kandha purANam of kachchiyappa chivAchAriyAr
(in tamil script, unicode UTF-8 format)

கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய
கந்த புராணம்





உ
செந்திலாண்டவன் துணை
திருச்சிற்றம்பலம்

5. தக்ஷ காண்டம்

*** 21. அ டி மு டி தே டு ப ட ல ம் இங்கிது நிற்கமுன் இறைவன் வந்துழி அங்குற நின்றதோர் அமரர் தங்களுட் செங்கம லத்துறை தேவன் தக்கனாந் துங்கமில் மைந்தனை நோக்கிச் சொல்லுவான். 1 யாதுமுன் னுணர்ந்தனை யாது செய்தனை யாதவண் கருதினை யாரிற் பெற்றனை யாதுபின் செய்தனை யாது பட்டனை யாதிவண் பெற்றனை யாதுன் எண்ணமே. 2 பொன்றுதல் இல்லதோர் புலவர் யாவர்க்கும் வன்றிறல் முனிவரர் தமக்கும் வையமேல் துன்றிய அந்தணர் தொகைக்குந் துண்ணெனக் கொன்றுயிர் உண்பதோர் கூற்ற மாயினாய். 3 சீரையுந் தொலைத்தனை சிறந்த தக்கனாம் பேரையுந் தொலைத்தனை பேதை யாகிநின் ஏரையுந் தொலைத்தனை ஏவல் போற்றுநர் ஆரையுந் தொலைத்தனை அலக்கண் எய்தினாய். 4 நின்னுணர் வல்லது நிகரின் மேலவர் சொன்னதும் உணர்ந்திலை தொல்லை ஊழினால் இந்நிலை யாயினை இறையை எள்ளினாய் முன்னவன் உயர்நிலை முழுதுந் தேர்ந்தநீ. 5 இயற்படு வளம்பெறீஇ ஈசன் மேன்மைகள் அயர்த்தனை நின்னள வன்று மையறான் அயிர்த்தொகை தமக்கெலாம் உள்ள தாதலான் மயக்கினை அடைந்தனை மற்றென் செய்திநீ. 6 முற்றுணர் வெய்தியே முழுத ளித்திடப் பெற்றவெங் கண்ணினும் பெரிது மாமயக் குற்றன முற்பகல் உதுகண் டின்றுபோல் நெற்றியங் கண்ணினான் அருளின் நீக்கினான். 7 ஆதலின்அருளுடை அமல நாயகன் பாதம தருச்சனை பரிவிற் செய்குதி பேதுறும் இப்பவப் பெற்றி நீக்கியே போதமொ டின்னருள் புரிவன் என்றலும். 8 மைதிகழ் முகத்தினன் மற்ற தற்கிசைந் துய்திற முணர்த்தினை உங்கள் கண்ணுமுன் எய்திய மையலும் எம்பி ரானருள் செய்ததும் இயம்புதி தௌ¤தற் கென்னவே. 9 பொன்னிருஞ் சததளப் போதின் மீமிசை மன்னிய திசைமுகன் மதலை மாமுகம் முன்னுற நோக்கியே முந்துங் கூறினம் இன்னமும் அக்கதை இயம்பு வோமெனா. 10 (1. துங்கம் இல் - உயர்வு இழந்த. 3. பொன்றுதல் இல்லதோர் புலவர் - தேவர்கள். கூற்றம் - எமன். 4. சீர் - சகல சிறப்பு. ஏர் - அழகு. 6. மையல் - மயக்கம். 8. அமல நாயகன் - சிவபெருமான். பரிவு - அன்பு. பவம் - பாவம். போதம் - ஞானம். 9. மைதிகழ் மகத்தினன் - தக்கன்; (மை - ஆடு). 10. சததளப்போது - நூறிதழ்த் தாமரைப்பூ.) நாலுள திசைமுக நாதன் தொல்லைநாள் மாலொடு பற்பகல் மலைவு செய்துநாம் மேலதோர் பொருளென விமலன் வந்தருள் கோலம துன்னியே தொழுது கூறுவான். 11 வேறு பத்தினொடு நூறெதிர் படுத்தயுக நான்மை ஒத்தமுடி வெல்லையென தோர்பகல தாகும் அத்தகு பகற்பொழுதும் அந்தியொடு செல்ல நத்தமுறு நான்துயிலின் நண்ணுவன் அவ்வேலை. 12 வாளுமொடுங் கும்பரிதி மாமதி யொடுங்கும் நாளுமொடுங் குந்தமது நாளுமொடுங் குற்றே கோளுமொடுங் குங்குலிச பாணிமுதல் வானோர் கேளுமொடுங் கும்புவனி கேடுபடும் அன்றே. 13 மண்ணுலகில் ஆருயிர் வறந்திறுதி யாகும் விண்ணுறு பதங்களில் வியன்முனிவர் யாருந் துண்ணென வெருக்கொடு துளங்கினர்கள் சூழா எண்ணுசன லோகமிசை எய்துவர்கள் அந்நாள். 14 வாரிதிகள் நாற்றிறமும் எல்லையில் எழுந்தே ஆரியை தவஞ்செய்பதி ஆதியன அல்லாப் பாரினைய ருந்தியொரு பாகமதன் மேலும் ஓரெழு பிலத்துலகம் உண்டுலவும் அன்றே. 15 ஒண்டிகிரி மால்வரை உடுத்தநில முற்றுங் குண்டுறு பிலத்தினொடு கூடும்வகை வீட்டி அண்டருல குண்டுநிமிர்ந் தப்புறனு மாகி மண்டுபுன லேயுலகை மாற்றியிடும் அன்றே. 16 ஆனதொரு வேலையிலொ ராலிலையின் மீதே மேனிலவு தண்மதி மிலைந்தவன் மலர்த்தாள் தானகமு றுத்தியொர் தனிக்குழவி யேபோல் கானுறு துழாய்மவுலி கண்டுயிலு மாதோ. 17 கண்டுயிலு கின்றபடி கண்டுசன லோகத் தண்டுமுனி வோர்புகழ வாங்ஙனம் விழித்தே பண்டைநிலன் நேடவது பாதலம தாகக் கொண்டல்மணி மேனியனொர் கோலவுரு வானான். 18 (11. மலைவு - போர். 12. பத்தினொடு நூறு எதிர்படுத்த யுக நான்மை - ஆயிரஞ் சதுர் யுகங்கள். நத்தம் - இரவு. 13. வாள் - ஔ¤; இங்கு அக்கினி. நாள் - வாணான். கோள் - கிரகம். 14. சனலோகம் - இது ஒரு உலகம். 15. ஆரியை தவஞ்செய் பதி - உமாதேவி தவஞ்செய்த காஞ்சிபுரம். உண்ணுதல் - மூடிக்கொள்ளுதல். 16. ஒண்திகிரி மால்வரை - சக்கரவாளகிரி. குண்டு - ஆழம். 18. நேட - தேட. கோலவுரு - பன்றி வடிவு.) கோலமெனு மோருருவு கொண்டுபில மேகி ஞாலமெவ ணுற்றதென நாடியது தன்னை வாலிய வெயிற்றினிடை வல்லைகொடு மீண்டு மூலமென வேநிறுவி மொய்ம்பினொடு போனான். 19 அற்பொழுது நாலுகமொ ராயிரமும் ஏக எற்பொழுது தோன்றிய தியான்துயில் உணர்ந்தே கற்பனை இயற்றிய கருத்தினினை போழ்தின் நிற்புழி அடைந்தன நெடும்புணரி எல்லாம். 20 அருத்திகெழு பாற்கடல் அராவணையின் மீதே திருத்திகழும் மார்புடைய செம்மல்புவி தன்னை இருத்தினம் எயிற்றினில் எடுத்தென நினைத்தே கருத்தினில் அகந்தைகொடு கண்டுயிலல் உற்றான். 21 ஆனபொழு தத்தினில் அளப்பிலிமை யோரைத் தானவரை மானுடவர் தம்மொடு விலங்கை ஏனைய வுயிர்த்தொகையை யாவையும் அளித்தே வானகமும் வையகமும் மல்கும்வகை வைத்தே. 22 மன்னியலும் இந்திரனை வானரசில் உய்த்தே அன்னவன் ஒழிந்ததிசை யாளர்களை எல்லாம் தந்நிலை நிறுத்தியது தன்னைநெடி துன்னி என்னையல தோர்கடவுள் இன்றென எழுந்தேன். 23 துஞ்சலுறு காலைதனில் துஞ்சுமெழும் வேலை எஞ்சலி லுயிர்த்தொகுதி யாவுமெழும் யானே தஞ்சமெனை யன்றியொரு தாதையிலை யார்க்கும் விஞ்சுபொருள் யானென வியந்தெனை நடந்தே. 24 மல்லலுறு மேலுலகு மாதிரமும் ஏனைத் தொல்லுலகு மேருவொடு சுற்றுகடல் ஏழும் ஒல்லென விரைத்தெழும் உயிர்த்தொகையும் அல்லா எல்லையில் பொருட்டிறனும் யான்நெடிது நோக்கி. 25 இப்பொருள் அனைத்துமுனம் யான்பயந்த என்றால் ஒப்பிலை யெனக்கென உளத்திடை மதித்தேன் அப்பொழுதில் ஆரமுத ஆழியிடை யாழிக் கைப்புயல் அகந்தையொடு கண்டுயிலல் கண்டேன். 26 (19. எவண் - எவ்விடம். வாலிய - வெண்மையான. எயிறு - கொம்பு. மூலமெனவே - முன்போலவே. 20. அல்பொழுது - இராப்பொழுது. எல்பொழுது - பகற்பொழுது. 21. அருத்தி - விருப்பம். கருத்தினில் - உள்ளத்தினில். 24. துஞ்சல் - தூங்குதல். விஞ்சுபொருள் - உயர்ந்த பொருள். 25. மாதிரம் - திக்கு. 26. அமுத ஆழி - பாற்கடல். புயல் - திருமால்; ஆகுபெயர். துயிலல் - நித்திரை செய்தலை.) அன்றவனை மாலென அறிந்தனன் அறிந்துஞ் சென்றனன் அகந்தையொடு செய்யதிரு வைகும் மன்றன்மணி மார்பமிசை வண்கைகொடு தாக்கி இன்றுயில் உணர்ந்திடுதி என்றலும் எழுந்தான். 27 ஏற்றெழு முராரிதனை யாரையுரை என்றே சாற்றுதலும் யாமுனது தாதையறி யாய்கொல் நாற்றலைகொள் மைந்தவென நன்றென நகைத்துத் தேற்றிடினும் நீதுயில் தௌ¤ந்திலைகொ லென்றேன். 28 தந்தையென வந்தவர்கள் தாமுதவு கின்ற மைந்தர்கள் தமக்குரைசெய் வாசகம தென்ன முந்துற வெமக்கிது மொழிந்ததியல் பன்றால் எந்தையென வேநினைதி யாம்பிரம மேகாண். 29 உந்தியிலி ருந்துவரும் உண்மையுண ராமே மைந்தனென நீயெமை மனத்தினினை குற்றாய் இந்தன முதித்திடும் எரிக்கடவு ளுக்குத் தந்தையது வோவிது சழக்குரைய தன்றோ. 30 நின்னுடைய தாதையென நீயுனை வியந்தாய் அன்னதை விடுக்குதி அருந்தவ வலத்தான் முன்னமொரு தூணிடை முளைத்தனை யவற்றால் உன்னிலது வேமிக உயர்ந்தபொரு ளாமோ. 31 துய்யமக னாம்பிரு சொற்றசப தத்தால் ஐயிரு பிறப்பினை அடிக்கடி யெடுத்தாய் மெய்யவை யனைத்தையும் விதித்தனம் விதித்தெங் கையது சிவந்துளது கண்டிடுதி என்றேன். 32 வேறு அன்றவற் கெதிர்புகுந் தனையசொற் புகறலுங் குன்றெடுத் திடுகரக் கொண்டல்போல் மேனியான் நன்றெனச் சிரமசைஇ நகைசெயா வெகுளியால் பொன்றளிர்க் கரதலம் புடைபுடைத் துரைசெய்வான். 