kandha purANam of kachchiyappa chivAchAriyAr
(in tamil script, unicode UTF-8 format)

கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய
கந்த புராணம்





உ
செந்திலாண்டவன் துணை
திருச்சிற்றம்பலம்

2. அ சு ர கா ண் ட ம்

* * * 6. மா யை யு ப தே ச ப் ப ட ல ம் அன்னது சரதமே அறிதிர் ஆதலால் இன்னமும் மொழிகுவன் இயற்று நோன்பென முன்னுறு காசிப முனிவன் செப்பலும் நன்னய மாயவள் நகைத்துக் கூறுவாள். 1 மறைதெரி முனிவநீ வாய்மை யாகிய உறுதியை மொழிந்தனை உயர்ந்த வீடுறும் அறிவுடை முனிவரர்க் கன்றி நாமருள் சிறுவருக் கித்திறஞ் செப்ப லாகுமோ. 2 நன்பெருஞ் செல்வமும் நவையில் கொற்றமும் இன்பமும் அழிவிலா திருக்கும் ஆயுளும் மன்பெருஞ் சீர்த்தியும் மறுவில் வாழ்க்கையும் அன்புடை யினையவர் அடைதல் வேண்டுமால். 3 காதலால் அவையெலாங் கடிதிற் பெற்றிட மாதவ முனிவர வகுத்தி யென்றலும் ஈதுகொ லோவுன தெண்ணம் நீயவர்க் காதகும் இயல்பினை அறைதி யென்னவே. 4 மாயவள் தன்சிறார் வதனம் நோக்கியே தூயவிம் முனிவரன் சொற்ற துண்மையே ஆயினும் உங்களுக் காவ தன்றவை நீயிர்கள் கேண்மென நெறியிற் கூறுவாள். 5 மாற்படு புந்தியின் மறுவில் சேதனம் பாற்படும் உயிர்க்கெலாம் பவத்தின் மாண்பயன் நூற்படு கல்வியின் நுவல்வ ளத்தினின் மேற்படு கின்றதில் விழுமி தில்லையே. 6 திருமைகொள் வளனொடு தீதில் கல்வியாம் இருமையின் ஒன்றினை எய்தி டாதெனின் அருமைகொள் அவ்வுயிர் அதனின் ஆற்றவும் பெருமைய துடையது பேயின் தோற்றமே. 7 பிறந்தநல் லுயிர்க்கெலாம் பெருமை நல்கிய இறந்ததோர் பொருண்மைய திரண்டின் வன்மையும் அறிந்தவர் தெரிவரேல் அரிய கல்வியில் சிறந்தது திருவெனச் செப்ப லாகுமால். 8 சொற்றரு கலையெலாந் தொடர்ந்து பற்பகல் கற்றவ ராயினுங் கழிநி ரப்பினால் அற்றவ ராவரே ஆக்க வேண்டிய பற்றலர் தம்மையும் பணிந்த நிற்பரால். 9 அளப்பருங் கல்வியும் ஆக்கம் யாவையுங் கொளப்படு தன்மையிற் குறைவு றாதவை வளர்த்தலின் மேதக வனப்புச் செய்தலிற் கிளத்திடின் மேலது கேடில் செல்வமே. 10 நூலுறு கல்வியை நுனித்து நாடியே வாலறி வெய்திய வரத்தி னோர்களும் மேலுறு திருவொடு மேவு றாரெனின் ஞாலமங் கவர்தமை நவையுள் வைக்குமால். 11 அளப்பரும் விஞ்சையே அன்றி மேன்மையும் உளப்படு தருமமும் உயர்ந்த சீர்த்தியுங் கொளப்படு கொற்றமும் பிறவுங் கூட்டலால் வளத்தினிற் சிறந்தது மற்றொன் றில்லையே. 12 ஆக்கமிங் கொருவரால் அணுக வேண்டுமேல் ஊக்கமுண் டாவரேல் உறுவர் அன்னது நீக்கமில் கொள்கையின் நிற்ப ரேயெனின் மேக்குறு பெருந்திரு விரைவின் மேவுமால். 13 அவ்வளம் பலவகைத் தாகும் ஆங்கவை எவ்வரும் பெறுகிலர் இயல்பின் யாவையுஞ் செவ்விதியின் நீர்பெறச் சிந்தை செய்யுமின் உய்வது வேறிலை உறுதி யீதலால். 14 எங்கள்பால் நென்னலின் யாமந் தோன்றலால் துங்கமா நிருதர்தங் கதியில் துன்னினீர் உங்களுக் கொன்னலர் உம்பர் யாவருந் தங்கள்தம் முயற்சியால் தலைமை பெற்றுளார். 15 நீவிர்கள் அனையரின் நிவந்த கொள்கையர் ஆவிர்கள் போலுமால் ஆக்க மெய்துவான் மூவிரும் முயலுதிர் முயலும் பெற்றியை ஏவிருங் கேட்கயான் எடுத்துக் கூறுகேன். 16 ஆனதோர் இத்திசை ஆலந் தீவெனத் தானறை கிற்பர்இத் தரைக்கு நேரதாய்ப் போனதோர் உத்தர பூமி யாயிடை தானவர் நோற்றிடத் தகுவ தென்பதே. 17 அப்புவி யதனிடை ஆற்றற் கீறிலா இப்பரி சனமொடும் ஏகி யாயிடை ஒப்பறு குண்டமும் ஒழிந்த செய்கையும் மெய்ப்பட இயற்றுதிர் வேள்வி செய்யவே. 18 காரிகொள் இந்தனங் கதழ விட்டுமுன் ஆரழல் மூட்டியே அழலின் பண்டமுஞ் சோரியும் ஊன்களும் பிறவுந் தூவியே வீரர்கள் புரிதிரால் வெய்ய வேள்வியே. 19 செங்கண்மால் அயன்முதல் தேவர் யாவரும் எங்கணா யகனென இறைஞ்ச மேதகு கங்கைவார் சடைமுடிக் கடவுட் போற்றியே பொங்குதீ வேள்வியைப் புரிதிர் பற்பகல். 20 அம்மகம் புரிதிரேல் அருளின் முன்னுறீஇ மைம்மலி மிடறுடை வான நாயகன் மெய்ம்மையின் நிவிர்கள் வெ·கி யாங்கெலாம் இம்மையின் எய்துமா றினிது நல்குமால். 21 மூண்டவிவ் வேள்வியை முயல மூவிரும் ஆண்டுசென் றுற்றுழி அன்ன தற்கவண் வேண்டிய பொருளெலாம் வேறு வேறதா ஈண்டுற வுதவுவன் ஏகு வீரென்றாள். 22 தந்திர நெறிகளுந் தவறில் பான்மையும் மந்திர முறைகளும் மற்று முள்ளவும் இந்திர வளனுறும் இயல்பின் மூவர்க்கும் முந்திர வுதவிய முல்வி நல்கினாள். 23 இன்னதோர் காலையில் ஈன்ற மாயவள் அன்னொடு தந்தையைத் தாழ்ந்து போற்றியே அன்னவர் விடுத்திட அவுணர் மேலையோன் பின்னவர் தம்மொடும் பெயர்வுற் றேகினான். 24 ஆகத் திருவிருத்தம் - 510 - - - 7. மா யை நீ ங் கு ப ட ல ம் ஏகிய காலையில் இணையில் மாயவள் மோகமொ டயலுற முனியை நோக்கியே போகுவன் யானினிப் புதல்வர்ப் பேணுவான் நீகவ லேலென நிறுவிப் போயினாள். 1 போதலும் முனிவரன் புந்தி யுள்ளுறும் ஆதர வுந்திட அவள்பின் னேகியே ஏதில னாமென எனைவிட் டேகுதல் நீதிய தாகுமோ உரைத்தி நீ¦னிறான். 2 ஆயிழை புகலுவாள் அழுங்கல் மாதவ பேயினர் பொருட்டுனைச் சேர்ந்த தன்றியீண் டேயது நின்னுடன் இருக்க அன்றியான் மாயவன் அறிகென மறைந்து போயினாள். 3 அருவினள் சேறலும் அற்புதத்தவன் வருபொருள் யாவையும் மறைந்து போயின வெருவரு முறைபுரி வேந்தை விட்டகல் திருவொடு பெயர்வதோர் செல்வம் போலவே. 4 மாணலன் எய்திய மாயை தன்ருக் காணலன் ஆகிய கமலத் தோன்மகன் பூணலன் தௌ¤வினைப் பொருமி ஏங்கியே ஆணலன் அழிவுற அழுங்கி மாழ்குவான். 5 வாவியுந் தடங்களும் வரையும் ஏனவுந் தேவருங் காமுறச் செறிந்த அற்புதம் யாவையுங் காண்கிலான் இரங்கி நின்றனன் ஆவியில் குரம்பையன் ஆகு மென்னவே. 6 மைந்தன துறுதுயர் மலரின் மேவிய தந்தைதன் உணர்வினால் தகவின் நாடியே அந்தர நெறியில்வந் தங்கண் மேவலும் எந்தைவந் தனன்கொலென் றெழுந்து தாழவே. 7 ஆசிகள் செய்துநின் னரிய நோன்பொரீஇக் காசிப மெலிவது கழறு கென்றலும் பேசினன் நிகழ்ந்தன பிரமன் கேட்டுளங் கூசினன் அவன்மனங் கொள்ளத் தேற்றுவான். 8 வேதமுங் கலைகளும் உணர்ந்து மேலதா மூதறி ¦யிதிய முனிவ நீயொரு மாதுதன் பொருட்டினால் மையல் எய்தியே பேதுறு கிற்றியோ பேதை மாந்தர்போல். 9 கண்டதோர் நறவமே கம மேயென எண்டரு தீப்பொரள் இருமைத் தென்பரால் உண்டுழி அரிக்குமொன் றுணர்வை யுள்ளமேற் கொண்டழி உயிரையுங் கொல்லு மொன்றரோ. 10 உள்ளினுஞ் சுட்டிடும் உணருங் கேள்வியிற் கொள்ளினுஞ் சுட்டிடுங் குறுகி மற்றதைத் தள்ளினுஞ் சுட்டிடுந் தன்மை ஈதினால் கள்ளினுங் கொடியது காமத் தீயதே. 11 ஈட்டுறு பிறவியும் வினைகள் யாவையுங் காட்டிய தினையதோர் காம மாதலின் வாட்டமில் புந்தியான் மற்றந் நோயினை வீட்டினர் அல்லரோ வீடு சேர்ந்துளார். 12 நெஞ்சினும் நினைப்பரோ நினைந்து ளார்தமை எஞ்சிய துயரிடை ஈண்டை உய்த்துமேல் விஞ்சிய பவக்கடல் வீழ்த்தும் ஆதலால் நஞ்சினுந் தீயது நலமில் காமமே. 13 ஆதலிற் காமமுற் றழுங்கல் நீபுணர் மாதரும் வஞ்சக மாயை யாகுமால் தீதிவண் இழைத்தனை தீரத் தொன்மைபோல் நீதவம் புரிகென நிறுவி ஏகினான். 14 மாறகல் நான்முகன் வாய்மை தேர்தலுந் தேறினன் மையல்நோய் தீர்ந்து காசிபன் ஏறமர் கடவுளை இதயத் துன்னியே வீறொடு நோற்றனன் வினையின் நீங்குவான். 15 ஆண்டவண் அகன்றிடும் அணங்கு தன்சிறார் மூண்டிடு தீமகம் முயலு மெல்லையில் வேண்டிய துதவுவான் விமலற் போற்றியே பூண்டனள் பெருந்தவம் புகரின் ஏவலால். 16 காசிபன் மாயையைக் கலந்த வண்ணமும் ஆசுறும் அவுணர்கள் வந்த வண்ணமும் பேசினம் அங்கவர் பெற்ற பேற்றினை ஈசன தருளினால் இனியி யம்புவாம். 