kandha purANam of kachchiyappa chivAchAriyAr
(in tamil script, unicode UTF-8 format)

கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய
கந்த புராணம்





உ
செந்திலாண்டவன் துணை
திருச்சிற்றம்பலம்

2. அ சு ர கா ண் ட ம்

* * * 13. எ தி ர் கொ ள் ப ட ல ம் திண்டிறன் மாயையின் செம்மல் இத்திறம் அண்டர்தந் துறக்கமேல் அடைந்த காலையிற் பண்டிமை யோர்களாற் படருந் தானவர் கண்டனர் மகிழ்ந்தனர் களிப்பின் மூழ்கினார். 1 ஆயவன் வருவதை அவுணர் தம்பெரு நாயகற் கொற்றர்போய் நவில அன்னவன் தூயநல் லமுதினைக் கிடைத்துத் துண்ணென மேயின னாமெனக் களிப்பின் மேயினான். 2 தானையம் படையொடு தகுவர் கோமக னானவெஞ் சூர்பெறும் அளப்பில் ஆக்கமுங் கூனலம் பிறைதவழ குடுமிச் செஞ்சடை வானவன் கருணையும் மணங்கொண் டேகினான். 3 அன்னவன் புகர்தனை யடைந்து நங்குல மன்னனை உற்றிட வல்லை செல்லுவன் முன்னுற ஏகியெம் முறையுஞ் செய்கையும் பன்னுதி யென்றுமுன் படர்வ தாக்கினான். 4 அன்னதோர் காலையில் அவுணர் தேசிகன் முன்னுற மானமேல் முடுகி ஏகலுந தன்னுறு கிளைஞருந் தானும் ஆங்கவன் பின்னுற மன்னவன் பெயர்ந்து போயினான். 5 மாசறு பேரொளி மான மீமிசைத் தேசிகன் விரைவொடு செல்லும் எல்லையில் காசிபன் அருள்மகன் கண்டு சேணிடை ஈசனை யெதிர்ந்தென எதிர்கொண் டேகினான். 6 அஞ்சலி செய்தனன் அவுணன் அத்துணை நெஞ்சக மகிழவொடு நின்று தேசிகன் விஞ்சுக திருவொடு விசயந் தானெனா எஞ்சலில் ஆசிகள் எடுத்துக் கூறினான். 7 ஆயது காலையில் அனையன் பாங்கரின் மேயின அரிமுகன் வேழ மாமுகத் தீயவன் இருவருந் தேரொ டேகியே தூயதோர் புகர்அடி தொழுது போற்றினார். 8 ஏத்திடும் அவர்தமக் கியலு ஆற்றினால் மீத்தகும் ஆசிகள் விளம்பி வேந்தனைப் பார்த்தனன் உனக்கியாம் படுத்து கின்றதோர் வார்த்தையுண் டன்னது வகுத்துங் கேட்டிநீ. 9 பங்கமில் காசிபன் பன்னி யாகிய நுங்கையைப் பயந்துளான் நுனித்த கேள்வியான் சங்கையற் றிருந்ததா னவரைத் தாங்கினான் எங்களுக் கோர்துணை யென்னுந் தன்மையான். 10 ஈண்டையில் வாசவன் எதிர்ந்து பற்பகல் மூண்டிடு வெஞ்சமர் முற்றி வீரத்தைப் பூண்டனன் ஆதலிற் புழுங்கி மாரிநாள் மாண்டிடு கதிரென மாழ்கி வைகினான். 11 அத்தகு மேலையோன் அவனி மீமிசை வித்திடு நாறுசெய் விளைவு காணுறா எய்த்திடு நிரப்பினன் என்ன நின்னையே நித்தலும் நோக்கினான் சிறுமை நீங்கவே. 12 தவங்கொடு முந்துநீ தழலை வேட்டதுஞ் சிவன்புரி வரங்களுஞ் செப்பக் கேட்டனன் உவந்தனன் ஆகுலம் ஒழித்து வைகினான் நிவந்தன ஆங்கவன் நெடிய தோள்களே. 13 பற்றலர் புரமடு பரமன் ஈந்திடப் பெற்றதோர் வரத்தொடு பெயர்ந்திடு யாரையும் வெற்றிகொண் டிவண்வரும் மேன்மை கேட்புறா மற்றுனை அடைந்திட வருகின் றானெனா. 14 வன்றிறல அவுணர்கோன் வருதல் காட்டியே புன்றொழில் படுத்திய புகரு ரைத்தலுந் துன்றிய கனைகழற் சூர னென்பவன் நின்றனன் உவகையால் நிறைந்த நெஞ்சினான். 15 ஆர்ந்ததொல் கிளையொடும் அவுணர் காவலன் சேர்ந்தனன் சூரனைச் செங்கையால் தொழாப் பேர்ந்திடும் ஆவியைப் பிரிந்த தோருடல் சார்ந்திடு கின்றதோர் தன்மை என்னவே. 16 ஆயிடை வெய்யசூர் அவுணர் கோவினை நீயினி திருத்திகொல் என்ன நீயுளை தீயன அடையுமோ சிறுமை எய்துமோ மேயநுங் குலமுறை விளங்கத் தோன்றினாய். 17 என்றிவை நயமொழி இயம்பி யேபுடை சென்றன மாயையின் செய்ய காதலன் துன்றிய தகுவர்தம் அனிகஞ் சூழதர வென்றியொ டவனிமேல் விரைவின் மீளவே. 18 வேறு மண்ணுல கத்தில் வெஞ்சூர் வந்தனன் எனுஞ்சொற் கேளா அண்ணலங் கமலத் தேவும் அமரர் மானும் ஏனை விண்ணவ ராயுள் ளோரும் வியத்தகு முனிவர் யாருந் துண்ணென வந்து மாயோன் துயில்கொளுங் கடலிற் புக்கார். 19 கொய்துழாய் அலங்கல் மோலிக் குழகனைக் குறுகி நின்று கைதொழு திறைஞ்சித் தாங்கள் கனைகழற் சூரன் தன்னால் எய்திடு கின்ற தென்கொல் செப்புதி பெரும வென்றார். 20 அன்றவர் உரைத்த மாற்றம் அச்சுதக் கடவுள் கேளாப் புன்றொழில் தக்கன் வேள்வி புகுந்திடுந் தீமை தன்னால் இன்றிது பொருந்திற் றம்மா யாரிது விலக்கற் பாலார் ஒன்றினிச் செய்யுந் தன்மை கேண்மின்என் றோத லுற்றான். 21 பண்டெயின் மூன்றும் அட்ட பராபரன் வரம்பெற் றுள்ளான் அண்டமெங் கெவையும் வென்றான் ஆதலால் நம்மால் வென்றி கொண்டிடு திறத்தான் அல்லன் கொடியவச் சூரன் தன்னைக் கண்டுசென் றிடுதும் ஈதே காரியம் போலு மென்றான். 22 செங்கம லத்தோ னாதி தேவரும் முனிவர் யாரும் இங்கிது கரும மென்றே இசைந்தன ராகி நிற்ப அங்கவ ரோடு மாயோன் அரவணைப் பள்ளி நீங்கித் துங்கம துடைய தொல்சீர் சூரனைக் காண வந்தான். 23 மருத்துழாய் மவுலி யாதி வானவர் முனிவர் யாருந் திருத்தகு சூரன் நேரே சென்றுநின் றாசி கூறி அருத்திய தாகப் போற்ற அவர்களுட் பதினோர் கோடி உருத்திரர் தொகுதி யானோர் ஒருங்குடன் நிற்பக் கண்டான். 24 கண்டிடும் அவுணர் தங்கள் காவலன் இமையா முக்கண் அண்டர்தம் பெருமான் என்ன அமைந்ததொல் வடிவ முள்ளார் எண்டரு தொகையின் மிக்கார் ஈங்கிவர் யாவ ரென்னத் தண்டுள வலங்கல் மோலிப் பண்ணவன் சாற்றல் உற்றான். 25 ஆகத் திருவிருத்தம் - 950 - - - 14. உ ரு த் தி ர ர் கே ள் வி ப் ப ட ல ம் மன்னவர் மன்ன கேண்மோ மற்றிது புகல்வன் வேதா முன்னொரு கற்பந் தன்னில் மூவகை யுலகும் நல்கித் துன்னுயிர் முழுதும் நல்கித் துண்ணென அகந்தை கொண்டு தன்னையும் பரமென் றுன்னித் தாணுவை அயர்த்தான் அன்றே. 1 எந்தையை மறந்து போதன் யாவையும் விதித்த லோடுந் தந்திடும் அளவே யன்றிச் சராசரம் பெருகா வாக நொந்தனன் குறையென் னென்றே நோக்கினன் எமைமுன் ஈன்ற ஐந்தொழில் முதல்வன் தன்னை அயர்த்தனன் போலு மென்றான். 2 இனியவன் அருள்பெற் தன்றி இவ்விதி முடியா தென்னாத் தனயனும் அளவில் காலந் தவம்புரிந் திடவும் முக்கட் பனிமதி முடியோன் அன்னான் பாற்படா தொழிய அந்தோ வினையினேன் முன்னந் தாதை வௌ¤ப்படும் எவன்கொ லென்றான்.3 கழியுடல் புயமேற் கொண்ட கண்ணுதல் உறாத துன்னி இழுதைய ரென்ன ஏங்கி இன்னலுற் றுயிர்த்து வல்லே அழுதனன் மகவென் செய்வான் அன்னதோர் வேலை கண்ணீர் விழவிழ அலகை யாகி மிகவெழுந் தீண்டிற் றன்றே. 4 காண்டலும் அலகை ஈட்டங் கருத்திடர் உழப்ப வீழ்ந்து மாண்டனன் போலச் சோர மன்னுயிர்க் குயிராய் நின்ற ஆண்டகை யுணர்வு நல்கி அனையவன் கனவில் நண்ணி ஈண்டினி வருந்தல் மைந்த எழுகெனா அருளிச் செய்வான். 5 மதித்தனை பரமென் றுன்னை மறந்தனை யெம்மை யற்றால் விதித்திறங் கூடிற் றில்லை விரைந்தது முடிய நந்தம் பதத்துளார் தம்மை உன்றன் பாங்குற விடுத்தும் என்றான் உதித்திடல் இறத்த லின்றி உலகளித் துதவும் ஐயன். 6 அந்நெறி கனவிற் காணும் அற்புதத் தெழுந்து வேதன் செந்நெறி பூண்டு வைகிச் சிந்தையில் தேற்ற மெய்தி உன்னலும் அறுவ ரைவர் உருத்திர கணத்தோர் தாதை தன்னரு ளதனால் நெற்றித் தலத்தினும் போந்து நின்றார். 7 நிற்றலும் அவரை நோக்கி நெற்றியந் தலத்தில் நீவிர் உற்றதை எவன்கொ லென்ன உன்செயல் முடியு மாற்றால் மற்றெமை விடுத்தான் நம்பன் ஆதலன் வந்தே மென்றார் பற்றலர் புரமூன் றட்ட பண்ணவன் வடிவங் கொண்டோர். 8 பரமன துருவாய் நின்றோர் பதினொரு வோரும் இவ்வா றருள்செய விரிஞ்சன் கேளா அன்பினால் என்பால் வந்தீர் விரைவுடன் உயிர்கள் தம்மை விதிக்குதிர் என்னத் தத்தம் உருவுபோற் பதினோர் கோடி உருத்திரர் தொகையைத் தந்தார். 9 ஆங்கது தெரிந்து வேதா ஆவிகள் வினைக்கீ டன்றி ரூ¦ங்களிவ் வாறு செய்கை நெறியதன் றென்ன லோடும் ஓங்கிய உருத்தி ரேசர் ஒல்லையெம் பதத்திற் போதும் ஈங்கிவண் உயிரை முன்போல் ஈந்தனை இருத்தி யென்றார். 