|
Home > Scriptures & Stotras > Tamil scriptures and literature > kandha purANam
kandha purANam of kachchiyappa chivAchAriyAr
(in tamil script, unicode / UTF-8 format)
கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம்
உ
செந்திலாண்டவன் துணை
திருச்சிற்றம்பலம்
2. அ சு ர கா ண் ட ம்
* * *
1. மா யை ப் ப ட ல ம்
ஊரி லான்குணங் குறியிலான் செயலிலான் உரைக்கும்
பேரி லான்ஒரு முன்னிலான் பின்னிலான் பிறிதோன்
சாரி லான்வரல் போக்கிலன் மேலிலான் தனக்கு
நேரி லான்உயிர்க் கடவுளாய் என்னுளே நின்றான். 1
வீறு காசிபன் சிறார்களாய் மேவிய அறுபான்
ஆறு கோடிய தாகிய அவுணருக் கரசன்
மாறில் மங்கல கேசியாம் அரக்கியை மணந்து
பேற தாகவே சுரசையென் றொருமகட் பெற்றான். 2
தூய அம்மகள் வளர்ந்தபின் புகன்எனுந் தொல்லோன்
தீய மாயையின் கல்விகள் யாவையுந் தெருட்டி
ஆய விஞ்சையின் வல்லபம் நோக்கியே அவட்கு
மாயை என்றுபேர் கூறினன் மனத்திவை மதிப்பான். 3
இன்ன லெய்திய அவுணர்கள் சிறுமையும் இமையோர்
மன்ன னாதியர் பெருமையும் வானநாட் டுறைவோர்
நன்ன லந்தொலைந் தசுரரால் மலிந்திட நந்தி
சொன்ன வாய்மையுங் கருதினன் புகரெனுந் தூயோன். 4
கருதி இன்னண மேல்வருந் தன்மையுங் கண்டு
குருதி தோயும்வேல் அவுணர்கோன் பயந்தகோற் றொடியை
வருதி என்றுகூற் வரம்பறு பேரருள் வழங்கி
ஒருதி றந்தனைக் கேளெனத் தேசிகன் உரைப்பான். 5
வனச மங்கைதன் கணவனால் வாசவன் தன்னால்
முனிவர் தேவரால் அளப்பிலா அவுணர்கள் முடிந்தார்
அனையர் மேன்மையை யாவரும் உணர்குவர் அதனால்
உனது தந்தையும் வலியிழந் தேயொடுங் குற்றான். 6
மின்பொ ருட்டினால் கேதகை மலர்ந்திடும் விளங்கும்
என்பொ ருட்டினால் மாமழை சொரிந்திடும் ஈட்டும்
பொன்பொ ருட்டினால் யாவுமுண் டாமதுபோல
உன்பொ ருட்டினால் அவுணர்க்கு மேன்மைய துளதாம். 7
வாச மாமலர் மடந்தையும் வந்தடி வணங்கப்
பேசொ ணாததோர் பேரழ குருக்கொடு பெயர்ந்து
காசி பன்றனை அடைந்துநின் வல்லபங் காட்டி
ஆசை பூட்டியே அவனொடும் புணருதி அல்லில். 8
அல்லி டைப்புணர்ந் தசுரர்கள் தம்மையுண் டாக்கி
மெல்ல அங்கவர் தங்கட்கு நாமமும் விளம்பி
எல்லை யில்வளம் பெற்றிட அவுணருக் கியலுந்
தொல்லை வேள்வியும் விரதமும் உணர்த்துதி தோகாய். 9
இன்ன தன்மைகள் முடிந்தபின் நின்சிறார் எவரும்
நன்ன லந்தனை அடையவும் நண்ணல ரெல்லாம்
பன்ன ரும்பழி மூழ்கவும் அருந்தவம் பயில
அன்னை மீளுதி என்றனன் புகரெனும் ஆசான். 10
குரவன் வாய்மையை வினவியே கோதில்சீர் அவுணர்
மரபு மேம்படு தன்மையான் மற்றிவை யெல்லாம்
அருளு கின்றனை ஆதலால் இப்பணி யடியேன்
புரிகு வேனென அவனடி வணங்கியே போனாள். 11
மயிலை அன்னவள் அவுணர்தம் மன்னற்கும் இனைய
செயலை யோதியே அவன்விடை யுங்கொடு சென்று
கயிலை என்னநீ றாடியே காசிபன் இருந்து
பயிலும் நோன்புடை எல்லையை நாடியே படர்ந்தாள். 12
திருவும் மாரவேள் இரதிவேள் இரதியுந் திலோத்தமை யென்ன
மருவு தையலும் மோகினி யென்பதோர் மாதும்
ஒருத னித்திரு வடிவுகொண் டாலென உலகில்
பொருவில் மாயவன் பேரழ குருக்கொடு போனாள். 13
மண்ணுற் றோர்களும் மாதிரத் தோர்களும் மதிதோய்
விண்ணுற் றோர்களும் அன்னவள் எழில்நலம் விரைவில்
கண்ணுற் றோர்கிலர் அணுகினர் காமவேள் கணையின்
புண்ணுற் றோர்விளக் கழலுறு பறவையிற் புலர்ந்தார். 14
மதியும் ஞாயிறுஞ் சூழ்தரு மேருவின் வடபால்
விதிம கன்தவம் புரிதரும் வியனிலை மருங்கின்
அதிர்சி லம்பொடு மேகலை புலம்புற அனையாள்
திதிகொல் என்றெலாத் தேவரும் ஐயுறச் சென்றாள். 15
சென்ற மாயைஅக் காசிபன் இருக்கையில் திருவாழ்
மன்றல் லாவியுந் தடங்களுஞ் சோலையும் மணிசெய்
குன்று மாமலர்ப் பள்ளியும் மண்டபக் குழாமுந்
தன்றன் ஆணையால் துண்ணெனச் சூழ்தரச் சமைத்தாள். 16
இனைத்தெ லாமவண் வருதலும் எந்தைதன் னடியை
மனத்தி னிற்கொடு பொறியினை உரத்தினால் வாட்டித்
தனித்து நோற்றிடுங் காசிபன் புகுந்தஅத் தகைமை
அனைத்தும் நோக்கியீ தென்கொலென் றதிசய மடைந்தான். 17
முற்று மாங்கவை ஆசையின் நெடிதுபன் முறையால்
உற்று நாடியே மாயைதன் செயலென உணரான்
இற்றெ லாமிவண் இயற்றினர் யாரென எண்ணிச்
சுற்று நோக்கினன் யாரையுங் காண்கிலன் தூயோன். 18
வேறு
மெய்த்தவ வுணர்ச்சியை விடுத்து மேலையோன்
அத்தன தருளினால் அணங்கு மாயையால்
வைத்தன கண்ணுறா மனங்கொள் காதலாற்
சித்திர மெனவெரீஇ யினைய செப்புவான். 19
வானநா டிழிந்ததோ மகத்தின் வேந்துறை
தானநா டிழிந்ததோ தனதன் ஆதியோர்
ஏனைநா டிழிந்ததோ இதுவன் றேல்இவை
ஆனவா றுணர்கிலேன் அழுங்கு சிந்தையேன். 20
ஆரணன் செய்கையோ அகில முண்டுமிழ்
நாரணன் செய்கையோ அவர்க்கு நாடொணாப்
பூரணன் செய்கையோ பிறர்பு ரிந்ததோ
காரணந் தேர்கிலேன் கவலும் நெஞ்சினேன். 21
புன்னெறிக் கானிடைப் புகுந்த இத்திரு
நன்னெறிக் கேதுவோ நலந்த விர்ந்திடுந்
துன்னெறிக் கேதுவோ தொல்லை ஞாலமேல்
எந்நெறிக் கேதுவென் றிதுவுந் தேர்கிலேன். 22
என்றிவை சொற்றிவண் யாவ தாயினும்
நன்றதன் இயற்கையும் நமக்கு முன்னரே
ஒன்றறத் தெரிவுறும் உணர்ச்சி இங்ஙனஞ்
சென்றது பழுதெனச் சிந்தித் தானரோ. 23
தெற்றெனத் தன்மனந் தேற்றித் தொன்மைபோல்
நற்றவம் இயற்றுவான் நணுகும் வேலையில்
மற்றது தெரிந்திடு மாயை தூமணிப்
பொற்றையில் தமியளாய்ப் பொலிந்து தோன்றினாள். 24
தோன்றினள் நிற்றலுந் தொல்லை நான்முகற்
கான்றதொர் காதலன் அவளை நோக்கினான்
வான்றிகழ் கற்பக வல்லி செய்தவத்
தீன்றதொர் கொடிஇவண் எய்திற் றோவென்றான். 25
நாற்றலை யான்மகன் நம்முன் இக்கொடி
தோற்றிய தற்புதச் சூழ்ச்சிக் கேதுவென்
றாற்றுறு தவத்றின் அகற்றி யாயிடை
வீற்றிருந் திடுவது விடுத்துப் போயினான். 26
கண்ணகல் வரைமிசைக் கடிது போயுறீஇ
அண்ணிய னாதலும் அரிவை யாய்உறப்
பெண்ணுரு வேகொல்இப் பெற்றித் தாலென
எண்ணினன் மையலுக் கெல்லை காண்கிலான். 27
புண்டரி கத்திகொல் பொன்னம் பாவைகொல்
அண்டர்தம் அணங்குகொல் என்னின் அன்னரைக்
கண்டறி வேன்எனைக் காதல் பூட்டிய
ஒண்டொடி இனையள்என் றுணர்கி லேனரோ. 28
சேயிருங் கமலமேற் செம்மல் செய்கையால்
ஆயவள் என்னில்இவ் வழகு பெற்றிடான்
கூயது தேறினன் எல்லை இல்லதோர்
மாயையே பெண்ணென வந்த வாறென்பான். 29
புகன்றிவை பற்பல பொருவில் நான்முகன்
மகன்றன தருந்தவ வலியும் போதமும்
அகன்றனன் புணர்ச்சிவேட் டழுங்கி நைவதோர்
மகன்றிலின் பரிசென வருத்த மெய்தினான். 30
உண்ணிகழ் ஊன்பொருட் டுயிர்கொல் வேட்டுவர்
கண்ணியுட் பட்டதோர் கலையின் மாழ்குவான்
பெண்ணர சாயவிப் பேதைக் கென்கொலோ
எண்ணமென் றிடருழந் திரங்கி ஏங்கினான். 31
அதுபொழு தவுணரை அளிக்க வந்திடுந்
திதிநிகர் மடமகள் சிறந்த கண்களால்
பொதுவியல் நோக்கொடு புணர்ச்சி நோக்கினைக்
கதுமெனக் காட்டினள் முனிவன் காணுற. 32
கண்டனன் முனிவரன் கலங்கி னான்பொதுக்
கொண்டதோர் நோக்கியல் குறித்துக் கூடுதல்
எண்டரு நோக்கினால் இவளை யெய்துமா
றுண்டென நினைந்தனன் உவப்பின் உம்பரான். 33
பெருந்துயர் உதவுவெம் பிணியுந் தீர்ப்பதேர்
மருந்துமற் றாதலும் மையல் மேதகும்
அருந்தவ முனிவரன் அனைய மாதுதன்
திருந்திய நோக்கியல் தௌ¤ந்து செப்புவான். 34
கற்பனை முதலிய கடந்த கண்ணுதற்