17 ஆகத் திருவிருத்தம் - 527 - - - 8. அ சு ர ர் யா க ப் ப ட ல ம் அன்னைதன் ஏவலால் அழல்ம கஞ்செய ளுன்னின னாகியே ஒல்லை ஏகிய முன்னவன் இளைஞர்தம்முகத்தை நோக்கியே இன்னது கேண்மென இசைத்தல் மேயினான். 1 அடல்கெழு பெருமகம் அதனை ஆற்றவே வடதிசை செல்வுழி மல்கு தானையின் கடையொடு நெற்றியில் காவ லாகியே படருதி ராலெனச் சூரன் பன்னினான். 2 இனிதென அடிதொழு திளவல் தாரகன் அனிகம தீற்றினில் அடைவல் என்றனன் முனிதரு கோளரி முகத்து மொய்ம்பினான் தனியகல் நெற்றியிற் சார்வல் என்றனன். 3 பின்னர் இருவரும் பேசி இத்திறம் முன்னவன் விடைகொடு முறையிற் போயினார் அன்னவர் பணியினால் ஆர்ப்புற் றேயெழீஇச் சென்னெறி படர்ந்தன சேனை வௌ¢ளமே. 4 வேறு தானவர் அனிக வௌ¢ளந் தரைமிசைப் பெயர்த லோடும் மானில மடந்தை ஆற்றாள் வருந்தினள் பணிக ளோடு கோனுமங் கயரா நின்றான் குலவரை கரிகள் மேரு ஆனவுஞ் சலித்த ஆதிக மடமும் அழுங்கிற் றன்றே. 5 மண்டுறு பூமி ஈட்டம் மலரயன் உலகந் தாவி விண்டல மீது போதல் மேதினி அசுர வௌ¢ளம் எண்டரு நிலைமைத் தன்றால் யான்பொறுக் கல்லேன் என்னாக் கொண்டல்வண் ணத்த னோடு கூறுவான் சேறல் போலும். 6 காழுறும் அவுணர் தானைக் கனைகழல் துழனி முன்னர் ஆழியங் கடலும் நேரா ஆர்த்திடுங் கொல்லோ என்னா ஊழுறு சினங்கொண் டென்ன உலப்பிலா அவுணர் தாளில் பூழிய தெழுந்து சென்று புணரிவாய் பொத்திற் றன்றே. 7 மரந்துகள் பட்ட மேரு வரயெனச் சிறந்த மெய்ப்பூ தரந்துகள் பட்ட யாதுந் தனதெனத் தாங்கு சேடன் உரந்துகள் பட்ட நேரும் உயிர்துகள் பட்ட தொன்னாட் புரந்துகள் பட்ட தேபோல் புவிதுகள் பட்ட தன்றே. 8 ஆடலின் அவுண வௌ¢ளத் தரவமும் அனையர் செல்ல நீடிய பூழி தானும் நெறிப்பட வருத லோடும் நாடிய அமரர் அஞ்சி நடுக்குறா நமது வேதா வீடினன் கொல்லோ நீத்தம் விண்ணுறும் போலும் என்றார். 9 மாசகல் திருவின் மிக்க மாயவள் முன்னந் தந்த தேசுறும் அவுண வௌ¢ளந் திசையெலாம் அயுதம் என்னும் யோசனை யெல்லை யாக உம்பரி னிடத்து மற்றைக் காசினி யிடத்து மாகிக் கலந்துடன் தழுவிச் சென்ற. 10 அஞ்சினன் அமரர் வேந்தன் அயர்ந்தனன் அங்கிப் புத்தேள் எஞ்சினன் வன்மை கூற்றன் இனைந்தனன் நிருதி எய்த்தான் தஞ்சமில் வருணன் வாயுத் தளர்ந்தனன் தனதன் சோர்ந்தான் நெஞ்சழிந் தனன்ஈ சானன் நிருதர்பேர் அரவஞ் சூழ. 11 வள்ளுறு மெயிற்றுச் செங்கண் வலிகெழும் அவுணர் தானை வௌ¢ளம தேகப் பூழி விரிந்தெழீஇ யாண்டும் போகிப் பொள்ளென மெய்யே தீண்டிப் புறத்தெழில் அழித்த வானோர் உள்ளுணர் வழித்த தன்றே அனையர்கள் ஆர்க்கும் ஓதை. 12 பேருமிவ் வவுணர் தானைப் பெருக்கின தணியின் முன்னர் ஆரழல் வெருவு சீற்றத் தரிமுகன் செல்லக் கூழை தாரக விறலோன் செல்லத் தலையளி புரிந்து நாப்பட் சூரனென் றுரைக்கும் வெய்யோன் துண்ணென ஏகி னானால். 13 வேறு ஆன பொழுதத் தவர்க்கா ணியநினைந்து தானவர்கள் போற்றுந் தனிக்குரவன் தண்டரள மானமிசை யூர்ந்து வந்தணுகி வல்லவுணர் சேனையெனச் செல்லுந் திரைக்கடலைக் கண்ணுற்றான். 14 கண்ணின்ற வீரர் கடுப்பும் பெருமிடலும் உண்ணின்ற காழ்ப்பும் உரனுங் கொடுந்திறலும் எண்ணங்கொள் வேர்வும் இகலுந் தெரிவுற்றுத் துண்ணென்ன நெஞ்சம் புகரும் துளக்குற்றான். 15 கண்டேன் இவர்தங் கடுந்திறலின் ஆட்சிதனைப் பண்டே அவுணர் அளப்பிலரைப் பார்த்துணர்வேன் தண்டே னிதழியான் தன்னருளின் வண்ணமோ உண்டே இவருக் கொருவர்நிகர் உற்றாரே. 16 வானோர் இறையுடனும் மாலுடனும் மற்றுள்ள ஏனோ ருடனும் இகலாடி வென்றிடுகை தானோர் பொருளோ தமையெதிர்ந்த மாற்றலர்தம் ஊனோ டுயிரை யொருங்குண்ணுந் தீயவர்க்கே. 17 இன்னோர் தம் வன்மைக் கிறுதி யிலவேனும் முன்னேர் தமைப்போல் முயலுந் தவவலியும் பின்னோர் வரமும் பெரும்படையுங் கொண்டிலரால் அன்னோ இவர்க்குங் குறையுண்மை ஆகியதே. 18 தண்டத் திறையைக் கடந்த தனியாற்றல் கொண்டுற் றவற்கே குறைகண் டிலம்ஏனை அண்டத் தவர்க்கும் அனைவர்க்கும் ஒவ்வொர்குறை உண்டத் தகைமை எவரும் உணர்குவரால். 19 ஆதலின்இன் னோர்பால் அடைவுற் றிடும்வறுமை போதுசில நோன்பு புரியின் அகன்றிடுமால் ஈதுநிலைத் தன்றே இழிந்தோர் உயர்ந்திடுவர் காதி புதல்வன் இதற்குக் கரியன்றோ. 20 என்னப் பலவும் இசைத்துநின்று தானவர்கள் மன்னர்க்கு மன்னாக வாழ்வெய்து சூரபன்மன் முன்னுற் றிடவும் முகமன் மொழிந்திடவும் உன்னுற் றனனால் உணர்வுசேர் காப்பியனே. 21 தீயின் திறமுருக்குஞ் சீற்றத் தவுணன்எதிர் போயங் குறவும் புகன்றிடவுந் தானரிதால் ஏயுந் தகுவருடன் என்னுழையிற் சார்வதற்கோர் மாயங்கொள் விஞ்சை புரிவேன் எனமதித்தான். 22 மண்ணில் உயிரை வசிகரிக்கும் மந்திரமொன் றெண்ணி விதிமுறையே நோக்கி யெதிர்சென்று நண்ணிய வெஞ்சேலை நரலைநடு வட்புக்கான் அண்ணல் அவுணற் கணித்தாய் அடைகுற்றான். 23 கள்ள மிகுமவுணர் சிந்தையெனுங் காழிரும்பா யுள்ள உருகி உரைகெழுமா யத்தீயின் எள்ள வருங்கறையும் ஏகிநயந் திட்டனவால் வௌ¢ளி மிகப்புணர்க்கின் அலையுரு நின்றிடுமோ. 24 சூழிக் கடலின் துவன்றும்அவு ணப்படைஞர் காழற்ற புந்தியொடு கைதொழலும் கேசரிக்கும் பூழைக் கரன்றனக்கும் முன்னைப் புரவலன்முன் கேழுற்ற வாசி குரவன் கிளத்திடுவான். 25 வாலாதி மான்தேர் மகபதிக்கும் ஏனையர்க்கும் மேலாதி தானவர்கள் வெய்யதுயர் நோயகற்ற ஏலாதி யேகடுகம் என்றுரைக்கும இன்மருந்து போலாதி யென்ன அவுணன் புகன்றிடுவான். 26 காரையூர் கின்ற கடவுளர்கோன் வைகலுறும் ஊரையோ மேலை உலகுதனில் உள்ளாயோ பாரையோ கட்செவிகள் பாதலத்தை யோஎந்தாய் யாரைநீ தேற்றேன் இவணுற்ற வாறென்னோ. 27 உன்பால்என் நெஞ்சம் உருகும் அ·தன்றி என்பா னதும்உருகா நிற்கும் எனையறியா தன்பாகி நின்ற தருந்தவத்தை ஆற்றவனம் தன்பால் அணுகுதற்குத் தாளுமெழு கின்றிலவே. 28 நன்னேயம் பூண்டு நடந்தாய் உயிரெல்லாம் அன்னே யெனவந் தளிக்குந் தகையாயோ இன்னே யுனையெதிர்ந்தேன் யாக்கை மிகவருந்தி முன்னே தமியேன் புரிந்ததவம் மொய்ம்பன்றோ. 29 வேறு என்றலுங் கவிஞன் கேளா இருவிசும் பாற்றிற் செல்வேன் உன்றனி மரபிற் கெல்லாம் ஒருபெருங் குரவ னானேன் நன்றிகொள் புகரோன் என்னும் நாமமுற் றுடையோன் நின்பாற் சென்றனன் உறுதி யொன்று தௌ¤த்திடல் வேண்டி யென்றான். 30 அவுணர்கள் முதலா யுள்ளோன் ஆங்கது வினவி யாற்ற உவகைய னாகி எந்தாய் உய்ந்தனன் இவண்யான் என்னாக் கவிஞனை அணுகி நின்று கைதொழூஉப் பரவ லோடுஞ் சிவனருள் நெறியால் அன்னோன் இத்திறஞ் செப்ப லுற்றான். 31 நூறொடர் கேள்வி சான்றோய் நோற்றுநீ இருக்கு மெல்லை உறுசெய் கிற்பர் ஒன்னார் உனையவை குறுகா வண்ணங் கூறுதுந் திறனொன் றென்னாக் கூற்றுவற் கடந்த மேலோன் மாறின்மந் திரம தொன்று மரபுளி வழாமல் ஈந்தான். 32 மொய்கெழு கூற்றை வென்ற முதல்வன்மந் திரத்தை நல்கி வைகலும் இதனை யுன்னி மனத்தொடு புலனொன் றாக்கிப் பொய்கொலை களவு காமம் புன்மைகள் உறாமே போற்றிச் செய்குதி தவத்தை யென்னாச் செவியறி வுறுத்தல் செய்தான். 33 அப்பரி சனைத்துந் தேரா அவனடி வணங்கி எந்தாய் இப்பணி புரிவன் என்ன எல்லைதீர் ஆசி கூறி மெய்ப்புகர் மீண்டு சென்றான் மேதகும் அவுணர் சூழ ஒப்பரு மாயை செம்மல் வடபுலத் தொல்லை போனான். 34 வழிமுறை பயக்க நோற்கும் வடபுலந் தன்னி லேகிப் பழுமர வனத்தில் ஆகோர் பாங்கரில் குறுகிச் சூரன் அழல்கெழு மகத்தை யாற்ற அயுதயோ சனையுள் வைத்துச் செழுமதி லதுசூழ் பான்மை செய்திடச் சிந்தை செய்தான். 35 அடல்கெழு தானை யாகும் அவுணர்தங் குழுவைக் கூவிப் படிதனில் அடுக்கல் யாவும் பறித்தனர் கொணர வித்து வடவரை நிவப்பிற் சூழ வாரியாப் புரிவித் தாங்கே நடுநெடு வாயில் போக்கி ஞாயிலும் இயற்று வித்தான். 