பிரபுலிங்க லீலை
- - - - - -

			     காப்பு

		சுரகு லாதிபன் தூய்மலர் நந்தனம் 
		பெருக வார்கடற் பெய்த வயிற்றினோன் 
		கரக நீரைக் கவிழ்த்த மதகரி 
		சரணம் நாளும் தலைக்கணி யாக்குவாம். 



1. துதி கதி

சிவபெருமான் பூவாய் நெடுங்கோட் டுறுபசுந்தேன் கைகால் முடங்கு பொறியிலிதன் நாவர யொழுகிற் றெனவுலகம் அளந்த மாலும் நான்முகனுங் காவா யெனநின் றேத்தெடுப்பத் தானே* யுவந்தெங் கரதலத்தில் மேவா அமர்ந்த மாமணியைத் தொழுது வினைக்கு விடைகொடுப்பாம். 1 (* தானே வந்தெங்கர தலத்தின்; என்றும் பாடம் உளது. தணிப்பான் நீக்குதற்கு.) உமாதேவியார் ஆதி பகவன் தனதூடல் தணிப்பான் பணிய அவ்விறைவன் பாதம் இறைஞ்சு மதற்கு நெற்றிப் பகையும் அல்குற் பகையுமாம் சீத மதியும் அரவும்விழுஞ் செயற்கும் உவகை செயாமல்லை மாது பணியு மதற்குமன மகிழும் உமையை வணங்குவாம். 2 ஆனைமுகக் கடவுள் மாரன் எடுத்து வளைக்குமொரு கரும்பை ஒடித்து மலர்சிதறி நாரி யடுத்த அளிமாலை குலையத் துரந்து நயந்தோடி வீர மனத்து வினைப்பாகர் குறிப்பி னொழுகி விளையாடும் ஈர மதிஞ்செஞ் சடைக்களிநல் யானை யிணைத்தாள் ஏத்துவாம். 3 முருகக் கடவுன் பாக மொருபெண் குடியிருக்கும் பரமன் அணியிற் பரித்தமணி நாக நுழைவுற் றுடல்சுருண்டு கிடந்து நகுவெண் தலைப்புழையிற் போக மெல்லத் தலைநீட்டிப் பார்த்து வாங்கப் போகுமொரு தோகை மயில்வா கன்ப்பெருமாள் துணைத்தாட் கமலந் தொழுகிடுவாம். 4 அல்லமதேவர் கலையை மதிக்கும் புலவர்தமைச் சித்தர் குழத்தைக் கடவுளரை நிலையை மதிக்கு முனிவரரைத் திசைமா முகனை நிரைவளையாச் சிலையை மிதிக்கு நெடியோனை விழுங்கி உமிழாத் திறல்மாயை கலையை மிதிக்கும் அல்லமன் செங்கமல மலர்த்தாள் தலைக்கணிவாம். 5 வசவேசர் வெள்ள வேணிப் பெருந்தகைக்கு யாஞ்செய் அடிமை மெய்யாகக் கள்ள வேடம் புனைந்திருந்த கள்வ ரெல்லாங் களங்கமறும் உள்ள மோடு மெய்யடியா ராக உள்ளத் துள்ளுமருள் வள்ள லாகும் வசவேசன் மலர்த்தாள் தலையால் வணங்குவாம். 6 சென்னவசவர் பங்க வளற்று வழிமாற்றி ஒருநல் வழியைப் பகர்வார்போல் தங்கள் மதியிற் பலபிதற்றுஞ் சமய ருரைகள் தமைநீக்கி அங்க நிலையிற் றிலிங்கநிலை யிற்றென் றருளும் வீரசைவ சிங்க நிலைத்த அருட்சென்ன வசவன் திருத்தாள் சிரத்தணிவாம். 7 மடிவாலமாச்சையர் வார்க்குங் குமமென் முலைபாக னடியார் அறுவை மாசடித்துத் தீர்க்குஞ் செயல்போல் விச்சலமன் னவன்றன் சேனை செய்பிழையைத் தாக்குங் கரவாள் கொடுசின்ன பின்ன மாகத் தடிந்திட்டுப் போக்குங் கருணை மடிவால மாச்சன் பொன்னங் கழல்போற்றி. 8 சமயகுரவர் நால்வர் பெண்ணிற் கரசு தானாக என்பு பெருநீற் றறைபிரச வண்ணக் கமல மலர்ப் பொய்கை யாகச் செங்கல் மாழையாய் நண்ணச் சிறிய நரிகள் முடங் குளைய பரியாய் நகர்புகுதப் பண்ணற் குரிய அமுதுறுழ்முத் தமிழ்நால் வரையும் பணிகுவாம். 9 அடியார்கள் பரவை கேள்வன் திருத்தொண்டத் தொகையுள் அடியார் பத்தியெலாம் உருவ மாகு நஞ்சோம நாதன் துதியு ளுறுசரணர் அரவ வணியான் அடியார்கள் மற்றை யவர்கள் அனைவருந்தாம் விரவி நாளும் இருப்பவிடங் கொடுக்கு முள்ளம் விரிந்தன்றே. 10 சிறப்புப் பாயிரம் *தண்ணிலவு புனைசடிலத் திறைபுகழல் லமதேவன் சரிதத் தீம்பால் புண்ணியரஞ் செவிவாயில் தமிழ்ச்சங்கத் தான் முகந்து புகட்டி னானால் எண்ணரிய புகழ்மலயத் திருந்தவனோர் வடிவெடுத்தான் என்று கூறப் பண்ணியமுத் தமிழ்க்கவிதைச் சிவப்பிரகா சப்பெரும்பேர் படைத்து ளானே. 11 ( * இச் செய்யுள் சிவப்பிரகாச அடிகளின் உடன் பிறந்தார் ஒருவரால் செய்யப்பெற்றது. ) அவையடக்கம் அடலுறும் அல்லமன் அரிய சீரொடு படுதலி னயந்துபா ராட்டும் பன்முறை மடனிகும் உலகமென் மொழியை வந்துவர்க் கடலிலு மூழ்குவர் காலம் ஒன்றினே. 12 *கதித்தொகை நாற்கதி தருமிடர் கடந்து நச்சுநர் பார்க்கதி முதலிய பத்தைந் தாங்கதி மேற்கதி பெறவருள் விளங்கும் அல்லமன் சீர்க்கதி யிருபதோ டைந்துஞ் செப்புவாம். 13 (* கதி - படலம்) இந்நூலின் பிறப்பு கன்றிய வைரிகள் காதுங் காதையும் வன்றுயர் மதனநோய் வளர்க்கு மாற்றமும் புன்றொழி லினர்வறும் பொழுது போக்கலும் அன்றருள் அல்லமன் அமல லீலையே. 14 இந்நூலின் பயன் புறங்கறை ஒழுகுசெம் புண்ணில் ஈயென வறுங்கதை புல்லியர் கொள்வர் மாமலர் உறுங்களி வண்டினல் லமனொண் காதையைப் பிறந்துள பயன்பெறு பெரியர் கொள்வரே. 15 மயலளற் றூன்றுகோல் மல்கும் அன்பெனும் இயலெழுத் தெழுதுகோ லங்க லிங்கமாம் வியனிலத் தளவுகோல் மதிவி ளக்கினை அயர்வறத் தூண்டுகோல் அமல லீலையே. 16 நன்றிகொள் அடிகணான் குறந டந்துபோ யென்றனி நாவினின் றெழுமிச் செய்யுளான் வென்றிகொள் அல்லமன் சீர்த்தி மென்பயன் கன்றலில் அன்பராங் கன்றை ஊட்டுமால். 17 சிவத் தோற்றம் பரசிவம் பிரம மென்னப் பட்டொரு திரிவு மின்றி உரைமனம் இறந்து நின்ற ஒருசிவ லிங்கந் தன்னின் வருமுயர் சதாசி வன்றான் மற்றவன் தனைப்பொ ருந்தும் அருமைகொள் ஞான சத்தி யவர்களாற் சிவனு திப்பன். 18 உருத்திரன், திருமால் ஆகியவர்களின் தோற்றம் சாற்றுமச் சிவனுக் கிச்சா சத்தியவ் விருவ ரானும் தோற்றுவன் உருத்தி ரன்றான் சொல்லிய அவற்குச் சத்தி மாற்றருங் கிரியை யென்பர் மற்றிவர் இருவர் பாலும் போற்றுறும அரியு திப்பன் பொறியவன் சத்தி யாமால். 19 நான்முகன் தோற்றமும் உலகத் தோற்றமும் அத்திரு மாலு மாவும் அளிப்பவந் துதிப்பன் வண்டு மொய்த்திசை முரலுஞ் செங்கேழ் முளரிவா னவன வற்குச் சத்திவெண் கமலை அன்னோர் தரவரும் உலகின் தோற்றம் நித்தனங் குருகு கேச னினைவுமாத் திரையி னாமால். 20 அல்லமதேவன் முத்தேவர்களையும் அதிகாரத்தில் நிறுத்தியது ஆக்குறுஞ் செயல தொன்றே அயன்றனக் காக்க லோடு காக்குறுஞ் செயிலி ரண்டுங் கண்ணனுக் காக்கல் காத்தல் போக்குத லென்றிம் மூன்றும் புராந்தகற் களித்த வர்க்கு நீக்கரும் இறைமை நல்கி நிறுவினன் குருகு கேசன். 21
முதலாவது - துதிகதி முடிந்தது
கதி 1 - க்குச் செய்யுள் 21.

2. கைலாச கதி

[இக்கதிக்கண் கைலைமலையின் பலவகைச் சிறப்புக்களும், சிவபெருமான் அரசாட்சி மண்டபப் பெருமையும், திருவோலக்கச் சிறப்பும், இறைவனுடைய பெருமையும், அக்கடவுளிடத்திலே உமையம்மை யெழுந்தருளியுள்ள மேன்மையும், அவ்வம்மையின் சிறப்பும், அவை கூடும் நிகழ்ச்சியும், இறைவனுக்கும் தேவிக்கும் உரையாடல் நிகழந்து அது சொற்போராய் முடிவு பெறுதலும், சிவபெருமான் அல்லம தேவருடைய சிறப்பினைக் கூறி அவரைக் காண்டல் அரி தென்றலும், இறைவியானவள் அல்லமதேவரைக் கண்டுபிடித்தல் தனக்கு எளிதேயாமென்று கூறி மாயையை நிலவுலகிற்கு அனுப்புதலும், அம்மாயை சூள்மொழி புகன்று நிலவுலகை யெய்துதலுமாகிய செய்திகள் கூறப்பபெறுகின்றன.]