சிற்பரன் யாவையுஞ் சிதைய ஈறுசெய்
அற்புத மும்மவன் அருளும் போன்றதால்
பொற்புறு கின்றஇப் பூவை நாட்டமே. 35
மாயையுங் கொலையுமே மருவி வைகலும்
ஆயதோர் உலகினை அளிக்கும் நீர்மையாற்
பாயிருந் திரைக்கடல் நடுவட் பள்ளிகொள்
தூயனை நிகர்த்ததித் தொகை நோக்கமே. 36
இயலிருள் மேனியால் இடியின் ஆர்ப்பினால்
வியனுயிர் முழுவதும் வெருவச் செய்துடன்
பயனுறு தீம்புனல் பரிவின் ஈதரு
புயலையும் நிகர்த்தன பூவை பார்வையே. 37
என்பன பலபல எண்ணி அன்னவள்
தன்படி வத்துரத் தகைமை காணுறீஇ
அன்பினில் வியந்துநின் றழுங்கு நெஞ்சொடு
நன்பெரு நயப்பினால் நவிறல் மேயினான். 38
வேறு
வானுறு புயலின் தோற்றம் வரம்பில்சீர்க் கங்குல் வண்ணம்
ஏனைய கருமை யெல்லாம் இலக்கணத் தொருங்கே ஈண்டி
மீனுறழ் தடங்க ணாள்பால் மேவிய என்ப தல்லால்
நானமார் கூந்தற் கம்மா நாம்புகல் உவமை யாதோ. 39
கோட்டுடைக் கு£வித் திங்கள் குனிசிலை இரண்டு மானின்
சூட்டுடை நுதற்கொவ் வாது தொலைந்துபோய்¢ தொல்லை வான
நாட்டிடைக் கரந்துந் தோன்ற நணுகியுந் திரியு மென்னின்
மீட்டிதற் குரைக்க லாகும் உவமைகள் வேறு முண்டோ. 40
அருவத்தில் திகழுங் காமன் ஆடலஞ் சிலையும் நெற்றி
உருவத்துக் குடைந்து வான்புக் கொதுங்கிய மகவான் வில்லும்
மருவத்தந் துரைத்தும் என்னின் மற்றவை யிரண்டும் மாதின்
புருவத்தைப் போலா தம்மின் மீமிசைப் பொருந்து மன்றே. 41
வண்ணமா வடுக்கோல் நீலம் வாளயில் கயல்சேல் என்றே
எண்ணின அவற்றி லொன்றும் யாவது மியல்புற் றன்றாற்
கண்ணிணைக் கிணையே தென்னிற் காமர்பாற் கடலுள் எங்கோன்
உண்ணிய எழுநஞ் சென்னில் ஒருசிறி தொப்ப தம்மா. 42
எள்ளென்றும் ஒத்தியென்றும் ஏர்கொள்சம் பகப்போ தென்றுந்
தள்ளருங் குமிழ தென்றுஞ் சாற்றினர் அவைகள் நாடில்
தௌ¢ளிறு மன்று வேறு செப்பவோர் பொருளு மில்லை
உள்ளதொன் றுரைக்க வேண்டுந் துண்டத்துக் குவமை தேரின். 43
கெண்டையந் தடங்கட் பாவை கேழ்கிளர் இதழ்க்கொப் புன்னில்
தொண்டையங் கனியுண் டென்று சொல்வனேல் அதுவுந் துப்பால்
உண்டிடும் விருப்பி னோருக் குலப்புறா அமிர்தம் நல்கிக்
கொண்டிருந் திடினே ஒப்பாம் இல்லையேற் கூடா தன்றே. 44
முகையுறு தளவும் புள்ளின் முருந்தமுங் குருந்து முத்தும்
அகையுறு முடுவுஞ் சாற்றின் அணியெயி றதற்கொவ் வாவால்
நகையது தெரிந்தோர் வெ·க நன்னலம் புரியும் நீரால்
நிகர்பிறி தில்லை திங்கள் நிலாவெனில் ஆகு மன்றே. 45
மயிரெறி கருவி வள்ளை தோரண மணிப்பொன் னூசல்
பெயர்வன நிகர்க்கு மென்று பேசுதல் பேதை நீர்த்தாஞ்
செயிரற வுலோக மாக்குந திசைமுகக் கொல்லன் செய்த
உயிரெறி கருவி போலும் ஒண்குழைக் காது மாதோ. 46
கொங்குறு கூந்த லாள்தன் கோலவாள் முகத்துக் கொப்பாம்
திங்களென் றுரைக்கில் தேயும் வளர்வுறுஞ் சிறப்ப தன்றால்
பங்கய மெனினும் உண்டோர் பழுதுமற் றதற்கும் என்னில்
அங்கதற் கதுவே யலலால் அறையலாம் படிமற் றுண்டோ. 47
சரந்தெறு விழியி னாள்தன் களத்தின தெழிலைச் சங்கங்
கரந்தன கமுகும் அற்றே அன்னது கண்டு நேரா
வரந்தரு புலவர் சொற்றார் மற்றவர் அதற்கோ நாளும்
இரந்திடு தொழில ராகி இழுக்கமுற் றார்கள் அன்றே. 48
மாயவன் அதரஞ் சேர்த்தி வரன்முறை இசைத்த பச்சை
வேயெனும் வதுவும் யான்செய் மெய்த்தவம் அனைய நீராள்
தூயபொற் றோள்கண் டஞ்சித் தோற்றதால் என்னில் அன்னான்
சேயவன் வணக்கா தேந்துஞ் சிலைகொலோ நிகர்ப்ப தம்மா. 49
பூந்தள வனைய மூரற் பொற்கொடி கரத்துக் கொவ்வா
காந்தளும் நறிய செய்ய கமலமா மலரும் என்னில்
மாந்தளிர் பொருவ துண்டோ வள்ளுகிர் கிள்ளை நாசி
ஏய்ந்தள வற்றுக் காமர் இலைச்சினை யாய தன்றே. 50
பொருப்பென எழுந்து வல்லின் பொற்பெனத் திரண்டு தென்னந்
தருப்பயில் இளநீ ரென்னத் தண்ணெனா அமுதுட் கொண்டு
மருப்பெனக் கூர்த்து மாரன் மகுடத்தில் வனப்பு மெய்தி
இருப்பதோர் பொருளுண் டாமேல் இணைமுலைக் குவமை யாமே. 51
அந்திரு வன்னாள் மேனி அமைத்துவெம் முலைக்கண் செய்வான்
சுந்தர வள்ளம் நீலுண் டுகிலிகை விதிகொள் போழ்திற்
சிந்திய துள்ளி யொன்றின் ஒழுக்கங்கொல் சிறப்பின் மிக்க
உந்தியின் மீது போய உரோமத்தின் ஒழுக்க மன்றே. 52
மாசடை யாத நீல மணியுறழ் வண்ண மாலோன்
காசடை அகலந் தாங்குங் கனங்குழைத் திருவும் போற்றுந்
தேசுடை மாதி னுந்திச் சீரினுக் கனையன் துஞ்சும்
பாசடை நேர்வ தாமோ பகரினும் பழிய தன்றோ. 53
கண்டுழி மாயும் அன்றே மின்னெனில் ககன மாகக்
கொண்டிடின் உருவின் றாகுங் கொடியெனில் துடிய தென்னில்
திண்டிறல் நாக மென்னில் சீரிதன் றணங்கின் நாப்பண்
உண்டிலை யென்று மானும் ண்மைக்கோ ருவமை யுண்டோ. 54
மயலுடைப் பணியும் ஆல வட்டமும் வனப்புச் செய்த
வியலுடைத் தேரும் அச்சுற் றிரங்கியே உயிர்க்கு மென்றாற்
கயலுடைக் கண்ணாள் அல்குற் கொப்பவோ காமர் வீடவ்
வியலுறுப் பென்பர் யாரும் மேலது காண்டும் அன்றே. 55
கோழிலை அரம்பை யீனுங் குருமணித் தண்டை வேழத்
தாழிருந் தடக்கை தன்னை நிகரெனில் தகுவ அன்றால்
மாழையுண் கருங்கண் மாதின் மகரிகை வயங்கு பொற்பூண்
சூழுறு கவானே போலும் அவையெனிற் சொல்ல லாமோ. 56
அலவனாம் ஞெண்டை அன்னாள் அணிகெழு முழந்தாட் கொப்பாப்
புலவர்கள் புகலா நின்ற வழக்கலாற் பொருந்திற் றன்றால்
திலகநன் மணியே போல்வாள் தெய்வத வடிவுக் கிந்த
உலகினுள் இழிந்த தொன்றை உரைக்கின· துவமை யாமோ. 57
தமனியத் தியன்ற பொற்பில் தாவிலா ஆவந் தானுஞ்
சிமையநேர் கொங்கை மாதின் திகழ்கணைக் காலுந் தூக்கிற்
சமமிது பொருளி தேன்றே தமியனேன் றுணிந்து சிந்தை
அமைவுற அறிதல் தேற்றேன் ஐயமுற் றிடுவன் யானே. 58
அரும்புறு காலைக் கொங்கைக் கழிவுற்று முகமொவ் வாது
சுரும்புற மலர்ந்த பின்னுந் தொலைந்துகை யினுக்குந் தோற்றுத்
திரும்பவும் அடிக்கும் அஞ்சிச் சிதைந்தது கமல மென்றால்
பெரும்பயம் உற்று நோற்றும் பிழைத்தது போலு மன்றே. 59
மேக்குயர் கூனல் ஆமை விரைசெறி குவளைத் தோடு
தாக்குறு பந்து பிண்டித் தண்டளிர் சார்பு கூறில்
தூக்குறு துலையின் தட்டுத் தொகுத்தொரு வடிவில் வேதா
ஆக்குறின் மாதின் தாளுக் கதுநிக ராகும் போலும். 60
ஆவியின் நொய்ய பஞ்சும் அனிச்சமா மலரும் அன்னத்
தூவிய மிதிக்கிற் சேந்து துளங்குறும் அடிகள் என்றால்
நாவியங் குழலின் மாது நடந்திட ஞாலம் ஆங்கோர்
பூவதோ அதுபூ அன்றேல் பொன்னடி பொருந்து மோதான். 61
கயலுறழ் கருங்கட் செவ்வாய்க் காரிகை தனது சாயல்
மயிலெனக் கூறின் அல்லால்¢ மற்றதற் குவமை யில்லை
இயலுறு வடிவிற் கொப்ப தேதுள திவளே போலச்
செயலுறுத் தெழுதிற் றுண்டேல் சித்திரம் அ·தே போலும். 62
ஆனனம் நான்கு செய்தாட் காயிர மடங்கேர் கொண்ட
மானினி தன்னை வேதா வகுத்திலன் கொல்லே அன்னான்
தானமைத் துளனே என்னில் தலைபல தாங்கி இந்தத்
தூநிலா நகையி னாளைத் தொடர்ந்துபின் திரிவன் அன்றே. 63
மையறு புவியில் வந்த மாதிவள் அடியி லுள்ள
துய்யதோர் குறிகள் வானில் தொல்பெருந் திருவில் வைகுஞ்
செய்யவன் றனதுதேவி சிரத்தினும் இல்லை யென்றால்
மெய்யுறு குறிகளெல்லாம் இனைத்தென விளம்பற் பாற்றோ. 64
வேறு
என்று முன்னிஅவ் வேந்திழை தன்முனஞ்
சென்று காமர் திருவினுஞ் சீரியோய்
நன்று நன்றுநின் நல்வர வேயெனா
நின்று பின்னும் நெறிப்பட ஓதுவான். 65
