் காட்ட மன்னன் அறிந்தது.

இயற்கைப் புணர்ச்சி முற்றிற்று
-------

இரண்டாம் அதிகாரம்
2. பாற்கற் கூட்டம்

1. பாங்கனை நினைதல்
பூங்கனை யார்புனல் தென்புலி யூர்புரிந்(து) அம்பலத்துள்
ஆங்கெனை யாண்டுகொண் டாடும் பிரானடித் தாமரைக்கே
பாங்கனை யான்அன்ன பண்பனைக் கண்(டு)இப் பரிசுரைத்தால்
ஈங்கெனை யார்தடுப் பார்மடப் பாவையை எய்துதற்கே. 19

எய்துதற்(கு) அருமை ஏழையில் தோன்றப்
பையுள் உற்றவன் பாங்கனை நினைந்தது.

2. பாங்கன் வினாதல்
சிறைவான் புனல்தில்லைச் சிற்றம் பலத்தும்என் சிந்தையுள்ளம்
உறைவான் உயர்மதில் கூடலின் ஆய்ந்தஒண் தீந்தமிழின்
துறைவாய் நுழைந்தனை யோஅன்றி ஏழிசைச் சூழல்புக்கோ
இறைவா தடவரைத் தோட்கென்கொ லாம்புகுந்(து) எய்தியதே. 20

கலிகெழு திரள்தோள் மெலிவது கண்ட
இன்னுயிர்ப் பாங்கன் மன்னனை வினாயது.

3. உற்றது உரைத்தல்
கோம்பிக்(கு) ஒதுங்கிமே யாமஞ்ஞை குஞ்சரம் கோளிழைக்கும்
பாம்பைப் பிடித்துப் படங்கிழித்(து) ஆங்(கு)அப் பணைமுலைக்கே
தேம்பல் துடியிடை மான்மட நோக்கிதில் லைச் சிவன்தாள்
ஆம்பொன் தடமலர் சூடும்என் ஆற்றல் அகற்றியதே. .. 21

மற்றவன் வினவ, உற்றது உரைத்தது.

4. கழறியுரைத்தல்
உளமாம் வகைநம்மை உய்யவந்(து) ஆண்டுசென்(று) உம்பர்உய்யக்
களமாம் விடம்அமிர்(து) ஆக்கிய தில்லைத்தொல் லோன்கயிலை
வளமாம் பொதும்பரின் வஞ்சித்து நின்றோர்வஞ் சிம்மருங்குல்
இளமான் விழித்ததென் றோஇன்றெம் அண்ணல் இரங்கியதே. .. 22

வெற்பனத்தன் மெய்ப்பதங்கன்
கற்பனையில் கழறியது.

5. கழற்றெதிர் மறுத்தல்
சேணிற் பொலிசெம்பொன் மாளிகைத் தில்லைச்சிற்றம் பலத்து
மாணிக்கக் கூத்தன் வடவான் கயிலை மயிலைமன்னும்
பூணிற் பொலிகொங்கை யாவியை ஒவியப் பொற்கொழுந்தைக்
காணிற் கழறலை கண்டிலை மென்தோள் கரும்பினையே. .. 23

ஆங்குயி ரன்ன பாங்கன் கழற
வளந்தரு வெற்பன் உளந்தளர்ந்து உரைத்தது.

6 கவன்றுரைத்தல்
விலங்கலைக் கால்கொண்டு மேன்மேல் இடவிண்ணும் மண்ணும் முந்நீர்க்
கலங்கலைச் சென்றஅன் றுகலங் காய்கமழ் கொன்றைதுன்றும்
அலங்கலைச் சூழ்ந்தசிற்றம்பலத் தான்அருள் இல்லவர்போல்
தலங்கலைச் சென்றிதென் னோவள்ளல் உள்ளம் துயர்கின்றதே. .. 24

கொலைகளிற் றண்ணல் குறைநயந்(து) உரைப்பக்
கலக்கங்செய் பாங்கன் கவன்(று) உரைத்தது.