	இச்செய்யுள் கதியின் செய்தியைத் தொகுத்துரைக்கின்றது

	வெள்ளிமால் வரையின் உச்சி வீற்றிருந் தருளு முக்கண் 
	வள்ளலா ரொடுசூ ளுற்று மதரரி நெடுங்கட் செவ்வாய்ப் 
	பிள்ளைவாள் மதிநு தற்றம் பிராட்டியல் லமனைக் காண்பான் 
	கள்ளமா யையைஞா லத்து விடுத்தவக் கதியு ரைப்பாம். 					1


	நான்முகன் அசுரர் முதலியோர்க்குப் படைத்த இடங்கள்

	இயங்குவ நிற்ப வான யாவையுங் கலைமா தோடு 
	முயங்குபு முன்ன மீன்ற முளரிவா னவன்வ குத்து 
	வியன்புவி யண்டந் தன்னுள் விதித்தனன் தகுமி டங்கள் 
	வயங்கெழும் அசுரர் நாகர் வானவர் முதலி யோர்க்கும்.					2


		    கைலைமலைச் சிறப்பு

	நான்முக அண்டந் தன்னுள் நனிசிறந் தொப்பி கந்த(து) 
	ஊன்முக விழிக ளாற்கண் டும்பர்கள் உவகை பூப்பத் 
	தான்மிகு மருளான் மேனி சாத்திய பேரா னந்தக் 
	கூன்முக மதிய ணிந்த கொற்றவன் கைலைக் குன்றம்.						3


	கொள்ளைவண் டிழிந்து தாது குடைந்துமூக் குழவு டைந்து 
	கள்ளழிந் தொழுகு செம்பொற் கடுக்கைவேய்ந்த திலகு வேணி 
	வள்ளல்வெண் புகழ்தி ரண்ட வளங்கெழு கைலைக் குன்றில் 
	வெள்ளிவந் தத்தி யாச மாகவே விளைந்த தம்மா. 						4


	கண்பிசைந் தொருசே யின்னுங் கலுழினுந் தனைக்கொ டுப்பன் 
	மண்பிசைந் துண்ட மாயன் மறித்திட வலிய னல்லன் 
	நண்பிசைந் திறைவ னுக்கே நாமிட னாவ மென்று 
	பண்பிசைந் தலைதி ரண்ட பரிசினின் றிடுமக் குன்றம்.						5


	ஒழுகுறும் அருவி யீட்டம் ஒலியினா னகுவெண் டிங்கள் 
	பழகுறு முடற்க ளங்காற் பாகசா தனன்கூர்ங் கோட்டு 
	மழகளி றுமிழ்ம தத்தான் மலர்மிசைக் கடவு ளூர்தி 
	அழகுறு நடையா லன்றி அறிதரப் படாவக் குன்றில்.						6


	விளங்கொளி துளும்பும் அந்த வெள்ளியங் கிரியி னுச்சி 
	துளங்கொளி விரிக்குஞ் செம்பொற் சுடர்மணிச் செயகுன் றொன்று 
	களங்கறு பராரைத் துய்ய கருப்புரக் குவாலின் மீது 
	வளங்கெழு சுடரொன் துற்று வயங்குதல் போலு மன்றே. 					7


		இறைவன் அரசிருக்கை மண்டபச் சிறப்பு

	இனையதிக் கைலை வெற்பில் இறையர சிருக்கை ஒன்றுண் 
	டனையதை யணிய மாட்டா தப்புறம் போயி னானென் 
	றெனையிகழ் பவர்க ளில்லை யிலங்குமம் மண்ட பத்தின் 
	தனிவள மனந்த னாலுஞ் சாற்றிடற் கரிது மாதோ. 						8


		இறைவன் தனது இருக்கையில் இருத்தல்

		அன்ன மண்டபத் தங்கண னோர்பகல் 
		மின்னு செம்மணி வேதிகை ஒன்றன்மேல் 
		மன்னு செங்கதிர் மண்டலத் துற்றனன் 
		என்ன வந்தங் கிருந்தன னென்பவே. 						9


		   திங்களுந் தேவியுந் திகழ்தல்

		குழவி யாயுடற் கூனிந ரைத்ததோர் 
		விழவு வாண்மதி வேணியின் மேவுறக் 
		கிழவி யாகிக் கிரிக்கோன் மகப்பெறும் 
		அழகு நீர்மக் ளாயிடை வாழ்வுற. 							10


		      முக்கண் விணங்குதல்

		அங்கி யென்றற் கடுப்பமே னோக்கிய 
		செங்க ணொன்று திருநுதல் சேர்தரத் 
		திங்க ளென்றுந் தினகர னென்றும்வாழ 
		அங்கண் மல்கும் அருள்மடை போன்றுற. 						11

	
		காதில் தோடுகளும் கண்டக் கருமையும்

		எண்ணு மன்பர் இதயமென் புட்படு 
		கண்ணி போன்றுவார் காதிடைத் தோடுற 
		நண்ணு மாதுமை நன்னுதற் பொட்டென 
		வண்ண நீல மணிமிடற் றொன்றுற. 							12


		    கையின் கண்ணுள்ள மான் 
		    திரும்பியதற்குக் காரணம்

		நகந்த ருங்கொடி கண்களை நாணியே 
		முகந்தி ரும்பு முறையில் திரும்புமான் 
		மகிழ்ந்தி டங்கதிர் வீர மழுவலந் 
		தகுந்த குந்தகு மென்று தயங்குற. 							13


		   பாம்புக்காப்பு, பன்றிக்கொம்பு, 
		     புலித்தோல் அணிந்தமை

		சொற்றெ ரிந்த சுடர்மணிக் கங்கணம் 
		உற்றி லங்க ஒரகருங் கேழலின் 
		பற்றி ருந்த மதாணியிற் பட்டெனப் 
		புற்ற ருங்கலை உற்றரை பொற்புற.							14


		     தாள் வீரக்கழலின் தனிச்சிறப்பு

		புரத்தை வென்ற நகைக்குமென் போதினோன் 
		சித்தை வென்றசெங் கைக்குஞ் சிலைமதன் 
		எரித்த கண்ணிற்கும் இன்றெனக் கூற்றுடூஉத் 
		தரித்த வீரக் கழலொடு தாளுற.							15


		   இறைவனிடத்தில் இறைவி 
		      எழுந்தருளியிருத்தல்

		இருந்த ஆதி யிடத்தில் இருந்தனன் 
		பரந்த வானும் படியும் உயிர்களும் 
		ஒருங்கு தோன்ற உதவிக் கருவுறீஇ 
		வருந்தி லாத மணிவயிற்  றன்னையே. 						16


		  கூந்தலில் திருமாலை விளங்குதல்

		இறைவன் அங்கண் எனுமுச் சுடர்களும் 
		உறவு கொண்ட இருளெனும் ஓதிமேல் 
		அறவ னென்றவவ் வண்ணல் புனைந்தருள் 
		நறவு மிழ்ந்த நறுமலர் தாழ்ந்திட.							17


		நெற்றியில் நெற்றிச்சுட்டி விளங்குதல்

		ஏற்று வார்கொடி யெந்தை சடைப்பிறை 
		யாற்றுள் வீழ்வுற் றிறப்பதற் கெண்ணுறத் 
		தோற்ற மேவு சுடர்த்திரு நெற்றியின் 
		ஞாற்று மோர்மணிச் சுட்டி நலந்தர. 							18


		   திருநோக்கும் திருநகையும்

		ஈசனார்முக மென்னு முளரியில் 
		ஆசை கூரும் அளிவிழிக் காரருள் 
		வாச மாமலர் வாய்க்கிள வெண்ணகை 
		தேசு லாமணி யாகச் சிறந்துற. 							19


			   காதோலை

		மாணப் பூண்புனை மற்றை உறுப்பெனப் 
		பூணுட் பட்டிடா தோலையின் பூணென 
		யாணர்ச் செம்பொன் இலங்கொளி யோலைமேற் 
		காணக் காதெனும் வள்ளை கவின்செய. 						20


		 பூணரசாக விளங்கும் பொன்தாலி

		ஓங்கு வாவுடை உம்பன் அயனரி 
		தாங்கும் ஆவி தணந்தொழி நாளினும் 
		வாங்கு றாவெழில் மங்கல நாணொளி 
		தேங்கு பூணர சென்னச் சிறந்திட.							21


			     முத்துமாலை

		அரவு லாஞ்சடை அண்ணலைப் பிள்ளைதான் 
		பருவ மூன்றினிற் பாடஇன் பால்தரும் 
		பொருவில் கொங்கைப் புகழெனப் பொங்கொளி 
		மருவும் ஆர மணிவடந் தாழ்ந்துற. 							22


		  கையில் கருங்குவளைமலரும் 
			  பைங்கிளியும்

		பறந்தி டாமணி வண்டு படுமலர் 
		சிறந்த நீல மலரொடு சீர்பெற 
		மறந்தி டாது மறைமுடி யின்பொருள் 
		அறைந்து பைங்கிளி முன்கை அமர்ந்திட.						23


		     பட்டாடையும் மேகலையும்

		தோலு டைப்பரன் தொல்மனை யாட்டிதன் 
		பால டுத்ததெவ் வாறெனும் பட்டரை 
		மேலு டுத்து விளங்கவொண் மேகலை 
		நூலி டைக்குறு நோய்புரி யாதுற. 							24


			அடிகளிற் சிலம்பு

		புத்த னிச்சம் படினும் பொறாமையை 
		எய்த்து மற்றை யிருமணத் தம்மியில் 
		அத்தன் வைத்த அடிக்கம லங்களின் 
		முதத ரிச்செஞ் சிலம்பு முழங்குற. 							25


		  இறைவியின் இடம் அரம்பைமாதர் பலர் 
				 வருதல்

		இந்த ஆரருள் எம்பெரு மாட்டிபால் 
		குரும்பை நாணுமென் கொங்கைப் பொறையினால் 
		வருந்து நூற்பக வன்ன மருங்குலார் 
		அரம்பை மாதர் அளப்பிலர் எய்தினார். 						26


	  அருந்ததி முதலிய மாதர்கள் இறைவியைத் 
			  தொழுதல்

	முல்லை யந்தொடை அருந்ததி முதலெழு முனிவர் 
	இல்ல றம்புரி துணைவிய ராமெழு வரும்போய் 
	வல்ல ரும்பெனக் குவிமுலைப் பனிமலை மகளைச் 
	சொல்ல ருந்துதி செய்துவாழ்த் தெடுத்தனர் தொழுது.						27


		திருமகளிர் கவரி வீசுதல்

	அன்னம் ஒன்றறி யாமுடிக் கங்கையை யறிந்து 
	துன்ன வந்தல மருமெகி னங்களின் தொகுதி 
	என்ன அம்புயத் தொருசத கோடியிந் திரைகள் 
	முன்ன டைந்துவெண் கவரிகள் இரட்டினர் முறையால்.						28


	     இந்திராணிகள் சிற்றாலவட்டம் வீசுதல்

	அரவு கௌவிய கதிரெனப் பட்டசாந் தாற்றி 
	பரவை அல்குல்வெண் முத்தவாள் நகைக்கொலை பயில்வில் 
	புருவ மென்மலர்க் குழற்சசி கோடிகள் புகன்று 
	மருவி அம்பிகை மருங்குநின் றசைத்தனர் மன்னோ. 						29


	     கலைமடந்தையர் வீணை மீட்டுதல்

	எடுத்து வீணைகள் உவர்நரம் பிதுமிட றிதுவென் 
	றடுத்த கேள்வராம் பிரமரும் அறிவரி தாகப் 
	படத்த பாம்பணி பரன்புடை மாதுசீர் பாட்டில் 
	தொடுத்து வாலிய கலைமடந் தையர்பலர் துதித்தார்.						30


	     உருத்திரகணிகையர் கூத்தியற்றுதல்

	செப்ப மைந்ததண் ணுமையிசை தாளமென் சிறுதாள் 
	துப்ப மைந்தவொண் சதிதழிஇச் சுவையபல் காயம் 
	உப்ப மைந்தஇன் கறியென நடித்தனர் உழையோ 
	டொப்ப மைந்தகண் உருத்திர கணிகையர் உவந்து. 						31


		தமோகுணமாதின் தருக்கு

	எந்தை பாலுமை முக்குணங் களுமுரு வெடுத்து 
	வந்த மாதர்கள் அருகுநின் றனர்பணி மகிழூஉ 
	அந்த மாதருள் தமோகுண மாதுமை அருளால் 
	சந்த மாயையென் பெயர்கொடு தருக்கிநின் றனளே. 						32


	      உருத்திரர்களின் கூட்டம் வருதல்

	தெள்ளு வார்திரைக் கங்கையுங் கங்கையுஞ் சிறிய 
	பிள்ளை யாகிய மதியமும் மதியமும் பெரிது 
	துள்ளும் ஓரிள நௌவியும் நௌவியுந் தொடர்பு 
	கொள்ளு மாறவன் நெருங்கின உருத்திர குழாங்கள். 						33


		நாராயணர் கூட்டம் வருதல்

	சங்க மொன்றுடன் ஒன்றுதாக் குறவொளி தழைக்குந் 
	துங்க நேமியும் அன்னவா யுறவலை சுருட்டும் 
	பொங்கு வேலைவந் தெனவரிக் கணங்களற் புதத்த 
	எங்கள் நாயகன் பேரவை யிடத்துவந் திறுத்த. 						34