36 நூற்படு செவ்வி நாடி நொய்தென அங்கட் செய்த மாற்பெரு மதிலைச் சூழ வரம்பறு தானை தன்னை ஏற்புடை அரண மாக இயற்றுவித் தியாருஞ் செல்ல நாற்பெருந் திசையி னூடு நலனுற வாய்தல் செய்தான். 37 பூமியும் வானும் ஒன்றப் பொருப்பினாற் புரியப் பட்டு நாமியம் புரிதா நின்ற நாமநீள் காப்பும் அப்பால் ஏமுறும் அவுண வௌ¢ளத் தெடுத்திடும் எயிலுஞ் சேர்ந்து நேமியங் கிரியுஞ் சூழ்ந்த நிசியுநேர்ந் திருந்த வன்றே. 38 ஞாயிலின் வேலி மான நகங்களால் அடுக்கல் செய்த பாயிரு நொச்சி தன்னிற் படைகுலாம் புரிசை தன்னில் வாயில்க டோறும் போற்ற மந்திர முறையாற் கூவி நேயமொ டடுபோர் மாதை நிறுவினன் நிகரி லாதான். 39 ஆளரி முகத்தன் முன்னோன் அடுக்கலாற் படையாற் செய்த நீளிகல் வாரி முன்னர் நெறிகொள்மந் திரத்தாற் கூவிக் கூளிகள் தொகையும் மோட்டுக் குணங்கரின் தொகையுஞ் சீற்றக் காளிகள் தொகையுஞ் சூழ்போய்க் காப்புற நிறுவி விட்டான். 40 கயிரவ மனைய செங்கட் காளிகள் முதலோர் தம்மைச் செயிரற நிறுவிப் பின்னர்ச் சீர்கொள்மந் திரத்தாற் பன்னி அயிரற நெடிது போற்றி அவுணர்கோன் அங்கண் வந்த வயிரவ கணத்தை வேள்வி காத்திட வணங்கி வைத்தான். 41 வேறு தள்ளரி தாகிய காப்பிவை செய்திடு தனிவீரன் உள்ளுற ஆயிர வாயிர யோசனை யுறுநீளங் கொள்வதொ ராழமு மாயிட வோரோம குண்டந்தான் நள்ளிடை யேபுரி வித்தனன் மாமகம் நலமாக. 42 ஆதித னக்கனல் வேள்வி இயற்றிட அடுசூரன் வேதித னைப்புரி வித்திடு காலையில் வியன்ஞாலம் பாதகர் எம்மை வருத்தினர் என்று பதைப்புற்றுப் பேதுற வெய்தி இரங்கி ஒடுங்கினள் பெயர்வில்லாள். 43 ஆழம தாயிரம் யோசனை யாவவண் அகழசெய்கை ஊழுற நாடிய சேடனும் ஆயிடை உறைவோருங் கீழுறு வார்இவண் எய்துவர் தானவர் கிளையென்னாத் தாழுற வேகினர் முன்னுறு தொன்னிலை தனைநீங்கி. 44 ஆழ்ந்திட அம்மக வேதியி யற்றலும் அதுபோழ்தில் தாழ்ந்திடு நீத்தமெ ழுந்திட நாடிய தனிவேந்தன் சூழந்தனர் நுங்களை உண்குவர் மீதெழல் துணிபன்றே போழ்ந்தனை பாதல மேகென அவ்வழி போகிற்றால். 45 போதலும் அப்புனல் அவ்வழி கீழிடை போகின்ற பாதலம் ஈறெனும் ஏழ்நிலை யோரது பாராநின் றீதிவண் வந்துள தென்னென அற்புத வியல்எய்தாப் பேதுறு கின்றனர் தீங்கிது வென்று பிடித்தாராய். 46 சீறரி மாமுகன் முன்னவ னாகிய திறன்மேலோன் மாறகல் குண்டம திவ்வகை நாப்பண் வகுப்பித்தே நூறுடன் எட்டது சூழ்தர ஆக்குபு நுவல்வேதி வேறுமொ ராயிர வெட்டவை சுற்ற விதிப்பித்தான். 47 மூவகை வேதியும் ஆனபின் வேள்வியை இயல்வானய் ஆவதொர் பல்பொருள் வேண்டி நினைந்தனன் அருள்யாயைப் பாவனை பண்ணலும் அங்கது கண்டனள் பரிவெய்தித் தேவர்கள் தேவன தின்னரு ளால்இவை சேர்விப்பாள். 48 சீயம் வயப்புலி யாளியொ டெண்கு திறற்கைம்மாப் பாய்பரி செச்சைகள் ஆதிய வாகிய பன்மாவின் தூய புழுக்கலின் ஊனவி நேமி தொகுப்பித்தாள் ஆய வுடற்குரு திக்கடல் தன்னையும் அமர்வித்தாள். 49 பழிதரும் எண்ணெயெ னுங்கடல் ஓரிடை பயில்வித்தாள் இழுதெனும் வாரிதி தானுமொர் சாரில் இருப்பித்தாள் தொழுதகு பால்தயிர் நேமியும் ஓரிடை தொகுவித்தாள் வழிதரு மட்டெனும் வேலையும் ஓரிடை வருவித்தாள். 50 ஐயவி காருறு தீங்கறி யேமுதல் அழல்காலும் வெய்யன பல்வளன் யாவையும் ஓர்புடை மிகுவித்தாள் நெய்யுறு முண்டியின் மால்வரை யோர்புடை நிறைவித்தாள் மையறு தொல்பசு யாவையும் ஓர்புடை வருவித்தாள். 51 அரும்பெறல் நாயக மாகிய வேதியின் அகல்நாப்பண் வரும்பரி சால்நிறு வுற்றிட மேலுயர் வடிவாகிப் பெரும்புவி உண்டுமிழ் கண்ண பிரான்துயில் பெற்றித்தாய் உரம்பெறு வச்சிர கம்பம தொன்றினை உய்த்திட்டாள். 52 தெரிதரு செந்நெலின் வால்அரி யோர்புடை செறிவித்தாள் அரிசனம் நீவிய தண்டுல மோர்புடை அமைவித்தாள் மருமலர் மான்மத மாதிய ஓர்புடை வருவித்தாள் சுருவையும் நீடுத ருப்பையும் ஓர்புடை தொகுவித்தாள். 53 ஆலமு யிர்க்கும் வரம்பில தாருவின் அணிகொம்பர் வாலிதின் மெய்ச்சமி தைக்குல மாமென வரையேபோல் சாலமி குத்தனள் ஓர்புடை வேள்வி தனக்கென்றோர் பாலின்நி ரைத்தனள் கொள்கல மாகிய படியெல்லாம். 54 பொன்னின் அகந்தொறும் வௌ¢ளி முளைத்திடு பொருளேபோல் செந்நெலின் உற்றிடு தீம்பொறி யோர்புடை செறிவித்தே துன்னிய வெண்முதி ரைக்குல மோர்புடை தூர்த்திட்டாள் பின்னரும் வேண்டுவ யாவையும் நல்கினள் பெருமாயை. 55 மூவகை யாயிர யோசனை எல்லையின் முருண்வேள்விக் காவன நல்கினள் போதலும் யாய்செய லதுநோக்கி ஓவிது யாரின் முடிந்திடும் வேண்டுவ உய்த்தாளே ஏவரு மெண்ணஇவ் வேள்வியி யற்றுவன் இனியென்றான். 56 ஊன்புகு பல்வகை ஆவியும் ஈண்டிய வுலகெல்லாந் தான்புகு தன்விறல் காட்டிய நாட்டிய தாணுப்போல் மேன்புகு சூரன் நடுத்திகழ் வேதியின் மிகுநாப்பண் வான்புகு வச்சிர கம்பம் நிறீஇயினன் வலிதன்னால். 57 வச்சிர கம்பம் நிறீஇயின பின்னர் மகம்போற்றும் நொச்சியின் நாற்றிசை வாயில் தொறுந்தொறும் நொய்திற்போய் அச்சுறு வீர மடந்தையை உன்னி அருச்சித்துச் செச்சைக ளாதிய ஊன்பலி நல்குபு செல்கின்றான். 58 வேறு செல்லுஞ் சூரன் நொச்சியின் நாப்பட் செறிகின்ற கல்லென் வெஞ்சொற் பூதர் தொகைக்குங் கணமென்றே சொல்லும் பேயின் பல்குழு வுக்குஞ் சோர்வின்றி ஒல்லும் பான்மை ஊன்பலி யாவையும் உதவுற்றான். 59 சீற்றத் துப்பிற் காளிக ளுக்குந் தென்பாலின் கூற்றைக் காயும் வயிரவர் தங்கள் குழுவுக்கும் ஏற்றத் தோடும் அர்ச்சனை செய்தே யினிதாகப் போற்றிப் போற்றி ஊன்பலி வேண்டுந புரிகுற்றான். 60 குழாம் எட்டே யாயிர வேதி தொறுநாப்பட் காழார் நஞ்சின் இந்தனம் இட்டுக் கனல்மூட்டித் தாழா மேதன் தம்பிய ரோடுந் தகுசூரன் ஊழால் நாடுற் றூனவி வர்க்க முறநேர்ந்தான். 61 நேருந் தோறும் எந்தைதன் நாம நெறிசெப்பிச் சேரும் அன்பா லன்ன தவன்பாற் செலவுய்த்துச் சூரன் பின்னர் இம்மகம் ஆற்றுந் தொழில்வல்லோன் ஆரென் றுன்னித் தாரக னைப்பார்த் றைகின்றான். 62 ஏற்றஞ் சேரிவ் வேதிகள் தோறும் இறைதாழா தூற்றங் கொண்டே ஏகினை வேள்வி யுலவாமல் ஆற்றுந் தன்மை வல்லவன் நீயே அதுவல்லே போற்றிங் கென்னாக் கூறி நிறுததிப் போகுற்றான். 63 அப்பா லேகி நூறுடன் எட்டாம் அகல்வேதி துப்பா லெய்தி முன்னவை யேபோல் தொடர்வேள்வி தப்பா தாற்றிச் சீய முகத்தோன் றனைநோக்கி இப்பா லுற்றிம் மாமகம் ஆற்றாய் இனிதென்றான். 64 வேறு தெரிய இன்னணஞ் செப்பி அவுணர்கோன் அரியின் மாமுகத் தானை அவண்நிறீஇப் பெரிது நள்ளுறு பெற்றியிற் செய்ததன் உரிய வேதியின் ஒல்லையின் மேவினான். 65 வேதி யெய்தி விதியுளி அர்ச்சனை யாது மோர்குறை இன்றியி யற்றியே மாதொர் பங்குடை வள்ளலை உன்னியோர் ஏதில் வேள்வி இயற்றுதல் மேவினான். 66 நஞ்சு பில்கு நவையுடைத் தாருவின் விஞ்சு சாகை வியன்துணி யாவையும் புஞ்ச மோடு பொருக்கென வேதியில் துஞ்சி டும்வகை சூரனுந் தூவினான். 67 ஆல மாகி அமர்தரு வின்ஞெலி கோலின் ஆக்கிய கொந்தழ லிட்டுமுன் ஏல மூட்டி இழுதெனு மாமழை சீல மந்திரத் தோடு சிதறினான். 68 அன்ன தற்பினர் அம்பொற் குழசிகள் துன்னு கின்ற துணிபடும் ஊன்தொகை வன்னி யின்கண் மரபின்நின் றுய்த்தனன் செந்நி றக்குரு திக்கடல் சிந்தியே. 69 செய்ய தோர்மகச் செந்தழல் மீமிசைத் துய்ய ஓதனஞ் சொன்முறை தூர்த்தனன் நெய்யும் எண்ணெயும் நீடிய சோரியும் வெய்ய பாலுந் ததியும் விடுத்துமேல். 70 மேன சாலியின் வெண்பொரி யின்குவை ஆன நல்கி அழிதரும் ஈற்றினில் வானு லாய மறிகட லாமெனத் தேனும் ஆலியுந் தீமிசைச் சிந்தியே. 