யாது நின்குலம் யாதுநின் வாழ்பதி
யாது நின்பெயர் யாருனைத் தந்தவர்
ஓது வாயென் றுரைத்தனன் உள்ளுறு
காத லான்மிகு காசிபன் என்பவே. 66
வனிதை கூறுவள் மாதவ நீயிது
வினவி நிற்றல் விழுமிதன் றென்னிடைத்
தனிய னாகியுஞ் சார்ந்தனை நோற்பவர்க்
கினிய வேகொல் இனையதோர் நீர்மையே. 67
ஏதில் நோன்பை இகந்துணர் வில்லதோர்
பேதை மாந்தரில் பேசியெற் சார்வது
நீதி யேயன்று நின்கடன் ஆற்றிடப்
போதி யென்ன முனிவன் புகலுவான். 68
மங்கை கேட்டி வரம்பறு பற்பகல்
அங்கம் வெம்ப அகமெலி வுற்றிடச்
சங்கை யின்றித் தவம்பல செய்திடல்
இங்கு வேண்டிய தெய்துதற் கேயன்றோ. 69
பொன்னை வேண்டிக்கொ லோபொன்னின் மாநகர்
தன்னை வேண்டிக்கொ லோசசி யாம்பெயர்
மின்னை வேண்டியே அல்லது வேறுமற்
றென்னை வேண்டிஅவ் விந்திரன் நோற்றதே. 70
ஐயதின் மேனி அலசுற யான்தவஞ்
செய்த திங்குனைச் சேருதற் கித்திறம்
நெய்தின் மேவினை நோற்றதற் குப்பயன்
எய்தி யுற்ற தினித்தவம் வேண்டுமோ. 71
பேரும் ஊரும் பிறவும் வினவினேற்
கோர வொன்றும் உரைத்திலை ஆயினுஞ்
சேர வேபின் தௌ¤குவன் காமநோய்
ஈர கின்ற திரங்குதி நீயென்றான். 72
மாயை கேட்டு வறிது நகையளாய்
நீயிவ் வாறு நெடுந்தவஞ் செய்ததும்
ஆயில் என்பொருட் டோஅ· தன்றரோ
தூயை வஞ்சஞ் சொலன்முறை யோவென்றாள். 73
மற்றிவ் வண்ண மயில்புரை சாயலாள்
சொற்ற காலை யனையவள் சூழ்ச்சியை
முற்று மோர்ந்து முதிர்கலை யாவையுங்
கற்று ணர்ந்திடு காசிபன் கூறுவான். 74
பொய்ம்மை யாதும் புகல்கிலன் நான்முகன்
செம்மல் யான்அது தேருதி போலுமால்
இம்மை யேபர மீந்திடு வோய்இவண்
மெய்ம்மை யேயுரைத் தேன்உள வேட்கையால். 75
பன்னெ டுந்தவம் பற்பகல் ஆற்றியான்
முன்னி நின்றது முத்திபெற் றுய்ந்திட
அன்ன தேயெற் கருள்செய வந்தனை
ளுன்னை மேவலன் றோஉயர் முத்தியே. 76
ஈத லான்மற் றெனக்கொரு பேறிலை
ஆத லாலுனை யேயடைந் தேனெனக்
காதன் மாதும்அக் காசிபற் கண்ணுறீஇ
ஓத லாம்பரி சொன்றை யுணர்த்துவாள். 77
வேறு
மங்கலம் இயைந்திடு வடாதுபுல முள்ளேன்
செங்கனக மேருவரை சேர்ந்ததொரு தென்பால்
கங்கைநதி யின்கரை கலந்திட நினைந்தேன்
அங்கணுறு கின்றதொ ரரும்பயன் விழைந்தே. 78
வல்லையவண் ஏகுறுவன் மாதவ வலத்தோய்
நில்லிவண் எனப்பகர நீனிறம தாகுஞ்
செல்லுறழு மேனிதரு செம்மல்அருள் மைந்தன்
ஒல்லையிது கேண்மென உரைக்கலுறு கின்றான். 79
கங்கைநதி யாதிய கவின்கொள்நதி யேழும்
அங்கணுல கந்தனில் அரன்பதிகள் யாவும்
மங்குல்தவழ் மேனியவன் வாழ்பதியு மற்றும்
இங்குற வழைப்பனொ ரிமைப்பொழுது தன்னில். 80
பொன்னுலகும் விஞ்சையர்கள் போதுலகும் ஏனோர்
மன்னுலகும் மாதிரவர் வாழுலகும் அங்கண்
துன்னியதொர் தேவரொடு சூழ்திருவி னோடும்
இன்னபொழு தேவிரைவின் ஈண்டுதர வல்லேன். 81
மூவகைய தேவரையும் முச்சகம துள்ளோர்
யாவரையு நீதெரிய எண்ணுகினும் இங்ஙன்
மேவரவி யற்றிடுவன் வெ·கல்புரி வாயேல்
காவலுறு பேரமிர்த முங்கடிதின் ஈவேன். 82
எப்பொருளை வேண்டினும் இமைப்பிலுன வாக
அப்பொருளி யாவையும் அளிப்பன்அ· தல்லால்
மெய்ப்புதல்வர் வெ·கினும் விதிப்பன்அவர் தம்மை
ஒப்பிலை இவர்க்கெனவும் உம்பரிடை உய்ப்பேன். 83
அந்தமிகு மேனகை அரம்பைமுத லானோர்
வந்துனடி யேவல்செய வல்லைபுரி கிற்பேன்
சிந்தைநனி மால்கொடு தியங்குமென தாவி
உய்ந்திட நினைந்தருடி ஒல்லைதனில் என்றான். 84
வேறு
முனியிது புகற லோடு முற்றிழை முறுவல் எய்தித்
தனியினள் என்று கொல்லோ சாற்றினை இனைய நீர்மை
இனியது தவிர்தி மேலோர்க் கிசையுமோ யானும் முன்னம்
நினைவுழிச் செல்வல் நோற்று நீயிவண் இருத்தி என்றே. 85
கங்கையின் திசையை முன்னிக் கடிதவட் செல்வாள் என்ன
அங்கவள் போத லோடும் அருந்தவன் தொடர்ந்து செல்ல
மங்கையும் அருவ மெய்தி மாயையிற் கரந்து நிற்ப
எங்கணும் நோக்கிக் காணான் இடருழந் திரங்கி நைவான். 86
ஆகத் திருவிருத்தம் - 86
- - -
2. கா சி ப ன் பு ல ம் பு று ப ட ல ம்
தேனீர் மையெனப் புகல்வாள் சிறிதுந்
தானீ ரமிலாள் தனிமா யவளே
மானீர் உமதாம் வயின்உற் றனளோ
ஏனீர் மொழியா திரிகின் றதுவே. 1
சிலைவா ணுதலாள் திறன்மா யையெனும்
வலைவீ சியெனா ருயிர்வவ் வினளால்
கலையீர் இவண்நீர் அதுகண் டனிரோ
நிலையீர் வெருளா நெடிதோ டுதிரால். 2
கடிதேர் களிறே கழிகா தலையாய்ப்
பிடிதேர் பரிசாற் பெயர்வாய் தமியேன்
நொடிதே தளரா நெறிநே டினையக்
கொடியாள் தலையுங் கொணராய் கொணராய். 3
அருளால் உனையே அளியென் றனரால்
பெரியார் அவர்சொற் பிழையா குவதோ
தரியா அரியே தமியேன் உயிரைத்
தெரிவான் நினைவோ திரிகின் றனேயே. 4
மேவிப் பிரிவாள் விழிபோல் அடுவாய்
ஆவிக் குறவோ அலைமன் மதனப்
பாவிக் கும்இனிப் படையாய் வருவாய்
வாவிக் குவளாய் எனைவாட் டுதியோ. 5
செந்தா மரைமேல் திருவாம் எனவே
வந்தாள் தணியா மயல்செய் தகல்வாள்
அந்தோ வினவா அவளைக் கொணர்வான்
சந்தா கிலையென் சந்தே உரையாய். 6
பொன்னிற் பொலிவுற் றிடுபூங் கமலந்
தன்னில் துணையோ டுதழீஇத் தணவா
அன்னப் பெடைகாள் அறனோ புகலீர்
என்னைத் தனிவைத் தவளே கியதே. 7
தணியா வகைமால் தமியேற் கருளித்
துணியா அகல்வாள் படர்தொல் நெறியைக்
குணியா வுரைசெய் குதியென் றிடினுங்
கணியாய் இதுவோ கணிதன் இயல்பே. 8
படைவேள் கணையே பரிதிக் குறவே
படவார் முகமே மதியின் பகையே
விடமே புரையும் விழிமெல் லியல்நின்
னிடமே வருவாள் ஔ¤யா திசையாய். 9
நின்றீர் மிகவுந் நெடியீர் பெரியீர்
இன்றீ ரமிலா தெனைநீங் கினள்முன்
சென்றீ ரவள்போஞ் செயல்கா ணுதிர்செய்
குன்றீர் மொழியீர் குறைசெய் துளனோ. 10
மயிலே ரியலாள் ஒருமா யவளே
இயலே தறியேன் இவண்நின் றனளோ
பயிலே சிலநீ பகர்வாய் அதனால்
குயிலே எனதா ருயிர்கொள் ளுதியோ. 11
நின்பால் வரவே நினைவாய் மொழிவாள்
என்பால் இலையிவ் வழியே கினளால்
மென்பா லெனமே வியமா ருதமே
தென்பால் வருவாய் செயல்கூ றுதிநீ. 12
ஆரத் தடமே அருள்நீ ரினைஉன்
ளீரத் தினையென் றெவரும் புகல்வார்
சாரிற் சுடுவாய் தளரேல் எனவே
சோர்வுற் றிடுமென் துயர்தீர்க் கிலையே. 13
களிசேர் மயிலே கவிரா கியவாய்க்
கிளியே குயிலே கிளைதான் அலவோ
தளரா வகைநீர் தகவே மொழியா
அளியேன் உயிருக் கரணா குதிரால். 14
அறவே துயர்செய் தணுகா திகலித்
துறவே துணிவாள் தொடர்புந் தொடர்போ
உறவே யினிநீர் உவள்போம் நெறியைப்
புறவே தமியேன் பெறவே புகல்வீர். 15
எனவே பலவும் இயல்சேர் முனிவன்
மனமால் கொடுசொற் றிடமற் றதனை
வினவா மகிழா வியன்மெய்ம் மறையா
அனமே யனையாள் அவணுற் றிடலும். 16
வேறு
நோற்குறு முனிவன் தன்பால் நொய்தென மாயை யெய்தித்
தீர்க்கலா மையல் பூட்டிச் செய்தவம் அழித்தாள் அந்தோ
பார்க்கிலன் இதனை யென்னாப் பரிவுசெய் தகன்றான் போலக்
கார்க்கடல் வரைப்பின் ஏகிக் கதிரவன் கரந்தான் அன்றே. 17
தந்தைகா சிபன்என் றோதுந் தவமுனி யவன்பாற் சார
வந்துளாள் யாயே அன்றோ மற்றியவர் தலைப்பெய் கின்ற
முந்துறு புணர்ச்சி காண்டல்முறைகொலோ புதல்வற் கென்னாச்
சிந்தைசெய் தகன்றான் போன்று தினகரக் கடவுள் சென்றான். 18
அந்தமில் நிருதர் என்னும் அளவைதீர் பானாட் கங்குல்
வந்திடு மின்னே யென்னா வல்லையின் மதித்து வானத்
திந்திரன் ஆணை போற்றும் இலங்கெழில் நேமிப் புத்தேள்
சிந்துவிற் கரத்தல் போன்று செங்கதிர்ச் செல்வன் போனான். 19
