|
Home > Scriptures & Stotras > Tamil
சிவமயம்
சிவப்பிரகாச சுவாமிகள் அருளிய
சீகாளத்திப் புராணம்
கண்ணப்பச் சருக்கம்
கலித்துறை
மதியின் மானிளங் கன்றினை வரிசிலைக் குறவர்க்
குதலை மென்மொழிப் பேதையர் பச்சிளங் கொடிப்புல்
பதும மென்கையா னீட்டுபு பரிவுட னழைக்கும்
புதுமை கொண்டவெற் புடுத்தது போத்தப்பி நாடு. 1
தாவி லத்திரு நாட்டசீ றூர்களிற் றலைமை
மேவி நீணறுஞ் சந்தன நிரைத்துவெண் கவரி
மாவின் மென்மயிர்க் கற்றைவேய் சிற்றில்கள் வயங்கி
யோவில் சீருடுப் பூரெனக் குறிச்சியொன் றுண்டால். 2
வேடர் மங்கையர் முன்றிலி னின்றபூ வேங்கை
யாடு கொம்பரிற் றொடுத்தபூந் தொட்டிலி னமர்ந்த
தேட ரும்பசுங் குழவிதா லாட்டுசெவ் வழியின்
பாடல் கேட்டுமா மயிலுறங் குவமலைப் பக்கம். 3
இரும்பிற் செய்தன திண்புயத் திறவுளர் மைந்தர்
விரும்பப் பின்றிரிந் திளம்புலி கற்குமால் வீரம்
பெருங்கைச் செம்புகர் முகத்திளம் பிடியினம் பிணைபோற்
கருங்கட் செய்யவாய்க் குறத்திய ரணிநடை கற்கும். 4
வென்றிக் குஞ்சர மத்தக முத்தமும் வேயிற்
பன்றிக் கோட்டிடை வருமொளி முத்தமும் பரப்பி
முன்றிற் பற்பல சிற்றில்கள் செய்யுமான் முனியாக்
குன்றிச் செம்மணி யணியுடைப் பேதையர் குலமே. 5
நெடிய சந்தனக் காற்கரி மருப்பித ணின்று
கடிகொள் பைந்தினை கவர்பசுங் கிளியினங் கடியு
மடநல் லாரிசை கேட்டலு மாடக நல்யாழ்
தடவல் விட்டுவிச் சாதரர் செவித்துணை தாழ்ப்பார். 6
இனைய பற்பல பெருவள மெய்துமவ் வூரிற்
குனியு நோன்சிலைக் குறவர்தங் குஞ்சிதோய் கழற்கால்
வனச ராதிப னாகனென் பானிகல் வாட்கண்
மனைவி தத்தையென் பாளொடு வாழ்ந்தினி திருந்தான். 7
வாழு நாளின்மென் மழலையஞ் சொன்மக வின்மைத்
தாழ்வி னானனி மனங்கவன் றிறவுளர் தலைவன்
வீழி வாய்க்கய லரிமதர் நெடுங்கண்வேய் மென்றோ
ளேழை நுண்ணிடை மனைவியோ டின்னண மெண்ணும். 8
கண்ணில் யாக்கையுந் திங்களில் கங்குலுங் கண்போ
வண்ணன் மந்திரி யில்லர சாட்சியு மருளிற்
றிண்ணெ ணெஞ்சமும் புலவரி லவையுமொண் டீம்பால்
வண்ண வாயிள மக்களில் வாழ்வுமொப் பாமால். 9
சேற ளைந்தமென் சீறடித் தளிரொடு தீம்பாற்
சோற ளைந்தகைத் தாமரை யோடுசெந் துகிர்வா
யூறு நீர்நனை மார்பினோ டிளமகா ருந்தி
யேறு மின்பமுள் ளதனையே யுடம்பென விசைப்பார். 10
அரிகொள் பொன்புனை கிண்கிணி தண்டையோ டணிந்த
தருண மென்றளிர்ச் சீறடித் தளர்நடைச் சிறுவர்
மருவ றாதசெவ் வாம்பல்வாய் மழலையா ரமுதம்
பருகி லாச்செவி பாவையின் செவியெனப் படுமால். 11
இம்மை யின்பொடு மறுமையி னின்பமென் றிரண்டு
மம்மென் மைந்தரை யில்லவர்க் கில்லைமற் றதனா
லெம்மை யாளுடை முருகவே ளடிமல ரிறைஞ்சிச்
செம்மை நன்மகற் பெருகுவ மெனச்சிந்தை செய்தான். 12
சிந்தை செய்தவன் வரைபக வெறிசுடர்ச் செவ்வே
லெந்தை வாழ்வதற் கேற்றதோர் சினகர மியற்றி
நந்து பூசனை நடத்துபு நடிக்குமா மயிலும்
வெந்தி றற்கொழுஞ் சூட்டுவா ரணங்களும் விடுத்தான். 13
இரலை தொண்டகந் துடிமுதற் பறையொலி யீண்டத்
திருவி ழாவயர்ந் திலங்குசெங் காந்தளந் தெரிய
லுருவ வேலனைக் கூயகன் களனணி யுறுத்து
வெருவ ருந்தகை வெறியயர் வித்தனன் விழைவால். 14
கடிகொ ளவ்வெறி யாட்டிடை யாவருங் காணச்
சுடர்செய் வேற்படைக் குருசிலவ் வேலன்மேற் றோன்றி
யொடிவி லன்பொடு செய்தவிச் சிறப்பினுக் குவந்தேம்
படியெ லாம்புகழ் மகற்றரு குவமெனப் பகர்ந்தான். 15
பகர்ந்த சொல்லமு தந்துணைச் செவிகளாற் பருகி
யுகந்து மாமகிழ் வெய்திய தத்தையு முவகை
மிகுந்த நாகனுந் திருவடி மலர்மிசை வீழ்ந்து
புகழ்ந்து நின்றனர் மறைந்தன னருட்கடற் புனிதன். 16
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
பின்னரவ் வெறியாட் டாளன் பெறப்பெருஞ் சிறப்புச் செய்து
துன்னிநின் றகலாச் சுற்றத் தொகைக்கெலா மகிழ்ச்சி செய்து
தன்னமர் மனையுந் தானுந் தளிர்த்துள மினிதி ருந்தா
ரன்னமன் னவள்சின் னாளி லரும்பெறற் கருப்ப முற்றாள். 17
உண்டுகொ லென்னு மைய மொழிந்தது மருங்குட கோங்கின்
வண்டுறு முகுள மென்ன வனமுலை முகங்க றுத்த
பண்டுவ மைக்கு டைந்த பசியவேய்க் குலமு வப்பத்
துண்டவெண் மதிநு தற்குத் தோட்டுணை மெலிந்தவன்றே. 18
மகவுடன் வயிற்றி ருந்து வளர்புகழ் பரந்த தென்ன
மிகவுடல் விளர்த்த துண்டி வெறுப்புவந் ததுபு ளிங்கூ
ழகனமர்ந் துண்ணும் வேட்கை யடைந்தது நடையோய்ந் தன்று
தகைமலர் மென்பூங் கோதை தான்பெருஞ் சுமையா யிற்றால். 19
கலிவிருத்தம்
இன்ன வாறு வயாநலி வெய்திய
கன்ன லின்மொழிக் காரிகை பெற்றனண்
மன்னு தங்குல மாசு துடைத்திடும்
பொன்னி னன்ன புதல்வனை யென்பவே. 20
பெறல ருஞ்சேய் பிறந்தெனக் கானவ
ரிறைம கிழ்ச்சி யிருங்கடன் மூழ்கினான்
பொறையு யிர்த்தவப் பொற்றொடி யெய்திய
வுறும கிழ்ச்சி யுரைப்பவர் யாவரே. 21
நண்ணு மோகையி னாகன் பெருஞ்சிறப்
பண்ணல் வேற்படை யையனுக் காற்றினான்
பெண்ணு மாணும் பெருமகிழ் வெய்தலா
னெண்ணெ யாட்டணி யெங்குநி கழ்ந்ததே. 22
தரவுகொச்சகக் கலிப்பா
மணியினைமண் ணுறுத்தாங்கு வாசவான் புனலாட்டிப்
பணைகொள்குவி முலைபிலிற்றும் பால்பெய்து நிலந்தேய்த்த