33 நச்சராப் பூண்டிடு நம்பனுன் சென்னியில் உச்சியந் தலையினை உகிரினாற் களைதலும் அச்சமாய் வீழ்ந்தனை யதுபடைத் தின்னமும் வைச்சிலாய் நன்றுநீ மற்றெமை தருவதே. 34 நேயமாய் முன்னரே நின்னையீன் றுதவிய தாயும்யா மன்றியுந் தந்தையும யாமுனக் காயதோர் கடவுள்யாம் அடிகள்யாம் மைந்தநம் மாயையால் இன்றிவண் மதிமயக் குறுதிகாண். 35 (29. பிரமம் - மேலான கடவுள். 30. இந்தனம் - விறகு. சழக்கு - அறியாமை. 31. முன்னமொரு தூணிடை முளைத்தனை - இது நரசிங்க அவதாரத்தைக் குறிப்பது. 32. பிருகு - ஒரு முனவர். ஐயிருபிறப்பு - பத்துப்பிறப்பு. 33. குன்று - கோவர்த்தனகிரி. அசைஇ - அசைத்து. 34. உகிர் - நகம். களைதல் - நீக்குதல். அது - அத்தலையை. வைச்சிலாய் - வைத்துக்கொண்டாய் இல்லை. 35. அடிகள் - குரு. மைந்த - மகனே!) பொன்னலா தாங்கொலோ பூணெலாம் இறைபுரி மன்னலா தாங்கொலோ மாநில மாநிலந் தன்னலா தாங்கொலோ தகுவதோர் வளமதில் என்னலா தாங்கொலோ எச்சரா சரமுமே. 36 எண்ணுவிப் போனுநான் எண்ணுகின் றோனுநான் கண்ணுதற் பொருளுநான் காண்டகும் புலனுநான் நண்ணுதற் கரியன்நான் நாரணக் கடவுள்நான் விண்ணகத் தலைவன்நான் வேதமும் பொருளுநான். 37 ஆதிநான் உருவுநான் அருவுநான் இருளுநான் சோதிநான் அத்தன்நான் தூயன்நான் மாயன்நான் யாதுநான் பூதநான் யாருநான் சங்கரன் பாதநான் அவனுநான் பரமெனும் பொருளுநான். 38 என்றுபற் பலவுரைத் திடுதலும் யானெதிர் சென்றுருத் திருவருஞ செருவினைப் புரிதுமேல் வென்றியுற் றவரரோ மேலையோர் எழுகென வன்றிறற் போர்செய்வான் வந்தனன் மாலுமே. 39 ஏற்றெழுந் தோர்சிலை ஏந்தியே வாங்கிமால் கூற்றிரும் படைமுதற் கொடியவெம் படையெலாம் மாற்றருந் தன்மையால் வல்லையுய்த் திடுதல்கண் டாற்றினன் குசைகளால் அனையவெம் படைதொடா. 40 வேறு ஆங்கவை யழிவுற அரியுந் தன்படை வாங்கினன் விடுத்தலும் வருதல் கண்டியான் பாங்கரின் நின்றவென் படையை அங்கையில் தாங்கிநின் றுய்த்தனன் தடுத்து மீண்டதே. 41 அப்படை மீண்டபின் ஆதி யாகிய ஒப்பருஞ் சிவனளித் துளது புங்கவர் எப்பெரும் படைக்குமோ ரிறைவ னாயது மைப்புயல் மேனிமால் வழுத்தி வாங்கினான். 42 மஞ்சன முதலிய மறுவில் பூசனை நெஞ்சுறு புலன்களின் நிரப்பி ஓச்சலும் எஞ்சலில் அமரர்கள் இரிய மேற்செலும் நஞ்சினுங் கொடிதென நடந்த வேலையே. 43 (39. செருவினை - போரினை. புரிதுமேல் - செய்தால். 40. கூற்று இரும்படை எமனுடைய பெரிய அஸ்திரம். குசைகளால் - தருப்பைகளால். 42. புங்கவர் எப்பெரும் படைக்கும் ஓர் இறைவனாயது - இது பாசுபதாஸ்திரம். 43. மஞ்சனம் - திருமஞ்சனம். நிரப்பி - செய்துமுடித்து.) முன்னமே எனக்கும்அம் முக்கண் நாயகன் அன்னதோர் படையளித் தருளி னானதை உன்னியே வழிபடீஇ ஒல்லை யுய்த்தனன் வன்னிமேல் வன்னிசெல் வண்ண மென்னவே. 44 ஒருதிறத் திருவரும் உஞற்றி யேவிய அரனருள் பெரும்படை தம்மில் ஆடல்செய் தெரிகனற் கற்றைகள் யாண்டுஞ் சிந்தியே திரிதலுற் றுலகெலாஞ் செற்று லாயவே. 45 அப்படை திரிதலும் அவைகள் வீசிய துப்புறழ் கொழுங்கனல் தொல்லை வானினும் இப்புவி மருங்கினும் ஈண்ட வானவர் வெப்புற விரிந்தனர் விதிர்ப்புற் றேங்குவார். 46 வீண்டனர் ஒருசிலர் வெதும்பி விம்மியே மாண்டனர் ஒருசிலர் வந்த நஞ்சமுண் டாண்டவர் கழலிணை அடைதும் யாமெனாக் காண்டகு கயிலையின் கண்ணுற் றார்சிலர். 47 காரெலாங் கரிந்தன ககனந் தன்னொடு பாரெலாம் எரிந்தன பௌவப் பாற்படு நீரெலாம் வறந்தன நிரந்த பல்லுயிர்ப் பேரெலாந் தொலைந்தன பின்னும் போர்செய்தேம். 48 இந்தவா றமர்புரிந் திட்ட காலையில் தந்தையார் அருளினால் தமியன் மாமுகம் வந்துநா ரதனெனும் மறுவில் மாமுனி சிந்தைசெய் தெமக்கிவை செப்பல் மேயினான். 49 நீர்முதல் நாமென நினைந்து கூறியே போர்முத லேசில புரிகின் றீர்கொலாம் ஓர்முதல் அன்றியே இல்லை உங்களில் ஆர்முதல் இருவரும் அன்ன பண்பினீர். 50 பொருசமர் கருதியே புகுந்த போழ்தினும் உரியதோர் படையல துலகந் தீப்பதோர் வெருவரும் பெரும்படை விடுத்திர் அப்படை அருளிய கடவுளை அயர்த்திர் போலுமால். 51 கடவுளை மறந்திரேல் கருதி நீர்பெறும் அடுபடை நாமமும் அயர்த்தி ரோவது நெடிதுநும் மனத்தினில் நினைந்து தேற்றுமின் விடுமினி அமரென விளம்பி மேலுமே. 52 (46. துப்பு உறழ் - பவளத்துண்டுகள் போல. 47. வீண்டனர் - விலகியோடினார்கள். 49. தந்தையார் - இங்குச் சிவபெருமான். 50. ஓர் முதல் அன்றியே இல்லை - ஒரு பிரமத்தினை அன்றி வேறு இல்லை. 52. அயர்த்திரோ - மறந்தீர்களோ.) வாதியா இன்னுநீர் மலைதி ரேயெனின் ஆதியாய் அருவுரு வான தோர்பொருள் சோதியாய் நடுவுறத் தோன்றுங் காண்டிரென் றோதியால் எமக்கிவை உணர்த்திப் போயினான். 53 போயினன் உரைத்தசொற் புந்தி கொண்டிலம் தீயென உருத்திகல் செருக்கு நீங்கலம் ஆயிர மாண்டுகா றமரி யற்றினம் மாயிரும் புவனமும் உயிரும் மாயவே. 54 இங்கிவை யாவையும் இறுதி யூழியின் அங்கியின் நடம்புரி அண்ணல் நோக்கியே தங்களில் இருவருஞ் சமர்செய் சின்றனர் புங்கவர் தாமெனும் புகழை வெ·கினார். 55 அறிவறை போயினர் அகந்தை உற்றனர் உறுவதொன் றுணர்கிலர் உண்மை யோர்கிலர் சிறுவரில் இருவருஞ் சீற்றப் போர்செயா இறுதிசெய் கின்றனர் உலகம் யாவையும். 56 ஈங்கிவர் செயலினை இன்னுங் காண்டுமேல் தீங்குறும் உலகுயிர் சிதைந்து வீடுமால் ஓங்கிய நந்நிலை உணர்த்தின் ஆயிடைத் தாங்கரும் வெஞ்சமர் தணிந்து நிற்பரால். 57 தம்மையே பொருளெனச் சாற்று கின்றதும் வெம்மைசேர் வெகுளியும் வெறுத்து வீட்டியே செம்மைசேர் மனத்தராய்த் திகழ்வர் தாமெனா எம்மையா ளுடையவன் எண்ணி னானரோ. 58 வேறு ஆன்றதோ ரளவை தன்னில் அடைந்தது மாகந் தன்னில் வான்றிகழ் பானாட் கங்குல் மதிபகல் தழுவு நென்னல் ஞான்றது தனில்யாங் கண்டு நடுக்குற நடுவ ணாகத் தோன்றினன் கனற்குன் றேபோல் சொல்லரும் பரத்தின் சோதி. 59 தோற்றிய செய்ய சோதி தொல்லமர் உழந்தி யாங்கண் மாற்றரும் படைக ளாக வழங்கிய இரண்டும் வௌவி ஆற்றருந் தன்மைத் தாக அணுகுறா தகன்று போகிச் சீற்றமுஞ் சமரும் நீங்கிச் சேணுற நோக்கி நின்றேம். 60 (53. மலைதிரேல் - போர் புரிவீராயின். ஓதியால் - ஞான உணர்ச்சியால். 54. புந்தி - மனம். மா இரும் - மிகப்பெரிய. 56. அறிவு அறை போயினர் - அறிவு அற்றுப் போயினர். 58. எம்மையாளுடையவன் - சிவபெருமான். 59. மாகந்தன்னில் - மாசி மாதத்தில். பானாட்கங்குல் மதிபகல் தழுவு நென்னல் ஞான்றதுதனில் - அமாவாசையின் முதனாளான சதுர்த்தசியின் நடு இராத்திரியில்; மகாசிவராத்திரியில். 60. சோதி - சோதி லிங்கம். சேணுற - வானத்தில் (அச்சோதிலிங்கத்தையே).) நிற்றலும் யாங்கள் கேட்ப நெடுவிசும் பிடையோர் வார்த்தை தெற்றென எழுந்த தம்மா சிறுவிர்காள் நுமது வன்மை பற்றலர் புரமூன் றட்ட பரமமே காண்பான் சோதி மற்றிதன் அடியும் ஈறும் வரன்முறை தேரு மென்றே. 61 கேட்டனம் அதனை நெஞ்சில் கிளர்ந்தெழு சீற்றம் யாவும் வீட்டினம் எனினும் பின்னும் விட்டிலம் அகந்தை தன்னைக் காட்டிய எமது முன்னோன் காண்பனும் வலியை யென்ன வீட்டுடன் விசும்பிற் சொற்றார் யார்கொலென் றெண்ணிப் பின்னும். 62 ஏணுற எதிர்ந்தி யாஞ்செய் இகலினுக் கிடையூ றாக நீணில மதனைக் கீண்டு நிமிர்ந்துவான் புகுந்து நீடு மாணுறு சோதி தானும் மறைமுனி உரைத்த வாறு காணிய வந்த தெம்மில் கடந்தவான் பொருள்கொல் என்றேம். 63 தீதறு காலின் வந்த செந்தழல் அன்றால் ஈது யாதுமொன் றறிதல் தேற்றாம் இருவரும் இதனை இன்னே ஆதியும் முடியும் நாடி யன்னது காண்டும் என்னா மாதவன் தானும் யானும் வஞ்சினம் இசைத்து மன்னோ. 