10 என்றிவை உரைத்துப் போதன் யாவையும் படைப்பான் நல்கி ஒன்றிய உணர்வின் மிக்க உருத்திரர் யாரும் வௌ¢ளிக் குன்றுடை முதல்வன் தொன்னாட் கொடுத்திடும் புவனம் புக்கார் அன்றுதாம் அளித்து ளோரை அமரரோ டிருத்தி ரென்றார். 11 அவனியை அளித்தோன் தன்பால் அடைந்துளார் அண்டந் தன்னில் புவனமே லிருந்தார் அன்னார் புரிந்திடத் தொன்னாள் வந்த பவர்முதல் உருத்தி ரேசர் பதினொரு கோடி யுள்ளார் இவர்சிவ னருளால் வானோர் இனத்துடன் ஈண்டி யுற்றார். 12 ஆகத் திருவிருத்தம் - 962 - - - 15. ந க ர் செ ய் ப ட ல ம் எனஅரி புகலக் கேளா இன்னதோ நிகழ்ச்சி யென்றான் அனையதற் பின்னர் ஆண்டை அமரர்கம் மியனை நோக்கி வனைகழற் சூர பன்மன் மற்றியாம் உறைதற் கொத்த புனைதிரு நகரம் வல்லே புரிமதி புலவ வென்றான். 1 என்றலுங் கடவுள் தச்சன் இறைஞ்சியே நுமக்குச் செய்யும் வென்றிகொள் மூதூ ருககு வியலிடம் உரைத்தி யென்ன நன்றெனப் புகரோன் தானே நகர்களுக் கெல்லை கூற அன்றவை வினவித் தென்பால் அளக்கரை அடைந்தான் அன்றே. 2 ஆசறு கடலி னூடே அயுதமோர் எட்டா யுள்ள யோசனை எல்லை முன்னோன் உறுநக ராகக் கோலிக் காசினி வரைகள் தம்மால் கதுமெனத் தூர்த்து மிக்க பாசறை கொண்டே ஒப்ப அணித்தலம் படுத்துப பின்றை. 3 காயுறு கதிர்கள் காஞ்சிக் கம்பைமா நீழல் வைகும் நாயகி நகர மென்ன நாடொறுஞ் சூழு மாற்றால் சேயுயர் விசும்பிற் போகச் செம்பொனால் மதிலைச் செய்து வாயில்கள் நான்க மைத்து ஞாயிலும் வகுத்து நல்கி. 4 நாற்பெரு வாயி லூடு மேருவே நண்ணிற் றென்ன மாற்பெருங் கோபு ரங்கள் மணிவெயில் எறிப்ப நல்கி நூற்படும் ஒழுக்கம் நாடி நூறியோ சனையொன் றாகப் பாற்படு மாட வீதி பற்பல அமைத்து மன்னோ. 5 முப்புரம் ஒருங்குற் றென்ன மும்மதில் அவற்றுள் நல்கி ஒப்பருந் திருவின் வீதி உலப்பில புரிந்து சோமன் வைப்பெனச் செம்பொன் மாடம் வரம்பில வகுத்து மாதர் மெய்ப்படும் ஆடல் கூரும் வியலிடம் பலவுஞ் செய்து. 6 மாளிகை தோறுந் தெற்றி மண்டபம் அணிசேர் முன்றில் கோளரி தயங்கு பொற்பிற் கோபுரங் குன்றம் அம்பொற் சூளிகை அரங்க மன்றஞ் சுடருமேற் றலங்கள் தூய சாளரஞ் சோலை வாவி தனித்தனி யாகத் தந்து. 7 வேறு ஆயதன் நடுவுற அயுத வெல்லையில் பாயதோர் நெடுமதில் பயில நல்கியே மாயவள் திருமகன் வைக ஆங்கொரு கோயிலை எழில்பெறக் குயற்றி னானரோ. 8 வாரணம் விரவுதேர் மக்கள் போந்திடுந் தோரண வாயில்கள் தொடர்ந்த தெற்றிகள் சீரணி தபனியச் சிகர கோபுரங் காரணி மணிவரை கவின்கொள் சூளிகை. 9 ஆனைகள் பயிலிடம் அயங்கள் சேரிடம் சேனைகள் உறைவிடம் தேர்கள் வைகிடம் தானவர் தலைவர்கள் சாருந் தொல்லிடம் ஏனைய அரக்கர்கள் இனிது சேரிடம். 10 நாடரும் விசும்புறை நாரி மாரெலாம் ஆடலை இயற்றிடும் அரங்க மண்டபம் பாடலின் முறைபயில் பைம்பொன் மண்டபம் மாடக யாழ்முரல் வயிர மண்டபம். 11 மயில்புற வோதிமம் வன்ன மென்கிளி குயில்முத லாகிய குலவு மண்டபம் இயலுறு யூகமான் இரலை செச்சைகள் பயிலுறு வாரணம் பரவும் மண்டபம். 12 சந்ததம் மறையொலி தழங்கு மண்டபம் முந்திய வேள்விகள் முயலும் மண்டபம் மந்திர வியல்பினோர் மருவு மண்டபம் இந்திரன் முதலினோர் இருக்கும் மண்டபம். 13 திருமிகு நிருதர்கோன் தேவர் போற்றிட அரசியல் புரியுமத் தாணி மண்டபம் இருநிதி உளலொம் ஈண்டும் மண்டபம் பரனருள் படைக்கலம் பயிலும் மண்டபம். 14 அருந்துறும் அமிர்துறழ் அடிசில் மண்டபம் நரந்தையே பாளிதம் நறைகொள் சாந்தகில் பெருந்துவர்க் காயடை பிறவுஞ் சாலவும் இருந்திடு கின்றபேர் எழில்கொள் மண்டபம். 15 மானனை யார்பலர் மருவு மண்டபம் ஆனதோர் ஊசலாட் டயரும் மண்டபம் பானிலா உமிழ்தரு பளிங்கின் மண்டபம் வானுயர் சந்திர காந்த மண்டபம். 16 மாமணி யொளிர்தரு வசந்த மண்டபம் காமரு பவளமார் கவின்கொள் மண்டபம் ஏமரு மரகதத் தியன்ற மண்டபம் தாமரை உயிர்த்திடு தரள மண்டபம். 17 கோவியல் மரபினோர் கொள்கைக் கேற்றன யாவையும் நல்கியே இதனுக் குள்ளுற மாவுறு சூரபன் மாவுந் தன்குலத் தேவியும் உறையவோர் உறையுள் செய்தரோ. 18 இங்கிது சூழ்தர எண்ணி லாதன மங்கல நிறைதரு மாட வீதிகள் அங்கவன் துணைவிய ராகி வந்திடும் நங்கையர் மேவர நலத்தின் நல்கியே. 19 காவியுங் குமுதமுங் கமல முஞ்செறி வாவிக ளோடைகள் பொய்கை வான்றொடு பூவியல் தண்டலை பொலன்செய் குன்றுடன் யாவையும் முறைபட இயற்றி னானரோ. 20 அள்ளலந் திரைக்கடல் அகழி யாகவே யுள்ளுறு நகரிடை உறையுங் கோயிலில் தள்ளரும் பொன்சுடர் தழைத்த பொற்பினால் வௌ¢ளிய தானது மேலைப் பொன்னகர். 21 வேறு இன்னவையும் ஏனவையும் எண்ணிமனத் தால்அருளித் தன்னிகரில் அவுணர்பிரான் சயத்தோடு பெருந்தலைமை மன்னவரு தலின்வீர மகேந்திரமே யாமென்றே அந்நகருக் கோர்நாமம அணிபெறுத்தி அளித்தனனே. 22 ஏமபுரம் இமையபுரம் இலங்கைபுரம் நீலபுரம் சோமபுர மெனப்புகலுஞ் சுவேதபுரம் அவுணர்புரம் வாமபுரம் பதுமபுரம் மகேந்திரமா புரமென்னுங் காமர்புரத் தெண்டிசைக்குங் காட்சிபெற உதவினனால். 23 மாண்டகுசீர் கெழுவீர மகேந்திரமிவ் வாறுதவி ஆண்டதுபோல் அகன்பரப்பில் ஆசுரம்என் றொருநகரம் நீண்டவட கடல்நடுவண் நிருதர்புகழ்ந் திடுமாற்றால் காண்டகைய சீயமுகக் காவலற்கு நல்கினனே. 24 மற்றுளவெம் புணரிதொறும் வயின்வயின்சேர் தீவுதொறுங் கொற்றமிகுஞ் சூரபன்மன் குலவுபெருந் தானையெலாஞ் சுற்றமுடன் மேவுதற்குத் தொன்னகரம் பலவமைத்துக் கற்றுணருஞ் சிறுவரொடுங் கம்மியன்மீண் டேகினனே. 25 வேறு நீடு மேரு நெடுவரைத் தென்புடை நாடு சீர்கெழு நாவலந் தீவினில் கூடு கின்றபொற் கூடந் தனக்கொரு மாடு போந்தனன் மாமயன் தாதையே. 26 பகரு கின்றஅப் பாற்படும் எல்லையில் தகுவர் போற்றிடுந் தாரகற் காகவே மகிழ்வின் நீரொடு மாயா புரமெனா நகர மொன்றை அணிபெற நல்கினான். 27 வினையர் தம்மொடு விச்சுவ கன்மனும் இனைய வூர்கள் இயற்றியம் மாயையின் தனய னுக்கிவை சாற்றலும் நன்றெனா அனிக மோடங் கடைந்தனன் என்பவே. 28 ஆகத் திருவிருத்தம் - 990 - - - 16. ப ட் டா பி டே க ப் ப ட ல ம் மற்றவ் வீர மகேந்திரம் நண்ணியே உற்று நாடியவ் வும்பர்தங் கம்மியன் கற்ற விஞ்சை வியந்து களிப்புறீஇக் கொற்ற நீடுதன் கோயிலை நண்ணினான். 1 நண்ணு கின்றுழி நான்முக னாதியாம் விண்ணு ளோர்கள் வியன்முடி சூட்டுதும் அண்ண லுக்கென் றவற்றிற்கு வேண்டிய எண்ணில் பல்பொருள் யாவுமுய்த் தாரரோ. 2 கோவில் நண்ணிய கொற்றவன் மற்றொரு தாவில் பீடிகை தன்மிசை வைகியே மாவு லாவிய மால்கடல் தெண்புனல் தேவர் ஆட்டச் சிறப்புடன் ஆடினான். 3 ஆடி யம்பொனின் ஆடையு டீஇமலர் சூடி ஒண்கலன் தூயன் பூண்டுபின் பீடு சேர்தரு பின்னவர் பால்வர நீடு காதல் நிருதர் புகழ்வே. 4 நிகரி லாத நிருதர்க் கிறைதொழப் புகரு மாமுனி வோரும் புகழ்ந்திட மிகந டுங்கிய விண்ணவர் போற்றிட மகப திக்கு மனந்தளர் வெய்தவே. 5 வந்து சீய மணித்தவி சேறினன் அந்த வெல்லையில் அச்சுதற் காமெனும் இந்தி ரத்திரு மாமுடி ஏந்தியே சுந்த ரத்தொடு நான்முகன் சூட்டினான். 6 கண்டு தானவர் காசிபன் காதலன் புண்ட ரீகப் பொலன்கழல் தாழ்ந்தெழா அண்டொ ணாமகிழ் வால்அடுந் தேறலை உண்ட ளாரின் உளங்களிப் பெய்தினார். 7 அன்ன வேலை அமரர் முனிவர்கள் பொன்ன வாநறும் போது கரங்கொடே மன்னர் மன்னன் மணிமுடி யின்மிசை முன்னி வாழ்த்தி முறைமுறை வீசினார். 8 வேறு பாங்குறு தவிசின் பாலில் துணைவர்பங் கயன்மால் தம்மை ஈங்கினி திருத்திர் என்ன இருந்தனர் ஏவ லாலே ஓங்கிய மகவான் கொண்டான் களாசிஒண் ணிதியின் கோமான் தாங்கினன் அடைப்பை மற்றச் சமீரணர் கவரி கொண்டார். 