tiruvarutpA of rAmalinga aTikaL
tirumuRai -VI part I (verses 3267 -3871)
(in tamil script, unicode format)

திருவருட்பா
இராமலிங்க அடிகள் (வள்ளலார்) அருளியது
ஆறாம் திருமுறை - முதற் பகுதி பாடல்கள் (3267 -3871)




Etext preparation (inaimathi format) Mr. Sivakumar of Singapore (www.vallalar.org)
Proof-reading: Mr. P.K. Ilango, Erode, Tamilnadu, India
PDF and Web version: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland

This webpage presents the Etext in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).

ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil font chosen as the default font for the UTF-8 char-set/encoding view.
. In case of difficulties send an email request to kalyan@geocities.com or kumar@vt.edu

© Project Madurai 1999 - 2004
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website

http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

திரு அருட்பிரகாச வள்ளலார் இயற்றி அருளிய திருஅருட்பா
ஆறாம் திருமுறை - முதற் பகுதி பாடல்கள் (3267 -3871)

    உள்ளுறை
    1. பரசிவ வணக்கம் 3 3267 - 3269
    2. திருச்சிற்றம்பலத் தெய்வமணிமாலை 13 3270 - 3282
    3. ஆற்றாமை 10 3283 - 3292
    4. பிறப்பவம் பொறாது பேதுறல் 10 3293 - 3302
    5. மாயைவலிக் கழுங்கல் 10 3303 - 3312
    6. முறையீடு 10 3313 - 3322
    7. அடியார் பேறு 20 3323 - 3342
    8. ஆன்ம விசாரத் தழுங்கல் 10 3343 - 3352
    9. அவா அறுத்தல் 13 3353 - 3365
    10. தற் சுதந்தரம் இன்மை 10 3366 - 3375
    11. அத்துவித ஆனந்த அனுபவ இடையீடு 10 3376 - 3385
    12. பிள்ளைச் சிறு விண்ணப்பம் 24 3386 - 3409
    13. பிள்ளைப் பெரு விண்ணப்பம் 133 3410 - 3542
    14. மாயையின் விளக்கம் 10 3543 - 3552
    15. அபயத் திறன் 28 3553 - 3580
    16. ஆற்றமாட்டாமை 10 3581 - 3590
    17. வாதனைக் கழிவு 20 3591 - 3610
    18. அபயம் இடுதல் 10 3611 - 3620
    19. பிறிவாற்றாமை 10 3621 - 3630
    20. இறை பொறுப்பியம்பல் 10 3631 - 3640
    21. கைம்மாறின்மை 10 3641 - 3650
    22. நடராபதி மாலை 34 3651 - 3684
    23. சற்குருமணி மாலை 25 3685 - 3709
    24. தற்போத இழப்பு 10 3710 - 3719
    25. திருமுன் விண்ணப்பம் 10 3720 - 3729
    26. இனித்த வாழ்வருள் எனல் 10 3730 - 3739
    27. திருவருள் விழைதல் 20 3740 - 3759
    28. திருக்கதவந் திறத்தல் 10 3760 - 3769
    29. சிற்சபை விளக்கம் 10 3770 - 3779
    30. திருவருட் பேறு 10 3780 - 3789
    31. உண்மை கூறல் 10 3790 - 3799
    32. பிரியேன் என்றல் 11 3800 - 3810
    33. சிவ தரிசனம் 11 3811 - 3821
    34. அனுபோக நிலயம் 10 3822 - 3831
    35. சிவயோக நிலை 10 3832 - 3841
    36. பெற்ற பேற்றினை வியத்தல் 10 3842 - 3851
    37. அழிவுறா அருள்வடிவப் பேறு 10 3852 - 3861
    38. பேரருள் வாய்மையை வியத்தல் 10 3862 - 3871
அடிக்குறிப்புகளில் காணப்படும் பதிப்பாசிரியர்களின் பெயர்ச் சுருக்க விரிவு
    1. தொ.வே --- தொழுவூர் வேலாயுத முதலியார்
    2. ஆ.பா --- ஆ.பாலகிருஷ்ண பிள்ளை
    3. ச.மு.க --- ச.மு.கந்தசாமி பிள்ளை
    4. பி.இரா --- பிருங்கிமாநகரம் இராமசாமி முதலியார்
    5. பொ.சு --- பொ.சுந்தரம் பிள்ளை
திருச்சிற்றம்பலம்

ஆறாம் திருமுறை - முதற் பகுதி

1. பரசிவ வணக்கம்

குறள்வெண்பா
3267 எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே
எல்லாம்வல் லான்தனையே ஏத்து.197
1
197. எல்லாம்வல் லான்தாளை ஏத்து - முதற்பதிப்பு, பொ. சு. பதிப்பு.
எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3268 திருவிளங்கச் சிவயோக சித்திஎலாம் விளங்கச்
சிவஞான நிலைவிளங்கச் சிவானுபவம் விளங்கத்
தெருவிளங்கு திருத்தில்லைத் திருச்சிற்றம் பலத்தே
திருக்கூத்து விளங்கஒளி சிறந்ததிரு விளக்கே
உருவிளங்க உயிர்விளங்க உணர்ச்சியது விளங்க
உலகமெலாம் விளங்கஅருள் உதவுபெருந் தாயாம்
மருவிளங்கு குழல்வல்லி மகிழ்ந்தொருபால் விளங்க
வயங்குமணிப் பொதுவிளங்க வளர்ந்தசிவக் கொழுந்தே.198
2
198. 2500 ஆம் பாடலின் உத்தரவடிவம்.
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3269 அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே அன்பெனும் குடில்புகும் அரசே
அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே அன்பெனும் கரத்தமர் அமுதே
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே அன்பெனும் உயிர்ஒளிர் அறிவே
அன்பெனும் அணுவுள் ளமைந்தபே ரொளியே அன்புரு வாம்பர சிவமே.
3