71 தோரை ஐவனஞ் சூழ்தடத் துற்றநீ வாரம் ஏனல் இறுங்கொடு மற்றவும் மூரி யௌ¢ளு மதிரையின் வர்க்கமுஞ் சேர வுய்த்தனன் நெய்க்கடல் சிந்தினான். 72 கொடிய ஐயவி கூர்கறி யாதியாப் படியில் வெய்ய பலபொருள் யாவையும் நெடிதும் ஓச்சினன் நேயம தாகிய கடலை வன்னி கவிழ்த்தன னென்பவே. 73 இன்ன பல்வகை யாவும் இயல்பினாற் பொன்னு லாஞ்சடைப் புண்ணியன் றன்னையே முன்னி வேள்வி முயன்றனன் ஞாலமேல் துன்னு சீர்த்தியன் சூரபன் மாவென்பான். 74 வேறு சூர னாமவன் அவ்வழிப் பெருவளஞ் சுட்டி வீர வேள்வியை வேட்டலுஞ் செந்தழல் விரைவின் ஆரும் அச்சுற வெழுந்துமீச் சென்றன அடுதீப் பாரை நுங்கிவா னுலகெலாம் உணவெழும் பரிசின். 75 வானம் புக்கது மாதிரம் புக்கது மலரோன் தானம் புக்கதெவ் வுலகமும் புக்கது தரைக்கீழ் ஏனம் புக்குமுன் நாடருங் கழலினாற் கியற்றுங் கானம் புக்கதோர் வேள்வியின் எழுங்கொழுங் கனலே. 76 பானு வின்பதஞ் சுட்டது பனிமதி பதமும் மீனெ னும்படி நின்றவர் பதங்களும் மேலோர் போன மேக்குயர் பதங்களுஞ் சுட்டது புலவோர் கோனு றும்பதஞ் சுட்டது வேள்வியிற் கொடுந்தீ. 77 செற்று வாவசன் பதந்தனைச் சுட்டபின் சேண்போய் மற்றை மேவர் பதமெலாஞ் சுட்டது மருங்கில் சுற்று பாலர்தம் புரங்களுஞ் சுட்டது சூரன் அற்ற மில்வகை ஆற்றிய வேள்வியுள் அனலே. 78 காலம் எண்ணில தவம்புரி காசிப முனிவன் பாலன் ஈண்டையில் வலியினோர் மகமது பயில ஏல நீடுதீ யுலகெலாம் முருக்கிய தென்னில் மேல வன்செயும் பரிசெலாம் யாவரே விதிப்பார். 79 கார்ம றைத்தன கதிர்மதி மறைத்தன கரியோன் ஊர்ம றைத்தன அயன்பதம் மறைத்தன உலவா நீர்ம றைத்தன நெருப்பையும் மறைத்தன நீடும் பார் மறைத்தன இடையிடை யெழும்புகைப் படலை. 80 சொற்ற வேதிஇவ் வியற்கையால் எரிந்தது சூரன் பிற்றை யோர்கள் தம் எட்டுநூ றாயிரபேதம் உற்ற வேதிகள் யாவையும் எரிந்தன ஒருங்கே முற்றும் வன்னிகள் இறுதிநாள் உலகின்மொய்த் தெனவே. 81 வேள்வி இத்திறஞ் சூர்புரி தன்மையை விரைவில் கேள்வி யாலுணர் இந்திரன் அச்செயற் கேடு சூழ நாடினன் முடிப்பருந் தன்மையில் துளங்கி ஆழ்வ தோர்துயர்க் கடலிடை அழுந்தினன் அயர்ந்தே. 82 சூன்மு கக்கொண்டல் மேனியும் முனிவரர் தொகையும் நான்மு கத்தனுஞ் சூரபன் மன்செயல் நாடிப் பான்மை மற்றிது யாவரே புரிவர்இப் பதகன் மேன்மை பெற்றிட முயன்றனன் கொல்லென வெருண்டார். 83 இந்த வண்ணத்தின் ஒருபதி னாயிரம் யாண்டு முந்து சூர்தன திளைஞரோ டருமகம் முயல அந்தி வார்சடைக் கண்ணுதல் நின்மலன் அவன்பால் வந்தி லானது தேர்ந்தனன் நிருதர்கோன் மாதோ. 84 கண்ணு தற்பரன் அருள்செயாத் தன்மையை கருத்தில் எண்ணி இச்செயற் குறுவனோ சிவனென இசையாப் பண்ணு மத்தொழி பின்னவர் தங்கள்பாற் பணித்து விண்ண கத்தின்மீச் சென்றனன் கடவுளர் வெருவ. 85 வான கத்திடை நிற்புறு சூரபன் மாவாந் தான வர்க்கிறை வாள்கொடே ஈர்ந்துதன் மெய்யின் ஊன னைத்தையும் அங்கிமேல் அவியென ஓச்சிச் சோனை யொத்ததன் குருதியை இழுதெனச் சொரிந்தான். 86 சோரி நெய்யவா ஊன்களே அவியவாச் சூரன் வீர மாமகம் புரிவுழித் தனதுமெய்ம் மிசையூன் ஈர ஈரவே முன்னையின் வளர்தலும் இதுகண் டாரும் அச்சுறத் தெழித்தனன் விம்மித மானான். 87 சிந்தை யிற்பெரு மகிழ்ச்சிய னாகியிச் செய்கை எந்தை யற்புறு நிலையதோ வெனமனத் தெண்ணா மந்த ரப்புய நிருதர்கோன் பின்னும்அம் மரபால் அந்த ரத்திடைத் தசைப்பெரு வேள்வியை அயர்ந்தான். 88 ஆண்டொ ராயிரம் இம்மகம் அந்தரத் தியற்ற நீண்ட மாலுடன் நான்முகன் தேடரும் நிமலன் ஆண்டும் வந்திலன் சூரன்அத் தன்மைகண் டழுங்கி மாண்டு போவதே இனிக்கட னெனமனம் வலித்தான். 89 உன்னி இத்திறஞ் சூரபன் மாவெனும் ஒருவன் வன்னி சுற்றிய ஆதிகுண் டத்திடை வதிந்து செந்நி றத்ததாய் ஆணையால் அங்கியிற் சிதையாக் கொன்னு னைத்தலை வச்சிர கம்பமேற் குதித்தான். 90 கடிதின் உச்சிநின் றுருவியே வச்சிர கம்பத் தடித னிற்சென்று சூரபன் மாவெனும் அவுணன் படிவ முற்றுநுண் துகளுற உளம்பதை பதைத்து முடிய மற்றது கண்டனன் மடங்கல்மா முகத்தோன். 91 கண்ட காலையின் உளம்பதை பதைத்தது கண்கள் மண்டு சோரிநீர் கான்றன கரங்களும் வாயுங் குண்ட வேள்வியில் தொழில்மறந் திட்டன குறிப்போர் உண்டு போலுமென் றையுற ஒதுங்கிய துயிரே. 92 துயர்ப்பெ ருங்கடல் நடுவுற ஆழ்ந்துதொல் லுணர்ச்சி அயர்த்து மால்வரை யாமென மறிந்தனன் அறிவு பெயர்த்தும் வந்துழிப் பதைபதைத் தலமந்து பெரிதும் உயிர்த்து வாய்திறந் தன்னவன் புலம்புதல் உற்றான். 93 வேறு மாயை தரும்புதல்வா மாதவஞ்செய் காசிபற்கு நேய முருகா நிருதர் குலத்திறைவா காயமுடன் நின்னையான் காணேனால் எங்கொளித்தாய் தீய மகம்பலநாட் செய்துபெற்ற பேறிதுவோ. 94 தாயுந் தலையளிக்குந் தந்தையுநி தானவரை ஆயுந் தலைவனும்நீ ஆவியும்நீ என்றிருந்தோய் நீயங் கதனை நினையா திறந்தனையே மாயுஞ் சிறியோர்க்கு மற்றிங்கோர் பற்றுண்டோ. 95 வீரனே தானவர்க்குள் மிக்கோனே மிக்கபுகழ்ச் சூரனே நின்போல் தொடங்கிஇந்த வேள்விதனை ஆரனே கம்வைகல் ஆற்றினார் ஆற்றியநீ ஈரநே யங்கொள்ளா தெம்மைஅகன் றேகினையே. 96 நின்கண் அருளில்லா நீர்மையுண ராய்பன்னாட் புன்கண் உறுவாய் புரமூன்று முன்னெரித்த வன்க ணரைக்குறித்தே மாமகஞ்செய் தாய்அதற்கோ உன்கண் உளதாம் உயிர்தனையுங் கொண்டனரே. 97 உன்போல் உயிர்விட் டுயர்மகஞ்செய் தோரும்அரன் தன்போல் அருளாத் தகைமையரும் ஆங்கவைகண் டென்போல் உயிர்கொண் டிருந்தோரும் இல்இவருள் வன்போ டியமனத்து வன்கண்ணர் ஆர்ஐயா. 98 ஈசன் அருளால் எரிவேள் வியைஓம்பிப் பேசாய வன்மைதனைப் பெற்று நமதுயிரும் ஆசில் வளனும் அகற்றுவரென் றேயயாந்த வாசவனும் இன்றோ மனக்கவலை தீர்ந்ததுவே. 99 எல்லாரும் போற்ற எரிவேள் வியைஓம்பிப் பல்லா யிரநாட் பழகி எமக்குமிது சொல்லா திறந்தாய் துணைவராய் நம்முடனே செல்லார் இவரென்று சிந்தைதனிற் கொண்டனையோ. 100 ஈண்டாருங் காண எரியினிடைத் தம்பமிசை வீண்டாய் உயிர்போய் விளிந்தாய் மிகும்வன்கண் பூண்டாய்நின் மெய்யும் ஔ¤த்தாய் புலம்புமியாம் மாண்டாலும் உன்றன் மதிவதனங் காண்போமோ. 101 என்றின் னனசொற் றிரங்கி அரிமுகத்தோன் முன்றன்னை நல்கி முலையளிக்குந் தாய்காணாக் கன்றென்ன வீழ்ந்தழுங்கக் கண்டதனைத் தாரகனுங் குன்றென்னத் தன்கை குலைத்தரற்றி வீழ்ந்தனனே. 102 வீழ்ந்தான் உயிர்த்தான்அவ் வேள்விக் களமுற்றுஞ் சூழ்ந்தான் புரண்டான் துளைக்கையி னால்நிலத்தைப் போழ்ந்தா னெனவே புடைத்தான் துயர்க்கடலுள் ஆழ்ந்தான்விண் ணஞ்ச அரற்றினான் தாரகனே. 103 சிங்க முகனுந் திறல்கெழுவு தாரகனுந் தங்கண் முதல்வன் தவறுற் றதுநோக்கி அங்கண் அரற்ற அதுகண்ட தானவர்கள் பொங்குங் கடல்போல் பொருமிப் புலம்பினரே. 104 தாரகனுஞ் சீயத் தனிவீ ரனும்அவுணர் ஆரும் நெடிதே அரற்றும் ஒலிகேளாச் சீரில் வியனுலகில் தேவர்கோன் தன்னொற்றால் சூரன் மகத்தீயில் துஞ்சு செயல்உணர்ந்தான். 105 தண்டார் அகலச் சதமகத்தோன் தானவர்கோன் விண்டா னெனவே விளம்புமொழி கேளா அண்டா மகிழ்ச்சியெனும் ஆர்கலியிற் பேரமுதம் உண்டா னெனவேதன் உள்ளங் குளிர்ந்தனனே. 106 சிந்தை குளிர்ந்து செறியுமுரோ மஞ்சிலிர்த்து முந்து துயர முழுதுந் தொலைத்தெழுந்து வந்து புடைசூழும் வானோ ருடன்கடவுள் தந்தி மிசையெய்தித் தனதுலகம் நீங்கினனே. 107 பொன்னுகம் நீங்கிப் புரைதீர் மதிக்கடவுள் தன்னுலகம் நீங்கித் தபனன் பதங்கடந்து துன்னும் அவுணர் துயரஞ் செயல்காண்பான் மின்னுலவு மேக வியன்பதத்தில் வந்தனனே. 