64 நீடுவான் உருவிச் சென்று நிலனுற விடந்து புக்கும் ஓடிநாம் ஒல்லை தன்னில் உற்றிதற் கடியும் ஈறும் நாடினால் அவற்றில் ஒன்றும் நலம்பெற முன்னங் கண்டோர் பீடுயர் தலைவர் ஈதே துணிவெனப் பேசி நின்றேம். 65 முடியினைக் காண்பன் என்றே மொழிந்தனன் தமியன் ஏனை அடியினைக் காண்பன் என்றே அரியும்அங் கிசையா நின்றான் நடைபயில் மழலை ஓவா நாகிளஞ் சிறுவர் வானில் சுடர்மலி கதிரைக் கையால் தீண்டுவான் துணியு மாபோல். 66 எரியுறழ் தறுகட் செங்கண் இமிலுடை எருத்தம் யாரும் உருகெழு துழனிக் கூர்வாய் ஔ¢ளெயி றிலங்கு தந்தங் கருவரை யனைய மேனிக் கடுநடைக் குறுந்தாள் வௌ¢ளைக் குரமொடு கண்ணன் அன்றோர் கோலமாங் கோலங் கொண்டான். 67 ஒருபது நூற தாகும் யோசனை உகப்பி னோடு பருமையு மாகும் அந்தப் பகட்டுரு வாகி முன்னந் தரணியை இடந்து கீழ்போய்த் தடவியே துருவிச் சென்று நிறைபடு புவனம் யாவும் நீந்தியே போயி னானால். 68 (61. கேட்ப - கேட்கும்படி. சிறுவிர்காள் - சிறுவர்களே. காண்பான் - காணுமாறு. தேரும் - உணருங்கள். 63. ஏண் - வலிமை. 64. காலின் வந்த - வாயுவில் உண்டாகும். ஈது - இச்சோதி. யானும் - இங்குப் பிரமன். வஞ்சினம் - சபதம். 67. தறுகண் - அஞ்சாமை. கருவரை - கரியமலை. குறுந்தாள் - குறுகிய காலும். குரம் - குளம்பு. கண்ணன் - திருமால். கோலமாம் - பன்றியின். கோலம் - வடிவு. 68. உகப்பு - உயரம். பருமை - பருமன். பகடு - பன்றி. இடந்து - பிளந்து. நீந்தி - கடந்து.) பாதலம் நாடி அன்னான் படர்தலும் யானும் ஆங்கோர் ஓதிம வடிவ மாகி ஒல்லையில் எழுந்து மீப்போய் மேதகு விசும்பின் மேலாம் வியன்புவ னங்கள் நாடிப் போதலுஞ் சோதி முன்னம் போலமேல் போயிற் றம்மா. 69 முன்னமோ ரேன மாகி முரணொடு புவனி கீண்டு வன்னியாய் எழுந்த சோதி வந்ததோர் மூலங் காண்பான் உன்னியே போன மாலோன் ஊக்கியே செல்லச் செல்லப் பன்னெடுங் காலஞ் சென்ற பாதமுங் காணான் மாதோ. 70 நொந்தன எயிறு மேனி நுடங்கின நோன்மை யாவுஞ் சிந்தின புனலுண் வேட்கை சேர்ந்தன உயிர்ப்பி னோடும் வந்தன துயரம் போன வஞ்சினம் அகந்தை வீந்த முந்தையில் உணர்வு மால்பால் முழுதொருங் குற்ற தன்றே. 71 தொல்லையில் உணர்ச்சி தோன்றத் துண்ணெனத் தௌ¤ந்த கண்ணன் அல்லுறழ் புயலின் தோற்றத் தண்ணலங் களிற்றின் யாக்கை மெல்லவே தரிக்க லாற்றான் வீட்டவுங் கில்லான் மீண்டு செல்லவும் ஊற்ற மில்லான் சிவனடி சிந்தை செய்தான். 72 வேறு என்றும் உணர்வரிய எம்பெருமான் உன்றிருத்தாள் அன்றி அரணில்லை அவற்றைஅருச் சித்திடவும் பொன்றிய தென்வன்மை பொறுத்தி குறையடியேன் ஒன்று முணரேன்என் றுளம்நொந்து போற்றினனே. 73 ஆன பொழுதில் அமலன் திருவருளால் தேனு லவுதண்டார்த் திருமால் மிடலுடைத்தாய் ஏன வடிவோ டெழுந்துபுவிப் பால்எய்தி வானுறுசோ திக்கணித்தா வந்து வணங்கிநின்றான். 74 வேறு நின்றான் ஒருபால் நெடுமாலது நிற்க யான்முன் பின்றா வகையாற் பெருஞ்சூளிவை பேசி வானில் சென்றா யிரமாண்டு திரிந்து திரிந்து நாடிக் குன்றாத சோதிக் கொழுந்தின்தலை கூட லேன்யான். 75 மீளும் படியும் நினையேன் வினையேனும் மீளில் சூளும் பழுதா மதுவன்றித் துணிந்து முன்னம் மூளுஞ் சுடரின் முதல்கண்டரி மூர்த்தி யாவான் ஆளென்பர் என்னை அழிவெய்தும்இவ் வாற்றல் மன்னோ. 76 எந்நாள் வரைசெல் லினுஞ்செல்லுக இன்னும் விண்போய்ப் பொன்னார் முடிகண் டபின்அல்லது போக லேனென் றுன்னா வதுகா ணியபோதலும் உள்ளம் வெம்பி மன்னா வுயிரு முலைந்தாற்றலும் மாண்ட தன்றே. 77 (69. ஓதிமம் - அன்னப்பறவை. 70. ஏனம் - பன்றி. புவனி - பூமியை. ஊக்கி - முயற்சித்து. 72. அல்உறழ் - இருளை ஒத்த. களிற்றின்யாக்கை - பன்றிவுருவினை. ஊற்றம் - வல்லமை. 73. என்றும் - எந்நாளும். 74. மிடல் - வலிமை. புவிப்பால் - பூவுலகத்தை. 75. பெருஞ்சூள் - பெரிய சபதம். 77. எந்நாள் வரை செல்லினும் செல்லுக - எவ்வளவு காலம் சென்றாலும் செல்லட்டும்; எந்நாள் - எவ்வளவு காலம்; வரை - இச்சோதிமலை செல்லினும் - மேற்போனாலும்; செல்லுக - இன்னும் மேற்போகட்டும்.) கண்ணுஞ் சுழன்ற சிறைநொந்தன காலும் ஓய்ந்த எண்ணுந் திரிந்தத துபோதில் எழுந்த சோதி உண்ணின்ற சித்த ரெனவேபலர் ஒல்லை மேவி விண்ணின் தலைபோய் இதுவொன்று விளம்ப லுற்றார். 78 வானார் பரஞ்சோ தியின்ஈற்றினை வாரி தன்னுள் மீனார் தரவே திரிகின்றதொர் வௌ¢ளை அன்னந் தானா முணருஞ் சிறைபோகித் தளர்ந்து வன்மை போனலும் நாட வருகின்றது போலும் அம்மா. 79 அன்னந் தனக்கீ தறிவின்மைய தாகும் அல்லால் பின்னொன் றுளதோ துணிவுற்றதொர் பெற்றி நோக்கின் இன்னுஞ் சிறிது பொழுதேகின் இறக்கும் இந்த மன்னுஞ் சுடரைச் சிவனென்று மனங்கொ ளாதோ. 80 மாலென் பவனும் நிலங்கீண்டனன் வல்லை யேகி மூலந் தெரிவான் உணராமல் முரணும் நீங்கிச் சீலங் குறுகச் சிவனேசர ணென்று பைய ஞாலந் தனில்வந் தனல்வெற்பினை நண்ணி நின்றான். 81 முந்துற் றிதனை அருள்செய்திடு மூர்த்தி தானே சிந்தைக்குள் மாசு தனைத்தீர்த்தருள் செய்யின் உய்யும் இந்தப் பறவை யெனயானும் இதனை நாடிப் புந்திக்குள் மைய லொழிந்தேயவர்ப் போற்றி செய்தேன். 82 ஈசன் அருளால் இவைகூறினர் ஏக லோடும் ஆசின் வழியாம் அகந்தைத்திற னாதி யாய பாசங் களைவீட் டியரன்புகழ பன்னி ஏத்தி நேசங் கொடுபூ சனைசெய்ய நினைந்து மீண்டேன் 83 வேறு வந்துகண்ணன் தனையணுகி வான்பொருள்யா மென்றிகலி முந்துறுவெஞ் சமர்இயற்றி முனிமொழியும் உணர்ந்திலமால் தந்தைவர வறியாமல் தாள்முடியுந் தேடலுற்றேம் அந்தமுறும் வேலைதனில் அவன்அருளால் அவற்புகழந்தேம். 84 கீண்டுநில னிருவிசும்பிற் கிளர்ந்தும்அடி முடியுணரேம் மீண்டும்அவன் தன்அருளால் மிடல்பெற்று வந்தனமால் ஈண்டுசிவன் தனைவழிபட் டிருவரும்அன் னவன்தோற்றங் காண்டுமென யானுரைப்பக் கண்ணனும்அங் கதற்சிசைந்தான். 85 (79. ஈற்றினை - முடிவினை. வாரி - நீர். ஆர்தா - அடைய. 80. மூலம் - அடி. பைய - மெதுவாக. 83. ஆசின் வழியாம் - அஞ்ஞானத்தின் வழியாய் உண்டாகும்.) இருவரும்அச் சிவனுருவை இயல்முறையால் தாபித்து விரைமலர்மஞ் சனஞ்சாந்தம் விளக்கழலா தியவமைத்துப் பொருவருபூ சனைபுரிந்து போற்றிசெய்து வணங்குதலும் எரிகெழுசோ திக்கணித்தா எந்தைஅவண் வந்தனனே. 86 மைக்களமும் மான்மழுவும் வரதமுடன் அபயமுறும் மெய்க்கரமும் நாற்புயமும் விளங்குபணிக் கொடும்பூணுஞ் செக்கருறு மதிச்சடையுஞ் சேயிழையோர் பாகமுமாய் முக்கணிறை யாங்காண முன்னின்றே யருள்புரிந்தான். 87 அவ்விடையா மிருவர்களும் அமலன்றன் அடிவணங்கிச் செவ்விதின்நின் றவன்அருளில் திளைத்திதனைச் செப்பினமால் மெய்வகையாம் அன்பின்றி விளங்காநின் னியம்மறையும் இவ்வகையென் றுணராதே யாங்காணற் கௌ¤வருமோ. 88 வேறு புந்தி மயங்கிப் பொருங்காலை யெம்முன்னில் செந்தழலின் மேனிகொடு சென்றருளித் தொல்லறிவு தந்து நினையுணர்த்தித் தாக்கமரும் நீக்கினையால் எந்திரம்யாம் உள்நின் றியற்றுகின்றாய் நீயன்றோ. 89 உன்னை உணரும் உணர்வுபுரிந் தாலுன்னைப் பின்னை யுணர்வேம் பெருமசிறி யேஞ்செய்த புன்னெறியை யெல்லாம் பொறுத்தியால் தஞ்சிறுவர் என்ன செயினும் இனிதன்றோ ஈன்றவர்க்கே. 90 இன்னாத் தகைசேர் இரும்பினைவல் லோன்இலங்கும் பொன்னாக் கியபரிசு போல எமையருளி மன்னாக் கினையயர்த்தோம் மற்றுனையும் யாங்களுயிர் தொன்னாட் பிணித்த தொடர கற்றவல் லோமோ. 91 வேறு என்றி யம்பியாம் ஏத்தலும் எதிருற நோக்கிக் குன்ற வில்லுடை யொருவன்நீர் செய்தன குறியா ஒன்றும் எண்ணலீர் நும்பெரும் பூசனை உவந்தாம் அன்று மக்கருள் பதந்தனை இன்னும்யாம் அளித்தேம். 