திருச்சிற்றம்பலம்

2. திருச்சிற்றம்பலத் தெய்வமணிமாலை

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3270 அகரநிலை விளங்குசத்தர் அனைவருக்கும் அவர்பால்
அமர்ந்தசத்தி மாரவர்கள் அனைவருக்கும் அவரால்
பகரவரும் அண்டவகை அனைத்தினுக்கும் பிண்டப்
பகுதிகள்அங் கனைத்தினுக்கும் பதங்கள்அனைத் தினுக்கும்
இகரமுறும் உயிர்எவைக்கும் கருவிகள்அங் கெவைக்கும்
எப்பொருட்கும் அனுபவங்கள் எவைக்கும்முத்தி எவைக்கும்
சிகரமுதல் சித்திவகை எவைக்கும்ஒளி வழங்கும்
திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வம்ஒன்றே கண்டீர்.
1
3271 வண்ணமிகு பூதவெளி பகுதிவெளி முதலா
வகுக்குமடி வெளிகளெலாம் வயங்குவெளி யாகி
எண்ணமுறு மாமவுன வெளியாகி அதன்மேல்
இசைத்தபர வெளியாகி இயல்உபய வெளியாய்
அண்ணுறுசிற் பரவெளியாய்த் தற்பரமாம் வெளியாய்
அமர்ந்தபெரு வெளியாகி அருளின்ப வெளியாய்த்
திண்ணமுறும் தனிஇயற்கை உண்மைவெளி யான
திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வம்ஒன்றே கண்டீர்.
2
3272 சார்பூத விளக்கமொடு பகுதிகளின் விளக்கம்
தத்துவங்கள் விளக்கமெலாந் தருவிளக்க மாகி
நேராதி விளக்கமதாய்ப் பரைவிளக்க மாகி
நிலைத்தபரா பரைவிளக்க மாகிஅகம் புறமும்
பேராசை விளக்கமதாய்ச் சுத்தவிளக் கமதாய்ப்
பெருவிளக்க மாகிஎலாம் பெற்றவிளக் கமதாய்ச்
சீராட விளங்குகின்ற இயற்கைவிளக் கமதாம்
திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வம்ஒன்றே கண்டீர்.
3
3273 இடம்பெறும்இந் திரியஇன்பம் கரணஇன்பம் உலக
இன்பம்உயிர் இன்பம்முதல் எய்தும்இன்ப மாகித்
தடம்பெறும்ஓர் ஆன்மஇன்பம் தனித்தஅறி வின்பம்
சத்தியப்பே ரின்பம்முத்தி இன்பமுமாய் அதன்மேல்
நடம்பெறுமெய்ப் பொருள்இன்பம் நிரதிசய இன்பம்
ஞானசித்திப் பெரும்போக நாட்டரசின் பமுமாய்த்
திடம்பெறஓங் கியஇயற்கைத் தனிஇன்ப மயமாம்
திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வம்ஒன்றே கண்டீர்.
4
3274 எல்லாந்தான் உடையதுவாய் எல்லாம்வல் லதுவாய்
எல்லாந்தான் ஆனதுவாய் எல்லாந்தான் அலதாய்ச்
சொல்லாலும் பொருளாலும் தோன்றும்அறி வாலும்
துணிந்தளக்க முடியாதாய்த் துரியவெளி கடந்த
வல்லாளர் அனுபவத்தே அதுஅதுவாய் அவரும்
மதித்திடுங்கால் அரியதுவாய்ப் பெரியதுவாய் அணுவும்
செல்லாத நிலைகளினும் செல்லுவதாய் விளங்கும்
திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வம்ஒன்றே கண்டீர்.
5
3275 அயர்வறுபே ரறிவாகி அவ்வறிவுக் கறிவாய்
அறிவறிவுள் அறிவாய்ஆங் கதனுள்ளோர் அறிவாய்
மயர்வறும்ஓர் இயற்கைஉண்மைத் தனிஅறிவாய்ச் செயற்கை
மன்னும்அறி வனைத்தினுக்கும் வயங்கியதா ரகமாய்த்
துயரறுதா ரகமுதலாய் அம்முதற்கோர் முதலாய்த்
துரியநிலை கடந்ததன்மேல் சுத்தசிவ நிலையாய்
உயர்வுறுசிற் றம்பலத்தே எல்லாந்தா மாகி
ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர்உண்டே கண்டீர்.
6
3276 அண்டம்எலாம் பிண்டம்எலாம் உயிர்கள்எலாம் பொருள்கள்
ஆனஎலாம் இடங்கள்எலாம் நீக்கமற நிறைந்தே
கொண்டஎலாங் கொண்டஎலாம் கொண்டுகொண்டு மேலும்
கொள்வதற்கே இடங்கொடுத்துக் கொண்டுசலிப் பின்றிக்
கண்டமெலாங் கடந்துநின்றே அகண்டமதாய் அதுவும்
கடந்தவெளி யாய்அதுவும் கடந்ததனி வெளியாம்
ஒண்தகுசிற் றம்பலத்தே எல்லாம்வல் லவராய்
ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர்உண்டே கண்டீர்.
7
3277 பாரொடுநீர் கனல்காற்றா காயம்எனும் பூதப்
பகுதிமுதல் பகர்நாதப் பகுதிவரை யான
ஏர்பெறுதத் துவஉருவாய்த் தத்துவகா ரணமாய்
இயம்பியகா ரணமுதலாய்க் காரணத்தின் முடிவாய்
நேருறும்அம் முடிவனைத்தும் நிகழ்ந்திடுபூ ரணமாய்
நித்தியமாய்ச் சத்தியமாய் நிற்குணசிற் குணமாய்
ஓர்தருசன் மாத்திரமாம் திருச்சிற்றம் பலத்தே
ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர்உண்டே கண்டீர்.
8
3278 இரவிமதி உடுக்கள்முதல் கலைகள்எலாம் தம்மோர்
இலேசமதாய் எண்கடந்தே இலங்கியபிண் டாண்டம்
பரவுமற்றைப் பொருள்கள்உயிர்த் திரள்கள்முதல் எல்லாம்
பகர்அகத்தும் புறத்தும்அகப் புறத்துடன்அப் புறத்தும்
விரவிஎங்கும் நீக்கமற விளங்கிஅந்த மாதி
விளம்பரிய பேரொளியாய் அவ்வொளிப்பே ரொளியாய்
உரவுறுசின் மாத்திரமாம் திருச்சிற்றம் பலத்தே
ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர்உண்டே கண்டீர்.
9
3279 ஆற்றுவிட யானந்தம் தத்துவா னந்தம்
அணியோகா னந்தம்மதிப் பருஞானா னந்தம்
பேற்றுறும்ஆன் மானந்தம் பரமானந் தஞ்சேர்
பிரமானந் தம்சாந்தப் பேரானந் தத்தோ
டேற்றிடும்ஏ கானந்தம் அத்துவிதா னந்தம்
இயன்றசச்சி தானந்தம் சுத்தசிவா னந்த
ஊற்றமதாம் சமரசஆ னந்தசபை தனிலே
ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர்உண்டே கண்டீர்.
10
3280 வகுத்தஉயிர் முதற்பலவாம் பொருள்களுக்கும் வடிவம்
வண்ணநல முதற்பலவாங் குணங்களுக்கும் புகுதல்
புகுத்தலுறல் முதற்பலவாம் செயல்களுக்கும் தாமே
புகல்கரணம் உபகரணம் கருவிஉப கருவி
மிகுந்தஉறுப் பதிகரணம் காரணம்பல் காலம்
விதித்திடுமற் றவைமுழுதும் ஆகிஅல்லார் ஆகி
உகப்புறும்ஓர் சுத்தசிவா னந்தசபை தனிலே
ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர்உண்டே கண்டீர்.
11
3281 இயற்கையிலே பாசங்கள் ஒன்றும்இலார் குணங்கள்
ஏதுமிலார் தத்துவங்கள் ஏதுமிலார் மற்றோர்
செயற்கைஇல்லார் பிறப்பில்லார் இறப்பில்லார் யாதும்
திரிபில்லார் களங்கம்இல்லார் தீமைஒன்றும் இல்லார்
வியப்புறவேண் டுதல்இல்லார் வேண்டாமை இல்லார்
மெய்யேமெய் ஆகிஎங்கும் விளங்கிஇன்ப மயமாய்
உயத்தரும்ஓர் சுத்தசிவா னந்தசபை தனிலே
ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர்உண்டே கண்டீர்.
12
3282 ஒன்றும்அலார் இரண்டும்அலார் ஒன்றிரண்டும் ஆனார்
உருவும்அலார் அருவும்அலார் உருஅருவும் ஆனார்
அன்றும்உளார் இன்றும்உளார் என்றும்உளார் தமக்கோர்
ஆதியிலார் அந்தமிலார் அரும்பெருஞ்சோ தியினார்
என்றுகனல் மதிஅகத்தும் புறத்தும்விளங் கிடுவார்
யாவும்இலார் யாவும்உளார் யாவும்அலார் யாவும்
ஒன்றுறுதாம் ஆகிநின்றார் திருச்சிற்றம் பலத்தே
ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர்உண்டே கண்டீர்.
13