9 நிருதர்தங் குரிசி லான நெடுந்தகை யுடைவாள் கொண்டான் பரிதியும் மதியும் அங்கட் பனிக்குடை நிழற்றி நின்றார் வருணனும் மகாரும் ஆல வட்டம்வீ சினர்யாழ வல்ல கருடர்கந் தருவர் சித்தர் கானமங் கிசையா நின்றார். 10 முத்தலை அயில்வே லேந்தி முறைநெறி ஆற்றுங் கூற்று மெய்த்தழற் கடவுள் தானும் வேத்திர மேந்தி யாண்டும் எத்திறத் தவரும் நீங்க எரிவிழித் திடியி னார்த்துப் பத்தியின் நிறுவிச் சூரன் பல்புகழ் பரவி நின்றார். 11 குரைகழல் நிருதி என்போல் கோடிக மதுகைக் கொண்டான் இருமைசேர் குரவர் தாமும் எல்லைதீர் முனிவர் யாருந் திரைகெழு கங்கைத் தூநீர் செம்பொனங் கலசஞ் சேர்த்துத் துருவையின் மறையால் வாங்கித் துவலைதூர்த் தாசி சொற்றார். 12 அரம்பைமே னகையே மிக்க உருப்பசி யாதி யாகி வரம்பறும் அமரர் மாதர் வரன்முறை விதியின் நாடி நரம்பியல் சுருதி பாடல் இயத்தொடு படிந்து நண்ணித் திரம்பயில் நடனம் மூன்றுஞ்* செவ்விதிற் புரிய லுற்றார். 13 ( * நடனம் மூன்று - தேசிகம், வடுகு, சிங்களம் என்பன.) இத்திறம் அமரர் யாரும் ஏனையர் தாமும் ஈண்டித் தத்தம துரிமை தன்னைத் தவாநெறி தலைக்கொண் டாற்ற மைத்தகு சூர பன்மன் மடங்கலந் தவிசின் மீதே மெய்த்திரு நிகழ மன்னிப் பின்னிவை விளம்ப லுற்றான். 14 ஆகத் திருவிருத்தம் - 1004 - - - 17. அ ர சு செ ய் ப ட ல ம் களித்திடு ஞிமிறும் வண்டுங் கலந்திட நறவம் பொங்கித் துளித்திடு துழாய்மால் தன்னைச் சூரனாம் அவுணன் பாரா அளித்தவன் தன்மூ தாதை யாயினை அதனால் நின்னை விளித்திடு மெல்லை தோறும் விரைந்திவண் மேவு கென்றான். 1 செங்கம லத்தின் மேவுந் திசைமுகத் தொருவன் தன்னைத் துங்கமோ டரசு செய்யுஞ் சூரனாம வீரன் பாரா இங்குநின் மைந்த ரோடும் என்னிடந் தன்னி லேகி அங்கம்ஐ வகையும் நாளும் அறைந்தனை போதி யென்றான். 2 அறத்தினை விடுத்த தீயோன் அருக்கனை நோக்கி நம்மூர்ப் புறத்தினில் அரண மீதாய்ப் போகுதல் அரிது கீழ்மேல் நிறுத்திய சிகரி யூடு நெறிக்கொடு புக்கு வான்போய் எறித்தனை திரிதி நாளும் இளங்கதிர் நடாத்தி யென்றான். 3 அறைகழற் சூர பன்மன் அவிர்மதி தன்னை நோக்கிப் பிறையென வளரு மாறும் பின்முறை சுருங்கு மாறும் மறைவொடு திரியு மாறும் மற்றினி விடுத்து நாளும் நிறைவொடு கதிரோன் போல்இந் நீள்நகர் வருதி யென்றான். 4 பொங்கழல் முதல்வன் தன்னைப் புரவலன விரைவின் நோக்கி இங்குநம் மூதூர் உள்ளோர் யாவரே எனினும் உன்னின் அங்கவர் தம்பா லெய்தி அவர்பணி யாவும் ஆற்றிச் செங்கம லம்போல் யாவர் தீண்டினுங் குளிர்தி யென்றான். 5 சுடர்முடி யாவுணர் செம்மல் தொல்பெருங் கூற்றை நோக்கிப் படிமுழு துயிரை நாளும் படுப்பது போல நந்தங் கடமத கரியை மாவைக் கணிப்பிலா அவுணர் தம்மை அடுவது கனவும் உன்னா தஞ்சியே திரிதி யென்றான். 6 அண்டரும் உலவை யானை அவுணர்மாத் தலைவன் பாரா எண்டரு நம்மூ தூரில் யாவரும் புனைந்து நீத்த தண்டுளி நறவ மாலை தயங்குபூண் கலிங்கஞ் சாந்தம் நுண்டுக ளாடு சுண்ணம் மாற்றுதி நொய்தின் என்றான். 7 காவலன் வருணன் தன்னைக் கண்ணுறீஇ நம்மூ தூரில் நாவிவெண் பளிதஞ் சாந்தம் நரந்தமோ டளாவித் தீம்பால் ஆவியின் வௌ¤ய நொய்ய அரும்பனி நீரிற் கூட்டித் தூவுதி இடங்க டோறுங் காற்றது துடைக்க வென்றான். 8 வாசவன் றன்னை நோக்கி மால்கெழு திருவின் மேலோன் தேசுறு துறக்கம் வைகுந் தேவர்தங் குழுவி னோடும் ஆசையங் கிழவ ரோடும் அருந்தவ ரோடும் போந்து பேசிய பணிகள் ஆற்றித் திரிமதி பிழையேல் என்றான். 9 இந்நெறி சூர பன்மன் யாவர்க்கும் வீற்று வீற்றாத் தன்னுறு பணியின் நிற்பான் சாற்றுலும் அனையர் அன்னது செய்து மென்றே அனையவர் றொழுக அன்னான் மன்னினன் அரசில் பின்றை மணஞ்செய உன்னி னானால். 10 மதிமுகத் திருவே போல்வாள் வானவர் புனைவன் தந்த பதுமகோ மளைஎன் றோதும் பாவையைப் புகரோன் நாடிச் சதுர்முகன் முதலாந் தேவர் தானவர் பிறரும் போற்ற விதிமுறை வதுவை செய்து விழைவொடு மேவி யுற்றான். 11 அன்னதன் பின்னர் வானோர் அசுரர்கந் தருவர் சித்தர் கின்னரர் இயக்கர் நாகர் கிம்புரு டாதி யானோர் கன்னியர் அளப்பி லாரைக் கடிமணஞ் செய்து கூடித் துன்னுபன் மலர்த்தேன் உண்ணுஞ் சுரும்பென இன்பந் துய்த்தான். 12 அரிமுகத் தவுணர் வேந்தற் கந்தகன் மகளா யுள்ள திருமிகு விபுதை தன்னைச் சீர்மணஞ் செய்து நல்கி நிருதிதன் புதல்வி யான நேரிழை சவுரி தன்னைக் கரிமுக இளவல் சேரக் கடிமணம் புரிவித் திட்டான். 13 இவ்வகை மணஞ்செய் பின்றை இருதுணை வரையும் நோக்கி மெய்வளம் பெறநுங் கட்கு விதித்திடும் மூதூ ரேகி அவ்விரு கோடி வௌ¢ளம் அனிகமோ டிருத்தி ரென்னாத் தெவ்வடு சூரன் அன்னோர் செல்லுமா றேவி னானால். 14 ஏவியே தனது தானைக் கிறைவரில் பலரை நோக்கி நீவிர்கள் இரண்டு கோடி நீத்தமாம் அனிகத் தோடு தீவுக டோறும் ஆழி இடந்தொறுஞ் செய்த மூதூர் மேவுதிர் விரைவின் என்னா அனையரை விடுத்தான் மன்னோ. 15 மாறிலாத் திசைக ளெட்டும் வானுல கேழும் இப்பாற் கூறுபா தலங்கள் யாவும் ஒழிந்தவுங் குறுகி யேதன் ஈறிலா ஆணை போற்ற எல்லையில் அவுணர் தம்மை ஆறெனுங் கோடி வௌ¢ளத் தனிகமோ டேகச் செய்தான். 16 விட்டிடு காலை தானே விண்ணுமண் ணுலகுந் திக்கோர் எட்டொடு பிலனோ ரேழும் ஏனைய வரைப்பு மாகிக் கிட்டின செறிந்து மொய்த்த கேடில்சீர் அவுணர் தானை மட்டகல் வானம் பூத்த உடுக்களின் மலிந்த அன்றே. 17 எங்கணுந் தனது தானை அடையறா தீண்ட லோடுந் துங்கவெஞ் சூர பன்மன் தானுரை தொன்மூ தூரில் அங்கணோ ரிலக்கம் வௌ¢ளத் தவுணர்தந் தானை தன்னை மங்கல இருக்கை தோறும் மரபுளி இருத்தி மன்னோ. 18 கரிபரி யாளி எண்கு கடுவயப் புலியே ஏனம் அரிமரை முகத்து வீரர் அவணர்தந் தலைவ ரானோர் இருவகை நான்மை யோர்க்கும் எண்டிசை நகரும் ஈந்து வருபடை அயுதத் தோடும் மகேந்திரங் காக்கச் செய்தான். 19 ஞாயில்கள் செறிந்த நொச்சி நாற்பெருந் தகைமைத் தான வாயில்க டோறும் நாப்பண் வளநகர் இஞ்சி தோறும் கோயிலின் இருக்கை தோறுங் குணிப்பிலா வீரர் தம்மை நீயிர்கள் காமின் என்னா நிலைப்பட நிறுவி யிட்டான். 20 துர்க்குணன் தரும கோபன் துன்முகன் சங்க பாலன் வக்கிர பாலன் தீய மகிடனே முதலோர் தம்மைத் தொக்கமந் திரிக ளாகத் துணைக்கொடே சூர பன்மன் மிக்கவா னவர்கள் போற்ற வீற்றிருந் தரசு செய்தான். 21 ஆகத் திருவிருத்தம் - 1025 - - - 18. தே வ ரை யே வ ல் கொ ள் ப ட ல ம் அரசு செய்தலும் அந்தர நாதனுஞ் சுரரு மேனை முனிவருந் தொக்குறீஇ வரைசெய் மாட மகேந்திர மாபுரத் தொருவன் ஏவலின் முன்னம் ஒழுகுவார். 1 கொலைவல் சிங்க முகன்பதி குஞ்சரத் தலைவன் மாப்பதி சார்ந்தவர் தம்பதி பலவு மேகிப் பணித்தன ஆற்றியே உலைவர் வைகலும் ஊசலின் நீர்மையார். 2 வேறு ஊனமுற்றோர் போலிவ்வா றுலைகின்ற காலத்தில் ஒருநாட் சூரன், வானகத்துத் தலைவனையும் அமரரையும் வருகவெனா வலித்துக் கூவித், தானவர்க்குத் தம்பியர்நீர் அவர்பணிநும் பணியன்றோ தரங்க வேலை, மீனனைத்துஞ் சூறைகொண்டு வைகலுமுய்த் திடுதிரென விளம்பினானால். 3 உரைக்குமொழி யதுகேளா அனையரெலம் உள்நடுங்கி உயங்கி வௌ¢கித், திரைக்கடலின் மீன்றனக்குத் தருகென்றான் இதற்கினிநாஞ் செய்வ தேதோ, விரைக்கமலத் தனிக்கடவுள் இப்படியும் நந்தலையில் விதித்தான் என்னா, இரக்கமொடு மறுத்தலஞ்சி அத்திறமே புரிதுமென இறைஞ்சிப் போனார். 4 போகின்ற நெறியின்கண் இமையவரும் புரந்தரனும் பொருமி யேங்கி, ஆகின்ற தெமக்கேயோர் பழியன்றோ அனையதுவந் தணுகா முன்னர்ச், சாகின்ற தேமிகவும் இனிதாகும் எமக்கதுவுஞ் சாரா தந்தோ, வேகின்ற சிந்தையினேஞ் செய்வதெவன் எனப்புலம்பி வேலை புக்கார். 