வணிதிலகஞ் சிறுநுதலி லணிந்துமுலைப் பாலூட்டி
பிணையில்கரி மருப்பினிய லெழிற்றொட்டி லேற்றினார். 23
பூஞ்குழல்வே னெடுங்கண்ணாள் புனலாட்டிப் புனைந்துதர
வாங்குசிலை மறவர்கோன் மணிமகனைத் தடக்கையாற்
றாங்குபுதிண் ணென்றிருந்த தன்மையாற் றிண்ணனெனத்
தேங்கியபே ருவகையொடுந் திருநாமஞ் சாத்தினான். 24
திண்வளருங் கரிமருப்பாற் செய்யசைபூந் தொட்டிலின்மேல்
விண்வளரும் புனிற்றுநிலா வெண்மதியின் வளர்மைந்தன்
றண்வளரும் பாலாழித் தரங்கமிசை நாகணையிற்
கண்வளருந் துழாயலங்கற் கதிர்மணிவண் ணனைப்போலும். 25
மலயமா ருதம்புகுந்த மடுக்கமல மெனநீரிற்
கலைகெழுமா மதியமெனக் கவின்கொடிரு முகமசைய
விலவிதழ்வா யமுதொழுக வெழின்மார்ப மிசையெடுத்துச்
சிலைமறவர் குலதிலகஞ் செஞ்கீரை யாடிற்றே. 26
தருணமதி நிலத்தினிடைத் தவழ்வதெனத் தவழ்தந்து
பொருதிரைவார் கடலாடைப் புவிமகள்செய் புண்ணியத்தாற்
றிருவடிமா மலர்சுமப்பச் சேர்த்திளமென் னடைபயின்றான்
குருதிவடி யிலங்கிலைவேற் குகனருளாற் பெறுமைந்தன். 27
குன்றிவட மரைதயங்கக் கொடுவரிவள் ளுகிர்க்கோவை
நன்றுகழுத் தினிலிலங்க நனந்தலைச்சீ றூர்முழுது
மொன்றுசிறா ரொடுசிறுதே ருருட்டியும்பே தையரிழைத்த
துன்றுமணிச் சிற்றில்லந் துடைத்தும்விளை யாட்டயர்ந்தான். 28
ஆர்நாரின் றிண்கயிற்றா லமைச்சிறுகோல் வளைத்தவிலுங்
கூர்வாய்முண் ணுனிபதித்த கோற்கோலுங் கைக்கொண்டு
கார்மேனி மைந்தரொடு கான்புகுந்து கொடுவிலங்கி
னேர்வாய்மென் குருளைபல வெய்தல்செய்தான் விளையாட்டால். 29
வாமிளமான் கன்றுகளும் வள்ளுகிர்நோன் றாட்புலியின்
கோமளநற் குருளைகளுங் குடாவடியின் குட்டிகளுந்
தாமிழைத்த முற்றவத்தாற் சவரர்குலா திபன்பயந்த
மாமகனார் கைப்பட்டு வளர்ந்தவற்றிற் களவில்லை. 30
இவ்வகைய விளையாட்டோ டிளமைந்தன் வளரும்நாட்
கைவலிய சிலைவிஞ்சை கற்பிக்கும் பருவம்வரத்
தெவ்வடுதோட் குன்றவர்கோன் றேயத்து மறவரெலா
மவ்வுழிவந் துறக்கூட்டி யடர்சிலையின் விழாநடத்தி. 31
பின்புசிலை யாசாற்குப் பெருஞ்சிறப்புச் செய்தடிக
ளென்பழைய குடிநிறுத்திவ் விளையோற்குச் சிலைக்கல்வி
யன்பினொடு கொடுக்கவென்றா னதற்கிதொல் லாசிரிய
னன்பகலில் வரன்முறையே நற்சிலைகைப் பிடிப்பித்தான். 32
முற்பிறப்பிற் பல்பெரும்போல் முடித்தசிலை விஞ்சையெல்லா
மற்பழுத்த குவவுத்தோள் வனசார்தம் பெருமாற்கு
விற்பிடித்த காலத்தே விளங்கியதஞ் சனம்விழியிற்
பொற்பவிட்ட பொழுதேகீழ்ப் பொருள்வைப்புக் காண்பதுபோல். 33
அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்
கொள்வலிச் சிலையின் விஞ்சை குறைவற நிரம்பிக் காளை
முள்ளெயிற் றரவு யர்த்தோன் முரட்படை முழுதுங் கொன்ற
வெள்வயப் புரவித் திண்டேர் விசயன்வேட் டுவக்கு லத்தி
னுள்ளவ தரித்தான் கொல்லென் றுரைதர வொழுகு நாளில். 34
சேட்டிளஞ் சிங்க மன்ன செம்மலைத் தந்தை கன்னி
வேட்டமா டுவித்த லாற்ற விழைந்தன னதனை நன்கு
கூட்டக்காட் டுறைதெய் வங்கள் கொள்பலி கொடுப்ப வுன்னிக்
கோட்டுறு வரிவில் வேடர் குழுவொடு வனத்திற் புக்கான். 35
கலிவிருத்தம்
புக்கவன் குழைசிலைப் புளிநர் யாரையு
மைக்கருங் கயல்புரை வாட்கண் ணாரொடு
தொக்கிருஞ் சுனைப்புன றோய்ந்து வம்மெனா
வக்கணந் தானுநீ ராடப் போயினான். 36
குரைகட லின்னுமக் குறிய மாதவன்
பருகினும் பருகுமென் றஞ்சிப் பாழிமால்
வரையரண் புகுந்தென வயங்கு பூஞ்சுனை
தெரிவைய ரொடுமறச் செல்வ ரெய்தினார். 37
ஒலிவளைக் கையினா ருற்ற போதிரி
பலவிதப் பறவையின் பறையின் காற்றினான்
மலிசுனைக் குவளைக ளசைதன் மாதர்கண்
ணலிபகைக் குடனனி நடுங்கல் போலும். 38
மற்றவர் புகுதலின் மணங்கொள் பூவினுட்
டுற்றவண் டிரிதர றூய நீர்ச்சுனை
யற்றைநாள் வரையும்புக் காடு வார்ப்பெறா
துற்றநீள் பழிவிடுத் தோடல் போலுமே. 39
மேற்படி வேறு
செய்ய தாமரைத் தேமல ரன்னலா
ரைய வாண்முகத் தோடுற வாடின
மொய்ய ரும்புகண் முத்தந் துயல்வரூஉம்
வெய்ய கொங்கை விருந்தெதிர் கொண்டவே. 40
எழுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்
தாமரை முகத்தர் குவளையங் கண்ணர் சைவலக் கூந்தலர் வள்ளைக்
காமரு குழைய ரன்னமென் னடையர் கமலநீர் வளையமென் றோளர்
நேமியம் பறவைக் குவிமுலைத் தடத்தர் நிறையித ழாம்பலம் வாய
ராமட மகளிர் நீரைவிட் டகலா ததினமர்ந் தாடின ரன்றே. 41
இவ்வுழி மூழ்கி வேறிடத் தெழுவ லென்னைநீர் காண்கென மூழ்கி
யவ்வகை யெழுந்த சிற்றிடைப் பெருந்தோ ளணியிழை யளகவாண் முகத்தைச்
சைவலத் தருகு மலர்ந்தசெங் கமலத் தனிமல ரெனமனத் தெண்ணிக்
கொவ்வைவாய் மகளி ரெழுந்தில ளென்று குளிர்புனற் பரப்பெலாம் பார்ப்பார். 42
கலிவிருத்தம்
முரிதி ரைப்புனன் மூழ்கி யெழுதரு
மரிம தர்க்கணா ளங்கலுழ் வாண்முக
மிரைதி ரைக்கட லின்கண் ணெழுதல்செய்
விரிக திர்க்கலை வெண்மதி யொத்ததே. 43
அன்ன மென்னவந் தீம்புன லாடிய
பொன்னி னன்ன பொறிசுணங் கம்முலைக்
கன்ன லின்மொழி யார்கரை யேறினார்
துன்னு பைந்தழைத் தூசுடுத் தாரரோ. 44
அங்கு நின்றக லங்கையற் கண்ணினார்
மங்குல் கண்படு மாமலர்ச் சோலையுட்
பொங்கு மோகையிற் போய்க்கட வுட்கலர்