திருச்சிற்றம்பலம்

3. ஆற்றாமை

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3283 எழுவினும் வலிய மனத்தினேன் மலஞ்சார்
ஈயினும் நாயினும் இழிந்தேன்
புழுவினும் சிறியேன்பொய்விழைந் துழல்வேன்
புன்மையேன் புலைத்தொழிற்கடையேன்
வழுவினும் பெரியேன் மடத்தினும் பெரியேன்
மாண்பிலா வஞ்சக நெஞ்சக்
குழுவினும் பெரியேன் அம்பலக் கூத்தன்
குறிப்பினுக் கென்கட வேனே.
1
3284 கற்றமே லவர்தம் உறவினைக் கருதேன்
கலகர்தம் உறவினிற் களித்தேன்
உற்றமே தகவோர் உவட்டுற இருந்தேன்
உலகியற் போகமே உவந்தேன்
செற்றமே விழையும் சிறுநெறி பிடித்தேன்
தெய்வம்ஒன் றெனும்அறி வறியேன்
குற்றமே உடையேன் அம்பலக் கூத்தன்
குறிப்பினுக் கென்கட வேனே.
2
3285 கடுமையேன் வஞ்சக் கருத்தினேன் பொல்லாக்
கண்மனக் குரங்கனேன் கடையேன்
நெடுமைஆண் பனைபோல் நின்றவெற் றுடம்பேன்
நீசனேன் பாசமே உடையேன்
நடுமைஒன் றறியேன் கெடுமையிற் கிளைத்த
நச்சுமா மரம்எனக்கிளைத்தேன்
கொடுமையே குறித்தேன் அம்பலக் கூத்தன்
குறிப்பினுக் கென்கட வேனே.
3
3286 நிலத்திலும்பணத்தும் நீள்விழிமடவார்
நெருக்கிலும்பெருக்கிய நினைப்பேன்
புலத்திலும் புரைசேர் பொறியிலும் மனத்தைப்
போக்கிவீண் போதுபோக் குறுவேன்
நலத்தில்ஓர் அணுவும் நண்ணிலேன் கடைய
நாயினுங் கடையனேன் நவையேன்
குலத்திலும் கொடியேன் அம்பலக் கூத்தன்
குறிப்பினுக் கென்கட வேனே.
4
3287 செடிமுடிந் தலையும்மனத்தினேன் துன்பச்
செல்லினால்அரிப்புண்டசிறியேன்
அடிமுடி அறியும் ஆசைசற் றறியேன்
அறிந்தவர் தங்களை அடையேன்
படிமுடி வழித்துக் கடிகொளும் கடையர்
பணத்திலும் கொடியனேன் வஞ்சக்
கொடிமுடிந் திடுவேன் அம்பலக் கூத்தன்
குறிப்பினுக் கென்கட வேனே.
5
3288 அரங்கினிற் படைகொண் டுயிர்க்கொலை புரியும்
அறக்கடை யவரினுங் கடையேன்
இரங்கில்ஓர் சிறிதும் இரக்கம்உற் றறியேன்
இயலுறு நாசியுட் கிளைத்த
சிரங்கினிற் கொடியேன் சிவநெறி பிடியேன்
சிறுநெறிச் சழக்கையே சிலுகுக்
குரங்கெனப் பிடித்தேன் அம்பலக் கூத்தன்
குறிப்பினுக் கென்கட வேனே.
6
3289 வாட்டமே உடையார் தங்களைக் காணின்
மனஞ்சிறிதிரக்கமுற் றறியேன்
கோட்டமே உடையேன் கொலையனேன் புலையேன்
கூற்றினும் கொடியனேன் மாயை
ஆட்டமே புரிந்தேன் அறத்தொழில் புரியேன்
அச்சமும் அவலமும் இயற்றும்
கூட்டமே விழைந்தேன் அம்பலக் கூத்தன்
குறிப்பினுக் கென்கட வேனே.
7
3290 கலைத்தொழில் அறியேன் கள்உணுங் கொடியேன்
கறிக்குழல் நாயினும் கடையேன்
விலைத்தொழில் உடையேன் மெய்எலாம் வாயாய்
விளம்புறும் வீணனேன் அசுத்தப்
புலைத்தொழில் புரிவேன் பொய்யனேன் சீற்றம்
பொங்கிய மனத்தினேன் பொல்லாக்
கொலைத்தொழில் புரிவேன் அம்பலக் கூத்தன்
குறிப்பினுக் கென்கட வேனே.
8
3291 பணமிலார்க் கிடுக்கண் புரிந்துணுஞ் சோற்றுப்
பணம்பறித் துழல்கின்ற படிறேன்
எணமிலா தடுத்தார்க் குறுபெருந்தீமை
இயற்றுவேன் எட்டியே அனையேன்
மணமிலா மலரிற் பூத்தனன் இருகால்
மாடெனத் திரிந்துழல் கின்றேன்
குணமிலாக் கொடியேன் அம்பலக் கூத்தன்
குறிப்பினுக் கென்கட வேனே.
9
3292 கடியரில் கடியேன் கடையரில் கடையேன்
கள்வரில் கள்வனேன் காமப்
பொடியரில் பொடியேன் புலையரில் புலையேன்
பொய்யரில் பொய்யனேன் பொல்லாச்
செடியரில் செடியேன் சினத்தரில் சினத்தேன்
தீயரில் தீயனேன் பாபக்
கொடியரில் கொடியேன் அம்பலக் கூத்தன்
குறிப்பினுக் கென்கட வேனே.
10