108 விண்ணாடர் தங்களுடன் வேள்விக் கிறைவிசும்பின் நண்ணா மகிழா நகையாத்தன் நற்றவத்தை எண்ணா வியவா இரங்கும் அவுணர்தமைக் கண்ணார நோக்கிக் களிப்புற்று நின்றனனே. 109 நின்றதொரு காலை நிருத ருடன்அரற்றித் துன்றுதுயர் மூழ்கிச் சோர்கின்ற சீயமுகன் நன்றெனுயிர் போக நானிருப்ப தேயிங்ஙன் என்று கடிதுமனத் தெண்ணி எழுந்தனனே. 110 அன்ன திறல்அவுணன் ஆயிரமென் றுள்ளஅகன் சென்னிபல வுந்தனது செங்கைவா ளால்ஈர்ந்து முன்னம் முதல்வன் முயன்ற பெருவேள்வி வன்னி அதனுள் மறம்பேசி இட்டனனே. 111 ஈர்ந்து தலைகள் எரியில் இடுமுன்னர்ச் சேர்ந்த வனையான் சிரங்கள் அவைமுழுதும் பேர்ந்தும் அரிந்து பிறங்கு தழலினிடை நேர்ந்து தனிநின்றான் நிருதர்க் கிறையோனே. 112 முன்னோன் எழுந்து முயலுஞ் செயல்நோக்கிப் பின்னோன் தனது பெருஞ்சிரமுந் தான்கொய்து மன்னோன் மகமியற்றும் வான்தழலி னுள்ளிட்டான் அன்னோ வெனவே அவுணர் குழுஇரங்க. 113 சென்னி தலையரிந்து செந்தழலின் நாப்பணிடு முன்ன மதுபோல வேறே முளைத்தெழலும் பின்னும் அனையான்அப் பெற்றிதனை யேபுரிய அன்ன படிகண்ட அவுணர் தமிற்சிலரே. 114 தங்கள் சிரமுந் தனிவாளி னால்துணியா அங்கி மிசையிட்டும் அதன்கண் உறவீழ்ந்தும் அங்கி உயிரதனை மாற்றிடலுஞ் சூரன்போல் சிங்க முகனும்எரி செல்லத் துணிந்தனனே. 115 மோனத்தின்* வேள்வி முயன்றதொரு முன்னவன்போல் வானத் தெழுவான் வலித்துனங் கொண்டிடலுங் கானக் கடுக்கை கலைமதிசேர் செய்யசடை ஞானப் பொடி**புனையும் நாதனது கண்டனனே. 116 ( * மோனம் - மௌனம். ** ஞானப்பொடி - விபூதி. ) ஆகத் திருவிருத்தம் - 643 - - - 9. வ ர ம் பெ று ப ட ல ம் கண்ட கறைமிடற்றுக் கண்ணுதலோன் சுந்தரனை விண்டு முதலோர் வியப்பவே வெண்ணையிலாட் கொண்ட தொருபனவக் கோலந் தனைத்தரித்துத் தண்டும் ஒருவகை தனில்ஊன்றி வந்தனனே. 1 அங்கண் மகவேதி அணித்தாக வேகுறுகிச் சிங்க முகனைச் சிவபெருமான் கண்ணுற்றே இங்கு மிகநீ ரெவரும் இரங்குகின்றீர் நுங்கள் பரிசு நுவலு மெனமொழிந்தான். 2 எந்தை பெருமான் இயம்ப அதுநாடித் தந்தை யனையார் தமியேந் துயர்கண்டு வந்து வினவுகின்றார் மற்றிங் கிவர் அருள்சேர் சிந்தை யினரென்று சீயமுகன் உன்னினனே. 3 உன்னி அமலன் உகள மலர்ப்பதமேல் சென்னி பலவுஞ் செறியப் பணிந்தெழுந்தெம் இன்னல் வருவாயும் எமது வரன்முறையும் பன்னி யிடுவ னெனவே பகர்கின்றான். 4 வேறு தந்தை யாவான் காசிபனே தாயும் மாயை தானென்பான் மைந்தர் யாங்கள் ஒருமூவர் மக்கள் பின்னும் பலருண்டால் எந்தம் அன்னை பணிதன்னா லியாங்கள் ஈசன் றனக்காக இந்த வனத்தில மூவருமிவ் வேள்வி தன்னை இயற்றினமே. 5 அங்கப் பரிசே யாண்டுபல அகல மகத்தை ஆற்றிடவுங் கங்கைச் சடையோன் முன்னின்று கருணை சிறிதுஞ் செய்திலனால் எங்கட் கெல்லாம் முன்னவனாம் இகல்வெஞ் சூர னதுநாடி மங்குற் செறியும் வானிற்போய் வாளால் தசையீர்ந் திட்டனனே. 6 மின்போல் இலங்கும் வாளாற்றன் மெய்யிற் றசைகள் ஈர்ந்துளத்தில் துன்போர் இறையும் இல்லாத சூரன் மகத்தீ மிசையிடலும் முன்போல் தன்னூன் வளர்ந்திடவே பின்னும் அ·தே முயன்றதற்பின் தன்போல் ஔ¤ர்வச் சிரகம்பத் தலைவீழ்ந் துருவித் தழல்புக்கான். 7 புக்கு முன்னோன் ஈறாகிப் போந்த காலை யாங்கண்டு மிக்க மனத்தில் துயர்கொண்டு வெருவிப் புலம்பி எமதுயிரும் ஒக்க விடவே நினைந்தேமால் உம்மைக் கண்டோ ரிறைதாழத்தோம் தக்க திதுநம் வரன்முறையுந் தமியேந் துயரு மெனமொழிந்தான். 8 மொழிந்த காலை அங்கண்நின்ற முக்கண் இறைநும் முன்னோன்போல் ஒழிந்து நீரும் மாயாதே உமது சூரன் தனையின்னே அழிந்த தீயுள்நின் றெழுவித் தருள்செய் கின்றாம் அதுகாண்டிர் கழிந்த சோகம் விடுதிரெனாக் கங்கை தன்னை நினைந்தனனே. 9 முன்னாள் அம்மை அங்குலியின் முளைத்த கங்கை தனிலெங்கோன் மின்னார் சடையிற் கரந்தனவே யன்றி மகவான் விரிஞ்சன்மால் என்னா நின்ற மும்மையினோர் இருக்கை தோறும் அளித்தவற்றுட் பொன்னாட் டிருந்த நதிதன்னைப் புந்தி மீதில் உன்னினனே. 10 மாயோன் தன்பால் முற்கொண்ட வலிசேர் தண்ட மேந்திவரு தூயோன் உன்ன அக்கங்கை துண்ணென் றுணர்ந்து துளங்கி விண்ணோர் ஆயோர் எவரும் வெருக்கொள்ள அளப்பில் முகங்கொண் டார்த்தெழுந்து சேயோ ரெல்லாம் அணித்தாகத் திசையோர் அஞ்சச் சென்றதுவே. 11 மேலா கியவிண் ணுலகனைத்தும் விரைவிற் கடந்து மேதினியின் பாலாய் எங்கள் பிரான்பதங்கள் பணிந்து பணியாற் படர்செந்தீ ஏலா நின்ற நடுக்குண்டத் திடையே புகலும் எறிகடல்வாய் ஆலா லம்வந் துதித்ததென அவுணர் கோமா னார்த்தெழுந்தான். 12 தொன்மை போல வேதியினிற் சூர பன்மாத் தோன்றலுமத் தன்மை கண்ட அரிமுகனுந் தார கப்பேர் வீரனுமாய் இன்மை கொண்டோர் பெருவளம்பெற் றென்ன மகிழ்வுற் றெல்லையிலா வன்மை யெய்திக் கடிதோடி மன்னன் பதமேல் வணங்கினரே. 13 தங்கோன் தன்னைப் பின்னோர்கள் தாழுஞ் செயலைத் தானவர்கண் டெங்கோன் வந்தான் வந்தானென் றெவருங் கேட்ப எடுத்தியம்பிப் பொங்கோ தஞ்சேர் கடன்மதியப் புத்தேள் வரவு கண்டதென அங்கோ தையினால் வாழியவென்றவனைப் போற்றி ஆர்த்தனரே. 14 எண்மேற் கொண்ட நிருதர்குழாம் ஏத்த எரிநின் றெழுசூரன் மண்மேற் கொண்ட திறங்காணூஉ வானோர் தொகையும் மகபதியும் விண்மேற் கொண்ட புயல்கண்ட வியன்கோ கிலம்போல் வெருவித்தம் முண்மேற் கொண்ட செல்லலொடும் ஓடித் தம்மூர் உற்றனரே. 15 வேறு அரந்தைதனை இகந்தஇரு துணைவர்களும் பாங்கருற அவுணர் சேனை, பரந்துபல வாழ்த்தெடுப்பச் சூரபன்மன் திகழ் வேலைப்படியும் வானும், நிரந்தபுனற் கங்கைதனை வருவித்து மறையவன்போல் நின்ற எம்மான், கரந்துதனை உணர்கின்ற உருவினோடு தோன்றினனால ககன மீதே. 16 நாரிபா கமும்இமையா முக்கண்ணுந் திருப்புயங்கள் நான்குமாகி, மூரிமால் விடைமேல்கொண் டெம்பெருமான் மேவுதலும் உன்னி நோக்கிப், பாரின்மீ மிசைவீழ்ந்து பணிந்தெழுந்து பலமுறையும் பரவிப் போற்றிச், சூரனா ராதபெரு மகிழசிறந்து துணைவரொடுந் தொழுது நின்றான். 17 நின்றுபுகழ் சூரபன்மன் முகநோக்கி நமையுன்னி நெடிது காலம், வன்றிறன்மா மகமாற்றி எய்த்தனையால் வேண்டுவதென் வகுத்தி யென்னப், பொன்றிகழு மலர்க்கமலப் பொகுட்டுறைவோன் முதலியபுத் தேளிர் யாரும், இன்றெமது தலைமையெலாம் போயிற்றா லென இதங்க இதனைச் சொல்வான். 18 கொன்னாரும் புவிப்பாலாய்ப் பலபுவனங் கொண்டவண்டக் குழுவுக் கெல்லாம், மன்னாகி யுறல்வேண்டும் அவைகாக்குந் தனியாழி வரலும் வேண்டும், உன்னாமுன் அவையனைத்துஞ் செல்லுவதற் கூர்திகளும் உதவல் வேண்டும், எந்நாளும் அழியாமல் இருக்கின்ற மேனியுமெற் கீதல் வேண்டும். 19 அலையாழி மிசைத்துயில்கூர் பண்ணவனே முதலோர்கள் அமர்செய் தாலும், உலையாது கடந்திடுபேர் ஆற்றலொடும் பலபலடையும் உதவல் வேண்டும், தொலையாமே எஞ்ஞான்றும் இருந்திடலும் வேண்டுமெனச் சூரன் வேண்டக், கலையார்வெண் மதிமிலைச்சுஞ் செஞ்சடிலத் தனிக்கடவுள் கருணை செய்வான். 20 மண்டனக்கா யிரகோடி அண்டங்க ளுளவாகு மற்ற வற்றுள், அண்டமோ ராயிரத்தெட் டுகநூற்றெட் டாள்கவென அருளால் நல்கி, எண் டொகைபெற் றிடுகின்ற அவ்வண்டப் பரப்பெங்கும் ஏகும் வண்ணம், திண்டிறல்பெற் றிடுகின்ற இந்திரஞா லமதென்னுந் தேரும் நல்கி. 21 எண்ணுபல புவனங்கள் கொண்டஅண்டத் தொகைதன்னை யென்றும் போற்றக், கண்ணனது நேமியினும் வலிபெறுமோர் அடலாழி கடிதின் நல்கி, அண்ணலுறு சினவேற்றுக் கோளரியூர் தியும்நல்கி அகிலத்துள்ள, விண்ணவர்கள் யாவருக்கும் அன்றுமுதன் முதல்வனாம் மேன்மை நல்கி. 