5 அவ்வேலை இமையவர்கோன் வருணனெனுங் கடவுளைநின் றழையா இந்த, மைவேலை தனக்கிறைவன் நீயன்றோ நின்னினுமோர் வலியா ருண்டோ, கைவேலைப் பணியியற்றித் திமிங்கிலமே முதலாய கணிப்பின் மீன்கள், இவ்வேலை ஏற்றுதியேல் இடர்வேலைக் கரையிலெமை யெடுத்தி யென்றான். 6 வௌ¢ளைவா ரணக்கடவுள் உரைசெய்த மொழிகேட்டு விண்ணுளோர்க்கு, வள்ளல்நீ இரங்குதியோ அத்தொழில்யான் புரிவனென வருணன் கூறி, அள்ளல்வே லையுட்புகுந்து தனதுபெருங் கரதலத்தால் அலைத்து வாரி, யுள்ளமீன் குலங்களெல்லாந் தடங்கரையில் வரையேபோல் உயர்த்த லுற்றான். 7 தடக்கடலின் வேலைதனில் வருணர்பிரான் ஒல்லைதனில் தந்த மீனத், தடுக்கல்முழு வதுநோக்கிக் கடவுளரை விளித்திவற்றை ஆற்றலாலே, எடுப்பதநுந் தொழிலென்றே இந்திரன்றான் விளம்புதலும் இமையோ ரெல்லாம், நடுக்கமுடன் உளம்பதைப்ப விழிபனிப்பக் கரங்குலைத்து நாணுக் கொண்டார். 8 சின்னைதிமிங் கிலகிலமீ னாதியமீன் அடுக்கலினைத் தென்பால் வைகும், மன்னனுயிர் தலைவாங்கச் செங்கதிரோன் பெரும்புனலின் வடிவை வாட்டப, பன்னகரா கியதிறத்தாற் பிணித்திடும்அச் சுமையதனைப் பகட்டின் வேந்தன், இன்னலுறு வானவர்பால் எடுத்தவவர் கொண்டேகி இரங்கு கின்றார். 9 வேறு பன்னும் புகழ்ச்சூர பன்மனெனுந் தீயவனான் முன்னுந் துயர்க்கடலின் மூழ்கி முரணழிந்தேம் துன்னும் பழியாந் தொழலிதுவுஞ் செய்தனமால் இன்னும் படுவதொழில் ஏதோ உணரேமே. 10 பேர்கின்ற நீலப் பிறங்கல்அனை யான்பணியால் ஆர்கின்ற தின்றோ ரலரே அ·துயிரை ஈர்கின்ற தந்தோ விதியே எமக்கிதுவுந் தீர்கின்ற காலம் உளதோநீ செப்பாயே. 11 பூவுலகந் தன்னில் பொருந்துகின்ற மானுடரும் பாவமென நூலில் பகருகின்ற இத்தொழிலை ஏவர்புரி கின்றார் எமக்கோவந் தெய்துமதோ தேவ கதியின் நிரயஞ் சிறப்புடைத்தே. 12 தக்க துணராத தானவர்கள் தங்களினும் மக்களினுந் தாழ்வாம் வலைஞர்தொழில் செய்தனமால் இக்ககன வாழ்வை விரும்பியே யாஞ்செய்த மிக்க தவமும் வினையாய் விளைந்ததுவே. 13 வேத நெறியை விலக்கினேம் மிக்குள்ள போத நெறியாம் அதற்குப் புறம்பனேம் தீதுடைய வெஞ்சூரன் சீற்றத்தாற் செப்புகின்ற வேதநெறி செய்வேமேல் எம்மினுயர்ந் தாரெவரே. 14 தேனுலவுந் தாருத் திருநிழற்கீழ் இன்பமுறும் வானவர்க ளென்றே மதிக்குந் தகைமையினோம் ஈனமொடு மீன்சுமந்தே எல்லோர் களும்நகைக்கத் தானவர்முன் செல்வதிலுஞ் சாதல்மிக நன்றுநன்றே. 15 என்னு மொழிகள் இயம்பிப் புலம்புற்றுத் துன்னு நிருதர்புகழ் சூரன் திருநகரின் மன்னுதிசை யாளரொடும் வந்தனரால் அவ்வளவில் அன்னசெயல் கண்டே அவுணர்உரை செய்குவார். 16 மாதோயந் தன்னை வயிறலைத்து மற்றிவர்தாம் ஈதோ சிலமீன் தருகின் றனரென்பார் மீதோ டியபரிதி வெய்யோன்முன் னுண்டவெறுங் கோதோ எமக்குக் கொணர்கின்றார் என்றுரைப்பார். 17 தாங்கடற்குள் மீனந் தலைக்கொண்டு மேவுகின்றார் ஈங்கிவர்க்கு நாணம் இலையோ சிறிதென்பார் தீங்கிழைக்கின் யாரேனுஞ் செய்யாத தேதென்பார் மூங்கையொத்து ளாரோ மொழியார் இவரென்பார். 18 முந்துற்ற தொல்லை முழுநீரின் வேலைதொறும் பந்தத் துடன்வாழ் பரதவரே செய்கின்ற இந்தத் தொழிலும் இவர்க்குவரு மோவென்பார் சிந்திப்ப தென்னோ விதியின் செயலெனபார். 19 வேத நெறிமுறைமை விட்டார் வினைசெய்யும் பேதை நெறியே பிடித்தார் இவரென்பார் கோதுபடா நந்தங் குலத்தை மிகநலிந்தார் ஏதுபடார் இன்னம் இமையோ ரெனவுரைப்பார். 20 மண்ணோர் களுமிகழும் வன்பழிதன் பால்வரவும் விண்ணோர்க் கிறைவன் விரைவினுயிர் விட்டிலனாற் கண்ணோ பெரிது கருத்தோ சிறிதென்பார் பெண்ணோ அலிதானோ பேடோ வெனவுரைப்பார். 21 வேறு இந்த வாறு பலரும் இயம்பிடப் புந்தி நொந்து புலம்புபுத் தேளிர்கள் தந்தி யூருந் தலைவனை முற்கொடு வந்து தீயவன் வாய்தலுற் றாரரோ. 22 பரிதி வேந்தன் பணிமுறை நாடியே வருதிர் ஈண்டென்று வாயிலர் கூறிடப் பொருதி ரைக்கடல் மீன்கொடு போய்ச்சுரர் ஒருத னிப்பெருங் கோயிலுள் உய்த்தனர். 23 எளித்தல் எய்தும் இமையவர் உய்த்தமீன் துளித்த தேன்றொடைச் சூர்முதல் காணுறீஇக் களித்து வந்து கடவுளர் வைகலும் அளித்தி ரென்ன அழகிதென் றேகினார். 24 என்றும் ஆங்கவர் இச்செயல் ஆற்றியே பொன்றி னாரின் புலர்ந்து புலம்புறீஇத் துன்று கின்ற துயர்க்கடல் மூழ்கியே ஒன்றும் வேத வொழுக்கமற் றாரரோ. 25 ஆகத் திருவிருத்தம் - 1050 - - - 19. பு த ல் வ ரை ப் பெ று ப ட ல ம் அதுபொழு தவுணர் கோமான் ஆற்றிய தவத்தின் சீரால் பதுமகோ மளையென் றோதும் பாவைதன் உதரம் போந்து புதுமதிக் குழவி யேபோல் பொற்பொடு பொலிந்து முன்னம் மதலையங் கொருவன் வந்தான் மறலிக்கு மறலி போல்வான். 1 வந்ததோர் மதலை தன்னை மன்னவர் மன்னன் காணூஉ அந்தமில் மகிழ்ச்சி பொங்க அவுணர்தங் கிளைஞர்க் கெல்லாம் நந்திய வெறுக்கை தன்னை நலத்தக வீச லுற்றான் இந்திரன் முதலி னோரும் யாவரும் இடுக்கண் எய்த. 2 வீசிய பின்றை வானோர் மெல்லியர் அவுணர் மாதர் ஆசிகள் புகன்று போற்றி அன்னதோர் மைந்தன் தன்னைக் காசொடு வயிர முத்தங் கதிர்பொலந் தொட்டில் சேர்த்தார் மாசகல் மதிய மேபோல் பைப்பய வளர்தல் உற்றான். 3 கட்டழ குடைய மைந்தன் கம்பலங் கொண்ட செம்பொன் தொட்டிலில் துயிலு மெல்லை ஒருபகல் சுடரின் என்றூழ் விட்டதோர் நூழை தன்னால் மேவியே அனையன் மெய்யிற் பட்டதங் கதனை நாடிப் பரிதியைச் சுளித்துப் பார்த்தான். 4 பார்த்திடு கின்ற மைந்தன் பன்மணித் தொட்டில் நின்றுஞ் சீர்த்தெழுந் தண்டம் பாய்ந்து செங்கதிர்ச் செல்வற் பற்றிக் கார்த்திடு புயங்கங் கவ்வும் படித்தெனக் கரத்திற் கொண்டு போத்துமோர் இறையில் வந்தான் தவத்தினும் பெரிதொன் றுண்டோ. 5 தானுறை இருக்கை தன்னில் தகுவர்கோன் தனயன் சாரா ஆனதோர் செம்பொற் றொட்டில் அணிமணிக் காலி னூடே பானுவை வலிதிற் கட்டிப் பண்டுபோல் துயின்றான் அங்கண் வானவர் அதனை நோக்கி மனம்வெரீஇ மறுக்க முற்றார். 6 பரிதிவிண் சேறல் இன்றிப் பிழைத்தலும் பார்தந் துள்ளோன் கருதியிந் திரனே ஏனைக் கடவுளர் யாருஞ் சூழ நிருதர்கோன் தன்பால் வந்து நீடிருட் பகைவன் தன்னைத் தருதிநின் மைந்தன் செய்த தனிச்சிறை நீக்கி யென்றான். 7 வேறு மறைபு ரிந்தநான் முகன்இவை புகறலும் வானத் திறைபு ரிந்திடும் இரவியை என்மகன் இன்னே சிறைபு ரிந்ததை உணர்கிலேன் அவனது செய்யக் குறைபு ரிந்ததென் பகர்தியென் றுரைத்தனன் கொடியோன். 8 சொற்ற வாசகங் கேட்டலும் ஆருயிர்த் தொன்மை முற்று நாடிய நான்முகன் நின்மகன் முகமேல் அற்ற மில்சுடர் ஆதபந் தீண்டிய ததனால் பற்றி வெய்யவற் சிறைபுரிந் தானெனப் பகர்ந்தான். 9 மகவு தன்செயல் கேட்டலுஞ் சூரபன் மாவாந் தகுவர் கோன்மிக மகிழந்துநீர் என்மகற் சார்ந்து மிகவும் நன்மொழி கூறியே ஆங்கவன் விடுப்பப் பகல வற்கொடு போதிரால் ஈண்டெனப் பகர்ந்தான். 10 கேட்ட நான்முகன் நன்றென விடைகொண்டு கிளர்பொன் நாட்டின் மேனகை முதலினோர் பாடலின் நலத்தால் ஆட்டு பொன்மணித் தொட்டிலின் மிசையுறும் அண்ணல் மாட்டு மேவிநின் றளவையில் ஆசிகள் வகுத்தான். 11 அன்பின் மைந்தனைப் புகழ்ந்துமுன் நிற்றலும் அனையான் என்பெ றும்பரி சுமக்கென இன்னதோர் இரவி துன்பு றுஞ்சிறை அகற்றுதி என்றலுந் தொல்லோய் உன்பெ ரும்படை தருதியேல் விடுவனென் றுரைத்தான். 12 உரைத்த மைந்தனுக் கயன்றன தகன்படை யுதவ நிரைத்த செங்கதிர்ச் செல்வனை விடுத்தனன் நிருதன் விரைத்த பயங்கயக் கிழவனும் புதல்வனை வியந்து பரித்தி யாலென உதவினன் மோகவெம் படையே. 