92 வேண்டு நல்வரங் கேண்மின்நீர் என்றலும் விசும்பில் தாண்ட வம்புரி பகவநின் சரணமே அரணாப் பூண்டி டுந்தலை யன்பருள் என்றலும் புரிந்து காண்ட குந்தழற் சோதியுள் இமைப்பினிற் கலந்தான். 93 (86. இயல் முறை - இலக்கண முறைப்படி. விளக்கு - தீபம். அழல் - தூபம். எந்தை - எம்பெருமான். 87. பணிக் கொடும் பூண் - அரவகுண்டலம். சேயிழை - உமாதேவியர். யாம் - நாங்கள். 89. நினை உணர்த்தி - உன்னையும் அறிவித்து. 90. பெரும - பெருமானே! ஈன்றவர்க்கு - பெற்றவர்க்கு. 91. இன்னாத் தகைசேர் - கொடுந்தன்மை வாய்ந்த. மன்ஆக்கினை - படைத்தல் காத்தல் தொழில்களில் தலைமை ஆக்கினை. தொடர் - பாசம். 93. விசும்பில் - சிதாகாயவௌ¤யில். தாண்டவம் - ஆனந்தத் தாண்டவம். பகவ - பகவனே! கலத்தல் - சோதியோடு சோதியாதல்.) கலந்த காலையில் யாங்கள்முன் தொழுதெழுங் காலைச் சலங்கொள் பான்மையின் முன்னுறத் தேடுவான் தழலாய் மலர்ந்த பேரொளி மீமிசை சுருங்கியே வந்தோர் விலங்க லாகிய துலகெலாம் பரவியே வியப்ப. 94 அன்ன தாஞ்சிவ லிங்கரூப ந்தனை அணுகி முன்ன மாகியே மும்முறை வலஞ்செய்து முறையால் சென்னி யால்தொழு தேத்தியெம் பதங்களிற் சென்றேம் பின்னர் எந்தையை மறந்திலம் போற்றுதும் பெரிதும். 95 அரியும் யானும்முன் தேடும்அவ் வனற்கிரி யனல கிரியெ னும்படி நின்றதால் அவ்வொளி கிளர்ந்த இரவ தேசிவ ராத்திரி யாயின திறைவற் பரவி யுய்ந்தனர் அன்னதோர் வைகலிற் பலரும். 96 ஆத லால்அவ னருள்பெறின் அவனியல் அறியும் ஓதி யாகுவர் அல்லரேல் பலகலை உணர்ந்தென் வேத நாடியென் இறையும்அன் னவன்நிலை விளங்கார் பேதை நீரரும் ஆங்கவர் அல்லது பிறரார். 97 மோக வல்வினை யாற்றியே பவத்திடை மூழ்கும் பாகர் அல்லவர்க் கெய்திடா தவனருள் பவமும் போக மாற்றிடு தருமமும் நிகர்வரு புனிதர்க் காகும் மற்றவன் அருள்நிலை பாகராம் அவரே. 98 நீயுந் தொல்வினை நீங்கலின் எம்பிரான் நிலைமை ஆயுந் தொல்லுணர் வின்றுவந் தெய்திய தவனே தாயுந் தந்தையுங் குரவனுங் கடவுளுந் தவமும் ஏயுஞ் செல்வமும் அனையவற் சார்தியா லென்றான். 99 (94. சலம் - தீராக் கோபம். விலங்கல் ஆகியது - மலைவடிவாயது. 96. அனற்கிரி - அக்கினிமலை. அனலகிரி - அருணாசலம்; திருவண்ணாமலை. 98. பவமும் போகமாற்றிடு தருமமும் நிகர்வரு புனிதர் - இருவினையொப்பு வாய்ந்த புனிதர். அவன் அருள்நிலை பாகர் - சத்திநிபாதத்து உத்தமர். 99. தொல்வினை - பழைய இருவினை. அவனே - அச்சிவபெருமானே.) ஆகத் திருவிருத்தம் - 1661 - - - 22. த க் க ன் சி வ பூ சை செ ய் ப ட ல ம் மருமலர் அயனிவை வகுப்ப நாடியே புரிகுவன் அ·தெனப் புகன்று தாதைதாள் பரிவொடு சிறுவிதி பணிந்து காசியாந் திருநகர் அதனிடைச் சேறல் மேயினான். 1 சென்றனன் காசியில் சிறந்த தொல்மணி கன்றிகை ஒருபுடை கங்கை வேலையில் பொன்றிகழ் செஞ்சடைப் புனிதற் காலயம் ஒன்றுமுன் விதித்தனன் உணர்வு சேர்ந்துளான். 2 அருளுரு வாகியே அகில மாவிகள் தருவதுங் கொள்வது மாகித் தாணுவாய் உருவரு வாகிய ஒப்பில் பேரொளித் திருவுரு வொன்றினைச் சிவனுக் காக்கினான். 3 நாயகன் மொழிதரு நவையில் ஆகமம் மேயின முறைதெரி விரத னாகியே பாய்புனல் புனைசடைப் பரமன் தாள்மலர் ஆயிரம் யாண்டுகா றருச்சித் தேத்தினான். 4 அருச்சனை புரிதலும் அயன்தன் காதலன் கருத்துறும் அன்பினைக் கண்டு கண்ணுதல் பொருக்கென வௌ¤ப்படப் புகழ்ந்து பொன்னுலாந் திருக்கழல் வணங்கினன் தௌ¤வு பெற்றுளான். 5 அகந்தைய தாகியே ஐய நின்தனை இகழ்ந்தனன் என்கணே எல்லை யில்பவம் புகுந்தன அவையெலாம் போக்கி நின்னிடைத் தகும்பரி சன்பினைத் தருதி யால்என்றான். 6 ஆயவை தொலைத்தளித் தவன்தன் பூசையின் நேயம தாகியே நிமலன் தன்கண நாயக இயற்கையை நல்கி வல்லையில் போயினன் தக்கனும் புனிதன் ஆயினான். 7 வேறு கங்கைச் சடையான் தனைத்தக்கனக் காசி தன்னில் அங்கர்ச் சனைசெய் திடப்போந்துழி அம்பு யன்மால் துங்கத் திமையோர் இறையாவருஞ் சூர மாதர் சங்கத் தவரு மகவெல்லை தணந்து போனார். 8 போகுற் றவர்கள் அனைவோரும் பொருவில் சீர்த்தி வாகுற்ற வீரன் சயந்தன்னை வழுத்தித் தங்கட் காகுற்ற தொல்லைத் தலந்தோறும் அடைந்து மாதோர் பாகத் தமலன் தனைப்பூசனை பண்ண லுற்றார். 9 ஆரா தனைகள் புரிந்தேஅனை வோரும் எங்கும் பேரா துநிற்கும் பெருமானருள் பெற்று மெய்யில் தீராத சின்னங் களுந்தீர்ந்து சிறந்து தத்த மூரா கியதோர் பதமேவி உறைத லுற்றார். 10 மேதக்க தக்கன் மகந்தன்னில் விரைந்து புக்காங் கேதத் தடிசில் மிசைந்தேபொருள் யாவும் ஏற்றுப் பூதத் தரின்மாய்ந் தெழுந்தேதம் புரிகள் தோறும் பேதைத் தொழில்அந் தணர்யாரும் பெயர்ந்து போனார். 11 என்றிங் கிவைகள் குரவோன்இசைத் திட்டல் கேளா நன்றென்று சென்னி துளக்குற்று நனிம மகிழ்ந்து குன்றின் சிறைகொய் தவன்தந்த குரிசில் உள்ளத் தொன்றுங் கவலை இலனாகிஅவ் வும்ப ருற்றான். 12 (1. மலர் - இங்குத் தாமரை. சிறுவிதி - தக்கன். காசியாம் திருநகர் - அழகிய காசிநகர். 2. மணிகன்றிகை - மணிகர்ணிகை. 3. அகிலம் ஆவிகள் - உலகினையும் உயிர்களையும் கொள்வதும் - அழிப்பதும். திருவுரு ஒன்று - சிவலிங்கம். 4. நாயகன் - சிவன். தெரி - தெரிந்த. விரதன் - சிவதீட்சா விதரத்தினையுடையவன். 6. பவம் - பாவம். 7. கணநாயக இயற்கையை - கணநாதத் தன்மையினை. 8. துங்கத்து - மிகவுயர்ச்சி வாய்ந்த. சூரமாதர் - தேவமாதர். 9. வாகு வலிமை. வீரன் - வீரபத்திரன். 10. தீராத சின்னங்கள் - நீங்காத வடுக்கள். 12. குரவோன் - வியாழ பகவான். குன்றின் சிறை கொயதவன் தந்தகுரிசில் - இந்திர குமாரனாகிய சயந்தன்.) ஆகத் திருவிருத்தம் - 1673 - - - 23. க ந் த வி ர த ப் ப ட ல ம் உரைசெறி மகவான் செம்மல் உம்பரில் இருப்ப இம்பர் முரசெறி £னை வேந்தன் முசுகுந்தன் என்னும் வள்ளல் விரைசெறி நீபத் தண்டார் வேலவன் விரதம் போற்றித் திரைசெறி கடற்பா ராண்ட செயல்முறை விளம்ப லுற்றாம். 1 முந்தொரு ஞான்று தன்னில் முசுகுந்தன் வசிட்டன் என்னும் அந்தணன் இருக்கை எய்தி அடிமுறை பணிந்து போற்றிக் கந்தவேள் விரத மெல்லாங் கட்டுரை பெரியோய் என்ன மைந்தநீ கேட்டி யென்னா மற்றவை வழாது சொல்வான். 2 எள்ளருஞ் சிறப்பின் மிக்க எழுவகை வாரந் தன்னுள் வௌ¢ளிநாள் விரதந் தானே விண்ணவர் உலகங் காத்த வள்ளல்தன் விரத மாகும் மற்றது புரிந்த மேலோர் உள்ளமேல் நினைந்த வெல்லாம் ஒல்லையின் முடியும் அன்றே. 3 பகிரதன் என்னும் வேந்தன் படைத்தபா ருலகை யெல்லாம் நிகரறு கோரன் என்னும் நிருதனங் கொருவான் வௌவ மகவொடு மனையுந் தானும் வனத்திடை வல்லை ஏகிப் புகரவன் தனது முன்போய்த் தன்குஆஆ புகன்று நின்றான். 4 (1. மகவான் செம்மல் - சயந்தன். இம்பர் - இவ்வுலகம். நீபம் - கடம்பு. வேலவன் விரதம் - முருகக் கடவுளுக்குரிய சஷ்டிவிரதம். 3. எழுவகை வாரந் தன்னுள் - ஞாயிறு முதலிய ஏழு நாட்களில். வௌ¢ளி நாள் விரதம் - சுக்கிர வார விரதம். 4. கோரன் என்னும் திருதன் - கோரன் என்னும் அசுரன். புகர் - சுக்கிரன்.) பார்க்கவன் என்னும் ஆசான் பகீரதன் உரைத்தல் கேளா வேற்கரன் மகிழு மாற்றால் வௌ¢ளிநாள் விரதந் தன்னை நோற்குதி மூன்றி யாண்டு நுங்களுக் கல்லல் செய்த மூர்க்கனும் முடிவன் நீயே முழுதுல காள்வை என்றான். 5 நன்றென வினவி மன்னன் ஞாயிறு முதலாம் நாளில் ஒன்றெனும் வௌ¢ளி முற்றும் உணவினைத் துறந்து முன்பின் சென்றிடும் இரண்டு நாளும் திவாவினில் அடிசில் மாந்தி இன்றுயில் அதனை நீத்தி யாண்டுமூன் றளவு நோற்றான். 6 நோற்றிடும் அளவில் ஐயன் நுதியுடைச் செவவேல் வந்து மாற்றலன் உயிரை யுண்டு வல்லையின் மீண்டு செல்லப் போற்றியே பகீர தப்பேர்ப் புரவலன் தன்னூ ரெய்தி ஏற்றதொல் லரக பெற்றான் இன்னுமோர் விரதஞ் சொல்வாம். 