7. வலியழிவுரைத்தல்
தலைப்படு சால்பினுக் கும்தள ரேன்சித்தம் பித்தனென்று
மலைத்தறி வார்இல்லை யாரையும் தேற்றுவன் எத்துணையும்
கலைச்சிறு திங்கள் மிலைத்தசிற் றம்பல வன்கயிலை
மலைச்சிறு மான்விழி யால்அழி வுற்று மயங்கினனே. .. 25

நிறைபொறை தேற்றம் நீதியொடு சால்பு
மறியறு நோக்கிற்கு வாடினேன் என்றது.

8. விதியொடு வெறுத்தல்
நல்வினை யும்நயம் தந்தின்று வந்து நடுங்குமின்மேல்
கொல்வினை வல்லன கோங்கரும் பாம்என்று பாங்கன் சொல்ல
வல்வினை மேருவில் வைத்தவன் தில்லை தொழாரின் வெள்கித்
தொல்வினை யால்துய ரும்என(து) ஆருயிர் துப்புறவே. .. 26

கல்விமிகு பாங்கன் கழற வெள்கிச்
செல்வமிகு சிலம்பன் தெரிந்து செப்பியது.

9. பாங்கன் நொந்துரைத்தல்
ஆலத்தி னால்அமிர்(து) ஆக்கிய கோன்தில்லை அம்பலம்போல்
கோலத்தி னாள்பொருட் டாக அமிர்தம் குணங்கெடினும்
காலத்தி னால்மழை மாறினும் மாறாக் கவிகைநின்பொற்
சீலத்தை நீயும் நினையா(து) ஒழிவதென் தீவினையே. .. 27

இன்னுயிர்ப் பாங்கன் ஏழையைச் சுட்டி
நின்னது நன்மை நினைந்திலை என்றது.

10. இயல் இடங்கேட்டல்
நின்னுடை நீர்மையும் நீயும்இவ் வாறு நினைத்தெருட்டும்
என்னுடை நீர்மையி(து) என்னென்ப தேதில்லை யேர்கொள்முக்கண்
மன்னுடை மால்வரை யோமல ரோவிகம் போசிலம்பா
என்னிடம் யாதியல் நின்னையின் னேசெய்த ஈர்ங்கொடிக்கே. .. 28

கழுமலம் எய்திய காதல் தோழன்
செழுமலை நாடனைத் தெரிந்து வினாயது.

11. இயலிடங் கூறல்
விழியால் பிணையாம் விளங்கிய லான்மயி லாம்மிழற்று
மொழியால் கிளியாம் முதுவா னவர்தம் முடித்தொகைகள்
கழியாக் கழல்தில்லைக் கூத்தன் கயிலைமுத் தம்மலைத்தேன்
கொழியாத் திகழும் பொழிற்(கு)எழி லாம்எங் குலதெய்வமே. .. 29

அழுங்கல் எய்திய ஆருயிர்ப் பாங்கற்குச்
செழுங்கதிர் வேலோன் தெரிந்து செப்பியது.

12. வற்புறுத்தல்
குயிலைச் சிலம்படிக் கொம்பினைத் தில்லையெங் கூத்தப்பிரான்
கயிலைச் சிலம்பில்பைம் பூம்புனம் காக்கும் கருங்கண்செவ்வாய்
மயிலைச் சிலம்புகண்(டு) யான்போய் வருவன்வண் பூங்கொடிகள்
பயிலச் சிலம்பெதிர் கூய்ப்பண்ணை நண்ணும் பனிக்கறையே. .. 34

பெயர்ந்துரைத்த பெருவரை நாடனை
வயங்கெழு புகழோன் வற்புறுத்தியது.

13. குறிவழிச் சேறல்
கொடுங்கால் குலவரை ஏழ்ஏழ் பொழில்எழில் குன்றும்அன்றும்
நடுங்கா தவனை நடுங்க நுடங்கு நடுவுடைய
விடங்கால் அயிற்கண்ணி மேவுங்கொ லாம்தில்லை ஈசன் வெற்பில்
தடங்கார் தருபெரு வான்பொழில் நீழலம் தண்புனத்தே. . 35

அறைகழல் அண்ணல் அருளின வழியே
நிறையுடைப் பாங்கன் நினைவொடு சென்றது.