வேலையின் இரவி செல்ல விண்ணவர் யாருங் கொண்ட
வாலிய திருவுஞ் சீரும் வன்மையும் அகல மாயை
பாலுறும் அவுணர் தானைப் பல்குழுப் பரவிற் றென்ன
மாலையும் இருளின் சூழ்வும் வல்லைவந் திறுத்த வன்றே. 20
மாகமேல் நிமிர்ந்த செக்கர் மாலையம் பொழுது நல்கூர்ந்
திகெனா இரக்கும் நீரார்க் கிம்மியின் துணைய தேனும்
ஓகையால் வழங்கா நீதி ஒன்னலான் ஒருவன் செல்வம்
போகுமா றென்ன வாளா பொள்ளெனப் போயிற் றாமால். 21
இரும்பிறை உருவின் எ·கார் கூர்ங்குயத் தினுமீர்க் கல்லா
வரம்பறும் இருளின் கற்றை கணங்களும் மருளு நிராற்
பரம்பிய தியாண்டு மாகிப் பாரெனப் பட்ட மாது
கரும்படாம் ஒன்று மேற்கோள் காட்சியைப் போன்ற தன்றே. 22
வண்டுழாய் மோலி மைந்தன் மாலிருட் கங்குல் வேழத்
தெண்டரு வதனம் பட்ட இரும்புகர்ப் புள்ளி யென்ன
அண்டர்தந் தருக்கள் சிந்தும் அணிமல ரென்ன வான்றோய்
கொண்டலிற் படுமுத் தென்னத் தாரகை குலவிற் றன்றே. 23
துண்ணென உலக முற்றுஞ் சூழ்ந்தபே ரிருளா நஞ்சைத்
தெண்ணில வாகி யுள்ள செங்கையால் வாரி நுங்கி
விண்ணவர் புகழ நீல வியன்நிறந் தன்பாற் காட்டுங்
கண்ணுதல் போன்று முந்நீர்த் தோன்றினன் கதிர்வெண் டிங்கள். 24
அழுந்துறு பாலின் வேலை அமரர்கள் கடைந்த காலைச்
செழுந்துளி மணிக ளடுந் தெறித்தென உடுக்கள் தோன்றக்
கழுந்துறும் அவுணர் என்னுங் காரிருள் தொலைய அங்கண்
எழுந்ததோ ரமுதம் போன்றும் இலங்கினன் இந்து வென்பான். 25
இரவெனும் வல்லோன் ஞால மென்பதோர் உலையில் வேலைக்
கரியுறு வடவைத் தீயில் களங்கொடு வெண்பொன் சேர்த்தி
விரைவொடு செம்மை செய்து மீட்டுமோர் மருந்தால் தொல்லை
உருவுசெய் தென்னச் செங்கேழ் ஔ¤மதி வௌ¤ய னானான். 26
அண்டருங் ககன மென்னும் அகலிருந் தடத்திற் பூத்த
விண்டதோர் குவளை ஆம்பல் போலுமால் மீன்கள் வௌ¢ளைப்
புண்டரீ கத்தைப் போலும் புதுமதி அதன்கட் டேனார்
வண்டினம் ஒப்ப தன்றே மாசுதோய் களங்க மாதோ. 27
அலைதரு நேமி என்னும் ஆன்றதோர் தடத்தின் பாலாம்
நிலவெனும் வலையை யோச்சி நிழல்மதிப் பரதன் ஈர்த்துப்
பலநிறங் கொண்ட மீன்கள் பன்முறை கவர்ந்து வான்மேற்
புலருற விரித்த தேபோற் பொலிந்தன உடுவின் பொம்மல். 28
கழிதரும் உவரி நீத்தங் கையகப் படுத்து மாந்தி
எழிலிகள் வான மீப்போய் இருநிலத் துதவல் காணூஉப்
பழிதவிர் மதியப் புத்தேள் பாற்கடல் பருகி யாண்டும்
பொழிதரும் அமிர்தம் என்னப் புதுநிலாப் பூத்த தன்றே. 29
மலர்ந்திடுங் கடவுட் டிங்கள் வாணிலாக் கற்றை எங்குங்
கலந்தன உலகில் யாருங் களித்தனர் குமுத மாதி
அலர்ந்தன தளிர்த்த சோலை அம்புயப் போது செல்வி
புலர்ந்தன ஒடுங்கு கின்ற புகைந்தன பிரிந்தோர் புந்தி. 30
அல்லவை புரியா ரேனும் அறிவினிற் பெரியா ரேனும்
எல்லவர் தமக்கு நண்பாய் இனியவே புரிதற் பாற்றோ
பல்லுயிர்த் தொகைக்கும் இன்பம் பயந்திடு மதிகண் டன்றோ
புல்லிய கமல மெல்லாம் பொலிவழிந் திட்ட வன்றே. 31
திங்களின் மலர்ந்த செல்வித் தேன்முரல் குமுதம் எங்கோன்
பங்கமுற் றார்கண் மேவான் பதுமம்ஏன் ஒடுங்கிற் றென்னாத்
தங்களில் உரைத்தல் போலாஞ்சசிக்கது உண்மை எம்பால்
இங்கிலை யென்ப போன்ற இசையளி பொதிந்த கஞ்சம். 32
கங்குல்வந் திறுத்த காலைக் கடிமனைக் கதவம் பூட்டிச்
செங்கண்மால் தன்னைப் புல்லித் திருமகள் இருந்தா ளென்னக்
கொங்கவிழ் கின்ற செங்கேழ்க் கோகன தங்கள் எல்லாம்
பொங்கிசை மணிவண் டோடும் பொதிந்தன பொய்கை யெங்கும். 33
வேறு
ஆனதோர் காலையில் அமரர் தம்மையுந்
தானவர் தம்மையுந் தந்த காசிபன்
வானகம் எழுதரும் மதியின் தெண்ணிலா
மேனிய தடைதலும் வெதும்பி னானரோ. 34
குலைந்தனன் தன்னுளங் குறைந்த வன்மையன்
அலந்தனன் ஒடுங்கினன் புலம்பி அங்கண்வான்
ரூ¤லந்தனில் எழுதரு விலவை நோக்கினான். 35
காலையில் எழுந்தசெங் கதிரின் நாயகன்
மாலையம் பொழுதினில் மறைந்து கீழ்த்திசை
வேலையில் விரைவுடன் மீண்டும் வந்துளான்
போலும்அந் தோவிது புதுமையோ வென்பான். 36
ஞாயிறும் அன்றெனில் நடுவ ணாகியே
பாயிரும் புணரியுட் பயின்று தோன்றலால்
ஏயென உலகட எண்ணி யாண்டுறுந்
தீயெனுங் கடவுளே திங்கள்அன் றென்பான். 37
இந்துவென் றுலகெலாம் இசைப்ப நின்றதோர்
செந்தழற் கடவுள்இத் திசையிற் செல்வுழி
வந்ததோர் சோதிகொல் வானம் எங்கணும்
அந்தியஞ் செக்கரென் றடைந்தவா றென்பான். 38
காண்டகு மதியெனக் கழறுஞ் செந்தழல்
மூண்டிடு புகைகொலோ முன்னம் வானமும்
ஈண்டுறு தரணியுந் திசையும் எங்குமாய்
நீண்டதோர் இருளென நிமிர்ந்தவா றென்பான். 39
தெண்டிசைப் பிறந்திடுந் திங்கட் செந்தழல்
கொண்டது வாலிதாங் கோலங் காரிடைக்
கண்டனன் இத்திறங் கரையில் ஆவிகள்
உண்டதிற் பெற்றதிவ் வுருவமே யென்பான். 40
ஊனமில் செக்கராய் உதித்துப் பின்னரே
வானிற னாகிய மதியத் தீத்தரத்
தானிறை புலிங்கமே அலது தாரகை
மீனெனப் படுவது வேறுண் டோவென்பான். 41
மால்கடல் அதனிடை வந்த பான்மையால்
ஆலமி தாகுமால் அமரர்க் கன்றெழு
நீலமெய் யுருவினை நீத்துத் திங்களின்
கோலமொ டின்றிவட் குறுகிற் றோவென்பான். 42
இங்கிவை யாவுமன் றேர்கொள் வேலையில்
வெங்கனல் முழுவதும் விடமும் ஆர்ந்தெழீஇ
மங்குலிற் சிதறிட வானிற் புக்கனன்
திங்களே யாமிது திண்ணம்என் கின்றான். 43
இனையன மருட்கையால் இசைத்த காசிப
முனிவரன் என்பவன் முன்னை மாயையை
நினைபவ னாகியே நெடிது காதலால்
அனையவள் தனைவிளித் தரற்றல் மேயினான். 44
வேறு
கொங்குண் கோதைத் தாழ்குழல் நல்லீர் கொடியேன்முன்
எங்கு மெங்குங் காணுறு கின்றீர் எழின்மின்னின்
பொங்குஞ் சோதி போலெதிர் புல்லும் படிநில்லீர்
மங்கும் போதோ சேருதிர் நெஞ்சம் வலியீரே. 45
முன்னஞ் செய்தீர் காதலை நோன்பை முதஅ லாடும்
பின்னஞ் செய்தீர் மாரனை ஏவிப் பிழைசெய்தீர்
சின்னஞ் செய்தீர் நல்லுணர் வெல்லாஞ் சிறியேனுக்
கின்னஞ் செய்யும் பெற்றியும் உண்டேல் இசையீரே. 46
வாகாய் நின்ற குன்றமும் யாவும் வருவித்தீர்
ஏகா நின்றீர் இவ்விடை தன்னில் ஏனைநீங்கிப்
போகா நின்றீர் வல்லையின் மீண்டும் புவியெங்கும்
ஆகா நின்றீர் நுஞ்செயல் யாரே அறிகிற்பார். 47
பற்றே நும்பால் ஆயினன் முன்னம் பயில்செய்கை
அற்றேன் வேளால் ஆற்றவும் நொந்தேன் அ·தொயும்
உற்றேன் அல்லேன் உம்மொடும் இன்னும் உழல்கின்றேன்
பெற்றேன் வாளா மாய்ந்தனன் என்னும் பிழையொன்றே. 48
நேயங் கொண்டீ ராமென வந்தீர் நெறிநில்லா
மாயங் கொண்டீர் வன்றிறல் கொண்டீர் மயல்செய்யுங்
காயங் கொண்டீர் ஆருயிர் நிற்கக் கருதீரேல்
தாயம் கொண்டீர் கூற்றொடு போலுந் தனிவந்தீர். 49
வேண்டேன் வேறோர் மாதரை நும்பால் வியன்மோகம்
பூண்டேன் உம்மை மாயவ ரென்னும் பொருள்கண்டேன்
ஈண்டே சென்றீர் போல்கர வுற்றீர் எய்தீரேல்
மாண்டேன் இன்னே ஆருயிர் நிற்பான் வருவீரே. 50
ஒன்றே யாகும் மாயம தால்நீ ருலகெல்லாம்
வென்றே செல்வீர் என்னுயிர் கொள்வான் விழைவீரேல்
நன்றே நன்றே நல்குவன் யானே நனிநண்பால்
சென்றே யோர்கால் மாமயல் தீரச் சேர்வீரே. 51
என்னா வென்னா இத்தகை பன்னி இடராழித்
துன்னா மாழ்கிச் சோர்தரும் எல்லைத் துகடீரும்
மின்னா கின்ற மாயவள் அன்னான் விழிகாண
முன்னாய் நின்றாள் எவ்வினை கட்கு முதலானாள். 52
ஆகத் திருவிருத்தம் - 138.