22 மேற்றிகழும் வானவரைத் தானவரை ஏனவரை வெற்றி கொள்ளும் ஆற்றலொடு பெருந்திறலும் பாசுபத மாப்படையே ஆதி யாகித் தோற்றமுறு கின்றதெய்வப் படையனைத்தும் எந்நாளுந் தொலைந்தி டாமல் ஏற்றமிகும் வச்சிரமா கியமணிமே னியுமுதவி இதற்குப் பின்னர். 23 ஆறுசேர் கங்கைதனை விண்ணுலகு தனிலேவி அக்கங் கைக்குங் கூறுசேர் பெருவேள்விச் செந்தழற்குந் தோற்றமெய்திக் குலவும் வண்ணம் வீறுசேர் பெருங்கடல்போல் ஒருபதினா யிரகோடி வௌ¢ள மாகுந் தாறுபாய் கரிதிண்டேர் வயப்புரவி அவுணரெனுந் தானை நல்கி. 24 வேறு துன்னுறு பெரும்புகழ்ச் சூர பன்மனுக் கின்னதோ ரருள்புரிந் திட்ட வெல்லையில் அன்னவற் கிளைஞர்வந் தடிப ணிந்தெழத் தன்னிகர் இல்லதோர் தலைவன் கூறுவான். 25 வேறு சூரன் என்பவன் தோளிணை போலவே வீரம் எய்தி விளங்கிநூற் றெட்டுகஞ் சீரின் மேவுதிர் தேவர்கள் யாரையும் போரில் வென்று புறந்தரக் காண்டிரால். 26 தேவர் யாவருஞ் சென்று தொழப்படு மூவ ராகி மொழிந்திடு நுங்களைத் தாவி லாதநஞ் சத்தியொன் றேயலால் ஏவர் வெல்பவர் என்று விளம்பிமேல். 27 ஈறு றாத விரதமுந் தன்பெயர் கூறு தெய்வப் படையுங் கொடுத்திடா வேறு வேறு மிகவருள் செய்துமேல் ஆறு சேர்சடை ஆண்டகை ஏகினான். 28 ஆகத் திருவிருத்தம் - 671 - - - 10. சு க் கி ர னு ப தே ச ப் ப ட ல ம் அற்றா கின்ற வேலையின் முன்னோர் அரணம்போற் சுற்றா நிற்குந் தானவர் தங்கோன் தொலைவில்சீர் பெற்றான் என்னுந் தன்மையை உன்னிப் பெருவன்மை உற்றா ரொல்லென் றார்த்தனர் ஆற்ற உவப்புற்றார். 1 ஊழியில் வேதன் கண்டுயில் வேலை உலகஞ்சூழ் ஆழிக ளேழும் ஆணையின் நிற்றல் அதுநீங்கி மாழைகொள் மேருச் சுற்றிய தென்ன மகத்தெல்லை சூழறல் நீங்கிச் சூர்முதல் தன்பால் துன்னுற்றார். 2 கண்டார் ஆர்த்தார் கான்மிசை வீழ்ந்தான் கமழ்வேரி கொண்டார் ஒத்தார் கைத்தொழு கின்றார் குப்புற்றார் அண்டா ஓகை பெற்றனர் தொன்னாள் அயர்வெல்லாம் விண்டார் வெஞ்சூர் தன்புடை யாகி விரவுற்றார். 3 முன்னா குற்றோ ரிற்சிலர் தம்மை முகநோக்கி இந்நாள் காறும் நீர்வலி யீர்கொ லெனவோதி மன்னா குற்றோன் நல்லருள் செய்ய மகிழவெய்தி அன்னார் யாரும் இன்னதொர் மாற்றம் அறைகுற்றார். 4 தீயுண் டாகுங் கண்ணுதல் கொண்ட சிவனுண்டு நீயுண் டெங்கட் கோர்குறை யுண்டோ நிலையாகி ஏயுஞ் செல்வஞ் சீரொடு பெற்றோம் இடரற்றோம் தாயுண் டாயின் மைந்தர் தமக்கோர் தளர்வுண்டா. 5 என்பார் தம்பால் அன்பின னாகி இறைபின்னோர் தன்பா லாக நிற்புழி இந்தத் தகுவன்றான் வன்பா லானான் செய்வதென் என்னா வானோர்கள் துன்பாய் அச்சுற் றேங்கினர் ஆவி தொலைவார்போல். 6 வேறு சேனை நள்ளிடைச் சீர்கெழு வன்மையான் மேன தன்மை விருப்பினிற் கண்ணுறீஇ மான மேற்சென்று மன்னொடுந் தானவர் சோனை மாரியில் தூமலர் தூவினார். 7 தூசு வீசினர் சூர்முதல் வாழயென் றாசி கூறினர் ஆடினர் பாடினர் பேச லாத பெருமகிழ் வெய்தினார் வாச வன்றன் மனத்துயர் நோக்கினார். 8 அண்ண லார்அரு ளால்அழல் வேதியின் கண்ணில் வந்த கணிப்பில் படைக்கெலாம் எண்ணி லோரை இறையவர் ஆக்கினான் நண்ணி நாளும் நவையறப் போற்றவே. 9 கண்ண கன்புயக் காவலன் தானைகள் மண்ணும் வானமும் மாதிர வெல்லையுந் தண்ண றச்செலத் தம்பியர் தம்மொடும் எண்ணி வேள்வி இருங்களம் நீங்கினான். 10 நீங்கி மீண்டு நெடுந்தவத் தந்தைதன் பாங்கர் எய்திப் பணிந்து பரமனால் வாங்க லுற்ற வரத்தயல் கூறியே யாங்கள் செய்வகை என்னினி யென்னவே. 11 தந்தை கேட்டுச் சதமகன் வாழ்வினுக் கந்த மாகிய தோவண்ட ருக்கிடர் வந்த தோவெம் மறைநெறி போனதோ எந்தை யார்அருள் இத்திற மோவெனா. 12 உன்னி யுள்ளத் துணர்வுறு காசிபன் தன்னின் வந்த தனயரை நோக்கியே முன்னி நுங்கண் முதற்குருப் பார்க்கவன் அன்ன வன்கண் அடைகுதிர் அன்பினீர். 13 அடைதி ரேயெனின் அன்னவன் உங்களுக் கிடைய றாவகை இத்திரு மல்குற நடைகொள் புந்தி நவின்றிடும் நன்றெனா விடைபு ரிந்து விடுத்தனன் மேலையோன். 14 விட்ட காலை விடைகொண்டு வெய்யவன் மட்டி லாத வயப்படை யோடெழா இட்ட மான இயற்புக ரோனிடங் கிட்டி னானது கேட்டனன் ஆங்கவன். 15 கேட்டு ணர்ந்திடு கேழ்கிளர் தேசிகன் வாட்ட நீங்கி மகிழ்நறை மாந்தியே வேட்ட மெய்தி விரைந்துதன் சீடர்தங் கூட்ட மோடெதிர் கொண்டு குறுகவே. 16 கண்ட சூரன் கதுமெனத் தன்பெருந் தண்ட முன்சென்று தம்பியர் தம்மொடு மண்டு காதலின் மன்னிய தேசிகன் புண்ட ரீகமென் பொன்னடி தாழந்தெழ. 17 நன்று வாழிய நாளுமென் றாசிகள் நின்று கூறி நிருதர்க் கிறைவனைத் தன்று ணைக்கரத் தால்தழு விப்புகர் என்றும் வாழ்தன் னிருக்கைகொண் டேகினான். 18 ஏகு மெல்லை இளவற் கிளவலை வாகு சேர்ந்தநம் மாப்படை போற்றென யூக மோடு நிறீஇயுர வோனொடும் போகல் மேயினன் புந்தியில் சூரனே. 19 ஆரு யிர்த்துணை யான அரிமுகன் வார முற்றுடன் வந்திட வந்திடுஞ் சூர பன்மனைச் சுக்கிரன் தன்னிடஞ் சேர வுய்த்துச் செயன்முறை நாடியே. 20 ஆச னங்கொடுத் தங்கண் இருத்தியே நேச நெஞ்சொடு நீடவும் நல்லன பேசி நீர்வரும் பெற்றியென் னோவெனாத் தேசி கன்கொலச் செம்மல் உரைசெய்வான். 21 ஓங்கு வேள்வி உலப்பறச் செய்ததும் ஆங்க னம்வந் தரனருள் செய்ததும் தாங்க ரும்வளந் தந்ததுங் காசிபன் பாங்கர் வந்த பரிசும் பகர்ந்துமேல். 22 தாதை கூறிய தன்மையும் முற்றுற ஓதி யாமினி ஊக்கி யியற்றிடும் நீதி யாது நிகழ்த்துதி நீயெனத் தீது சால்மனத் தேசிகன் கூறுவான். 23 பாச மேன்றும் பசுவென்றும் மேதகும் ஈச னென்றும் இசைப்பர் தளையெனப் பேசல் மித்தை பிறிதிலை ஆவியுந் தேசு மேவு சிவனுமொன் றாகுமே. 24 தீய நல்லன வேயெனச் செய்வினை ஆயி ரண்டென்பர் அன்னவற் றேதுவால் கூயு மால்பிறப் பென்பர்இன் பக்கடல் தோயும் என்பர் துயருறு மென்பரால். 25 ஒருமை யேயன்றி ஊழின் முறைவிராய் இருமை யுந்துய்க்கும் என்பர்அவ் வெல்லையில் அரிய தொல்வினை யானவை ஈட்டுமேல் வருவ தற்கென்பர் மன்னுயிர் யாவையும். 26 ஈட்டு கின்ற இருவினை யாற்றலான் மீட்டு மீட்டும் விரைவின் உதித்திடும் பாட்டின் மேவும் பரிசுணர்ந் தன்னவை கூட்டு மென்பர் குறிப்பரி தாஞ்சிவன். 27 சொற்ற ஆதியுந் தோமுறு வான்றளை உற்ற ஆவியும் ஒன்றல ஒன்றெனில் குற்ற மாகும்அக் கோமுதற் கென்பரால் மற்ற தற்கு வரன்முறை கேட்டிநீ. 28 ஆதி யந்தமின் றாகி அமலமாஞ் சோதி யாயமர் தொல்சிவன் ஆடலின் காத லாகிக் கருதுதல் மாயையாற் பூதல் யாவும் பிறவும் புரிவனால். 29 இடங்கொள் மாயையின் யாக்கைக ளாயின அடங்க வும்நல்கி அன்னவற் றூடுதான் கடங்கொள் வானிற் கலந்துமற் றவ்வுடல் மடங்கு மெல்லையின் மன்னுவன் தொன்மைபோல். 30 இத்தி றத்தின்எஞ் ஞான்றும்அவ் வெல்லைதீர் நித்தன் ஆடல் நிலைமை புரிந்திடும் மித்தை யாகும் வினைகளும் யாவையும் முத்தி தானு முயல்வதும் அன்னதே. 31 பொய்ய தாகும் பொறிபுலம் என்றிடின் மெய்ய தோவவை காணும் விழுப்பொருள் மையில் புந்தியும் வாக்கும் வடிவமுஞ் செய்ய நின்ற செயல்களும் அன்னதே. 32 அன்ன செய்கைகள் அன்மைய தாகுமேற் பின்னர் அங்கதன் பெற்றியின் வந்திடும் இன்னல் இன்பம் இரண்டுமெய் யாகுமோ சொன்ன முன்னைத் துணிபின வாகுமே. 33 மித்தை தன்னையும் மெய்யெனக் கொள்ளினும் அத்த குந்துய ரானதும் இன்பமும் நித்த மாகும் நிமலனை எய்துமோ பொத்தி லான பொதியுடற் காகுமே. 34 தோன்று கின்றதும் துண்ணென மாய்வதும் ஏன்று செய்வினை யாவதுஞ் செய்வதும் ஆன்ற தற்பரற் கில்லை அனையதை ஊன்றி நாடின் உடற்குறு பெற்றியே. 35 போவ தும்வரு கின்றதும் பொற்புடன் ஆவ தும்பின் அழிவதுஞ் செய்வினை ஏவ தும்மெண்ணி லாத கடந்தொறும் மேவு கின்றதொர் விண்ணினுக் காகுமோ. 