14. குறிவழிக்காண்டல்
வடிக்கண் இவைவஞ்சி அஞ்சும் இடைஇது வாய்பவளம்
துடிக்கின்ற வாவெற்பன் சொற்பரி சேயான் தொடர்ந்துவிடா
அடிச்சந்த மாமலர் அண்ணல்விண் ணோர்வணங்(கு) அம்பலம்போல்
படிச்சந் தமும்இது வேஇவ ளேஅப் பணிமொழியே. .. 36

குளிர்வரை நாடன் குறிவழிச் சென்று
தளிர்புரை மெல்லடித் தையாலக் கண்டது.

15. தலைவனை வியந்துரைத்தல்
குவளைக்களத்(து)அம் பலவன் குரைகழல் போற்கமலத்
தவளைப் பயங்கர மாகநின்(று) ஆண்ட அவயவத்தின்
இவளைக்கண்(டு) இங்குநின்(று) அங்குவந்(து) அத்துனை யும்பகர்ந்த
கவளக் களிற்றண்ண லேதிண்ணி யான்இக் கடலிடத்தே. .. 37

நயந்த உருவம் நலனும் கண்டு
வியந்த வனையே மிகுத்துரைத்தது.

16 கண்டமை கூறல்
பணந்தாழ் அரவரைச் சிற்றம் பலவர்பைம் பொற்கயிலைப்
புணர்ந்தாங்(கு) அகன்ற பொருகரி யுன்னிப் புனத்தயலே
மணந்தாழ் பொழிற்கண் வடிக்கண் பரப்பி மடப்பிடிவாய்
நிணந்தாழ் சுடரிலை வேல்கண் டேன்ஒன்று நின்றதுவே. .. 38

பிடிமிசை வைத்துப் பேதையது நிலைமை
அடுதிறல் அண்ணற்கு அறிய உரைத்தது.

17. செவ்வி செப்பல்
கயலுள வேகம லத்தவர் மீது கனிபவளத்(து)
அயலுள வேமுத்தம் ஒத்த நிரைஅரன் அம்பலத்தின்
இயலுள வேபிணைச் செப்புவெற் பாநின(து) ஈர்ங்கொடிமேல்
புயலுள வேமலர் சூழ்ந்திருள் தூங்கிப் புரள்வனவே. .. 37

அற்புதன் கைலை மற்பொலி சிலம்பற்கு
அவ்வுரு கண்டவன் செவ்வி செப்பியது.

18. அவ்விடத்து ஏகல்
எயிற்குலம் முன்(று)இரும் தீஎய்த எய்தவன் தில்லையொத்துக்
குயிற்குலம் கொண்டுதொண் டைக்கனி வாய்க்குளிர் முத்தம்நிரைத்(து)
அயிற்குல வேல்கம லத்திற் கிடத்தி அனம்நடக்கும்
மயிற்குலம் கண்டதுண் டேல்அது என்னுடை மன்னுயிரே. .. 36

அரிவையது நிலைமை அறிந்தவன் உரைப்ப
எரிகதிர் வேலோன் ஏகியது

19. மின்னிடை மெலிதல்
ஆவியன் னாய்கவ லேல்அக லேம்என்(று) அளித்தொளித்த
ஆவியன் னார்மிக் கவாயின ராய்க்கெழு மற்(கு)அழிவுற்(று)
ஆவியன் னார்மன்னி ஆடிடம் சேர்வர்கொல் அம்பலத்தெம்
ஆவியன் னான்பயி லுங்கயி லாயத்(து) அருவரையே. .. 37

மன்னனை நினைந்து மின்னிடை மெலிந்தது.

20. பொழில்கண்டு மகிழ்தல்
காம்பிணை யால்களி மாமயி லால்கதிர் மாமணியால்
வாம்பிணை யால்வல்லி ஒல்குத லான்மன்னும் அம்பலவன்
பாம்பிணை யாக்குழை கொண்டோன் கயிலைப் பயில்புனமும்
தேம்பிணை வார்குழ லாளெனத் தோன்றும்என் சிந்தனைக்கே. .. 38

மணங்கமழ் பொழிலின் வடிவுகண்(டு)
அணங்கென நினைந்(து) அயர்வு நீங்கியது.