- - -
3. அ சு ர ர் தோ ற் று ப ட ல ம்
கந்தார் மொய்ம்பிற் காசிபன் என்போன் கடிதங்கண்
வந்தாள் செய்கை காணுத லோடு மகிழ்வெய்தி
அந்தா உய்ந்தேன் யானென மின்கண் டலர்கின்ற
கொந்தார் கண்டல் போல்நகை யோடுங் குலவுற்றான். 1
ஆடா நின்றான் குப்புற லுற்றான் அவள்தன்மேல்
பாடா நின்றான் யாக்கைபொ டிப்பிற் படர்போர்வை
மூடா நின்றான் அன்னதொர் மாயை முன்சென்றான்
வீடா நின்ற தன்னுயிர் காக்கும் விதிகொண்டான். 2
வேறு
என்னேசெய வேண்டிற்றவை எல்லாமிசை வாலே
முன்னேபுரி கிற்பேன்இவண் முனிகின்றதை ஒருவி
நன்னேயமொ டெனையாளுதிர் நனிவல்லையில் என்னாப்
பொன்னேர்அடி மிசைதாழ்தலும் அவள்இன்னது புகல்வாள். 3
வெருவுற்றிடல் இவணின்றஅன் வியன்மெய்யினுக் கியையுந்
திருமிக்குறு தகவாகிய திறன்மேனியும் மேற்கொள்
உருவொப்பதொர் வடிவும்முடன் உடனெய்திடு வாயேல்
மருவுற்றிடு கின்றேனென மயில்சொற்றனள் அன்றே. 4
ஏமுற்றிடு முனிவர்க்கிறை இதுகேட்டலும் முன்னங்
காமக்கடல் படிகின்றவன் களிசேர்தரும் உவகை
நாமக்கட லிடை ஆழ்ந்தனன் நன்றால்இ· தென்றான்
சேமத்திரு நிதிபெற்றிடும் இரவோன்எனத் திகழ்வான். 5
அற்றேமொழி தருதன்மையில் ஆர்வத்தொடு தமியேன்
குற்றேவல்செய் கிற்பேன்இளங் கொடியோரிடை யென்னாச்
சொற்றேதவ முயல்வன்மையில் துகடீர்தரும் அனிலப்
பொற்றேரவற் கிலதென்பதொர் புத்தேள்உருக் கொண்டான். 6
அன்றாயதொ ருருவெய்திய அறிவன்றனை வியவா
நன்றாலுன தியல்பாமென நகையாக்கரம் பற்றாக்
குன்றாகிய முலையாள்அவற் கொடுபோந்தனள் அங்கட்
பொன்றாழ்கிரி யெனவோங்மொர் பொலன்மண்டபம் புகுந்தான். 7
வேறு
கற்பனை இன்றியே கடிதின் முன்னுறம்
அற்புத மண்டபத் தாணை யால்வரும்
பொற்புறு சேக்கையிற் பொருந்தி னாரரோ
எற்படு கங்குலின் முதலி யாமத்தில். 8
சூருறு வெம்பசி தொலைப்ப வைகலும்
ஆரஞர் எய்தினோன் அரிதின் வந்திடு
பேரமு துண்குறு பெற்றி போலவக்
காரிகை தனைமுனி கடிதிற் புல்லினான். 9
புல்லலும் எதிர்தழீஇப் புகரில் காசிபன்
தொல்லையில் உணர்வொடு தொலைவில் செய்தவம்
வல்லையில் வாங்குறு மரபில் அன்னவன்
மெல்லிதழ் அமிர்தினை மிசைதல் மேயினாள். 10
பின்னுற மாயவள் பெரிதுங் காமுறும்
அன்னவன் புணர்தர அறிவ தொன்றையுந்
தொன்னெறி அளித்தெனத் தொண்டைச் சேயிதழ்
முன்னுறும் அமிர்தினை முனிக்கு நல்கினாள். 11
உட்டௌ¤ வின்றியே யுலப்பின் றோடிய
மட்டறு காமமாம் வாரி யுற்றுளான்
அட்டொளிர் பொன்னனாள் அல்கு லாஞ்சுழிப்
பட்டனன் இன்பமாம் பரவை நண்ணுவான். 12
தோமறு முனிவரன் சுரதத் தாற்றினாற்
காமரு மதனநூல் கருத்திற் சிந்தியாத்
தேமொழி மயிலொடு செறிந்து போகமார்
பூமியி னேரெனப் புணர்தல் மேயினான். 13
செம்மயி லன்னஇத் தெரிவை தன்னிடை
எம்மையும் இல்லதோர் இன்பம் இங்ஙனம்
மெய்ம்மையின் நல்கிய விதியி னார்க்கியான்
அம்மசெய் கின்றதோர் அளவுண் டோவென்றான். 14
ஆறறி முனிவரன் அநங்க நூன்முறை
வீறொடு புணர்தலும் வெய்ய மாயவள்
கீறினள் நகத்தினாற் கீண்ட பால்தொறும்
ஊறிய காமநீர் ஒழுகிற் றென்பவே. 15
உணர்வுடை முனிவரன் உயர்ந்த விஞ்சையர்
மணமுறை அதுவென மாயை தன்னொடு
புணர்தொழில் புரிந்தனன் போக முற்றினான்
துணையறும் இன்பெனுங் கடலில் தோய்ந்துளான். 16
வேறு
அந்த வேலையில் முகுந்தனும் அன்புயத் தவனும்
இந்தி ராதியர் யாவரும் முனிவரர் எவருந்
தந்தம் உள்ளமேல் நடுக்குற மாயவள் தன்பால்
வந்து தோன்றினன் சூரபன் மாஎனும் வலியோன். 17
துயக்கம் இல்லதோர் சூரன்வந் திடுதலுந் தொல்லை
முயக்க வேலையில் இருவர்பால் முறைமுறை இழிந்த
வியப்பில் வந்தனர் முன்னபதி னாயிர வௌ¢ளம்
வயக்க டுந்திறல் தானவர் யாரினும் வலியோர். 18
அன்னர் தம்மையும் முதலவன் தன்னையும் அங்கண்
நின்மி மீரென நிறுவியே ஆயிடை நீங்கி
மின்னு நூலணி முனியொடு மாயவள் வேறோர்
பொன்னின் மாமணி மண்டபம் அதனிடைப் புகுந்தாள். 19
மானை நேர்பவள் ஆயிடைத் தொல்லுரு மாற்றி
மேன சூரரிப் பிணாவுருக் கௌ¢ளலும் விரைவில்
தானு மோர்திறல் மடங்கலே றாமெனச் சமைந்தான்
மோன மாய்முனம் அருந்தவம் இயற்றிய முதல்வன். 20
மங்கை யோடவன் மடங்கலாய் மகிழ்வுடன்புணரக்
கங்குல் வாயிரண் டாகிய யாமமேற் கடிதே
அங்கை ஓரிரண் டாயிரம் ஆயிர முகமாய்ச்
சிங்க மாமுகன் தோன்றினன் திடுக்கிடத் திசைகள். 21
இத்தி றத்திவர் இருவரும் புணர்வுழி யாக்கை
மெத்தி வீழ்தரும் வியர்ப்பினில் விறல்அரி முகராய்ப்
பத்து நால்வகை ஆயிர வௌ¢ளமாம் படைஞர்
கொத்தி னோடுவந் துதித்தனர் கூற்றுயிர் குடிப்பார். 22
மற்றும் அத்தொகை யோரையும் மாமகன் றனையும்
நிற்றிர் ஈண்டென மாயவள் வீற்றொரு நிலயந்
தெற்றெ னப்புகுந் தோர்பிடி உருக்கொடு சேரக்
கொற்ற மால்களிற் றுருவினை முனிவனுங் கொண்டான். 23
பேரு மும்மத மால்களிற் றுருக்கொடு பிடிமேல்
சேரு கின்றுழி மூன்றெனச் செல்லும்யா மத்தில்
ஈரி ரண்டுவாள் எயிற்றுடன் யானைமா முகத்துத்
தார காசுரன் தோன்றினன் அவுணர்கள் தழைப்ப. 24
ஏலும் அங்கவர் மெய்ப்படு வியர்ப்பினும் இபத்தின்
கோல மானவர் தோன்றினர் அவர்குழுக் குணிக்கின்
நாலு பத்தின்மேல் ஆயிர வௌ¢ளமா நவின்றார்
மூல நாடியே இப்பரி சுணர்த்திய முனிவர். 25
ஆண்டு தாரகன் தன்னையும் அவுணர்கள் தமையும்
ஈண்டு நிற்றிரென் றோர்மணி மண்டபத் திறுத்து
மாண்ட யாமமேல் தகர்ப்பிணா உருக்கொள மாயை
பூண்ட அன்பினான் செச்சையின் உருக்கொடு புணர்ந்தான். 26
புணர்ந்த காலையில் அசமுகி தோன்றினள் புவியோர்க்
கணங்கு செய்தகர் முகவராய் அங்கவர் வியர்ப்பில்
கணங்கொள் முப்பதி னாயிர ¦ளிளமாங் கணிதத்
திணங்கு தானவர் உதித்தனர் இமையவர் கலங்க. 27
மீள மற்றவர் தம்மையும் நிறுவிவே றுள்ள
சூளி கைப்பெரு மண்டபந் தொறுந்தொறும் ஏகி
வாளி வல்லியம் புரவிமான் ஒரிஎண் கேனங்
கூளி ஆதியாம் விலங்கின துருவெலாங் கொண்டார். 28
இறுதி யில்லதோர் விலங்கின துருவுகொண் டிரவின்
புறம தாகிய புலரிசேர் வைகறைப் பொழுதின்
முறையின் மாயையும் முனிவனும் ஆகியே முயங்கி
அறுப தாயிர வௌ¢ளமாம் அவுணரை அளித்தார். 29
மிகுதி கொண்டிடும் இரண்டுநூ றாயிர வௌ¢ளந்
தகுவர் தம்மையுஞ் சூரனே மதலினோர் தமையும்
புகலும் ஓரிராப் பொழுதினில் அளித்ததற் புதமோ
அகில மும்வல மாயவட் கிச்செயல் அரிதோ. 30
ஆங்க வெல்லையின் அண்டமா யிரத்தெட்டின் உள்ளுந்
தீங்கு கொண்டிடுங் குறிகளுள் ளனவெலாஞ் செறிந்து
நீங்க லின்றியே நிகழ்வன நீர்மைகண் டெவரும்
ஏங்கு கின்றனர் விளைவதென் னோவென இரங்கி. 31
அல்லெ னும்பொழு திறத்தலும் மாயவ ளரிவைத்
தொல்லை நல்லுருக் கோடலும் முனியும்அத் துணையே
வல்லை தன்னுரு முன்னையிற் கொண்டனன் மறறவ்
வெல்லை தன்னிடை உதயவாய் அணுகினன் இரவி. 32
நிட்டைக் கேற்றிடு முனிவனை மாயவள் நிசியில்
விட்டுப் போந்திலள் அற்புதம் என்விளைந் ததுவோ
கிட்டிக் காண்பன்என் றுதயமாங் கிரிப்புறத் தணுகி
எட்டிப் பார்த்தனன் என்னவஅ உதித்தனன் இரவி. 33
வேறு
எல்லைவந் திடுதலும் ஈன்ற மாயவள்
செல்லுறும் அப்புவி செறிந்து சேணினுஞ்
சொல்லிய திசையினுந் துவன்றி யார்த்திடும்
ஒல்லெனுஞ் சனத்தினை உவந்து நோக்கினாள். 34
விண்டுறு தானவர் வௌ¢ளம் யாவையும்
கண்டனன் எந்தைதன் கருமம் இச்செயல்
கொண்டிலம் மாயையிற் கூடிற் றீதெனா
அண்டரும் அற்புதம் அடைகுற் றான்முனி. 35
பற்பகல் அருந்தவம் பயின்ற தூயனும்
பொற்புறு மாயையும் புதல்வர் தந்தொகை
அற்புத மோடுகண் டன்பின் நீரராய்
நிற்புழித் தெரிந்தனன் நேரில் சூரனே. 36
இருமுது குரவரும் ஈண்டுற் றரவர்
திருவடி வணங்கியாஞ் செய்தி றத்தினை
மரபொடு வினவுதும் வம்மின் நீரெனா
அரிமுகன் தாரகன் அறியக் கூறினான். 37
அறைகழல் இளையவர் அதனைத் தேர்வுறீஇ
உறுதியி தாமென வுரைத்துப் பின்வரத்
துறுமல்கொண் டிருந்ததன் தொல்ப தாகியை
நிறுவினன் அவ்விடை நின்று நீங்கினான். 38
ஆகத் திருவிருத்தம் - 176
- - -
4. கா சி ப னு ப தே ச ப் ப ட ல ம்
நீங்கிய சூர்முதல் நெறியின் ஏகியே