திருச்சிற்றம்பலம்

4. பிறப்பவம் பொறாது பேதுறல்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3293 குலத்திடையும் கொடியன்ஒரு குடித்தனத்தும் கொடியேன்
குறிகளிலும் கொடியன்அன்றிக் குணங்களிலும் கொடியேன்
மலத்திடையே புழுத்தசிறு புழுக்களிலும் கடையேன்
வன்மனத்துப் பெரும்பாவி வஞ்சநெஞ்சப் புலையேன்
நலத்திடைஓர் அணுஅளவும் நண்ணுகிலேன் பொல்லா
நாய்க்குநகை தோன்றநின்றேன் பேய்க்கும்மிக இழிந்தேன்
நிலத்திடைநான் ஏன்பிறந்தேன் நின்கருத்தை அறியேன்
நிர்க்குணனே நடராஜ நிபுணமணி விளக்கே.
1
3294 விளக்கறியா இருட்டறையில் கவிழ்ந்துகிடந் தழுது
விம்முகின்ற குழவியினும் மிகப்பெரிதும் சிறியேன்
அளக்கறியாத் துயர்க்கடலில் விழுந்துநெடுங் காலம்
அலைந்தலைந்து மெலிந்ததுரும் பதனின்மிகத் துரும்பேன்
கிளக்கறியாக் கொடுமைஎலாம் கிளைத்தபழு மரத்தேன்
கெடுமதியேன் கடுமையினேன் கிறிபேசும் வெறியேன்
களக்கறியாப் புவியிடைநான் ஏன்பிறந்தேன் அந்தோ
கருணைநடத் தரசேநின் கருத்தைஅறி யேனே.
2
3295 அறியாத பொறியவர்க்கும் இழிந்ததொழி லவர்க்கும்
அதிகரித்துத் துன்மார்க்கத் தரசுசெயுங் கொடியேன்
குறியாத கொடும்பாவச் சுமைசுமக்கும் திறத்தேன்
கொல்லாமை என்பதைஓர் குறிப்பாலும் குறியேன்
செறியாத மனக்கடையேன் தீமையெலாம் உடையேன்
சினத்தாலும் மதத்தாலும் செறிந்தபுதல் அனையேன்
எறியாத புவியிடைநான் ஏன்பிறந்தேன் உன்றன்
இதயமறி யேன்மன்றில் இனித்தநடத் திறையே.
3
3296 இனித்தபழச் சாறுவிடுத் திழித்தமலங் கொளும்ஓர்
இழிவிலங்கில் இழிந்துநின்றேன் இரக்கம்ஒன்றும் இல்லேன்
அனித்தநெறி யிடைத்தொடர்ந்து மனித்தஉடம் பெடுத்த
அறக்கடையர் தமக்கெல்லாம் அறக்கடையன் ஆனேன்
பனித்தமனக் குரங்காட்டிப் பலிக்குழலும் கொடியேன்
பாதகமும் சூதகமும் பயின்றபெறும் படிறேன்
தனித்தகடுங் குணத்தேன்நான் ஏன்பிறந்தேன் நினது
தனிக்கருத்தை அறிந்திலேன் சபைக்கேற்றும் ஒளியே.
4
3297 ஏறுகின்றேம் எனமதித்தே இறங்குகின்ற கடையேன்
ஏதமெலாம் நிறைமனத்தேன் இரக்கமிலாப் புலையேன்
சீறுகின்ற புலியனையேன் சிறுதொழிலே புரிவேன்
செய்வகைஒன் றறியாத சிறியரினும் சிறியேன்
மாறுகின்ற குணப்பேதை மதியதனால் இழிந்தேன்
வஞ்சம்எலாம் குடிகொண்ட வாழ்க்கைமிக உடையேன்
வீறுகின்ற உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது
மெய்க்கருத்தை அறிந்திலேன் விளங்குநடத் தரசே.
5
3298 அரசர்எலாம் மதித்திடப்பே ராசையிலே அரசோ
டால்எனவே மிகக்கிளைத்தேன் அருளறியாக் கடையேன்
புரசமரம் போற்பருத்தேன் எட்டிஎனத் தழைத்தேன்
புங்கெனவும் புளிஎனவும் மங்கிஉதிர் கின்றேன்
பரசும்வகை தெரிந்துகொளேன் தெரிந்தாரைப் பணியேன்
பசைஅறியாக் கருங்கல்மனப் பாவிகளிற் சிறந்தேன்
விரசுநிலத் தேன்பிறந்தேன் நின்கருத்தை அறியேன்
வியக்குமணி மன்றோங்கி விளங்குபரம் பொருளே.
6
3299 பொருளறியேன் பொருளறிந்தார் போன்றுநடித் திங்கே
பொங்கிவழிந் துடைகின்றேன் பொய்யகத்தேன் புலையேன்
மருளறியாத் திருவாளர் உளங்கயக்கத் திரிவேன்
வையுண்டும் உழவுதவா மாடெனவே தடித்தேன்
வெருளறியாக் கொடுமனத்தேன் விழற்கிறைத்துக் களிப்பேன்
வீணர்களில் தலைநின்றேன் விலக்கனைத்தும் புரிவேன்
தெருளறியேன் உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது
திருவுளத்தை அறிந்திலேன் தெய்வநடந் தவனே.
7
3300 தவம்புரியேன் தவம்புரிந்தார் தமைப்போல நடித்துத்
தருக்குகின்றேன் உணர்ச்சியிலாச் சடம்போல இருந்தேன்
பவம்புரிவேன் கமரினிடைப் பால்கவிழ்க்கும் கடையேன்
பயனறியா வஞ்சமனப் பாறைசுமந் துழல்வேன்
அவம்புரிவேன் அறிவறியேன் அன்பறியேன் அன்பால்
ஐயாநின் அடியடைந்தார்க் கணுத்துணையும் உதவேன்
நவம்புரியும் உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது
நல்லதிரு வுளம்அறியேன் ஞானநடத் திறையே.
8
3301 இறைஅளவும் அறிவொழுக்கத் திச்சையிலேன் நரகில்
இருந்துழன்று வாடுகின்றோர் எல்லார்க்கும் இழிந்தேன்
பொறைஅளவோ நன்மைஎலாம் போக்கில்விட்டுத் தீமை
புரிகின்றேன் எரிகின்ற புதுநெருப்பிற் கொடியேன்
நிறைஅளவோ முறைஅளவோ நிலைஅளவுந் தவிர்ந்த
நெடுஞ்சால நெஞ்சகத்தேன் நீலவிடம் போல்வேன்
கறையளவா உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது
கருத்தறியேன் கருணைநடங் காட்டுகின்ற குருவே.
9
3302 காட்டுகின்ற உவர்க்கடல்போல் கலைகளிலும் செல்வக்
களிப்பினிலும் சிறந்துமிகக் களித்துநிறை கின்றேன்
நீட்டுகின்ற ஆபத்தில் ஒருசிறிதும் உதவேன்
நெடுந்தூரம் ஆழ்ந்துதவாப் படுங்கிணறு போல்வேன்
ஆட்டுகின்ற அருட்பெருமை ஒருசிறிதும் தெரியேன்
அச்சமிலேன் நாணமிலேன் அடக்கம்ஒன்றும் இல்லேன்
கூட்டுகின்ற உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது
குறிப்பறியேன் மன்றில்நடங் குலவுகுல மணியே.
10

திருச்சிற்றம்பலம்

5. மாயைவலிக் கழுங்கல்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3303 தாவு மான்எனக் குதித்துக்கொண் டோ டித்
தைய லார்முலைத் தடம்படுங் கடையேன்
கூவு காக்கைக்குச் சோற்றில்ஓர் பொருக்கும்
கொடுக்க நேர்ந்திடாக் கொடியரில் கொடியேன்
ஓவு றாதுழல் ஈஎனப் பலகால்
ஓடி ஓடியே தேடுறும் தொழிலேன்
சாவு றாவகைக் கென்செயக் கடவேன்
தந்தை யேஎனைத் தாங்கிக்கொண் டருளே.
1
3304 போக மாதியை விழைந்தனன் வீணில்
பொழுது போக்கிடும் இழுதையேன் அழியாத்
தேக மாதியைப் பெறமுயன் றறியேன்
சிரங்கு நெஞ்சகக் குரங்கொடும் உழல்வேன்
காக மாதிகள் அருந்தஓர் பொருக்கும்
காட்ட நேர்ந்திடாக் கடையரில் கடையேன்
ஆக மாதிசொல் அறிவறி வேனோ
அப்ப னேஎனை ஆண்டுகொண் டருளே.
2
3305 விழியைத் தூர்க்கின்ற வஞ்சரை விழைந்தேன்
விருந்தி லேஉண வருந்திஓர் வயிற்றுக்
குழியைத் தூர்க்கின்ற கொடியரில் கொடியேன்
கோப வெய்யனேன் பாபமே பயின்றேன்
வழியைத் தூர்ப்பவர்க் குளவுரைத் திடுவேன்
மாய மேபுரி பேயரில் பெரியேன்
பழியைத் தூர்ப்பதற் கென்செயக் கடவேன்
பரம னேஎனைப் பரிந்துகொண் டருளே.
3
3306 மதத்தி லேஅபி மானங்கொண் டுழல்வேன்
வாட்ட மேசெயும் கூட்டத்தில் பயில்வேன்
இதத்தி லேஒரு வார்த்தையும் புகலேன்
ஈயும் மொய்த்திடற் கிசைவுறா துண்பேன்
குதத்தி லேஇழி மலத்தினுங் கடையேன்
கோடை வெய்யலின் கொடுமையிற் கொடியேன்
சிதத்தி லேஉறற் கென்செயக் கடவேன்
தெய்வ மேஎனைச் சேர்த்துக்கொண் டருளே.
4
3307 கொடிய வெம்புலிக் குணத்தினேன் உதவாக்
கூவம் நேர்ந்துளேன் பாவமே பயின்றேன்
கடிய நெஞ்சினேன் குங்குமம் சுமந்த
கழுதை யேன்அவப் பொழுதையே கழிப்பேன்
விடியு முன்னரே எழுந்திடா துறங்கும்
வேட னேன்முழு மூடரில் பெரியேன்
அடிய னாவதற் கென்செயக் கடவேன்
அப்ப னேஎனை ஆண்டுகொண் டருளே.
5
3308 தூங்கு கின்றதே சுகம்என அறிந்தேன்
சோற தேபெறும் பேறதென் றுணர்ந்தேன்
ஏங்கு கின்றதே தொழிலெனப் பிடித்தேன்
இரக்கின் றோர்களே என்னினும் அவர்பால்
வாங்கு கின்றதே பொருள்என வலித்தேன்
வஞ்ச நெஞ்சினால் பஞ்செனப் பறந்தேன்
ஓங்கு கின்றதற் கென்செயக் கடவேன்
உடைய வாஎனை உவந்துகொண்ட ருளே.
6
3309 வருத்த நேர்பெரும் பாரமே சுமந்து
வாடும் ஓர்பொதி மாடென உழன்றேன்
பருத்த ஊனொடு மலம்உணத் திரியும்
பன்றி போன்றுளேன் நன்றியொன் றறியேன்
கருத்தி லாதயல் குரைத்தலுப் படைந்த
கடைய நாயினிற் கடையனேன் அருட்குப்
பொருத்தன் ஆவதற் கென்செயக் கடவேன்
புண்ணி யாஎனைப் புரிந்துகொண் டருளே.
7
3310 துருக்க லோகொடுங் கருங்கலோ வயிரச்
சூழ்க லோஎனக் காழ்கொளும் மனத்தேன்
தருக்கல் ஆணவக் கருக்கலோ டுழல்வேன்
சந்தை நாயெனப் பந்தமுற் றலைவேன்
திருக்கெ லாம்பெறு வெருக்கெனப்199 புகுவேன்
தீய னேன்பெரும் பேயனேன் உளந்தான்
உருக்கல் ஆகுதற் கென்செயக் கடவேன்
உடைய வாஎனை உவந்துகொண் டருளே.
8
199. வெருக்கு - பூனை. ககரமெய் விரிக்கும் வழி விரித்தல். முதற்பதிப்பு
3311 கான மேஉழல் விலங்கினிற் கடையேன்
காம மாதிகள் களைகணிற் பிடித்தேன்
மான மேலிடச் சாதியே மதமே
வாழ்க்கை யேஎன வாரிக்கொண் டலைந்தேன்
ஈன மேபொருள் எனக்களித் திருந்தேன்
இரக்கம் என்பதோர் எட்டுணை அறியேன்
ஞான மேவுதற் கென்செயக் கடவேன்
நாய காஎனை நயந்துகொண் டருளே.
9
3312 இருளை யேஒளி எனமதித் திருந்தேன்
இச்சை யேபெரு விச்சைஎன் றலந்தேன்
மருளை யேதரு மனக்குரங் கோடும்
வனமெ லாஞ்சுழன் றினம்எனத் திரிந்தேன்
பொருளை நாடுநற் புந்திசெய் தறியேன்
பொதுவி லேநடம் புரிகின்றோய் உன்றன்
அருளை மேவுதற் கென்செயக் கடவேன்
அப்ப னேஎனை ஆண்டுகொண் டருளே.
10