கொங்கு நாண்மலர் கொய்யத் தொடங்கினார். 45
தம்மை மஞ்ஞை தழைசிறை மென்குயி
லம்மென் பூவை கிளியென் றறைந்திடன்
மெய்ம்மை யாக விளங்கிழை யார்விரை
விம்மு பூந்தரு மீமிசை யேறினார். 46
கொங்கு தங்கிய கோங்கலர் கொய்யுமோர்
மங்கை கொம்பின் மறைந்து நின்றாளெழில்
பொங்கு வெம்முலை பூமுகி ழாமென
வங்கை கொண்டுதொட் டன்மையின் வெள்கினாள். 47
கிராதர் தங்குலக் கிஞ்சுக வாய்மலர்
விராய வோதியர் வேங்கைமே னின்றனர்
குராவ லாமற் குடைந்தளி பாடுபூம்
பராரை வேங்கையும் பாவைகள் பூத்தென. 48
மைய கண்ணியோர் மங்கையோ ராடவன்
கைய டிக்கவின் காணிய மாதுநீ
செய்ய விச்சினைத் தேமல ரெட்டுபு
கொய்ய வல்லைகொ லென்றதுங் கூசினாள். 49
வீவி லாற்றலோர் மீளி யொருநடை
யோவ மன்னா ளுயர்சினைப் பூப்பெறத்
தாவல் கண்டதைத் தாழ்வித் தனனவ
னாவி யன்னவ ளாய்மலர் சிந்தினாள். 50
மாதர் தம்மடி வைத்தலிற் பற்பல
வீத தைந்த விதமறிந் தாரல
ரீத சோகநா மேறிய பின்மிகப்
போது கொண்ட புதுமையென் னென்றனர். 51
வடுவ கிர்க்கணாற் றம்மொடு மாறுகொள்
படியி னாலிடம் பார்த்து வளைந்தெனக்
கடிகொள் வண்டின் கணங்கள் மணங்கமழ்
துடிகொ ணுண்ணிடைத் தோகையர்ச் சூழ்ந்தவே. 52
தாத ளைந்தளி தாழிசை பாடுதண்
போது கொய்த புதுத்தளிர் மேனியார்
காத லன்பிற் கணவரோ டெய்தினார்
தீது தீர்க்குமத் தெய்வ நிலையமே. 53
கந்த மாறாக் கடிமலர்ப் பைஞ்சுனை
யந்த ணீர்படிந் தவ்வுழி யெய்தினான்
மந்த ராசல மென்ன வளர்ந்ததோ
ணந்து பேரிசை நாகன் கிராதர்கோன். 54
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
விரிமலர்த் தொடைக ளானும் விளங்குவெண் கவரி யானும்
வெருவரு தெய்வம் வாழும் வீழுடை விலங்கு நீள்கோட்
டிருள்படத் தழைந்த கோளி யெழில்பெற வணிந்து பூசை
புரிபவற் கூவிப் பூசை புரிவித்தான் வரிவி னாகன். 55
கானக முழுதும் வாசங் கமழ்தரக் குக்கி லத்தி
னீனறும் புகையெ ழுப்பி நெடுநிலங் குருதி பாய
நானெடுஞ் செவிய கோட்ட நண்ணிய திரிம ருப்பி
னூனமொன் றானு மில்லா வுயர் விடை பலப டுத்தான். 56
தேன்பழங் கிழங்கு தொப்பி செறியமை யரிசி யட்ட
வான்பதந் தினையின் மாவை வனத்தின்வா லரிய நன்மா
மான்பயம் பெய்த மைத்த வல்சிதேக் கிலையிற் பெய்து
கான்பயில் கடவுட் கேற்றிக் களித்தனன் றேவ ராளன். 57
மறவமெல் லணங்க னாரும் வனதெய்வம் பராய்வ ணங்கி
முறையறி தேவ ராளன் முழுவிடைக் குருதி தோய்செந்
நிறமுறு சேடை சாத்து நெற்றியர் தெய்வ முண்ட
வுறுசுவை யுண்டி யெல்லா முண்டுளங் களித்தா ரன்றே. 58
வெடிகுரற் சிலைக்கைச் செங்கண் வேடரும் பவளச் செவ்வாய்த்
தடமலர்க் கருங்க ணாருந் தசும்பினு ணிறைத்து வைத்த
வடிகொள்ட் டேற லங்கை மடக்குபு நிறைய வுண்டா
ருடைநடை சொற்கள் சோரா வொருவர்மே லொருவர் வீழ்ந்தார். 59
சிற்றிடை யொருத்தி தைத்த தேக்கிலைத் தேற லேந்தி
மற்றத னகந்தோன் றுந்தன் மதிமுக நோக்கி யுண்டாள்
கற்றையங் கதிர்வெண் டிங்கள் கள்ளொடென் வயிறு புக்கின்
றிற்றது நிலவு நம்மூர்க் கினியிலை யுண்மை யென்றாள். 60
களிதரு தேற லுண்டு களித்தியேற் பருதிச் செல்வ
விளிவினின் வெம்மை யாறி வெண்ணிலாத் திங்கள் போலக்
குளிர்கதிர் பெறுவை யீவல் கொள்கெனப் பிழிய லேந்தி
யிளிமொழி யொருத்தி வானத் தியல்சுட ரழைத்து நின்றாள். 61
செறிதொடி யொருத்தி யுண்ட தேம்பிழி மயக்கந் தன்னாற்
பிறனொரு வனைத்தன் காதற் பிரிவருங் கொழுந னென்றே
யிறுகிள முலையழுந்த விறுகுறத் தழுவி னாளக்
கறைகெழு வேலி னானக் கள்ளினைப் பலவு கழ்ந்தான். 62
கருங்கணா ளொருத்தி தன்வாய்க் கடைவழி நுரைவேட் டெய்துஞ்
சுரும்பினை வளைக ளார்ப்பத் தோன்றியங் கையா னோச்சி
விரும்புநின் பெண்டிர் பாற்போய் விம்மவாய் பருகென் றூடி
வருந்தலை மகனோ டூடி வைதல்போல் வைது நின்றாள். 63
மணங்கமழ் மலர்து தைந்த வஞ்சியங் கொடியி னைத்தன்
வணங்கிடை யவளென் றுன்பூ வாயைத்தே னொழுக லஞ்சி
யணங்குநீ திறந்தி டாயே லளியனே னுய்வ னோவென்
றுணங்கிய மனத்தான் றாழ வுறுதவன் களிப்பு மிக்கான். 64
உண்கடுங் கண்ம யக்க மொழிந்தபிற் கணவ ராட்டப்
பண்படு கிளவி நல்லார் படர்முலை வடம்பி ணங்கக்
கண்கொள லருநு சுப்புக் கவன்றழ நுதல்வி யர்ப்ப
விண்பொரு சினைய வாலின் வீழூச லாடி னாரால். 65
பொரிமல ரனைய புன்கம் புதுநிறற் புளினற் தோறும்
விரிகதிர்ச் செஞ்ஞா யிற்றின் வெயில்புகாப் பொதும்பர் தோறுந்
தருமிடை யடுக்க றோறுந் தமாலநீ ளரங்கந் தோறும்
வரிசிலை மறவர் செவ்வாய் மறத்தியர் போக முண்டார். 66
மீமிசை நின்ற சைற்து விழுமணி யருவி பார்த்துங்
காமரு மணிக்க லாபக் களிமயி லாடல் கண்டுந்
தேமலர் வனத்து லாயுஞ் சிலம்பெதிர் கூய ழைத்து
மாமதி முகத்தி னார்தம் மகிழ்நரோ டாடி னாரே. 67
இன்னண மெங்கு மாடி யெய்திய சிலைவல் லாரு
மின்னிடை யழுதி ரங்க வீங்கிய குவவுக் கொங்கைப்
பொன்னார் தாமுஞ் சூழ்ந்து போதர வனத்தி னீங்கித்
தன்னம ருடுப்பூர் புக்கான் றடக்கைமால் யானையன்னான். 68
மற்றைஞான் றருக ழைத்து மைந்தனை யைய கேட்டி
யிற்றைநாண் முதலா நீயே யிறவுளர்க் கிறைவ னாகிப்
பற்றலர் முனைமு ருக்கிப் பகைப்புலங் கவர்ந்து கொற்றம்