யாங்கவர் அடிதொழு தருள்செய் மேலையீர்
யாங்கள்செய் கின்றதென் இசைமின் நீரென
ஓங்கிய காசிபன் உரைத்தல் மேயினான். 1
உறுதிய தொன்றினை உணர்த்து கின்றனன்
அறைகழல் மைந்தர்காள் அரிய மாதவ
நெறிதனில் மூவிரும் நிற்றிர் அன்னதன்
முறைதனை வாய்மையான் மொழிவன் கேண்மினோ. 2
சான்றவர் ஆய்ந்திடத் தக்க வாம்பொருள்
மூன்றுள மறையெலாம் மொழிய நின்றன
ஆன்றதோர் தொல்பதி ஆரு யிர்த்தொகை
வான்றிகழ் தளையென வகுப்பர் அன்னவே. 3
அளித்திடல் காத்திடல் அடுதல் மெய்யுணர்
ஔ¤த்திடல் பேரருள் உதவ மேயெனக்
கிளத்திடு செயல்புரி கின்ற நீலமார்
களத்தினன் பதியது கழறும் வேதமே. 4
பற்றிகல் இல்லதோர் பரமன் நீர்மையை
இற்றென உரைப்பரி தெவர்க்கும் என்பரால்
சொற்றிடும் வேதமுந் துணிதி லாஅவன்
பெற்றியை இனைத்தெனப் பேச வல்லமோ. 5
மூவகை யெனுந்தளை மூழ்கி யுற்றிடும்
ஆவிகள் உலப்பில அநாதி யுள்ளன
தீவினை நல்வினைத் திறத்தின் வன்மையால்
ஓவற முறைமுறை உதித்து மாயுமே. 6
பாரிடை உதித்திடும் பாரைச் சூழ்தரு
நீரிடை யுதித்திடும் நெருப்பில் வாயுவில்
சீருடை விசும்பிடைச் சேரும் அன்னவைக்
கோரிடை நிலையென உரைக்கற் பாலதோ. 7
மக்களாம் விலங்குமாம் மாசில் வானிடைப்
புக்குலாம் பறவையாம் புல்லு மாம்அதில்
மிக்கதா வரமுமாம் விலங்கல் தானுமாந்
திக்கெலாம் இறைபுரி தேவும் யாவுமாம். 8
பிறந்திடு முன்செலும் பிறந்த பின்னர்மெய்
துறந்திடுஞ் சிலபகல் இருந்து துஞ்சுமால்
சிறந்திடு காளையில் தேயும் மூப்பினில்
இறந்திடும் அதன்பரி சியம்ப லாகுமோ. 9
சுற்றுறு கதிரெழு துகளி னும்பல
பெற்றுள என்பதும் பேதை நீரதால்
கொற்றம துடையதோர் கூற்றங் கைக்கொள
இற்றவும் பிறந்தவும் எண்ணற் பாலவோ. 10
கலைபடும் உணர்ச்சியுங் கற்பும் வீரமும்
மலைபடு வெறுக்கையும் வலியும் மற்றது
மலைபடு புற்புத மாகும் அன்னவை
நிலைபடு பொருளென நினைக்க லாகுமோ. 11
தருமமென் றொருபொருள் உளது தாவிலா
இருமையின் இன்பமும் எளிதின் ஆக்குமால்
அருமையில் வரும்பொரு ளாகும் அன்னதும்
ஒருமையி னோர்க்கலால் உணர்தற் கொண்ணுமோ. 12
தருமமே போற்றிடின் அன்பு சார்ந்திடும்
அருளெனுங் குழவியும் அணையும் ஆங்கவை
வருவழித் தவமெனும் மாட்சி எய்துமேல்
தெருளுறும் அவ்வுயிர் சிவனைச் சேருமால். 13
சேர்ந்துழிப் பிறவியுந் தீருந் தொன்மையாய்ச்
சார்ந்திடு மூவகைத் தளையும் நீங்கிடும்
பேர்ந்திடல் அரியதோர் பேரின் பந்தனை
ஆர்ந்திடும் அதன்பரி சறைதற் கேயுமோ. 14
ஆற்றலை யுளதுமா தவம தன்றியே
வீற்றுமொன் றுளதென விளம்ப லாகுமா
சாற்றருஞ் சிவகதி தனையும் நல்குமால்
போற்றிடின் அனையதே போற்றல் வேண்டுமால். 15
அத்தவம் பிறவியை அகற்றி மேதகு
முத்தியை நல்கியே முதன்மை யாக்குறும்
இத்துணை யன்றியே யிம்மை இன்பமும்
உய்த்திடும் உளந்தளில் உன்னுந் தன்மையே. 16
ஆதலிற் பற்பகல் அருமை யால்புரி
மாதவம் இம்மையும் மறுமை யுந்தரும்
ஏதுவ தாகுமால் இருமை யும்பெறல்
ஆதியம் பகவன தருளின் வண்ணமே. 17
ஒருமைகொள் மாதவம் உழந்து பின்முறை
அருமைகொள் வீடுபே றடைந்து ளோர்சிலர்
திருமைகொள் இன்பினிற் சேர்கின் றோர்சிலர்
இருமையும் ஒருவரே எய்தி னோர்சிலர். 18
ஆற்றலில் தம்முடல் அலசப் பற்பகல்
நோற்றவர் அல்லரோ நுவலல் வேண்டுமோ
தேற்றுகி லீர்கொலோ தேவ ராகியே
மேற்றிகழ் பதந்தொறும் மேவுற் றோர்எலாம். 19
பத்திமை நெறியொடு பயிற்றி மாதவ
முத்திபெற் றரனடி முன்னுற் றோர்தமை
இத்துணை யெனல்அரி திருமை யும்பெறு
மெய்த்தவர் மாலொடு விரிஞ்ச னாதியோர். 20
பல்லுயிர் தன்னையும் மாய்த்துப் பாரினுக்
கல்லல்செய் தருந்தவம் ஆற்றி டாதவர்க்
கில்லையே இருமையும் இன்பம் ஆங்கவர்
சொல்லரும் பிறவியுள் துன்பத் தாழுவார். 21
அறிந்திவை உரைப்பினும் அவனி மாக்கள்தாம்
மறங்கொலை களவொடு மயக்கம் நீங்கலர்
துறந்திடு கின்றிலர் துன்பம் அற்றிலர்
பிறந்தனர் இறந்தனர் முத்தி பெற்றிலார். 22
தவந்தனின் மிக்கதொன் றில்லை தாவில்சீர்த்
தவந்தனை நேர்வது தானும் இல்லையால்
தவந்தனின் அரியதொன் றில்லை சாற்றிடில்
தவந்தனக் கொப்பது தவம தாகுமே. 23
ஆதலின் மைந்தர்காள் அறத்தை ஆற்றுதிர்
தீதினை விலக்குதிர் சிவனை உன்னியே
மாதவம் புரிகுதிர் மற்ற தன்றியே
ஏதுள தொருசெயல் இயற்றத் தக்கதே. 24
வேறு
உடம்பினை ஒறுத்த நோற்பார் உலகெலாம் வியப்ப வாழ்வர்
அடைந்தவர்க் காப்பர் ஒல்லார்க் கழிவுசெய் திடுவர் வெ·கும்
நெடும்பொருள் பலவுங் கொள்வர் நித்தராய் உறைவர் ஈது
திடம்பட உமக்கோர் காதை செப்புவன் என்று சொல்வான். 25
ஆகத் திருவிருத்தம் - 201
- - -
5. மா ர் க் க ண் டே ய ப் ப ட ல ம்
நச்சகம் அமிர்தம் அன்ன நங்கையர் நாட்ட வைவேல்
தைச்சக மயக்கல் செய்யாத் தடுப்பருந் தவத்தின் மிக்கான்
இச்சகம் புகழு கின்ற இருபிறப் பாளர் கோமான்
குச்சகன் என்னும் பேரோன் கொடிமதிற் கடகம் வாழ்வோன். 1
அவற்கொரு புதல்வன் உண்டால் அருமறை பயின்ற நாவான்
கவுச்சிகன் என்னும் பேரோன் கரையொரு சிறிதுங் காணாப்
பவக்கடல் கடக்கும் ஆற்றாற் பராபர முதல்வற் போற்றித்
தவத்தினை இழைப்ப ஆங்கோர் தண்புனல் தடாகஞ் சார்ந்தான். 2
அத்தலை ஒருசார் எய்தி ஆனினந் தீண்டு குற்றி
ஒத்தென அசைத லின்றி உயிர்ப்பொரீஇ உலக மெல்லாம்
பித்தென உன்னி மாயாப் பேரின்ப அளக்கர் மூழ்கி
நித்தன்ஐ யெழுத்தும் அன்னான் நிலைமையும் நினைந்து நோற்றான். 3
ஓவிய மவுன முற்றாங் குணவொடும் உறக்கம் நீங்கித்
தாவற நோற்கும் வேலைத் தடமரை கடமை யாதி
மேவிய விலங்கு தத்தம் மெய்யகண் டூயம் யாவும்
போவது கருதி அன்னான் புரத்திடை உரைத்துப் போமால். 4
இப்பரி சியன்ற போழ்தும் யாவதும் உணரா னகி
ஒப்பற நோற்கும் வேலை ஒல்லையில் அதனை நாடி
முப்புரஞ் சிதைய மோனாள் முனிந்தவன் அருளி தென்னாத்
செப்பினன் இமையோர் சூழச் சேணிடைத் திருமால் சேர்ந்தான். 5
அற்புதம் எய்தி மைந்தன் அருந்தவம் புகழ்ந்து முன்போய்
எற்படும் அவன்றன் மேனி எழின்மலர்க் கரத்தால் நீவி
வெற்பன மனிவ நின்பேர் மிருககண் டூயன் என்னார்
சொற்பயில் நாமஞ் சாத்த ஏழுந்துகை தொழுது நின்றான். 6
தொழுதெழு முனியை நோக்கித் தூமதிச் சென்னி யோன்றன்
முழுதுறு கருணை நின்பால் முற்றுக முன்னஞ் செய்த
பழுதவை நீங்க வென்னாப் பரிவுசெய் தருளி வானோர்
குழுவுடன் உவண வூர்தி கொம்மென மறைந்து போனான். 7
போனபின் முனிவர் மேலோன் புரமெரி படுத்த முக்கண்
வானவன் அருளி னாலே வல்விரைந் தேகித் தாதை
யானவன் முன்னர் எய்தி அடிமுறை வணங்க அன்னான்
தானுள மகிழ்ந்து கண்டாங் கெடுத்தனன் தழுவிக் கொண்டான். 8
தவத்திடை யுற்ற தன்மை மொழிகெனத் தனயன் தானும்
உவப்புறு தாதை கேட்ப உள்ளவா றுரைத்த லோடும்
நிவப்புறு முவகை மிக்கு நின்குலத் தவர்க்குள் நின்போல்
எவர்க்குள தினைய நோன்மை யாதுநிற் கரிய தொன்றே. 9
பாருளார் விசும்பின் பாலார் பயனுகர் துறக்க மென்னும்
ஊருளார் அல்லா ஏனை உலகுறு முனிவர் தம்மில்
ஆருளார் நின்னை ஒப்பார் ஐயநீ புரிந்த நோன்மை
காருளார் கண்டத் தெந்தை யன்றிமற் றெவரே காண்பார். 10
எனப்பல புகழ்த லோடும் இவன்வழி மரபு தன்னில்
மனப்படும் ஒருசேய் பின்னாள் மறலியைக் கடக்குங் கூற்றால்
வினைப்பகை இயல்பு நீக்கும் விமலன தருளால் வேறோர்
நினைப்பது வரலுந் தாதை நெடுமகற் குரைக்கல் உற்றான். 11
கிளத்துவ துனக்கொன் றுண்டால் கேண்மதி ஐய மேனாள்
அளப்பரு மறைக ளாதி அறைந்தன யாவ ரேனுந்
தளத்தகு பரிசு மன்றால் சால்புடை அந்த ணாளர்
கொளப்படு கடனே யாகும் நாற்பெருங் கூற்ற தன்றே. 12
உனற்கரும் பிரமந் தன்னில் ஒழுகல்இல் லறத்தில் நிற்றல்
வனத்திடைச் சேறல் பின்னர் மாதவத் துறவில் வாழ்தல்
எனப்படும் அவற்றி னாதி இயற்றினை யின்று காறும்
நினக்கது புகல்வ தென்னோ நீயவை அறிதி யன்றே. 13
பின்னவை இரண்டும் பின்னர்ப் பேணுதல் பேச வொண்ணா
முன்னதும் இயற்ற லாலே முற்றிய திடையின் வைத்துச்
சொன்னதோர் கடன்இஞ் ஞான்று தொடங்கிய வேண்டுந் தூயோய்
அன்னதன் நிலைமை தன்னை ஆற்றினை கோடி யென்றான். 14
