தில்லைவாழந்தணர்.
பூவா யிரம்பேர் புகழ்கூத் தரைத்தில்லை
மூவா யிரம்பேர் முதலெனக்கொண்-டோவார்
அகர முதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு. | 1 |
திருநீலகண்டநாயனார்.
ஆலகண்ட ராணைகொண்டில் லாளெதிர்செல் லாதுதிரு
நீலகண்ட ரைம்பொறிமா னீக்கினார்-மேலாம்
உரனென்னுந் தோட்டியா னோரைந்துங் காப்பான்
வரனென்னும் வைப்புக்கோர் வித்து. | 2 |
இயற்பகை நாயனார்.
மயற்பகையுள் ளுள்ளுவப்ப மாதவர்க்கில் லாளை
யியற்பகையி கழ்ந்தெள்ளா தீந்தான் -செயற்பா
லிகழ்ந்தெள்ளா தீவாரைக் காணின் மகிழ்ந்துள்ள
முள்ளு ளுவப்ப துடைத்து. | 3 |
இளையான்குடி மாற நாயனார்.
உய்வித் தவனடியார்க் கோரிருளிற் போய்மாறன்
செய்வித்தும் வாரியனஞ் செய்தானே-மெய்வருந்தி
வித்து மிடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி
மிச்சின் மிசைவான் புலம். | 4 |
மெய்ப்பொருள் நாயனார்.
பொய்ப்பொருண்மாற் றான்புரிந்த பொய்த்தவவே டம்பொருளாய்
மெய்ப்பொருளார் கண்ட விதந்தானே-மெய்ப்பொரு
ளெப்பொரு ளெத்தன்மைத் தாயினு மப்பொருண்
மெய்ப்பொருள் காண்ப தறிவு. | 5 |
விறன் மிண்ட நாயனார்.
அறன்மண்டு சுந்தரனை யாரூ ரரனை
விறன்மிண்டர் தாமே வெகுண்டார்-மறமன்
றுறாஅ தவர்போற் சொலினுஞ் செறாஅர்சொல்
ஒல்லை யுணரப் படும். | 6 |
அமர்நீதி நாயனார்.
நிரம்புபொருள் சேயொடமர் நீதிமனை யாளொ
டரன்கோ வணத்தட் டதனே-ரிருந்தார்
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போ லமைந்தொருபாற்
கோடாமை சான்றோர்க் கணி. | 7 |
சுந்தர மூர்த்தி நாயனார்.
அனந்தருள்செம் பொன்மணிமுத் தாற்றிலிட் டாரூர்க்
குளந்தனிலே கண்டெடுத்து கொண்டா-ருளைந்து
பரியினு மாகாவாம் பாலல்ல வுய்த்துச்
சொரியினும் போகா தம. (8) | 8 |
எறிபத்த நாயனார்.
பத்தர்பூ மூளி பறித்தகரி பாகரைக்கொன்
றித்தலவேந் தஞ்ச வெறிபத்தர்-கைத்தார்
குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயுங் காத்த லரிது. | 9 |
ஏனாதி நாத நாயனார்.
தானாக வெல்லாதான் தன்னுதல்வி பூதியைக்கண்
டேனாதி நாத ரிகலிழந்தார்- ஆனாத
சால்பிற்குக் கட்டளை யாதெனிற் றோல்வி
துலையல்லார் கண்ணுங் கொளல். | 10 |
கண்ணப்ப நாயனார்.
புண்ணப்பர் கண்ணிலென்று புன்கணுறுப் பீர்ந்தப்பி
கண்ணப்ப ரன்புறுப்பிற் கைசெய்தார் - வண்ணப்
புறத்துறுப் பெல்லா மெவன்செய்யும் யாக்கை
யகத்துறுப் பன்பி லவர்க்கு. | 11 |
குங்கிலியக் கலைய நாயனார்.