பெற்றுமா வேட்டை யாடிப் பெரிதுவாழ்ந் திருத்தி யென்றே. 69
வழிவழி வந்த வெற்றி வரிசிலை கைக்கொ டுத்துக்
கழிபெருங் காத றன்னாற் கன்னவி றோண்ஞெ முங்கத்
தழுவிநங் கடவுட் செவ்வே டன்னரு டுணையாச் சென்று
மழவிடை கன்னி வேட்டம் வாய்த்துடன் வருக வென்றான். 70
என்றதன் றாதை பொற்றா ளிறைஞ்சுபு விடைகொண் டன்னை
தன்றிரு வடிப ணிற்தான் றாயெனைப் பெற்ற தாயே
மன்றலங் களிறே யிங்கு வருகென வெடுத்துப் புல்லிக்
குன்றுறழ் முலைப்பால் சோரக் குழைந்துநெஞ் சுச்சி மோந்தாள். 71
போகுகா னெறிக ளெல்லாம் புதுமலர்த் தண்ணென் சோலை
யாகவே புகுந்து வேட்ட மாடிமுட் கிழியு மின்றிச்
சேகுநோன் சிலையா ரோடுந திரம்புக கண்ணே றின்றி
மேகமே யனையா யென்று வெண்பொடி சாத்தி னாளால். 72
தாயடி மறித்துந் தாழ்ந்து தரும்விடை கொண்டு நீங்கி
மேயநீ னிறங்கொள் கச்சை விசித்துடை வாளும் யாத்திட்
டாயிளந் தளிர்தொ டுத்த வலங்கலங் கண்ணி வேய்ந்து
மாயவன் றொடுதோ றொட்டு வரிசிலை யெடுத்துக் கொண்டான். 73
மலர்தலை யுலகில் யார்க்கும் வணங்கிலாக் கொடும ரத்தைக்
குலவரை யனைய தோளான் குணங்கொளீஇ வணங்கு வித்தான்
வலிகெழு சிலைகு ழைக்கும் வன்மைவான் குடிப்பி றந்தார்
சிலர்கொடு மரம்வ ணக்குஞ் செயலிறும் பூது கொல்லோ. 74
இருமுது குரவர கேளா வீண்டிய மயிர்பொ டிப்பத்
தருமிசைப் பறவை யெல்லாந் தனித்தனி வெருவி யோட
வெருள்கொடு விலங்கி னீட்டம் வேறுவே றிரிதல் செய்ய
வரைபொரு தோளி னான்றை வந்துநா ணொலிசெய் தானால். 75
வில்லின ரம்பி னார்வெவ் வெடிபடு குரலர காலிற்
செல்பவர் மின்னு வாளர் செறிமழை மேக மன்னார்
கொல்லெறி பிடிது ரத்து குத்துவெட் டரியெய் யென்னுஞ்
சொல்லினர் தணியாச் சீற்றத் துப்பினர் சூழச் சென்றான். 76
கணைபிற கொழிய வோடுங் கடுப்பின கொடுங்கூர்ம் பல்ல
தணிவரு சினத்த வேட்டந் தனித்தனி யான வல்ல
வணியெயிற் றழல்வெஞ் சீற்றத் தரியின்மேல் விடினுஞ் செல்வ
பிணிதொடர் பாசத் தோடு பெருவலி நாய்கள் சென்ற. 77
வலத்தினு மிடத்து முன்னும் பின்னரு மாறி மாறிக்
கொலைத்தொழற் சுருள்வர னீணாக் கொடுஞ் செவிஞமலி செல்ல
வுலப்பில்பே ராற்றல் வேட ரொடுவிரை துவலைக் கண்ணி
மிலைச்சிய வேடர் வேந்தன் வேட்டையங் காடு புக்கான். 78
பலபல விலங்கி னீட்டம் பயிலிட மறிந்து சுற்றும்
வலிவலை சூழ்ந்து சேணில் வழியொதுக் கியபின் வேடர்
கலிகெழு துடிகள் பம்பை கடுங்குர லிரலை யாதி
யொலியெழு வித்து மாக்க ளுறுவலை புகத்து ரந்தார். 79
புக்கபிற் றாமும் புக்குப் புகுவழி யொடியெ றிந்து
மிக்கவல் லுழுவை கேழல் மிடைமயிர்க் கரடி முன்னாத்
தொக்கபல் விலங்கின் பார்வை சூழ்வலைப் பரப்புள் விட்டார்
மைக்கருஞ் சிலைக்கை வேடர் வயின்வயின் மறைந்து நின்றார். 80
கலிவிருத்தம்
விட்ட பார்வையின் விளியி னாலவண்
கிட்டி வந்தமான் கிளையெ லாமுடன்
பட்டு வீழதரப் பகழி தூவினார்
மட்டி லாவலி வல்வில் வேடரே. 81
காலிற் செல்லுநாய்க் கணந்த டுத்தலாற்
சாலச் சீறுபு தடையுட் பட்டமா
நீலக் குன்றொடு நிகர்க ளிற்றினம்
வேலிற் குத்தினார் சிலவர் வேடரே. 82
மேற்படி வேறு
மிடைசெடியிடை மறைமறவர்கள் விடுகணையுட லுருவப்
படுதலுமய லுறுகொடுவரி பாய்தந்ததென் றதனைச்
சுடுதழலடு வெகுளியினொடு தொடர்குடர்சரி தரவெண்
டடமுனை வளர் பிறையெயிறுறத் தாக்கியதொரு கருமா. 83
பரியரைமர நிரைமறைவரி படுசிலைமுர ணுரவோர்
பொருவிரைசர முருவியவுடற் பொருவருமொரு கருமா
வெரிபுரைதரு பெருவெகுளியோ டெய்கணைவழி போயவ்
விருடருமர முரிதரவுரு மெனத்தராக்கிய தன்றே. 84
எழுவுடனெழின் முழவிழிவுசெய் தழுபெருவலி கெழுதோண்
முழுமறவரி னொழுகியகணை முழுகியவுட லுழுவை
வழைகுழைகழை விழைநிழலிடு மழைதவழ்மலை யதிரத்
தழைசெவிமழ வழுவைகள்விழத் தாக்கியதுறு விசையால். 85
வெய்யவர்குல முய்வகைவரு மெய்யருள்பெறு திண்ண
னையமிறுணை மொய்வலிகெழு மையலில்வல சில்லர்
மையொடுநிகர் மெய்யுருவிய வையுறுமுனை முள்ளை
யெய்யுதறின வொய்யெனவெதி ரெய்யடுகணை யென்ன. 86
மேற்படி வேறு
கனைமாமழை யிடிபோலதிர் கடுவாய்மரை யாமா
வினையாவலி யுடைமாகளி றெழுவாய்வனம் வாழ்மா
வனைவார்கழன் மதயானைகண் மலைவார்விடு வார்கோன்
முனைவாளிக ளுடன்மூழ்கலின் முளவாயின மாதோ. 87
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
இவ்வகை பலவி லங்கி னீட்டமு நூழி லாட்டித்
தெவ்வடு வரிசி லைக்கைத் திண்ணன்மா வேட்ட முற்றிக்
கௌவைகொள் கான நீங்கிக் கடுந்திறன் மறவ ரோடு
மெவ்வமி றனதூர் புக்கா னீன்றவர்க் குவகை பொங்க. 88
பின்னரும் பலகால் வேட்டம் பெருவலிக் காளை யாடி
யன்னையு மத்த னுங்கண் டகமகிழ் பூப்ப வைகிக்
கொன்னுனைப் பகழி வேடர் குலத்தொடும் வாழ்த்த வோர்நாட்
டன்னுளம் வேட்ட மூக்கச் சரம்புகா வனம்பு குற்தான். 89
புகுந்தவன் கான மெங்கும் புக்குலாய் மிகவி ளைத்து
மிகுந்தழை மிடைம ரத்தின் மென்னிழ றனிது யின்றான்
முகுந்தனை வாளி யாக்கி முரணின ரரணம் வேவ
நகுந்தனி முதல்வ னன்னான் கனவிடை நண்ணி னானே. 90
பூசிய திருவெண் ணீறும் புலியத ளுடையுஞ் செக்கர்
கூசுபொன் சடையுங் கொண்ட கோலத்தோ டெதிர்நின் றொன்று