7 வாரிச மலர்மேல் வந்த நான்முகன் மதலை யான நாரத முனிவன் என்போன் உலத்தகு விரத் மாற்றி ஓரெழு முனிவர் தம்மில் உயர்ந்திடு பதமும் மேலாஞ் சீரொடு சிறப்பும் எய்தச் சிந்தனை செய்தான் அன்றே. 8 நூற்படு கேள்வி சான்ற நுண்ணிய உணர்வின் மிக்கோன் பார்ப்பதி உதவு முன்னோன் பதமுறை பணிந்து போற்றி ஏற்புறு முனிவ ரான எழுவகை யோரில் யானே மேற்பட விரத மொன்றை விளம்புதி மேலோய் என்றான். 9 முன்னவன் அதததக் கேளா முழுதருள் புரிந்து நோக்கி அன்னது பெறுதி திண்ணம் ஆறுமா முகத்து நம்பி பொன்னடி வழிபா டாற்றிப்பொருவில்கார்த் திகைநாள் நோன்பைப் பன்னிரு வருடங் காறும் பரிவுடன் புரிதி என்றான். 10 நாரதன் வினவி ஈது நான்புரிந் திடுவன் என்னாப் பாருல கதனில் வந்து பரணிநாள் அபரா ணத்தில் ஓர்பொழு துணவு கொண்டே ஒப்பில்கார்த் திகைநாள் தன்னில் வீரவேல் தடக்கை அண்ணல் விரதத்தை இயற்ற லுற்றான். 11 தூசொடு கயத்தின் மூழ்கித் துய்யவெண் கலைகள் சுற்றி ஆசறு நியம முற்றி ஆன்றமை புலத்த னாகித் தேசிகன் தனது பாதஞ் சென்னிமேற் கொண்டு செவ்வேள் பூசனை புரிந்திட் டன்னான் புராணமும் வினவி னானால். 12 (5. ஆசான் - அசுரகுரு. வௌ¢ளிநாள் விரதந்தன்னை மூன்று யாண்டுநோற்குதி - மூன்று வருடம் சுக்கிரவார விரதந்தனை அனுட்டிக்கக் கடவாய். 6. வௌ¢ளி முற்றும் - வௌ¢ளிக்கிழமை முழுவதும். முன்பின் சென்றிடும் இரண்டு நாளும் - வியாழனும் சனியும் ஆகிய இரு தினங்களிலும். திவாவினில் - பகலில் மாத்திரம். 7. ஐயன் - முருகன். மாற்றலன் - இங்குக் கோரன் என்னும் அசுரன். 8. வாரிச மலர் - தாமரை மலர். ஓர் எழு முனிவர் - சத்தவிருடிகள். 9. பார்ப்பதி - பார்வதி. முன்னோன் - விநாயகன். மேற்பட - உயர்ந்தோனாக. 10. ஆறு மாமுகத்து நம்பி - சண்முகக்கடவுள். கார்த்திகை நாள் நோன்பு - கார்த்திகை விரதம். 11. பரணி நாள் - பரணி நட்சத்திரம். அபராணத்தில் - பிற்பகலில். 12. தூசொடு - கட்டிய ஆடையுடன். கயம் - குளம். வெண்கலை - வௌ¢ளை வஸ்திரம்.) கடிப்புனல் அள்ளித் தன்னோர் கைகவித் துண்டு முக்காற் படுத்திடு தருப்பை என்னும் பாயலிற் சயனஞ் செய்து மடக்கொடி மாதர் தம்மை மறலியா மதித்து வள்ளல் அடித்துணை யுன்னிக் கங்குல் அவதியு முறங்கா துற்றான். 13 அந்தநாள் செல்லப் பின்னர் உரோகிணி யடைந்த காலைச் சந்தியா நியமம் எல்லாஞ் சடக்னெ முடித்துக் கொண்டு கந்தவேள் செம்பொற் றண்டைக் கான்முறை வழிபட் டேத்தி வந்தமா தவர்க ளோடும் பாரணம் மகிழ்ந்து செய்தான். 14 பாரணம் விதியிற் செய்தோன் பகற்பொழு துறங்கு மாயின் ஆரண மறையோர் தம்மில் ஐம்பதிற் றிருவர் தம்மைக் காரண மின்றிக் கொன்ற கடும்பழி யெய்தும் என்னா நாரதன் மாயம் வல்லோன் இமைத்திலன் நயனஞ் சற்றும். 15 விழியொடும் இமைகூ டாமே வெய்யவன் குடபால் வீழும் பொழுதள விருந்து மற்றைப் புறத்துள செயலும் போற்றி அழிவறு விரதம் இவ்வாறு ஆறிரு வருட மாற்றி எழுவகை முனிவோ ருக்கும் ஏற்றமாம் பதத்தைப் பெற்றான். 16 இந்தநல் விரதந் தன்னை ஈண்டொரு மறையோன் நோற்று முந்திய மனுவே யாகி முழுதுல கதனை ஆண்டான் அந்தணன் ஒருவன் பின்னும் அவ்விர தத்தைப் போற்றிச் சிந்தையின் நினைந்தாங் கெய்தித் திரிசங்கு வாகி யுற்றான். 17 ஈங்கொரு மன்னன் வேடன் இருவரும் நோற்று வண்மை தாங்கிய அந்தி மானே சந்திமான் என்று பேராய் வீங்குநீர் உடுத்த பாரை மேலைநாட் புரந்தார் என்ப ஆங்கவர் பின்னாள் முத்தி அடைவது திண்ணம் அம்மா. 18 இப்படி ஆரல் நாளில் விரதத்தை இயல்பின் நோற்று முப்புவ னத்தின் வேண்டும் முறைமையை யடைந்த நீரார் மெய்ப்படு தொகையை யாரே விளம்புவர் ஈதே யன்றி ஒப்பரும் விரதம் வேறும் ஒன்றுள துரைப்பக் கேண்மோ. 19 வெற்பொடும் அவுணன் தன்னை வீட்டிய தனிவேற் செங்கை அற்புதன் தன்னைப் போற்றி அமரரும் முனிவர் யாருஞ் சொற்படு துலையின் திங்கட் சுக்கில பக்கந் தன்னில் முற்பக லாதி யாக மூவிரு வைகல் நோற்றார். 20 (13. மறலியா மதித்து - யமனாகக் கருதி. உன்னி - நினைத்து. 14. பாரணம் - விரத முடிவில் உண்ணுதல். 15. ஐம்பதிற்று இருவர் - நூறுபேர். கடும் பழி - கொடிய பழி. 16. குடபால் - மேற்கு. ஆறு இரு வருடம் - பன்னிரண்டு வருடம். 17. இந்த நல் விரதம் - நல்ல இக் கார்த்திகை விரதம். 19. ஆரல் நாள் - கார்த்திகை நாள். 20. வெற்பு - கிரவுஞ்ச மலை. அவுணன் - தாரகன். துலையின் திங்கள் - ஐப்பசிமாதம். முற்பகல் ஆதியாக மூவிரு வைகல் - பிரதமை முதலாக ஆறுதினம்.) முந்திய வைக லாதி மூவிரு நாளுங் காலை அந்தமில் புனலின் மூழ்கி ஆடையோ ரிரண்டு தாங்கிச் சந்தியிற் கடன்கள் செய்து தம்பவிம் பங்கும் பத்திற் கந்தனை முறையே பூசை புரிந்தனர் கங்குற் போதில். 21 நிறைதரு கட்டி கூட்டி நெய்யினாற் சமைக்கப் பட்ட குறைதவிர் மோத கத்தைக் குமரநா யகற்க ருத்திப் பிறவுள விதியுஞ் செய்து பிரான்திருப் புகழ்வி னாவி உறுபுனல் சிறிது மாந்தி உபவசித் திருந்தார் மாதோ. 22 ஆரண முனிவர் வானோர் அங்கதன் மற்றை வைகல் சீரணி முருக வேட்குச் சிறப்பொடு பூசை யாற்றிப் பாரணம் விதியிற் செய்தார் பயிற்றுமிவ் விரதந் தன்னால் தாரணி அவுணர் கொண்ட தம்பதத் தலைமை பெற்றார். 23 என்றிவை குரவன் செப்ப இறையவன் வினவி எந்தாய் நன்றிவை புரிவன் என்னா நனிபெரு வேட்கை யெய்தி அன்றுதொட் டெண்ணில் காலம் அவ்விர தங்கள் ஆற்றிக் குன்றெறி நுதிவேல் ஐயன் குரைகழல் உன்னி நோற்றான். 24 வேறு ஆன காலையில் ஆறுமா முகமுடை அமலன் கோன வன்தனக் கருளுவான் மஞ்ஞைமேல் கொண்டு தானை வீரனும் எண்மரும் இலக்கருஞ் சார வானு ளோர்களுங்கணங்களுஞ் சூழ்வுற வந்தான். 25 வந்து தோன்றலும் மன்னவர் மன்னவன் மகிழ்ந்து கந்த வேளடி பணிந்தனன் கைதொழூஉப் பரவ அந்த மில்பகல் விரதங்கள் ஆற்றினை அதனால் எந்த நல்வரம் வேண்டினை அதுபுகல் என்றான். 26 என்ற காலையில் முசுமுக முடையவன் எந்தாய் நன்று பாரெலா மெனதுசெங் கோலிடை நடப்பான் வென்றி மொய்ம்பினன் ஆதியாம் வீரரை யெல்லாம் ஒன்று கேண்மையின் துணைவராத் தருதியென் றுரைத்தான். 27 மன்னன் இவ்வஆஆ வேண்டுகோள் வினவுறா வள்ளல் அன்ன வாறுனக் குதவுவ மென்றருள் புரிந்து மின்னல் வாட்படை வீரமொய்ம் பன்முதல் விளம்புந் துன்னு தானையந் தலைவரை நோக்கியே சொல்வான். 28 நோற்றல் கூடிய முசுகுந்தன் நும்மினும் எம்பால் ஏற்ற மேதகும் அன்பினான் எழுகடற் புவியும் போற்ற வைகுவான் நீவிர்கள் ஆங்கவன் புடைபோய் ஆற்றல் சான்றிடு துணைவராய் இருத்திர்என் றறைந்தான். 29 (21. தம்பம் - அக்கினி. பிம்பம் - உருவம். கும்பம் - கலசம். 22. கட்டி - வெல்லக்கட்டி. திருப்புகழ் - அழகிய புகழ். வினாவி - கேட்டு. 23. ஆரணம் - வேதம். அதன் மற்றை வைகல் - அந்தச் சஷ்டியின் மறுதினம். 24. குரவன் - இங்கு வசிட்டன். இறையவன் - முசுகுந்தன். 25. மஞ்ஞை - மயில். தானை வீரன் - வீரவாகு. 26. அந்தமில் பகல் - அளவற்றகாலம். 27. முசுமுகமுடையவன் - குரங்கின் முகத்தினையுடைய முசுகுந்த மன்னன். 29. நோற்றல் கூடிய - சஷ்டி விரதத்தை நோற்று முற்றுப்பெற்ற.) வேறு முழுதருட் புரிதருங் கடவுள்சொல் வினவியே முடிவ தில்லாச் செழுமதித் தண்குடைச் சூர்குலந் தனையடுந் திறலி னேங்கள் பழிபடப் பானுவின் வழிவருஞ் சிறுமகன் பாங்க ராகி இழிதொழில் புரிகிலோ மெனமறுத் துரைசெய்தார் யாரும்வீரர். 30 ஞானநா யகனவர் மொழிதனைத் தேர்ந்துநம் முரைம றுத்தீர் ஆனதோர் பான்மையால் நீவிர்மா னுடவராய் அவனி மன்னன் சேனையா கிப்புறம் போற்றியே பற்பகற் சேர்திர் பின்னர் வானுளோர் புகழவே நோற்றுநம் பக்கலில் வருதி ரென்றான். 