தலையன்பி னால்வளைந்தார் தம்மைநிமிர்த் திட்டான்
கலையன்பின் காணிடுக்கண் காணான் -மலைவின்
மடுத்தவா யெல்லாம் பகடன்னா னுற்ற
விடுக்க ணிடர்ப்பா டுடைத்து. | 12 |
மானக்கஞ்சாற நாயனார்.
பஞ்சவடிக் கென்றுசிவ பக்தர்க் குவப்பமண
வஞ்சுதைமென் கூந்தலரிந் தன்றீந்தார்-கஞ்சாற
ரீத்துவக்கு மின்ப மறியார்கொ றாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர். | 13 |
அரிவாட்டாய நாயனார்.
போயகமர் மாவடுவும் புண்ணியர்வா யிற்கொளவே
தாயர்களத் தூறுவடுத் தான்கொண்டார்-வீயாரோ
சாதலி னின்னாத தில்லை யினிததூஉ
மீத லியையாக்கடை. | 14 |
ஆனாய நாயனார்.
ஆனாயர் வேயிசையி லஞ்செழுத்தே யஞ்செவிச்செந்
தேனா யரனுக்கந் திக்களித்தார்-கானிற்
பொருள்கருவி காலம் வினையிடனோ டைந்து
மிருடீர வெண்ணிச் செயல். | 15 |
சுந்தரமூர்த்தி நாயனார்.
ஆதியிலா ரூரர்க் கமுதாக்க வேபரவை
வீதியெல்லாம் நெல்லாய் விளைந்ததே-நீதியால்
இல்லதெ னில்லவண் மாண்பானா லுள்ளதென்
இல்லவண் மாணாக் கடை. | 16 |
மூர்த்தி நாயனார்.
சேர்த்திமுழங் கையெலும்புந் தேயச்செஞ் சந்தனமா
மூர்த்தி மதுரேசர் முன்பரைத்தார்-பார்த்தீரோ
அன்பிலா ரெல்லாந் தமக்குரிய ரன்புடையா
ரென்பு முரியர் பிறர்க்கு. (17) | 17 |
முருக நாயனார்.
மட்டார்தார் கண்ணி வகைசிவபூ சைக்கொருநாண்
முட்டாது செய்தார் முருகனார்-விட்டாரோ
வீழ்நாள் படாஅமை நன்றாற்றி னஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்குங் கல். | 18 |
உருத்திர பசுபதி நாயனார்.
உருத்திரமே சொல்லி யுதகத்துள் ளேநின்
றுருத்ர பசுபதியா ருற்றார்-திருத்தாள்
தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லா
ரவஞ்செய்வா ராசையுட் பட்டு. | 19 |
திருநாளைப் போவார் நாயனார்.
மூவா யிரமறையோர் மொய்ப்பத் திருநாளைப்
போவார் சிதம்பரத்துட் போயடைந்தார்-ஓவாப்
பெருமைக்கு மேனைச் சிறுமைக்குந் தத்தங்
கருமமே கட்டளைக கல். | 20 |
திருக்குறிப்புத் தொண்ட நாயனார்
தொண்டர் குறிப்பறிந்த தொண்டர் திருக்குறிப்புத்
தொண்டரைத்தங் கந்தைதந்து சோதியராட்-கொண்டார்
குறிப்பிற் குறிப்புணர் வாரை யுறுப்பினுள்
யாது கொடுத்துக் கொளல். ) | 21 |
சண்டேசுர நயனார்.
அறஞ்செய்த தாதைதா ளற்றிடத்தண் டீசர்
மறஞ்செய்கொலை புண்ணியமா வாழ்ந்தார்-திறந்தெரியி
னல்லவை யெல்லாஅந் தீயவாந் தீயவு
நல்லவாஞ் செல்வஞ் செயற்கு. | 22 |
சுந்தரமூர்த்தி நாயனார்.
ஓராப் பரவைக் குமாபதியைத் தூதாக்கித்
தீராப் புலவியையுந் தீர்த்தாரே-யாரூரர்
உப்பமைந் தற்றாற் புலவி யதுசிறிது
மிக்கற்றா னீள விடல். | 23 |
திருநாவுக்கரசு நாயனார்.
