தரணியோர் வீடுபெறுஞ் தன்மை சூழ்ந்தே | 24
|
பண்புற்ற திருஞானசம்பந்தர் பதிக முந்நூற்று
எண்பத்தினானகினால் இலங்குதிரு முறைமூன்று
நண்புற்ற நாவரசர் முந்நூற்றேழ் மூன்றினால்
வண்பெற்ற முறை ஒன்று நூற்றினால் வன்தொண்டர் | 25
|
ஆகவளர் திருமுறைஏழ் அருட்டிருவா சகமொன்று
மோகமெறி திருவிசைப்பா மாலை முறைஒன்று சிவ
போகமிகு மந்திரமாம் முறையொன்று புகழ் பெறவே
பாகமிகு திருமுறைகள் பத்தாக வைத்தார்கள் | 26
|
வைத்தற்பின் நம்பிகழல் மன்னர் பிரான் மகிழ்திறைஞ்சி
சித்தி தரும் இறை மொழிந்த திருமுகபா சுரமுதலாம்
உய்த்தபதி கங்களையும் ஒருமுறையாச் செய்க எனத்
பத்தி தருதிருமுறைகள் பதினொன்றாப் பண்ணினார் | 27
|
மந்திரங்கள் எழுகோடி ஆதலினால் மன்னுமவர்
இந்தவகை திருமுறைகள் ஏழாக எடுத்தமைத்துப்
பந்தமுறு மந்திரங்கள் பதினொன்றும் ஆதலினால்
அந்தமுறை நான்கினொடு முறைபதினொன் றாக்கினார் | 28
|
ஆக்கியபின் திருத்தொண்டத் தொகையடைவை அருளாலே
நோக்கியபின் நாயன்மார் நுடங்கடைவும் தொழிற் பேறும்
பாக்கியத்தால் இபமுகத்தோன் அருள்செய்த பகுதியினால்
வாக்கியல் சேர் அந்தாதி நம்பியடைவே வகுத்தார் | 29
|
சீரருள்சேர் அறுபத்துமூவர் தனித் திருக்கூட்டம்
சாரும்அவர் ஒன்பானுந் தண்டமிழான் உரைசெய்து
பேரிசையாம் வகையடைவு புவியினிடைப் பெருமையினாற்
சீருலவு எருக்கத்தம் புலியூர் சென்றடைந்தார் | 30
|
சென்னியருள் நம்பிஇவர் அந்நக ரைச்சேர்ந்து சிவன்
மன்னு திருக்கோயிலினை வலங்கொண்டுபணிந்து அரனே
இன்னிசைத் தந்தருள் என்ன இரக்கமுடன் குறைந்திரப்பக்
கன்னியொரு பங்குடையோன் அருள்செய்த கடனுரைப்பாம் | 31
|
நல்லிசை யாழ்ப்பாணனார் நன்மரபின் வழிவந்த
வல்லிஒருத் திக்கிசைகள் வாய்ப்பஅளித் தோம்என்று
சொல்ல அவள்தனை அழைத்துச் சுரிதிவழி பண்தழுவும்
நல்லிசையின் வழிகேட்டு நம்பியிறை உள்மகிழ்ந்தார் | 32
|
ஆங்கவளைஅம்பலத்து ஆடுவார்திருமுன்பே
பாங்கினொடு கொடுவந்து பண்ணடைவு பயில் பாடல்
ஓங்கருளால் முறைபணித்தற் கொக்கும் என ஓரோசை
நீங்கரிய வானினகண் நிகழ அரசன் கேட்டான் | 33
|
மன்னனுக்கும் நம்பிக்கும் மறையவர் முவாயிரவர்
பன்னரிய திருத்தொண்டர் பலதுறையோர்குங்கேட்க
இன்னருள்முன் வியன்துரைத்த இவள்முதலா இசைத்தஇசை
தென்னிலமேல் மிகத்தோன்றத் திருவருளால் தோன்றியதாம் | 34
|
சொல்நட்ட பாடைக்குத் தொகை எட்டுக் கட்டளையாம்
இன்னிசையால் தருந்தக்கராகத் தேழ் கட்டளையாம்
பன்னுபழந் தக்கரா கப்பண்ணின் மூன்றுளதாம்
உன்னரிய தக்கேசிக் கோரிரண்டு வருவித்தார் | 35
|
மேவுக்குறிஞ் சிக்கஞ்சு வியாழக்குறிஞ் சிக்காறு
பாவுபுகழ் மேகரா கக் குறிஞ்சிப் பாலிரண்டு
தேவுவந்த இந்தளத்தின் செய்திக்கு நான்கினிய
தாவில்புகழ் காமரத்தின் தன்மைதனக் கிரண்டமைத்தார் | 36
|
காந்தார மாகிய பியந்தையாங் கட்டளைக்கு
வாய்ந்தவகை மூன்றாக்கி வன்னட்ட ராகத்திற்கு
ஏய்தவகை இரண்டாக்கிச் செவ்வழிக் யொன் றாக்கிசைக்
காந்தார பஞ்சமத்தின் கட்டளைமூன் றாக்கினார் | 37
|
கொல்லிக்கு நாலாக்கிக் கவுசிகத்துக் கூறும்வகை
சொல்லிரண் டாக்கிமிகு தூங்கிசை சேர்பஞ்சமத்திற்கு
ஒல்லையினில் ஒன்றாக்கிச் சாதாரிக் கொன்பதாப்
புல்லுமிசைப் புறநீர்மைக் கொன்றாகப் போற்றினார் | 38
|
அந்தாளிக் கொன்றாக்கி வாகீசர் அருந்தமிழின்
முந்தாய பலதமிழுக் கொன்றொன்றாம் மொழிவித்து
நந்தாத நெரிசையாங் கொல்லிக்கு நாட்டிலிரண்டு
உந்தாடுங் குறுந்தொகைக்கோர் கட்டளையா விரித்துரைத்தார் | 39
|
தாண்டகமாம் பாவுக்கோர் கட்டளையாத் தாபித்தங்கு
ஆண்டகையார் தடுத்தாண்ட ஐயர்அருள் துய்யமுறைக்கு
ஈண்டிசைசேர் இந்தளத்துக் கிரண்டாகஎடுத்துரைத்து
நீண்டதக்க ராகத்திற் கிரண்டாக நிகழ்வித்தார் | 40
|
கூறரிய நட்டரா கத்திரண்டு கொல்லிக்கு
வேறுவகை முன்றாக மிகுத்தபழம் பஞ்சரத்துக்கு
ஏறும் வகை இரண்டாக்கி இன்னிசைசேர் தக்கேசிப்
பேறிசைஆ றாக்கியதிற் காந்தாரம் பிரித்திரண்டாம் | 41
|
ஒன்றாகுங் காந்தார பஞ்சமத்துக் கோரிரண்டாம்
நன்றான சீர்நட்ட பாடைக்கு நவின்றுரைக்கில்
குன்றாத புறநீர்மைக் கிரண்டாகுங் கூறுமிசை
ஒன்றாகக் காமரத்துக் கொன்றாகப் போற் றினார் | 42
|
உற்றஇசைக் குறிஞ்சிக்கோர் இரண்டாக வகுத்தமைத்துப்
பற்றரிய செந்துருத்திக் கொன்றாக்கிக் கவுசிகப்பால்
துற்றஇசை இரண்டாக்கி தூயஇசைப் பஞ்சமத்துக்
கற்ற இசைஒன்றாக்கி அரனருளால் விரித்தமைத்தார் | 43
|
இந்தவகை சிவன்செவிப்பால் எக்கண்ணுந் தழைந்தோங்க
அந்தமிலா அறுபத்து மூவரருள் அம்புவிமேல்
நந்தியிட மும்மலமும் நல்லுலகோர் நீங்கியிடச்
சிந்தையருட் சிவகாமத் தெளிவித்தான் அருட் சென்னி | 44
|
சீராருந் திருமுறைகள் கண்டதிறற் பார்த்திபனாம்
ஏறாரும்இறைவனையும் எழிலாரும் நம்பியையும்
ஆராத அன்பினுடன் அடிபணிந்தங் கருள்விரவச்
சோராத காதல்மிகுத் திருத்தொண்டர் பதந்துதிப்பாம் | 45
|