31 ஐயன்வான் மொழியினால் வீரமொய்ம் புடையவ னாதி யானோர் மையல்மா னுடவராய்த் தொல்லைநா ளுடையதோர் வன்மை நீங்கி மெய்யெலாம் வியர்வுறப் பதைபதைத் தேங்கியே விழும மிக்குப் பொய்யரேம் பிழைபொறுத் தருடியா லென்றுபொன் னடிப ணிந்தார். 32 கமலமார் செய்யசே வடியின்மேற் றாழ்ந்துகை தொழுது போற்றிக் குமரவேள் விடைதனைப் பெற்றுமா னவரெலாங் கொற்ற மன்னன் தமர்களாய் ஒழுகினார் நேமியம் படையுடைத் தரும மூர்த்தி அமரர்கோன் இளவலாய் ஆங்கவன் பின்செலும் அமைதி யேபோல்.33 ஆயதோர் காலையின் முசுமுகத் திறையவன் ஆடல் வேற்கை நாயகன் பொற்பதம் வந்தியா நிற்பநல் லருள்பு ரிந்தே பாயபொன் சுடர்மணித் தோகையம் புரவியும் படைக ளாகும் மாயிரும் பூதருந் தானும்அந் நிலைதனில் மறைத லுற்றான். 34 வேறு மறைந்தனன் குமரன் ஏக மன்னவன் மகிழ்ச்சி கொண்டு சிறந்திடு கருவூர் என்னுந் திருநகர் அரசின் மேவி அறந்தரு மாட வீதி அளப்பில புரிவித் தாங்கே நிறைந்திடு வீரர் தம்மை நிலைபெற இருத்தி னானே. 35 ஆயவர் தங்கட் கெல்லாம் அரும்பெறல் ஆக்க முள்ள தேயமுங் கரிதேர் வாசித் திரள்களும் வரிசை முற்றுந் தூயபல் சனங்க ளாகுந் தொகுதியும் உதவித் தண்ட நாயக முதல்வ ராக நல்கினன் ஞால மன்னன். 36 அன்னதோர் காலந் தன்னில் அரம்பையர் அவனி யாளும் மன்னவர் தம்பால் தோன்றி வளர்தலும் வாகை மொய்ம்பின் முன்னவன் முதலோர்க் கெல்லாம் முசுகுந்த வேந்தன் அந்தக் கன்னியர் தம்மைக் கூவிக் கடிமணம் இயற்று வித்தான். 37 (30. சூர்குலம் - சூரபன்மனுடைய குலம். பானுவின் வழிவரு சிறு மகன் - சூரியகுலத்தில் தோன்றிய முசுகுந்தன். 31. ஞான நாயகன் - முருகக் கடவுள். 33. மானவர் - வீரர். தமர் - நண்பர். அமரர்கோன் இளவல் - உபேந்திரன். 35. வீரர்தம்மை - நவவீரர் ஆதியரை. 37. வாகை மொய்ம்பின் முன்னவன் - வீரவாகுதேவன்.) அந்தமில் வன்மை சான்ற ஆடலம் புயத்தோன் புட்ப கந்தியென் றுரைபெற் றுள்ள கன்னிகை தன்னை வேட்டுச் சிந்தையின் மகிழ்வால் சேர்ந்து சித்திர வல்லி யென்னும் பைந்தொடி தன்னை அன்பால் பயந்தனன் பதும மின்போல். 38 அத்தகு பொழுதில் பன்னை அனகனே சனகன் என்னும் புத்திரர் தம்மை நல்கிப் புவனியாள் முசுகுந் தற்குச் சித்திர வல்லி யென்னுஞ் சீர்கெழு புதல்வி தன்னை மெய்த்தகு வதுவை நீரால் விதிமுறை வழாமல் ஈந்தான். 39 ஏனைய வீரர் தாமும் இயல்புளி வழாமல் வேட்ட தேனிவர் குழலா ரோடுஞ் சிறந்தஇல் வாழ்க்கை போற்றிப் பானலங் குதலைச் செவ்வாய்ப் பாலரை நீல வேற்கண் மானனை யாரை நல்கி மனுகுலத் தொன்றி உற்றார். 40 சித்திர வல்லி யென்னுஞ் சீருடைச் செல்வி ஆங்கோர் தத்தையை வளர்த்த லோடுந் தண்டகத் தருமன் தேவி அத்தனிக் கிளியை வெ·க ஆங்கவன் தூதர் போந்து கைத்தலத் ததனைப் பற்றிக் கடிதினில் கொடுபோய் ஈந்தார். 41 அவ்வழி கிள்ளை காணாள் ஆயிழை அயர்த லோடும் எவ்வழி போயிற் றோவென் றிறையவன் உலகின் நாடி மைவழி கின்ற மேனி மறலிதன் துணைவி யானாள் கைவழி அமருந் தன்மை கதுமென உணர்ந்தான் அன்றே. 42 பூதலம் புரந்த செங்கோல் புரவலன் வீர மொய்ம்பன் ஆதியர் தம்மைக் கூவி அங்ஙனந் தூண்ட அன்னோர் ஏதமில் கரிதேர் வாசி எல்லையின் மறவர் சுற்ற மேதியங் கடவுள் மூதூர் விரைந்துபோய் வளைந்து கொண்டார். 43 தன்னகர் வளைத லோடுந் தருமன்வந் தேற்ற காலை அன்னவ னொடுபோர் செய்தே அடுமுரண் தொலைச்சி யம்பொன் வன்னமென் கிள்ளை தன்னை வாங்கினர் மீண்டு தங்கண் மின்னுள மகிழ நல்கி வேந்தற்கு விசயஞ் செய்தார். 44 சித்திர வல்லி பின்னர்ச் சீர்கெழு சூல்கொண் டுற்று மெய்த்தகு பலங்காய் வேண்டிய வேண்டினள் வினவ லோடு முத்தணி அலங்கல் திண்டோள் முசுகுந்த னதுகொண் டேக அத்திரு மலைநன்னாட்டுக் களப்பிலோர் தம்மை உய்த்தான். 45 மஞ்சுசூழ் மலைநா டுள்ளார் மன்னவர் மன்னன் ஆணைக் கஞ்சலர் இகழ்த லோடும் ஆடலம் புயனு மேனைச் செஞ்சிலை வீரர் தாமுஞ் சென்றனர் அந்நாட் டுள்ள வெஞ்சுர மீரொன் பானும் வென்றொரு பகலின் மீண்டார். 46 (38. பதுமமின்போல் - திருமகளைப் போல. 41. தந்தை - கிளி. தருமன் தேவி - எமனுடைய மனைவி. 42. மை - கருமை. மறலி - எமன். 43. மேதி - எருமை. மேதியங்கடவுள் மூதூர் - எமலோகம். 45. சூல் - கருப்பம். பலங்காய் - பழங்களையும் காய்களையும். 46. சுரம் ஈர் ஒன்பான் - பதினெண் சுரங்கள். சுரம் - ஊர்.) பூண்டிடு கழற்கால் வீரர் பொற்புறு புதல்வி யானாள் வேண்டிய தீய பைங்காய் வியத்தக நல்கிப் பின்னர் ஈண்டுள தரணி யெல்லாம் ஏகியே திறைகொண் டெங்கும் ஆண்டைய மன்னன் கோலும் ஆணையும் நடக்கச் செய்தார். 47 கருமுதிர் கின்ற காமர் கற்பக வல்லி யன்னாள் எரிகிளர் அங்கி வன்மன் என்பதோர் குமரன் தன்னை அரியதோர் தவத்தின் சீரால் அளித்தனள் அதனைக் கண்டு பெரிதுள மகிழ்ந்து மன்னன் பேரர சாட்சி செய்தான். 48 வேறு அன்ன காலையில் வலாசுரன் என்பதோ ரவுணன் பன்னெ டும்பெருஞ் சேனையுந் தானுமாய்ப் படர்ந்து பொன்னி னாட்டினைச் சுற்றியே அடர்த்தலும் புலவோர் மன்னர் மன்னவன் அவனுடன் சிலபகல் மலைந்தான். 49 நிருதர் போற்றிய வலாசுரன் தன்னொடு சேர்ந்து பொருது வென்றிலன் ஆதலால் பூதலம் புரக்குங் குருதி வேற்படை முசுகுந்த மன்னனைக் கூவி வருதி யென்றொரு தூதனை விடுத்தனன் மகவான். 50 ஏய தூதுவன் இருநிலம் புக்கனன் இமையோர் நாய கன்பணி உரைத்தலும் நன்றென வினவி மாயி ருந்திறல் வீரர்தம் படையொடும் வான்மேற் போயி னான்முசு குந்தனென் றுரைபெறும் புகழோன். 51 போன மன்னவன் புரந்தரன் பொன்னடி வணங்கித் தானை விண்ணவர்க் கதிபனாந் தலைமையைத் தாங்கி மானி னங்கள்மேல் மடங்கல்சென் றென்னவல் அவுணர் சேனை யங்கடல் யாவையும் இமைப்பினில் செறுத்தான். 52 சுற்று நிற்புறும் அவுணராஞ் சூழ்பெரும் பௌவம் வற்று கின்றுழி வலாசுரன் தன்னொடு மகவான் செற்ற நீரொடு சிலபகல் நின்றுபோர் செய்து கொற்ற மார்குலி சத்தினால் அவனுயிர் குடித்தான். 53 மன்னு தொல்புகழ் வலனுயிர் கோறலால் வலாரி என்ன வோர்பெயர் பெற்றனன் வாகையும் எய்திக் கொன்னு னைப்படை முசுகுந்த வேந்தனைக் கொண்டு பொன்ன கர்த்திருக் கோயிலில் புரந்தரன் புகுந்தான். 54 காய்ந்த மாற்றலர் தம்வலி கடந்தெனைக் ககன வேந்த னாக்கினை வீரமும் மேதகு புகழும் ஈந்தெ னக்குநற் றுணைவனு மாயினை இதனால் ஆந்த ரங்கமாஞ் சுற்றம்நீ அல்லையோ வென்றான். 55 (47. தீய பைங்காய் - இனிய பலாப்பழம். 49. பொன்னின் நாடு - சுவர்க்கம். 53. குலிசம் - வச்சிராயுதம். 55. ஆந்தரங்கம் - அந்தரங்கம்; நெருங்கிய நண்பு.) என்று மன்னனை நோக்கியே முகமன்கள் இயம்பிக் குன்று போலுயர் தன்பெருங் கோயிலுட் கொடுபோய் மன்றல் மாண்புன லாடியே மணிக்கலை புனைந்து சென்று மால்தொழுந் தேவனைப் பூசனை செய்தான். 56 எயிலை யங்கெரி யூட்டிய கண்ணுதல் இமைய மயிலும் மைந்தலும் ஒருபுடை மகிழ்வுடன் மேவக் கயிலை யின்கணே அமர்தல்போல் இருத்தலுங் கண்டான் பயிலும் அன்புடை மன்னவன் பரவச மானான். 57 ஆடி னான்தொழு தேத்தினான் அடிகளை முடிமேற் சூடி னான்உள முருகினான் துள்ளினான் சுருதி பாடி னான்கரங் கொட்டினான் பகரொணா உவகை கூடி னான்மொழி குழறினான் பொடிப்புமெய் கொண்டான். 58 சிறந்த வௌ¢ளியங் கிரியின்மேற் கண்ணுதற் செல்வன் உறைந்த இப்பெருங் கோலத்தைக் கண்டுகண் டுளத்தே நிறைந்த மாமகிழ் வெய்தியே இருந்தனன் நெடுநாள் மறந்த னன்கொலோ பிறப்பினான் மயங்கியே என்றான். 59 ஓவி லாமலே ஒருபொருள் போற்றுவான் உன்னி மேவு கின்றவன் அவசமாய் விழிதுயின் றதுபோல் மாவின் மாமுகம் வாங்கியும் மயங்கிய மன்னன் தேவ தேவனை நோக்கியே தொழுதிவை செப்பும். 60 வேறு ஏகனே போற்றி யார்க்கும் ஈசனே போற்றி அம்மை பாகனே போற்றி மேலாம் பரஞ்சுடர் உருவே போற்றி மேகமார் களனே போற்றி விடைமிசை வருவாய் போற்றி மோகமார் தக்கன் வேள்வி முடித்திடு முதல்வா போற்றி. 