தரைசேர் சமணீங்கிச் சைவஞ்சேர் நாவுக்
கரசர் வயிற்றுவலி யற்றார்-உரைசேர்ந்த
சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய். | 24 |
நீற்றறைநஞ் சானைகட னேருற்றா ரப்பருக்கு
மாற்றமணர் பின்னிருந்து வாழ்ந்தாரோ-வாற்றரிய
நோயெல்லா நோய்செய்தார் மேலவா நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர். ) | 25 |
மருணீக்கி யார்தரும சேனருமாய் நாவுக்
கரசரப்ப ராகியின்ப மானார்-அருளால்
இருணீங்கி யின்பம் பயக்கு மருணீங்கி
மாசறு காட்சி யவர்க்கு. | 26 |
விண்களிப்பக் காணாவியன்கயிலை வாழ்வையப்பர்
கண்களிப்ப வையாற்றிற் கண்டுவந்தார்- எண்களிப்பக்
கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர். | 27 |
மாமணிபொன் மாதரெதிர் வந்துறினும் பற்றற்றார்
தாமரன்பால் வந்தரசர் தாழ்த்தாரோ-வாமெனவே
பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கு மற்று
நிலையாமை காணப்படும். | 28 |
குலச்சிறை நாயனார்.
நலச்சிறைநீர் வேணியார் நல்லடியார் யார்க்குங்
குலச்சிறையார் தாம்பணிதல் குன்றா-ரிலர்க்கிகழா
ரெல்லார்க்கு நன்றாம் பணித லவருள்ளுஞ்
செல்வர்க்கே செல்வந் தகைத்து. | 29 |
பெருமிழலைக் குறும்ப நாயனார்.
நாவலர்கோ மான்கயிலை நாளைப்போ மென்றுமுன்போய்
மேவிமிழ லைக்குறும்பர் வீற்றிருந்தார்-யாவருக்கு
மின்னா தினனில்லூர் வாழ்த லதனினு
மின்னா தினியார்ப் பிரிவு. | 30 |
காரைக்காலம்மையார்.
என்புருவா லம்மையெள்ள வீசர்நமக் கம்மையென்னு
மன்புருவாள் காரைக்கா லம்மைகாண்-முன்பே
யுருவுகண் டெள்ளாமை வேண்டு முருள்பெருந்தேர்க்
கச்சாணி யன்னா ருடைத்து. | 31 |
அப்பூதியடிக ணாயனார்.
அரசினையப் பூதி யடிகளறி வாரோ
வுரைசெயுணர் வாலுறுநட் புற்றார்-மருவிப்
புணர்ச்சி பழகுதல் வேண்டா வுணர்ச்சிதா
னட்பாங் கிழமை தரும். | 32 |
திருநீலநக்க நாயனார்.
நலங்கொடிரு நீலநக்கர் நாதர்மே லில்லாள்
சிலம்பிவிழ வாய்மருந்து செய்தாள்-சலங்கொளுமு
னோய்நாடி நோய்முத னாடி யதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல். | 33 |
நமிநந்தியடிக ணாயனார்.
நக்கமணர் வெள்கநமி நந்தியா ரூரர்க்கு
மிக்கபுன லாலேவிளக் கெரித்தார்-தக்கமனத்
தெண்ணிய வெண்ணியாங் கெய்துப வெண்ணியார்
திண்ணிய ராகப் பெறின். | 34 |
சுந்தர மூர்த்தி நாயனார்.
ஆறாறு கட்டாரை யாறணையா வாறுபெரு
காறாறு காட்டநடந் தாரூரர்-பேறானார்
வெள்ளத் தனைய விடும்பை யறிவுடையா
னுள்ளத்தி னுள்ளக் கெடும். | 35 |
திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார்.