மேசுத லிலாத மைந்த விவ்வரை வடமூ லத்திற்
காசில்பொன் முகலி யாற்றங் கரையிலோ ரிலிங்க முண்டால். 91
அதுதுய ரனைத்தும் வீட்டி யரும்பெற லின்ப நல்கு
மதவலி யதைநீ சென்று வணங்குதி யென்று ரைத்துக்
கதுமென மறைந்தா னாங்கே கண்விழித் திறும்பூ தெய்தி
யெதிரில்போ ராற்ற லான்றிக் கெங்கணு நோக்கி நின்றான். 92
ஆயகா லையில்வில் வேட ரார்ப்பினா லெழுந்து கான்சூழ்
போயவல் வலைப ரித்துப் பொருகடுங் காலிற் பொங்கி
மாயிருங் கேழ லொன்று மலைபுகப் போதல் கண்டான்
காயழல் வெகுளி யான்பின் கையில்வில் லொடு துரந்தான். 93
துரந்துபின் செல்லச் செல்லத் துணைவிற்பொ யெறுழி யாற்கீ
ழிருந்தரு ளிலிங்கத் தின்பா லெய்தலு மறைந்த தண்ணல்
வரம்பில்விம் மிதத்த னாகி மற்றிது மறைந்த தென்னோ
தெரிந்தில மென்று நின்றான் சிவலிங்க மிருத்தல் கண்டான். 94
காண்டலுங் கடவு ளார்தங் கருணைநோக் கினிது பெற்ற
மாண்டகு மிரதந் தோய்ந்த வல்லிரும் புருவ மாறி
யீண்டொளி கெழுபொன் னாவ தென்னமுற் குணங் கண்மாறி
யாண்டகை யிறைவன் றன்பா லன்பொரு வடிவ மானான். 95
நாள்பல பிரிந்தி ருந்து நண்ணிய சிறுச தங்கைத்
தாளிள மகனைக் கண்ட தாயெனத் தாழா தோடி
நீளெழு வனைய தோள்கள் ஞெமுங்குறத் தழுவி மோந்து
வாளழ லரக்கி னன்ன மனத்தினான் முத்தங்கொண்டான். 96
செய்யகண் ணீரரும்பச் செறி மயிர் பொடிப்ப வாதன்
கையகப் பட்ட தெய்வக் கதிர்விடு மணியி னாயேற்
கையன்வந் தகப்பட் டானென் றணியெயி றிலங்க நக்கு
மெய்யெலா மெய்யன் பாய விடலைமற் றின்ன சொல்வான். 97
ஆனையும் புலியு மெண்கும் யாளியு முளவுங் கூர்ங்கோட்
டேனமுந் திரியுங காட்டு ளெந்தைநீ துணையு மின்றிக்
கூனல்விற் றடக்கை வேடர் குலமென விருப்ப தென்னே
யூனுண வுனக்கி யாவ ருண்கெனத் தருவா ரந்தோ. 98
தேனொடு தினையின் பிண்டி தீம்பழங் காய்கி ழங்கு
மானொடு முயலெய் கேழல் வல்லுடும் பழுங்கி வற்றி
னூனுண வென்றிவ் வெல்லா முதவுவல் யானே நல்ல
கானவர் துணையுண் டெம்மூர்க் காண்டிவா வென்று நின்றான். 99
சாமிநீ தனியே யீண்டுத் தங்குத றரித்த லாற்றே
னேமநல் லுடுப்பூர்க் கின்னே யென்னொடு வருதல் வேண்டும்
நீமன மிரங்கா யெந்தா யெனப்பல நிகழ்த்தி னானக்
கார்மழை யனையா னற்புக் கடலினுக் கெல்லை யுண்டோ. 100
மறுமொழி யிறைவ னொன்றும் வழங்கல னிருப்ப மீளி
யிறைதிரு வுளத்தி னெண்ண மிவ்வயி ணிருத்தல் போலுஞ்
சிறியனே னினியித் தெய்வ சிகாமணி தன்னி னீங்கி
லுறுவனோ வுயிரி னோடென் றுரைத்தன னின்றா னாங்கே. 101
அண்ணறன் மூடியிற் றூய்நீ ராட்டுபு முருகு விம்மூ
தண்ணுறு மலர் மாலூரத் தளிர்சூட்டி யிருத்தல் காணூஉப்
பண்ணவன் றனக்கீ தேற்ற பணியெனத் தேறி யுள்ள
மண்ணெழு வனைய தோளான் மற்றது கடைப்பி டித்தான். 102
பின்புவேட் டுவர்தங் கோமான் பெரும்பக லாயிற் றன்னோ
வென்பெருந் துணையாய் நின்ற விறைவனார் மிகப்ப சித்தா
ரின்சுவை யூன்கொ ணர்ந்திங் கிடல்வேண்டு மென்ன நீங்கிற்
கொன்சின விலங்கி னீட்டங் குறுகிலென் செயுமோ கெட்டேன். 103
என்றுசா லவுமி ரங்கி யெரிபசி மிகாத முன்னஞ்
சென்றொரு கணத்தூன் கொண்டு திரும்புவ மெனத்து ணிந்து
குன்றிடை யெனக்கு வாய்த்த குலமணி விளக்கே யெந்தா
யுன்றழற் பசித ணிப்ப வுறுசுவை யிறைச்சி கொண்டே. 104
உழுந்துருள் பொழுதின் மீள்வே னொருகண மேனுந் தாழேன்
வழங்குறு கொடுவி லங்கு வருமென வஞ்சே லைய
வெழுந்துமேல் வந்த தாயி லென்னையொய் யெனக்கூ வென்று
குழைந்தவிற் றடக்கை கூப்பிக் குறவர்கோ னரிதி னீங்கி. 105
கடிக்கடி மனையு ணின்ற கன்றகல் புனிற்றாப் போல
வடிக்கடி திரும்பி நின்றே யையர்தந் தனிமைக் கேங்கி
வடிக்கடி யம்பு பட்டு மழைமுகி லெனக்கி டக்குங்
கிடிக்கிடி வேட்டைக் கானங் கிளர்கடுங் காலிற் சென்றான். 106
கொழுந்தளை மோழ லொன்று குரவர்கோன் றானே யேந்தி
முழங்கலை யெறியு நன்னீர் முகலியின் றீரஞ் சார்ந்தோர்
செழுந்தரு நிழலின் வைத்துத் தீயர ணியினா லாக்கி
யெழுந்துறு மயிர்க் டிந்தவ் வெறுழியை வாளி னீர்ந்தான். 107
ஈர்ந்துசெந் தசையுட் சால வின்சுவை யுடைய வெல்லாந்
தேர்ந்துவே றெடுத் தெடுத்துத் தேக்கிலை யதனுட் பெய்து
கூர்ந்தவா யம்பிற் கோத்துக் கொந்தழற் பதத்திற் காய்ச்சி
யார்ந்தபே ரன்பன் வாய்ப்பெய் தருஞ்சுவை பார்க்க லுற்றான். 108
பல்லினான் மெல்ல மெல்லப் பன்முறை யதுக்கிப் பார்த்து
நல்லன விறைச்சி யெல்லா நவையிறேக் கிலையிற் றைத்த
கல்லையுள் வாங்கி வைத்துக் கழிசுவை யிலாத வெல்லாம்
வல்லைவெள் ளிடையு மிழ்ந்தான் வருபவக் கடலமிழ்ந்தான். 109
பூந்தளி ரோடு கொய்த புதுமலர் தலையிற் பெய்து
தாந்திர விதியின் றாட்டுந் தண்புனல் வாய்மு கந்து
தீந்தசை யமுது பெய்த தேக்கிலைத் தளிகை யோர்கை
யேந்தியம் பொடுவில் லோர்கை யெடுத்துவல் விரைவிற் போந்தான். 110
மேற்படி வேறு
என்னா ருயிர்க்குத் துணையாவா ரெரிவெம் பசியா லிளைத்தாரோ
வன்னோ கொடிய விலங்கினத்தா லச்சுற் றாரோ வெனப்பதைத்துத்
தன்னா தரவிற் பார்ப்ப ருந்தத் தாழா தோடும்பறவையென
முன்னா மனமும் பின்னாக முதல்வன் றன்பா லோடினான். 111
சென்று குறுகி யெம்பெருமான் றீயேன் வரவு தாழ்த்தலினாற்