		   பல நான்முகர் வருதல்

	முகங்கள் நான்கிலும் நான்மறை விதிமுறை முழங்க 
	உகந்து கையிரு நான்குநான் குச்சியிற் குவியச் 
	சகந்த ருஞசெயற் பிரமர்கள் அளப்பிலர் தையல் 
	பகுந்த மேனியன் அவையிடைப் புகுந்தனர் பரவி. 						35


		     பல இந்திரர் வருதல்

	அயனு மாயனும் எனினுயர்ந் தவரென்ப தன்றிக் 
	கயிலை நாயகன் அமர்திரு வோலக்கங் காண்பான் 
	நயனம் ஆயிரம் இலாமையி னதிகன்நா னென்று 
	வயிர வான்படை யிந்திரர் எண்ணிலர் வந்தார். 						36


	     நாகர் சித்தர் முதலியோர் வருதல்

	உரகர் சித்தர்கள் வித்தியா தரர்சுர ருயர்கிம் 
	புருடர் மெய்க்கதிர் முதிலிய கோள்திசை புரப்போர் 
	நிருதர் மற்றுளார் விழிபிதுங் கிடவுடல் நெருங்க 
	வரதன் அத்திரு வோலக்கங் காணிய வந்தார். 						37


	     வசிட்டர் முதலிய முனிவர்கள் வருதல்

	அழிவும் ஆக்கமும் உரையினாற் செயும்வலி அடைந்தார் 
	மொழியும் யாக்கையு மனமுநல் அறங்களின் முயன்று 
	கழியு மாறுமுக் காலமு முளர்தளை கழன்றார் 
	பழயி லாவதிட் டாதிமா முனிவரர் பரந்தார். 							38


		    பூதக் கூட்டம் வருதல்

	குழவி பால்குடிப் பதுகடல் குடிப்பது குழவி 
	பழகு மாறுணல் மண்ணெடுத் துண்பது படைப்பு 
	முழுது மோர்தளர் நடைமகச் செயலெனு முரண்கொள் 
	வழுவி லாவருட் கணங்களெண் ணிகந்தன வந்த. 						39


		     வீரபத்திரர் வருதல்

	செருக்கொ டுஞ்சிவ நிந்தைசெய் வாய்க்கிலை தீர்வு 
	விரிக்கி னென்றுமுன் சிறுவிதி தலையற வெட்டி 
	எரிக்கு நல்கிநிந் தனைசெயா மறிமுகம் இயைத்துத் 
	தருக்கி நின்றவவ் வீரன்வந் தொருபுடை சார்ந்தான். 						40


		     வடுகன் வருதல்

	காதி யாயிர மால்களைப் பிழிந்துமாங் கனிபோற் 
	கோது வீசினுங் கடல்கவிழ்த் தனையசெங் குருதி 
	பாதி யாயினு நிரம்புறாக் கபாலபா ணியனாய் 
	மாது பாதியன் அவையிடைப் புகுந்தனன் வடுகன். 						41


		     வீரமாகாளி வருதல்

	வீர மாதருக் கில்லையென் றுரைப்பதென் விளங்க 
	வீர மாதென அறிகிலி ரோவென விளம்பி 
	வீர யோகினி வெள்ளமோ டமர்பொர விரும்பும் 
	வீர காளியும் புகுந்தனன் அவையிடை விரைந்து. 						42


		பிருங்கி முனிவர் மகிழல்

	ஊன்று ஞானமோ டுயர்வயி ராகநல் லொழுக்கம் 
	மூன்று காலெனக் கொண்டரன் முகத்திள முறுவல் 
	தோன்று மாறுநின் றாடினன் சுடரவன் இருளைப் 
	போற்று மாயையைத் தொலைத்திடு பிருங்கியென் புனிதன். 					43


	     நந்திதேவர் கூட்டத்தை ஒழுங்குபடுத்தல்

	படிகொள் மாமுடிக் கங்கணத் திறைபதம் படுமொண் 
	முடிகள் யாவையும் படுகழல் நந்தியம் முதல்வன் 
	அடிகள் ஏந்துகை யுறவடித் தொதுக்கியவ் வவையைக் 
	கடிகொள் மாலையம் பிரம்பொடு திந்தனன் களித்து. 						44


	    வாணாசுரனும் பானுகம்பனும் பேரொலி 
			யுண்டாக்குதல்

	பெய்யு மாமழை முகிலெனப் பெரியவாய் முழவம் 
	துய்ய மாமதி அனையவெண் சுரிமுகச் சங்கம் 
	ஐய வாணனும் பானுகம் பப்பெய ரவனும் 
	கையும் வாயுமொத் ததிர்த்தனர் செவிகரங் கவிழ்ப்ப. 						45


	      அவையிற் குழுமிய பலர் செயல்கள்

	துதிப்ப ரோர்சிலர் பாடுவ ரோர்சிலர் துள்ளிக் 
	குதிப்ப ரோர்சிலர் கைகளால் தோளிணை கொட்டி 
	அதிர்ப்ப ரோர்சிலர் நெக்குநெக் குருகிநெஞ் சகமெய் 
	விதிர்ப்ப ரோர்சிலர் ஆனியர் அவையிடை மிடைந்தோர். 					46


		     பலவகைப்பட்ட ஒளிகள்

	படைக்க லங்களின் ஒளியிமை யவரொளி பரித்த 
	தொடைக்க லங்களின் ஒளியரம பையர்பணைத் தோளின் 
	இடைக்க லங்களின் ஒளியெலாம் இருளிடை மிடற்றின் 
	அடைக்க கலம்புக நிறைந்தன பரந்தபே ரவையில். 						47


		   இறைவி இறைவனிடம் வினாவல்

		இன்னணம் அவையிடை யிருந்த எம்பிரான் 
		தன்னொடு வினவுமோர் தகைமை உன்னுபு 
		கன்னலும் அமுதமுங் கைப்ப எம்முடை 
		அன்னைதன் வாய்திறந் தறைதல் மேயினான். 					48


		இங்குக் கூடியோர் வீடு பேறு எய்துவரா? 
			எய்தாரா? என வினவல்
		
		தலைவநின் அவையிடைச் சார்ந்த இப்பெரு 
		நலனுடை யவரெலாம் நணுகி வெம்பவத் 
		தலைகில ராகியின் படைவ ரோவலால் 
		நிலையில ரோவது நிகழ்த்துவா யென்றாள். 						49


			இறைவன் பதிலுரைத்தல்

		விளங்கிழை நன்றுநின் வினாவென் றெந்தைமண் 
		அளந்தவன் அயன்முத லாயி னோருமின் 
		புளங்கொளு நாமரூ பத்தொ டொன்றுறத் 
		தளைந்துள கிரியையாற் சார்கிலா ரென்றான். 						50


	   வினையை வெல்வதற்கு இறைவி சூழ்ச்சி கேட்டல்

	அனையதேல் நாம ரூபக் கிரியைகள் அனைத்தும் வெல்ல 
	நினைவுறு சூழ்ச்சி யொன்று நீயெனக் குரைத்தி யென்னாப் 
	பனிமலை தவஞ்செய் தீன்ற பவளவாய் மடந்தை கூற 
	நனையவிழ் கொன்றை வேணி நம்பன்மற் றிதனைச் சொல்வான். 				51


	   வீடுபே றடையும் வழியை இறைவன் கூறல்

	போகபூ மியினிற் போக தனுவினாற் பொருந்த லாகா 
	தேகமாம் இன்ப சித்தி யியம்புறிற் கரும பூமி 
	ஆகமா னதுகொண் டன்றி ஆதலால் ஞாலத் தெய்தி 
	யோகமா நெறியி னின்றோர் உண்மைசா தித்துக் கொள்வர். 					52


		நல்லாசிரியன் யார்? என வினவல்

	என்றிது கொழுநன் கூற இளங்கொடி அனைய தாயின் 
	ஒன்றொரு மக்கள் ஞாலத் துவமையின் ஞான சித்தி 
	நன்றுற உணர்த்த வல்ல குரவன்யார் நவிறி யென்னக் 
	குன்றணி மதிய மொப்பக் குனித்தவன் கூற லுற்றான். 						53


		   இறைவன் யாமே அல்லமனெனல்

	தொல்லையில் உயர்சுஞ் ஞானி தூய்நிராங் கார னென்போர் 
	எல்லையில் தவங்கள் செய்ய எமதுமெய் வடிவத் தானே 
	அல்லம நாம மைந்தன் ஆயினம் அனையான் தன்னை 
	வில்லுறழ் நதலாய் காண்டல் மிகவுனக் கரிய தென்றான். 					54


		      இறைவி சினந்துரைத்தல்

	என்றலும் இமைய வல்லி யெனக்கரி தென்ப தென்கொல் 
	உன்றனி அல்ல மன்றன் உண்மையை அறிய வேண்டின் 
	நின்றவர் தமக்கெ லாமும் எளிதெனா நெகிழ்ந்து ரைப்ப 
	அன்றினர் புரமெ ரித்த அணிநகை யாளன் சொல்வான். 					55


	    இறைவன் அல்லமதேவரின் பெருமை கூறல்

	முனிவுறேல் வறிய உன்றன் மொழியள வல்லன் மாதே 
	வினைதபும் அன்ப ரன்பால் வேண்டிய வடிவ னாகி 
	அனையவர் விழியில் தோன்றி அருளுவன் அலம தேவன் 
	தனதியல் பியாவ ரானுஞ் சாற்றிடற் கரிய தென்றான். 						56


	  இறைவி, மாயையால் அல்லமனைக் காண்பேன் எனல்

	மெய்ம்மையிம் மாற்றம் ஆகும் வேறுளார்க் கியான்செய் மாயை 
	பொய்ம்மலி செயலில் தப்பிப் போமெனிற் காண்ப லென்னா 
	அம்மலை மகள்த ருக்கிஅறைதலு நின்றன் ஆற்றல் 
	மைம்மலி குழலாய் காண்கும் என்றிது வள்ளல் கூறும். 					57

		இறைவி தன் சூள் பொய்யாதெனல்

	இன்னணஞ் சூளி யம்பி இனிவறி திருத்தி யாயின் 
	பொன்னவிர் சுணங்கு பூத்த புணர்முலை மடவாய் தோல்வி 
	நின்னிடை வருமென் றண்ணல் நிகழ்த்தலும் இமைய வல்லி 
	என்னுரை தவறா தென்னா நெடுமொழ யிசைத்துப் பின்னர். 					58


	    இறைவி மாயையை நிலவுலகிற் கனுப்புதல்

	ஆயிடை அருகு நின்ற தமோகுண வடிவ மாகும் 
	மாயையை விளித்து நீபோய் மண்ணிடை அல்ல மப்பேர் 
	நாயகன் தனைய றிந்து நணுகுதி யென்று கூறி 
	ஏயினள் அவள்வ ணங்கி இனையதொன் றியம்ப லுற்றாள். 					59


		  மாயை சூள்மொழி புகலுதல்

	அல்லமன் இயல்ப றிந்தங் கணைகுவன் நழுவு மாயின் 
	வல்லிதின் வலிந்து பற்றி யீர்த்திவண் வருவ லென்று 
	சொல்லினள் ஒருசூள் வேலை சுவறவுண் டிடுவ லென்று 
	புல்லிய எறும்பொன் றாற்றல் ல்வது போல அன்றே. 						60


		மாயை நிலவுலகடைய எண்ணுதல்

	தன்னள வறியாள் மாழ்கித் தண்மதி தவழும் வேணி 
	முன்னவன் அவையுள் நின்று மொழிந்தவச் சூள்மு டிப்பான் 
	பன்னக முடிப ரித்த பார்மிசைச் செலவை நெஞ்சத் 
	துன்னினன் எய்தி னாளவ் வொளியிழை மாயை மாதோ. 					61


இரண்டாவது கைலாச கதி முடிந்தது

கதி 2 - க்குச் செய்யுள் - 82.