21. உயிரென வியத்தல்
நேயத்த தாய்நென்னல் என்னைப் புணர்ந்துநெஞ் சம்நெகப்போய்
ஆயத்த தாய் அமிழ் தாய்அணங் காய்அரன் அம்பலம்போல்
தேயத்த தாய்என்றன் சிந்தைய தாய்த்தெரி யிற்பெரிது
மாயத்த தாகி இதோவந்து நின்ற(து)என் மன்னுயிரே. .. 39

வெறியறு பொழிலின் வியன்பொ தும்பரின்
நெறியறு குழலி நிலைமை கண்டது.

22. தளர்வு அகன்று உரைத்தல்
தாதிவர் போதுகொய் யார்தைய லார்அங்கை கூப்பநின்று
சோதி வரிப்பந்(து) அடியார் கனைப்புனல் ஆடல்செய்யார்
போதிவர் கற்பக நாடுபுல் வென்னத்தம் பொன்அடிப்பாய்
யாதிவர் மாதவம் அம்பலத் தான்மலை எய்துதற்கே. .. 40

பனிமதி நுதலியைப் பைம்பொ ழிலிடைத்
தனிநிலை கண்டு தளர்வகன்(று) உரைத்தது.

23. மொழிபெற வருந்தல்
காவிநின்(று) ஏர்தரு கண்டர்வண் தில்லைக்கண் ணார்கமலத்
தேவிஎன் றேஐயம் சென்ற(து)அன் றேஅறி யச்சிறிது
மாவியன் றன்னமென் னோக்கிநின் வாய்திற வாவிடின்என்
ஆவியன் றேஅமிழ் தேஅணங் கேஇன்(று) அழிகின்றதே. .. 41

கூடற்(கு) அரிதென வாடி யுரைத்தது.

24. நாணிக் கண் புதைத்தல்
அகலிடம் தாவிய வானோன் அறிந்திறைஞ்(சு) அம்பலத்தின்
இகலிடம் தாவிடை ஈசன் தொழாரின்இன் னற்கிடமாய்
உகலிடம் தான்சென்(று) எனதுயிர் நையா வகையொதுங்கப்
புகலிடம் தாபொழில் வாய்எழில் வாய்தரு பூங்கொடியே. .. 42

ஆயிடைத் தனிநின்(று) ஆற்றா(து) அழிந்து
வேயுடைத் தோளியோர் மென்கொடி மறைந்தது.

25. கண் புதைக்க வருந்தல்
தாழச்செய் தார்முடி தன்னடிக் கீழ்வைத் தவரைவிண்ணோர்
சூழச்செய் தான்அம் பலங்கை தொழாரின்உள் ளந்துளங்கப்
போழச்செய் யாமல்வை வேற்கண் புதைத்துப்பொன் னேஎன்னைநீ
வாழச்செய் தாய்கற்று முற்றும் புதைநின்னை வாணுதலே. .. 43

வேல்தருங் கண்ணினை மிளிர்வன அன்றுநின்
கூற்றரு மேனியே கூற்றெனக்(கு) என்றது.

26. நாண்விட வருந்தல்
குருநாண் மலர்ப்பொழில் சூழ்தில்லைக் கூத்தனை ஏத்தலர்போல்
வருநாள் பிறவற்க வாழியரோ மற்றென் கண்மணிபோன்(று)
ஒருநாள் பிரியா(து) உயிரின் பழகி யுடன்வளர்ந்த
அருநாண் அளிய அழல்சேர் மெழுகொத்(து) அழிகின்றதே. .. 44

ஆங்ங னம்கண்(டு) ஆற்றா ளாகி
நீங்கன நாணொடு நேரிழை நின்றது.