கன்று பசியால் வருந்தினையே யென்று கரைந்து திருமுடிமேல்
றுன்று தளிருஞ் செழும்போதுந் தொடுதோ லடியான் மாற்றிவா
யொன்று நீராற் பிரானுடலோ டுள்ளங்குளிர வாட்டடினான். 112
ஆட்டித் தலையி லிருந்தகம ழருந் தளிருமெடுத் திறைஞ்சிச்
சூட்டித் திருமுன் னிலைக்கலத்திற் றூய விறைச்சிப் போனகம்வைத்
தீட்டற் கரிய பெரும்பொருளே யெந்தா யுண்கென் றினியசொலி
யூட்டிப் பிரியா தருகுநின்றா னுவகைக் கடற்குக் கரைகாணான். 113
கலித்துறை
காட மங்கதில் வேடர்தந் தலைவனைக் காணார்
சால வச்சுறீஇக் காடெலாந் தேடியத் தடங்கோட்
டால மூலத்தி னிருந்தரு ளண்ணறன் னருகு
நீட மால்வரை நின்றென நிற்பவற் கண்டான். 114
அருகு சென்றடைந் தையநீ யெங்களை யகன்றிப்
பெரிய மால்வரை யடைந்ததென் பிழைத்தனங் கொல்லோ
பருதி வானவ னண்பகல் கடந்தனன் பசித்தாய்
முருக விவ்வுழி நிற்பதென் வருகென மொழிந்தார். 115
கரைந்த சொற்கெலா மெதிர்மொழி கொடாமையிற் கவன்று
பெருந்த காயுனக் கெங்கண்மேன் முனிவென்கொல் பேசாய்
வருந்தி நீயிவண் வந்தமை யறிந்திலம் வள்ளா
லிரங்கு வார்கழ னின்னடி யறியவென் றிசைத்தார். 116
மற்ற தற்குமொன் றுரைத்தில னிற்பவம் மறவர்
கொற்ற வில்லுடைக் குரிசினீ யுளத்திலென் கொண்டாய்
சற்று மெம்மிடத் தன்பிலை யாயினை தலைவ
குற்ற மெம்வயிற் கண்டதுண் டேற்பிற கூறாய். 117
என்று பற்பல திறத்தினா லுரைக்கவு மினையோ
னொன்றும் வாய்ந்திறந் தானல னோவியம் போலக்
குன்ற வில்லியை நோக்கிநின் றானவர் குறித்து
மன்ற வெஞ்சின மன்றிது வென்னென மருண்டார். 118
இங்கு நின்றவித் தெய்வத மிவனிடத் தேறித்
தங்கி நின்தோ வென்கொலோ வறிகிலந் தமியே
மங்கு நம்மொடு வருகுவ னலனிவ னந்தோ
நங்க டொல்குலத் தலைவனா நாகற்கென் னுரைப்போம். 119
தத்தை யாகிய தத்தையந் தேமொழித் தையன்
மத்த யானைபோ லென்மக னெங்கெனின் மறுசொ
லெத்தி றத்தினாற் சொல்லுது மெனப்பல விரங்கி
யெய்த்து நின்றனர் வசிக்கவோ ருபாயமு மில்லார். 120
குழைக்கு நோன்சிலை நாகனோ டிச்செயல் கூறி
யழைத்து வந்தன மெனிலவ னெத்திறத் தானும்
பிழைக்கு மாறியற் றுவனெனத் துணிந்தனர் பெயர்ந்தார்
தழைத்த லைப்புலா னாறும்வாய்ச் செய்யகட் சவரர். 121
அன்ன காலையி லாயிரங் கதிர்ச்சுட ரரசன்
மன்னு திண்ணனன் பப்புறத் துலகெலாம் வழங்கப்
பன்னு வேமெனப் போதல்போற் குடதிசைப் பராரைச்
சென்னி வான்றொடு மலைமறைந் தானிருள் செறிய. 122
அரவு மிழ்ந்தசெம் மணிக்கண மிமைத்தலி னலரி
யிரைதி ரைக்கடன் மூழ்கியுங் கங்குலங் கில்லை
யிருள்கெ டச்சுடர் விரிதரு விலைவரம் பில்லா
வுருவ மாமணி பலவுள விடத்திர வுண்டோ. 123
அண்ண லைக்கொடு விலங்கினங் குறுகுத லஞ்சி
வண்ணு திக்கணை தொடுத்தகூன் வில்லொடு மறந்துங்
கண்ணி மைத்தில னாகியே வைகறை காறு
மண்ணெ ழுப்புரை தோளனின் றானிறை மருங்கு. 124
அன்ப ரன்பினுக் ககப்படு பேரரு ளாழிக்
கின்ப வூன்றிரு வமுதமாக் கியவுளத் தெண்ணி
வன்பெ ருஞ்சிலைத் தடக்கையான் வைகறைப் போது
பொன்ப ரந்தொளிர் மால்வரைச் சாரலிற் போந்தான். 125
வீட்ட வாவுடை யார்க்கரு டருமொரு விமல
னாட்ட மாகிய தான்கொள்புண் ணாற்றிடு நம்பி
வேட்ட மாடுதல் காணிய விரும்பிவந் தென்னக்
கோட்ட வார்திரைக் கடலெழுந் தான்சுடர்க் கோமான். 126
கலிவிருத்தம்
பொங்கு வெஞ்சினப் புண்கமழ் வாளுகிர்ச்
சிங்க மன்னான் செயனிற்க மற்றினிக்
கங்கை வார்சடைக் கண்ணுத றாண்முத
றங்கு நெஞ்சத் தவன்செயல் சாற்றுவாம். 127
அருளு மானாப் பொறையு மறிவொடு
தெருளு நோன்புஞ் சிவனிடத் தன்பினோ
டிருளிற் றீரவா வின்மையுங் கல்வியு
மருளின் மெய்ம்மையு மாணுரு வாயினான். 128
வெறுப்பில் சந்தன மெய்யெலாம் பூசிநின்
றிறப்ப வின்ப மியற்றுநர் தங்கணும்
கறுத்தெ ழுந்தெதிர் காயழற் பெய்துதுன்
புறுத்து வார்கணு மொத்த வுளத்தினான். 129
நீடுங் கார்க்குழ னீளரி வாள்விணி
வாடுஞ் சிற்றிடை மாதர்கள் புல்லினு
நாடுந் தன்னுளந் தாயென நண்ணுவா
னோடும் பொன்னு மொருநிகர் நோக்குவான். 130
ஈச னார்தம் மிணையடித் தாமரைப்
பூசை செய்தொழி லாப்பூண்டு செய்திடு
மாசை மேல்கொண் டறாமனத் தான்சிவ
கோச னென்னுங் குணப்பெருங் குன்றானான். 131
இரவி வந்தெழு முன்ன மெழுந்துபோய்
முதிரி ரைப்புனன் மூழ்கி விதிமுறை
விரைசெய் போதொடு மென்புன லுங்கொடு
புரிச டைப்பிராற் பூசிப்ப வெய்தினான். 132
தலைமி சைத்திரு மஞ்சனந் தாங்குபு
மலர்பெய் கூடையு மேந்துபு வல்வினை
விலகு மண்ணறன் னாமம் விளம்புபு
புலவ னையன் றிருமுன்பு போயினான். 133
தேன்கு லத்தொடு செவ்வழி வண்டுளர்
கான்க டுக்கையங் கண்ணியன் முன்பெலா
மூன்கி டத்தல்கண் டுள்ள நடுங்கியே
தான்கு தித்தய லோடினன் றாழ்விலான். 134
தரவு கொச்சகக்கலிப்பா
மேவார்வந் தடிபணியும் விண்ணோர்கண் முடிமணிக
ளோவாது கிடந்தொளிரு முடையபிரான் றிருமுன்ன
ராவாவிக் கொடும்பாவ மார்செய்தா ரிதுசெய்யத்
தேவாதி தேவனார் திருவுள்ள மிசைந்தாரோ. 135
கொல்லாமை யறியாமைக் குணமாகக் கொண்டொழுகும்
பொல்லாத சிலைவேடப் புலைஞரே யிதுசெய்வா
ரொல்லாத செயலிதையன் புடையோர்கள் கண்டக்கா