திருச்சிற்றம்பலம்

6. முறையீடு

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3313 மருந்தறியேன் மணிஅறியேன் மந்திரம்ஒன் றறியேன்
மதிஅறியேன் விதிஅறியேன் வாழ்க்கைநிலை அறியேன்
திருந்தறியேன் திருவருளின் செயலறியேன் அறந்தான்
செய்தறியேன் மனமடங்கும் திறத்தினில்ஓர் இடத்தே
இருந்தறியேன் அறிந்தோரை ஏத்திடவும் அறியேன்
எந்தைபிரான் மணிமன்றம் எய்தஅறி வேனோ
இருந்ததிசை சொலஅறியேன் எங்ஙனம்நான் புகுவேன்
யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
1
3314 அகங்காரக் கொடுங்கிழங்கை அகழ்ந்தெறிய அறியேன்
அறிவறிந்த அந்தணர்பால் செறியும்நெறி அறியேன்
நகங்கானம் உறுதவர்போல் நலம்புரிந்தும் அறியேன்
நச்சுமரக் கனிபோல இச்சைகனிந் துழல்வேன்
மகங்காணும் புலவரெலாம் வந்துதொழ நடிக்கும்
மணிமன்றந் தனைஅடையும் வழியும்அறி வேனோ
இகங்காணத் திரிகின்றேன் எங்ஙனம்நான் புகுவேன்
யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
2
3315 கற்குமுறை கற்றறியேன் கற்பனகற் றறிந்த
கருத்தர்திருக் கூட்டத்தில் களித்திருக்க அறியேன்
நிற்குநிலை நின்றறியேன் நின்றாரின் நடித்தேன்
நெடுங்காமப் பெருங்கடலை நீந்தும்வகை அறியேன்
சிற்குணமா மணிமன்றில் திருநடனம் புரியும்
திருவடிஎன் சென்னிமிசைச் சேர்க்கஅறி வேனோ
இற்குணஞ்செய் துழல்கின்றேன் எங்ஙனம்நான் புகுவேன்
யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
3
3316 தேகமுறு பூதநிலைத் திறம்சிறிதும் அறியேன்
சித்தாந்த நிலைஅறியேன் சித்தநிலைஅறியேன்
யோகமுறு நிலைசிறிதும் உணர்ந்தறியேன் சிறியேன்
உலகநடை யிடைக்கிடந்தே உழைப்பாரில் கடையேன்
ஆகமுறு திருநீற்றின் ஒளிவிளங்க அசைந்தே
அம்பலத்தில் ஆடுகின்ற அடியைஅறி வேனோ
ஏகஅனு பவம்அறியேன் எங்ஙனம்நான் புகுவேன்
யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
4
3317 வேதாந்த நிலைநாடி விரைந்துமுயன் றறியேன்
மெய்வகையும் கைவகையும் செய்வகையும் அறியேன்
நாதாந்தத் திருவீதி நடந்திடுதற் கறியேன்
நான்ஆர்என் றறியேன்எங் கோன்ஆர்என் றறியேன்
போதாந்தத் திருநாடு புகஅறியேன் ஞான
பூரணா காயம்எனும் பொதுவைஅறி வேனோ
ஏதாந்தீ யேன்சரிதம் எங்ஙனம்நான் புகுவேன்
யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
5
3318 கலைமுடிவு கண்டறியேன் கரணமெலாம் அடக்கும்
கதிஅறியேன் கதிஅறிந்த கருத்தர்களை அறியேன்
கொலைபுலைகள் விடுத்தறியேன் கோபமறுத் தறியேன்
கொடுங்காமக் கடல்கடக்கும் குறிப்பறியேன் குணமாம்
மலைமிசைநின் றிடஅறியேன் ஞானநடம் புரியும்
மணிமன்றந் தனைஅடையும் வழியும்அறி வேனோ
இலைஎனும்பொய் உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்
யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
6
3319 சாதிமதம் சமயம்எனும் சங்கடம்விட் டறியேன்
சாத்திரச்சே றாடுகின்ற சஞ்சலம்விட் டறியேன்
ஆதிஅந்த நிலையறியேன் அலைஅறியாக் கடல்போல்
ஆனந்தப் பெரும்போகத் தமர்ந்திடவும் அறியேன்
நீதிநெறி நடந்தறியேன் சோதிமணிப் பொதுவில்
நிருத்தமிடும் ஒருத்தர்திருக் கருத்தைஅறி வேனோ
ஏதிலர்சார் உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்
யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
7
3320 சாகாத தலைஅறியேன் வேகாத காலின்
தரம்அறியேன் போகாத தண்ணீரை அறியேன்
ஆகாய நிலைஅறியேன் மாகாய நிலையும்
அறியேன்மெய்ந் நெறிதனைஓர் அணுஅளவும் அறியேன்
மாகாத லுடையபெருந் திருவாளர் வழுத்தும்
மணிமன்றந் தனைஅடையும் வழியும்அறி வேனோ
ஏகாய200 உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்
யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
8
200. ஏகம் - முத்தி, ஈறுதொக்கு நின்றது, முதற்பதிப்பு.
3321 தத்துவம்என் வசமாகத் தான்செலுத்த அறியேன்
சாகாத கல்விகற்கும் தரஞ்சிறிதும் அறியேன்
அத்தநிலை சத்தநிலை அறியேன்மெய் அறிவை
அறியேன்மெய் அறிந்தடங்கும் அறிஞரையும் அறியேன்
சுத்தசிவ சன்மார்க்கத் திருப்பொதுவி னிடத்தே
தூயநடம் புரிகின்ற ஞாயமறி வேனோ
எத்துணையும் குணமறியேன் எங்ஙனம்நான் புகுவேன்
யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
9
3322 வரைஅபர மார்க்கமொடு பரமார்க்கம் அறியேன்
மரணபயம் தவிர்த்திடுஞ்சன் மார்க்கமதை அறியேன்
திரையறுதண் கடலறியேன் அக்கடலைக் கடைந்தே
தெள்ளமுதம் உணவறியேன் சினமடக்க அறியேன்
உரைஉணர்வு கடந்ததிரு மணிமன்றந் தனிலே
ஒருமைநடம் புரிகின்றார் பெருமைஅறி வேனோ
இரையுறுபொய் உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்
யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
10