27. மருங்கணைதல்
கோலத் தனிக்கொம்பர் உம்பர்புக்(கு) அ•தே குறைப்பவர்தம்
சீலத் தன்கொங்கை தேற்றகி லேம்சிவன் தில்லையன்னாள்
நூலொத்த நேரிடை நொய்ம்மையெண் ணாதுநுண் தேன்நசையால்
சாலத் தகாதுகண் டீர்வண்டு காள்கொண்டை சார்வதுவே. .. 45

ஒளிதிகழ் வார்குழல் அளிகுலம் விலக்கிக்
கருங்களிற் றண்ணல் மருங்க ணைந்தது.

28. இன்றியமையாமை கூறல்
நீங்கரும் பொற்கழல் சிற்றம் பலவர் நெடுவிசும்பும்
வாங்கிருந் தெண்கடல் வையமும் எய்தினும் யான்மறவேன்
தீங்ரும் பும்அமிழ் துஞ்செழுந் தேனும் பொதிந்துசெப்பும்
கோங்கரும் பும்தொலைத்(து) என்னையும் ஆட்கொண்ட கொங்கைகளே. 46

வென்றி வேலவன் மெல்லி யல்தனக்(கு)
இன்றியமை யாமை எடுத்து ரைத்தது.

29. ஆயத்து உய்த்தல்
சூளா மணியும்பர்க்(கு) ஆயவன் சூழ்பொழில் தில்லையன்னாய்க்(கு)
ஆளா ஒழிந்ததென் ஆருயிர் ஆரமிழ் தேஅணங்கே
தோளா மணியே பிணையே பலசொல்லி என்னைதுன்னும்
நாளார் மலர்பொழில் வாய்எழில் ஆயம் நணுகுகவே. .. 47

தேங்கமழ் சிலம்பன் பாங்கிற் கூட்டியது. 29

30. நின்று வருந்தல்
பொய்யுடை யார்க்(கு)அரன் போல்அக லும்மகன் றாற்புணரின்
மெய்யுடை யார்க்கவன் அம்பலம் போல மிகநணுகும்
மையுடை வாட்கண் மணியுடைப் பூண்முலை வாணுதல்வான்
பையுரை வாளர வத்(து) அல்குல் காக்கும்பைம் பூம்புனமே. 48

பாங்கிற் கூட்டிப் பதிவயின் பெயர்வோன்
நீங்கற்(கு) அருமை நின் று நினைந்தது.
------------

மூன்றாம் அதிகாரம்
3. இடந்தலைப் பாடு

நூற்பா
பொழிலிடைச் சேறல் இடந்தலை சொன்ன
வழியொடு கூட்டி வருந்திசி னோரே.

1. பொழிலிடைச் சேறல்
என்னறி வால்வந்த(து) அன்றிது முன்னும்இன் னும் முயன்றால்
மன்னெறி தந்த(து) இருந்தன்று தெய்வம் வருந்தல் நெஞ்சே
மின்எறி செஞ்சடைக் கூத்தப் பிரான்வியன் தில்லைமுந்நீர்
பொன்னெறி வார்துறை வாய்ச்சென்று மின்தோய் பொழிலிடத்தே. .. 49

ஐயரிக் கண்ணியை ஆடிடத் தேசென்(று)
எய்துவன் எனநினைந்(து) ஏந்தல் சென்றது.
-----------

நான்காம் அதிகாரம்
4. மதியுடம்படுத்தல்

பேரின்பக் கிளவி
மதியுடன் படுத்தல் வரும்ஈ ரைந்தும்
குருஅறி வித்த திருவருள் அதனைச்
சிவத்துடன் கலந்து தெரிசனம் புரிதல்.

1. பாங்கிடைச் சேறல்
எளிதன்(று) இனிக்கனி வாய்வல்லி புல்லல் எழில்மதிக்கீற்(று)
ஒளிசென்ற செஞ்சடைக் கூத்தப் பிரானைஉன் னாரின்என்கண்
தெளிசென்ற வேற்கண் வருவித்த செல்லல்எல் லாம்தெளிவித்து
அளிசென்ற பூங்குழல் தோழிக்கு வாழி அறிவிப்பனே. .. 50

கரந்துறை கிளவியின் காதல் தோழியை
இரந்துகுறை உறுவல்என்(று) ஏந்தல் சென்றது. 1

2. குறையுறத் துணிதல்
குவளைக் கருங்கண் கொடியேர் இடையிக் கொடிக்கடைக்கண்
உவளைத் தனதுயிர் என்றது தன்னோ(டு) உவமையில்லா
தவளைத்தன் பால்வைத்த சிற்றம் பலத்தான் அருளிலர்போல்
துவளத் தலைவந்த இன்னலின் னேயினிச் சொல்லுவனே. .. 51

ஓரிடத்தவரை ஒருங்கு கண்டுதன்
பேரிடர் பெருந்தகை பேசத் துணிந்தது.

3. வேழம் வினாதல்
இருங்களி யாய்இன்(று) யான்சிறு மாப்பஇன் பம்பணிவோர்
மருங்(கு)அளி யாஅனல் ஆடவல் லோன்தில்லை யான்மலையீங்(கு)
ஒருங்(கு)அளி யார்ப்ப உமிழ்மும் மதத்(து)இரு கோட்(டு)ஒருநீள்
கருக்களி யார்மத யானையுண் டோவரக் கண்டதுவே. .. 52

ஏழையர் இருவரும் இருந்த செவ்வியுள்
வேழம் வினாஅய் வெற்பன் சென்றது.

4. கலைமான் வினாதல்
கருங்கண் ணனையறி யாமைநின் றோன்தில்லைக் கார்ப்பொழில்வாய்
வருங்கள் நனையவண் டாடும் வளரிள வல்லியன்னீர்
இருங்கண் அனைய கணைபொரு புண்புண ரிப்புனத்தின்
மருங்கண் அனையதுண் டோவந்த(து) ஈங்கொரு வான்கலையே. .. 53

சிலைமான் அண்ணல் கலைமான் வினாயது.

5. வழி வினாதல்
சிலம்பணி கொண்டசேர் சீறடி பங்கன்தன் சீரடியார்
குலம்பணி கொள்ள எனைக்கொடுத் தோன்கொண்டு தான்அணியும்
கலம்பணி கொண்டிடம் அம்பலம் கொண்டவன் கார்க்கயிலைச்
சிலம்பணி கொண்டநும் சீறூர்க்(கு) உரைமின்கள் செல்நெறியே. .. 54

கலைமான் வினாய கருத்து வேறறிய
மலைமான் அண்ணல் வழிவி னாயது.

6. பதி வினாதல்
ஒருங்(கு)அட மூவெயில் ஒற்றைக் கணைகொள்சிற் றம்பலவன்
கருங்கடம் மூன்றுகு நால்வாய்க் கரியுரித் தோன்கயிலை
இரும்கடம் மூடும் பொழில்எழில் கொம்பர்அன் னீர்களின்னே
வருங்கள்தம் ஊர்பகர்ந் தால்பழி யோஇங்கு வாழ்பவர்க்கு. .. 55

பதியொடு பிறவினாய் மொழிபல மொழிந்து
மதியுடம் படுக்க மன்னன் வலித்தது.

7. பெயர் வினாதல்
தாரென்ன வோங்கும் சடைமுடி மேல்தனித் திங்கள்வைத்த
காரென்ன ஆரும் கறைமிடற்(று) அம்பல வன்கயிலை
ஊரென்ன என்னவும் வாய்திற வீர்ஒழி வீர்பழியேல்
பேரென்ன வோஉரை யீர்விரை யீர்ங்குழற் பேதையரே. .. 56

பேரமைத் தோளியர் பேர்வி னாயது.

8. மொழி பெறாது கூறல்
இரதம் உடைய நடம்ஆட்(டு) உடையவர் எம்முடையர்
வரதம் உடைய அணிதில்லை அன்னவர் இப்புனத்தார்
விரதம் உடையர் விருந்தொடு பேச்சின்மை மீட்டதன்றேல்
சரத முடையர் மணிவாய் திறக்கில் சலக்கென்பவே. .. 57

தேமொ ழியவர் வாய்மொழி பெறாது
மட்டவிழ் தாரோன் கட்டு ரைத்தது.

9. கருத்தறிவித்தல்
வின்னிற வாணுதல் வேல்நிறக் கண்மெல் லியலைமல்லல்
தன்னிறம் ஒன்றில் இருத்திநின் றோன்தன(து) அம்பலம்போல்
மின்னிற நுண்ணிடைப் பேரெழில் வெண்ணகைப் பைந்தொடியீர்
பொன்னிற அல்குலுக்(கு) ஆமோ மணிநிறப் பூந்தழையே. .. 58

உரைத்தது உரையாது கருத்தறி வித்தது.

10. இடை வினாதல்
கலைக்கீழ் அகல்அல்குல் பாரம(து) ஆரம்கண் ஆர்ந்(து)இலங்கு
முலைக்கீழ்ச் சிறிதின்றி நிற்றல்முற் றா(து)அன்(று) இலங்கையர்கோன்
மலைக்கீழ் விழச்செற்ற சிற்றம் பலவர்வண் பூங்கயிலைச்
சிலைக்கீழ்க் கணையன்ன கண்ணீர் எதுநுங்கள் சிற்றிடையே. .. 59

வழிபதி பிறவினாய் மொழிபல மொழிந்தது.
---------------

ஐந்தாம் அதிகாரம்
5. இருவரும் உள்வழி அவன் வரவுணர்தல்

நூற்பா
ஐய நாடல் ஆங்கவை இரண்டும்
மையறு தோழி அவன்வர வுணர்தல்.

பேரின்பக் கிளவி
இருவரும் உள்வழி அவன்வர வுணர்தல்
துறையோர் இரண்டும் சிவம்உயிர் விரவியது
அருளே உணர்ந்திடல் ஆகும் என்ப.

1. ஐயறுதல்
பல்இல னாகப் பகலைவென் றோன்தில்லை பாடலர்போல்
எல்இலன் நாகத்தோ(டு) ஏனம் வினாஇவன் யாவன்கொலாம்
வில்இலன் நாகத் தழைகையில் வேட்டைகொண் டாட்டம்மெய்ஓர்
சொல்இலன் ஆகற்ற வாகட வான்இச் சுனைப் புனமே. .. 60

அடற்கதிர் வேலோன் தொடர்ச்சி நோக்கித்
தையல் பாங்கி ஐயம் உற்றது.

2. அறிவு நாடல்
ஆழமன் னோஉடைத்(து) இவ்வையர் வார்த்தை அனங்கன்நைந்து
வீழமுன் நோக்கிய அம்பலத் தான்வெற்பின் இப்புனத்தே
வேழமுன் னாய்க்கலை யாய்ப்பிற வாய்ப்பின்னும் மென்தழையாய்
மாழைமெல் நோக்கி யிடையாய்க் கழிந்தது வந்துவந்தே. .. 61

வெற்பன் வினாய சொற்பதம் நோக்கி
நெறிகுழற் பாங்கி அறிவு நாடியது.
-------------------

ஆறாம் அதிகாரம்
6. முன்னுற வுணர்தல்

நூற்பா
வாட்டம் வினாதீல் முன்னுற வுணர்தல்
கூட்டி உணரும் குறிப்புரை யாகும்.

பேரின்பக் கிளவி
முன்னுற உணர்தல் எனஇ•து ஒன்றும்
சிவம்உயிர் கூடல் அருள்வினா வியது.

1. வாட்டம் வினாதல்
நிருத்தம் பயின்றவன் சிற்றம் பலத்துநெற் றித்தனிக்கண்
ஒருத்தன் பயிலும் கயிலை மலையின் உயர்குடுமித்
திருத்தம் பயிலும் கனைகுடைந்(து) ஆடிச் சிலம்பெதிர்கூய்
வருத்தம் பயின்றுகொல் லோவல்லி மெல்லியல் வாடியதே. .. 62

மின்னிடை மடந்தை தன்னியல் நோக்கி
வீங்கு மென்முலைப் பாங்கி பகர்ந்தது.
--------------------Back to thirukovaiyar Page
Back to 8th thirumuRai Page
Back to thirumuRai Home Page
Back to Shaiva Sidhdhantha Home Page