3. மாயையின் உற்பத்தி கதி

[இக்கதிக்கண் விளவல நாட்டின் பெருமையும், அந்நாட்டின், தலைநகராகிய வனவசை மாநகரின் சிறப்பும், அந்நாட்டினை யாளும் மமகாரன் என்னும் அரசனின் சீர்த்தியும், அவன் மனைவி மோகினியின் நலமும், அவ்விருவரும் மகவுக்காக நோன்புகளியற்றுதலும், மோகினி வயிற்றில் மாயை கருவாதலும், மாயையின் பிறப்பும், அவள் பிறப்பால் மகிழ்ந்த மமகாரன் விழாக் கொண்டாடுதலும், காமன் செய்கையும், தவம்புரிவோர்க்கு நேரிடும் இடையூறும், அவர்கள் அவ்விடையூற்றின் காரணத்தை யாராய்தலும், துருவாச முனிவர் ஆங்குத் தோன்றி ஐயத்தைப் போக்குதலும், மமகாரன் தன் மகளுக்குப் பெயரிட்டுச் சிறப்புக் கொண்டாடுதலும், மோகினி தன் மகளை வளர்க்கும் அருமைப்பாடும், பேதை பெதும்மை முதலிய பருவங்களைக் கடந்து, மாயை மங்கைப் பருவமடைதலும், அப்பருவத்தில் அவள் பொழுது போக்குதலும், மமகாரன் தன் மகளுக்கு மணவாளனை யாராய்தலும், அகங்காரனாகிய குலு வருதலும், அவன் மாயையைப் பார்த்துச் சிவபிரானே அவளுடைய தலைவனாகத் தக்கவன் என்று கூறுதலும், மாயைக்கு இறைவனைப் பூசனைபுரியும் முறையைப் போதித்தலும் ஆகிய செய்திகள் விரிவாகக் கூறப்பெறுகின்றன.]


		பூத லத்தைப் பொருந்துபு மாயையென்
		றோத லுற்ற ஒருபிடி நுண்ணிடை 
		மாத வத்தர் மனங்கள் கலங்குறச் 
		சாத முற்று வளர்ந்தமை சாற்றுவாம். 						1


		     விளவல நாட்டின் பெருமை

		களங்க வெண்மதி நெஞ்சங் கவற்றுமோர் 
		துளங்கு சங்குடைத் தோன்றல் மணத்தணி 
		வளங்கொள் மண்மகள் மார்பின்ம தாணிபோல் 
		விளங்கு மென்ப விளவல தேயமே.							2


		அந்நாட்டின் குளம், வயல், பொழில், 
			  வீடு முதலியன

		வாவி யாவு மதன்பெருந் தூணிசெய் 
		யாவு மார னெடுக்குஞ் சிலையிடங் 
		காவெ லாமவன் காகள சாலைகள் 
		பூவை மார்மனை போர்க்கள மென்பவே. 						3


		 அந்நாட்டில் அறச்செயல் மிக்கவர்களின் 
				 மிகுதி

		பொறைக்க யிற்றிற் புகழையின் சொல்லெனும் 
		விறற்க யிற்றின் விருநதைக் குரவர்சொல் 
		மறைக்க யிற்றின் மனத்தைத் திருவைநல் 
		அறக்க யிற்றின் அசைப்பவர் எங்குமே. 						4


		அந்நாட்டில் செல்வத்தினும் அறிவினும் 
		    அழகினும் மிகுந்தவர்கள் உளர்

		வறிய னாவன் வடதிசை மன்னவன் 
		அறிவி லாள னனந்தனு மாவனேர் 
		சிறிய னாவன் சிலைமதன் பூம்பொழில் 
		வெறியு லாவும் விளவலத் தெய்தினே. 						5


		விளவல நாட்டிலுள்ள வனவசை மாநகர்

		இணையி லாத இனைய வளம்பல 
		நணுகி வாழும் விளவல நாட்டிலவ் 
		வணியின் நாப்பண் அழுத்தும் விலையிலா 
		மணியின் மேவும் வனவசை மாநகர். 						6


		  வேர்ப்பலாப் பழுத்து நிலம் வெடித்தல்

		படிக்குள் ஈரப் பலாப்பழுத் தொண்புவி 
		வெடித்த வாயின் அனந்தன் மணிவெயில் 
		அடுத்து வானத் தமர்மதி யைத்தொடாக் 
		கடுத்த வேள்குடைக் காம்பெனத் தோன்றுமால். 					7


		  துறவிகளைப் போன்ற தும்பிகள்

		நறவ விழ்ந்த நறுமலர் தோறும்வண் 
		டுறவ ருந்தி யிறாலுற் றொடுங்குமால் 
		அறவர் தங்கள் அகந்தொறும் ஐயமுண் 
		துறவர் தங்குகை துன்னுதல் போலவே. 						8


		  வண்டுகள் தேனினைக் கொள்ளையிடல்

		வாவிச் செங்கம லங்களில் வல்லிருள் 
		மேவித் துஞ்சி விடிதரு காலையில் 
		காவிற் சென்று களிவண் டினங்குயில் 
		கூவத் தண்மதுக் கொள்ளைகொண் டுண்ணுமால்.					9


		  வயல்மடை உடையாமைக்குக் காரணம்

		பெடையொ டுற்றுப் பிரிவில்பைங் கிள்ளைகள் 
		குடியி ருக்குங் குளிர்பொழில் வாய்மலர்ப் 
		பொடியு திர்க்கில வேலளி போய்வயல் 
		மடையு டைக்கு மதுப்பெரு வெள்ளவே. 						10


		       தண்ணீரின் போக்கு

		சேலு லாவித் திரியும் நதிப்புனல் 
		மாலி யானை மறையக் கதிர்த்தலைச் 
		சாலி நீடித் தழைத்து விளைவயல் 
		காலி னோடிக் கடிது விழுமரோ. 							11


		   கழனி காமன் கையைப் போன்றது

		வரிக்க யல்செங் கமலம் வரிவளை 
		இருக்கை யால்மலர் அம்பினை யேந்தலால் 
		விரிக்கும் அஞ்சிறை மென்னடைப் புள்வயல் 
		செருக்கு வில்மதன் செங்கை நிகர்க்குமால். 						12


		   தடாகங்களில் சங்குகளின் மிகுதி

		நளிர்க டல்துயில் நாரணன் தன்னுருக் 
		கொளவ ளிப்பவர் கையிற் கொடுத்திடும் 
		வளைபி றக்கும் இடமென வண்புனல் 
		குளம னைத்துங் குடவளை மொய்க்குமால். 						13


			தாழ்வும் உயர்வும்

		தாழ்ந்தோர் உயர்வ ரென்றுமிக 
			உயர்ந்தோர் தாழ்வ ரென்றுமறஞ் 
		சூழ்ந்தோர் உரைக்கும் உரைகண்டாம் 
			மதில்சூழ் கிடந்த தொல்லகதி 
		தாழ்ந்தோ ரனந்தன் மணிமுடிமேல் 
			நின்றன் றுயர்ந்து தடவரையைச் 
		சூழ்ந்தோர் வரையின் உதிப்பவன் தாட் 
			கீழ்நின் றதுபோய்ச் சூழெயிலே. 						14


			அந்நகர் மக்கள் இயல்பு

		சொற்போர் புரிவர் நான்மறையா 
			றங்க முணர்ந்த தொழுகுலத்தோர் 
		விற்போர் புரிவர் நெடியசிலை 
			யிராம னனைய விறல்வேந்தர் 
		பொற்போர் புரிவர் பிறர்பொருளுந் 
			தமபோற் பேணிப் புரிவணிகர் 
		நெற்போர் புரிவர் அந்நகரில் 
			வேளாண் குலத்து நெறியினரே. 						15


		     அந்நகரத்திற்குள்ள ஒரு குறை

		உடுப்போர்க் குடுக்குந் துகில்காளல் 
			உண்போர்க் குண்ணும் பொருள்களால் 
		தொடுப்போர்க் கெடுக்கு மலர்களால் 
			அணிவோர்க் கணியுஞ் சுடரிழையால் 
		அடுப்போர்க் கடுக்கு மனைகளாற் 
			குறைபா டுடைய தன்றதுதான் 
		கொடுப்போர்க் கிரப்பா ரில்லாத 
			குறையொன் றுளது கூறுங்கால்.						16


		  யானை குதிரைகளின் தனிச் சிறப்பு

	ஈச னளித்த ஒருகோட்டி யானைக் கியாங்கள் இணையாயின் 
	வாச வனைத்தாங் கீரிருகோட் டியானை யெம்மை மானுமெனும் 
	பாச வுரற்கால் யானையொடு பாண்டில் இழுக்கும் பகடுயரின் 
	தேசின் இரதப் பரிசிறந்த என்னும் பரிகள் தெருவகலா. 					17


		   அந்நகரின் பல்வகை ஒலிச்சிறப்பு

	மறையுங் கலைகள் பற்பலவும் முழுங்கும் ஒலியும் மங்கலஞ்செய் 
	பறையுங் குழலும் யாழுமியம் பொலியுங் கரியும் பரிமாவும் 
	நிறையுந் தெருவி லோடுமணித் தேரி னொலியும் நிறைகடலின் 
	அறையுந் திரையிற் சென்றுவிசும் பமரர் செவியின டைந்திடுமால்.				18


		     வனவசை மாநகரின் பெருமை

		வேயை நகுமென் சுடர்த்தொடிய 
			தோள்மா துமையை விடைகொண்டு 
		பேயு மகன்று வரற்கரிய 
			கைலை மலையைப் பிரிந்தெய்தித் 
		தூய மனமுங் கலங்கஅருந் 
			தவர்வேள் குவவுத் தோள்வீங்க 
		மாயை பிறந்த வனவசைமா 
			நகரின் வளத்தை யார்சொல்வார்.						19


		மமகார மன்னனது சிறப்பு

	இம்மா நகரிற் கரசாகி யிருந்து வாழ்வோன்
	அம்மால் புணருஞ் செயன்மாதரை யாகம் வைத்தல் 
	சும்மா புகழன் றெனவிந்தையைத் தோளில் வைத்தோன் 
	கைம்மாறு வேண்டா மழைபோல்மம கார னென்பான். 					20


		அவனது இயற்கைப் பண்பு

	திறைதா னளக்குந் திறல்வேந்தர்க் கரிய சீரான் 
	குறைதான் இரக்கு மவர்க்கோடிக் குறுக நிற்பான் 
	நிறைதான வெற்பு மணிநாகமு நின்று தாங்கும் 
	பொறைதா னெடுக்கு மிகுமாற்றல் பொருந்து தோளான். 					21


		கொடையால் மிகுபுகழ் பெற்றவன்

	இரப்பார் வரினோ ரடிஞான மெளிய தன்றிக் 
	கரப்பார் கரக்கும் பொருளன்றென ஈகை கற்றே 
	உரைப்பா ருரைக்கு முரையாவும் புகழில் வைத்தோன் 
	தரைப்பா லுவமை யிலையாகத் தருக்கி வாழ்வோன். 						22


			   மாகினி

	அன்னான் மனைவி வணர்வார்குழல் ஐய வேற்கண் 
	மின்னார் மருங்குல் தளர்ந்தொல்கி மெலிய விம்மிப் 
	பொன்னார் சுணங்கு விரிபூண்முலைப் பூங்கொம் பன்னான் 
	இன்னா ரமுத மொழிமோகினி யென்னும் பேராள். 						23


		     மாகினியின் சிறப்பு

	ஒன்றான நம்பன் மருங்காயிழை உய்த்த மாயை 
	குன்றத ஆற்றல் முனிவோருளங் குன்று மாறு 
	பொன்றாத பொற்பிங் கிவள்பூங்கருப் போந்து பெற்றாள் 
	என்றா லிவளுக் கிணையாவினி யாரைச் சொல்வாம்.						24


		  மகவுக்காக நோன்புகள் இயற்றல்

		இம்மம காரனு மோகினி யென்னும் 
		மைம்மலி மென்குழல் வாள்விழி மாதும் 
		அம்மக வின்மையின் ஆரஞ ரெய்தி 
		மெய்ம்மெலி நோன்பு விளைத்தன ரன்றே. 						25