வால வயதில் வளர்புகலிப் பிள்ளையார்
போல விசையம் புரிந்தவரார்-ஞாலமிசைத்
தோன்றிற் புகழொடு தோன்றுக வஃதிலார்
தோன்றலிற் றோன்றாமை நன்று. | 36 |
பண்ணார் பசுந்தமிழ்ச்சம் பந்தரெதிர் வந்தமண
ரெண்ணா யிரங்கழுவி லேறினார்-ஒண்ணாது
வில்லே ருழவர் பகைகொளினுங் கொள்ளற்க
சொல்லே ருழவர் பகை. | 37 |
முத்தமிழ்ஞா னத்தலைவர் முன்னம் பகைசாரப்
புத்தனெதிர் நின்றிடியிற் பொன்றினா-னித்திறமென்
கூற்றத்தைக் கையால் விளித்தற்றா லாற்றுவார்க்
காற்றாதா ரின்னா செயல். | 38 |
ஏறியவோ டக்கோ லிசைஞானச் செந்தமிழா
லாறுகடந் தார்தோணி யார்மகனார்-வீறடங்கா
வெள்ளத் தனைய மலர்நீட்ட மாந்தர்தம்
முள்ளத் தனைய துயர்வு. | 39 |
கணவனெனக் காதலியைக் காழியர்கைப் பற்றி
மணவறையீ சன்கழலாய் வாழ்ந்தார்-குணமே
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர். | 40 |
ஏயர்கோன் கலிக்காம நாயனார்.
ஈகனையாள் வாராம்வந் தென்னையாள் வாரென்று
காசினியில் மாண்டார் கலிக்காமர்-பேகின்
மருந்தோமற் றூனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த விடத்து. | 41 |
திருமூல நாயனார்.
பரகாயஞ் சேர்ந்தார் பசுக்களா லாய்ச்சி
மருவாமன் மாதவமே வாய்ந்தார்-திருமூல
ரூழையு முப்பக்கங் காண்ப ருலைவின்றித்
தாழா துஞற்று பவர். | 42 |
தண்டியடிக ணாயனார்.
அந்தகனென் றேசு மமணரந்த ராயொழியத்
தந்தமொழி சாதித்தார் தண்டியார்-முந்தமொழி
சொல்லுதல் யார்க்கு மெளிய வரியவாஞ்
சொல்லிய வண்ணஞ் செயல். | 43 |
மூர்க்க நாயனார்.
உருளாய மும்பொன் னுதவுதன்மூர்க் கர்க்கே
பொருளாய மற்றவர்க்கே போக்கு-மருளா
மறத்தினூஉங் காக்கமு மில்லை யதனை
மறத்தலி னூங்கில்லை கேடு. | 44 |
சோமாசிமாற நாயனார்.
சோமாசி மாறனார் சுந்தரரால் யாகமினி
தாமா றரனை யழைப்பித்தார்-ஆமாம்
போதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கி
னதுநோக்கி வாழ்வார் பலர். | 45 |
சுந்தரமூர்த்தி நாயனார்.
பொருட்டுறையுன் பாட்டேநற் பூசையென்றா ரூரர்க்
கருட்டுறையா ரன்புசெய்வா ரானார்-மருட்டேர்
செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கு மீயப் படும். | 46 |
சாக்கிய நாயனார்.
அங்கசன்பூ வெல்லா மடுகணையே சாக்கியர்கைச்
செங்கலெல்லாஞ் சங்கரர்க்குத் தேமலரே-செங்கேழ்க்
கணைகொடிதி யாழ்கோடு செவ்விதாங் கன்ன
வினைபடு பாலாற் கொளல். | 47 |
சிறப்புலி நாயனார்.
எய்தமகிழ்ந் தின்சொலுரைத் தீசனடி யார்க்கிதமே
செய்தனமே செய்தார் சிறப்புலியார்-வெய்துற்றார்
மோப்பக் குழையு மனிச்ச முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து. | 48 |
சிறுத்தொண்ட நாயனார்.
காய்க்கறிவே றொன்று தொடாக் கள்ள வயிரவர்க்கோர்
சேய்க்கறிசெய் திட்டார் சிறுத்தொண்டர்-வாய்க்கினிதா
யின்னா திரக்கப் படுத லிரந்தவ
ரி்ன்முகங் காணு மளவு. | 49 |
சேரமான்பெருமா ணாயனார்.