திருச்சிற்றம்பலம்

7. அடியார் பேறு

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3323 அடியார் வருத்தம் தனைக்கண்டு தரியார் இன்பம் அளித்திடுவார்
வடியாக் கருணைப் பெருங்கடலார் என்ற பெரியர் வார்த்தைஎலாம்
நெடியார்க் கரியாய் கொடியேன்என் ஒருவன் தனையும் நீக்கியதோ
கடியாக் கொடுமா பாதகன்முன் கண்ட பரிசுங் கண்டிலனே.
1
3324 பையார் பாம்பு கொடியதெனப் பகர்வார் அதற்கும் பரிந்துமுன்னாள்
ஐயா கருணை அளித்தனைஎன் அளவில் இன்னும் அளித்திலையே
மையார் மிடற்றோய் ஆனந்த மன்றில் நடிப்போய் வல்வினையேன்
நையா நின்றேன் ஐயோநான் பாம்பிற் கொடியன் ஆனேனே.
2
3325 பீழை புரிவான் வருந்துகின்ற பேய்க்கும் கருணை பெரிதளிப்பான்
ஊழை அகற்றும் பெருங்கருணை உடையான் என்பார் உனைஐயோ
மோழை மனத்தால் குரங்கெறிந்த விளங்கா யாகி மொத்துண்ணும்
ஏழை அடியேன் வருத்தங்கண் டிருத்தல் அழகோ எங்கோவே.
3
3326 மருணா டுலகில் கொலைபுரிவார் மனமே கரையாக் கல்என்று
பொருணா டியநின் திருவாக்கே புகல அறிந்தேன் என்னளவில்
கருணா நிதிநின் திருவுளமுங் கல்என் றுரைக்க அறிந்திலனே
இருணா டியஇச் சிறியேனுக் கின்னும் இரங்கா திருந்தாயே.
4
3327 முன்னுங் கொடுமை பலபுரிந்து முடுகிப் பின்னுங் கொடுமைசெய
உன்னுங் கொடியர் தமக்கும்அருள் உதவுங் கருணை உடையானே
மன்னும் பதமே துணைஎன்று மதித்து வருந்தும் சிறியேனுக்
கின்னுங் கருணை புரிந்திலைநான் என்ன கொடுமை செய்தேனோ.
5
3328 அங்கே அடியர் தமக்கெல்லாம் அருளார் அமுதம் அளித்தையோ
இங்கே சிறியேன் ஒருவனுக்கும் இடர்தான் அளிக்க இசைந்தாயேல்
செங்கேழ் இதழிச் சடைக்கனியே201 சிவமே அடிமைச் சிறுநாயேன்
எங்கே புகுவேன் என்செய்வேன் எவர்என் முகம்பார்த் திடுவாரே.
6
201. செங்கேழ் வண்ணத் தனிக்கனியே - முதற்பதிப்பு, பொ. சு; பி. இரா. பாடம்.
3329 அளியே அன்பர் அன்பேநல் லமுதே சுத்த அறிவான
வெளியே வெளியில் இன்பநடம் புரியும் அரசே விதிஒன்றும்
தெளியேன் தீங்கு பிறர்செயினும் தீங்கு நினையாத் திருவுளந்தான்
எளியேன் அளவில் நினைக்கஒருப் படுமோ கருணை எந்தாயே.
7
3320 தீது நினைக்கும் பாவிகட்கும் செய்தாய் கருணை எனத்தெளிந்து
வாது நினைக்கும் மனக்கடையேன் மகிழ்வுற் றிருந்தேன் என்னளவில்
சூது நினைப்பாய் எனில்யார்க்குச் சொல்வேன் யாரைத் துணைகொள்வேன்
ஏது நினைப்பேன் ஐயோநான் பாவி உடம்பேன் எடுத்தேனே.
8
3331 பொதுவென் றறிந்தும் இரங்காத சிலர்க்கும் கருணை புரிவதன்றிக்
கதுவென் றழுங்க நினையாநின் கருணை உளந்தான் அறிவென்ப
திதுவென் றறியா எனைவருத்த எந்த வகையால் துணிந்ததுவோ
எதுவென் றறிவேன் என்புரிவேன் ஐயோ புழுவில் இழிந்தேனே.
9
3332 வெடிக்கப் பார்த்து நிற்கின்ற வெய்யர் தமையும் வினைத்துயர்கள்
பிடிக்கப் பார்க்கத் துணியாத பெருமான் நினது திருவுளந்தான்
நடிக்கப் பார்க்கும் உலகத்தே சிறியேன் மனது நவையாலே
துடிக்கப் பார்த்திங் கிருந்ததுகாண் ஐயோ இதற்குந் துணிந்ததுவோ.
10
3333 கல்லுங் கனியத் திருநோக்கம் புரியும் கருணைக் கடலேநான்
அல்லும் பகலுந் திருக்குறிப்பை எதிர்பார்த் திங்கே அயர்கின்றேன்
கொல்லுங் கொடியார்க் குதவுகின்ற குறும்புத் தேவர் மனம்போலச்
சொல்லும் இரங்கா வன்மைகற்க எங்கே ஐயோ துணிந்தாயோ.
11
3334 படிமேல் ஆசை பலவைத்துப் பணியும் அவர்க்கும் பரிந்துசுகக்
கொடிமேல் உறச்செய் தருள்கின்றாய் என்பால் இரக்கங் கொண்டிலையே
பொடிமேல் அணிநின் அருட்கிதுதான் அழகோ பொதுவில் நடிக்கும்உன்றன்
அடிமேல் ஆசை அல்லால்வே றாசை ஐயோ அறியேனே.
12
3335 நாயேன் உலகில் அறிவுவந்த நாள்தொட் டிந்த நாள்வரையும்
ஏயேன் பிறிதி லுன்குறிப்பே எதிர்பார்த் திருந்தேன் என்னுடைய
தாயே பொதுவில் நடம்புரிஎந் தாயே தயவு தாராயேல்
மாயேன் ஐயோ எதுகொண்டு வாழ்ந்திங் கிருக்கத் துணிவேனே.
13
3336 நயத்தால் உனது திருவருளை நண்ணாக் கொடியேன் நாய் உடம்பை
உயத்தான் வையேன் மடித்திடுவேன் மடித்தாற் பின்னர் உலகத்தே
வயத்தால் எந்த உடம்புறுமோ என்ன வருமோ என்கின்ற
பயத்தால் ஐயோ இவ்வுடம்பைச் சுமக்கின் றேன்எம் பரஞ்சுடரே.
14
3337 இன்ப மடுத்துன் அடியர்எலாம் இழியா தேறி யிருக்கின்றார்
வன்ப ரிடத்தே பலகாற்சென் றவரோ டுறவு வழங்கிஉன்றன்
அன்பர் உறவை விடுத்துலகில் ஆடிப் பாடி அடுத்தவினைத்
துன்ப முடுகிச் சுடச்சுடவுஞ் சோறுண் டிருக்கத் துணிந்தேனே.
15
3338 எந்நாள் கருணைத் தனிமுதல்நீ என்பால் இரங்கி அருளுதலோ
அந்நாள் இந்நாள் இந்நாள்என் றெண்ணி எண்ணி அலமந்தேன்
சென்னாள் களில்ஓர் நன்னாளுந் திருநா ளான திலைஐயோ
முன்னாள் என்னை ஆட்கொண்டாய் என்ன நாணம் முடுகுவதே.
16
3339 எந்த வகைசெய் திடிற்கருணை எந்தாய் நீதான் இரங்குவையோ
அந்த வகையை நான்அறியேன் அறிவிப் பாரும் எனக்கில்லை
இந்த வகைஇங் கையோநான் இருந்தால் பின்னர் என்செய்வேன்202
பந்த வகைஅற் றவர்உளத்தே நடிக்கும் உண்மைப் பரம்பொருளே203.
17
202. என்செய்கேன் - ச மு க. பதிப்பு.
203. பரஞ்சுடரே - படிவேறுபாடு. ஆ பா.
3340 அடுக்குந் தொண்டர் தமக்கெல்லாம் அருளீந் திங்கே என்னளவில்
கொடுக்குந் தன்மை தனைஒளித்தால் ஒளிக்கப் படுமோ குணக்குன்றே
தடுக்குந் தடையும் வேறில்லை தமியேன் தனைஇத் தாழ்வகற்றி
எடுக்குந் துணையும் பிறிதில்லை ஐயோ இன்னும் இரங்கிலையே.
18
3341 எல்லாம் உடையாய் நின்செயலே எல்லாம் என்றால் என்செயல்கள்
எல்லாம் நினது செயல்அன்றோ என்னே என்னைப் புறந்தள்ளல்
வல்லாய் என்னைப் புறம்விடுத்தால் புறத்தும் உன்றன் மயம்அன்றே
நல்லார் எங்கும் சிவமயம்என் றுரைப்பார் எங்கள் நாயகனே.
19
3342 கூடுங் கருணைத் திருக்குறிப்பை இற்றைப் பொழுதே குறிப்பித்து
வாடுஞ் சிறியேன் வாட்டம்எலாந் தீர்த்து வாழ்வித் திடல்வேண்டும்
பாடும் புகழோய் நினைஅல்லால் துணைவே றில்லைப் பரவெளியில்
ஆடுஞ் செல்வத் திருவடிமேல் ஆணை முக்கால் ஆணையதே.
20