13 படைய ளித்தலும் பகலொடு பங்கயத் தவற்கு விடைய ளித்தனன் தாதையத் தன்மையை வினவி நடைய ளித்தனன் புதல்வனுக் கன்னதோர் நன்னா ளிடைய ளித்தனன் பானுகோ பன்எனும் இயற்பேர். 14 பானு கோபனென் றொருபெயர் பெற்றஅப் பாலன் மானை நேர்விழி மங்கையர் மதனென மயங்க ஆன பேருரு வெய்தியே அம்புயத் திருவின் கோனொ டேபொரு தவன்றனைப் பெருந்திறல் கொண்டான். 15 பரிதி யின்பகை யாமிவற் பெற்றபின் பரிவால் நிருதர் காவலன் அங்கிமா முகத்தனை நிறஞ்சேர் இரணி யன்றனை வச்சிர வாகுவை எழிலார் மருவு லாங்குழற் பதுமகோ மளைதர மகிழ்ந்தான். 16 மைத்த கூர்விழி ஏனைய தேவியர் மகிழ்வால் உய்த்து நல்கிடச் சூரனும் வெய்யவன் ஒருங்கே பத்து நூறுள மும்மைசேர் பாலரைப் பயந்தான் இத்தி றத்தவர் தம்முடன் அங்கண்வீற் றிருந்தான். 17 வேறு சீற்ற முற்றிடு சிங்க முகன்கணே தோற்றி னான்அதி சூரன்என் றோர்மகன் வீற்று நூற்றுவர் மேவினர் அன்னவர் ஆற்றல் யாவர் அறைந்திட வல்லரே. 18 அந்த நாளில் அவன்றன் இளவலாந் தந்தி மாமுகத் தாரகன் தன்னிடை முந்து செய்தவ மொய்ம்பினொர் மாமகன் வந்து தோன்றினன் வான்கதிர்ப் பிள்ளைபோல்*. 19 ( * வான் கதிர்ப் பிள்ளை - பாலசூரியன். ) ஆமி வன்அசு ரேந்திரன் என்றவற் கேம மான குரவன் இசைப்பஅந் நாமம் எய்தி நலம்பெறு காளையாய்க் காமன் என்னக் கவின்றனன் யாக்கையே. 20 ஓத ருங்கலை யாவும் உணர்கினும் ஏத மாவதோர் விஞ்சை இயற்றிடான் பாத கம்புரி யான்பழி பூண்கிலான் நீதி யன்றி எவையும் நினைகிலான். 21 வீறு கொண்டிகல் வீரம் புகன்றெதிர் மாறு கொண்டவர் உண்டெனின் மற்றவர் ஈறு கொண்டிட ஏற்றுர மேற்படை ஊறு கொண்டிட உன்னுந் தகைமையான். 22 சிகரம் எண்ணில சேட்படு கள்ளிதான் அகரும்** நல்கி அமர்ந்தென அன்னதோர் மகனை நல்கி வளங்கெழு மாயமா நகர வாழ்க்கையின் நண்ணினன் தாரகன். 23 ( ** அகர் - அகில்; பல அகில்களில் சதுரக்கள்ளி வைரமாகிய அகிலும் ஒன்று. ) ஆகத் திருவிருத்தம் - 1073 - - - 20. வி ல் வ ல ன் வா தா வி ப் ப ட ல ம் அன்னவ ருடன்வந்தாள் அசமுகி எனுநாமம் மன்னினள் ஒருவன்றன் மனையெனும் முறையில்லாள் தன்னிறை தவிர்கின்றாள் தருமம திலள்வானோர் பன்னியர் தமைமுன்னோர் படர்புயம் உறவுய்ப்பாள். 1 ஆள்வினை புரியுள்ளத் தவமுனி வரர்ஆற்றும் வேள்விநை யுறும்வண்ணம் வெந்தொழில் புரிகின்றாள் நீள்வினை வடிவானாள் நிருதர்ள் குலமெல்லாம் மாள்வினை யெனயாண்டும் வைகலும் உலவுற்றாள். 2 கட்டழ குளதாகுங் காளையர் தமைநாடிக் கிட்டினள் புணர்கிற்பாள் கேளிரை இகழ்வோரை அட்டனள் நுகர்கின்றான் அனையவள் ஒருவைகல் முட்டினள் துருவாச முனியுறு தனியெல்லை. 3 அந்தநன் முனிதன்னை ஆயிழை அவள்காணாச் சிந்துவன் இவனின்னே செய்தவம் அ·தன்றி மைந்தர்கள் பெறுவேனால் வல்லையில் இவண்என்னாப் புந்தியில் நினைவாயே போய்அவன் எதிருற்றாள். 4 உறுதலும் முனிநாடி ஒண்டோடி தனியேநீ குறுகிய தெவன்மாதோ கூறுதி யெனலோடும் மறுவறு முனிநின்பால் மனமகிழ வொடுமேவிச் சிறுவர்கள் பெறவந்தேன் செப்புவ திதுவென்றாள். 5 என்றலும் முனிசூரற் கிளையவள் எனநாடி வென்றிகொள் மடமாதே மேலுறு தவமெல்லாங் குன்றிடும் உனையின்னே கூடுவ னெனின்நீயும் நின்றிடல் பழியல்லால் நீதியும் அலவென்றான். 6 முனியிது பகர்வேலை மொய்குழல் மடமானாள் இனியுனை மருவாதே ஏகலன் ஒருவிப்போம் மனநினை வொழிகென்றே வன்மையி னொடுபுல்லி அனையவன் இதமூறல் ஆரமு தயிலுற்றாள். 7 ஆடெனு முகவெய்யாள் அனையனை வலிதாகக் கூடினள் அதுபோழ்தில் குறுகினர் இருமைந்தர் ஈடுறு வலிமிக்கார் இன்னவர் தமையன்னை மாடுற வருகென்றே மகிழ்வொடு தழுவுற்றாள். 8 தழுவினள் பரிவோடுந் தன்புதல் வரைநோக்கி மழகளி றனையீர்காள் வல்லவு ணரில்வந்தீர் விழுமிய தவமாற்றி மேவுதிர் வலியென்ன அழிதரு நிறைகொண்ட அசமுகி உரைசெய்தாள். 9 தாயின துருவாயுந் தந்தைதன் உருவாயும் ஏயின இருமைந்தர் வில்வலன் வாதாவி ஆயதொர் பெயர்பெற்றோர் அன்னைதன் உரைகொண்டே தூயதொர் குரவோன்றன் துணையடி பணிகுற்றார். 10 மூண்டிடு வெகுளித்தீ முனிவரன் அடிதன்னைப் பூண்டிடு திறன்மிக்க புதல்வரை யெதிர்நோக்கி வேண்டிய தெவனென்ன வெய்யவள் தருமைந்தர் ஈண்டுன தவமெல்லாம் யாம்பெற அருளென்றார். 11 ஆற்றிடு தவமெல்லாம் அருளெனின் அவைதாரேன் வீற்றொரு பொருளுண்டேல் வினவுதிர் எனமேலோன் சீற்றம துளராகிச் சிறுவர்கள் இவன்ஆவி மாற்றுதும் இவண்என்னா வல்லையின் எழலுற்றார். 12 இறுதிசெய் திடவுன்னி இகலுடன் எழுகின்ற சிறுவர்கள் செயல்நாடிச் சினமொடு முனிநீவிர் மறுவறு தவருக் வைகலும் இடர்செய்வீர் குறுமுனி நுமதாவி கொள்ளுக இனியென்றான். 13 இனையது முனிசொற்றே எமையடு வர்களென்னா மனமுறு தனிவிஞ்சை மாயையின் மறைபோழ்தில் தனயர்கள் இருவோருந் தந்தைத னைக்காணார் அனைதனை விடைகொண்டே யாயிடை ஒருவுற்றார். 14 வேறொரு வனமெய்தி மெய்த்தவர் குழுவெல்லாங் கோறலை மனமுன்னிக் குமரர்கள் இருவோரும் தேறிய வுணர்வோடுந் திசைமுக வனைநோக்கி ஈறகல் பகலாக எரியத னிடைநோற்றார். 15 செந்தழ லிடைநோன்பு செய்யவும் அயன்அங்கண் வந்திலன் அதுநாடி மற்றொரு செயலுன்னி வெந்திறல் இளையோனை வில்வல னெனும்வெய்யோன் சுந்தர மணிவாளால் துணிபட எறிகுற்றான். 16 கையன துடல்கீறிக் கறையொடு தசையெல்லாம் நெய்யுடன் அவியாக்கி நீடிய கனலூடே வையகம் அருள்தாதை மந்திர முறையுய்த்து வெய்யவன் ஒருவேள்வி விரைவொடு புரிகுற்றான். 17 தவமொடு மகமாற்றச் சதுர்முகன் அதுகண்டே அவனியின் மிசைவந்தே அரியதொர் செயல்செய்வாய் எவனருள் பரிசென்ன இணையடி தொழுதேத்தி அவுணர்கள் வடிவாம்வில் வலன்இவை அறைகின்றான். 18 வன்னியில் அவியூணாய் மாண்டிடும் ஒருபின்னோன் மெய்ந்நிறை வடிவோடும் விரைவுடன் வரல்வேண்டும் என்னலும் வாதாவி எழுகென அயன்ஓத அன்னதொர் பொழுதின்கண் ஆர்த்தவன் எழுந்திட்டான். 19 ஆங்கனம் அசுரேசன் அதிசய முளனாகித் தீங்குடன் ஒருசூழ்ச்சி சிந்தையி னிடையுன்னிப் பூங்கம லத்தோனைப் போற்றிசெய் தடியேனுக் கீங்கொரு வரம்எந்தாய் ஈகென உரைசெய்வான். 20 புல்லயின் மறியேபோற் பொலிவுறும் வாதாவி ஒல்லையின் இனிமேலும் உடல்துணி படுவானேல் எல்லையில் பரிவால்யான் எம்பியை எழுகென்னத் தொல்லையில் வடிவோடுந் தோன்றிமுன் வரல்வேண்டும். 21 இப்படி வரமொன்றே யான்பெற அருள்கென்றே மெய்ப்படும் உணர்வில்லா வில்வலன் உரைசெய்ய அப்படி பலகாலம் அதுமுடி கெனநல்கிச் செப்பரு மறைவேதாச் சேணுடை நெறிசென்றான். 22 சேறலும் அதுகாலைச் சிறுவர்கள் இருவோரும் ஏறென அமர்சூர்முன் ஏகியுன் மருகோர்யாம் வேறல எனவோதி மேதினி முனிவோரைக் கோறல்செய் வெருவன்மை கொண்டதும் உரைசெய்தார். 23 மன்னவன் அவர்தம்மை மகிழ்வொடு நனிபுல்லி என்னுழை மருகீர்காள் இனிமையொ டுறுமென்ன அன்னவர் சிலவைகல் ஆயிடை தனில்வைகிப் பின்னுற இருவோரும் பெருநில மிசைவந்தார். 24 நவைதவிர் குடகின்கண் நால்வகை நெறிகூடுங் கவலையின் வளமல்குங் கானக விடைதன்னில் அவுணர்கள் தாம் அங்கோர் ஆச்சிர மஞ்செய்தே எவரெவ ரும்வெ·கும் எப்பொருள் களுமுய்த்தார். 25 அன்னதொ ரிடைதன்னில் ஆரிட ராயுள்ளோர் இன்னுயிர் கொளவுன்னி இருவருள் இளமைந்தன் பொன்னிவர் திரிகோட்டுப் பொருதக ராய்நிற்க முன்னவன் விரதஞ்செய் முனிவரின் இனிதுற்றான். 26 வில்வலன் எனவோதும் வெய்யவன் அவ்வெல்லைச் செல்வதோர் முனிவோரைச் செவ்விதின் எதிர்கொண்டு வல்விரை வொடுதாழ்ந்து மற்றும தடியேன்றன் இல்வரு வீரென்னா இயல்பொடு கொடுசென்றே. 27 இப்பகல் அடிகேளுக் கிவ்விடை உணவென்னா ஒப்பறு நெறிகூறி ஓதன வகையெல்லாம் அப்பொழு தினிலட்டே அயமெனும் இளையோனைத் துப்புறு கறியாகத் துண்டம துறுவித்தே. 