61 அம்புயா சனன்மால் இன்னும் அளப்பருந் திறத்தாய் போற்றி நம்பனே போற்றி எங்கள் நாதனே போற்றி கோதில் செம்பொனே மணியே போற்றி சிவபெரு மானே போற்றி எம்பிரான் போற்றி முக்கண் இறைவனே போற்றி போற்றி. 62 பொங்கரா வணிக ளாகப் புனைதரு புனிதா போற்றி அங்கரா கத்திற் பூதி அணிந்திடும் ஆதி போற்றி வெங்கரா சலத்தின் வன்றோல் வியப்யும் போர்த்தாய் போற்றி சங்கரா பரமா போற்றி தாணுவே போற்றி போற்றி. 63 (56. முகமன் - உபசார வார்த்தைகள். 57. கண்ணுதல் இமைய மயிலும் மைந்தனும் - இது சோமாஸ்கந்தமூர்த்தியினைக் குறிப்பது. 60. மாவின் மாமுகம் - குரங்கின் முகம். 61. மேகமார்களனே - நீலகண்டனே. 63. பொங்கு - சீறு. அங்கராகத்தில் - பூசும் பரிமணத்திரவியத்தைப் போல. பூதி - விபூதி. கராசலம் - யானை.) முன்னெனும் பொருளுக் கெல்லாம் முன்னவா போற்றி முப்பால் மன்னுயிர்க் குயிரே போற்றி மறைகளின் முடிவே போற்றி என்னைமுன் வலிந்தாட் கொண்டே இருநிலம் விடுத்தாய் போற்றி நின்னுருக் காட்டி யென்னை நினைப்பித்த நித்தா போற்றி. 64 எவ்வெவர் தம்மை யேனும் யாவரே எனினும் போற்றின் அவ்வவ ரிடமாகக் கொண்டே அவர்க்கருள் தருவாய் போற்றி மெய்வரு தௌ¤வில் உன்னை வௌ¤ப்பட உணர்ந்து ளோர்க்குத் தெய்வத போக முத்தி சிறப்பொடு தருவாய் போற்றி. 65 அம்புய மலர்மேல் அண்ணல் அச்சுத னாதி வானோர் தம்பதம் எமக்கு நல்குந் தற்பரா என்றே யாரும் நம்புறு பொருட்டால் வேதம் நவின்றிட அடைந்தோர்க் கெல்லா உம்பதம் பதமும் ஈயும் உலகுடை முதல்வா போற்றி. 66 உறைதரும் அமரர் யாரும் உழையராய்ச் சூழ நாப்பண் மறைபயில் பெரியோ ருற்று வழிபட இருந்தாய் போற்றி அறுவகை ஐந்தும் ஆறு மாகிய வரைப்பின் மேலாம் இறைவனே போற்றி என்பிழை பொறுத்தி என்றான். 67 இவைமுசு குந்தன் கூற எம்பிரான் கருணை செய்தே இவன்முகந் தன்னை நோக்கி ஆழியான் அளப்பில் காலம் உவகையால் வழிபா டாற்றி உம்பர்கோன் இடத்தில் வைத்தான் புவிதனிற் கொடுபோய் நம்மைப் பூசனை புரிதி என்றான். 68 என்றிவை முக்கண் மூர்த்தி இந்திரன் கேளா வண்ணம் நன்றருள் புரி லோடும் நனிபெரு மகிழ்ச்சி யெய்தி உன்றிரு வுளமீ தாயின் உய்த்தனன் அடியேன் என்னா வென்றிகொள் மன்னர் மன்னன் விம்மித னாகி யுற்றான். 69 இந்திரன் அமலன் பசை இவ்வழி முடித்த பின்னர்ச் செந்தழல் ஓம்பி ஏனைச் செய்கடன் புரிந்து வேறோர் மந்திரம் புகுந்து தேனு வருகென வல்லை கூவி வெந்திறல் மன்னற் கந்நாள் விருந்துசெய் வித்தான் அன்றே. 70 விருந்துசெய் வித்த பின்னர் விசித்திரக் கலையும் பூணுந் தெரிந்திடு மணியும் முத்தும் தெய்வதப் படையும் மற்றும் பரிந்துடன் உதவி இன்னும் வேண்டுவ பகர்தி என்னப் புரந்தரன் அருள லோடும் புரவலன் இதனைச் சொல்வான். 71 ஏவருந் தெரிதல் தேற்றா திருந்திடும் இமையா முக்கட் பாவையோர் பாகன் தன்னைப் பரிவொடு கொடுத்தி ஐய பூவுல கதனின் யான்போய்ப் பூசனை புரிதற் கென்னத் தேவர்கள் முதல்வன் கேளா இனையன செப்ப லுற்றான். 72 (64. முப்பால் மன்னுயிர் - விஞ்ஞானகலர், பிரளயாகலர், சகலர் என்னும் மூவகை ஆன்மாக்கள். 67. அறுவகை ஐந்தும் ஆறும் - முப்பத்தாறு தத்துவங்கள். 68. ஆழியான் - திருமால். 70. செந்தழல் ஓம்பி - அக்கினி காரியம் செய்து. ஏனைச் செய்கடன் - சண்டேசுவரர் பூசை முதலியன. மந்திரம் - மாளிகை. தேனு - காமதேனு. 72. இமையாமுக்கண் பாவையோர் பாகன் தன்னை - இங்குச் சோமாஸ்கந்தமூர்த்தி.) உந்தியால் உலகைத் தந்த ஒருதனி முதல்வன் முன்னம் மைந்தர்தாம் இன்மை யாலே மன்னுயிர்த் தொகுதிக் கெல்லாந் தந்தையாய் இருந்த தங்கோன் சரணமே அரண மென்னாச் சிந்தைசெய் தூழி காலஞ் செய்தவம் இயற்றி யிட்டான். 73 தவமுழந் திருந்த காலைச் சாரதப் புணரி சுற்றக் கவுரியுந் தானும் ஐயன் கரணையால் வந்து தோன்றப் புவிதனை அளந்த மாயோன் பொள்ளென எழுந்து போற்றிச் சிவனடி வணக்கஞ் செய்து செங்கையால் தொழுது நின்றான். 74 வேறு மாதொரு பாகன் மகிழ்ந்தருள் செய்து நீதவ மாற்றி நெடும்பகல் நின்றாய் ஏதிவண் வேண்டும் இயம்புதி யென்னச் சீதரன் இன்னன செப்புத லுற்றான். 75 அந்தமில் ஆயுவும் ஆருயிர் காப்புஞ் செந்திரு வோடுறை செல்வமும் ஈந்தாய் மைந்தனி லாமல் வருந்தினன் எந்தாய் தந்தரு ளாய்தமி யேற்கினி என்றான். 76 குன்றிஆஆ ஆற்றிடு கோன்இவை செப்ப நன்றென வேநகை யாநவை இல்லா ஒன்றொரு செம்மல் உனக்குத வுற்றாம் என்றருள் செய்தனன் யாரினும் மேலோன். 77 கழையிசை போற்று கருங்கடல் வண்ணன் முழுதுல கீன்றிடு முற்றிழை பாதந் தொழுதிலன் நின்று துதித்திலன் அன்பால் வழிபடு நீரின் வணங்கிலன் மாதோ. 78 வேறு முறையி னால்தனக் கிளையவள் என்றே முன்னி னன்கொலோ மூலமும் நடுவும் இறுதி யும்மிலாப் பரமனுக் கெம்போல் இவளு மோர்சத்தி யெனநினைந் தனனோ மறுவி லாமலை மகளென உளத்தே மதித்த னன்கொலோ மாயவன் கருத்தை அறிகி லேம்உமை யம்மையாற் சிறிதும் அன்பு செய்திலன் முன்புசெய் வினையால். 79 (73. உந்தியால் உலகைத்தந்த ஒருதனி முதல்வன் - திருமால். 75. நெடும்பகல் - அளவற்ற காலம். சீதரன் - திருமால். 77. குன்றினை ஆற்றிடு - கோவர்த்தன மலையைக் குடையாக ஏந்திய. செம்மல் - ஆண்மகன். 78. கழை - வேய்ங்குழல். உலகீன்றிடு முற்றிழை - உமாதேவியார். 79. நினைந்தனனோ, ஓ: ஐயவினா.) ஆன்ற ஐம்புலன் ஒருவழிப் படுத்தி ஆர்வம் வேரறுத் தையமொன் றின்றி ஊன்தி ரிந்திடி னுந்நிலை திரியா உண்மை யேபிடித் துலங்கண் முழுதும் ஈன்ற வெம்பெரு மாட்டியை நீக்கி எம்பி ரானையே வழிபடும் இயற்கை மூன்று தாளுடை ஒருவனுக் கல்லால் ஏனை யோர்களால் முடியுமோ முடியா. 80 அன்ன காலையில் எம்பெரு மாட்டி ஆழி யம்படை அண்ணலை நோக்கி என்னை நீயிவண் அவமதித் தனையால் எம்பி ராற்குநீ அன்புளன் அன்றால் முன்ன நீபெறு மதலையும் ஐயன் முனிவின் ஒல்லையின் முடிந்திட என்னாப் பன்ன ருங்கொடு மொழிதனை இயம்பிப் பராப ரன்தனை நோக்கியே பகர்வான். 81 ஆன தோர்பரப் பிரமமும் யானே அல்ல தில்லையென் றறிவிலாப் பேதை மானு டப்பெரும் பசுக்களை யெல்லாம் மருட்டி யேதிரி வஞ்சகன் முன்னம் ஞான நீரினார் அறிவினால் அன்றி நணுகு றாதநீ அணுகிநிற் பதுவோ ஊனு லாவிய உயிரினுக் குயிராம் ஒருவ செல்லுதும் வருகென உரைத்தாள். 82 இன்ன வாறுரைத் தெம்பெரு மாட்டி எம்பி ரான்தனைக் கொண்டுபோ மளவில் அன்ன தன்மைகண் டச்சுதக் கடவுள் அலக்கண் எய்தியே அச்சமுற் றயர்ந்து தன்னு ளந்தடு மாறிமெய் பனித்துத் தளர்ந்து நேமயந் தண்கரைக் கணித்தாய் மன்னு பல்பொருட் கலந்தனைக் கவிழ்த்த வணிக னாமென வருந்தினன் மாதோ. 83 அம்மை தன்பொருட் டால்இடை யூறிங் கடைந்த தென்றுமால் அகந்தனில் உன்னி எம்மை யாளுடை இறையவன் தனையும் இறைவி தன்னையும் இளங்கும ரனையும் மெய்மை சேர்வடி வாகஆங் கமைத்து வேத வாகம விதிமுறை வழாமற் பொய்மை தீர்ந்திடும் அன்பினாற் பூசை புரிந்து பின்னரும் வருந்தியே நோற்றான். 84 (80. மூன்றுதாளுடை ஒருவன் - பிருங்கிமுனிவன். 81. ஐயன் - இறைவன். முனிவின் - கோபத்தால். 84. இறையவன் தனையும் இறைவி தன்னையும் இளங்குமரனையும் மெய்மை சேர்வடிவு - இது சோமாஸ்கந்தமூர்த்தி உருவம்.) வேறு அனைய தன்மையால் ஆண்டுபல் லாயிர கோடி புனித னாகியே நோற்றனன் அதுகண்டு புழுங்கி முனிவ ராயுளோர் இன்னமும் வருகிலன் முதல்வன் இனிய ருந்தவஞ் செய்பவர் இல்லையால் என்றார். 85 அந்த வெல்லையில் சத்தியுஞ் சிவமுமாய் அனைத்தும் வந்தி டும்பரி சளித்தவர் இருவரும் வரலுஞ் சிந்தை யின்மகிழ் வெய்தியே அம்மைசே வடியின் முந்தி யோடியே வணங்கினன் முழுதொருங் குணர்ந்தோன். 