		 மாயை மோகினியின் கருப்பையை 
			      அடைதல்

		முன்னிய நோன்புசெய் மோகினி மாதின் 
		தன்னுத ரத்துமை தண்ணரு ளாலே 
		மன்னியல் மாரன் வலப்புய மாடக் 
		கன்னிகை மாயை கருப்ப மடைந்தாள். 						26


			கருப்பகாலக் குறி

		முத்தணி கொங்கை முகங்கள் கறுத்தாள் 
		மெய்த்திரு மேனி விளர்த்து நரம்பு 
		பைத்தன மீது பரப்ப இருந்தாள் 
		பொய்த்துயில் கொண்டு புளிக்கு முவந்தாள். 						27


		   மோகினி மாயையைப் பெறுதல்

		இன்னணம் ஐயிரு திங்க ளிருந்து 
		பின்னரு மோகினி பெண்மக வீன்றாள் 
		தன்னிகர் கின்ற சலஞ்சல மொன்றிங் 
		கின்னொளி முத்தினை யீன்றதை யொத்தே. 						28


		 மாயைபிறந்தநாட் கொண்டாடல்

		சங்கொடு தண்ணுமை சச்சரி தாளம் 
		வங்கியம் வெந்துடி வார்முர சங்கள் 
		மங்கல மங்கை மகப்பெறு நாளில் 
		அங்கசன் வெம்முர சென்ன அதிர்ந்த.						29


		 அந்தணர்களுக்குப் பொருள் அளித்தல்

		தூண்டொளி போல்மகள் தோன்ற உவப்புற் 
		றாண்டகை மன்னவன் அந்தணர் கொள்ளப் 
		பூண்துகில் மாமணி பொன்னில மற்றும் 
		வேண்டின யாவும் பெறுப்ப அளித்தான். 						30


		     அப்பொழுது காமன் செய்கை

	இங்கொரு மாயை யென்னும் எழில்முளை தோன்ற லோடும்
	பொங்குறும் உவகை நெஞ்சம் பொறுக்கல னாகி யெய்யும் 
	வெங்கணை மழையுந் தூவு மென்மலர் மழையு மொன்றா 
	எங்கணு மதன வேள்நின் றிடையறச் சொரிந்தா னம்மா.					31


	 அப்போது தவஞ்செய்வோர்கட்கு நேரிட்ட இடையூறு

	கண்ணகல் நிலத்த கங்கைக் கரையிலும் முழையி டத்தும் 
	புண்ணிய வனத்து மெய்திப் புற்றுமாய் மரமா யுற்றுந் 
	தண்ணிய புனலில் தீயிற் சார்ந்துமூண் துயில்து றந்து 
	பண்ணிய தவத்தோர் நெஞ்சும் பதைத்தன மயலின் மூழ்கி.					32


	     முனிவர் தம் மனக்கலக்கத்தை ஆராய்தல்

	ஐம்பெரும் பூதம் எல்லாம் அடுக்கழிந் தொழியும் போதும் 
	கம்பமில் நமது நெஞ்சங் கலங்கிய தென்னை கொல்லோ 
	வம்புறு செயலிஃ தீங்கு வந்தவா றெவ்வா றென்னாச் 
	செம்பொரு ளுணர்ந்த சீர்சால் செய்தவ ரிந்த காலை.						33


	   அப்பொழுது துருவாச முனிவர் அங்கு வருதல்

	தளர்ந்துழி யுதவுங் கல்வி தானெனத் துருவா சப்பேர் 
	கொளுந்தனி முனிவர் கோமான் குறுகலு முனிவ ரெல்லாம் 
	உளங்கனி வரநின் றேத்தி உயர்தவி சிடையி ருத்தி 
	வளங்கெழு மலர்கள் தூவி வந்தனை செய்து சொல்வார்.					34


	    தங்கள் உள்ளக் கலக்கக் காரணம் வினவல்

	என்றுமெம் முள்ள மெல்லாம் எழுதிய விளக்குப் போல 
	நின்றிடும் இன்றென் கொல்லோ நிலைதடு மாறா நின்ற 
	தென்றன்மு னிருந்த செய்ய சிறுசுடர் போல ஐய 
	நன்றிதை உணரு மாறு நவின்றருள் செய்தி யென்றார்.						35


		துருவாச முனிவர் பதில உரைத்தல்

	சங்கரி யொருசூ ளாற்றன் தமோகுண வடிவ மாயை 
	மங்கையை விடுப்ப அன்னாள் வனவசை நகரிற் பிள்ளைத் 
	திங்களி னுதித்தாள் இன்று செய்தவக் கிழமை பூண்டீர் 
	உங்கள் நெஞசதனா லாற்றல் உடைந்ததென் றவனு ரைத்தான். 					36


	   முனிவர்கள் தங்கள் ஐயம் நீங்கிற்று என்றல்

	அருந்தவ முனிநீ கூறிற் றுண்மையே யன்றி யெங்கள் 
	பெருந்தவ முயலு நெஞசம் பிறழ்தரற் கேது வில்லை 
	இருந்துளம் வருந்தி யாய்ந்த எம்மிடை ஐய மெல்லாம் 
	பரிந்தன அருளால் நீயெம் பால்வரு கையினா லென்று. 					37


	மாயை உலகில் தோன்றியதற்குக் காரணம் கேட்டல்

	முனிவரர் துவா சப்பேர் முனிவர்கோன் தனைவ ழுத்திப் 
	பனிமலை வல்லி யேவப் பட்டெழில் மாயை யென்னும் 
	வனிதையிவ் வுலகில் வந்த வாறுநீ விரித்தி யாங்கள் 
	இனிதுணர் வுறுமா றோது கென்றலும் அவனு ரைப்பான். 					38


	 துருவாச முனிவர் கைலையில் நிகழ்ந்த செய்தியைச் 
			      சொல்லுதல்

	கயிலையோ லக்கத் துற்ற கண்ணுதல் அல்ல மன்றன் 
	இயல்பினை அறிதல் தேற்றா யென்றுமை யுடனு ரைப்ப 
	மயிலிய லறிவ லென்று மாயையை விளக்கைக் காண்பான் 
	பயிலிரு ளினைவி டுத்த பரிசென விடுத்தா ளன்றே.						39


	    கலக்கம் தீருவதற்குத் துருவாசர் வழி கூறுதல்

	காரணம் இதுவே யெங்கோன் கைலையை விடுத்து மாயை 
	தாரணி தனில்வ ரற்குத் தக்கவம் மாயை யென்னும் 
	மாரண விடங்க லந்த மயக்கமல் லமனென் றிட்ட 
	பேரணி கலுழன் தன்னை நினைந்திடிற் பெயரு மன்றே.					40


	 அல்லமதேவரே எல்லா நன்மைகளையும் அருளுவர் 
			      என்றல்

	பிணிதப வேண்டில் வாழநாள் பெரிதுற வேண்டிற் செல்வம் 
	அணிதர வேண்டிற் கல்வி அறிதர வேண்டில் வானம் 
	பணிதர வேண்டின் முத்திப் பயன்பெற வேண்டில் என்றும் 
	இணையறும் அல்ல மப்பேர் எந்தையை நினைப்ப ரென்று. 					41


	துருவாசர் செல்ல முனிவர்கள் அல்லமரைப் போற்றல்

	புகன்றவ ருளத்தில் துன்பம் போக்குபு துருவா சன்றான் 
	அகன்றுதன் னிடத்த டைந்தா னன்றுதொட்டருந்த வத்தோர் 
	மகிழ்ந்தருள் அல்ல மன்றன் மலரடி மனத்தில் தாங்கி 
	உகந்தவன் புகழாய் வந்த வாறெலாம் உரைக்க லுற்றார்.					42


		 முனிவர்கள் தவஞ்செய்திருத்தல்

	நெஞ்செனு மகலி லன்பாம் நெய்நிறைத் துள்ள மென்னும் 
	பஞ்சுறு திரியி னுச்சி பற்றிட அல்ல மப்பேர் 
	அஞசுட ரிலக வேற்றி யருந்தவர் மாயை யென்னுந் 
	துஞ்சிரு ளகன்றி ருந்தார் தொல்லைமா தவங்கள் செய்து. 					43


	     மாயையின் செய்தி கூறப்பெறுகின்றது

	மந்தர கிரிப்பேர் பெற்ற மத்தெறி கடல்போ லையர் 
	சிந்தனை கலங்கி மெல்லத் தெளிந்தமை தெரிந்து ரைத்தாம் 
	வந்துமண் பிறந்த வன்றே மாதவர் மனங்க லக்கும் 
	வெந்திறல் மமகா ரன்றன் மகள்திறம் விளம்ப லுற்றாம்.					44


		  மமகாரன் மகளுக்குப் பெயரிடுதல்

	காந்தம் வலியும் இரும்புபோற் கண்கள் தன்னோ டுறப்பிணித்து 
	நேர்ந்த மனமோ ரணுவென்னல் நியாய மன்றென் றம்மனத்திற் 
	போந்த ஆசைப் பெருங்கடலைப் புகட்டு மகளைக் கண்டுவந்து 
	வேந்தன் மாயை யெனுநாமம் விளம்பிச் சிறப்புப் பலசெய்தான். 				45


		  மோகினி தன் மகளுக்கு நீராட்டிப் 
			     பொட்டிடுதல்

		மாயைப் பெயர்கொள் மகளைநறு 
			மஞ்சள் திமிர்ந்து கணைக்காலின் 
		ஏயக் கிடத்தி நீராட்டி 
			யிணைக்க ணுந்தி நீரூதி 
		நேயத் துகிலின் மெய்துடைத்து 
			நெகிழ்மென் முலையோ டுறத்தழுவி 
		வாயில் திவலை கொடுதேய்த்து 
			மண்பொட்டணிந்து நீ றிட்டு.						46


		     அணிகலன்கள் அணிதல்

		கண்ணிற் கமைய மையெழுதிக் 
			காற்குச் சதங்கை பொற்றண்டை 
		நண்ணப் புனைந்து பொன்னரைஞா 
			ணடுவிற் பூட்டிப் புலியுகிர்சேர் 
		வண்ணப் பசும்பொன் அணிமார்பில் 
			வனைந்து சிறுமென் தொடிசேர்த்திப் 
		பெண்ணிற் கரசி திருநுதற்பொற் 
			பிறைமேற் சுட்டி யொன்றணிந்து.						47


		     தொட்டிலில் இட்டுச் சீராட்டுதல்
	
	போக்கும் பொருளாற் கண்மிச்சில் போக்கி யன்பான் முலையூட்டித் 
	தூக்கும் பவளக் காற்பசும்பொன் தொட்டில் மலியக் கிடத்தியே 
	பார்க்குஞ் சுவைவா னமுதமே பார்வேந் தணியே யென்துயரந் 
	தீர்க்குங் கரும்பே கண்மணியே திருவே யென்று சீராட்டி.					48


		மோகினி மகளைப் போற்றும் அருமை

	மிடிய னொருசெய் யாளனச்செய் விளையக் காக்குஞ் செயல்போலப் 
	படியில் கல்வி விரும்பினோன் பாடம் போற்று மதுபோல 
	ஒடிவில் செங்கோல் மனுவேந்தன் உலகம் புரக்கு முறைபோலக் 
	கொடிய நோன்பு செய்தீன்ற கொடியை வளர்த்தாள் மோகினியே. 				49


		     மாயை கிடத்தலின் சிறப்பு

		கள்ள மாயை தன்னெழில்போற் 
			கண்ட தில்லை யென்னமிக 
		உள்ளம் வியந்து தலையசைப்ப 
			தொப்ப அசையுஞ் சுடர்பார்த்து 
		மெள்ள விரலொன் றனைச்சுவைத்து 
			மிளிர்பூஞ் சதங்கைத் தாளுதைத்தும் 
		விள்ளு மலர்வாய் குவித்தழுது 
			மீள நகைத்துங் கிடக்குமால். 						50


		மாயைக்கு எதிராக மதனவேள் செய்கை

		மாயை கவிழ முகங்கவிழ்ந்த 
			மதனன் இருந்தா னவளிருப்பப் 
		போய சிலையொன் றெடுத்தெழுந்தான் 
			பொன்னா லியன்ற பாவையெழ 
		மேய அனங்க வேள் நடந்தான் 
			வேந்தன் பயந்த மகள் நடப்பத் 
		தூய தவஞ்செய் தைந்தவித்த 
			துறவி னோர்பா லோடினான். 						51