முனிவரன் இதனை ஆங்கண் மொழிதலும் இதனைக் கேளா
இனியதோர் உறுதி சொற்றார் எந்தையார் எனக்கீண் டென்னா
மனமுற முறுவல் செய்து மதலையாம் ஒருவற் கீது
வினையறு தவத்தின் நீரும் விளம்புதல் மரபோ வென்றான். 15
வேறு
பேதைப் படுக்கும் பிறவிக் கடல்நீந்தும்
ஓதித் திறத்தை உணர்ந்துடையோன் ஆதலினால்
காதற் புதல்வன் கவுச்சிகனென் போன்தனது
தாதைக் கினைய பரிசுதனைச் சாற்று கின்றான். 16
முன்னருள பாச முயக்கறுக்க வேண்டியநான்
பின்னுமொரு பாசம் பிணிக்கப் படுவேனேல்
தன்னிகரில் ஈசன் றனையெவ்வா றெய்துவன்யான்
இன்னலெனும் ஆழி யிடைப்பட் டுலைவேனே. 17
மொய்யான தில்லா முடவன்ஒரு வன்தனது
கையா னவையிரண்டுங் கந்தாத் தவழ்தருவான்
ஐயா அதற்கும் அரும்பிணியொன் றெய்தியக்கால்
உய்யானே யானும் உவன்போல் தளர்வேனோ. 18
மொய்யுற் றிடவே முயலுந் தவத்தினன்றிப்
பொய்யுற்ற இல்லொழுக்கம் பூண்டுவினை போக்குவது
மெய்யுற் றிடுதுகளை மிக்க புனலிருக்கச்
செய்யற்சின் னீரிடத்துத் தீர்க்குஞ் செயலன்றோ. 19
மண்ணுலகி லுள்ள வரம்பில் பெரும்பவத்தைப்
பெண்ணுருவ மாகப் பிரமன் படைத்தனனால்
அண்ணல் அ·துணர்தி அன்னவரைச் சிந்தைதனில்
எண்ண வரும்பாவம் எழுமையினும் நீங்குவதோ. 20
ஆதரவு கொண்டே அலமந்த ஐம்புலமாம்
பூதவகை யீர்க்கப் புலம்புற்ற புன்மையினேன்
மாதரெனுங் கணமும் வந்தென்னைப் பற்றியக்கால்
ஏதுசெய்கேன் அந்தோ எனக்கோ இதுவருமே. 21
பன்னாளும் பாரிற் பரவரலின் மூழ்குவிக்கும்
பின்னாள் நிரயப் பெரும்பிலத்தி னூடுய்க்கும்
எந்நாளில் ஆண்டகையோர்க் கின்பம் பயந்திடுமோ
மின்னார்கள் தம்மை விழையுற்ற வேட்கையதே. 22
துன்பம் நுகரும் வினையின் தொடர்ச்சியினோர்
இன்பம் நுகர்வார்போல் ஏந்திழையார் கட்பட்டார்
தன்பல் மிகநடுங்க ஞாளி தசையில்லா
என்பு கறித்திட்டால் இருஞ்சுவையும் பெற்றிடுமோ. 23
அஞ்சன வைவேற்கண் அரிவையர்தம் பேராசை
நெஞ்சு புகின்ஒருவர் நீங்கும் நிலைமைத்தோ
எஞ்சல்புரி யாதுயிரை எந்நாளும் ஈர்ந்திடுமால்
நஞ்சம் இனிதம்ம ஓர்நாளும் நலியாதே. 24
கள்ளுற்ற கூந்தல் கனங்குழைநல் லார்கருத்தில்
கொள்ளப் படமெண் குணிக்குந் தகைமையதோ
தள்ளற் கரிதாகித் தம்மொடுபன் னாட்பழகி
உள்ளுற்ற தேவும் உணர்தற் கரிதன்றோ. 25
ஓதலும் ஒன்றா உளமொன்றாச் செய்கையொன்றாப்
பேதை நிலைமை பிடித்துப் பெரும்பவஞ்செய்
மாதர் வலைப்பட்டு மயக்குற்றார் அல்லரோ
சாதல் பிறப்பில் தடுமாறு கின்றாரே. 26
ஆனால் உலகில் அருங்கற் பினையுடைய
மானார் இலரோ எனவே வகுப்பீரேல்
கோனான தங்கள் கொழுநன் இயல்வழுவாத்
தேனார் மொழியாரும் உண்டு சிலர்தாமே. 27
உற்ற வுலவையிடை ஓர்புலிங்கம் ஊட்டியக்கால்
கற்றை விடுசுடர்மீக் கான்று கனல்மிக்குப்
பற்றுதல் செல்லாத பலவினும்போய்ப் பற்றிடுமால்
அற்றெனலாம் ஈங்கோர் அரிவைமுயங் காதரமே. 28
சந்திரற்கு நேருவமை சாலுந் திருமுகத்துப்
பைந்தொடிக்கை நல்லார் பலரும் புடைசூழக்
குந்தமொத்த நாட்டத்துக் கோதமனார் பன்னியினால்
இந்திரற்கு நீங்கா இடர்ப்பழிஒன் றெய்தியதே. 29
வேறு
கூன்முகத் திங்கள் நெற்றிக் கோதையர் குழுவுக் கெல்லாந்
தான்முதல் இறைவி யாகத் தன்கையாற் சமைக்கப் பட்ட
மான்முக நோக்கி முன்னோர் மலரயன் மையல் எய்தி
நான்முகன் ஆனான் என்ப நாமுண ராத தன்றே. 30
மற்றுள முனிவர் தேவர் மாயமாங் காமந் தன்னால்
உற்றிடு செயற்கை யெல்லாம் உரைப்பினும் உலப்பின் றாமால்
அற்றெலா நிற்க யான்அவ் வாயிழை மடந்தை கூட்டம்
பெற்றிடும் ஒழுக்கந் தன்னைப் பேணலன் பிறப்பு நீப்பேன். 31
பூண்டகு விலங்கல் திண்டோட் புரந்தரன் முதலோர் சீரும்
வேண்டலன் இல்வாழ் வென்னும் வெஞ்சிறை அகத்தும் வீழேன்
மாண்டகு புலத்தின் மாயும் மயக்கொரீஇத் தவமென் றோதும்
ஈண்டிய வெறுக்கை மேவி இன்பமுற் றிருப்ப னென்றான். 32
இவைபல உரைத்த லோடும் இருந்தகுச் சகன்தான் இந்தக்
குவலய மதிக்கு மாற்றாற் கூறும்இல் லொழுக்கந் தன்னை
நவையென இகழா நின்றான் நான்மறைத் துணிவுங் கொள்ளான்
தவமயல் பூண்டான் என்னாத் துயர்கொடு சாற்ற லுற்றான். 33
புலத்தியன் போலு மேலோய் பொருவின்மங் கலஞ்சேர்பொன்னின்
கலத்தியல் வதுவை பூண்டோர் கன்னியைக் கலத்தல் செய்து
குலத்தியல் மரபின் ஓம்பக் குமரரைப் பயந்தே அன்றோ
நலத்தியல் தவத்தை ஆற்றி நண்ணருங் கதியிற் சேரல். 34
மன்பதை உலக மேபோல் மாலுறா மயங்கு காம
இன்பநீ நுகர்தற் கேயோ இசைத்தனன் இறந்த மேலோர்
துன்பமும் நிரயஞ் சேர்வுந் துடைத்திடுந் தொன்மை நோக்கி
அன்புறு புதல்வர்க் காக அரிவையைக் கோடி ஐயா. 35
சித்திரம் இலகு செவ்வாய்ச் சீறடிச் சிறுவர் தம்மைப்
புத்திர ரென்னுஞ் சொற்குப் பொருணிலை அயர்த்தி போலாம்
இத்தக வதனை நாடி இல்லறம் பூண்டு நிற்றல்
உத்தம நெறியே யாகும் தவத்தின தொழுக்கும் அ·தே. 36
குவவுறு நிவப்பின் மிக்க கோடுயிர் குடுமிக் குன்றின்
இவர்வுறு காத லாளர் இயற்படு சார லெய்தித்
திவவொடு போத லன்றிச் சேணுற உகளுந் தன்மைக்
குவமைய தாகும் இன்னே உயர்தவத் தொழுக உன்னல். 37
தருவினில் விலங்கில் அன்ன தகையன பிறவிற் சால
வருபயன் கோடற் கன்றோ மற்றவை வரைதல் செய்யார்
பெருகும்இல் லறத்தி னோடும் பெருமகப் பொருட்டால் நீயும்
அரிவையை மணந்து பின்னாள் அருந்தவம் புரிதி அன்றே. 38
இந்தநன் னிலைமே னாளே எண்ணிலை இந்நாள் காறும்
முந்துசெய் கடன தாற்றி முற்றினை முறையே பன்னாட்
சிந்தனை செய்த வானோர்க் கவிமுதற் சிறப்புச் செய்யாய்
மைந்தநீ இன்னே நோற்கும் வண்ணமே எண்ணற் பாற்றே. 39
இந்திரர் புகழுந் தொல்சீர் இல்லறம் புரிந்து ளோர்க்குத்
தந்தம தொழுக்கந் தன்னில் தகுமுறை தவற்றிற் றேனுஞ்
சிந்திடுந் தீர்வும் உண்டால் செய்தவர்க் கனைய சேரின்
உய்ந்திடல் அரிதால் வெற்பின் உச்சியின் தவற லொப்ப. 40
சுழிதரு பிறவி யென்னுஞ் சூழ்திரைப் பட்டுச் சோர்வுற்
றழிதரு துயர நேமி அகன்றிடல் வேண்ட மேனுங்
கழிதரு நாளான் அல்லாற் கதுமெனத் துறக்க லாமோ
வழிமுறை நும்மு னோரின் மற்றது புரிதி மன்னோ. 41
தேவரும் முனிவர் தாமுஞ் செங்கண்மா லயனும் மற்றும்
யாவரு மடந்தை மாரோ டில்லறத் தொழுகுந் தன்மை
மேவரப் பணித்தான் அன்றே விமலையோட டணுகி மேனாள்
தாவரும் புவன மாதி சராசரம் பயந்த தாணு. 42
மறுக்கலை அவன்றான் செய்த வரம்பினை வழியை வேண்டி
வெறுக்கலை எனது கூற்றை விலக்கலை உலகின் செய்கை
செறுக்கலை இகலு மாற்றாற் செப்பலை சிறிது மாற்றந்
துறக்கலை எமரை இன்னே தொன்முறை உணர்ந்த தூயோய். 43
வேறு
ஆடக வனப்புடை அருந்ததியை நீங்கான்
மாடுற இருத்தியும் வசிட்டமுனி யென்போன்
நீடுதவ நோன்மைகொடு நின்றனன் அதன்றிப்
பீடுகெழு ஞாலமிசை பெற்றபழி யுண்டோ. 44
துயக்குறு பவத்திடை தொடர்ச்சியறு தூயோர்
நயப்பொடு வெறுப்பகலின் நாளுமட மானார்
முயக்குறினும் மாதவ முயன் றிடினும் அன்னோர்
வியத்தகு மனத்துணர்வு வேறுபடு மோதான். 45
மேனவியல் பான்வரையும் மெல்லியலை மேவில்
தானமுள தாகும்அரி தானதவ மாகும்
வானமுள தாகுமிவண் மண்ணு முளதாகும்
ஊனமில தாகும்அரி தொன்றுமிலை யன்றே. 46
காண்டகைய தங்கணவ ரைக்கடவு ளார்போல்
வேண்டலுறு கற்பினர்தம் மெய்யுரையில் நிற்கும்
ஈண்டையுள தெய்வதமும் மாமுகிலு மென்றால்
ஆண்டகைமை யோர்களும் அவர்க்குநிக ரன்றே. 47
ஆயிழையொ டின்புறும் அறத்தைமுத லாற்றாய்
தூயதவ நன்னெறி தொடங்கல்புரி வாயேல்
மாயமிகு காமவிடம் வந்தணுகின் அம்மா
மேயவிதி காக்கினும் விலக்கியிட லாமோ. 48
துறந்தவர்கள் வேண்டியதொர் துப்புரவு நல்கி
இறந்தவர்கள் காமுறும் இருங்கடன இயற்றி
அறம்பலவும் ஆற்றிவிருந் தோம்புமுறை யல்லால்
பிறந்தநெறி யாலுளதொர் பேருதவி யாதோ. 49
மெத்துதிறல் ஆடவரும் மெல்லியல்நல் லாருஞ்
சித்தமுற நன்கினொடு தீதுசெயல் ஊழே
உய்த்தபடி யல்லதிலை யாம்உழவர் ஒண்செய்
வித்துபய னேயலது வேறுபெற லாமோ. 50
நற்றவம தாகுமில றந்தனை நடாத்திச்
சுற்றமற நீங்குதுற வேதுறவ தம்மா
மற்றது புரிந்திடின் உனக்குநவை வாரா