36 அன்ன போல்எங்கும் ஆவியொன் றாகியே துன்னி நின்றிடு தொல்பரன் வேறுபா டென்ன தும்மிலன் என்றுமொர் பெற்றியான் மன்னும் அங்கது வாய்மையென் றோர்திநீ. 37 தஞ்ச மாகும் தருமநன் றாலென நெஞ்ச கத்து நினைந்து புரிவதும் விஞ்சு கின்ற வியனபவந் தீதென அஞ்சு கின்றது மாம்அறி வின்மையே. 38 யாது யாதுவந் தெய்திய தன்னதைத் தீது நன்றெனச் சிந்தைகொள் ளாதவை ஆதி மாயையென் றாய்ந்தவை ஆற்றுதல் நீதி யான நெறிமைய தாகுமே. 39 தருமஞ் செய்க தவறுள பாவமாங் கருமஞ் செய்யற்க என்பர் கருத்திலார் இருமை தன்னையும் யாவர்செய் தாலுமேல் வருவ தொன்றிலை மாயம்வித் தாகுமோ. 40 கனவின் எல்லையில் காமுறு நீரவும் இனைய வந்தவும் ஏனை இயற்கையும் நனவு வந்துழி நாங்கண்ட தில்லையால் அனைய வாம்இவண் ஆற்றுஞ் செயலெலாம். 41 இம்மை யாற்றும் இருவினை யின்பயன் அம்மை எய்தின்அன் றோவடை யப்படும் பொய்ம்மை யேயது பொய்யிற் பிறப்பது மெய்ம்மை யாகும தோசுடர் வேலினோய். 42 நெறிய தாகுமிந் நீர்மையெ லாம்பிறர் அறிவ ரேயெனின் அன்னதொர் வேலையே பெறுவர் யாமுறும் பெற்றியெ லாமவை உறுதி யுண்டெனின் உண்மைய தாகுமே. 43 சிறிய ரென்றுஞ் சிலரைச் சிலரைமேல் நெறிய ரென்றும் நினைவது நீர்மையோ இறுதி யில்லுயிர் யாவுமொன் றேயெனா அறிதல் வேண்டும· துண்மைய தாகுமே. 44 உண்மை யேயிவை ஓதியி னர்உணர் நுண்மை யாம்இனி நுங்களுக் காகிய வண்மை யுந்தொல் வழக்கமும் மற்றவுந் திண்மை யோடுரை செய்திடக் கேட்டிநீ. 45 தேவர் தம்மினுஞ் சீதர னாதியோர் ஏவர் தம்மினும் ஏற்றம தாகிய கோவி யற்கையுங் கொற்றமும் ஆணையும் ஓவில் செல்வமும் உன்னிடை யுற்றவே. 46 வேறு உற்றதோர் மேன்மை நாடி உன்னைநீ பிரம மென்றே தெற்றெனத் தௌ¤தி * மற்றத் திசைமுகன் முதலோர் தம்மைப் பற்றலை மேலோ ரென்று பணியலை இமையோர் உங்கள் செற்றலர் அவரை வல்லே செறுமதி திருவுஞ் சிந்தி. 47 ( * இது மாயாவாத உபதேசம் ஆகும்.) இந்திர னென்போன் வானோர்க் கிறையவன் அவனேநென்னல் அந்தமில் அவுணர் தங்கள் ஆருயிர் கொண்டான் அன்னான் உய்ந்தனன் போகா வண்ணம் ஒல்லையில் அவனைப் பற்றி மைந்துறு நிகளஞ் சேர்த்தி வன்சிறை புரிதி மாதோ. 48 சிறையினை இழைத்துச் செய்யுந் தீயன பலவுஞ் செய்து மறைபுகல் முனிவர் தம்மை வானவர் தம்மைத் திக்கின் இறையவர் தம்மை நாளும் ஏவல்கொண் டிடுதி அன்னார் உறைதரு பதங்க ளெல்லாம் உதவுதி அவுணர்க் கம்மா. 49 கொலையொடு களவு காமங் குறித்திடும் வஞ்ச மெல்லாம் நிலையெனப் புரிதி யற்றால் நினக்குமேல் வருந்தீ தொன்றும் இலையவை செய்தி டாயேல் இறைவநீ விரும்பிற் றெல்லாம் உலகிடை ஒருங்கு நண்ணா உனக்கெவர் வெருவும் நீரார். 50 வண்டுழாய் மிலைச்சுஞ் சென்னி மால்விடைப் பாகன் தந்த அண்டமா யிரமே லெட்டும் அனிகமோ டின்னே ஏகிக் கண்டுகண் டவண்நீ செய்யுங் கடன்முறை இறைமை யாற்றி எண்டிசை புகழ மீண்டே ஈண்டுவீற் றிருத்தி யென்றான். 51 ஆகத் திருவிருத்தம் - 722 - - - 11. அ ண் ட கோ ச ப் ப ட ல ம் தீயதோ ரினைய மாற்றஞ் ரெப்பலும் இதுநன் றெந்தை ஏயின பணியில் நிற்பன் இறையவன் எனக்குத் தந்த ஆயிரத் தெட்டென் றோதும் அண்டங்கள் நிலைமை யாவும் நீயுரை யென்ன ஆசான் நிருபனுக் குரைக்க லுற்றான். 1 மேலுள பொருளுந் தத்தம் விளைவது நிற்க இப்பால் மூலமாம் பகுதி தன்னின் முளைத்திடும் புந்தி புந்தி ஏலுறும் அகந்தை ஒன்றின் எய்தும்ஐம் புலனும் ஆங்கே வாலிய ககனந் தொட்டு மாநிலங் காறும் வந்த. 2 அப்பெரும் புவிக்குத் தான்ஓர் ஆயிர கோடி யண்டம் ஒப்பில வென்ன உண்டால் ஒன்றினுக் கொன்று மேலாச் செப்புறு நிலைமைத் தன்று தெரிந்திடிற் பரந்து வைகும் வைப்பென லாகும் அன்ன மற்றவை அம்பொன் வண்ணம். 3 அங்கண்மா ஞாலத் தண்டம் ஆயிர கோடி தன்னில் இங்குநீ பெற்ற அண்டம் ஆயிரத் தெட்டி னுள்ளுந் துங்கமாம் அண்ட மொன்றின் இயற்கையைச் சொல்லு கின்றேன் செங்கைசேர் நெல்லி யென்னச் சிந்தையிற் காண்டி யன்றே. 4 கதிரெழு துகன்எண் மூன்று கசாக்கிர கந்தான் ஆகும் இதுதொகை இருநான் குற்ற திலீக்கையவ் விலீக்கை யெட்டால் உதிதரும் யூகை யன்ன யூகையெட் டியவை யென்ப அதினிரு நான்கு கொண்ட தங்குலத் தளவை யாமே. 5 அங்குலம் அறுநான் கெய்தின் அதுகரம் கரமோர் நான்கு தங்குதல் தனுவென் றாகும் தனுவிரண் டதுஓர் தண்டம் இங்குறு தண்ட மான இராயிரங் குரோசத் தெல்லை பங்கமில் குரோசம் நான்கோ ரியோசனைப் பால தாமே. 6 அந்தயோ சனையின் எல்லை ஐம்பதிற் றிரண்டு கோடி வந்ததிவ் வண்டத் திற்கும் மாயிரும் பரவை வைப்பும் முந்திய நிவப்பு மாகும் மொழிந்திடும் அண்டங் கட்கும் இந்தவா றளவைத் தென்றே எண்ணுதி இலைகொள் வேலோய். 7 ஒண்புவ னிக்குக் கீழாம் யோசனை ஐம்பான் கோடி திண்புவி தனக்கு மேலாய்ச் சேர்தரும் அளவும் அ·தே மண்புகழ் மேரு வுக்கு மாதிரம் அவையோ ரெட்டும் எண்படும் ஐம்பான் கோடி கடாகத்தின் எல்லை யோடும். 8 அண்டமார் கடமோர் கோடி அதற்குமீ தினிலோர் கோடி திண்டிறல் காலச் செந்தீ யுருந்திரர் செம்பொற் கோயில் ஒண்டழற் கற்றை யுள்ள தொருபது கோடி மீக்கட் கொண்டெழு தூம வெல்லை குணிக்கின்ஐங் கோடி யாமே. 9 அரித்தவி சுயர்ச்சி ஆங்கோர் ஆயிரம் அளவைத் தாகும் பரத்தலும் அதற்கி ரட்டி படர்தரு காலச் செந்தீ உருத்திரர் அழலின் மேனி யோசனை அயுத மாகுந் திருத்தகு பலகை வாள்வில் செஞ்சர மேந்திச் சேர்வார். 10 ஓங்கிய காலச் செந்தீ யுருத்திரர் தம்மைப் போல்வார் ஆங்கொரு பதின்மர் சூழ்வர் அன்னவர் ஏவல் ஆற்றிப் பாங்குற வொருபான் கோடிப் பரிசன மேவும் அன்னோர் பூங்கழல் வழுத்தி ஆதி கமடம்அப் புவனம் வைகும். 11 அன்னதோர் புவன மீக்கண் அடுக்குறு நிலைய வாகித் துன்னுறு நாலேழ் கோடி தொகைப்படு நிரயத் தெல்லை உன்னத மான கோடி ஒன்றொழி முப்பான் மேலும் பன்னிரண் டிலக்கம் அண்டத் தளவுறும் பரப்பு மன்னோ. 12 உற்றிடு நிரய மீதில் ஒன்றிலா இலக்கம் நூறு பெற்றிடு முயர்வு தன்னிற் பிறங்குமோர் புவனம் கீழ்மண் பற்றிய இரும்பு நாப்பண் பச்சிமம் பசும்பொற் சோதி மற்றதன் மேல்பா கத்தில் வதிவர்கூர் மாண்டர் என்போர். 13 காழக முகத்தா கூர்வாய்க் கணிச்சியம் படைசேர் கையர் ஊழியங் கனலை அன்ன உருவினர் திரியுங் கண்ணர் மாழையம் பீட மீக்கண் வைகுகூர் மாண்டர் தம்பால் சூழுருத் திரராய் உள்ளோர் தொகுதியை அளக்கொ ணாதால். 14 அப்புவ னத்து மீதே அந்தரம் இலக்க மொன்பான் செப்புவர் அதனுக் கும்பர் சிறந்தபா தலங்கள் என்ப ஒப்பறு பிலமொன் றற்கே ஒன்ப·தி லக்க மாக இப்படி அறுபான் மூன்றாம் இலக்கமேழ் பிலத்தின் எல்லை. 15 பரத்தினி லுறுங்க னிட்ட பாதலம் எட்டி லக்கம் அரத்தினுக் ககற்சி வெவ்வே றயுதமாம் அவைமுப் பாகம் உரத்தகும் அவுணர் கீழ்பால் ஔ¢ளெயிற் றுரகர் நாப்பண் திருத்தகும் அரக்கர் மேல்பால் சிறந்துவீற் றிருந்து வாழ்வோர். 16 இதன்மிசை இலக்க மொன்பான் ஆடகர் இரக்கை யாகும் இதன்மிசை வௌ¤ஓர் கோடி இலக்கமும் இருப துண்டால் இதன்மிசைக் களிறு பாந்தள் எட்டுடன் சேடன் ஏந்தும் இதன்மிசைப் புவியின் ஈட்டம் எண்ப·தி லக்க மாமே. 17 ஈடுறு பிலங்கட் கெல்லாம் இறைவராய்ப் பாது காப்போர் ஆடகர் தாமே நாகர் அவுணர்வாள் அரக்கர் அன்னார் தாடொழு சனங்கள் அண்ட கடமுதல் தரையீ றாகக் கோடியோர் ஐம்பான் ஆகுங் குணித்தனை கோடி யன்றே. 18 பலவகைப் பிலங்கட் கெல்லாம் பரமதாய் உற்ற தொல்பார் உலகினுள் விரிவும் அங்கண் உள்ளவும் உரைப்பன் கேட்டி குலவிய சம்பு சாகங் குசைகிர வுஞ்சம் கோதில் இலவுகோ மேத கம்புட் கரம்இவை ஏழு தீவே. 19 பரவுமிவ் வுலகில் உப்புப் பால்தயிர் நெய்யே கன்னல் இரதமா மதுநீ ராகும் எழுகடல் ஏழு தீவும் வரன்முறை விரவிச் சூழும் மற்றதற் கப்பால் சொன்னத் தரையது சூழ்ந்து நிற்கும் சக்கர வாளச் சையம். 