			மாயை மழலைமொழி பேசுதல்

	குழலும் யாழும் இனியவெனக் கூறா வண்ணம் மென்கனிவாய் 
	மழலை மொழிந்தும் உடற்கின்ப மருவ வோடி மேல்விழுந்தும் 
	விழையும் அமிழ்தின் மிகவினிமை விளைய நுகருஞ சுவையடிசில் 
	செழிய சிறுகை யாலளைந்துஞ் செய்தாள் மோகம் ஈன்றோரை.					52


			மாயையின் விளையாடல்

	பரவு பெருஞ்சீ ரல்லமனைப் பற்ற வந்த மதியாற்றன் 
	உருவ நிழலைப் பற்றநினைந் தோடி யோடிக் கலுழ்ந்திடுவாள் 
	பொருவின் மதிய மேன்முனிந்து பொங்கு முழலை வீசாமல் 
	மருவி உறவு கொள்வாள் போல் வாவா என்ன அழைத்திடுவாள். 				53


		மாயை பெதும்பைப் பருவம் அடைதல்

	மாதிப் பரிசு தந்தைதாய் மகிழ வளர்வுற் றரசிருந்த 
	நீதிக் கிழவன் இறப்பவவ னெறிசேர் இளஞ்சே யவன் றவிசின் 
	மீதுற் றதுபோல் முன்முளைத்த வெண்பல் விழவே றெயிறுதிப்பப் 
	பேதைப் பருவங் கடந்துமேற் பெதும்பைப் பருவம் நண்ணினான். 				54


			பெதும்பைப் பருவச் சிறப்பு

	செய்ய வல்ல கம்மியன்செய் சிங்கஞ் சுமந்த மணியணைமேல் 
	பைய வந்து மணிமௌலிப் பார்வேந் திருக்கும் பரிசுபோல் 
	வெய்ய குதம்பை வளர்த்தகல விழுநீர் வள்ளைக் காதினிடைத் 
	துய்ய பசும்பொன் மணிகுயின்ற துணைத்தோ டமையத் தோன்றினாள்.				55


			எட்டிப்பார்க்கும் இளமுலைகள்

	மட்டுக் கணைவே ளரணாக வளர்த்த குழற்கா டலர்விரவிக் 
	கட்டுற் றதுநம் பரன்களத்திற் கடுவும் விழிகள் சிறிதுற்ற 
	முட்டித் துறவாம் பறவைமயல் முடியிற் படுதல் மெல்லமறைந் 
	தெட்டிப் பார்ப்ப வெனமுகங்கொண் டெழுந்த மார்பில் இளமுலைகள். 				56


			மாயையின் தருக்கு

	அன்ன நடையும் அன்னமிலா ஐயர் நடையுந் தளர்வெய்தக் 
	கன்னி நடக்கும் நடைகற்றாள் கரும்பு கசக்கும் மொழிபெற்றாள் 
	மன்னு மலர்வீழ் சுரும்பனைய மைந்தர் பார்வைக் குறிப்புணர்ந்தாள் 
	தன்னை யரிய ளெனவறிந்து தானே மனத்தில் தருக்குற்றாள். 					57


			காமன் கணை தொடுத்தல்

	இந்தக் கன்னி மதிமுழுநோக் கெய்திச் செவ்வாய் வலியடைந்து 
	சந்தச் சிங்கந் தனையடுத்த தக்க அரவின் வலிசார்ந்து 
	முந்தைக் கொடிமீ னத்தலைவன் முனிவ ராகும் பகைவெல்லக் 
	கந்தப் பகழி பலவேழக் கருப்புச் சிலையில் தொடுத்தனனால்.					58


			மங்கைப்பருவம் அடைதல்

	பாக மாகப் பொங்கியெழும் பதமே போலப் பொங்குமெழில் 
	மோக மாயை தன்பருவ முன்னி முடிவேந் தயனுமால் 
	ஆகு மாட மொன்றுபுரிந் ததன்கட் கல்வி பற்பலவும் 
	போகு மாதர் பலர்சூழப் போற்றி யிருப்பச் செய்தனனால்.					59


			பாடல் பயிலுதல்

		வாயத்துள அம்மணி மாடம் நண்ணுபு 
		பாத்தொடை பற்பல பயின்றுந் தந்திரி 
		நாத்தனி யாழைமா ணாக்க னென்றுதான் 
		பேர்த்துளர் விரல்களாற் பேசு வித்துமே.						60


			     பாடி ஆடுதல்

		அங்கொரு மடவர லதிர்ப்பத் தண்ணுமை 
		மங்கையர் சிலரிசை மரபிற் பாடுறக் 
		கொங்கவிழ் மலரளி குமுறத் தென்றலால் 
		பைங்கொடி யசைதல்போற் பாடி யாடியும்.						61


			     பந்தடித்தல்

		வருமுலை யிறைக்கிணை யாக வந்துறக் 
		கரமெனும் ஏவலன் புடைக்குங் காட்சிபோல் 
		விரைமல ரோதிமேல் மிஞிறி ரைந்தெழப் 
		பருமணி குயின்றமென் பந்த டித்துமே. 						62


		     மாலைபுனைதல் முதலியன

		பூந்தொடை வார்குழல் புனைந்து நல்விரைச் 
		சாந்தமும் நானமும் தயங்கப் பூசியும் 
		ஏந்திழை பலவுறுப் பிசையத் தாங்கியும் 
		மாந்துறு சுவைபல வகைய மாந்தியும். 						63


		   கிளி வளர்த்துப் பேசப் பழக்குதல்

		தீங்கனி பாலொடு செம்பொற் பஞ்சரம் 
		தாங்குறு பைங்கிளி ஊட்டித் தன்மொழி 
		ஆங்கது பயில்வுற அளித்துங் கற்பகப் 
		பூங்கொடி யனையவள் பொழுது போக்குநாள். 					64


		மமகாரமன்னன் தன்மகள் திருமணங்குறித்து 
				எண்ணுதல்

		தென்னவன் செம்பியன் சேரன் கொங்கண 
		மன்னவன் மாளுவன் மகத நாட்டிறை 
		என்னுமிங் கிவர்தமுள் யாவர் கண்ணதோ 
		கன்னிதன் மணவினைக் கடனென் றுன்னியே. 					65


		  மமகாரமன்னன் தன் குரு வரக்கண்டு 
				வணங்கல்

		ஆய்ந்திருந் தனன்மம கார னாயிடைப் 
		போந்தன னவன்குரு வாகப் போற்றுறும் 
		சாந்தவாங் காரனாந் தகுதிப் பேரினோன் 
		வேந்தனு மெதிர்கொளீஇ விதியில் தாழ்ந்தனன். 					66


		  அகங்காரன் மாயையைக் காண்டல்

		மன்னவன் வந்தன மரபிற் கொண்டவன் 
		கன்னித னெழில்நலங் காணப் போயினான் 
		அன்னவ ளெதிர்நடந் தாரி யன்றனைச் 
		சென்னியின் வணங்குபு சிறப்புச் செய்தனள். 						67


		 மாயையைக் காரணமாதென ஆங்காரன் 
				அறிதல்

		மாந்தளிர் ஆலிலை வயங்கு கோங்கரும் 
		பேந்தெழில் மரைமல ரெய்தி யற்புதப் 
		பூந்துணர் வல்லிநேர் பொன்னைக் கண்டவன் 
		ஓர்ந்தனன் காரண மாதென் றுன்னியே. 						68


		 குரு ‘உன்மகளுக்கு மணவாளன் யாவன்?’ 
			என்று அரசனைக் கேட்டல்

		மாதுரு வுறுகுறி மதித்த றிந்தவன் 
		ஆதர வொடுமுடி யரசை நோக்கிநின் 
		கோதையை யார்கொலோ தோளிற் கொள்பவர் 
		ஓதுக என்றலும் உரைத்தல் மேயினான். 						69


		   ’நான் அறியேன் நீயே கூறுக’ என்று 
			     அரசன் கூறல்

		உணர்ந்திலன் அடியனே னொருநங் கோதைதன் 
		மணந்தனக் குரியவர் மனிதர் வானவர் 
		கணங்களு ளொருவரைக் கருத்தில் தேர்ந்துநீ 
		இணங்குற எனக்கிவண் இயம்பு கென்றனன்.						70


		 சங்கரனே மாயைக்குத் தலைவன் என்று குரு 
				   கூறுதல்

		கொங்கவிழ் தொடையினாய் கூன்கொன் கன்றுவான் 
		கங்கையை யடைவது கடவு ளன்னமே 
		மங்கையை யணைபவர் மனித ரல்லர்நம் 
		சங்கர னேயிவள் தலைவ னென்றனன். 						71


		  இறைவன் இவளுக்கு எளியனோ எனல்

		மாலுநான் முகனுநா டரிய வள்ளலிவ் 
		வேலவார் குழலினாட் கெளிய னோவென 
		ஆலமார் மிடற்றினோ னன்பர் வேண்டிய 
		கோலமாய் நணுகுமீ துண்மைக் கூற்றென்றான். 					72 


		  குரு, மாயைக்கு இறை வழிபாட்டு 
			முறையை உணர்த்தல்

		இன்னணம் அரசனோ டியம்பி மாயையாம் 
		கன்னியை விளித்தவள் கருத்தி ணங்குறச் 
		செந்நிலை தனையுப தேசித் தேகினான் 
		தன்னிகர் குருபரன் தனதி டத்தரோ. 						73


		   மாயை, மதுகைநாதனை வழிபடல்

		குருவருள் மொழிநெறி கொண்டு மாயைதான் 
		வரவன வசைநகர் மதுகை நாதனைப் 
		பரவினன் அருச்சனை பயின்று பூசனைக் 
		கருவிகள் முழுவதுங் கடைப்பி டித்தரோ. 						74 


மூன்றாவது - மாயையின் உற்பத்தி கதி முடிந்தது
கதி 3 - க்குச் செய்யுள் - 156

4. மாயை பூசை கதி

[இக்கதிக்கண், மாயை படுக்கையைவிட்டு எழுந்து நீராடுதல், ஆடையணிதல், அணிகலச் சாலைக்குச் செல்லுதல், பலவகையான அணிகலன்களை பூணுதல், மதுகைநாதனைப் பூசனை புரியச் சிவிகையிற் புறப்படுதல், அவள் செல்லும் ஆரவாரம், அரிவையர் கூட்டத்தைக் கண்ட ஆடவர்கள் தன்மை, கோயிலையடைந்து பூசனை புரிந்து வழிபாடு இயற்றுதல், இறைவன் முன்னிலையில் தேவர்களும் வியக்கும்படியாகத் திருக்கூத்து இயற்றுதல் ஆகிய செய்திகள் விரிவாகக் கூறப்படுகின்றன.]