28 உள்ளுறு குறியாகும் ஊன்முழு வதும்நாடி வள்ளுறு சுடர்வாளால் வகைவகை படவீர்ந்தே அள்ளுறு கறியாக அட்டபின் அவரவ்வூண் கொள்ளுற நுகர்வித்தே கூவுவன் இளையோனை. 29 கூவிய பொழுதின்கட் கொறியெனும் உருவானோன் ஆவிமெய் யுளனாகி அன்னவர் உதரத்தை மாவலி யொடுகீண்டே வருதலும் இருவோருஞ் சாவுறு முனிவோர்தந் தசையினை மிசைவாரால். 30 வேறு வீடுறு முனிவர்ஊன் மிசைந்து தொன்மைபோல் ஆடென முனியென அனையர் மேவிய நாடொறும் இச்செயல் நடாத்தி யுற்றனர் கேடறு முனிவர்தங் கிளைகள் மாளவே. 31 ஆகத் திருவிருத்தம் - 1104 - - - - 21. இ ந் தி ர ன் க ர ந் து றை ப ட ல ம் இப்படி அவுணர்கள் இனையர் ஏனையோர் செப்பரு முனிவரைத் தேவர் தங்களை ஒப்பறு நரர்தமை ஒறுப்ப மாயைதன் வைப்புறு காதலன் அரசின் மன்னினான். 1 ஆயிரத் தெடடெனும் அண்டம் யாவையுஞ் சேயுயர் இந்திர ஞாலத் தேர்மிசை ஏயெனும் அளவையில் ஏகி வைகலும் நாயக முறையினை நடாத்தி நண்ணினான். 2 ஒருபகற் பாதலத் தூடு வைகிடும் ஒருபகல் மாதிரம் உலவிச் சேர்தரும் ஒருபகல் விண்பதந் தோறும் உற்றிடும் ஒருபகல் அயன்பதத் துன்னி மன்னுமே. 3 தண்ணறுந் துளவினான் தனது தொல்பதம் நண்ணிடும் ஒருபகல் நாளு மிவ்வகை எண்ணரும் உலகுதோ றேதி மாலையில் துண்ணென மீள்வனால் சூர பன்மனே. 4 அவ்வகை யால்அர சாற்றும் எல்லையில் எவ்வமில் சூர்முதல் இந்தி ரன்னெனுந் தெவ்வினை வன்சிறை செய்து தேவியை வவ்விய வுன்னினன் வருவ தோர்கிலான். 5 உன்னிய தீயவன் ஒருதன் தானையின் மன்னனை விளித்துநீ வாச வன்றனை இன்னதோர் பொழுதினில் எய்திப் பற்றியென் முன்னுற விடுகென முன்னம் ஏவியே. 6 நீடிய தன்பெரு நிலயங் காப்பவர் கோடுறு நிசிசரர் குலத்துள் தோன்றினார் கேடகம் வாள்அயில் கெழுவு கையினார் பாடவ மடந்தையர் பவங்கள் போன்றுளார். 7 ஒன்பது கோடியர் தம்மை ஒல்லையில் அன்புடன் விளித்துநீர் அமரர் தம்மிறை இன்புறு தேவியைப் பற்றி யீமென வன்பொடு போக்கினன் மன்னர் மன்னனே. 8 போக்கலும் அவரெலாம் பொன்னின் நாட்டின் மேல் ஊக்கம தாகியே உருத்துச் சேறலும் நோக்கிய தூதுவர் நொய்திற் போகியே மாக்கிளர் இந்திரன் மருங்கு நண்ணினார். 9 வந்நனர் அவுணரும் வயங்கொள் மாதரும் அந்தமில் படையொடும் அடல்செய் நீரர்போல் சிந்தனை யாவதோ தெரிந்தி லோமென இந்திரன் வினவுற இசைத்து நிற்கவே. 10 பொம்மென அவர்தமைப் போக்கித் தீயினும் வெம்மைகொள் நெஞ்சினார் வினைய முன்னியே அம்மனை மனைவியோ டகன்று மாயையான் இம்மென இப்புவி தன்னில் ஏகினான். 11 ஏகிய வெல்லையின் இகல்வெஞ் சூர்விடப் போகிய மாதரும் பொருவில் வீரரும் நாகர்தம் மிறையமர் நகரை நண்ணினார் ஆகர முதலிய இடந்தொ றாய்குவார். 12 வினைவயிற் சென்றிடும் வீரர் யாவருந் துனைமத் திறைவனைத் துவிக் காண்கிலர் மனைவியைக் காண்கிலர் மாதர் யாவரும் நினைவயர்த் துள்ளுறு கவலை நீடினார். 13 நாயகன் இவ்விடை நம்மைக் கூவியே ஏயின செயலினை ஈறு செய்கிலம் போயினன் சசியொடும் புலவர் கோனெனா ஆயவன் நகரெலாம் ஆய்வுற் றாரரோ. 14 சுற்றினர் நகரெலாந் துவித் தேவரைப் பற்றினர் விலங்கலின் பகைவற் காட்டென எற்றினர் புலோமசை யாண்டை யாளெனக் குற்றினர் வாய்தொறுங் குருதி பாயவே. 15 விண்ணவர் யாவரும் வேந்துந் தேவியும் நண்ணிய துணர்கிலம் நாங்கள் எங்களைத் துண்ணென வருத்தலிர் துயர்கின் றோமெனாத் தண்ணளி வருநெறி தளர்ந்து சாற்றவே. 16 விட்டனர் தேவரை விண்ணை நீங்கினர் முட்டினர் மகேந்திர மதிய மாநகர் கிட்டினர் வேந்தனைக் கிளர்ந்து வானிடைப் பட்டது புகன்றனர் பழிகொள் நெஞ்சினார். 17 போயினர் இருவரும் புறத்த ராயென ஆயவர் மொழியவே அவுணர் மன்னவன் தீயென வெகுண்டனன் தேடொ ணாததோர் தூய்மணி இழந்திடும் அரவின் துன்புளான். 18 ஒற்றரி பலர்தமை யொல்லை கூவியே பொற்றொடி அணங்கொடு பொன்னின் நாட்டவர் கொற்றவன் இருந்துழிக் குறுகி நாடியே சொற்றிடு வீரெனச் சூரன் தூண்டினான். 19 தோடவிழ் தெரியலான் தூண்டை ஒற்றர்கள் ஓடினர் வீற்றுவீற் றுலக மெங்கணும் தேடினர் காண்கிலர் திரிகுற் றார்இனி நீடிய பொன்னகர் நிகழ்ச்சி கூறுகேன். 20 வேறு செல்லெனும் ஊர்தி அண்ணல் தேவியுந் தானும் நீங்கச் சொல்லருங் ககனம் பூத்த சோமனும் உடுவும் போன எல்லியம் பொழுது போன்றே யாதுமோர் சிறப்பும் இன்றாய்ப் புல்லென லாய தன்றே பொருவில்பொன் னகர மெல்லாம். 21 அழிந்தன வளங்க ளெல்லாம் ஆகுல மயங்கிற் றின்பம் ஒழிந்தது வானோர் உள்ளம் ஒடுங்கிய துலக மெங்கும் எழுந்தது புலம்ப லோதை யாவர்தங் கண்ணுந் தெண்ணீர் பொழிந்தது சுவர்க்கம் ஆவி போனவர் போன்ற தன்றே. 22 இன்னனம் நிகழும் முன்னர் இந்திரன் இளவ லாகி மன்னிய உபேந்தி ரன்றான் வானவர் உலகை நீங்கி முன்னைவை குண்டம் புக்கான் முனிவரர் கலிக்கா வஞ்சிக் கன்னிகை நோற்று மேவுங் காஞ்சியை யடைந்த வாபோல். 23 சேண்பதந் தன்னை நீங்குஞ் சிறியதோர் தந்தை தன்னைக் காண்பது கருதிப் போந்து கடவுளர்க் கிறைவன் மைந்தன் தூண்புரை கின்ற செம்பொற் றோளுடைச் சயந்தன் என்போன் மாண்பொடு சிறிது வைகல் வைகுண்டத் திருந்தான் அன்றே. 24 இருந்திடு சயந்தன் என்போன் இந்திரன் இறைவி யோடுங் கரந்துடன் போந்த வாறுங் காமரு துறக்கந் தன்னில் விரைந்துவந் தவுணர் தேடி மீண்டிட விண்ணு ளோர்கள் அரந்தையோ டுற்ற வாறும் அங்ஙனந் தேர்ந்தான் அம்மா. 25 தந்தைதன் மெலிவு காணில் தங்குடித் தலைமை யெல்லாம் மைந்தர்கள் பரித்துக் கோடல் வழக்கதாம் அறனும் அ·தே எந்தையு மில்லை யான்போய் என்னகர் காப்ப னென்னாப் புந்தியி லுன்னி மைந்தன் பொன்னகர் தன்னில் வந்தான். 26 பொன்னகர் புக்க மைந்தன் புலம்புறு சுரரைக் கண்டு தன்னுயிர் போலுந் தந்தை தாய்தனைக் காணா னாகி இன்னலங் கடலின் மூழ்கி ஏக்கமோ டிரக்க மிக்குப் பின்னொரு செயலு மின்றிப் பித்தரே போல வுற்றான். 27 உற்றிடு மெல்லை தன்னில் உம்பர்கோன் மதலை யுள்ளந் தெற்றெனத் தௌ¤ப்ப வுன்னி நாரதன் என்னுஞ் சீர்சால் நற்றவ முனிவன் செல்ல நடுக்கமோ டெழுந்து தாழ்ந்து மற்றொரு தவிசு நல்கி இருத்தியே மருங்கு நின்றான். 28 நின்றிடு சயந்தன் சொல்வான் நித்தலும் வருத்தஞ் செய்யும் வன்றிறற் சூரற் கஞ்சி மற்றெனைப் பயந்த மேலோர் சென்றனர் சென்ற வெல்லை தெரிந்திலேன் எமக்குத் தீமை என்றினி யகலுங் கொல்லோ எம்பிரான் இயம்பு கென்றான். 29 தருக்கினை இழந்து நின்ற சயந்தன்இத் தன்மை கூறப் பொருக்கென முனிவன் ஓர்ந்து பொங்குபே ரருளால் நோக்கித் திருக்கிளர் கின்ற தாங்கோர் செழுமணித் தவிசின் மீதில் இருக்கென இருத்திப் பின்னர் இன்னன இசைக்க லுற்றான். 30 தீங்குவந் தடையு மாறும் நம்மைதான் சேரு மாறும் தாங்கள்செய் வினையி னாலே தத்தமக் காய அல்லால் ஆங்கவை பிறரால் வாரா அமுதநஞ் சிரண்டி னுக்கும் ஓங்கிய சுவையின் பேதம் உதவினார் சிலரும் உண்டோ. 31 இன்பம தடைந்த காலை இனிதென மகிழ்ச்சி எய்தான் துன்பம துற்ற போதுந் துண்ணெனத் துளங்கிச் சோரார் இன்பமுந் துன்பந் தானும் இவ்வுடற் கியைந்த வென்றே முன்புறு தொடர்பை ஓர்வார் முழுவதும் உணர்ந்த நீரார். 32 வறியவர் செல்வ ராவர் செல்வர்பின் வறிய ராவர் சிறியவர் உயர்ந்தோ ராவர் உயர்ந்துளோர் சிறிய ராவர் முறைமுறை நிகழும் ஈது முன்னையூழ் வினையே கண்டாய் எறிகதிர் வழங்கும் ஞாலத் தியற்கையும் இனைய தன்றோ. 33 ஆக்கமும் வறுமை தானும் அல்லலும் மகிழ்வு மெல்லாம் நீக்கமில் உயிர்கட் கென்றும் நிலையெனக் கொள்ளற் பாற்றோ மேக்குயர் கடவுட் டிங்கள் வெண்ணிலாக் கதிரின் கற்றை போக்கொடு வரவு நாளும் முறைமுறை பொருந்திற் றன்றே. 