னில்லாம லிறந்திடுவர் நிற்கின்றேன் கொடுவினையேன். 136
என்றுபல பலகூறி யிணையிலா னழுதிரங்கிக்
கன்றுமிடற் றிறைபூசா காலமிகத் தாழ்க்கநா
னின்றதனாற் பயனென்னே யெனநினைந்து புலவெல்லாந்
துன்றுமல காலகலத் துடைத்தாப்பி நீர்தௌ¤த்தான். 137
பின்னரடைந் தலைபுரட்டும் பெருந்தீர்த்தம் படிந்தாடிச்
சொன்னமறை மந்திரத்தாற் றூய்தன்மை கடிந்ததற்பின்
மன்னுமுருத் திரசமக நமகத்தால் வானவர்கோன்
சென்னிமிசைப் புனலாட்டித் திருமலர்கொண் டருச்சித்தான். 138
முன்னர்நின் றுகைதலைமேன் முகிழ்த்திருகண் ணீர்பாயத்
துன்னியமெய்ம் மயிர்பொடிப்பச் சுடுதழல்வாய்ப் பட்டவரக்
கென்னமன நனியுருகி யிளகமிக நாத்தழும்ப
மன்னுமன னொடுசாம மறைக்கீதம் பாடினான். 139
பற்பலகால் வலஞ்செய்து பணிந்தரிது நீங்கிப்போய்ச்
சிற்பரனா ரடிமறவாச் சிந்தையன்றன் னிடத்தடைந்தான்
முற்பகல்வே டர்கணோற்ற முழுநோன்பா லவதரித்த
விற்படுகார் மழையன்ன விடலைசெயல் விளம்புவாம். 140
அறுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்
எழுவினங் கவற்று தோளா னேறுகாற் பன்றி செல்லும்
வழியறிந் தொளிநின் றெய்து மான்றுயி லிடன றிந்து
குழைநெடுஞ் சிலையிற் பூட்டு கோலுட லுருவ வெய்து
முழுவலன் புடையான் முன்போ லுறுசுவை யமுத மைத்தான். 141
பின்புகோற் றேனி ரம்பப் பெய்துகொண் டிறைய சிக்கு
மென்பதாற் றான்றொ டுத்த வேவென விரைவி னோடி
முன்புபோற் பூசை முற்றி முனிவிலின் னமுத ருத்தி
யன்பினாற் கடலி னான்னா னருகுநீங் காது நின்றான். 142
அந்தவே லையில்வில் லோரா லரும்பெறற் புதல்வன் செய்தி
தந்தையுந் தாயுங் கேட்டுத் தணிப்பருங் கலுழ்ச்சி கொண்டு
வந்துபற் பலதிறத்தால் பசிப்பவும் வசமா கானாச்
சிந்தைநொந் தினியென் னென்று சென்றனர் மகனிற் றீர்ந்தே. 143
அன்னவ ரடைந்த வாறு மகன்றது மறியா தண்ண
றன்னொடு பிணித்த நெஞ்சிற் சவரர்கோன் பகற்போ தெல்லாங்
கொன்னவில் விலங்கி னீட்டங் கொன்றிறைக் கமுத ருத்தித்
துன்னிருட் காலந் துஞ்சான் றொண்டுசெய் தொழுகா நிற்ப. 144
வழுவறு முனியும் வந்து வைகலுந் திருமு னூன்கண்
டழுதழு திரங்கி யேங்கி யகற்றுபு புனிதஞ் செய்து
மழவிடை யவற்பூ சித்து மனத்துயர்க் கடலி னாழ்த்தி
யொழுகிட மற்ற வன்பா லுறுதுய ரொழித்தல் வேண்டி. 145
கங்குலைந் தாவ தன்கண் கனவிடைத் திருக்கா ளத்திச்
சங்கரன் வந்து சொல்லுந் தவத்துறை பயின்ற மேலோ
யிங்குநீ நம்முன் கண்ட திறைச்சியென் றினையல் வாழி
யங்கது நாம ருந்து மரும்பெற லமுதங் கண்டாய். 146
அதுநமக் கிடுவோன் செய்தி யறைகுது மம்ம தெய்வ
நதிபல படிந்து நோற்று நவையிறா னங்கள் செய்தும்
விதிபுறங் கண்டு பெற்ற மெல்லெழின் மகன்மேற் றாய்க்குப்
புதியவன் பெனைத்த னைத்தப் புண்ணியற் கென்மே லன்பு. 147
மற்றவன் செருப்புக் காலான் மணங்கமழ் நமது சென்னி
யுற்றுபூ மாற்றுங் காலத் துடம்பொ மயிர்பொ டிப்பச்
சிற்றிள மகன்பூங் கையாற் றிருமுலை வருடப் பெற்ற
பெற்றதா யென்ன நெஞ்சம் பெரிதுரு குதுமா லன்ப. 148
ஐந்தடர் முனிவ நம்மே லவனுமிழ் கின்ற தியாற்றுட்
டந்தநீ ராயி னன்றே தாழ்சடை முனிவ ராட்டு
நந்துமந் திரநன் னீரி னனியினி தெனலா முண்ணின்
றுந்திமே லெழுந்து பொங்கி யொழுகிய பேரன் பாமால். 149
வள்ளுகி ருழுவை நோன்றாண் மாதவக் கிழவன் முன்னோ
ரொள்ளிய வாழ்த்து நாம மொராயிர முரைத்துச் சாத்துங்
கள்ளவிண் மலரி னன்னான் கழுத்துற வளைந்து சூட்டு
மௌ¢ளுறு மயிர்கள் சூழ்ந்த வீர்ம்மல ரெமக்கு நல்ல 150
இந்திரன் முதலோர் செம்பொ னெரிமணிக் கலத்தி லேந்து
மந்தர வரையி னாழி மதித்தவா ரமுத மெல்லா
முந்துதன் வாய்ப்பெய் தாய்ந்த முழுச்சுரவைச் சூட்டி றைச்சி
வெந்திற றந்த பின்னர் வேம்பொடு கடுவு மான. 151
ஏசுத லிலாவ றத்தோ யெமக்கவ னெம்மு னின்று
மாசில்பே ரன்பி னோடு வாய்திறந் துரைக்குஞ் சொற்போ
லாசக லறிவின் மிக்க வைம்புலப் பகைவர் பாடுங்
காசறு சாம வேத கானமு மினிய தன்றே. 152
அவன்மன நமக்குக் கோயி லவனுரை பலவு மோத்தா
மவன்முய றொழில்க ளெல்லா மறத்தொழி லைய மில்லை
பவனியல் காட்டு கின்றா மன்பநீ நாளை யேவந்
தவனறி யாத வண்ண மயலொளித் திருத்தி யென்றான். 153
இன்னணம் பலவுங் கூறி யினித்துய ரொழிதி யென்று
பொன்னிறம் பழுத்த கொன்றைப் புதுநறுங் கண்ணி வேய்ந்த
சென்னியந் தணன்ம றைந்தான் சிவகோச முனியெ ழுந்து
முன்னவன் கருணை யாற்சொன் மொழிநினைந் ததிச யித்தே. 154
ஞாயிறு குணாது குன்ற நண்ணுதன் முன்ன மேபோய்ப்
பாயலை முகரி நன்னீர்ப் படிந்துநித் தியநிரப்பி
யாயிரம் பெயரி னான்ற னருச்சனை முடித்து மற்றத்
துயநல் லிலிங்கத் தின்பின் றோன்றிடா தொளித்தி ருந்தான். 155
முனிவரு முன்னம் வேட்ட முன்னுபு சென்ற வென்றிக்
குனிசிலை மறவர்த் தாங்குங் கோமகன் வேட்ட மாடிப்
புனிதனுக் கமுதங் கொண்டு பொருக்கென மீண்டா னங்கட்
பனிதரு துன்பங் காட்டும் பற்பல நிமித்தங் கண்டான். 156
வழியிடை நிமித்த மென்ன மற்றியான் கண்ட வெல்லாம்
பழிபடு நிமித்த மென்னை பாவஞ்சோர் குருதி காட்டுங்
கழிசுவை யமுத முத்தங் கண்மணி யுயிரெ னக்கா
மழகனெம் பெருமா னென்னுற் றனன்கொலோ வறித றேற்றேன். 157
எனமனங் கலங்கி யொய்யென் றெறுழ்வலிக் காளை செல்லச்
சினவிடை வலனு யர்த்த செக்கரீர்ஞ் சடைநு தற்கட்
புனிதன்மற் றவனன் பெல்லாம் புண்ணிய முனிக்குக் காட்ட
நினைபுதன் வலக்கண் செம்புண் ணீருற நின்றான் கண்டான். 158
காண்டலும் வாய்நீர் சிந்தக் கையிலூன் சிதற வம்புங்
கோண்டரு சிலையும் வீழக் குஞ்சிப்பூ விறைய வாட்டு
நாண்டொட ரற்ற காலை நாடகப் பாவை போலத்
தூண்டரு தடந்தோட் காளை துண்ணென நிலத்து வீழ்ந்தான். 159
நெடும்பொழு துள்ளு யிர்ப்பு நின்றுயி ருலந்தா ரென்னக்
கிடந்துபின் கையா றெய்தக் கெடுநினை வடைந்தெழுந்தே
யொடுங்கலி றுயரா னெஞ்ச முண்ணப்பட் டுருமே றுண்ட
மடங்கலே றென்ன நம்பி வாய்விட்டான் கண்ணீர்வார. 160
முழுவலித் தடக்கை யாற்றன் முகமெலாங் குருதிபொங்கி
யொழுகிய வடீத்துக் கொண்டா னுறுகண்ணீர் வெள்ளம் போர்த்த
வெழில்கனி மார்பு வீங்க வெற்றினான் றலைபி ளக்கக்
கழிதுயர்க் கடலி னாழ்ந்தான் கல்லொடு மோதினானால். 161
ஓடுவன் மீள்வன் வீழ்வ னுருள்குவ னெழுந்து விம்ம
னீடுவ னந்தோ வென்ப னெட்டுயிர்ப் பெறிவ னெஞ்சம்
வாடுவன் பொங்கிப் பொங்கி வாய்விட்டு முகத்தைக் கையான்
மூடுவ னெழுவன் கைகண் மோதுவன் கற்க ளோடே. 162
எவ்வமி லெந்தை யார்க்கிங் கிதுவந்த தெனக்கொன் னாராம்
வெவ்வலி யழற்சீற் றத்து வேட்டுவ ரானோ வன்றி
யிவ்வரை விலங்கி னானோ யாதென வறித றேற்றே
னவ்வுறு தெவ்வைக் காணி லாவிகூட் டுண்கி லேனோ. 163
மலையிடை யெனக்கு வாய்த்த மரகத மணியே செம்பொ
னிலகொளிக் குன்றே யெந்தா யெம்பிரா னின்கண் புண்ணீர்
கலுழ்தரற் கென்னை கொல்லோ காரணந் திருவாய் சற்று
மலர்கிலை யென்கொ லென்றா னாவிசோர்ந் தருகு சென்றான். 164
கையினிற் றுடைத்தான் பல்காற் காலுத றவிரா தாக
வையனைத் தழுவிக் கொண்டா னலறினா னெடும்போ தெல்லாம்
பையென விடுத்துப் பின்பு பச்சிலை மருந்து தந்து
பெய்யினோய் தீரு மென்று பெயர்ந்தனன் மருந்து கொய்ய. 165
கானெலாம் புகுந்து சென்று கண்டன வெல்லாங் கொய்து
கூனலாஞ் சிலைக்கை வேடர்க் கோமகன் றுனைவிற் போந்து
வேனிலாற் காய்ந்த தேவின் விழியிடைப் பெய்தான் சோரி
தானிலா வண்ணங் கண்டான் றலையன்பனாவி சோர்ந்தான். 166
யானினி யிதற்கென் செய்வே னெனவெணணி நிற்பவூனுக்
கூனிடல் வேண்டு மென்னு முரைகண்டு தன்கண் வாங்கி
வானவன் றடங்க ணிட்டான் மாறுமென் றுளம்வ லித்துக்
கானவர் பெருமான் றன்கண் கணையினா லிடந்திட்டானால். 167
இடந்ததன் கண்ணை யண்ண லிறைகண்ணி லப்பச் சோரி
மடந்தையோர் பங்க னாங்கே மாற்றினா னதனைக் கண்டா
னடங்கரு மகிழ்ச்சி யென்னு மாழ்கட லதனுட் டாழ்ந்து
முடங்குளை மடங்க லன்னான் முழவுத்தோள் கொட்டி யார்த்தான். 168
ஓடினான் றிசைக ளெல்லா முடம்பெலாங் குலுங்கநக்கான்
பாடினான் வாயில் வந்த படியெலாங் கைகள் கொட்டி
யாடினான் றுள்ளித் துள்ளி யாரவா ரித்தர னின்று
நாடினான் செய்த செய்கை நன்றுநன் றெனவி யந்தான். 169
இன்னண முவகை வெள்ளத் திடையவ னுலாவும் வேலை
முன்னவன் பின்னு மன்னான் முதிர்ந்தபே ரன்பு காட்டச்
சென்னிறக் குருதி மற்றைத் திருவிழி யிலுஞ்சோர் வித்தா
னன்னது மைந்த னார்வ வார்கலி குடித்த தன்றே. 170
எரிநிர யத்து ணின்று மேறுபு துறக்கம் புக்கா
னொருவன்மற் றதுனுட் பின்னும் வீழ்ந்தென வுவகை மாறிக்
கரையிலாத் துன்ப வெள்ளக் கடலினு ளழுந்தி யேங்கி
வரைபுரை தோளான் பின்னு மருந்துடை மையிற்றெ ளிந்தான். 171
இன்னுமோர் கண்ணெ னக்குண் டாதலி னதற்கஞ் சேனென்
றன்னது களைந்த காலை யையர்கண் ணறிதற் காகத்
தன்னொரு செருப்புக் காலைத் தம்பிரான் கண்ணி லுன்றிப்
பின்னடு கணைகண் வைத்தான் பிரானது பொறுக்க லாற்றான். 172
மறைமொழி பிறந்த தம்வாய் மலர்திறந் தருட்பே ராழி
யிறைவன் கண் ணப்பநிற்க வெனமுக்கான் மொழிந்த வன்கை
கறையணற் கங்க ணத்த கையினாற் பிடித்துக் கொண்டா
னுறுநகைப் பொலம்பூ மாரி யும்பர்மண் புதையப்பெய்தார். 173
குன்றவர் பெருமான் கையிற் கூர்ங்கணை விட்டெ றிந்து
கன்றிள மடமா னேந்துங் கண்ணுத லடிப்பூங் கஞ்சந்
தன்றலை மிசைபு னைந்தான் சைவவை திகனி றும்பூ
தொன்றிய வுளத்த னாகி யொருதனி முதுல்வற் றாழ்ந்தான். 174
மைதிகழ் மணிமி டற்று வார்சடை யெம்பி ரானக்
கைதவ மிலாரை மிக்க கருணையங் கண்ணோ னோக்கி
மெய்தழ னடுவ ணின்று விரிவற மனமொடுக்கிச்
செய்தவர் தமக்குங் கிட்டாத் திருவுருக் கலந்து கொண்டான். 175
அற்றைநரண் முதலா வைய மண்ணல்கண் ணப்பவென்று
சொற்றதோ பெயராச் சொல்லுஞ் சுடர்மதிக் காந்தம் வேடர்
சிற்றிடை நலார்மு கத்தைத் திங்களென் றொழுக்குந் தெண்ணீ
ருற்றரு விகளாய்த் தாழு முயர்மலை காவ லற்கே. 176
கலித்துறை
என்னத் திங்கள் வேணிம றைத்தவி றைவான்றோய்
சென்னிக் குன்றம் வாழ்நர்கள் கோமான் செயல்கூற
மன்னுட் களிகொண் டைய னடித்தா மரைசூடிப்
பன்னற் கினிய தோர்கதை யின்னும் பகர்கென்றான். 177
கலிவிருத்தம்
தீதற வுரைத்தனஞ் சிலைவல் கண்ணப்பன்
காதைநக் கீரனார் கதைவி ளம்புதும்
யாதவ மனனமர்ந் தினிது கேளென
மாதவ வடிவருள் வள்ளல் கூறுவான். 178
- திருச்சிற்றம்பலம் -
- கண்ணப்பச் சருக்கம் முற்றிற்று -
|