நெறிவார் சடையரைப்போ னீணிலத்தார் செய்கை
யறிவார் கழறிற் றறிவார்-அறிவாரார்
எல்லார்க்கு மெல்லா நிகழ்பவை யெஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் றொழில். | 50 |
சேரர்கோ னீதித் திரவியங்கள் சுந்தரர்பாற்
சோரர் கவர்ந்தொளித்துஞ் சோர்வுண்டோ-பாரி
லழக்கொண்ட வெல்லா மழப்போ மிழப்பினும்
பிற்பயக்கு நற்பா லவை. | 51 |
கணநாதய நாயனார்.
நாட்டிலடி யாரையெல்லா நாதன் பணிவிடையே
காட்டிவாழ் வித்தார் கணநாதர்-வேட்டிவர்தாஞ்
செய்யாமற் செய்த வுதவிக்கு வையகமும்
வானகமும் மாற்ற லரிது. | 52 |
கூற்றுவ நாயனார்.
ஆற்றரிதா மீச னடிமுடியா கப்புனைந்து
போற்றி மனக்கவலை போக்கினார்-கூற்றர்
தனக்குவமை யில்லாதான் றாள்சேர்ந்தார்க் கல்லான்
மனக்கவலை மாற்றலரிது. | 53 |
சுந்தரமூர்த்தி நாயனார்.
ஆரூர ரீசனைத்தூ தாக்கியநாட் கூன்குருடு
தாரோடு தாம்பூலந் தாங்கவினை-தீர்வார்
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும். | 54 |
பொய்யடிமையில்லாத புலவர்.
மதுரையிலே ழேழ்புலவர் வல்லசிவன் பாத
மதுபொருளா கக்கவிசெய் தாரே-புதுமையோ
கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவ
னற்றா டொழாஅ ரெனின். | 55 |
புகழ்ச்சோழ நாயனார்.
தங்களத்தில் வீழ்ந்த சடைத்தலைகண் டஞ்சியஞ்சிப்
பொங்கழற்குள் வீழ்ந்தார் புகழ்ச்சோழர்-எங்குமறாத்
தீயவை தீய பயத்தலாற் றீயவை
தீயினு மஞ்சப் படும். | 56 |
நரசிங்கமுனையரைய நாயனார்.
மூரி நரசிங்க முனையரையர் மாதவருட்
சீரியதூர்த் தர்க்கிரட்டி செய்தாராம்-பூரிதா
னற்ற மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும். | 57 |
அதிபத்த நாயனார்.
மேனாட்செல் வங்கெடினு மீன்வலைவீ சிக்கோரொண்
மீனாளும் விட்டா ரதிபத்த-ரானா
திடனில் பருவத்து மொப்புரவிற் கொல்கார்
கடனறி காட்சி யவர். | 58 |
கலிக்கம்ப நாயனார்.
மெய்யடியார் தாளில்லாள் வெள்கக் கழுவிவாள்
கையடியங் கீர்ந்தார் கலிக்கம்பர்-பொய்யடிக்கொண்
மல்லாளை யஞ்சுவா னஞ்சுமற் றெஞ்ஞான்று
நல்லார்க்கு நல்ல செயல். | 59 |
கலிய நாயனார்.
எள்ளா விளக்கரன்பா லேற்றவே வாள்கலியர்
கொள்ளாரே லேதுங் கொடாருலகி-லுள்ளார்கொ
னல்லார்கட் பட்ட வறுமையி னின்னாதே
கல்லார்கட் பட்ட திரு. | 60 |
சத்திநாயனார்.
அண்ணலடி யாரையிகழ்ந்து தார்நரகி லாழாதே
தண்ணளியா னாத்தறித்தார் சத்தியா-ரெண்ணமுற
யாகாவா ராயினு நாகாக்க காவாக்காற்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. | 61 |
ஐயடிகள் காடவர்கோ னாயனார்.