திருச்சிற்றம்பலம்

8. ஆன்ம விசாரத் தழுங்கல்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3343 போகமே விழைந்தேன் புலைமனச் சிறியேன்
பூப்பினும் புணர்ந்தவெம் பொறியேன்
ஏகமே பொருள்என் றறிந்திலேன் பொருளின்
இச்சையால் எருதுநோ வறியாக்
காகமே எனப்போய்ப் பிறர்தமை வருத்திக்
களித்த பாதகத்தொழிற் கடையேன்
மோகமே உடையேன் என்னினும் எந்தாய்
முனிந்திடேல் காத்தருள் எனையே.
1
3344 பூப்பினும் பலகால் மடந்தையர் தமைப்போய்ப்
புணர்ந்தவெம் புலையனேன் விடஞ்சார்
பாப்பினுங் கொடியர் உறவையே விழைந்த
பள்ளனேன் கள்ளனேன் நெருக்கும்
ஆப்பினும் வலியேன் அறத்தொழில் புரியேன்
அன்பினால் அடுத்தவர் கரங்கள்
கூப்பினுங் கூப்பாக் கொடுங்கையேன் எனினும்
கோபியேல் காத்தருள் எனையே.
2
3345 விழுத்தலை நெறியை விரும்பிலேன் கரும்பின்
மிகஇனிக் கின்றநின் புகழ்கள்
வழுத்தலை அறியேன் மக்களே மனையே
வாழ்க்கையே துணைஎன மதித்துக்
கொழுத்தலை மனத்துப் புழுத்தலைப் புலையேன்
கொக்கனேன் செக்கினைப் பலகால்
இழுத்தலை எருதேன் உழத்தலே உடையேன்
என்னினும் காத்தருள் எனையே.
3
3346 புலைவிலைக் கடையில் தலைகுனித் தலைந்து
பொறுக்கிய சுணங்கனேன் புரத்தில்
தலைவிலை பிடித்துக் கடைவிலை படித்த
தயவிலாச் சழக்கனேன் சழக்கர்
உலைவிலை எனவே வியக்கவெந் தொழிலில்
உழன்றுழன் றழன்றதோர் உளத்தேன்
இலைவிலை எனக்கென் றகங்கரித் திருந்தேன்
என்னினும் காத்தருள் எனையே.
4
3347 கொட்டிலை அடையாப் பட்டிமா டனையேன்
கொட்டைகள் பரப்பிமேல் வனைந்த
கட்டிலை விரும்பி அடிக்கடி படுத்த
கடையனேன் கங்குலும் பகலும்
அட்டிலை அடுத்த பூஞையேன் உணவை
அறவுண்டு குப்பைமேற் போட்ட
நெட்டிலை அனையேன் என்னினும் வேறு
நினைத்திடேல் காத்தருள் எனையே.
5
3348 நேரிழை யவர்தம் புணர்முலை நெருக்கில்
நெருக்கிய மனத்தினேன் வீணில்
போரிழை வெறியர் புகழ்பெறு வெறியேன்
புனைகலை இலர்க்கொரு கலையில்
ஓரிழை எனினும் கொடுத்திலேன் நீள
உடுத்துடுத் தூர்தொறுந் திரிந்தேன்
ஏரிழை விழைந்து பூண்டுளங் களித்தேன்
என்னினும் காத்தருள்எனையே.
6
3349 அளத்திலே படிந்த துரும்பினும் கடையேன்
அசடனேன் அறிவிலேன்உலகில்
குளத்திலே குளிப்பார் குளிக்கவெஞ் சிறுநீர்க்
குழியிலே குளித்தவெங் கொடியேன்
வளத்திலே பொசித்துத் தளத்திலே படுக்க
மனங்கொணட சிறியேனன் மாயைக்
களத்திலே பயின்ற உளத்திலே பெரியன்
என்னினும் காத்தருள் எனையே.
7
3350 தொழுதெலாம் வல்ல கடவுளே நின்னைத்
துதித்திலேன் தூய்மைஒன் றறியேன்
கழுதெலாம் அனையேன் இழுதெலாம் உணவில்
கலந்துணக் கருதிய கருத்தேன்
பழுதெலாம் புரிந்து பொழுதெலாம் கழித்த
பாவியேன் தீமைகள் சிறிதும்
எழுதலாம் படித்தன் றெனமிக உடையேன்
என்னினும் காத்தருள் எனையே.
8
3351 வட்டியே பெருக்கிக் கொட்டியே ஏழை
மனைகவர் கருத்தினேன் ஓட்டைச்
சட்டியே எனினும் பிறர்கொளத் தரியேன்
தயவிலேன் சூதெலாம் அடைத்த
பெட்டியே நிகர்த்த மனத்தினேன் உலகில்
பெரியவர் மனம்வெறுக் கச்செய்
எட்டியே மண்ணாங் கட்டியே அனையேன்
என்னினும் காத்தருள் எனையே.
9
3352 உடுத்திலேம் சிறிதும் உண்டிலேம் எனவந்
தோதிய வறிஞருக் கேதும்
கொடுத்திலேன் கொடுக்கும் குறிப்பிலேன் உலகில்
குணம்பெரி துடையநல் லோரை
அடுத்திலேன் அடுத்தற் காசையும் இல்லேன்
அவனிமேல் நல்லவன் எனப்பேர்
எடுத்திலேன் எனினும் தெய்வமே துணைஎன்
றிருக்கின்றேன் காத்தருள் எனையே.
10