86 இறைவி தாள்மலர் பணிந்தபின் எம்பிரான் பதமும் முறையி னாற்பணிந் திருவர்தஞ் சீர்த்திகள் முழுதும் மறையின் வாய்மையால் பன்முறை யால்வழுத் துதலும் நிறையும் நல்லருள் புரிந்தனன் தனக்குநே ரிலாதான். 87 மாது நீயிவற் கருள்புரி யென்னஅம் மாது சீத ரன்தனை நோக்கியே நம்பெருந் தேவன் ஓதும் வாய்மையும் யான்முனிந் துரைத்திடும் உரையும் பேதி யாவினி யாவரே அன்னவை பெயர்ப்பார். 88 எங்கள் நாயகன் விழிபொழி அங்கியால் இறந்து துங்க மேன்மைபோய்ப் பின்முறை முன்புபோல் தோன்றி உங்குன் மாமகன் இருக்கவென் றுரைத்தனள் உமையாள் அங்க தாகவென் றருளியே மறைந்தனன் ஐயன். 89 அம்மை தன்னுடன் எம்பிரான் மறைதலும் அண்ணல் விம்மி தத்தொடு தன்பதி புகுந்துவீற் றிருப்ப மைம்ம லிந்திடு மெய்யுடைக் காமவேள் வாரா இம்மெ னக்கடி துதித்தனன் அவன்மனத் திடையே. 90 வேறு வந்திடுங் காமவேள் வடிவுடைக் காளையாய்க் கந்தமார் பூங்கணை கன்னல்விற் கைகொடே மைந்தரா னோர்களும் மாதருங் காமமேற் புந்திவைத் திடும்வகை போர்புரிந் துலவினான். 91 தண்ணிழற் குடையெனச் சசிபடைத் துடையவன் எண்ணமற் றொருபகல் யார்க்குமே லாகிய கண்ணுதற் பகவன்மேற் கணைமலர் சிதறியே துண்ணெனத் துகளதாய்த் தொலைதலுற் றானரோ. 92 பூழியாய் மாண்டுளான் பொருவிலா நல்லருள் ஆழியான் ஆணையால் அருவொடே உருவமாய் வாழிசேர் தொல்லைநாள் வளனொடு மன்னினான் சூழிமால் கிரிதருந் தோகைசொல் தவறுமோ. 93 (90. அவன் மனத்திடை - திருமால் மனத்தினின்றும். 91. பூங்கணை - மலர்க்கணை. கன்னல் வில் - கரும்புவில். 92. சசி - சந்திரன். 93. நல்லருள் ஆழியான் - சிவபெருமான் - சிவபெருமான். சூழிமால்கிரி - சிகரங்களையுடைய பெரிய இமயமலை.) நிற்பமற் றித்திறம் நேமியான் முன்னைநாள் அற்புடன் வழிபடும் அமலையைக் குமரனைத் தற்பரக் கடவுளைத் தனதுமார் பிற்கொடே பற்பகல் பணியின்மேல் பாற்கடல் துஞ்சினான். 94 நீடவே துயிலுமால் நெட்டுயிர்ப் பசைவினால் பீடுசேர் நாகணைப் பேருயிர்ப் பசைவினால் பாடுசூழ் தெண்டிரைப் பாற்கடல் அசைவினால் ஆடியே வைகினார் அலகிலா ஆடலார். 95 அன்னதோர் அமைதியில் அசுரசே னைக்கெலாம் மன்னனாய் உற்றுளான் வாற்கலி என்பவன் என்னைவா னவரொடும் ஈடழித் தமர்தனில் முன்னைநாள் வென்றனன் முடிவிலா மொய்ம்பினால். 96 அத்திறங் கண்டுநான் அமரரோ டேகியே பத்தநூற் றுத்தலைப் பாந்தள்மேல் துயில்கொளுஞ் சுத்தனைப் போற்றியே தொழுதுவாற் கலியினால் எய்த்தனம் காத்தியால் எம்மைநீ என்றனன். 97 நஞ்சுபில் கெயிறுடை நாகமாம் பள்ளிமேல் துஞ்சும்வா லறிவினான் துயிலைவிட் டேயெழீஇ அஞ்சலீர் உங்களுக் கல்லலே ஆற்றிய வஞ்சனா ருயிர்தனை வல்லையுண் டிடுதுமால். 98 என்றுதன் கையமைத் தேழொடே ழுலகமுண் டன்றொரா லிலையின்மேல் அறிதுயில் மேவிய மன்றலந் தண்டுழாய் மாலைசூழ் மவுலியான் ஒன்றுபே ரன்பினால் ஒன்றெனக் குரைசெய்தான். 99 பார்த்தியா லெனதெனும் பைம்பொன்மார் பத்திடை மூர்த்தியாய் வைகிய முதல்வியைக் குமரனைத் தீர்த்தனைப் பூசனை செய்துநின் தீவினை ஆர்த்திநீங் குதியெனா ஆதரத் தருளினான். 100 அன்னவா றருள்செய்தே அனையர்மூ வோரையும் பொன்னுலா மார்பினும் பொள்ளென வாங்கியே என்னதா கியகரத் தீந்தனன் ஈதலுஞ் சென்னிமேல் தாங்கினன் மாதவத் திண்மையால். 101 (95. பாடு - பக்கங்களில். 98. வாலறிவினான் - தூயவறிவினையுடைய திருமால். 100. தீர்த்தன - பரிசுத்தன். தீவினையார்த்தி - தீவினையாலாகும் துன்பத்தை. 101. அனையர் மூவோரையும் - சோமாஸ்கந்தமூர்த்தியை.) வேறு அங்கதற்பின் முறையாக அச்சுதன்பாற் கடல்அகன்று நங்குழுவெ லாஞ்சூழ நாவலந்தீ வகத்தணுகி எங்கள்பிரான் அருள்நடஞ்செய் எல்லையிலாத் தில்லைதனில் துங்கமணி மன்றுதனைத் தொழுதுபர வசமானான். 102 செல்லரிய பரவசமாய்த் திருமுன்னே வீழ்ந்திறைஞ்சித் தொல்லைதனில் அறிவிழந்து துணைவிழிகள் புனல்பெருகப் பல்லுயிர்க்கும் உயிராகும் பரமசிவ பூரணத்தின் எல்லைதனில் புக்கழுந்தி எழுந்திலன்ஈ ரிருதிங்கள். 103 இத்திறத்தால் அவசமதாய் ஈறுமுதல் நடுவுமிலா அத்தனது திருவடிக்கீழ் அடங்கியே ஆணையினால் மெய்த்துரியங் கடந்தவுயிர் மீண்டுசாக் கிரத்தடையத் தத்துவமெய் யுணர்ச்சியெலாந் தலைத்தலைவந் தீண்டினவால். 104 கண்டுயில்வான் எழுந்ததெனக் கதுமெனமா யோன்எழுந்து புண்டரிகப் பதந்தொழுது போற்றிசெய்து புறத்தேகித் தெண்டிரைசூழ் புவிக்கரசு செலுதியவாற் கலியுடனே மண்டுபெருஞ் சமர்செய்து வல்லைதனில் உயிர்உண்டான். 105 வாற்கலிதன் உயிருண்டு வாகைபுனைந் தேதிருமால் சீர்க்கருணை நெறியதனால் தேருக்கும் என்றனக்கும் ஏற்கும்வகை விடையுதவி இம்மெனவே மறைந்தேகிப் பாற்கடலில் பணியணைமேற் பண்டுபோல் கண்வளர்ந்தான். 106 தேவர்குழாத் தொடுமீண்டு சிறந்திடும்இத் துறக்கத்தில் ஆவலுடன் வந்தேயான் அன்றுமுதல் இன்றளவும் பூவைநிறங் கொண்டபுத்தேள் பொன்மார்பில் வீற்றிருந்த மூவரையும் அருச்சித்தேன் முதுமறைநூல் விதிமுறையால். 107 மன்னர்க்கு மன்னவநீ வழிபடுதல் காரணமாத் தன்னொப்பி லாதாரைத் தருகென்றாய் தந்திடுவ தென்னிச்சை யன்றேமால் இசைவுனக்குண் டாமாகில் பின்னைத்தந் திடுவனெனப் பெருந்தகையோன் பேசினனால். 108 பேசுதலும் முசுகுந்தன் பெயர்ந்துபாற் கடலிடைபோய்க் கேசவனை அடிவணங்கிக் கிட்டிநின்று வேண்டுதலும் வாசவன்தன் இடந்தன்னில் வைத்திடும்நம் முயிர்க்குயிரைப் பூசனைசெய் கொடுபோந்து பூதலத்தி னிடையென்றான். 109 நன்றெனவே இசைவுகொண்டு நாரணனை விடைகொண்டு சென்றுபுரந் தரற்குரைப்பச் சிந்தைதளர்ந் தேயிரங்கி அன்றுதனை ஈன்றதனிப் புனிற்றாவை அகலுவதோர் கன்றெனவே நனிபுலம்பி ஒருசூழ்ச்சி கருதினனால். 110 தேவர்பிரான் அவ்வளவில் தெய்வதக்கம் மியன்செயலான் மூவடியும் மூவிரண்டு முறைவேறு வேறாக ஏவர்களும் வியப்பெய்த இமைப்பின்முனம் அமைப்பித்துக் காவலன்கை தனிற்கொடுப்பக் கைதவமென் றறிந்தனனே. 111 (102. தில்லை - சிதம்பரம். துங்கமணிமன்று - சிற்சபை. 103. ஈரிரு திங்கள் - நான்கு மாதம். 106. வாகை - வெற்றிமாலை. 107. பூவை - காயாம்பூ. மூவர் - சோமாஸ்கந்தமூர்த்தியை. 111. மூவிரண்டுமுறை - ஆறு முறை. அமைப்பித்து - உண்டாக்கி. கைதவம் - வஞ்சனை.) ஆதியில்விண் ணவர்தச்சன் அமைத்திடுமூ விருவடிவும் பூதலமன் னவன்வாங்கிப் புதல்வனொடுங் கவுரியொடும் வீதிவிடங் கப்பெரமான் மேவியதாம் எனஇருந்தும் ஏதுமுரை யாநெறியால் இவரவரன் றெனமொழிந்தான். 112 துங்கமுறு முசுகுந்தன் சொல்வினவிச் சுடராழிப் புங்கவன்தன் மார்பமெனும் பொன்னூசல் ஆட்டுகந்து மங்கையொடுங் குமரனொடும் மகிழச்சியொடும் வீற்றிருந்த எங்கள்பிரான் தனைக்கொடுவந் திவராமோ என்றனனே. 113 இந்திரன்இவ் வாறுரைப்ப இமையாமுக் கட்பகவன் முந்துதிறல் முசுகுந்தன் முகநோக்கி நின்பாலில் வந்தனமால் எம்மையினி மாநிலத்திற் கொடுபோந்து புந்திமகிழ் வாய்பூசை புரிவாயென் றருள்செய்தான். 114 ஊழிநா யகன்மகவான் உணராமே இ·துரைப்பக் கேழிலாப் பெருவகை கிடைத்தினிது பணிந்தேத்தி ஆழியான் பூசனைகொண் டமர்ந்தவரா மாமிவரை வாழியாய் தருகவென வாங்கினன்மன் னவர்மன்னன். 115 வாங்கியபின் இமையவர்கோன் மன்னவனை முகநோக்கி ஈங்கிவரை அறுவரொடும் இருநிலத்தி னிடைகொடுபோய்ப் பூங்கமலா லயமுதலாப் புகல்கின்ற தலந்தன்னில் தீங்கறவே வழிபாடு செய்தியென விடைகொடுத்தான். 116 நன்றெனவே விடைகொண்டு நானிலத்தி னிடையிழிந்து தென்றிசையா ரூர்தன்னில் சிவனுறைபூங் கோயில்புக்கு மன்றல்கமழ் தண்டுளவோன் வழிபடவீற் றிருந்தோரை வென்றியரி யணைமீதில் விதிமுறையால் தாபித்தான். 117 கடனாகை நள்ளாறு காறாயல் கோளரியூர் மடனாக முத்தீனும் வாய்மியூர் ம