நாடலரு நற்பதிக ணண்ணிநல் வெண்பாவாய்ந்
தாடலர னுக்களித்தா ரையடிகள்-காடவர்கோன்
றாமின் புறுவ துலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந்தார். | 62 |
சுந்தரமூர்த்தி நாயனார்.
நீரூர் முதலையது முன்னுண்ட பிள்ளையைப்பின்
னாரூரர் பாவா லழைப்பித்தார்-பாரூர்
பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான். | 63 |
கணம்புல்ல நாயனார்.
கணம்புல்லர் நெய்வாங்கக் காணார் கணம்பு
லிணங்குதலை நெய்விளக்கொன் றிட்டார்-வணங்கரன்பாற்
றுன்ப முறவரினுஞ் செய்க துணிவாற்றி
யின்பம் பயக்கும் வினை. | 64 |
காரி நாயனார்
பாரின்மூ வேந்தர் பரிசிலுத வப்பாடிக்
காரியா ராலயங்கள் கட்டினார்-ஓரிடமோ
யாதானு நாடாமா லூராமா லென்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு. | 65 |
நெடுமாற நாயனார்.
பழுதறுசம் பந்தரெதிர் பாழமணர் தாழ
லழுவறநெல் வேலி வென்ற மாறன்-கழுவிட்டா
னந்தணர் நூற்கு மறத்திற்கு மாதியாய்
நின்றது மன்னவன் கோல். | 66 |
வாயிலார் நாயனார்.
ஆயறிவு தீப மகமலரன் பேயமுதங்
கோயிலிறைக் கோர்மனமாய்க் கொண்டுவந்தார்-வாயிலா
ரோர்த்துள்ள முள்ள துணரி னொருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு. | 67 |
முனையடுவார் நாயனார்.
வினையடுவார் வந்தடுக்க வென்றுகொண்ட கூலி
தனையடுவார் சைவர் தமக்கே-முனையடுவார்
தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு. | 68 |
சுந்தரமூர்த்தி நாயனார்.
தென்புகலூ ரீசனையுஞ் சென்றுபணிந் தாரூரர்
பொன்புகலாப் பெற்றார் புகழ்பெற்றா-ரின்புற்றார்
ஒண்பொருள் காழ்ப்ப வியற்றியார்க் கெண்பொரு
ளேனை யிரண்டு மொருங்கு. | 69 |
கழற்சிங்க நாயனார்
தொழச்சங் கரன்சூடாத் தூய்மலர்மோந் தாள்கை
விழச்சென் றரிந்து விடுத்தார்-கழற்சிங்கர்
ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டுந்
தேர்ந்துசெய் வஃதே முறை. | 70 |
இடங்கழி நாயனார்.
நடங்கழியா ரன்பர்க்கே நற்பொருள்க ளெல்லா
மிடங்கழியா ரன்பினெடுத் தீந்தார்-முடங்கா
அருளென்னு மன்பீன் குழவி பொருளென்னுஞ்
செல்வச் செவிலியா லுண்டு. | 71 |
செருத்துணை நாயனார்.
கருத்தனணி பூவைக் கழற்சிங்கன் றேவி
யிருத்தியின் மோந் தாள் மூக் கரிந்தார்-செருத்துணையார்
வாளாடென் வன்கண்ண ரல்லார்க்கு நூலொடெ
னுண்ணவை யஞ்சு பவர்க்கு. | 72 |
புகழ்த்துணை நாயனார்.
வற்கடம்வந் தூண்போய்மெய் வாடிப் புகழ்ந்துணைகை
நற்கலசம் வீழவர னார்கொடுத்தார்-பொற்காசு
தெய்வத்தா னாகா தெனினு முயற்சிதன்
மெய்வருந்தக் கூலிதரும். | 73 |
கோட்புலி நாயனார்.
பொலிகிளைகொன் றார்கோட் புலியார் விரை
கலிகடந்த குற்றங் கடிந்தா-ருலகிற்
குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்
வடுவன்று வேந்தன் றொழில். | 74 |
சுந்தரமூர்த்தி நாயனார்.