34 ஆதலின் உமது தாழ்வும் அவுணர் தம்உயர்வும் நில்லா ஈதுமெய் யென்று கோடி இந்நகர் தணந்து போன தாதையும் பயந்த தாயும் தம்முருக் கரந்து போந்து மேதினி வரைப்பி னூடு மேவினர் போலு மன்றே. 35 மைந்தநீ தோற்று முன்னம் வானவர்க் கலக்கண் செய்த தந்தியின் முகங்கொண் டுற்ற தானவன் துஞ்சும் வண்ணம் அந்தநாள் உனது தந்தை முயன்றனன் அதனைப் போல இந்தவெஞ சூரன் மாயம் இன்னமும் முயல்வன் கண்டாய். 36 என்றிவை பலவுங் கூறி இன்னினி வெஞ்சூர் தானும் பொன்றிடும் உமது துன்பும் பொள்ளென அகன்று போரும் நன்றிது துணிதி யென்றே நாரத முனிவன் தேற்றிச் சென்றனன் சயந்தன் அங்கண் இருந்தனன் தெட்ப மெய்தி. 37 வருந்திய அமரர் தம்மை மனப்படத் தேற்றி நாளுந் திருந்தலன் பணித்த ஏவல் செய்திடத் தூண்டி வான்மேல் இருந்தனன் சயந்த னென்போன் இருநிலத் திடைமுன் போன புரந்தரன் செய்த தன்மை யானினிப் புகலு கின்றேன். 38 மெய்த்தரு நீழல் வைகும் வெறுக்கையை வெறுத்துப் பாரில் சித்திர மனைவி யோடுந் தெக்கிண தேயம் புக்குப் பத்துடன் இரண்டு நாமம் படைத்ததொல் காழி நண்ணி இத்தல மினிதே யென்னா இருந்தனன் இமையோர் கோமான். 39 அந்தநல் லிருக்கை தன்னில் அயர்வுயிர்த் திறைவி யோடும் இந்திரன் இருந்த பின்னர் என்றுநாம் இறைவற் போற்றிப் புந்திகொள் மகிழவாற் பூசை புரிதுமென் றுன்னி யாண்டோர் நந்தன வனத்தை வைப்பான் நாடியே இனைய செய்வான். 40 சந்தகில் பலவு தேமாச் சரளமே திலகந் தேக்குக் கொந்தவிழ் அசோகு புன்கு குரவொடு நாளி கேரம் நந்திய கதலி கன்னல் நாகிளம் பூகம் வன்னி முந்துயர் காஞ்சி வேங்கை முதலிய வேலி கோலி. 41 சாதியே கோங்கு நாகஞ் சண்பகம் இதழி ஞாழல் பாதிரி வழையே குந்தம் பாரிசா தஞ்செ ருத்தி போதுறு நரந்தம் வில்வம் பொலிகா வீரஞ் செச்சை கோதறு மயிலை மௌவல் கொழுந்துசெவ் வந்தி முல்லை. 42 இவைமுத லாகி யுள்ள தருக்களும் புதலு மெல்லாம் நவையறந் தெரிந்து வைத்தோர் நந்தன வனத்தைத் செய்ய அவைமிக மலர்ந்த அம்மா அம்மலர் கொண்டு நாளுஞ் சிவனடி அருச்சித் தங்கட் டேவியோ டிறைவன் உற்றான். 43 உற்றிடு மெல்லை தன்னில் உலகினில் அவுணர்க் கெல்லாங் கொற்றவன் விடுத்த ஒற்றர் குவலயந் துருவிச் செல்ல அற்றது தெரிந்து வல்லே அமரர்கோன் துணைவி யோடு மற்றவண் வேணு வாகி மறைந்துநோற் றிருந்தான் மாதோ. 44 வேணுவின் உருப்போல் நின்று மெலிவொடு நோற்று நாளுந் தாணுவை வழிபட் டங்கட் சரமகன் சாரும் நாளிற் காணிலர் ஒற்றர் போனார் கருமுகில் அவுணர் தங்கள் ஆணையிற் பெய்யா தாக அவ்வனம் வாடிற் றன்றே. 45 நீடிய காமர் பூங்கா நெருப்புறு தன்மைத் தென்ன வாடின நீரின் றாகி மற்றது மகத்தின் கோமான் நாடினன் கவன்று தொன்னாள் நான்முகத் தவனும் மாலுந் தேடரும் பரனை யுன்னி இரங்கின்ன் செயல்வே றில்லான். 46 திருந்தலர் புரமூன் றட்ட சேவகற் பரவ லோடும் பொருந்தலர் பூங்கா வாடிப் போயின எனினும் பொன்றா இருந்தலம் இதனில் யாறொன் றெய்துமால் மகவான் இன்னே வருந்தலை என்றோர் மாற்றம் வானிடை எழுந்த தன்றே. 47 எழுவதோர் செஞ்சொற் ளோ எம்பிரான் அருளீ தென்னாத் தொழுதனன் போற்றி மேனி துண்ணெனப் பொடிப்பச் சிந்தை முழுவதும் மகிழ்ச்சி பொங்க மொய்ம்பொடே இருந்தான் அங்கண் அழகிய நதியொன் றுற்ற வரன்முறை அறைய லுற்றேன். 48 ஆகத் திருவிருத்தம் - 1152 - - - 22. வி ந் த கி ரி ப் ப ட ல ம் அந்தப் பொழுதத் தளிகொண் டுடையோர் சிந்தைக் கௌ¤தாஞ் சிவன்மெய் யருளான் முந்துற் றுணர்நா ரதமா முனிவன் விந்தக் கிரிமுன் னுறமே வினனால். 1 மேவிப் பலஆ சிவிளம் புதலுந் தேவப் படிவங் கொள்சிலம் புதொழா ஆவற் புதம்வந் ததெம்மண் ணலென கூவப் படுபான் மையிசைத் திடுவான். 2 மேருத் தனிவெற் புவிதிக் கரியோன் மூரிச் சிலையா கியமொய்ம் பதனால் தாரித் துலகீன் றவள்தன் மரபாற் பேரற் பொடுவந் துபிறக் கையினால். 3 குன்றுக் கிறையாய் உறுகொள் கையினால் என்றைத் தொடவிண் ணிலெழுந் துறலால் இன்றிப் புவியா வையும் நித் தன்அடும் அன்றைப் பகல்கா றும்அளித் திடலால். 4 ஓரா யிரமாம் முடியுள் ளதனால் காரார் களன்மே யகவின் கயிலை சாரா வொருசார் வுறுதன் மையினால் சூரான் அவனால் தொலைவில் லதனால். 5 தாழுங் கதிருந் தகுமேல் நெறியில் வாழுஞ் சசியும் மலிதா ரகையும் ஏழென் றிடுகோ ளுமியா வர்களுஞ் சூழும் படிநின் றிடுதொன் மையினால். 6 கொன்னே இமையோர் குடிகொண் டதனால் பொன்னேர் கொடுயர்ந் துபொருந் துதலால் பன்னே மிகள்சூழ வருபான் மையினால் தன்னேர் இலையென் றுதருக் கியதே. 7 பரந்தும் பர்நிமிர்ந் திடுபைம் பொன்வரை பெருந்தன் மைமதித் திடுபெற் றியைநீ தெரிந்தில் லைகொல்அன் னசெயற் கையெலாம் விரைந்துன் னொடுசெப் பியமே வினனே. 8 என்றான் முனிவோன் இதுகேட் டிடலும் ஒன்றா கியதே வுருவாய் எதிரும் வன்றாழ் கிரிமா மறமுற் றுயிரா நன்றால் இ·தென் றுநகைத் தறையும். 9 இல்லா புளதொல் லிறுமாப் பகலம் பல்லார் இகழப் பகரும் விதியான் அல்லா ரெனவே நனிநா ணமுறா வில்லா கிவளைந் ததுமேன் மையதோ. 10 பொன்னார் இமவான் புரிநோன பதனால் அன்னான் இடைவந் தமர்வுற் றனளால் மன்னா குமவன் மகளா யினளோ எந்நா ளுமியா ரையுமீன் றருள்வாள். 11 பாங்குற் றிடுபா ரினையாற் றுவனென் றோங்குற் றனன்எவ் வுலகும் பரியா ஆங்குற் றனவோ பலஅன் னவையுந் தாங்குற் றதுகண் ணுதல்சத் தியதே. 12 விற்சூழ் கதிரோன் முதல்விண் ணவர்கள் தற்சூழ்ந் தனல்அல் லதுசந் ததமும் எற்சூழ்ந் திலரோ எழுதீ வுளவாங் கற்சூழந் திலரோ கடல்சூழந் திலரோ. 13 பன்னிற் குவடும் பலவுண் டெனவே உன்னுற் றிடுமோ உயர்கள் ளிகளின் சென்னித் தொகையைத் தெரிசிக் கின்அயன் தன்னொத் திலனோ தலைநான் குளவே. 14 கடிதா கியசூ£¢ இதுகல் லெனவே அடரா மல்விடுத் தனன்அன் றுதனை நெடிதே யதுவுன் னிலன்நீள் பரிதிப் படையா னினும்ஆற் றல்படைத் துளனோ. 15 தண்ணுற் றிடுபொன் மைதயங் குருவம் நண்ணுற் றனமென் றுளநா டினனோ எண்ணுற் றவன்நல் லுணர்வெய் திலனான் மண்ணிற் புனைபா வைவனப் பதுவே. 16 தன்கண் ணுறுவா னவர்தாம் பலரும் என்கண் ணமரா மல்இகழ்ந் தனரோ நன்கண் ணுதல்நா யகனா¢ கயிலை யின்கண் அரகுற் றிலதெக் கிரியே. 17 திருவைத் தவர்கண் டுயில்செங் கண்அரா மருவித் தனைமுந் துமறைத் திடுநாள் விரைவிற் படரூ தைவெகுண் டுபறித் தொருமுத் தலைகொண் டதுணர்ந் திலனோ. 18 கிளர்ப்புற் றிடுசிம் புளர்கே சரிமுன் அளப்பற் றிடுதன் னுருவண் டமெலாம் வளர்ப்புற் றிடுஞான் றொர்மணிப் பரல்போல் குளப்புற் றனன்ஈ துகுறித் திலனோ. 19 வரபத் திரைகேள் வன்மறம் புரியுஞ் சரபத் துருவுற் றுழிதாழ் சிறையின் விரவிப் படரூ தையின்மின் மினிபோல் திரிகுற் றனன்அன் னதுதேற் றிலனோ. 20 அறியுற் றிடுபா ரதமா னவெலாங் குறியுற் றிடதோல் முகர்குஞ் சரன்மேல் எறியுற் றமருப் பினிலே டெனலாய்ப் பொறியுற் றிடுமென் பதுபொய்த் திடுமோ. 21 தானோர் வரையல் லதுதா ரணியுண் கோனோ அலன்அல் லதுகோ கனத வானோன் அலன்வா சவன்அல் லன்அவன் ஏனோ தனைமே லெனவெண் ணியதே. 22 என்னா வடவெற் பையிழித் துரையா அந்நா கம்பியக் கும்அகந் தையினை நன்னா ரதநீக் குவனநா டுகெனா முன்னா வுருநீத் ததுமொய் வரையே. 23 வேறு எண்டரு முகுந்தர் கோடி எல்லையின் மாயை யாக்கை கொண்டனர் திரண்டு நீண்டு குலாய்நிமிர் கொள்கைத் தென்ன விண்டொடா விந்த மாங்கோர் விஞ்சையால் அகன்று சேண்போய்ப் புண்டரி கத்தன் மேய புரத்துணை நிமிர்ந்த தன்றே. 24 உருக்கிளர் விந்த மென்னும் உருகெழு பிறங்கல் மேல்போய்ப் பரக்கம் தாகி அம்பொற் பனிவரை காறும் ஆன்று நெருக்கிய தனைய பான்மை நிலமுழு தளந்த மேலோன் திருக்கிளர் பொன்னந் தூசு புனைந்தெனத் திகழந்த தம்மா. 