அற்றது மறுத்துரையல் ஆணைநம தென்றான். 51
அன்னபல மாமுனி யறைந்திடலும் ஓரா
முன்னமறை யாதிய மொழிந்ததுணி வென்றார்
பன்னகம் அணிந்திடு பரன்பணியும் என்றார்
என்னினி உரைப்பதென எண்ணிஇனை கின்றான். 52
தத்தமத ருட்குரவர் தாவில்வளம் நீங்கி
அத்தியிடை யாழ்கெனினும் அன்பினது செய்கை
புத்திரர்கள் தங்கள்கட னாம்புதுமை யன்றே
இத்திறம் மறுக்கலன் இசைந்திடுவன் யானும். 53
தந்தைசொல் மறுப்பவர்கள் தாயுரை தடுப்போர்
அந்தமறு தேசிகர்தம் ஆணையை இகந்தோர்
வந்தனைசெய் வேதநெறி மாற்றினர்கள் மாறாச்
செந்தழல வாயநிர யத்தினிடை சேர்வார். 54
ஆதலின் விலக்கல்முறை அன்றென வலித்துக்
கோதறு குணத்தின்மிகு குச்சகர்தம் அம்பொற்
பாதம திறைஞ்சிமுனி யேல்பணியில் நிற்பன்
ஓதுவ துனக்குள தெனக்கழறல் உற்றான். 55
தன்னுரைகொ ளாதமனை வாழ்க்கையது தன்னில்
வெந்நிரயம் வீழும்வகை யேவிழுமி தம்மா
அன்னரொடு மேவியமர் ஆடவர் தமக்குப்
பின்னுமொரு கூற்றுமுள தோபிணியும் உண்டோ. 56
என்னுரையி னிற்சிறிதும் எஞ்சலில வாகி
மன்னுமியல் பெற்றிடு மடந்தையுள ளேல்அக்
கன்னிதனை யான்வரைவல் காயெரிமுன் என்னாச்
சொன்னமொழி கேட்டுமகிழ் வுற்றுமுனி சொல்லும். 57
வேறு
யானும் உய்ந்தனன் என்கிளை யுய்ந்தன இனையதால் நினையீன்றாள்,
தானும் உய்ந்தனள் தவங்களும் உய்ந்தன தண்ணளி யது மற்றால்,
வானும் உய்ந்தன மண்ணுல குய்ந்தன வாசவ னெனவாழுங்,
கோனும் உய்ந்தனன் என்னுரை மறாமலுட் கொண்டனை அதனாலே. 58
வேண்டும் வேட்கையை உரைத்தியால் மைந்தநீ விளம்பிய இயல்பெல்லாம்,
பூண்டு குற்றமோர் சிறிதுமில் லாததோர் பூவையைப் புவியின்பாற்,
தேண்டி நின்வயிற் புணர்க்குவன் அங்கது செய்கலா தொழிவேனேல்,
மாண்டி றந்திடுங் குறைமதிக் கதிரென மாய்கஎன் தவமென்றான். 59
இனைய பான்மையிற் குச்சகன் சூளுரை இயம்பலுந் திருமால் முன்,
புனையும் மெய்ப்பெயர் தரித்தசேய் ஆங்கவன் பொலங்கழல் தனைப்பூண்டோர்,
தனயன் உய்பொருட் டாலிது புகன்றனை தவத்தினில் தலையான,
முனிவ நீயுனக் கரியதாய் ஒருபொருள் முச்சகந் தனிலுண்டோ. 60
ஆவ தேனும்யான் உரைப்பதுண் டத்தனை யற்றவர் அருளும்யாய்,
சாவ தாயினர் தன்னையர் இல்லவர் தங்கையர் இலரானோர்,
காவ லாடவர் தம்முடன் உதித்திடார் காசினி தனிலன்னோர்,
வீவதாயினர் பெருங்கிளை இல்லவர் வியத்தகு திருவற்றோர். 61
குடிப்பி றந்திலர் பிணியுறும் இருமுது குரவர்பாற் குறுகுற்றோர்,
கடுத்த யங்கிய மிடற்றிறை யாதியாங் கடவுளர் பெயர்கொள்ளா,
தடுத்த மாக்கடம் பெயர்பெறு பீடிலர் அலகைதன் நாமத்தோர்,
படித்த லந்தனில் புன்னெறிச் சமயமாம் படுகுழிப் பட்டுள்ளோர். 62
பிணியர் மூங்கையர் பங்கினர் வெதிரினர் பிறர்மனை தனிற் செல்வோர்,
கணிகை மாதரின் விழிப்பவர் பன்முறை காளையர் தமை நோக்கி,
நயிண காதலான் முன்கடை நிற்பவர் நலம்பெறப் புனைகின்றோர்,
தணிவில் துயில்மிகும் இயல்பினர் தன்னினும் மூப்புற்றோர். 63
ஒருமை தங்கிய கோத்திர மரபினர் உயாந்தவர் குறளானோர்,
பருமை தங்கிய யாக்கையர் மெல்லுருப் படைத்தவர் பயனில்லாக்,
கருமை தங்கிய வடிவினர் பொன்னெனக் கவின்றெழு காயத்தோர்,
இருமை தங்கிய பசப்பினர் விளர்ப்பினர் எருவையின் உருமிக்கோர். 64
நாணி லாதவர் ஆடவர் புணர்ச்சியில் நணியவர் நகைக்கின்றோர்,
ஏணி லாதவர் பெருமிடல் சான்றவர் இருமுது குரவோர்தம்,
ஆணை நீங்கினர் சினத்தினர் இகலினர் அடுதிறம் முயல்கின்றோர்,
காண வேணடினர் நடமுத லாயின காமனாற் கவல்கின்றோர். 65
ஈசன் அன்பிலர் பெருந்தகை முனிவரை இகழ்பவர் உயிர்மீது,
நேசமென்பன இல்லவர் தங்குல நெறிதனில் நில்லாதோர்,
மாசு தங்கிய குணத்தினர் நிறையிலார் மனமெனுங் காப்பில்லோர்,
தேசி கன்றனை மனிதனென் றுன்னினர் தேவரைச் சிலையென்றோர். 66
பத்தின் மேற்படும் ஆண்டினர் பூத்திடு பருவம்வந் தணுகுற்றோர்,
ஒத்த பண்பிலர் அச்சமில் மனத்தினர் உருமென வுரை செய்வோர்,
அத்தன் அன்னையீந் தருளுமுன் ஒருவர்பால் ஆர்வமுற்றவர்சேர,
வைத்த சிந்தையர் பெருமிதம் உற்றுளோர் மடமொடு பயிர்ப்பில்லோர். 67
பிறப்பின் எல்லையில் விழியிலார் தோற்றிய பின்றையே இழக்கின்றோர்,
மறுப்ப யின்றிடுங் கண்ணினர் படலிகை வயங்கிய நோக்கத்தார்,
குறிப்பின் மெல்லென வெ·கியே விழித்திடுங் குருடர்சாய் நயனத்தோர்,
சிறப்பில் பூஞையின் நாட்டத்தர் கணத்தினில் திரிதரு செங்கண்ணோர். 68
தூறு சென்னியர் நரைமுதிர் கூந்தலர் துகளுறும் ஐம்பாலார்,
வீறு கோதையர் சின்னமார் குழலினர் விரிதரும் அளகத்தோர்,
ஈறில் செம்மயிர்ப் பங்கியர் நிலனிடை இறக்கிய கேசத்தோர்,
ஊறு சேர்தரும் ஓதியர் விலங்கென உரமிகு குரலுள்ளோர். 69
சிறுகு கண்ணினர் மிகநெடுந் துண்டத்தர் சேர்ந்திடு புருவத்தோர்,
குறிய காதினர் உயர்தரும் எயிற்றினர் கோணுறு கண்டத்தோர்,
மறுவி ராவிய முகத்தினர் சுணங்குறா மணிமுலை மார்பத்தோர்,
வெறிய தாகிய நுசுப்பிலர் சிலையென வியன்மிகு வயினுள்ளோர். 70
காய நூல்முறை உரைத்திடும் இயல்பிலாக் கடிதட நிதம்பத்தோர்,
வாயும் அங்கையும் நகமுமுள் ளடிகளும் வனப்புறு சிவப்பில்லோர்,
மேய சின்மயிர் பரந்திடு பதத்தினர் மென்சிறை எகினம்போல்,
தூய நன்னடை இல்லவர் அங்குலி தொல்புவி தோயாதோர். 71
இனைய தன்மைய ராகிய மாதர்கள் ஏனையர் இவர்யாவரும்,
புனையு மங்கல மாகிய கடிவினை புரிதர வரையாதோர்,
அனைய ரேயெனின் வேண்டலன் முழுவதும் அவரியல் அணுகாத,
வனிதை யுண்டெனின் வேண்டுவன் தேர்ந்தனை மரபினில் தருகென்றான். 72
காட்டில் நின்றிடு குற்றியின் நோற்புறு கவுச்சிகன் இவைகூறக்,
கேட்டு மூரலும் உவகையுங் கிடைத்தனன் கேடில்சீர் உலகுள்ள,
நாட்ட கந்தனில் நாடிநல் லியல்புள நங்கையை நின்பாலிற்,
கூட்டுகின்றனன் மானுதல் ஒழிகெனக் குச்சகன் உரைசெய்தான். 73
உரைத்த குச்சகன் மைந்தனை நிறுவியே ஒல்லைசென் றகிலத்தில்,
திருத்த குஞ்சுடர் மலிதரு செம்பொனிற் செய்ததோர் அணிநாப்பண்,
அருத்தி சேர்தரக் குயிற்றிட வேண்டியோர் அருமணி தனைக்கொள்வான்,
கருத்தி லுன்னுபு தெரிபவன் போல்ஒரு கன்னியைத் தேர்கின்றான். 74
வேறு
அன்னவன் தன்னேர் முனிவரர் சிலர்வந் தணுகலும் அவரொடும் வினாவிச்,
சென்னிதன் தேயத் தநாமயம் என்னுஞ் செயிரிலா வனத்துசத் தியன்பால்,
கன்னிகை யிருத்தல் உணர்ந்துமற் றவன்பாற் கதுமெனச் சேறலுங் காணூஉத்,
தன்னடி வணங்க வெதிருறத் தொழுது தழுவியே அவனொடுஞ் சாரா. 75
மாசற வியன்ற உறையுளிற் கொடுபோய் வரன்முறை வழாமலே அமைத்த,
ஆசனத் திருத்திக் கன்னிகை யொடுதன் பன்னியை யாயிடை அழைத்துத்,
தேசிக னுற்றான் பணிமின்நீர் என்னாச் சென்னியால் இறைஞ்சுவித் துரிய,
பூசனை புரிந்து நகையொடு முகமன் புகன்றள வளாயினன் புனிதன். 76
அறுசுவை கெழுவும் நறியசிற் றுண்டி அமுதினில் தூயன அருத்திக்,
குறைவறும் அடிகட் கென்னிடை வேண்டுங் கொள்கைய தென்னெனக் கூற,
மறுவறு தவத்துக் குச்சக முனிவன் மகிழ்ந்துநீ மாதவம் புரிந்து,
ருமகள் தன்னை யெனதொரு மகற்குப் பேசுவான் பெயர்ந்தனன் என்றான். 77
இனையசொல் வினவி முனிவரன் மகிழா என்மகள் விருத்தையை இயல்சேர்,
உனதுமைந் தற்கு நல்கமுன் செய்த உயர்தவம் என்கொலென் றுரைத்து,
மனமுற நகையும் உவகையுங் கிளர மணவினை இசைந்துமா தவத்துப்,
புனிதனை அங்கட் சிலபகல் இருத்திப் போற்றிசெய் தொழுகுறும் பொழுதின். 78
வேறு
பங்கமில் உசத்தியன் பன்னி யாகிய
மங்கலை விடுத்திட மகள்வி ருத்தைதான்
அங்குள இகுளையர் ஆயந் தன்னுடன்
செங்கயல் பாய்புனல் திளைப்பப் போயினாள். 79
காடுற வந்திடு கலுழி மாண்புனல்
ஆடினள் மகிழ்சிறந் தணங்க னாரொடு
மாடுறு பொதும்பர்போய் மலர்கொய் தன்னவை
சூடினள் இருந்தனள் தொடலை ஆற்றியே. 80
பாசிழை மங்கையர் பண்ணை யோடெழீஇ
ஆசறு பொதும்பினும் அணங்கை யன்னவள்
மாசறு தாரகை மரபிற் சூழ்தருந்
தேசுறு மதியெனத் திரும்பவும் வேலையே. 81
உருகெழு கனையொலி உருமுக் கான்றிடுங்
கருமுகில் இ·தெனக் கனன்று காய்கனல்
சொரிதரும் விழியத |