|
3892 |
கள்ளத்தை எல்லாம் கடக்கவிட்டேன் நின்அருளாம்
வெள்ளத்தை எல்லாம் மிகஉண்டேன் - உள்ளத்தே
காணாத காட்சிஎலாம் காண்கின்றேன் ஓங்குமன்ற(264)
வாணா நினக்கடிமை வாய்த்து. | 1 |
| (264). ஓங்குமறை - படிவேறுபாடு. ஆ. பா. |
3893 |
காலையிலே நின்றன்னைக் கண்டுகொண்டேன் சன்மார்க்கச்
சாலையிலே இன்பம் தழைக்கின்றேன் - ஞாலமிசைச்
சாகா வரம்பெற்றேன் தத்துவத்தின் மேல்நடிக்கும்
ஏகா நினக்கடிமை ஏற்று. | 2
|
3894 |
மூவர்களும் செய்ய முடியா முடிபெல்லாம்
யாவர்களுங் காண எனக்களித்தாய் - மேவுகடை
நாய்க்குத் தவிசளித்து நன்முடியும் சூட்டுதல்எந்
தாய்க்குத் தனிஇயற்கை தான். | 3
|
3895 |
கொள்ளைஎன இன்பம் கொடுத்தாய் நினதுசெல்வப்
பிள்ளைஎன எற்குப் பெயரிட்டாய் - தெள்ளமுதம்
தந்தாய் சமரசசன் மார்க்கசங்கத் தேவைத்தாய்
எந்தாய் கருணை இது. | 4
|
3896 |
கண்டேன் களித்தேன் கருணைத் திருஅமுதம்
உண்டேன் உயர்நிலைமேல் ஓங்குகின்றேன் - கொண்டேன்
அழியாத் திருஉருவம் அச்சோஎஞ் ஞான்றும்
அழியாச்சிற் றம்பலத்தே யான். | 5
|
3897 |
பார்த்தேன் பணிந்தேன் பழிச்சினேன் மெய்ப்புளகம்
போர்த்தேன்என் உள்ளமெலாம் பூரித்தேன் - ஆர்த்தேநின்
றாடுகின்றேன் பாடுகின்றேன் அன்புருவா னேன்அருளை
நாடுகின்றேன் சிற்சபையை நான். | 6
|
3898 |
எண்ணுகின்றேன் எண்ணங்கள் எல்லாம் தருகின்றான்
உண்ணுகின்றேன் உண்ணஉண்ண ஊட்டுகின்றான் - நண்ணுதிருச்
சிற்றம் பலத்தே திருநடஞ்செய் கின்றான்என்
குற்றம் பலபொறுத்துக் கொண்டு. | 7
|
3899 |
கொண்டான் அடிமை குறியான் பிழைஒன்றும்
கண்டான்(265) களித்தான் கலந்திருந்தான் - பண்டாய
நான்மறையும் ஆகமமும் நாடுந் திருப்பொதுவில்
வான்மயத்தான் என்னை மகிழ்ந்து. | 8 |
| (265). கண்டே - முதற்பதிப்பு. பி. இரா. |
3900 |
கண்டேன் களித்தேன் கருணைத் திருஅமுதம்
உண்டேன் அழியா உரம்(266) பெற்றேன் - பண்டே
எனைஉவந்து கொண்டான் எழில்ஞான மன்றம்
தனைஉவந்து கொண்டான் தனை. | 9 |
| (266). வரம் - படிவேறுபாடு. ஆ. பா. |
3901 |
தாதையாம் என்னுடைய தாயாம்என் சற்குருவாம்
மேதையாம் இன்ப விளைவுமாம் - ஓது
குணவாளன் தில்லைஅருட் கூத்தன் உமையாள்
மணவாளன் பாத மலர். | 10
|
3902 |
திருவாம்என் தெய்வமாம் தெள்ளமுத ஞானக்
குருவாம் எனைக்காக்கும் கோவாம் - பருவரையின்
தேப்பிள்ளை யாம்எம் சிவகாம வல்லிமகிழ்
மாப்பிள்ளை பாத மலர். | 11
|
3903 |
என்அறிவாம் என்அறிவின் இன்பமாம் என்னறிவின்
தன்அறிவாம் உண்மைத் தனிநிலையாம் - மன்னுகொடிச்
சேலைஇட்டான் வாழச் சிவகாம சுந்தரியை
மாலைஇட்டான் பாதமலர். | 12
|