திருச்சிற்றம்பலம்

9. அவா அறுத்தல்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3353 தாலவாழ்க் கையிலே சார்ந்தவர் எல்லாம்
தக்கமுப் போதினும் தனித்தே
சீலமார் பூசைக் கடன்முடிக் கின்றார்
சிறியனேன் தவஞ்செய்வான் போலே
ஞாலமே லவர்க்குக் காட்டிநான் தனித்தே
நவிலும்இந் நாய்வயிற் றினுக்கே
காலையா தியமுப் போதினும் சோற்றுக்
கடன்முடித் திருந்தனன் எந்தாய்.
1
3354 சோற்றிலே விருப்பஞ் சூழ்ந்திடில் ஒருவன்
துன்னுநல் தவம்எலாஞ் சுருங்கி
ஆற்றிலே கரைத்த புளிஎனப் போம்என்
றறிஞர்கள் உரைத்திடல் சிறிதும்
போற்றிலேன் உன்னைப் போற்றிலேன் சுவையில்
பொருந்திய காரசா ரஞ்சேர்
சாற்றிலே கலந்த சோற்றிலே ஆசை
தங்கினேன் என்செய்வேன் எந்தாய்.
2
3355 விருப்பிலேன் போலக் காட்டினேன் அன்றி
விளைவிலா தூண்எலாம் மறுத்த
கருப்பிலே எனினும் கஞ்சியா திகளைக்
கருத்துவந் துண்ணுதற் கமையேன்
நெருப்பிலே உருக்கு நெய்யிலே சிறிதும்
நீரிடாத் தயிரிலே நெகிழ்ந்த
பருப்பிலே சோற்றுப் பொருப்பிலே ஆசை
பற்றினேன் என்செய்வேன் எந்தாய்.
3
3356 உறியிலே தயிரைத் திருடிஉண் டனன்என்
றொருவனை உரைப்பதோர் வியப்போ
குறியிலே அமைத்த உணவெலாம் திருடிக்
கொண்டுபோய் உண்டனன் பருப்புக்
கறியிலே பொரித்த கறியிலே கூட்டுக்
கறியிலே கலந்தபே ராசை
வெறியிலே உனையும் மறந்தனன் வயிறு
வீங்கிட உண்டனன் எந்தாய்.
4
3357 கீரையே விரும்பேன் பருப்பொடு கலந்த
கீரையே விரும்பினேன் வெறுந்தண்
நீரையே விரும்பேன் தெங்கிளங் காயின்
நீரையே விரும்பினேன் உணவில்
ஆரையே எனக்கு நிகர்எனப் புகல்வேன்
அய்யகோ அடிச்சிறு நாயேன்
பேரையே உரைக்கில் தவம்எலாம் ஓட்டம்
பிடிக்குமே என்செய்வேன் எந்தாய்.
5
3358 பாலிலே கலந்த சோறெனில் விரைந்தே
பத்தியால் ஒருபெரு வயிற்றுச்
சாலிலே அடைக்கத் தடைபடேன் வாழை
தகுபலா மாமுதற் பழத்தின்
தோலிலே எனினும் கிள்ளிஓர் சிறிதும்
சூழ்ந்தவர்க் கீந்திடத் துணியேன்
வாலிலேன் இருக்கில் வனத்திலே இருக்க
வாய்ப்புளேன் என்செய்வேன் எந்தாய்.
6
3359 உடம்பொரு வயிறாய்ச் சருக்கரை கலந்த
உண்டியே உண்டனன் பலகால்
கடம்பெறு புளிச்சோ றுண்டுளே களித்தேன்
கட்டிநல் தயிரிலே கலந்த
தடம்பெறு சோற்றில் தருக்கினேன் எலுமிச்
சம்பழச் சோற்றிலே தடித்தேன்
திடம்பெறும் மற்றைச் சித்திரச் சோற்றில்
செருக்கினேன் என்செய்வேன் எந்தாய்.
7
3360 மிளகுமேன் மேலும் சேர்த்தபல் உணவில்
விருப்பெலாம் வைத்தனன்உதவாச்
சுளகினும் கடையேன் பருப்பிலே அமைத்த
துவையலே சுவர்க்கம்என் றுண்டேன்
இளகிலா மனத்தேன் இனியபச் சடிசில்
எவற்றிலும் இச்சைவைத் திசைத்தேன்
குளகுணும் விலங்கின் இலைக்கறிக் காசை
கொண்டனன் என்செய்வேன்எந்தாய்.
8
3361 தண்டுகாய் கிழங்கு பூமுதல் ஒன்றும்
தவறவிட் டிடுவதற் கமையேன்
கொண்டுபோய் வயிற்றுக் குழிஎலாம் நிரம்பக்
கொட்டினேன் குணமிலாக் கொடியேன்
வண்டுபோல் விரைந்து வயல்எலாம் நிரம்ப
மலங்கொட்ட ஓடிய புலையேன்
பண்டுபோல் பசித்தூண் வருவழி பார்த்த
பாவியேன் என்செய்வேன் எந்தாய்.
9
3362 வறுத்தலே பொடித்து மலர்த்தலே புரட்டி
வைத்தலே துவட்டலில் சுவைகள்
உறுத்தலே முதலா உற்றபல் உணவை
ஒருமல வயிற்றுப்பை உள்ளே
துறுத்தலே எனக்குத் தொழில்எனத் துணிந்தேன்
துணிந்தரைக் கணத்தும்வன் பசியைப்
பொறுத்தலே அறியேன் மலப்புலைக் கூட்டைப்
பொறுத்தனன் என்செய்வேன் எந்தாய்.
10
3363 பருப்பிடி யரிவா லிடிகளா திகளால்
பண்ணிய பண்ணிகா ரங்கள்
உருப்பிடி நிரம்ப வரவர எல்லாம்
ஒருபெரு வயிற்றிலே அடைத்தேன்
கருப்பிடி உலகின் எருப்பிடி அனைய
கடையரில் கடையனேன் உதவாத்
துருப்பிடி இருப்புத் துண்டுபோல் கிடந்து
தூங்கினேன் என்செய்வேன் எந்தாய்.
11
3364 அடிக்கடி நுண்மை விழைந்துபோய் அவைகள்
அடுக்கிய இடந்தொறும் அலைந்தே
தடிக்கடி நாய்போல் நுகர்ந்துவாய் சுவைத்துத்
தவம்புரிந் தான்என நடித்தேன்
பொடிக்கடி நாசித் துளையிலே புகுத்திப்
பொங்கினேன் அய்யகோ எனது
முடிக்கடி புனைய முயன்றிலேன் அறிவில்
மூடனேன் என்செய்வேன் எந்தாய்.
12
3365 உண்டியே விழைந்தேன் எனினும்என் தன்னை
உடையவா அடியனேன் உனையே
அண்டியே இருந்தேன் இருக்கின்றேன் இருப்பேன்
அப்பநின் ஆணைநின் தனக்கே
தொண்டுறா தவர்கைச் சோற்றினை விரும்பேன்
தூயனே துணைநினை அல்லால்
கண்டிலேன் என்னைக் காப்பதுன் கடன்காண்
கைவிடேல் கைவிடேல் எந்தாய்.
13

திருச்சிற்றம்பலம்

10. தற் சுதந்தரம் இன்மை

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3366 இப்பாரில் உடல்ஆவி பொருளும்உன்பாற்
கொடுத்தேன்மற் றெனக்கென் றிங்கே
எப்பாலும் சுதந்தரம்ஓர் இறையும்இலை
அருட்சோதி இயற்கை என்னும்
துப்பாய உடலாதி தருவாயோ
இன்னும்எனைச் சோதிப் பாயோ
அப்பாநின் திருவுளத்தை அறியேன்இவ்
வடியேனால் ஆவ தென்னே.
1
3367 என்னேