பெரியபுராணத்தில் தெய்வச் சேக்கிழார்
எடுத்துத்தந்த சம்பந்தர் தேவாரம்


பெரிய புராணத்திற் குறிக்கப்பெறும் தேவாரத் திருப்பதிகங்கள்
தொகுப்பு பற்றிய குறிப்புகள்
  • தெய்வச் சேக்கிழார் மூவர் தேவாரங்களை அடியொற்றி மூவர் தம் வரலாறுகளைப் போற்றுவது வெளிப்படையாகக் காணத்தக்கது.
  • தேவாரங்களைக் குறிப்பதோடு அல்லாமல் அவற்றின் மையக் கருத்துக்களைச், சொற்றொடர்களை பலவாகச் சிரமேற்கொண்டு பெரிய புராணத்தில் போற்றியுள்ளார்.
  • இத்தொகுப்பு கீழ்க்காணும் முறையைப் பின்பற்றித் தொகுக்கப்பட்டது.
    • பெரிய புராணத்தில் தேவாரத்தில் காணும் சொற்றொடர்களே காணப்படுவது. (உ-ம். தோடுடைய செவியன்)
    • புராணத்தில் தேவாரத்தில் கூறப்பட்ட மையக் கருத்து வெளிப்படுத்தப்படுவது. (உ-ம். நமிநந்தி அடிகள் திருத்தொண்டின் நன்மை .. பாடி)
  • இத்தொகுப்பின் நோக்கம் தேவாரப் பாடல்களோடு அவற்றைக் குறிக்கும் பெரிய புராணப் பாடல்களையும் அடியவர்கள் அதே இசையில் பாடித் திருவருள் பெற வேண்டும் என்பதே.
  • இத்தொகுப்பு பலமுறை பெரிய புராணத்தில் மீண்டும் மீண்டும் சரி பார்க்கப்பட்டு வெளியிடப்படுகின்றது. எனினும் பிழைகள் இன்னும் இருக்கக்கூடும். செம்மலர் நோன்தாளைத் தொழும் அடியவர்கள் அன்பு கூர்ந்து பொறுத்தல் கோருகின்றோம்.
  • இத்தொகுப்பு பாட்டே விரும்பும் அருச்சனையாகக் கொள்ளும் இசை விரும்பும் கூத்தனார் திருவடிகளுக்கு அஞ்சலி.

திருச்சிற்றம்பலம்

1. திருப்பிரமபுரம் பண் - நட்டபாடை

செம்மைபெற எடுத்ததிருத் "தோடுடைய செவியன்" எனும் மெய்ம்மைமொழித் திருப்பதிகம் பிரமபுர மேவினார் தம்மைஅடையா ளங்களுடன் சாற்றித் தாதையார்க்(கு) "எம்மையிது செய்தபிரான் இவனன்றே" எனஇசைத்தார். மண் உலகில் வாழ்வார்கள் பிழைத்தாலும் வந்தடையின் கண் நுதலான் பெரும் கருணை கைக் கொள்ளும் எனக்காட்ட எண்ணம் இலா வல் அரக்கன் எடுத்து முறிந்து இசைபாட அண்ணல் அவற்கு அருள் புரிந்த ஆக்கப்பாடு அருள் செய்தார் தொழுவார்க்கே அருளுவது சிவபெருமான் எனத் தொழார் வழுவான மனத்தாலே மாலாய மால் அயனும் இழிவாகும் கருவிலங்கும் பறவையுமாய் எய்தாமை விழுவார்கள் அஞ்செழுத்தும் துதித்து உய்ந்த படி விரித்தார் வேத காரணராய வெண் பிறை சேர் செய்ய சடை நாதன் நெறி அறிந்து உய்யார் தம்மிலே நலம் கொள்ளும் போதம் இலாச் சமண் கையர் புத்தர் வழியாக்கும் ஏதமே என மொழிந்தார் எங்கள் பிரான் சம்பந்தர்

தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக் காடுடையசுட லைப்பொடிபூசிஎன் உள்ளங்கவர் கள்வன் ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவ னன்றே. வியரிலங்குவரை யுந்தியதோள்களை வீரம்விளை வித்த உயரிலங்கையரை யன்வலிசெற்றென துள்ளங்கவர் கள்வன் துயரிலங்குமுல கில்பலவூழிகள் தோன்றும்பொழு தெல்லாம் பெயரிலங்குபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. தாணுதல்செய்திறை காணியமாலொடு தண்டாமரை யானும் நீணுதல்செய்தொழி யந்நிமிர்ந்தானென துள்ளங்கவர் கள்வன் வாணுதல்செய்மக ளீர்முதலாகிய வையத்தவ ரேத்தப் பேணுதல்செய்பிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. புத்தரோடுபொறி யில்சமணும்புறங் கூறநெறி நில்லா ஒத்தசொல்லவுல கம்பலிதேர்ந்தென துள்ளங்கவர் கள்வன் மத்தயானைமறு கவ்வுரிபோர்த்ததோர் மாயமிது வென்னப் பித்தர்போலும்பிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.

2. திருக்கோலக்கா பண் - தக்கராகம்

மெய்ந்நிறைந்த செம்பொருளாம் வேதத்தின் விழுப்பொருளை வேணிமீது பைந்நிறைந்த அரவுடனே பசுங்குழவித் திங்கள்பரித் தருளுவானை மைந்நிறைந்த மிடற்றானை "மடையில்வா ளைகள்பாய" என்னும் வாக்கால், கைந்நிறைந்த ஒத்தறுத்துக் கலைப்பதிகம் கவுணியர்கோன் பாடுங் காலை.

மடையில் வாளை பாய மாதரார் குடையும் பொய்கைக் கோலக் காவுளான் சடையும் பிறையுஞ் சாம்பற் பூச்சுங்கீழ் உடையுங் கொண்ட வுருவ மென்கொலோ.

3. சீர்காழி பண் - தக்கராகம்

திருப்பெருகு பெருங்கோயில் சூழவலங் கொண்டருளித் திருமுன் னின்றே அருட்பெருகு திருப்பதிகம் எட்டொருகட் டளையாக்கி அவற்றுள் ஒன்று விருப்புறுபொற் றிருத்தோணி வீற்றிருந்தார் தமைப்பாட மேவு காதல் பொருத்தமுற அருள்பெற்றுப் போற்றிஎடுத் தருளினார் "பூவார் கொன்றை".

பூவார் கொன்றைப் புரிபுன் சடையீசா காவா யெனநின் றேத்துங் காழியார் மேவார் புரமூன் றட்டா ரவர்போலாம் பாவா ரின்சொற் பயிலும் பரமரே.

4. திருநனிபள்ளி பண் – பியந்தைக் காந்தாரம்

"காரைகள் கூகை முல்லை" எனநிகழ் கலைசேர் வாய்மைச் சீரியற் பதிகம் பாடித் திருக்கடைக் காப்புத் தன்னில் "நாரியோர் பாகர் வைகும் நனிபள்ளி உள்கு வார்தம் பேரிடர் கெடுதற் காணை நம"தெனும் பெருமை வைத்தார்.

காரைகள் கூகைமுல்லை களவாகை யீகை படர்தொடரி கள்ளி கவினிச் சூரைகள் பம்மிவிம்மு சுடுகாட மர்ந்த சிவன்மேய சோலை நகர்தான் தேரைக ளாரைசாய மிதிகொள்ள வாளை குதிகொள்ள வள்ளை துவள நாரைக ளாரல்வாரி வயன்மேதி வைகும் நனிபள்ளி போலும் நமர்காள்.

5. திருவலம்புரம் பண் – பழம்பஞ்சுரம்

கறையணி கண்டர் கோயில் காதலால் பணிந்து பாடி மறையவர் போற்ற வந்துதிருவலம் புரத்து மன்னும் இறைவரைத் தொழுது பாடும் "கொடியுடை" ஏத்திப் போந்து நிறைபுனல் திருச்சாய்க் காடு தொழுதற்கு நினைந்து செல்வார்.

கொடியுடை மும்மதி லூடுருவக் குனிவெஞ் சிலைதாங்கி இடிபட எய்த அமரர்பிரான் அடியார் இசைந்தேத்தத் துடியிடை யாளையொர் பாகமாகத் துதைந்தா ரிடம்போலும் வடிவுடை மேதி வயல்படியும் வலம்புர நன்னகரே.

6. திருச்சாய்க்காடு பண் - சீகாமரம்

வானள வுயர்ந்த வாயிலுள்வலங் கொண்டு புக்குத் தேனலர் கொன்றை யார்தந் திருமுன்பு சென்று தாழ்ந்து மானிடந் தரித்தார் தம்மைப் போற்றுவார் "மண்புகார்" என்(று) ஊனெலாம் உருக ஏத்தி உச்சிமேற் குவித்தார் செங்கை.

மண்புகார் வான்புகுவர் மனமிளையார் பசியாலுங் கண்புகார் பிணியறியார் கற்றாருங் கேட்டாரும் விண்புகா ரெனவேண்டா வெண்மாட நெடுவீதித் தண்புகார்ச் சாய்க்காட்டெந் தலைவன்தாள் சார்ந்தாரே

7. திருவெண்காடு பண் - சீகாமரம்

மெய்ப்பொரு ளாயி னாரை வெண்காடு மெவி னாரைச் செப்பரும் பதிக மாலை "கண்காட்டு நுதல்" முன் சேர்த்தி முப்புரஞ் செற்றார் பாதம் சேருமுக் குளமும் பாடி ஒப்பரு ஞானம் உண்டார் உளமகிழ்ந் தேத்தி வாழ்ந்தார்.

கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும் பெண்காட்டும் உருவானும் பிறைகாட்டுஞ் சடையானும் பண்காட்டும் இசையானும் பயிர்காட்டும் புயலானும் வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டுங் கொடியானே. பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை வாயினவே வரம்பெறுவர் ஐயுறவேண் டாவொன்றும் வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர் தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே. சக்கரம்மாற் கீந்தானுஞ் சலந்தரனைப் பிளந்தானும் அக்கரைமே லசைத்தானும் அடைந்தயிரா வதம்பணிய மிக்கதனுக் கருள்சுரக்கும் வெண்காடும் வினைதுரக்கும் முக்குளம்நன் குடையானும் முக்கணுடை இறையவனே.

8. கோயில் பண் – குறிஞ்சி

ஊழி முதல்வர்க் குரிமைத் தொழிற்சிறப்பால் வாழிதிருத் தில்லைவாழ் அந்தணரை முன்வைத்தே ஏழிசையும் ஓங்க எடுத்தார் எமையாளும் காழியர்தங் காவலனார் "கற்றாங் கெரியோம்பி".

கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே செற்றார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய முற்றா வெண்திங்கள் முதல்வன் பாதமே பற்றா நின்றாரைப் பற்றா பாவமே.

9. கோயில் பண் - காந்தார பஞ்சமம்

"ஆடினாய்நறு நெய்யொடு பால்தயிர்" என்றெடுத் தார்வத்தால் பாடி னார்பின்னும் அப்பதி கத்தினிற் பரவியபாட் டொன்றில் நீடு வாழ்தில்லை நான்மறை யோர்தமைக் கண்டஅந் நிலைஎல்லாம் கூறு மறுகோத்(து) "அவர்தொழு தேத்துசிற் றம்பலம்" எனக்கூறி.

ஆடினாய்நறு நெய்யொடு பால்தயிர் அந்தணர்பிரி யாதசிற் றம்பலம் நாடினாயிடமா நறுங்கொன்றை நயந்தவனே பாடினாய்மறை யோடுபல் கீதமும் பல்சடைப்பனி கால்கதிர் வெண்திங்கள் சூடினாயருளாய் சுருங்கஎம தொல்வினையே.

10. திருமுதுகுன்றம் பண் – நட்டபாடை

மொய் கொள் மா மணி கொழித்து முத்தாறு சூழ் முது குன்றை அடைவோம் என்று எய்து சொல் மலர் மாலை வண் பதிகத்தை இசையொடும் புனைந்து ஏத்திச் செய் தவத் திரு முனிவரும் தேவரும் திசையெலாம் நெருங்கப் புக்கு ஐயர் சேவடி பணியும் அப் பொருப்பினில் ஆதரவுடன் சென்றார்

மத்தாவரை நிறுவிக்கடல் கடைந்தவ்விடம் உண்ட தொத்தார்தரு மணிநீள்முடிச் சுடர்வண்ணன திடமாம் கொத்தார்மலர் குளிர்சந்தகில் ஒளிர்குங்குமங் கொண்டு முத்தாறுவந் தடிவீழ்தரு முதுகுன்றடை வோமே.

11. திருமுதுகுன்றம் பண் - சாதாரி

தாழ்ந் தெழுந்துமுன் "முரசதிர்ந் தெழும்" எனுந் தண்டமிழ்த் தொடைசாத்தி, வாழ்ந்து போந்தங்கண் வளம்பதி அதனிடை வைகுவார் மணிவெற்புச் சூழ்ந்த தண்புனல் சுலவுமுத் தாறொடு தொடுத்தசொல் தொடைமாலை வீழ்ந்த காதலாற் பலமுறை விளம்பியே மேவினார் சிலநாள்கள்.

முரசதிர்ந் தெழுதரு முதுகுன்ற மேவிய பரசமர் படையுடை யீரே பரசமர் படையுடை யீருமைப் பரவுவார் அரசர்கள் உலகில்ஆ வாரே.

12. திருத்தூங்கானை மாடம் பண் - பழந்தக்கராகம்

ஆங்கு நாதரைப் பணிந்துபெண் ணாகடம் அணைந்தரு மறையோசை ஓங்கு தூங்கானை மாடத்துள் அமர்கின்ற ஒருதனிப் பரஞ்சோதிப் பாங்க ணைந்துமுன் வலங்கொண்டு பணிவுற்றுப் பரவுசொல் தமிழ்மாலை "தீங்கு நீங்குவீர் தொழுமின்கள்" எனும்இசைப் பதிகமும் தெரிவித்தார்.

ஒடுங்கும் பிணிபிறவி கேடென்றிவை யுடைத்தாய வாழ்க்கை யொழியத்தவம் அடங்கும் மிடங்கருதி நின்றீ ரெல்லாம் அடிக ளடிநிழற்கீ ழாளாம் வண்ணம் கிடங்கும் மதிலுஞ் சுலாவி யெங்கும் கெழுமனைகள் தோறும் மறையின்னொலி தொடங்குங் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே.

13. திருநெல்வாயில் அரத்துறை பண் – பியந்தைக் காந்தாரம்

"எந்தை ஈசன்" எனஎடுத்(து) "இவ்வருள் வந்த வாறுமற் றெவ்வண மோ?" என்று சிந்தை செய்யுந் திருப்பதி கத்திசை புந்தி யாரப் புகன்றெதிர் போற்றுவார். பொடி அணிந்த புராணன் அரத்துறை அடிகள் தம் அருளே இதுவாம் எனப் படி இலாத சொல் மாலைகள் பாடியே நெடிது போற்றிப் பதிகம் நிரப்பினார்

எந்தை யீசனெம் பெருமான் ஏறமர் கடவுளென் றேத்திச் சிந்தை செய்பவர்க் கல்லாற் சென்றுகை கூடுவ தன்றால் கந்த மாமல ருந்திக் கடும்புனல் நிவாமல்கு கரைமேல் அந்தண் சோலைநெல் வாயில் அரத்துறை யடிகள்தம் அருளே.

14. திருப்பழுவூர் பண் – இந்தளம்

மண்ணினில் பொலி குலமலையர் தாம் தொழுது எண் இல் சீர்ப் பணிகள் செய்து ஏத்தும் தன்மையில் நண்ணிய வகை சிறப்பித்து நாதரைப் பண்ணினில் திகழ் திருப்பதிகம் பாடினார்

அந்தணர்க ளானமலை யாளரவ ரேத்தும் பந்தமலி கின்றபழு வூரரனை யாரச் சந்தமிகு ஞானசம் பந்தனுரை பேணி வந்தவண மேத்துமவர் வானமுடை யாரே.

15. திருவிசயமங்கை பண் - காந்தார பஞ்சமம்

அந்தணர் விசய மங்கையினில் அங்கணர் தம் தனி ஆலயம் சூழ்ந்து தாழ்ந்து முன் வந்தனை செய்து கோ தனத்தை மன்னிய செந்தமிழ் மாலையில் சிறப்பித்து ஏத்தினார்

கீதமுன் இசைதரக் கிளரும் வீணையர் பூதமுன் இயல்புடைப் புனிதர் பொன்னகர் கோதனம் வழிபடக் குலவு நான்மறை வேதியர் தொழுதெழு விசய மங்கையே.

16. திருச்சேய்ஞலூர் பண் – பழந்தக்கராகம்

வேதியர் சேய்ஞலூர் விமலர் தம் கழல் காதலில் பணிந்தவர் கருணை போற்றுவார் தாதை தாள் தடிந்த சண்டீசப் பிள்ளையார் பாதகப் பயன் பெறும் பரிசு பாடினார்

பீரடைந்த பாலதாட்டப் பேணா தவன்தாதை வேரடைந்து பாய்ந்ததாளை வேர்த்தடிந் தான்றனக்குத் தாரடைந்த மாலைசூட்டித் தலைமை வகுத்ததென்னே சீரடைந்த கோயில்மல்கு சேய்ஞலூர் மேயவனே.

17. பொது (பஞ்சாக்கரத் திருப்பதிகம்) பண் - காந்தார பஞ்சமம்

மந்திரங்க ளானஎலாம் அருளிக் செய்து மற்றவற்றின் வைதிக நூற்சடங்கின் வந்த சிந்தைமயக் குறும்ஐயந் தெளிய எல்லாம் செழுமறையோர்க் கருளிஅவர் தெருளும் ஆற்றால் முந்தைமுதன் மந்திரங்கள் எல்லாந் தோன்று முதலாகும் முதல்வனார் எழுத்தஞ்(க) என்பார் அந்தியினுள் மந்திரம்அஞ் செழுத்து மே"என் றஞ்செழுத்தின் திருப்பதிகம் அருளிச் செய்தார்.

மந்திர நான்மறை யாகி வானவர் சிந்தையுள் நின்றவர் தம்மை யாள்வன செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க் கந்தியுள் மந்திரம் அஞ்செ ழுத்துமே.

18. திருப்புள்ளிருக்குவேளூர் பண் - சீகாமரம்

போற்றிய காதல் பெருக புள்ளிருக்கும் திருவேளூர் நால் தடம் தோளுடை மூன்று நயனப் பிரான் கோயில் நண்ணி ஏற்ற அன்பு எய்த வணங்கி இருவர் புள் வேந்தர் இறைஞ்சி ஆற்றிய பூசனை சாற்றி அஞ்சொற் பதிகம் அணிந்தார்

கள்ளார்ந்த பூங்கொன்றை மதமத்தங் கதிர்மதியம் உள்ளார்ந்த சடைமுடியெம் பெருமானார் உறையுமிடந் தள்ளாய சம்பாதி சடாயென்பார் தாமிருவர் புள்ளானார்க் கரையனிடம் புள்ளிருக்கு வேளூரே.

19. திருத்துருத்தியும் திருவேள்விக்குடியும் பண் - சாதாரி

செழுந்திரு வேள்விக் குடியில் திகழ் மணவாள நற்கோலம் பொழிந்த புனல் பொன்னி மேவும் புனிதத் துருத்தி இரவில் தழும்பிய தன்னைமையும் கூடத் தண் தமிழ் மாலையில் பாடிக் கொழுந்து வெண் திங்கள் அணிந்தார் கோடிக் காவிற் சென்றடைந்தார்

ஓங்கிமேல் உழிதரும் ஒலிபுனற் கங்கையை ஒருசடைமேற் தாங்கினார் இடுபலி தலைகலனாக்கொண்ட தம்மடிகள் பாங்கினால் உமையொடும் பகலிடம் புகலிடம் பைம்பொழில்சூழ் வீங்குநீர்த் துருத்தியார் இரவிடத் துறைவர்வேள் விக்குடியே.

20. திருந்துதேவன்குடி பண் - கொல்லி

திருந்துதே வன்குடி மன்னுஞ் சிவபெருமான் கோயில் எய்திப் பொருந்திய காதலிற் புக்குப் போற்றிவ ணங்கிப் புரிவார் "மருந்தொடு மந்திரமாகி மற்றும்இ வர்வேட மாம்"என்று அருந்தமிழ் மாலைபு னைந்தார் அளவில்ஞா னத்தமு துண்டார்.

மருந்துவேண் டில்லிலை மந்திரங் கள்ளிவை புரிந்துகேட் கப்படும் புண்ணியங் கள்ளிவை திருந்துதே வன்குடித் தேவர்தே வெய்திய அருந்தவத் தோர்தொழும் அடிகள்வே டங்களே.

21. திருவடகுரங்காடுதுறை பண் - சாதாரி

வட குரங்காடுதுறையில் வாலியார் தாம் வழிபட்ட அடைவும் திருப்பதிகத்தில் அறிய சிறப்பித்து அருளிப் புடை கொண்டு இறைஞ்சினர் போந்து புறத்துள்ள தானங்கள் போற்றி படை கொண்ட மூவிலை வேலர் பழனம் திருப்பதி சார்ந்தார்

கோலமா மலரொடு தூபமுஞ் சாந்தமுங் கொண்டுபோற்றி வாலியார் வழிபடப் பொருந்தினார் திருந்துமாங் கனிகளுந்தி ஆலுமா காவிரி வடகரை யடைகுரங் காடுதுறை நீலமா மணிமிடற் றடிகளை நினையவல் வினைகள்வீடே.

22. திருவையாறு பண் - மேகராகக்குறிஞ்சி

வந்தணைந்த திருத்தொண்டர் மருங்குவர மான்ஏந்து கையர் தம்பால் நந்திதிரு வருள்பெற்ற நன்னகரை முன்இறைஞ்சி நண்ணும் போதில் "ஐந்துபுலன் நிலைகலங்கும் இடத்தஞ்சல் என்பார்தம் ஐயா(று)" என்று புந்திநிறை செந்தமிழின் சந்தஇசை போற்றிசைத்தார் புகலி வேந்தர்.

புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி யறிவழிந்திட் டைம்மே லுந்தி அலமந்த போதாக அஞ்சேலென் றருள் செய்வான் அமருங் கோயில் வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர மழையென் றஞ்சிச் சிலமந்தி யலமந்து மரமேறி முகில்பார்க்குந் திருவை யாறே.

23. திருவையாறு பண் – இந்தளம்

"கோடல்கோங் கங்குளிர்கூ விளம்" என்னுந் திருப்பதிகக் குலவுமாலை நீடிபெருந் திருக்கூத்து நிறைந்த திருஉள்ளத்து நிலைமை தோன்ற ஆடுமா றதுவல்லான் ஐயாற்றெம் ஐயனே" என்று நின்று பாடினார் ஆடினார் பண்பினொடுங் கண்பொழிநீர் பரந்து பாய.

கோடல் கோங்கங் குளிர்கூ விளமாலை குலாயசீர் ஓடு கங்கை ஒளிவெண் பிறைசூடும் ஒருவனார் பாடல் வீணைமுழ வங்குழல் மொந்தைபண் ணாகவே ஆடு மாறுவல் லானும் ஐயாறுடை ஐயனே.

24. திருமழபாடி பண் - கௌசிகம்

செங்கைமான் மறியார்தந் திருமழபா டிப்புறத்துச் சேரச் செல்வார் "அங்கையார் அழல்" என்னும் திருப்பதிகம் எடுத்தருளி அணைந்த போழ்தில் மங்கைவாழ் பாகத்தார் மழபாடி தலையினா வணங்கு வார்கள் பொங்குமா தவமுடையார்" எனத்தொழுது போற்றிசைத்தே கோயில் புக்கார்.

அங்கை யாரழ லன்னழ கார்சடைக் கங்கை யான்கட வுள்ளிட மேவிய மங்கை யானுறை யும்மழ பாடியைத் தங்கை யால்தொழு வார்தக வாளரே.

25. திருமாந்துறை பண் - நட்டராகம்

சென்று திரு மாந்துறையில் திகழ்ந்து உறையும் துறை நதி வாழ் சென்னியார் தம் முன்றில் பணிந்து அணி நெடு மாளிகை வலம் செய்து உள்புக்கு முன்பு தாழ்ந்து துன்று கதிர்ப் பரிதிமதி மருந்துக்கள் தொழுது வழிபாடு செய்ய நின்ற நிலை சிறப்பித்து நிறை தமிழில் சொல் மாலை நிகழப் பாடி

பெருகு சந்தனங் காரகில் பீலியும் பெருமரம் நிமிர்ந்துந்திப் பொருது காவிரி வடகரை மாந்துறைப் புனிதனெம் பெருமானைப் பரிவி னாலிருந் திரவியும் மதியமும் பார்மன்னர் பணிந்தேத்த மருத வானவர் வழிபடு மலரடி வணங்குதல் செய்வோமே.

26. திருப்பாச்சில் ஆச்சிராமம் பண் - தக்கராகம்

அணிகிளர்தா ரவன்சொன்ன மாற்றம்அரு ளொடுங்கேட்டந் நிலையின் நின்றே பணிவளர்செஞ் சடைப்பாச்சின்மேய பரம் பொருளாயி னாரைப்பணிந்து "மணிவளர்கண் டரோமங்கையைவாட மயல்செய்வ தோஇவர் மாண்ப"தென்று தணிவில் பிணிதவிர்க் கும்பதிகத் தண்டமிழ் பாடினார் சண்பை நாதர்

துணிவளர் திங்கள் துளங்கி விளங்கச் சுடர்ச்சடை சுற்றிமு டித்துப் பணிவளர் கொள்கையர் பாரிடஞ் சூழ வாரிட மும்பலி தேர்வர் அணிவளர் கோலமே லாஞ்செய்து பாச்சி லாச்சிரா மத்துறை கின்ற மணிவளர் கண்டரோ மங்கையை வாட மயல்செய்வ தோஇவர் மாண்பே.

27. பொது (திருநீலகண்டப் பதிகம்) பண் – வியாழக் குறிஞ்சி

"அவ்வினைக் கிவ்வினை" என்றெடுத்து "ஐயர் அமுதுசெய்த வெவ்விடம் முன்தடுத் தெம்மிடர் நீக்கிய வெற்றியினால் எவ்விடத் தும்அடியார் இடர் காப்பது கண்டம்" என்றே "செய்வினை தீண்டா திருநீல கண்டம்" எனச்செப்பினார்.

அவ்வினை கிவ்வினை யாமென்றும் சொல்லு ம தறிவீர் உய்வினை நாடா திருப்பதும் உந்தமக் கூனமன்றே கைவினை செய்தெம் பிரான்கழ்ல் போற்றுதும் நாமடியோம் செய்வினை வந்தெமைத் தீண்டப் பெறாதிரு நீலகண்டம்.

28. திருவானைக்கா பண் – இந்தளம்

விண்ணவர் போற்றி செய் ஆனைக் காவில் வெண் நாவல் மேவிய மெய்ப் பொருளை நண்ணி இறைஞ்சி முன் வீழ்ந்து எழுந்து நால் கோட்டு நாகம் பணிந்ததுவும் அண்ணல் கோச் செங்கண் அரசன்செய்த அடிமையும் அஞ்சொல் தொடையில் வைத்துப் பண் உறு செந்தமிழ் மாலைப் பாடி பரவி நின்று ஏத்தினர் பான்மையினால்

செங்கட் பெயர்கொண் டவன்செம் பியர்கோன் அங்கட் கருணை பெரிதா யவனே வெங்கண் விடையா யெம்வெண்நா வலுளாய் அங்கத் தயர்வா யினள்ஆ யிழையே.

29. திருவானைக்கா (கூடற்சதுக்கம்) பண் – பழம்பஞ்சுரம்

நாரணன் நான்முகன் காணா உண்மை வெண் நாவல் உண்மை மயேந்திரமும் சீரணி நீடு திருக்கயிலை செல்வத் திருவாரூர் மேய பண்பும் ஆரணத்து உட் பொருள் ஆயினாரை ஆனைக் காவின் கண் புகழ்ந்து பாடி ஏர் அணியும் பொழில் சூழ்ந்த சண்பை ஏந்தலார் எல்லை இல் இன்பம் உற்றார்

மண்ணது வுண்டரி மலரோன்காணா வெண்ணாவல் விரும்பும யேந்திரருங் கண்ணது வோங்கிய கயிலையாரும் அண்ணல்ஆ ரூராதி யானைக்காவே.

30. திருநெடுங்களம் பண் – பழந்தக்கராகம்

நெடுங்களத் தாதியை அன்பால்"நின்பால் நெஞ்சம் செலாவகை நேர்விலக்கும் இடும்பைகள் தீர்த்தருள் செய்வாய்" என்றும் இன்னிசை மாலைகொண் டேத்தி ஏகி அடும்பணிச் செஞ்சடை யார்பதிகள் அணைந்து பணிந்து நியமம்போற்றிக் கடுங்கைவரைஉரித் தார்மகிழ்ந்த காட்டுப்பள் ளிப்பதி கைதொழுவார்.

மறையுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும் பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப்பே சினல்லால் குறையுடையார் குற்றம்ஓராய் கொள்கையினால் உயர்ந்த நிறையுடையார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே.

31. மேலைத் திருக்காட்டுப்பள்ளி பண் - கொல்லி

சென்று திகழ்திருக் காட்டுப்பள்ளிச் செஞ்சடை நம்பர்தங் கோயில் எய்தி முன்றில் வலங்கொண் டிறைஞ்சிவீழ்ந்து மொய்கழற் சேவடி கைதொழுவார் கன்றணை ஆவின் கருத்துவாய்ப்பக் கண்ணுதலாரைமுன் போற்றிசெய்து மன்றுள்நின் றாடல் மனத்துள் வைப்பார் "வாருமன் னும்முலை" பாடி வாழ்ந்தார்.

வாருமன் னும்முலை மங்கையோர் பங்கினன் ஊருமன் னும்பலி யுண்பதும் வெண்டலை காருமன் னும்பொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி நீருமன் னுஞ்சடை நிமலர்தந் நீர்மையே.

32. திருக்கண்டியூர்வீரட்டம் - வினாவுரை பண் - கொல்லி

வினவி எடுத்த திருப் பதிகம் மேவு திருக்கடைக் காப்பு தன்னில் அனைய நினைவு அரியேன் செயலை அடியாரைக் கேட்டு மகிழ்ந்த தன்மை புனைவுறு பாடலில் போற்றி செய்து போந்து புகலிக் கவுணியனார் துனை புனல் பொன்னித் திரை வலம் கொள் சோற்றுத் துறை தொழச் சென்று அடைவார்

வினவினேன்அறி யாமையில்லுரை செய்ம்மினீரருள் வேண்டுவீர் கனைவிலார்புனற் காவிரிக்கரை மேயகண்டியூர் வீரட்டன் தனமுனேதனக் கின்மையோதம ராயினாரண்ட மாளத்தான் வனனில்வாழ்க்கைகொண் டாடிப்பாடியிவ் வையமாப்பலி தேர்ந்ததே. கருத்தனைப்பொழில் சூழுங்கண்டியூர் வீரட்டத்துறை கள்வனை அருத்தனைத்திறம் அடியர்பால்மிகக் கேட்டுகந்த வினாவுரை திருத்தமாந்திகழ் காழிஞானசம் பந்தன்செப்பிய செந்தமிழ் ஒருத்தராகிலும் பலர்களாகிலும் உரைசெய்வா ருயர்ந்தார்களே.

33. திருச்சோற்றுத்துறை பண் - தக்கராகம்

அப்பர் சோற்றுத் துறை சென்று அடைவோம் என்று ஒப்பில் வண் தமிழ் மாலை ஒருமையால் செப்பியே சென்று சேர்ந்தனர் சேர்விலார் முப்புரம் செற்ற முன்னவர் கோயில் முன்

செப்ப நெஞ்சே நெறிகொள் சிற்றின்பம் துப்ப னென்னா தருளே துணையாக ஒப்ப ரொப்பர் பெருமான் ஒளிவெண்ணீற் றப்பர் சோற்றுத் துறைசென் றடைவோமே.

34. திருக்கருகாவூர் பண் - கௌசிகம்

வந்து பந்தர்மா தவிமணங் கமழ்கரு காவூர்ச் சந்த மாமறை தந்தவர் கழலிணை தாழ்ந்தே "அந்தம் இல்லவர் வண்ணம்ஆ ரழல் வண்ணம்" என்று சிந்தை இன்புறப் பாடினார் செழுந்தமிழ்ப் பதிகம்.

முத்தி லங்குமுறு வல்லுமை யஞ்சவே மத்த யானைமறு கவ்வுரி வாங்கியக் கத்தை போர்த்தகட வுள்கரு காவூரெம் அத்தர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே.

35. திருஅவளிவணல்லூர் - திருவிராகம் பண் - சாதாரி

மன்னும் அப்பதி வானவர் போற்றவும் மகிழ்ந்த தன்மையார் பயில் கோயில் உள் தம்பரிசு உடையார் என்னும் நாமமும் நிகழ்ந்திட ஏத்தி முன் இறைஞ்சிப் பன்னு சீர்ப் பதி பலவும் அப்பால் சென்று பணிவார்

கொம்பிரிய வண்டுலவு கொன்றைபுரி நூலொடு குலாவித் தம்பரிசி னோடுசுடு நீறுதட வந்திடப மேறிக் கம்பரிய செம்பொனெடு மாடமதில் கல்வரைவி லாக அம்பெரிய வெய்தபெரு மானுறைவ தவளிவண லூரே.

36. திருவலஞ்சுழி (வினாவுரை) பண் – இந்தளம்

ஞான போனகர் நம்பர் முன் தொழுது எழும் விருப்பால் ஆன காதலில் அங்கணவர் தமை வினவும் ஊனமில் இசையுடன் விளங்கிய திருப்பதிகம் பான் அலார் மணிகண்டரைப் பாடினார் பரவி

விண்டெ லாமல ரவ்விரை நாறுதண் டேன்விம்மி வண்டெ லாம்நசை யாலிசை பாடும் வலஞ்சுழித் தொண்டெ லாம்பர வுஞ்சுடர் போலொளி யீர்சொலீர் பண்டெ லாம்பலி தேர்ந்தொலி பாடல் பயின்றதே.

37. திருவிரும்பூளை (வினாவுரை) பண் – இந்தளம்

நிகர் இலா மேருவரை அணுவாக நீண்டானை நுகர்கின்ற தொண்டர் தமக்கு அமுதாகி நொய்யானை தகவு ஒன்ற அடியார்கள் தமை வினவித் தமிழ் விரகர் பகர்கின்ற அருமறையின் பொருள் விரியப் பாடினார்

சீரார் கழலே தொழுவீ ரிதுசெப்பீர் வாரார் முலைமங்கை யொடும் முடனாகி ஏரா ரிரும்பூளை யிடங்கொண்ட ஈசன் காரார் கடல்நஞ் சமுதுண்ட கருத்தே.

38. திருக்குடமூக்கு பண் – பஞ்சமம்

திருஞான சம்பந்தர் திருக்குட மூக்கினைச் சேர வருவார் தம் பெருமானை வண் தமிழின் திருப்பதிகம் உருகா நின்று உளம் மகிழ்க் குட மூக்கை உவந்து இருந்த பெருமான் எம் இறை என்று பெருகு இசையால் பரவினார்

அரவிரி கோடனீட லணிகாவிரி யாற்றயலே மரவிரி போதுமௌவல் மணமல்லிகை கள்ளவிழுங் குரவிரி சோலைசூழ்ந்த குழகன்குட மூக்கிடமா இரவிரி திங்கள்சூடி யிருந்தானவன் எம்மிறையே.

39. திருவிடைமருதூர் பண் - தக்கராகம்

ஓங்குதிருப் பதிகம், "ஓ டேகலன்"என் றெடுத்தருளித் தாங்கரிய பெருமகிழ்ச்சி தலைசிறக்குந் தன்மையினால் "ஈங்கெனைஆ ளுடையபிரான் இடைமருதீ தோ"என்று பாங்குடைய இன்னிசையாற் பாடிஎழுந் தருளினார்.

ஓடேகலன் உண்பதும் ஊரிடு பிச்சை காடேயிட மாவது கல்லால் நிழற்கீழ் வாடாமுலை மங்கையுந் தானும் மகிழ்ந்து ஈடாவுறை கின்ற இடைமரு தீதோ.

40. திருவாவடுதுறை பண் - காந்தார பஞ்சமம்

சென்று தேவர் தம்பிரான் மகிழ் கோயில் முன்பு எய்தி நின்று போற்றுவார் நீள் நிதி வேண்டினார்க்கு ஈவது ஒன்றும் மற்றிலேன் உன்னடி அல்லது ஒன்று அறியேன் என்று பேர் அருள் வினவிய செந்தமிழ் எடுத்தார்

இடரினுந் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உன்கழல் தொழுதெழுவேன் கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆடுவதுறை யரனே.

41. திருத்துருத்தி பண் - நட்டராகம்

திரைத்த டம்புரற் பொன்னிசூழ் திருத்துருந் தியினில் "வரைத்த லைப்பசும் பொன்"எனும் வண்தமிழ்ப் பதிகம் உரைத்து மெய்யுறப் பணிந்துபோந் துலவும்அந் நதியின் கரைக்கண் மூவலூர்க் கண்ணுத லார்கழல் பணிந்தார்.

வரைத்தலைப் பசும்பொனோ டருங்கலன்கள் உந்திவந் திரைத்தலைச் சுமந்துகொண் டெறிந்திலங்கு காவிரிக் கரைத்தலைத் துருத்திபுக் கிருப்பதே கருத்தினாய் உரைத்தலைப் பொலிந்துனக் குணர்த்துமாறு வல்லமே.

42. திருத்தருமபுரம் யாழ்மூரி

வேதநெறி வளர்ப்பவரும் விடையவர்முன் தொழுதுதிருப்பதிகத் துண்மை பூதலத்தோர் கண்டத்தும் கலத்தினிலும் நிலத்துநூல் புகன்ற பேத நாதஇசை முயற்சிகளால் அடங்காத வகைகாட்ட நாட்டுகின்றார் "மாதர்மடப் பிடி"பாடி வணங்கினார் வானவரும் வணங்கி ஏத்த.

மாதர் மடப்பிடியும் மட அன்னமும் அன்னதோர் நடை யுடைம் மலை மகள் துணையென மகிழ்வர் பூதஇ னப்படைநின் றிசை பாடவும் ஆடுவர் அவர் படர் சடைந் நெடு முடியதொர் புனலர் வேதமொ டேழிசைபா டுவ ராழ்கடல் வெண்டிரை யிரைந் நுரை கரை பொரு துவிம்மிநின் றயலே தாதவிழ் புன்னைதயங் கும லர்ச்சிறை வண்டறை யெழில் பொழில் குயில் பயில் தருமபு ரம்பதியே.

43. திருநள்ளாறு பண் – பழந்தக்கராகம்

உருகியஅன் புறுகாதல் உள்ளுருகி நனைஈரம் பெற்றாற்போல மருவுதிரு மேனிஎலாம் முகிழ்த்தெழுந்த மயிர்ப்புளகம் வளர்க்கு நீரால் அருவிசொரி திருநயனத் தானந்த வெள்ளம்இழிந் தலைய நின்று பொருவில்பதி கம்"போக மார்த்தபூண் முலையாள்"என் றெடுத்துப் போற்றி.

போகமார்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம் பாகமார்த்த பைங்கண்வெள் ளேற்றண்ணல் பரமேட்டி ஆகமார்த்த தோலுடையன் கோவண ஆடையின்மேல் நாகமார்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே.

44. திருச்சாத்தமங்கை பண் – பஞ்சமம்

கோது இலா ஆர் அமுதைக் கோமளக் கொம்புடன் கூடக் கும்பிட்டு ஏத்தி ஆதி ஆம் மறைப் பொருளால் அரும் தமிழின் திருப்பதிகம் அருளிச் செய்வார் நீதியால் நிகழ்கின்ற நீல நக்கர் தம் பெரும் சீர் நிகழ வைத்துப் பூதி சாதனர் பரவும் புனித இயல் இசைப் பதிகம் போற்றி செய்தார்

மறையினார் மல்குகாழித் தமிழ்ஞானசம் பந்தன்மன்னும் நிறையினார் நீலநக்கன் நெடுமாநக ரென்றுதொண்டர் அறையுமூர் சாத்தமங்கை அயவந்திமே லாய்ந்தபத்தும் முறைமையா லேத்தவல்லார் இமையோரிலும் முந்துவரே.

45. திருச்செங்காட்டங்குடி பண் – பஞ்சமம்

அங்கு அணைந்து கோயில் வலம் கொண்டு அருளி அரவு அணிந்தார் அடிக் கீழ் வீழ்ந்து செங்கண் அருவிகள் பொழியத் திருமுன்பு பணிந்து எழுந்து செங்கை கூப்பித் தங்கள் பெரும் தகையாரைச் சிறுத் தொண்டர் தொழ இருந்த தன்மை போற்றிப் பொங்கி எழும் இசைபாடிப் போற்றி இசைத்து அங்கு ஒரு பரிசு புறம்பு போந்தார்

பைங்கோட்டு மலர்ப்புன்னைப் பறவைகாள் பயப்பூரச் சங்காட்டந் தவிர்த்தென்னைத் தவிராநோய் தந்தானே செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டன் பணிசெய்ய வெங்காட்டுள் அனலேந்தி விளையாடும் பெருமானே.

46. திருமருகல் பண் – இந்தளம்

சடையானை எவ்வுயிர்க்கும் தாயானானை சங்கரனை சசி கண்ட மவுலியானை விடையானை வேதியனை வெண் நீற்றானை விரவாதார் புரம் மூன்றும் எரியச் செற்ற படையானைப் பங்கயத்து மேவினானும் பாம்பு அணையில் துயின்றானும் பரவும் கோலம் உடையானை உடையானே தகுமோ இந்த ஒள்ளிழையார் உள் மெலிவு என்று எடுத்துப் பாட

சடையா யெனுமால் சரண்நீ யெனுமால் விடையா யெனுமால் வெருவா விழுமால் மடையார் குவளை மலரும் மருகல் உடையாய் தகுமோ இவள்உள் மெலிவே.

47. திருமருகலும் திருச்செங்காட்டங்குடியும் பண் - நட்டபாடை

மருகல் அமர்ந்து நிறைந்த கோலம் மல்கு செங் காட்டங் குடியின் மன்னிப் பெருகு கணபதி ஈச்சரத்தார் பீடு உடைக் கோலமே ஆகித் தோன்ற உருகிய காதலும் மீது பொங்க உலகர் முன் கொள்ளும் உணர்வு நீட அருவி கண் வார் உறப் பாடலுற்றார் அங்கமும் வேதமும் என்று எடுத்து

அங்கமும் வேதமும் ஓதுநாவர் அந்தணர் நாளும் அடிபரவ மங்குல் மதிதவழ் மாடவீதி மருகல் நிலாவிய மைந்தசொல்லாய் செங்கய லார்புனற் செல்வமல்கு சீர்கொள் செங்காட்டங் குடியதனுள் கங்குல் விளங்கெரி யேந்தியாடுங் கணபதி யீச்சரங் காமுறவே.

48. திருப்புகலூர் வர்த்தமானீச்சரம் பண் – பியந்தைக் காந்தாரம்

ஆங்கு அவர் போற்றும் சிறப்பின் மேவி அப் பதி தன்னில் அமரு நாளில் வாங்கு மலைச் சிலையார் மகிழ்ந்த வர்த்த மானீச்சரம் தான் வணங்கி ஓங்கிய அன்பின் முருகனார் தம் உயர் திருத்தொண்டு சிறப்பித்து ஓங்கும் பாங்கு உடை வண்தமிழ் பாடி நாளும் பரமர் தம் பாதம் பணிந்து இருந்தார்

தொண்டர் தண்கயம் மூழ்கித் துணையலுஞ் சாந்தமும் புகையுங் கொண்டு கொண்டடி பரவிக் குறிப்பறி முருகன் செய்கோலங் கண்டு கண்டுகண் குளிரக் களிபரந் தொளிமல்கு கள்ளார் வண்டு பண்செயும் புகலூர் வர்த்தமா னீச்சரத் தாரே.

49. திருவாரூர் பண் – வியாழக்குறிஞ்சி

சொல் பெரு வேந்தரும் தோணி மூதூர் தோன்றல் பின் காதல் தொடத் தாமும் பொன் புகலூர் தொழச் சென்று அணைந்தார் புகலிப் பிரானும் புரிந்த சிந்தை விற்குடி வீரட்டம் சென்று மேவி விடையவர் பாதம் பணிந்து போற்றிப் பற்பல ஆயிரம் தொண்டரோடும் பாடலன் நான் மறைப் பாடிப் போந்தார் துணர் இணர்ச் சோலையும் சாலி வேலித் துறை நீர்ப் பழனமும் சூழ் கரும்பின் மண மலி கானமும் ஞானமும் உண்டார் மருங்கு உற நோக்கி மகிழ்ந்து அருளி அணைபவர் அள்ளல் கழனி ஆரூர் அடைவோம் என மொழிந்து அன்பு பொங்கப் புணர் இசைச் செந்தமிழ் கொண்டு போற்றிப் பொன் மதில் ஆரூர்ப் புறத்து அணைந்தார்

பாடலன் நான்மறையன் படிபட்ட கோலத்தன் திங்கள் சூடலன் மூவிலைய சூலம் வலனேந்திக் கூடலர் மூவெயிலும் எரியுண்ணக் கூரெரிகொண் டெல்லி ஆடலன் ஆதிரையன் ஆரூர் அமர்ந்தானே. உள்ளமோர் இச்சையினால் உகந்தேத்தித் தொழுமின்தொண்டீர் மெய்யே கள்ளம் ஒழிந்திடுமின் கரவா திருபொழுதும் வெள்ளமோர் வார்சடைமேற் கரந்திட்ட வெள்ளேற்றான் மேய அள்ளல் அகன்கழனி ஆரூர் அடைவோமே.

50. திருவாரூர் பண் - நட்டராகம்

வான் உயர் செங்கதிர் மண்டலத்து மருங்கு அணையும் கொடி மன்னும் ஆரூர் தான் ஒரு பொன் உலகு என்னத் தோன்றும் தயங்கு ஒளி முன் கண்டு சண்பை வந்த பால் நிற நீற்றர் பருக்கையானைப் பதிகத் தமிழ் இசைபாடி ஆடித் தேனொடு வண்டுமுரலும் சோலைத் திருப்பதி மற்று அதன் எல்லை சேர்ந்தார்

பருக்கையானை மத்தகத் தரிக்குலத் துகிர்ப்புக நெருக்கிவாய நித்திலந் நிரக்குநீள் பொருப்பனூர் கருக்கொள்சோலை சூழநீடு மாடமாளி கைக்கொடி அருக்கன்மண்ட லத்தணாவும் அந்தணாரூ ரென்பதே.

51. திருவாரூர் பண் - கௌசிகம்

வந்து இறைஞ்சும் மெய்த் தொண்டர் தம் குழாத்து எதிர் வணங்கிச் சந்த முத்தமிழ் விரகராம் சண்பையர் தலைவர் அந்தமாய் உலகு ஆதியாம் பதிகம் அங்கு எடுத்தே எந்தை தான் எனை என்று கொள்ளும் கொல் என்று இசைத்தார்

அந்த மாயுல காதியு மாயினான் வெந்த வெண்பொடிப் பூசிய வேதியன் சிந்தை யேபுகுந் தான்திரு வாரூரெம் எந்தை தானெனை யேன்றுகொ ளுங்கொலோ.

52. திருவாரூர் பண் - காந்தாரம்

புவன ஆரூரினில் புறம் போந்து அதனையே நோக்கி நின்றே அவம் இலா நெஞ்சமே அஞ்சல் நீ உய்யும் ஆறு அறிதி அன்றே சிவனது ஆரூர் தொழாய் நீ மறவாது என்று செங்கை கூப்பி பவனமாய்ச் சோடையாய் எனும் திருப்பதிகம் முன் பாடினாரே

பவனமாய்ச் சோடையாய் நாவெழாப் பஞ்சுதோய்ச் சட்ட வுண்டு சிவனதாட் சிந்தியாப் பேதைமார் போலநீ வெள்கி னாயே கவனமாய்ப் பாய்வதோர் ஏறுகந் தேறிய காள கண்டன் அவனதா ரூர்தொழு துய்யலாம் மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.

53. திருப்புகலூர் பண் - நட்டபாடை

கும்பிடும் கொள்கையில் குறி கலந்து இசை எனும் பதிக முன் ஆன பாடல் தம் பெரும் தலைமையால் நிலைமை சால் பதிய தன் பெருமை சால்புற விளம்பி உம்பரும் பரவுதற்கு உரிய சொல் பிள்ளையார் உள்ளம் மெய்க் காதல் கூர நம்பர் தம் பதிகள் ஆயின ஏனைப் பலவும் முன் நண்ணியே தொழ நயந்தார்

குறிகலந்தஇசை பாடலினான்நசை யாலிவ்வுல கெல்லாம் நெறிகலந்ததொரு நீர்மையனாயெரு தேறும்பலி பேணி முறிகலந்ததொரு தோலரைமேலுடை யானிடம்மொய்ம் மலரின் பொறிகலந்தபொழில் சூழ்ந்தயலேபுய லாரும்புக லூரே.

54, 55. திருஅம்பர்மாகாளம் பண் - நட்டராகம்

பொருவு இலாத சொல் புல்கு பொன் நிறம் முதல் பதிகங்களால் போற்றித் திருவின் ஆர்ந்த கோச் செங்கணான் அந்நகர் செய்த கோயிலைச் சேர்ந்து மருவு வாய்மை வண் தமிழ் மாலை அவ்வளவனைச் சிறப்பித்துப் பெருகு காதலில் பணிந்து முன் பரவினார் பேணிய உணர்வோடும்

புல்கு பொன்னிறம் புரிசடை நெடுமுடிப் போழிள மதிசூடிப் பில்கு தேனுடை நறுமலர்க் கொன்றையும் பிணையல்செய் தவர்மேய மல்கு தண்டுறை அரிசிலின் வடகரை வருபுனல் மாகாளம் அல்லும் நண்பக லுந்தொழும் அடியவர்க் கருவினை அடையாவே.

திருஅம்பர்ப் பெர்ருந்திருக்கோயில் பண் - காந்தார பஞ்சமம்

எரிதர அனல்கையில் ஏந்தி எல்லியில் நரிதிரி கானிடை நட்டம் ஆடுவர் அரிசிலம் பொருபுனல் அம்பர் மாநகர்க் குரிசில்செங் கண்ணவன் கோயில் சேர்வரே.

56. திருக்கடவூர் வீரட்டம் பண் - காந்தார பஞ்சமம்

மற்ற வண் பதி அணைந்து வீர அட்டத்து மழவிடையார் கோயில் சுற்று மாளிகை வலம் கொண்டு காலனை உதைத்து உருட்டிய செய்ய பொன் சிலம்பு அணி தாமரை வணங்கிமுன் போற்றி உய்ந்து எதிர் நின்று பற்று அறுப்பவர் சடை உடையான் எனும் பதிக இன் இசை பாடி

சடையுடை யானும்நெய் யாடலா னுஞ்சரி கோவண உடையுடை யானுமை ஆர்ந்தவொண் கண்ணுமை கேள்வனுங் கடையுடை நன்னெடு மாடமோங் குங்கட வூர்தனுள் விடையுடை யண்ணலும் வீரட்டா னத்தர னல்லனே.

57. திருவீழிமிழலை பண் - தக்கராகம்

அப்போது அரையார் விரிகோவண ஆடை ஒப்பு ஓதரும் பதிகத்து ஓங்கும் இசைபாடி மெய்ப் போதப் போது அமர்ந்தார் தம் கோயில் மேவினார் கைப் போது சென்னியின் மேல் கொண்டு கவுணியர்

அரையார் விரிகோ வணஆடை நரையார் விடையூர் திநயந்தான் விரையார் பொழில்வீ ழிம்மிழலை உரையால் உணர்வார் உயர்வாரே.

58. திருவீழிமிழலை பண் - நட்டபாடை

போற்றிச் சடையார் புனல் உடையான் என்று எடுத்து சாற்றிப் பதிகத் தமிழ் மாலை சந்த இசை ஆற்ற மிகப் பாடி ஆனந்த வெள்ளத்தில் நீற்றழகர் சேவடிக் கீழ் நின்று அலைந்து நீடினார்

சடையார்புன லுடையானொரு சரிகோவண முடையான் படையார்மழு வுடையான்பல பூதப்படை யுடையான் மடமான்விழி யுமைமாதிடம் உடையானெனை யுடையான் விடையார்கொடி யுடையானிடம் வீழிம்மிழ லையே.

59. திருப்புகலியும் திருவீழிமிழலையும் பண் - நட்டபாடை

மைம் மரு பூங்குழல் என்று எடுத்து மாறில் பெரும் திருத்தோணி தன் மேல் கொம்மை முலையினாள் கூட நீடு கோலம் குலாவு மிழலை தன்னுள் செம்மை தரு விண் இழிந்த கோயில் திகழ்ந்தபடி இது என் கொல் என்று மெய்ம்மை விளங்கும் திருப்பதிகம் பாடி மகிழ்ந்தனர் வேதவாயர்

மைம்மரு பூங்குழல் கற்றைதுற்ற வாணுதல் மான்விழி மங்கையோடும் பொய்ம்மொழி யாமறை யோர்களேத்தப் புகலி நிலாவிய புண்ணியனே எம்மிறை யேயிமை யாதமுக்கண் ஈசவென்நேச விதென்கொல் சொல்லாய் மெய்ம்மொழி நான்மறை யோர்மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே.

60. திருவீழிமிழலை பண் – குறிஞ்சி

மற்றை நாள் தம்பிரான் கோயில் புக்கு வாசி தீர்த்து அருளும் எனப் பதிகம் பாடிப் பெற்றபடி நல் காசு கொண்டு மாந்தர் பெயர்ந்து போய் ஆவண வீதியினில் காட்ட நல் தவத்தீர் இக் காசு சால நன்று வேண்டுவன நாம் தருவோம் என்று நல்க அற்றை நாள் தொடங்கி நாள் கூறு தன்னில் அடியவரை அமுது செய்வித்து ஆர்வம் மிக்கார்

வாசி தீரவே, காசு நல்குவீர் மாசின் மிழலையீர், ஏச லில்லையே.

61. திருமறைக்காடு - கதவடைக்கப்பாடியபதிகம் பண் - இந்தளம்

அன்று அரசு அருளிச் செய்ய அருமறைப் பிள்ளையாரும் வென்றி வெள் விடையார் தம்மை விருப்பினால் சதுரம் என்னும் இன் தமிழ்ப் பதிகப் பாடல் இசைத்திட இரண்டு பாலும் நின்ற அக் கதவு காப்பு நிரம்பிட அடைத்தது அன்றே

சதுரம் மறைதான் துதிசெய்து வணங்கும் மதுரம் பொழில்சூழ் மறைக்காட் டுறைமைந்தா இதுநன் கிறைவைத் தருள்செய்க எனக்குன் கதவந் திருக்காப்புக் கொள்ளுங் கருத்தாலே

62. திருவாய்மூர் பண் - நட்டராகம்

அந்நிலை அணைந்த போதில் அம்பிகை உடனே கூட மன்னிய ஆடல் காட்டத் தளர் இளவள ரும் பாடிச் சென்னியால் வணங்கி வாய்மூர் அரசொடும் சென்று புக்கு அங்கு இன் இயல்பு உற முன் கூடி இருவரும் போற்றி செய்தார்

தளிரிள வளரென உமைபாடத் தாள மிடவோர் கழல்வீசிக் கிளரிள மணியர வரையார்த் தாடும் வேடக் கிறிமையார் விளரிள முலையவர்க் கருள்நல்கி வெண்ணீ றணிந்தோர் சென்னியின்மேல் வளரிள மதியமொ டிவராணீர் வாய்மூ ரடிகள் வருவாரே.

63. பொது (கோளறு திருப்பதிகம்) பண் - பியந்தைக்காந்தாரம்

அரசர் அருளிச் செய்கிறார் பிள்ளாய் அந்த அமண் கையர் வஞ்சனைக்கு ஓர் அவதி இல்லை உரை செய்வது உளது உறு கோள் தானும் தீய எழுந்து அருள உடன்படுவது ஒண்ணாது என்ன பரசுவது நம் பெருமான் கழல்கள் என்றால் பழுது அணையாது எனப் பகர்ந்து பரமர் செய்ய விரை செய் மலர்த்தாள் போற்றி புகலி வேந்தர் வேய் உறு தோளியை எடுத்து விளம்பினாரே

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால் ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி சனிபாம்பி ரண்டு முடனே ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.

64. திருஆலவாய் பண் - புறநீர்மை

தொண்டர்தாம் போற்றிக் காட்டிடக் கண்டு துணைமலர்க் கரம் குவித்து அருளி மண்டு பேரன்பால் மண்மிசைப் பணிந்து மங்கையர்க்கரசி என்று எடுத்தே எண் திசையும் பரவும் ஆலவாய் ஆவது இதுவே என்று இருவர் தம் பணியும் கொண்டமை சிறப்பித்து அருளி நல் பதிகம் பாடினார் குவலயம் போற்ற

மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மட மானி பங்கயச் செல்வி பாண்டிமா தேவி பணிசெய்து நாடொறும் பரவப் பொங்கழ லுருவன் பூதநா யகனால் வேதமும் பொருள்களும் அருளி அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவா யாவதும் இதுவே.

65. திருஆலவாய் பண் – குறிஞ்சி

நீல மா மிடற்று ஆலவாயான் என நிலவும் மூலம் ஆகிய திரு இருக்குக் குறள் மொழிந்து சீல மாதவத் திருத் தொண்டர் தம் ஒடும் திளைத்தார் சாலும் மேன்மையில் தலைச்சங்கப் புலவனார் தம்முன்

நீல மாமிடற், றால வாயிலான் பால தாயினார், ஞாலம் ஆள்வரே.

66. திருவாலவாய் பண் - கௌசிகம்

வெய்ய தீங்கு இது வேந்தன் மேற்று எனும் விதி முறையால் செய்யனே திரு ஆலவாய் எனும் திருப்பதிகம் சைவர் வாழ் மடத்து அமணர்கள் இட்ட தீத் தழல் போய்ப் பையவே சென்று பாண்டியற்கு ஆக எனப் பணித்தார் பாண்டிமா தேவியார் தமது பொற்பில் பயிலும் நெடு மங்கல நாண் பாதுகாத்தும் ஆண் தகையார் குலச் சிறையார் அன்பினாலும் அரசன் பால் அபராதம் உறுதலாலும் மீண்டும் சிவ நெறி அடையும் விதியினாலும் வெண்ணீறு வெப்பு அகலப் புகலி வேந்தர் தீண்டி இடப் பேறு உடையன் ஆதலாலும் தீப்பிணி பையவே செல்க என்றார்

செய்ய னேதிரு ஆலவாய் மேவிய ஐய னேயஞ்ச லென்றருள் செய்யெனைப் பொய்ய ராம்அம ணர்கொளு வுஞ்சுடர் பைய வேசென்று பாண்டியற் காகவே.

67, 68

கான் இடை ஆடுவாரைக் காட்டு மா உரி முன் பாடித் தேன் அலர் கொன்றையார் தம் திருவுளம் நோக்கிப் பின்னும் ஊனமில் வேத வேள்வி என்று எடுத்துத் துரையின் மாலை மானமில் அமணர் தம்மை வாதில் வென்று அழிக்கப்பாடி ஆலமே அமுதம் ஆக உண்டு வானவர்க்கு அளித்துக் காலனை மார்க் கண்டர்க்காக் காய்ந்தனை அடியேற்கு இன்று ஞாலம் நின் புகழே ஆக வேண்டும் நான் மறைகள் ஏத்தும் சீலமே ஆலவாயில் சிவ பெருமானே என்றார்

திருஆலவாய் பண் - கௌசிகம்

காட்டு மாவ துரித்துரி போர்த்துடல் நாட்ட மூன்றுடை யாயுரை செய்வனான் வேட்டு வேள்விசெய் யாவமண் கையரை ஓட்டி வாதுசெ யத்திரு வுள்ளமே.

திருஆலவாய் பண் - பழம்பஞ்சுரம்

வேத வேள்வியை நிந்தனை செய்துழல் ஆத மில்லி அமணொடு தேரரை வாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமே பாதி மாதுட னாய பரமனே ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென் ஆல வாயில் உறையும்எம் ஆதியே.

69. திருப்பிரமபுரம் - திருச்சக்கரமாற்று பண் - காந்தாரம்

பொன்னி வளம் தரு நாட்டுப் புனல் பழனப் புறம் பணை சூழ் கன்னி மதில் கழுமலம் நாம் கருதும் ஊர் எனச் சிறந்த பன்னிரண்டு பெயர் பற்றும் பரவிய சொல் திருப்பதிகம் தென்னவன் முன்பு அருள் செய்தார் திருஞான சம்பந்தர்

பிரமனூர் வேணுபுரம் புகலி வெங்குருப் பெருநீர்த் தோணி புரமன்னு பூந்தராய் பொன்னஞ் சிரபுரம் புறவஞ் சண்பை அரன்மன்னு தண்காழி கொச்சை வயமுள்ளிட் டங்காதி யாய பரமனூர் பன்னிரண்டாய் நின்றதிருக் கழுமலம் நாம்பரவு மூரே

70. திருஆலவாய் பண் - கொல்லி

ஞான ஆரமுதம் உண்டார் நல்தவத் திருவை நோக்கி மானினேர் விழியினாய் கேள் மற்று எனைப் பாலன் என்று நீ நனி அஞ்ச வேண்டாம் நிலை அமணர்க்கு என்றும் யான் எளியேன் அலேன் என்று எழும் திருப்பதிகம்பாடி

மானின்நேர்விழி மாதராய்வழு திக்குமாபெருந் தேவிகேள் பானல்வாயொரு பாலனீங்கிவன் என்றுநீபரி வெய்திடேல் ஆனைமாமலை ஆதியாய இடங்களிற்பல அல்லல்சேர் ஈனர்கட்கெளி யேனலேன்திரு ஆலவாயரன் நிற்கவே.

71. திருஆலவாய் - திருநீற்றுப்பதிகம் பண் - காந்தாரம்

தென்னவன் நோக்கம் கண்டு திருக்கழு மலத்தார் செல்வர் அன்னவன் வலப்பால் வெப்பை ஆலவாய் அண்ணல் நீறே மன்னும் மந்திரமும் ஆகி மருந்துமாய் தீர்ப்பது என்று பன்னிய மறைகள் ஏத்திப் பகர் திருப்பதிகம் பாடி

மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே.

72. திருநள்ளாறு (பச்சைத்திருப்பதிகம்) பண் - பழந்தக்கராகம்

சாற்றும் மெய்ப் பொருள் தரும் திருமுறையினைத் தாமே நீற்று வண்கையால் மறித்தலும் வந்து நேர்ந்து உளதால் நால்தடம் புயத்து அண்ணலார் மருவு நள்ளாறு போற்றும் அப்பதிகம் போகம் ஆர்த்த பூண் முலையாள்

போகமார்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம் பாகமார்த்த பைங்கண்வெள் ளேற்றண்ணல் பரமேட்டி ஆகமார்த்த தோலுடையன் கோவண ஆடையின்மேல் நாகமார்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே.

73. திருநள்ளாறு - திருவிராகம் பண் - சாதாரி

நன்மை உய்க்கும் மெய்ப் பதிகத்தின் நாதன் என்று எடுத்தும் என்னை ஆள் உடை ஈசன் தன் நாமமே என்றும் மன்னும் மெய்ப் பொருளாம் எனக் காட்டிட வன்னி தன்னில் ஆக எனத் தளிர் இள வளர் ஒளி பாடி

தளிரிள வளரொளி தனதெழில் தருதிகழ் மலைமகள் குளிரிள வளரொளி வனமுலை யிணையவை குலவலின் நளிரிள வளரொளி மருவுநள் ளாறர்தம் நாமமே மிளிரிள வளரெரி யிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.

74. பொது (திருப்பாசுரம்) பண் - கௌசிகம்

மாசு சேர் அமணர் எல்லாம் மதியினில் மயங்கிக் கூற ஆசிலா நெறியில் சேர்ந்த அரசனும் அவரை விட்டுத் தேசு உடைப் பிள்ளையார் தம் திருக்குறிப்பு அதனை நோக்கப் பாசுரம் பாடல் உற்றார் பர சமயங்கள் பாற தென்னவன் மாறன் தானும் சிரபுரத்துத் தலைவர் தீண்டிப் பொன் நவில் கொன்றையார் தம் திருநீறு பூசப் பெற்று முன்னை வல் வினையும் நீங்க முதல்வனை அறியும் தன்மை உன்னினான் வினைகள் ஒத்துத் துலை என நிற்றலாலே உலகியல் வேத நூல் ஒழுக்கம் என்பதும் நிலவு மெய்ந் நெறி சிவ நெறியது என்பதும் கலதி வாய் அமணர் காண்கிலார்கள் ஆயினும் பலர் புகழ் தென்னவன் அறியும் பான்மையால் அலரும் விரை சூழ் பொழில் காழியுள் ஆதி ஞானம் மலரும் திருவாக்கு உடை வள்ளலார் உள்ள வண்ணம் பலரும் உணர்ந்து உய்யப் பகர்ந்து வரைந்து ஆற்றில் நிலவும் திரு ஏடு திருக்கையால் நீட்டி இட்டார். அந்தணர் தேவர் ஆன் இனங்கள் வாழ்க என்று இந்த மெய்ம் மொழிப் பயன் உலகம் இன்பு உறச் சந்த வேள்விகள் முதல் சங்கரர்க்கு முன் வந்த அர்ச்சனை வழிபாடும் அன்னவாம் வேள்வி நல் பயன் வீழ் புனல் ஆவது நாளும் அர்ச்சனை நல் உறுப்பு ஆதலால் ஆளும் மன்னனை வாழ்த்தியது அர்ச்சனை மூளும் மற்று இவை காக்கும் முறைமையால் ஆழ்க தீயது என்று ஓதிற்று அயல் நெறி வீழ்க என்றது வேறு எல்லாம் அரன் பெயர் சூழ்க என்றது தொல் உயிர் யாவையும் வாழி அஞ்சு எழுத்து ஓதி வளர்கவே சொன்ன வையகமும் துயர் தீர்கவே என்னும் நீர்மை இக பரத்தில் உயர் மன்னி வாழும் உலகத்தவர் மாற்றிட முன்னர் ஞான சம்பந்தர் மொழிந்தனர்

வாழ்க அந்தணர் வானவர் ஆனினம் வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக ஆழ்க தீயதெல் லாம்அரன் நாமமே சூழ்க வையக முந்துயர் தீர்கவே. 01

அரிய காட்சியர் என்பது அவ் வாதியைத் தெரியலாம் நிலையால் தெரியார் என உரிய அன்பினில் காண்பவர்க்கு உண்மையாம் பெரிய நல் அடையாளங்கள் பேசினார் ஆயினும் பெரியார் அவர் என்பது மேய இவ் இயல்பே அன்றி விண் முதல் பாய பூதங்கள் பல் உயிர் அண்டங்கள் ஏயும் யாவும் இவர் வடிவு என்பதாம் பின்பும் ஆர் அறிவார் அவர் பெற்றியே என்பது யார் உணர்வான் எனும் சென்று எட்ட ஒணா மன்பெரும் தன்மையார் என வாழ்த்தினார் அன்பு சூழ் சண்பை ஆண் தகையார் அவர்

அரிய காட்சிய ராய்த்தம தங்கைசேர் எரியர் ஏறுகந் தேறுவர் கண்டமுங் கரியர் காடுறை வாழ்க்கைய ராயினும் பெரிய ராரறி வாரவர் பெற்றியே. 02

வெந்த சாம்பல் விரை என்பது தமது அந்தம் இல் ஒளி அல்லா ஒளி எலாம் வந்து வெம் தற மற்றப் பொடி அணி சந்த மாக் கொண்ட வண்ணமும் சாற்றினார் தமக்குத் தந்தையர் தாய் இலர் என்பதும் அமைத்து இங்கு யாவையும் ஆங்கு அவை வீந்த போது இமைத்த சோதி அடங்கிப் பின் ஈதலால் எமக்கு நாதர் பிறப்பு இலர் என்றதாம் தம்மையே சிந்தியார் எனும் தம்மை தான் மெய்ம்மை ஆகி விளங்கு ஒளி தாம் என இம்மையே நினைவார் தம் இருவினைப் பொய்ம்மை வல் இருள் போக்குவர் என்றதாம் எந்தையார் அவர் எவ்வகையார் கொல் என்று இந்த வாய்மை மற்ற எப்பொருள் கூற்றினும் முந்தையோரை எக் கூற்றின் மொழிவது என்று அந்தண் பூந்தராய் வேந்தர் அருளினார்

வெந்த சாம்பல் விரையெனப் பூசியே தந்தை யாரொடு தாயிலர் தம்மையே சிந்தி யாஎழு வார்வினை தீர்ப்பரால் எந்தை யாரவர் எவ்வகை யார்கொலோ. 03

ஆதி ஆட்பால் அவர்க்கு அருளும் திறம் நாதன் மாட்சிமை கேட்க நவிலுங் கால் ஓதும் எல்லை உலப்பில ஆதலின் யாதும் ஆராய்ச்சி இல்லையாம் என்றதாம் அன்ன ஆதலில் ஆதியார் தாள் அடைந்து இன்ன கேட்கவே ஏற்ற கோள் பலவும் முன்னை வல் வினையும் முடிவு எய்தும் அத் தன்மையார்க்கு என்றனர் சண்பை காவலர்

ஆட்பா லவர்க் கருளும் வண்ணமும் ஆதிமாண்புங் கேட்பான் புகில்அள வில்லை கிளக்க வேண்டா கோட்பா லனவும் வினையுங் குறுகாமை யெந்தை தாட்பால் வணங்கித் தலைநின் றிவைகேட்க தக்கார். 04

மன்னும் ஏதுக்களால் எனும் வாய்மைதான் அன்னது ஒப்பு வேறு இன்மையில் சங்கரன் இன்ன தன்மையை ஏது எடுத்துக் காட்டு அன்ன ஆற்றால் அளப்பு இலன் என்றதாம் தோன்று காட்சி சுடர் விட்டு உளன் என்பது ஆன்ற அங்கிப் புறத்து ஒளியாய் அன்பில் ஊன்ற உள் எழும் சோதியாய் நின்றனன் ஏன்று காண்பார்க்கு இது பொருள் என்ற தாம் மாதுக்கம் நீக்கல் உறுவீர் மனம் பற்றும் என்பது ஆதிச் சுடர்ச் சோதியை அன்பின் அகத்துள் ஆக்கிப் போதித்த நோக்கு உற்று ஒழியாமல் பொருந்தி வாழ்ந்து போதித்த பந்தப் பிறப்பின் நெறி பேர்மின் என்றாம் ஈண்டு சாதுக்கள் என்று எடுத்து ஓதிற்று வேண்டும் வேட்கைய எல்லாம் விமலர்தாள் பூண்ட அன்பினில் போற்றுவீர் சார்மின் என்று ஆண்ட சண்பை அரசர் அருளினார்

ஏதுக்க ளாலும் எடுத்த மொழியாலும் மிக்குச் சோதிக்க வேண்டா சுடர்விட் டுளன் எங்கள்சோதி மாதுக்கம் நீங்க லுறுவீர் மனம்பற்றி வாழ்மின் சாதுக்கள் மிக்கீர் இறையே வந்து சார்மின்களே. 05

ஆடும் எனவாம் திருப்பாட்டின் அமைத்த மூன்றும் நீடும் புகழோ பிறர் துன்பம் நீத்தற்கோ என்று தேடும் உணர்வீர் உலகுக்கு இவை செய்த ஈசர் கூடும் கருணைத் திறம் என்றனர் கொள்கை மேலோர்

ஆடும் மெனவும் அருங்கூற்றம் உதைத்து வேதம் பாடும் மெனவும் புகழல்லது பாவம் நீங்கக் கேடும் பிறப்பும் அறுக்கும் மெனக்கேட்டீ ராகில் நாடுந் திறத்தார்க் கருளல்லது நாட்ட லாமே. 06

கருதும் கடிசேர்ந்த என்னும் திருப் பாட்டில் ஈசர் மருவும் பெரும் பூசை மறுத்தவர்க் கோறல் முத்தி தரு தன்மையது ஆதல் சண்ணீசர் தம் செய்கை தக்கோர் பெரிதும் சொலக் கேட்டனம் என்றனர் பிள்ளையார் தாம்

கடிசேர்ந்த போது மலரான கைக்கொண்டு நல்ல படிசேர்ந்த பால்கொண்டங் காட்டிடத் தாதை பண்டு முடிசேர்ந்த காலையற வெட்டிட முக்கண் மூர்த்தி அடிசேர்ந்த வண்ணம் அறிவார் சொலக்கேட்டு மன்றே. 07

வேத முதல்வன் எனும் மெய்த் திருப்பாட்டினினேர் ஆதி உலகோர் இடர் நீங்கிட ஏத்த ஆடும் பாதம் முதலாம் பதிணெண் புராணங்கள் என்றே ஓது என்று உரை செய்தனர் யாவும் ஓதாது உணர்ந்தோர்

வேத முதல்வன் முதலாக விளங்கி வையம் ஏதப் படாமை யுலகத்தவர் ஏத்தல் செய்யப் பூத முதல்வன் முதலே முதலாப் பொலிந்த சூதன் ஒலிமாலை யென்றே கலிக்கோவை சொல்லே. 08

பாவுற்ற பார் ஆழி வட்டத் திருப்பாட்டின் உண்மை காவல் தொழிலான் எனும் கண்ணனும் காவல் பெற்றது யாவர்க்கும் மேல் ஆய ஈசன் அருள் ஆழி பெற்று மேவுற்ற சீர் உற்றது என்றனர் வேத வாயர்

பாராழி வட்டம் பகையால் நலிந்தாட்ட ஆடிப் பேராழி யானதிடர் கண்டருள் செய்தல் பேணி நீராழி விட்டேறி நெஞ்சிடங் கொண்ட வர்க்குப் போராழி யீந்த புகழும் புகழுற்ற தன்றே. 09

மாலா யவன் என்ன வரும் திருப்பாட்டில் மாலும் தோலா மறை நான்முகனும் தொடர்வாம் அமரர் ஏலா வகை சுட்ட நஞ்சு உண்டு இறவாமை காத்த மேலாம் கருணைத் திறம் வெம் குருவேந்தர் வைத்தார்

மாலா யவனும் மறைவல்ல நான் முகனும் பாலாய தேவர்பக ரில்லமு தூட்டல் பேணிக் காலாய முந்நீர் கடைந்தார்க் கரிதா யெழுந்த ஆலாலம் உண்டங்கம ரர்க்கருள் செய்த தாமே. 10

ஆன அற்று அன்றி என்ற அத்திருப் பாட்டில் கூடல் மா நகரத்துச் சங்கம் வைத்தவன் தேற்றத் தேறா ஈனர்கள் எல்லைக் கிட்ட ஏடு நீர் எதிர்ந்து செல்லில் ஞானம் ஈசன் பால் அன்பே என்றனர் ஞானம் உண்டார்

அற்றன்றி அந்தண் மதுரைத் தொகை யாக்கினானுந் தெற்றென்று தெய்வந் தெளியார் கரைக்கோலை தெண்ணீர்ப் பற்றின்றிப் பாங்கெதிர் வினூரவும் பண்பு நோக்கில் பெற்றொன் றுயர்த்த பெருமான் பெருமானு மன்றே. 11

வெறியார் பொழில் சண்பையர் வேந்தர் மெய்ப் பாசுரத்தைக் குறி ஏறிய எல்லை அறிந்து கும்பிட்டேன் அல்லேன் சிறியேன் அறிவுக்கு அவர் தந்து திருப்பாதம் தந்த நெறியே சிறிது யான் அறி நீர்மை கும்பிட்டேன் அன்பால்

நல்லார்கள் சேர்புகலி ஞானசம் பந்தன் நல்ல எல்லார் களும்பரவும் ஈசனை யேத்து பாடல் பல்லார் களும்மதிக்கப் பாசுரஞ் சொன்ன பத்தும் வல்லார்கள் வானோ ருலகாளவும் வல்ல ரன்றே. 12

75. திருவேடகம் பண் - கொல்லி

ஏடகம் பிள்ளையார் தாம் வன்னி என்று எடுத்துப் பாடக் கூடிய நீரில் ஏடு குலச்சிறை யாரும் கூடிக் காடு இடமாக ஆடுங்கண்ணுதல் கோயில்மாடு சீர் நடவுட் புக்கு நின்ற ஏடு எடுத்துக் கொண்டார்

வன்னியும் மத்தமும் மதிபொதி சடையினன் பொன்னியல் திருவடி புதுமல ரவைகொடு மன்னிய மறையவர் வழிபட அடியவர் இன்னிசை பாடலர் ஏடகத் தொருவனே.

76. திருவாலவாய் பண் - கௌசிகம்

கைகளும் தலை மீது ஏறக் கண்ணில் ஆனந்த வெள்ளம் மெய் எலாம் பொழிய வேத முதல்வரைப் பணிந்து போற்றி ஐயனே அடியனேனை அஞ்சல் என்று அருள வல்ல மெய்யனே என்று வீடல் ஆலவாய் விளம்பல் உற்றார் ஒன்று வேறு உணர்வும் இல்லேன் ஒழிவற நிறைந்த கோலம் மன்றில் நான் மறைகள் ஏத்த மானுடர் உய்ய வேண்டி நின்று நீ ஆடல் செய்கை நினைப்பதே நியமம் ஆகும் என்று பூம் புகலி மன்னர் இன் தமிழ்ப் பதிகம் பாட

வீடலால வாயிலாய் விழுமியார்கள் நின்கழல் பாடலால வாயிலாய் பரவநின்ற பண்பனே காடலால வாயிலாய் கபாலிநீள் கடிம்மதில் கூடலால வாயிலாய் குலாயதென்ன கொள்கையே. பொன்தயங் கிலங்கொளிந் நலங்குளிர்ந்த புன்சடை பின்தயங்க ஆடுவாய் பிஞ்ஞகா பிறப்பிலீ கொன்றையம் முடியினாய் கூடல்ஆல வாயிலாய் நின்றயங்கி யாடலே நினைப்பதே நியமமே.

77. திருக்கழுமலம் பண் - கொல்லி

இருந்தவத்தோர் அவர் முன்னே இணை மலர்க்கை குவித்து அருளி அரும் தவத்தீர் எனை அறியாப் பருவத்தே எடுத்து ஆண்ட பெரும் தகை எம் பெருமாட்டி உடன் இருந்ததே என்று பொருந்து புகழ்ப் புகலியின் மேல் திருப் பதிகம் போற்றி இசைத்தார் மண்ணின் நல்ல என்று எடுத்து மனத்து எழுந்த பெரு மகிழ்ச்சி உள் நிறைந்த காதலினால் கண் அருவி பாய்ந்து ஒழுக அண்ணலார் தமைவினவித் திருப்பதிகம் அருள் செய்தார் தண் நறும்பூஞ் செங்கமலத்தார் அணிந்த தமிழ் விரகர்

மண்ணின்நல் லவண்ணம் வாழலாம் வைகலும் எண்ணின்நல் லகதிக்கி யாதுமோர் குறைவிலைக் கண்ணின்நல் ல•துறுங் கழுமல வளநகர்ப் பெண்ணின்நல் லாளொடும் பெருந்தகை யிருந்ததே.

78. திருக்கொள்ளம் பூதூர் பண் - காந்தார பஞ்சமம்

தேவர் பிரான் அமர்ந்த திருக்கொள்ளம் பூதூர் எதிர் தோன்றத் திரு உள்ளம் பணியச் சென்று மேவுதலால் ஓடங்கள் விடுவார் இன்றி ஒழிந்திடவும் மிக்கதோர் விரைவால் சண்பைக் காவனார் ஓடத்தின் கட்டு அவிழ்த்துக் கண் நுதலான் திருத்தொண்டர் தம்மை ஏற்றி நாவலமே கோலாக அதன் மேல் நின்று நம்பர் தமைக் கொட்டம் என நவின்று பாட

கொட்ட மேகமழுங் கொள்ளம் பூதூர் நட்டம் ஆடிய நம்பனை யுள்கச் செல்ல வுந்துக சிந்தை யார்தொழ நல்கு மாறருள் நம்பனே.

79. திருநள்ளாறும் திருவாலவாயும் பண் - நட்டபாடை

நீடு திருத் தொண்டர் புடை சூழ அம்கண் நித்தில யானத்து இடை நின்று இழிந்து சென்று பீடு உடைய திருவாயில் பணிந்து புக்குப் பிறை அணிந்த சென்னியர் மன்னும் கோயில் மாடு வலம் கொண்டு உள்ளால் மகிழ்ந்து புக்கு மலர்க் கரங்கள் குவித்து இறைஞ்சி வள்ளலாரைப் பாடக மெல் அடி எடுத்துப் பாடி நின்று பரவினார் கண் அருவி பரந்து பாய

பாடக மெல்லடிப் பாவையோடும் படுபிணக் காடிடம் பற்றிநின்று நாடக மாடுநள் ளாறுடைய நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய் சூடக முன்கை மடந்தைமார்கள் துணைவரொ டுந்தொழு தேத்திவாழ்த்த ஆடக மாடம் நெருங்குகூடல் ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.

80. திருப்பிரமபுரம் பண் – பழம்பஞ்சுரம்

முற்றும் மெய் எலாம் புளகங்கள் முகிழ்த்து எழ முகந்து கண் களிகூரப் பற்றும் உள்ளம் உள் அலைத்து எழும் ஆனந்தம் பொழிதரப் பணிந்து ஏத்தி உற்றுமை சேர்வது எனும் திருவியமகம் உவகையால் எடுத்து ஓதி வெற்றியாக மீனவன் அவை எதிர் நதி மிசை வருகரன் என்பார்

உற்றுமை சேர்வது மெய்யினையே உணர்வது நின்னருள் மெய்யினையே கற்றவர் காய்வது காமனையே கனல்விழி காய்வது காமனையே அற்றம் மறைப்பதும் உன்பணியே அமரர்கள் செய்வதும் உன்பணியே பெற்று முகந்தது கந்தனையே பிரம புரத்தை யுகந்தனையே. பருமதில் மதுரைமன் அவையெதிரே பதிகம தெழுதிலை யவையெதிரே வருநதி யிடைமிசை வருகரனே வசையொடு மலர்கெட வருகரனே கருதலில் இசைமுரல் தருமருளே கழுமலம் அமரிறை தருமருளே மருவிய தமிழ்விர கனமொழியே வல்லவர் தம்மிடர் திடமொழியே.

81. திருப்பாதிரிப்புலியூர் பண் - செவ்வழி

கன்னி மாவனம் காப்பு என இருந்தவர் கழல் இணை பணிந்து அங்கு முன்ன மா முடக்கு கான் முயற்கு அருள் செய்த வண்ணமும் மொழிந்து ஏத்தி மன்னுவார் பொழில் திரு வடுகூரினை வந்து எய்தி வணங்கிப்போய் பின்னுவார் சடையார் திருவக்கரை பிள்ளையார் அணைவுற்றார்

முன்னம்நின்ற முடக்கால் முயற்கருள் செய்துநீள் புன்னைநின்று கமழ்பா திரிப்புலி யூருளான் தன்னைநின்று வணங்குந் தனைத்தவ மில்லிகள் பின்னைநின்ற பிணியாக் கையைப் பெறுவார்களே.

82. திருவதிகை வீரட்டம் பண் - தக்கராகம்

ஆதி தேவர் அங்கு அமர்ந்த வீரட்டானம் சென்று அணைபவர் முன்னே பூதம் பாட நின்று ஆடுவார் திரு நடம் புலப்படும் படி காட்ட வேத பாலகர் பணிந்து மெய் உணர்வுடன் உருகிய விருப்போடும் கோது இலா இசை குலவு குண்டைக்குறள் பூதம் என்று எடுத்து ஏத்தி

குண்டைக் குறட்பூதங் குழும அனலேந்திக் கெண்டைப் பிறழ்தெண்ணீர்க் கெடில வடபக்கம் வண்டு மருள்பாட வளர்பொன் விரிகொன்றை விண்ட தொடையலா னாடும்வீரட் டானத்தே.

83. திருவாமாத்தூர் பண் - சீகாமரம்

சென்று அணைந்து சிந்தையின் மகிழ் விருப்பொடு திகழ் திருவாமாத்தூர்ப் பொன்ற அங்கு பூங்கொன்றையும் வன்னியும் புனைந்தவர் அடி போற்றிக் குன்ற வார் சிலை எனும் திருப்பதிகம் மெய் குலவிய இசை பாடி நன்றும் இன்புறப் பணிந்து செல்வார் திருக்கோவலூர் நகர் சேர்ந்தார்

குன்ற வார்சிலை நாண ராவரி வாளி கூரெரி காற்றின் மும்மதில் வென்றவா றெங்ஙனே விடையேறும் வேதியனே தென்ற லார்மணி மாட மாளிகை சூளிகைக் கெதிர் நீண்ட பெண்ணைமேல் அன்றில் வந்தணையும் ஆமாத்தூர் அம்மானே.

84. திருவண்ணாமலை பண் - நட்டபாடை

அண்ணாமலை அங்கு அமரர்பிரான் வடிவு போன்று தோன்றுதலும் கண்ணால் பருகிக் கை தொழுது கலந்து போற்றும் காதலினால் உண்ணா முலையாள் எனும் பதிகம் பாடி தொண்டருடன் போந்து தெண்ணீர் முடியார் திருவண்ணாமலைச் சென்று சேர்வுற்றார்

உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன் பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும் அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே.

85. திருவண்ணமலை பண் - தக்கேசி

ஆதி மூர்த்தி கழல் வணங்கி அங்கண் இனிதின் அமரும் நாள் பூத நாதர் அவர் தம்மைப் பூவார் மலரால் போற்றி இசைத்து காதலால் அத் திருமலையில் சில நாள் வைகிக் கமழ் கொன்றை வேத கீதர் திருப்பதிகள் பிறவும் பணியும் விருப்புறுவார்

பூவார்மலர்கொண் டடியார்தொழுவார் புகழ்வார்வானோர்கள் மூவார்புரங்கள் எரித்தஅன்று மூவர்க்கருள்செய்தார் தூமாமழைநின் றதிரவெருவித் தொறுவின்நிரையோடும் ஆமாம்பிணைவந் தணையுஞ்சாரல் அண்ணாமலையாரே.

86. திருவோத்தூர் பண் – பழந்தக்கராகம்

விரும்பு மேன்மைத் திருக் கடைக் காப்பு அதனில் விமலர் அருளாலே குரும்பை ஆண்பனை ஈனும் என்னும் வாய்மை குலவு தலால் நெருங்கும் ஏற்றுப் பனை எல்லாம் நிறைந்த குலைகளாய்க் குரும்பை அரும்பு பெண்ணை ஆகி இடக் கண்டோர் எல்லாம் அதிசயித்தார்

குரும்பை யாண்பனை யின்குலை யோத்தூர் அரும்பு கொன்றை யடிகளைப் பெரும்பு கலியுள் ஞானசம் பந்தன்சொல் விரும்பு வார்வினை வீடே.

87. திருக்கச்சி ஏகம்பம் பண் – இந்தளம்

பல முறையும் பணிந்து எழுந்து பங்கயச் செங்கை முகிழ்ப்ப மலரும் முகம் அளித்த திரு மணிவாயால் மறையான் என்று உலகுய்ய எடுத்து அருளி உருகிய அன்பு என்பு உருக்க நிலவு மிசை முதற்று ஆளம் நிரம்பிய நீர்மையில் நிகழ

மறையானை மாசிலாப் புன்சடை மல்குவெண் பிறையானைப் பெண்ணொடா ணாகிய பெம்மானை இறையானை யேர்கொள்கச் சித்திரு வேகம்பத் துறைவானை யல்லதுள் காதென துள்ளமே.

88. திருவாலங்காடு பண் - தக்கராகம்

துஞ்ச வருவார் என்றே எடுத்த ஓசைச் சுருதி முறை வழுவாமல் தொடுத்த பாடல் எஞ்சல் இலா வகை முறையே பழையன் ஊரார் இயம்பு மொழி காத்த கதை சிறப்பித்து ஏத்தி அஞ்சன மா கரி உரித்தார் அருளாம் என்றே அருளும் வகை திருக்கடைக் காப்பு அமையச்சாத்திப் பஞ்சுரமாம் பழைய திறம் கிழமை கொள்ளப் பாடினார் பார் எல்லாம் உய்ய வந்தார்

துஞ்ச வருவாருந் தொழுவிப்பாரும் வழுவிப்போய் நெஞ்சம் புகுந்தென்னை நினைவிப்பாரும் முனைநட்பாய் வஞ்சப் படுத்தொருத்தி வாழ்நாள்கொள்ளும் வகைகேட் டஞ்சும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே.

89. திருப்பாசூர் பண் - காந்தாரம்

திருப்பாசூர் அணைந்து அருளி அங்கு மற்றச் செழும் பதியோர் எதிர் கொள்ளச் சென்று புக்குப் பொருப்பு அரையன் மடப்பாவை இடப் பாகத்துப் புராதனர் வேய் இடம் கொண்ட புனிதர் கோயில் விருப்பின் உடன் வலம் கொண்டு புக்குத் தாழ்ந்து வீழ்ந்து எழுந்து மேனி எல்லாம் முகிழ்ப்ப நின்றே அருள் கருணைத் திருவாளன் நாமம் சிந்தை இடையார் என்று இசைப் பதிகம் அருளிச் செய்தார்

சிந்தை யிடையார் தலையின் மிசையார் செஞ்சொல்லார் வந்து மாலை வைகும் போழ்தென் மனத்துள்ளார் மைந்தர் மணாளர் என்ன மகிழ்வா ரூர்போலும் பைந்தண் மாதவி சோலை சூழ்ந்த பாசூரே.

90. திருக்காளத்தி பண் - சாதாரி

வந்து அணைந்த மாதவத்தோர் வணங்கித் தாழ்ந்து மறைவாழ்வே சைவ சிகாமணியேதோன்றும் இந்த மலை காளனோடு அத்தி தம்மில் இகலி வழிபாடு செய இறைவர் மேவும் அந்தமில் சீர் காளத்தி மலையாம் என்ன அவனிமேல் பணிந்து எழுந்து அஞ்சலி மேல் கொண்டு சிந்தை களி மகிழ்ச்சி வரத் திரு விராகம் வானவர்கள் தானவர் என்று எடுத்துச் செல்வார்

வானவர்கள் தானவர்கள் வாதைபட வந்ததொரு மாகடல்விடந் தானமுது செய்தருள் புரிந்தசிவன் மேவுமலை தன்னைவினவில் ஏனமின மானினொடு கிள்ளைதினை கொள்ளஎழி லார்க்கவணினாற் கானவர்தம் மாமகளிர் கனகமணி விலகுகா ளத்திமலையே.

91. திருக்காளத்தி பண் - கொல்லி

தென் திசையில் கயிலை எனும் திருக்காளத்தி போற்றி இனிது அமர்கின்றார் திரை சூழ் வேலை ஒன்று திரு ஒற்றியூர் உறைவர் தம்மை இறைஞ்சுவது திரு உள்ளத்து உன்னி அங்கண் இன் தமிழின் விரகர் அருள் பெற்று மீள்வார் எந்தையார் இணை அடி என் மனத்த என்று பொன் தரளம் கொழித்து இழி பொன் முகலி கூடப் புனைந்த திருப்பதிக இசை போற்றிப் போந்தார்

சந்தமார் அகிலொடு சாதிதேக் கம்மரம் உந்துமா முகலியின் கரையினில் உமையொடும் மந்தமார் பொழில்வளர் மல்குவண் காளத்தி எந்தையார் இணையடி யென்மனத் துள்ளவே.

92. திருவொற்றியூர் பண் – பஞ்சமம்

மிக்க திருத் தொண்டர் தொழுது அணையத் தாமும் தொழுது இழிந்து விடையவன் என்று எடுத்துப் பாடி மைக் குலவு கண்டத்தார் மகிழும் கோயில் மன்னு திருக் கோபுரத்து வந்து தாழ்ந்து தக்க திருக் கடைக் காப்புச் சாற்றித் தேவர் தம் பெருமான் திருவாயில் ஊடு சென்று புக்கருளி வலம் கொண்டு புனிதர் முன்பு போற்று எடுத்துப் படியின் மேல் பொருந்த வீழ்ந்தார்

விடையவன் விண்ணுமண்ணுந் தொழநின்றவன் வெண்மழுவாட் படையவன் பாய்புலித்தோல் உடைகோவணம் பல்கரந்தைச் சடையவன் சாமவேதன் சசிதங்கிய சங்கவெண்தோ டுடையவன் ஊனமில்லி யுறையும்மிடம் ஒற்றியூரே.

93. திருமயிலாப்பூர் பண் - சீகாமரம்

மன்னுவார் சடையாரை முன் தொழுது மட்டு இட்ட என்னும் நல் பதிகத்தினில் போதியோ என்னும் அன்ன மெய்த் திருவாக்கு எனும் அமுதம் அவ்வங்கம் துன்ன வந்து வந்து உருவமாய்த் தொக்கது அக்குடத்துள் தேற்றமில் சமண் சாக்கியத் திண்ணரிச் செய்கை ஏற்றது அன்று என எடுத்து உரைப்பார் என்ற போது கோல் தொடிச் செங்கை தோற்றிடக் குடம் உடைந்து எழுவாள் போற்று தாமரைப் போது அவிழ்ந்து எழுந்தனள் போன்றாள்

மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக் கட்டிட்டங் கொண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான் ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்க் கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய். உரிஞ்சாய வாழ்க்கை அமணுடையைப் போர்க்கும் இருஞ்சாக் கியர்க ளெடுத்துரைப்ப நாட்டில் கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச்சரம் அமர்ந்தான் பெருஞ்சாந்தி காணாதே போதியோ பூம்பாவாய்.

94. திருவிடைச்சுரம் பண் – குறிஞ்சி

இருந்த இடைச் சுரம் மேவும் இவர் வண்ணம் என்னே என்று அரும் தமிழின் திருப்பதிகத்து அலர் மாலை கொடு பரவித் திருந்து மனம் கரைந்து உருகத் திருக்கடைக் காப்புச் சாத்திப் பெரும் தனி வாழ்வினைப் பெற்றார் பேர் உலகின் பேறு ஆனார்

வரிவள ரவிரொளி யரவரை தாழ வார்சடை முடிமிசை வளர்மதி சூடிக் கரிவளர் தருகழல் கால்வல னேந்திக் கனலெரி யாடுவர் காடரங் காக விரிவளர் தருபொழில் இனமயி லால வெண்ணிறத் தருவிகள் திண்ணென வீழும் எரிவள ரினமணி புனமணி சாரல் இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.

95. திருக்கழுக்குன்று பண் – குறிஞ்சி

திருக்கழுக் குன்று அமர்ந்த செங்கனகத் தனிக் குன்றைப் பெருக்க வளர் காதலினால் பணிந்து எழுந்து பேராத கருத்தின் உடன் காதல் செயும் கோயில் கழுக்குன்று என்று திருப்பதிகம் புனைந்து அருளிச் சிந்தை நிறை மகிழ் உற்றார்

தோடுடையானொரு காதில்தூய குழைதாழ ஏடுடையான் தலைகலனாக இரந்துண்ணும் நாடுடையான் நள்ளிருள்ஏம நடமாடுங் காடுடையான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.

96. திருஅச்சிறுபாக்கம் பண் – குறிஞ்சி

ஆதி முதல் வரை வணங்கி ஆட்சி கொண்டார் என மொழியும் கோயில் திருப்பதிக இசை குலாவிய பாடலில் போற்றி மாதவத்து முனிவருடன் வணங்கி மகிழ்ந்து இன்புற்றுத் தீது அகற்றும் செய்கையினார் சில நாள் அமர்ந்து அருளி

பொன்றிரண் டன்ன புரிசடை புரள பொருகடற் பவளமொ டழல்நிறம் புரையக் குன்றிரண் டன்ன தோளுடை யகலங் குலாயவெண் ணூலொடு கொழும்பொடி யணிவர் மின்றிரண் டன்ன நுண்ணிடை யரிவை மெல்லிய லாளையோர் பாகமாப் பேணி அன்றிரண் டுருவ மாயவெம் அடிகள் அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

97. திருவேணுபுரம் பண் - நட்டபாடை

மன்னும் இசை மொழி வண்டார் குழல் அரிவை என்று எடுத்து மின்னு சுடர் மாளிகை விண் தாங்குவ போல் வேணுபுரம் என்னும் இசைச் சொல் மாலை எடுத்து இயம்பி எழுந்து அருளிப் புன்னை மணம் கமழ் புறவப் புறம்பு அணையில் வந்து அணைந்தார்

வண்டார்குழ லரிவையொடும் பிரியாவகை பாகம் பெண்டான்மிக ஆனான்பிறைச் சென்னிப்பெரு மானூர் தண்டாமரை மலராளுறை தவளந்நெடு மாடம் விண்டாங்குவ போலும்மிகு வேணுபுர மதுவே.

98. சீர்காழி பண் - நட்டராகம்

வாழி வளர் புறம்பு அணையின் மருங்கு அணைந்து வரி வண்டு சூழும் மலர் நறும் தீப தூபங்களுடன் தொழுது காழி நகர் சேர்மின் எனக் கடை முடிந்த திருப்பதிகம் ஏழிசையின் உடன் பாடி எயின் மூதூர் உள் புகுந்தார்.

நம்பொருள்நம் மக்களென்று நச்சிஇச்சை செய்துநீர் அம்பரம்அ டைந்துசால அல்லலுய்ப்ப தன்முனம் உம்பர்நாதன் உத்தமன் ஒளிமிகுத்த செஞ்சடை நம்பன்மேவு நன்னகர் நலங்கொள்காழி சேர்மினே.

99. திருநல்லூர்ப் பெருமணம் பண் - அந்தாளிக் குறிஞ்சி

காதல் மெய்ப் பதிகம் கல்லூர்ப் பெருமணம் எடுத்துக் கண்டோர் தீதுறு பிறவிப் பாசம் தீர்த்தல் செம் பொருளாகக் கொண்டு நாதனே நல்லூர் மேவும் பெரு மண நம்பனே உன் பாத மெய்ந் நீழல் சேரும் பருவம் ஈது என்று பாட

கல்லூர்ப் பெருமணம் வேண்டா கழுமலம் பல்லூர்ப் பெருமணம் பாட்டுமெய் யாய்த்தில சொல்லூர்ப் பெருமணஞ் சூடல ரேதொண்டர் நல்லூர்ப் பெருமணம் மேயநம் பானே.

100. பொது (நமச்சிவாயத் திருப்பதிகம்) பண் - கௌசிகம்

ஞான மெய்ந் நெறி தான் யார்க்கும் நமச்சிவாய அச் சொலாம் என்று ஆன சீர் நமச்சிவாயத் திருப்பதிகத்தை அங்கண் வானமும் நிலமும் கேட்க அருள் செய்து இம் மணத்தில் வந்தோர் ஈனமாம் பிறவி தீர யாவரும் புகுக என்ன

காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது நாதன் நாமம் நமச்சி வாயவே.

திருச்சிற்றம்பலம்

Please send your comments and corrections

See Also:
1. பெரியபுராணத்தில் திருநாவுக்கரசர் பதிகங்கள்
2. பெரியபுராணத்தில் சுந்தரர் பதிகங்கள்

Back to ThirumuRai Main Page
Back to Tamil Shaivite scripture Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaiva Home Page