	பதியை மேவுறுங் காதல்நெஞ் சகத்தினுட் பதித்து 
	மதுகை நாதனை வரன்முறை வரிவிழி மாயை 
	உதய காலையில் பூசைசெய் நாளகளு ளொருநாள் 
	விதியை யோதுவன் குவிமனத் தவர்கொள விரித்து.						1


			கதிரோன் எழுதல்

	விதுவைச் சேய்மையிற் கண்டலர் குவளைகள் மெலிய 
	முதிர்விற் பூணிள முலையெழில் மாயைதன் முகமாம் 
	மதியைச் சேர்தரு வரிக்கருங் குவளைகண் மலரக் 
	குதிரைத் தேரவன் எழுந்தனன் குணதிசைக் குன்றில். 						2


	   மாயை படுக்கையை விட்டு எழுந்து நீராடுதல்

	அனைய காலையில் அன்னமென் தூவிபெய் யணைமேல் 
	தனியண் மாமயில் போல்துயின் றவள்துயில் தணந்து 
	வினையி னான்மலி மஞ்சனச் சாலையுள் மேவி 
	இனிய வாசநீ ராடினள் சேடிய ரேந்த.							3


			ஆடையணிதல்

	விலைவ ரம்பறி யாமணிக் கோவைசூழ் விளிம்பு 
	கலைய ணிந்தொரு தலைமுலை மேலலங் கரித்தாள் 
	முலையொ டுந்துகில் கண்டநாள் முதுல்தொடர்ந் தன்றோ 
	இலகு றுங்கலை வல்லவர் கடபடா மென்றல். 						4


	     அணிகலன்கள் பூணுமிடத்தை அடைதல்

	மணிய மைந்தபொற் பாதுகை யொருத்திமுன் வைப்பப் 
	பிணிய விழ்ந்தசெந் தாமரைப் பதங்கொடு பெயர்ந்தே 
	அணிய ணிந்திடும் மண்டபத் தணைமிசை யமர்ந்தாள் 
	பணிய ணிந்திடு மங்கைய ரடைந்தனர் பலரே. 						5


		சடை பின்னிவிடுதல்

	மார வேள்சிலை வளைந்திடப் பூட்டிய வண்டு 
	நாரி யோர்தலை நெகிழ்த்துவிட் டெனவொரு நாரி 
	கார வாமலர்க்  குழற்சடை கைபுனைந் தியற்றி 
	வீர வேனெடுங் கண்ணிதன் முதுகுற விடுத்தான். 						6


	  நெற்றியில் திருவும் பிறையும் அணிதல்

	பின்னும் வேணிவார் குழலெனுங் கரியபே ரரவம் 
	முன்ன மார்தரு சுடர்களை உமிழ்ந்திடு முறைபோல் 
	கன்னி வாணுதல் மிசைக்கதிர் பிறையொடு கவினப் 
	பொன்ன வாஞ்சுணங் கவிலை ஒருத்திகை புனைந்தாள். 					7


		மாணிக்கச் சுட்டி அணிதல்

	ஓதி யாகிய அறல்மிசைச் சுவடுற வூர்ந்து 
	தீதி லாதவொண் சந்தனத் திலகவெண் மதிக்குப் 
	போது மோர்சிறு பம்பென மயிர்வகிர்ப்பொருந்தச் 
	சோதி மாமணிச் சுட்டியொன் றொருத்திதூக் கினளால்.						8


		காதிற் குவளைமலர் அணிதல்

	வேன லம்பதி கொலைவிட மூட்டிய வெவ்வேல் 
	மான அஞ்சனம் எழுதிய விழிபொர வரலால் 
	தான தன்பகை தனைத்துணை கொண்டுறுந் தகைபோல் 
	பான லஞ்செவி மிசையணிந் தனளொரு பாவை.						9


		காதில் பொன்னோலைச் சுருளணிதல்

	அடுத்து மாதவம் அழிமினென் றனங்கவேள் தமக்கு 
	விடுத்த வோலையைக் கண்கள்தம் மேற்பழி விளம்பில் 
	கொடுத்த வேள்மிசை நிந்தைகூ றுதற்குவைத் திருத்தல் 
	கடுத்து வாழதர ஒருத்திபொன் னோலைகா தணிந்தாள்.						10


		மூக்கிலே முத்துமூக்கணி புனைதல்

	யூன்னை நிந்தைசெய் வெண்ணகை மேற்பழி சார 
	மன்னி யங்கது நிகரற வாழ்மனை வாய்தன் 
	முன்னி றந்திடு வேனென ஞான்றுகொள் முறைமை 
	என்ன வெண்மணி மூக்கணி யொத்திநின் றிட்டாள்.						11


		கழுத்தில் அட்டிகை அணிதல்

	கற்றை யங்குழல் நறுமலர்த் தொடையொடு கனமாய் 
	உற்ற ணங்குமென் றிலகுபூண் பிடித்ததை யொப்ப 
	விற்ற யங்குவாள் நுதலெழில் மாயைதன் மிடற்றில் 
	பொற்ற டந்தகட் டணியொரு மடவரல் புனைந்தாள். 						12


	     கைகளில் வளையல்கள் அணிதல்

	கன்னி யத்தம்வந் தினமணிக் கற்கட கத்தின் 
	மன்னி யுற்றதற் புதமென வளைபல காக்க 
	வின்னு தற்கருங் கண்மட மாதுகை விளங்கப் 
	பொன்னின் நற்கட கம்புனைந் தனளொரு பூவை.						13


		செம்பவளக் கோவை அணிதல்

	ஆயும் இன்சுவை தரச்செலுங் கையுட னடுத்து 
	வாயி னொண்கவின் காணிய மருவுறு மாபோல் 
	மாயை தன் கையிற் பொற்கட கத்தின்முன் வனைந்தாள் 
	தூய செம்பவ ளங்களைக் கோத்தொரு தோகை. 						14


		மார்பில் அணிக்கோவை அணிதல்

	மங்க லத்தொழில் ஆடவர் மனநடக் கிற்காக் 
	குங்கு மப்பெருஞ் சேற்றினைக் குறித்திடு கற்போல் 
	மங்கை யர்க்கொரு திலகமா கியவெழில் மாயை 
	கொங்கை யிற்புனைந் தனளொரு பெண்மணிக் கோவை. 					15


		     மணிமேகலை அணிதல்

	பாயும் வெண்திரைக் கருங்கடல் நிலச்சுமைப் பாம்பின் 
	ஆயி ரம்படங் களுந்திறை யிட்டன வனைய 
	மீயி லங்கொளி விரிமணி மேகலை வேய்ந்தான்
	மாயை மங்கைத னல்குலி னொருதிரு மடந்தை.						16


		   காலில் சிலம்பணிதல்

	கறைய டிக்களி யானையின் வரவினைக் கண்டு 
	மறுகி னுற்றவர் இரிதர மணிமருங் கிடல்போல் 
	உறுத வத்தினர் அறிந்தனர் ஓடவொண் ணுதற்கு 
	நறு மலர்ப்பதத் தணிந்தனள் சிலம்பொரு நங்கை.						17


		     சந்தனக் குழம்பணிதல்

	கூடை மென்மலர் மணத்தினால் அறிந்ததைக் குறுகப் 
	பாடும் வண்டினஞ் சூழ்தல்போல் இளைஞர்கண் பரப்பத் 
	தேட ரும்பொரு ளனையவட் குறுநறுந் தேய்வை 
	பீடு றுங்குவி முலைக்கணிற் தனளொரு பேதை. 						18


		     கண்ணாடி காட்டுதல்

	நின்றன் விம்பமே நினக்கெதி ரன்றிவே றில்லை 
	என்று கண்கொளத் தெளிந்தபே ராடியொன் றெடுத்தாள் 
	குன்றெ னுங்குவி முலையவ ளெதிர்கொடுங் குழைமேல் 
	சென்று சென்றுபா யரிமதர் மழைக்கணோர் தெரிவை.						19


	 அழகுபடுத்தப்பெற்ற மாயையின் தோற்றம்

	வீர வேள்வளை யாதசெங் கரும்பவன் வில்லின் 
	நாரி மேலிடா மலர்மறு விலாநகை மதியம் 
	காரு றாதமின் கடற்பிற வாதஇன் னமுதம் 
	வேரி லாதபூங் கொடியென விளங்கினள் மாயை.						20


	   ஒருமாது மாயையைப் பூசனைக்கு எழச் 
			சொல்லுதல்

	மாத ரிவ்வகை யணியலு மதுகைநா யகன்றன் 
	பாத தாமரை யருச்சனைப் பொருள்கள்பற் பலவும் 
	நீதி யாலமைந் தனவினி நிகரிலெம் பிராட்டி 
	போது வாயென வொருமட மாதெதிர் புகன்றாள்.						21


	  மாயை எழுந்த பொழுதுண்டாகிய மகிழ்ச்சி

	மயிலெ ழுந்தென எழுந்தனள் கோமகள் வாழ்த்திக் 
	குயிலெ ழுந்தென எழுந்தன மடந்தையர் குழாங்கள் 
	துயிலெ ழுந்தென எழுந்தன நூபுரத் துழனி 
	வெயிலெ ழுந்தென எழுந்தன மணியணி விளக்கம். 						22


		மாயை சிவிகையிலேறிப் புறப்படல்

	பொன்னி லங்கிய சிவிகைமுன் கொணர்ந்தனர் பொறுப்போர் 
	மன்னி யங்கதை யேறினள் மதர்விழி மாயை 
	சின்னம் வெண்பணி லம்பணை தண்ணுமை திமிலை 
	மன்னி ரைந்தன மதியெழக் கடல்முழங் குதல்போல். 						23


		     வேய்ங்குழல் ஊதுதல்

	ஆன்றி ரட்டுறும் கண்ணன் வாய்க் குழலிஃ தணிபூண் 
	மான்றி ரட்டுறு மெனக்குழ லூதினர் மலர்வில் 
	கோன்றி ரட்டிய வமுதனை யாள்முனங் குறுகி 
	மூன்றி ரட்டிய முகமுடை முருகனு முருக. 							24


	  மாயையை மாதர் பலர் சூழ்ந்து செல்லல்

	வயங்கு மாயையங் கரும்பினில் தாழ்ந்தவர் மாவின் 
	உயர்ந்த மாதரார் ஊற்றிருந் தொழுகுகண் மலரை 
	நயந்து சூழ்தரு மளியினண் ணினர்பிறர் காலால் 
	இயங்கு மாதிரு புடையினும் இடையற ஈண்டி. 						25


	      குடை பிடித்தலும் கவரி வீசுதலும்

	வேள ளித்தனன் தன்குடை யெனக்குடை விதிர்க்கும் 
	வாளெ னப்பிறழ் மதர்நெடுங் கண்ணிபால் மருவக் 
	காள மொத்தகண் மடந்தையர் பலரிளங் கமுகின் 
	பாளை யொத்தவெண் கவரிவீ சினரிரு பாலும். 						26


	     விசிறி வீசுதலும் மலர் சொரிதலும்

	காம வெந்தழல் மூட்டல்போற் கடிமலர்ச் சிவிறி 
	தாம சைந்தன பொய்க்கணை சொரிந்துவில் தடக்கைக் 
	கோம கன்றிருந் திழையுள மறிதல்போற் குறுகிப் 
	பூம டந்தையை வென்றவர் பூமழை பொழிந்தார். 						27


	   பலவகைப் பொருள்கொண்டு பாவையர் 
			  செல்லல்

	பாகு வெள்ளிலை சந்தனம் குங்குமம் பளிதம் 
	ஓகை மான்மதம் வண்டிமிர் நறுமல ரொலியல் 
	பேர்கெ ழும்பணிப் பெட்டிமென் துகிலுடைப் பேழை 
	தோகை மார்பலர் மருங்கினிற் சுமந்துபோ யினரால். 						28


	  அரிவையர் செல்லுந் தெரு ஆறு போன்றது

	கொங்கை யங்குவி முகிழ்விழிக் கயலிதழ்க் குமுதம் 
	அங்கை யம்புய முந்தியஞ் சுழியிவை யடுத்துப் 
	பொங்கு றுங்கவி னீர்பெரு காற்றினைப் புரையும் 
	மங்க லந்திகழ் வுறுமணி மாளிகை மறுகு. 							29


	   பலவகை ஒலிகள் கலந்து பேரொலியாதல்

	திங்கள் வாணுதல் மடந்தையர் செஞ்சிலம் பொலியும் 
	சங்கி னோடணி கலன்களின் சிற்றொலி தாமும் 
	கொங்கு லாமலர்த் தொடையளி யிசைகளுங் குழுமிப் 
	பொங்கும் ஆழியிற் பஃறுளி பெருகுதல் போன்று.						30


		  மாயை சென்ற தோற்றம்

	துன்று பெண்படை சூழ்வர மாயையந் தோகை 
	வென்றி யங்கனல் மழுவினோன் விதியினால் வேளைக் 
	கொன்ற தென்னெனக் கேட்பமென் றுளவலி கொண்டு 
	சென்று றுஞ்செய லென்னவத் தெருவிடைச் சென்றாள். 						31


		அரிவையர் கூட்டத்தைக் கண்ட ஆடவர் 
				தன்மை

		அரிமதர் மழைக்கணல் லரிவை தன்புடை 
		வருமட வரலியர் வனப்புக் காண்டலும் 
		எரிபுரை விழியரி யேறு போல்பவர் 
		கரிநுகர் வெள்ளில்அம் கனியை யொத்தனர்.						32


		   ஆடவர் அறிவு கொள்ளை போதல்

		இடையொரு சற்றுவா ணுதல்சற் றேழையர் 
		படைவிழி சற்றுவாய்ப் பவளஞ் சற்றிணைக் 
		குடமொரு சற்றிவண் கொள்ளை கொள்ளநம் 
		புடைபெயர் அறிவெலாம் போயிற்றே யென்பார். 					33


		   திருநீறும் மயலை உண்டாக்குதல்

		இனத்தியல் பாமறி வென்ப துண்மையே 
		மனத்துயர் செயுமயல் மாற்று நீறுதான் 
		அனிச்சமெல் லடியினார் நுதல டுத்தலும் 
		பனித்துடல் வெதும்புமால் படுத்தலா லென்பார். 					34


		 கண் நஞ்சின் கடுமை உரைப்பேம் எனல்

		தொல்லைநஞ் சடர்துயர் சொல்லக் காத்தவன் 
		வல்லிபங் குடையருள் மதுகை நாயகன் 
		செல்லுமங் கையர்விழி நஞ்சு செய்வதும் 
		சொல்லுதும் அவனொடு தொழுதுநா மென்பார். 					35


		மகளிர் அனைவரும் சிறந்த அழகினர்

		இக்குழு மகளிருள் யார்வ னப்பினால் 
		மிக்கவ ளெனத்தமை வினாவி னாரெதிர் 
		முக்கனி களுட்சுவை முதிர்ச்சி பெற்றுள 
		தெக்கனி யதனைநீர் இயம்புவீ ரென்பார். 						36


			      இதுவும் அது

		கரும்பினும் இனியசெங் கயற்க ணாரிளம் 
		குரும்பையும் பயன்படாக் கோவை தன்னையும் 
		விரும்பினம் உலகர்முன் வீணில் நெஞ்சகம் 
		வருந்துதல் நகைதரு மடமையே யென்பார். 						37


		உடல் முழுதும் மூடினால் உயிர் பிழைக்கலாம் 
				   என்றல்

		விடங்குலா மதர்விழி விரைத்தண் பூங்குழல் 
		நுடங்குநூ லிடைப்பிறை நுதற்பொற் கொம்பனார் 
		குடங்கள்நா ணுறுமிளங் குவவுக் கொங்கைபோல் 
		உடம்பெலா மூடினா லுய்யலா மென்பார். 						38


		     மாயை கோயிலை அடைதல்

		இவ்வனங் கருத்தழிந் திளைஞர் மாழ்குறக் 
		கொவ்வையங் கனியிதழ்க் கோதை மாரொடு 
		மௌவலங் குழலெழில் மாயை யென்பவள் 
		அவ்வரன் கோயிலின் அருகு போயினாள். 						39


		 சிவிகையினின்று இறங்கிச் செல்லுதல்

		சிவிகையின் இழிந்துதன் சென்னி தாங்கிய 
		குவிகையி னொடுபுகாக் கோபு ரத்துள்வெண் 
		கவிகைய னெனுமம காரன் கன்னிகட் 
		செவிகையி னணிபர னெதிர்சென் றாளரோ. 						40


		     பூசனைபுரியத் தொடங்குதல் 

		வேண்டிய அனைத்தையும் ஏவல் மெல்லியர் 
		ஆண்டரு குறவமைத் தளிப்ப மாயைதான் 
		காண்டகு நுதல்விழிக் கடவுட் கன்புளம் 
		பூண்டனள் அருச்சனை புரிதல் மேயினாள். 						41


		இறைவற்கு நீராட்டத் தொடங்குதல் 

		ஆதிய வரன்முறை செய்த ருக்கியம் 
		ஆதிய கொடுபர னணிந்தி ருந்தபூ 
		ஆதிய களைந்துமந் திரம றைந்துநம் 
		ஆதியை மஞ்சன மாட்டல் மேயினாள்.						42


		  எண்ணெய் முதலிய பொருள்களால் 
				நீராட்டல்

		தயிலமுடன் ஆனிடத்தைந் தையமுத 
			நறுநெய்பால் தயிர்செ ழுந்தேன் 
		வயலினெழு கரும்புடைத்துக் கொள்சாறு 
			பழம்பிழிந்த மதுரச் சாறு 
		புயலளவு தாழையிள நீர்நறுஞ்சந் 
			தனக்குழம்பு போற்று நூலின் 
		இயலினமை தபனமிவை யொன்றன்பி 
			னொன்றுமுறை யிறைவற் காட்டி.						43


			முத்தால் அக்கதை இடுதல்

		சங்குலவு மென்கைநெடுஞ் சுடரிலைவேல் 
			விழிமாயை சாம்பற் பூத்து 
		மங்கலமா கியமேனி முழுவதுஞ்சந் 
			தனத்திரளை மலியச் சாத்தித் 
		திங்களெனும் ஒருசிறுகூன் முதுகிப்பி 
			யீன்றதெனச் சினவெள் ளேற்றான் 
		கங்கைமுடி மீதினில்வெண் ணிலவெ றிக்கு 
			நித்திலவக் கதையு மிட்டாள்.						44


		    மாலையணிந்து பூண்பல புனைதல்

		பிறைதவழு நெடுஞ்சடையெம் பெருமானைச் 
			சார்ந்துசர்ப்ப பிராந்தி மேவ 
		நறுமலர்மென் தொடைமாலை பலவனைந்து 
			கூர்ங்கோட்டு நால்வாய்ச் சீற்றக் 
		கறையடியீ ருரிசுமந்த திருமேனி 
			யழகுறநுண் கலைபு னைந்திட் 
		டிறைவனெலும் பணிநாண அவிர்மணிப்பூண் 
			பற்பலவு மெடுத்த ணிந்தாள். 						45


		     உணவு படைத்துப் பூசித்தல்

		நற்றூமங் கமழ்நித்ய கலியாணி 
			மணாளர்க்கு நானஞ் சாத்திப் 
		பெற்றூனங் கடிதலிலாக் கறிமருவு 
			போனகங்கள் பிச்சை யல்லால் 
		மற்றூணொன் றில்லாத பெருந்தகைக்கு 
			நிவேதித்து வண்டு கிண்டி 
		உற்றூதுங் கடிமலர்மென் குழல்மடவாள் 
			வெள்ளிலையும் உவந்த ளித்தாள்.						46


		   மற்றுமுள்ள சிறப்புக்கள் செய்தல்

		நறியபுகை செழுஞ்சுடர்மென் சிவிறியொடு 
			வெண்கவரி நாடும் ஆடி 
		நெறிமுறையி னெடுங்கடல்போல் இயமுழங்க 
			நின்றுதவி நிமலன் தன்னைப் 
		பிறைநுதலிவ் வகைபூசை புரிந்துதுதி 
			பலசெய்து பெருகு மன்பால் 
		மறைபுகலு மஞ்செழுத்தும் அறைந்துவலம் 
			வந்துமுனம் வணங்கிப் பின்னர்.						47


		     ஆடும் அரங்கை அடைதல்

		அன்பினுள முருகிவிழி சொரிநீரா 
			லெழுதியமை யழிந்தி ருப்பப் 
		பொன்புரையும் வடிவமயிர் பொடிப்பவெயர் 
			வாணுதலின் பொட்ட ழிந்து 
		மின்புரையு நெடுஞ்சடிலப் பொன்மலையி 
			னானந்த வெள்ள மூழ்கி 
		இன்பினடிப் பவளென்ன வந்துநட 
			நவிலரங்கில் எய்தி னாளால். 						48


		   ஆடுதற்கு ஏற்பக் கோலங் கொள்ளுதல்

		அரங்கினிடை நடநவிலுஞ் செயற்கேற்ப 
			உடையணிந்திட் டரும்பைவென்ற 
		குரும்பைமுலை யினைவம்பு கொண்டணிந்து 
			தவங்களெல்லாங் கொள்ளை கொள்ளும் 
		கருந்தடங்கண் மலர்க்கோதை சிற்றடியிற் 
			கைபுனையக் கற்ற மாதர் 
		சுரும்புமுரல் மல்லிகைமென் போதனைய 
			சிறுசதங்கை துளங்க ஆர்த்தார். 						49


		   பல்வகைப் பக்க இயங்கள் முழங்கல்

		மாயைமுலைக் கிணையெனவென் முன்தானும் 
			வந்ததென வலக்கைத் தாளம் 
		போயிடக்கைத் தாளமதைப் பொறாமையினால் 
			தாக்குதல்போற் புடைத் தொலிப்ப 
		வாயுரைக்கு மொழிபோலத் தண்ணுமைசெங் 
			கைகளால் வார்த்தை சொல்ல 
		மேயகலைப் பெண்விளர்ப்ப எழில்மாதர் 
			இசைபாட வீணை கொண்டு.						50


			  கூத்து இயற்றுதல்

		என்னொருகை யொடுமற்போர் புரிகவென 
			நிற்பவள்போ லிடையி னோர்கை 
		மன்னியுற வைத்தொருகை நீட்டியர 
			னெதிர்நின்று மாயை வல்லி 
		கன்னல்மதன் தனைவருக வெனவிளித்தல் 
			போல்தழங்கக் காற்ச தங்கை 
		பொன்னினியல் ஒருபாவை நடிக்கின்ற 
			தென்னநடம் புரிய லுற்றாள். 						51


		  தாளம் முதலியவைகட்குத் தக நடித்தல்

		தண்ணுமை விளங்கலுறு தாளமிசை யெல்லாம் 
		வண்ணமலர் மெல்லடி வழிச்சதியி னிற்பக் 
		கண்ணிணைகொள் பல்வளைய கைவழி நடப்பப் 
		பெண்ணமுத மன்னவள் பெயர்ந்தனள் நடித்தாள். 					52


			   சைகையோடு ஆடுதல்

		வாயுரைசெய் சொற்பொருள் மலர்க்கரம் உரைப்ப 
		மீயுயர் விசும்பினெழு மென்புளொலி யெல்லாம் 
		பாயொளி பஞ்சுறு பதத்துற மிதித்துப் 
		பேயொடு நடித்தஇறை பித்துற நடித்தாள்.						53


		மாயையின் கூத்துக்குத் தேவர்களும் மயங்கல்

		அந்தணனி ருங்கலை அணங்கினை உமிழ்ந்தான் 
		செந்திருவை நேமியிறை சீயென வெறுத்தான் 
		இந்திர னருஞ்சசியை யெண்ணிலன் மறந்தான் 
		பைந்தொடி நடிப்பநரர் பட்டதெ னுரைப்பாம்.						54


		மாயையைப் பார்க்க விரும்பிய மைந்தர்கள் செயல்

		பொன்னெயிலின் ஒன்றிய புழைக்குள் முகம்வைத்தும் 
		துன்னிமுனர் நின்றவவர் தோளிடை யிவர்ந்தும் 
		மின்னென நடம்புரியு மெல்லியல் மருங்குல் 
		என்னும்வெளி காணிய இடர்ப்படுவர் மைந்தர். 					55


			இளைஞர்கள் செயலற்றிருத்தல்

		பற்றுமன மோடியிரு பார்வையினு மெய்தி 
		மற்றைய புலன்களை மறந்து நடமாடும் 
		பொற்றொடியை நண்ணவுயர் பொன்மதி லுறுப்பின் 
		உற்றபொறி போலசை வொழிந்திளைஞன் நின்றார்.					56


		   கூத்து முடிந்தபின் சேடம் பெறுதல்

		இளங்கொடி மருங்குலவள் இன்னணம் நடிப்பக் 
		களங்கனியை வென்றமணி கண்டனை அருச்சித் 
		துளங்குளிர் அருந்தவன் உவந்திறை அணிந்த 
		வளங்கெழுமு சந்தமலர் ம