மாவணங்கைக் கொண்டிடுமுன் வந்தரனார் சுந்தரர்க்கோ
ராவணங்கைக் கொண்டுமறித் தாட்கொண்டார்-நோவ
அழச்சொல்லி யல்ல திடித்து வழக்கறிய
வல்லார்நட் பாய்ந்து கொளல். | 75 |
பத்தராய்ப் பணிவார்கள்.
வாய்ப்பவர னைத்தொழுது வாய்குழறிக் கண்ணருவி
தோய்ப்பநடுங் கிப்புளகித் தோர்பத்த-ராய்ப்பணிவார்
அன்பின் வழிய துயிர்நிலை யஃதிலார்க்
கென்புதோல் போர்த்த வுடம்பு. | 76 |
பரமனையே பாடுவார்.
பரமனையே பாடுவார் பாடும் புகழா
லிருவினையுஞ் சேரா ரிவரே-மருளாம்
இருள்சே ரிருவினையுஞ் சேரா விறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. | 77 |
சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்.
அத்தனடி யல்லா லறம்பொருளின் பங்களிலே
சித்தமலை யார்சித்தத் தைச்சிவன்பால்-வைத்தார்தாம்
பற்றுக பற்றற்றான் பற்றினை யப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு. | 78 |
திருவாரூர்ப் பிறந்தார்.
மன்னுதிரு வாரூர் மதிள்வட்டத் துப்பிறந்தா
ருன்னு சிவகணத்தி னுற்றுயர்ந்தா-ரின்னே
நிலத்திற் கிடந்தமை கால்காட்டுங் காட்டுங்
குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல். | 79 |
முப்போதுந் திருமேனி தீண்டுவார்.
கருமேனி யன்பாற் கழீஇமும் போதுந்
திருமேனி தீண்டுவார் சீர்வாழ்-வொருவா
பொறிவாயி லைந்தவித்தான் பொய்தீ ரொழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார். | 80 |
முழுநீறு பூசியமுனிவர்.
அழுதீ சனைநினைந்தே யஞ்சுபதஞ் சொல்லி
முழுநீ றணிவார்தா முட்டார்-பழுதுறினும்
ஒல்லும் வகையா னறவினை யோவாதே
செல்லும்வா யெல்லாஞ் செயல். | 81 |
அப்பாலுமடிச்சாந்தார்.
பாடுமுனைப் பாடியர்கோன் பாடலின்மெய்ப் பாடகங்கொண்
டாடுவரப் பாலு மடிச்சார்ந்தார்-நீடரன்பாற்
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி. | 82 |
சுந்தரமூர்த்தி நாயனார்.
பித்தரென வைதாற் பிழைபொறுத்தன் மாத்திரமோ
வத்தரா ரூரர்க் கருள்புரிந்தார்-நித்தம்
அழிவந்த செய்யினு மன்பறா ரன்பின்
வழிவந்த கேண்மையவர். | 83 |
பூசலார் நாயனார்.
வானமுதற் றூவி வரைமனத்தே கட்டியரன்
றானமாப் பூசலார் தாபித்தார்-ஞான
மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார். | 84 |
மங்கையர்க் கரசியார்.
ஞானசம் பந்தரங்கே நண்ணியபி னெண்ணிலா
தானிவிளைத் தாளே யமணர்க்கு-மானியார்
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக சீர்த்த விடத்து. | 85 |
நேசநாயனார்.
ஈசருடை மெய்யடியார்க் கேதேனுஞ் செய்வனென்று
நேசருடை கோவணங்கீ ணெய்தளித்தா-ராசைபுரிந்
தன்றறிவா மென்னா தறஞ்செய்க மற்றது
பொன்றுங்காற் பொன்றாத் துணை. | 86 |
கோச்செங்கட் சோழ நாயனார்.
முந்திகலாற் செங்கணான் மூண்டானைக் காவினும்பின்
றந்திபுகா வாயில் சமைத்தானே-யெந்தைக்
குடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருட்
பாம்போ டுடனுறைந் தற்று. | 87 |
இதுவுமது.