20 அன்னதற் கப்பால் வேலைக் கரசனாம் புறத்தி லாழி பின்னது தனக்கும் அப்பால் பேரிருள் சேர்ந்த ஞாலம் மன்னவ காண்டி அப்பால் வலிகெழும் அண்டத் தோடு துன்னுமிப் பொருள்கள் யாவுஞ் சூழ்ந்துகொண் டிருக்கு மன்றே. 21 எல்லைதீர் முன்னைத் தீவோ ரிலக்கமாங் கடலும் அற்றே அல்லன தீவும் நேமி அதற்கதற் கிரட்டி யாகச் சொல்லினர் ஆங்ஙன் கண்ட தொகையிரு கோடி அன்றி நல்லதோர் ஐம்பான் மேலும் நான்கெனும் இலக்க மாமே. 22 ஐயிரு கோடி சொன்னத் தணிதலம் அதுசூழ் நேமிச் சையமோர் அயுத மாகும் சார்தரு புறத்தின் நேமி எய்திய கோடி மேலும் இருபதோ டிலக்க மேழாம் மையிருள் சேர்ந்த பாரின் எல்லைமேல் வகுப்பன் மன்னோ. 23 ஆரிருள் உலகம் முப்பான் அஞ்செனுங் கோடி மேலும் ஓரொரு பத்தொன் பானூ றுற்றநான் கயுதமாகும் பேரிருள் சூழ்ந்த அண்டப் பித்திகைக் கனமோர் கோடி பாரிடை யகலந் தேரில் பாதியோர் ஐம்பான் கோடி. 24 நடைதரு தொன்னூ லாற்றான் நாம்புகல் கணிதந் தன்னை உடையதோர் திசையே இவ்வ றொழிந்தமா திரத்தும் வைக்கின் வடகொடு தென்றி கீழ்மேல் மற்றுள கோண முற்றும் நொடிதரிற் கோடி கோடி நூறுயோ சனைய தாமே. 25 முள்ளுடை மூல மான முண்டகத் தவிசின் மேய வள்ளறன் வலது மொய்ம்பான் வந்தசா யம்பு மைந்தன் அள்ளிலை வேற்கை நம்பி அன்புடை விரதன் ஞாலம் உள்ளதோ ரெல்லை முற்றும் ஒருதனிக் குடையுள் வைத்தான். 26 அங்கவன் தனது மைந்தர் அங்கிதீ ரன்மே தாதி துங்கமாம் வபுட்டி னோடு சோதிட்டுத் துதிமான் தொல்சீர் தங்குமவ் வியனே மிக்க சவனனாம் எழுவர் தாமும் பங்குகொண் டேழு தீவும் பாதுகாத் தரசு செய்தார். 27 வேறு சீரியசம் புத்தீபம் புரந்த அங்கி தீரன்என்போன் தான் அருளுஞ் சிறுவ ராயோர், பாரதன்கிம் புருடன்அரி கேது மாலன் பத்திரா சுவனன்இளா விருத னென்போன், ஏருடைய இரமியன்நல் லேமப் பேரோன் இயற்குருவாம் ஒன்பதின்மர் இவர்கள் பேரால், ஓரொருவர்க் கொவ்வொன்றா நாவற் றீவை ஒன்பதுகண் டமதாக்கி உதவி னானால். 28 விண்ணுயர்சம் புத்தீவின் நடுவு நின்ற மேருவரை செங்கமலப் பொகுட்டுப் போல, நண்ணுமதற் கியோசனைஉன் னதம்எண் பத்து சென்னி யகலம் முப்பா னிராயிரமாம் பராரையெல்லை அதனிற் பாதி, வண்ணமிகு மேகலைமூன் றதனுள் உச்சி வாய்த்திடுமே கலையினிற்பல் சிகர மல்கும். 29 மேருவரை அதற்குநடுப் பிரமன் மூதூர் மிக்கமனோ வதிஅதற்கு மேலைத் திக்கின், நாரணன்வாழ் வைகுண்டம் வடகீழ் பாலின் நாதனமர் சோதிட்கம் திசைக ளெட்டுஞ், சீரியவிந் திரன்முதலாம் எண்மர் தேயந் தெற்குமுதல் வடக்களவு மருங்கு தன்னில், நேரிய தோர் தேசமது செவ்வே போகும் நெடும்பூழை யொன்றுளது நினைக மாதோ. 30 அந்தவரைக் கீழ்த்திசைமந் தரமாம் வெண்மை அதன்தெற்குக் கந்தமா தனம்பொன் மேல்பால், சுந்தரமாம் விபுலம்நீ லம்வ டக்குச் சுபார்சுவம்மா துளைப்போது கடம்பு சம்பு, நந்தியதோர் போதிஆல் குணபா லாதி நாற்றிசையில் வரைமீது நிற்கும் நாவல், முந்துமிரண் டாயிரயோ சனையாம் ஏனை முத்தருவும் இதிற்பாதி மொழியும் எல்லை. 31 அத்தகைய கீழ்த்திசையில் அருணம் மேல்பால் அசிதோதம் தென்றிசைமா னதமே யல்லா, உத்தரத்தின் மாமடுநீர் நிலையாய் மேவும் உய்யானஞ் சயித்திரதங் குணக்கு வைகும், வைத்தபெரு நந்தனந்தக் கிணத்தில் ஓங்கும் வைப்பிரசங் குடக்கமரும் வடாது பாங்கின், மெத்துதிரு தாக்கியம்உற் றிடுமிவ் வாறு மேருவரைச் சாரலிடை விரவு மன்றே. 32 கடிகமழும் நாவலொன்று தென்பால் நின்ற காரணத்தால் பாரதன்றன் கண்ட முற்றும், இடனுடைய நாவலந்தீ வெனப்பேர் பெற்ற திருத்தருவின் தீங்கனிநீ ராறாய் மேருத், தடவரையைப் புடைசூழ்ந்து வடபாற் சென்று சாம்புநதப் பெயர்பெறுமச் சலிலந் துய்த்தோர், உடல் முழுதும் பொன்மயமாய் அயுத மேலும் ஒருமூவா யிரமாண்டங் குறுவர் அன்றே. 33 நாற்றிசையில் வரைப்பரப்பு மேல்கீழ் தானும் நவின்றிடின்மே ருவிற்பாதி அதற்குக் கீழபால், மாற்றரிய மாலியவான் மேல்பாற்கந்த மாதனந்தென் றிசைநிசதம் ஏம கூடம், ஏற்றஇமம் வடபால்நீ லம்சுவேதம் இயற்சிருங்கம் எட்டுவரை இவையாம் நீலம், மேற்றிகழ்பொன் மண கனகம் பனியே நீலம் வெண்மைமதி காந்தம்இவை மேனி தாமே. 34 நிசதமொடு பொற்கூடம் இமையங் கீழ்மேல் நெடுங்கடலைத் தலைக்கூடி நிமிரும் சோமன், திசையுளபூ தரமூன்றும் அனைய எட்டுத் திண்கிரியும் இராயிரயோ சனைவான் செல்லும், வசையில்கந்த மாதனமா லியவான் என்னும் மால்வரைகள் தமதகலம் அயுதம் மற்றை, அசலமிரு மூன்றுமரா யிரம்இத் தீவுள் அமருநவ கண்டவெல்லை அறைவன் மாதோ. 35 கோதில்வட கடல்முதலாச் சிருங்கங் காறுங் குருவருடம் சிருங்க முதற் சுவேத மட்டும், நீதிஇர ணியவருடம் சுவேத நீல நெடுங்கிரியின் நடுவண்இர மியமாம் மேருப், பூதரஞ்சூழ் வருடம்இளா விருதமாகும் பொலிந்தகந்த மாதனமேற் புணரி நாப்பண், கேதுமால் வருடம்மா லியவான் தொட்டுக் கீழ்கடலின் இறுவாய்பத் திரம தாமே. 36 அம்புவியின் நிசதமுதல் ஏமங் காறும் அரிவருடம் ஏமமுதல் இமைய நாப்பண், கிம்புருடம் தென்கடற்கும் இமைய மென்னுங் கிரிக்குநடுப் பாரதமாம் கேது மாலோ, டிம்பர்புகழ் பத்திரமுப் பத்து நாலா யிரம்நின்ற தொன்பதினா யிரமா மெல்லை, உம்பர்தம துலகனைய பரத மென்னும் ஒன்றொழிந்த கண்டமெட்டும் உற்று ளோர்க்கே. 37 ஆங்குருநாட் டுறைபவர்ஓர் பொழுதின் யாய்பால் ஆடூவு மகடூவு மாகத் தோன்றித், தாங்கள்விழை விற்புணர்வர் அவர்க்குத் தெய்வத் தருமலர்கள் உதவும்உணாக் கனியுங் காயும், ஓங்குபச்சை நிறம் ஆயுள் அயுத மேலும் ஒரமூவா யிரம்அதற்குள் வடபா கத்திற், பாங்கமர்வர் முனிவரர்சா ரணரே சித்தர் பதின்மூவா யிரம்ஆயுள் படிகம் வண்ணம். 38 பரவுபத்தி ராசுவத்தோர் கனிகாய் துய்ப்போர் பதின்மூவா யிரம்ஆயுள் படைத்த சேயோர், இரணியத்தோர் பலநுகர்வோர் மதிநேர் மெய்யர் இராயிரமைஞ் ஞூறயுதம் ஆண்டு பெற்றோர், பொருவரிய இரமியத்தி னுள்ளோர் ஆலின் புன்கனிகள் மிசைகுவர்பூங் குவளை போல்வார், வருடமவர்க் கொருபதினா யிரமே யன்றி மற்றுமிரண்டாயிர மாச் சொற்ற தொன்னூல். 39 விராவும்இளா விருதத்தோர் வௌ¤ய மெய்யர் மிசைவதுதீங் கரும்பிரதம் அயுத மேலும், இராயிரமாம் யுகம்கேது மாலத் தன்னில் இருப்பவர்பைங் குவளைநிறம் இனிதி னுண்டல், பராரையுள கண்டகியின் கனியே ஆயுள் பத்துளவா யிரம்அரிகண் டத்து வாழ்வோர், ஒராயிரமோ டொன்பதினா யிரம தெல்லை உணவுகனி காய்மதியம் ஔ¤ய தன்றே. 40 போற்றியகிம் புருடத்தோர் இறலித் தீய புன்கனியே மிசைவர் நிறம் பொன்மை ஆயுள், சாற்றியிடும் ஓரயுதம் ஏமகூடத் தடவரைத் தென் பால்இமைய வடபால் தன்னில், ஏற்றமிகுங் கயிலைநிற்கும் அதற்கு மீதே இமையாமுக் கட்பகவன் உமையா ளோடும், வீற்றிருப்பன் ஊழிதனில் அண்டங் காறு மேலொடுகீழ் சென்றிடுமவ் வெற்பு மாதோ. 41 இந்தவிரு நாற்கண்டத் துறையும் நீரார் இன்னல்பிணி நரை திரைமூப் பிறையுஞ் சேரார், முந்தையுகம் போலேனை மூன்றி னுள்ளும் மொய்ம்புநிறை அறிவுடலம் முயற்சி ஆயுள், அந்தமில்சீர் முதலெல்லாம் ஒருதன் மைத்தா அடைகுவர்முன் பாரதத்தில் அவதரித்து, வந்துபுரி வினைப்பயனை நுகர்வர் என்பர் வானமுகில் சென்று புனல் வழங்கா தங்ஙன். 42 பாரதத்துள் ளார்அவனி கிளைத்து மற்றும் ப·றொழிலும் புரிந்து மறம் பாவம் ஈட்டிப், பேரருள்பௌ திகமெழுவா யான மூன்றிற் பெறுபயன்கொண் டுய்வர்என்பர் பெருமை யாற்றல், சீரறிவு நிறை ஆயுள் உருவம் உண்டி செய்கையுகங் களுக்கியைந்த திறனே சேர்வர், தோரைமுதற் பலபைங்கூழ் விளையுள் ஆக்கந் தூயகனி க