25 விந்தமிந் நெறியால் ஆன்று மேக்குறக் கிளர்ந்து போகி அந்தர நெறியை மாற்ற அலரிவெண் டிங்கள் சேயோன் புந்திபொன் புகரே காரி புயங்கநாள் பிறரும் நோக்கிச் சிந்தையில் துணுக்க மெய்தி இனையன செப்ப லுற்றார். 26 தானவர் செயலோ என்பார் தருமமில் அரக்க வெய்யோ ரானவர் செயலோ என்பார் அல்லவேல் அயன்மா லென்னும் வானவர் செயலோ என்பார் மாயமீ தாகும் என்பார் மேனிமிர் பிறங்க லின்றி வௌ¢ளிடை இலைகொல் என்பார். 27 என்னிது வென்று போதத் தெம்பிரான் அருளால் நாட அன்னது தெரித லோடும் ஆமிது விந்த மேருத் தன்னுடன் இகலொன் றுண்டாய்த் தராதல வரைப்பில் வானில் சென்னெறி விலக்கிற் றென்று சிந்தனை செய்து தேர்வார். 28 செம்பொன்மால் வரையின் பாங்கிற் சிவனடி யுன்னி நோற்றே அம்புரா சியைமுன் னுண்டோன் அமர்ந்தனன் அவனீண் டுற்றால் உம்பர்போய் நின்ற விந்தம் ஒடுங்கும்என் றியாரும் ஓர்ந்து கும்பமா முனியை யுன்னி இனையன கூற லுற்றார். 29 ஆகத் திருவிருத்தம் - 1181 - - - 23. அ க த் தி ய ப் ப ட ல ம் பொன்னார் கழல்கள் அருச்சித்திடப் போது கொய்யுங் கைந்நாக மாலை நினைந்தே கராவொன்று கௌவ என்னா யகனே எனத்தன் கையெடுத் தழைப்ப அன்னான்அங் கெய்தி விடுவித்த தறிகி லாயோ. 1 பூவார் கமலத் தயன்நல்கிய பூவை தன்மேல் தூவா மயலாய்க் கிளியாகித் தொடர்ந்து செல்லக் காவாய் பரனே எனலோடுங் கலங்கல் என்றே தேவாதி தேவன் அருள்செய்தது தேர்கி லாயோ. 2 சத்தார் பிருகு தனதில்லைத் தடிந்த வெல்லை இத்தா ரணியில் அளவில்பிறப் பெய்து கென்ன அத்தா அருளென் றரிநோற்றுழி ஐயன் வந்து பத்தாக என்று நிறுவுற்றது பார்த்தி டாயோ. 3 தேவர்க் கெனினும் நிலத்தின்கட் செறிந்து வாழ்வோர் ஏவர்க் கெனினும் ஒருதுன்புறின் எய்தி நீக்கல் காவற் குரியார் கடனாம்அக் கடமை தூக்கின் மேவற் கரிதாந் தனிமுத்தியின் மேல தன்றோ. 4 தௌ¢ளத் தௌ¤ந்த மறைக்கள்வனைச் செற்ற மீன்போல் அள்ளற் கடலை ஒருநீ அகன்கை யடக்கிக் கள்ளத் தவுணன் நிலைகாட்டிநங் கண்ணில் வைத்த கொள்ளைக் கருணை உலகெங்கணுங் கொண்ட தெந்தாய். 5 விந்தக் கிரிநாரதன் சூழ்ச்சியின் மேரு வெற்போ டிந்தப் பொழுதத் திகல்கொண் டுலகெங்கும் ஈறாம் அந்தத் துயருங் கயிலைக்கிணை யாவ லென்றே சிந்தித் ததுகொல் எழுந்திட்டது சேண தெல்லாம். 6 மண்ணுற்ற வெல்லை அளவிட்டிடு மால்கொ லென்றே எண்ணுற் றெவரும் வெருக்கொண்டிட ஈண்டை விந்தம் விண்ணுற்ற அண்டத் துணையாய்மிசைப் போவ தையா கண்ணுற்ற நோக்கம் விடுத்தேயிது காண்கி லாயோ. 7 மல்லற் கிரிவிண் ணெறிமாற்றலின் மற்றெ மக்குஞ் செல்லற் கரிதாயது பாருடைத் தேய முற்றும் எல்லைப் பொழுது மயக்குற்ற இவற்றை நீக்க ஒல்லைக் குறியோய் வரல்வேண்டுமென் றுன்ன லுற்றார். 8 வேறு உன்ன லோடும் உலகம் நனந்தலைப் பொன்னின் மேருப் புடையொர் பொதும்பரின் மன்னி நோற்றுறை வண்டமிழ் மாமுனி தன்னு ளத்தில்அத் தன்மைகண் டானரோ. 9 மேக்கு யர்ந்திடும் விந்தத்தின் ஆற்றலை நீக்கி வான நெறியினைத் தொன்மைபோல் ஆக்கி அண்டர் குறையும் அகற்றுவான் ஊக்கி னான்முன் உததியை உண்டுளான். 10 துள்ளி கண்ணிடைத் தூங்குறக கைதொழ உள்ளம் என்பொ டுருகவு ரோமமார் புள்ளி பொங்கப் புகழந்து பரிசடை வள்ளல் தன்னை மனத்திடை முன்னினான். 11 முன்னும் எல்லையில் மூரிவௌ¢ ளேறெனும் மின்னு தண்சுடர் வௌ¢ளிவெற் பின்மிசைப் பொன்னின் மால்வரை போந்தெனப் புங்கவன் துன்னு பாரிடர் சூழ்தரத் தோன்றினான். 12 ஆதி யுற்றுழி அச்சமொ டேயெழீஇ மூது ரைத்தமிழ் முற்றுணர் மாமுனி கோதை யுற்றிடக் கொம்பொடு வாங்கிய பாத வத்திற் பணிந்தனன் பன்முறை. 13 சென்னி பாரில் திளைத்திடத் தாழ்ந்துபின் முன்னர் நின்று முறைபட போற்றலும் மின்னு லாஞ்சடை விண்ணவன் வெ·கிய தென்னை மற்ற தியம்புரி யாலென்றான். 14 விந்த மால்வரை மேருவை மாறுகொண் டந்த ரத்தை யடைத்த ததன்வலி சிந்த என்கட் சிறிதருள் செய்கெனாச் சந்த நூற்றமிழ்த் தாபதன் கூறினான். 15 அக்க ணத்துனக் காற்றல் வழங்கினாம் மிக்க விந்தத்தை வேரொடும் வீட்டிஅத் தெக்கி ணஞ்சென்று சீர்ப்பொதி யத்திடைப் புக்கு வைகெனப் புங்கவன் செப்பினான். 16 என்ற லுந்தொழு தேத்திநின் பூசனை நன்று செய்ய நளிதடங் கூவலும் நின்றி டாப்புனல் நீடவுந் தென்றிசைக் கொன்றொர் தீர்த்தம் உதவுகென் றோதினான். 17 அனைய காலை அருங்கயி லாயமேல் இனிது வைகிய ஏழ்நதி தன்னுளும் புனித மாகிய பூம்புனற் பொன்னியைப் பனிம திச்சடைப் பண்ணவன் முன்னினான். 18 அந்த வேலை அ·துணர்ந் தேவெரீஇச் சிந்தை பின்னுறச் சென்று திருமுனம் வந்து காவிரி வந்தனை செய்தலும் எந்தை நோக்கி இதனை இயம்புவான். 19 தீது நீங்கிய தென்றிசைக் கேகிய கோதி லாத குறுமுனி தன்னொடும் போதல் வேண்டும் பொருபுனற் காவிரி மாது நீயென மற்றவள் கூறுவாள். 20 திண்மை ஐம்பொறி செற்றுளன் ஆயினும் அண்ண லேயிவன் ஆண்டகை யாகுமால் பெண்ணி யானிவன் பின்செலல் நீதியோ எண்ணின் ஈதும் இயற்கையன் றென்னவே. 21 திரிபில் சிந்தையன் தீதுநன் கிற்படா ஒருமை கொண்ட உளத்தன்நம் மன்பருள் பெரியன் ஈங்கிவன் பின்னுறச் செல்கெனா அருள்பு ரிந்தனன் ஆல மிடற்றினான். 22 ஆங்க தற்கிசைந் தந்நதி யின்றியான் தீங்கி லாத முனியொடு பின்செல்வன் ஓங்கல் மேய வொருவ இவன்றனை நீங்கு காலத்தை நீயருள் கென்னவே. 23 நன்று நன்றிது நங்கைநின் காரணத் தென்று நோக்கி இவன்கரங் காட்டுவன் அன்று நீங்கி அவனியின் பாலதாய்ச் சென்று வைகெனச் செப்பினன் எந்தையே. 24 செப்பு மாற்றஞ் செவிக்கமு தாதலும் அப்பெ ரும்புன லாறவன் பின்செல ஒப்ப லோடும் உயிர்க்குயி ராகியோன் தப்பின் மாமுனிக் கின்னது சாற்றினான். 25 நீடு காவிரி நீத்தத்தை நீயினிக் கோடி உன்பெருங் குண்டிகைப் பாலென நாடி யத்திறஞ் செய்தலும் நன்முனி மாடு சேர்ந்தனள் மாநதி யென்பவே. 26 ஆய காலை அகத்திய தென்றிசைத் தேய மேகெனச் சீர்விடை நல்குறாப் பாயு மால்விடைப் பாகன் மறைந்தனன் போயி னான்செறி பூதரி னத்தொடும். 27 வேறு அத்தனங் கொருவ அன்னான் அருளடைந் தங்கண் நீங்கி மெய்த்தகு மதலை வேண்டி விதர்ப்பர்கோன் பயந்த லோபா முத்திரை தனைமுன் வேண்டு*மு துக்குறைத் திண்மை சான்ற சிந்தனை யளித்த வள்ளல் தென்றிசை நோக்கிச் சென்றான். 28 ( * முதுக்குறைத் திண்மை சான்ற சித்தன் - புலத்திய முனிவன். முதுக்குறை - பேரறிவு. ) ஆகத் திருவிருத்தம் - 1209 - - - 24. கி ர வு ஞ் ச ப் ப ட ல ம் பொன்றிகழ வரையின் நின்றுங் குறுமுனி புவியே ஆறாத் தென்றிசைக் கேகு மெல்லைத் திறலரிக் கிளவல் வாழ்க்கை வன்றிறல் மாய மூதூர் வந்தெய்த ஆண்டை வைகும் அன்றிலம் பேர்பெற் றுள்ள அவுணன்அத் தன்மை கண்டான். 1 வானுயர் உலகந் தன்னை வசுந்தரை யாக்ம் பாரை ஏனைய ககன மாக்கும் எறிதிரைப் பரவை தன்னை மேனிமியர் பிறங்க லாக்கும் வெற்பினைப் புணரி யாக்கும் பானுவை மதிய மாக்கும் மதியினைப் பகலாச் செய்யும். 2 அணுவினை மேரு வாக்கும் அன்னதோர் மேரு வெற்பை நுணுகிய அணுவே யாக்கும் நொய்தெனப் புவனி தன்னைப் புணரிய தாக்கும் நேமிப் புணரியைப் புவன மாக்கும் இணருறு நேமித் தீயை எல்லைநீ ராகச் செய்யும். 3 கன்னலின் அயுதத் தொன்றிற் கடவுளர்க் கேனும் நீத்தோர் என்னவர் தங்கட் கேனும் எனைப்பல மாயஞ் சூழ்ந்து பன்னெடுங் காலஞ் செல்லப் படுத்திடும் என்னின் அம்மா அன்னவன் வன்மை யாவும் ஆரறிந் துறைக்கற் பாலார். 4 அத்தகு தகுவர் கோமான் அடற்கிர வுஞ்சன் அன்போன் மெய்த்தமிழ் முனிவன் செல்லும் வியனெறி விந்த மேபோல் கொத்துயர் குவடு மல்கிக் குன்றுருக் கொண்டு தன்பால் உய்த்