சிலம்பியாய் நூற்கோயில் செய்தசெங்க ணான்பின்
றலங்கடொறுங் கோயில் சமைத்தார்-நலங்கூர்
தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லா
ரவஞ்செய்வா ராசையுட் பட்டு. | 88 |
திருநீலகன்ட யாழ்ப்பாண நாயனார்.
கானத் திருநீல கண்டயாழ்ப் பாணரைப்போன்
ஞானத் தலைவர்க்கு நட்பினரார்-மானத்து
மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங்
கற்றா ரனைத்திலர் பாடு. | 89 |
சடைய நாயனார்.
ஆம்பற்றினாற்சடைய ராலால சுந்தரரைத்
தாம்பெற்ற பேறே தவப்பேரே-யோம்பிப்
பேறுமவற்றுள் யாமவறிவ தில்லை யறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற. | 90 |
இசைஞானியார்.
உற்றவிசை ஞானிதா னோங்குபுகழ்ச்சுந்தரரைப்
பெற்றதினு மன்புமிகப் பெற்றாளே-முற்றறிவா
லீன்ற பொழுதிற் பெரிதுவக்கும்ந் தன்மகனைச்
சான்றோ னெனக் கேட்ட தாய். | 91 |
சுந்தரமுர்த்தி நாயனார்.
கனிந்திதையங் கண்டார் அமலினியுங் காவி
லனிந்திதையுஞ் சுந்தரர்கண் டாங்கே-புனைந்துரைத்தென்
கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்க
ளென்ன பயனுமில. | 92 |
இதுவுமது.
சுந்தரரைக் கண்டலர்கொய் தோகையர்சென் றாரொருநா
ளெந்தைகயி லைக்கிரையா லின்றளவும்-வந்ததே
கண்டது மன்னு மொருநாளலர்மன்னுந்
திங்களைப் பாம்புகொண் டற்று. | 93 |
இதுவுமது.
அங்கருளா லாரூர ராசையற வேபரவை
சங்கிலியார் மானோய் தவிர்ப்பித்தா-னெங்கோன்
பிணிக்கு மருந்து பிறம னணியிழை
தன்னோய்க்குத் தானே மருந்து. | 94 |
இதுவுமது.
சீரூர் கயிலையினுஞ் செல்லுநாள் வில்லவனை
யாரூரர் சிந்தித் தழைத்திட்டா-ரோரார்
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்
தகநக நட்பது நட்பு. | 95 |
தள்ளாது சேரரொடு தாங்கயிலைக் காரூரர்
வெள்ளானை மேற்சென்றார் விண்ணாறா-யுள்ளமிசை
வேண்டிய வேண்டியாங் கெய்தலாற் செய்தவ
மீண்டு முயலப்படும். | 96 |
இதுவுமது
நாவலர்வெள் ளானை நாடாத்தவுப மன்னியர்போ
லாவலுடன் சென்றுபணிந் தார்களோ-தேவர்
பணியுமா மென்றும் பெருமை சிறுமை
யணியுமாந் தன்னை வியந்து. | 97 |
இதுவுமது.
பாலாழி யுண்ட பழமுனிசொன் னான்முனிவ்ர்க்
காலால சுந்தரன்சொ லங்கினிதாய் -மேலாம்
பணிவுடைய னின்சொல னாத லொருவற்
கணியல்ல மற்றுப் பிற. | 98 |
இதுவுமது.
தம்முடைய தோழர்வரத் தம்முடைய தோழரையும்
வம்மினென வண்கயிலை வாழ்வித்தா-ரெம்மிறைவர்
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனிற் கொட்பின்றி
யொல்லும்வா யூன்று நிலை. | 99 |
இதுவுமது .
சொல்வைத்த சேரனுலாச் சொல்லக் கயிலையரன்
செல்வத் திருச்செவியிற் சேர்ந்ததே-மல்வைத்த
செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வ மச்செல்வஞ்
செல்வத்து ளெல்லாந் தலை. | 100 |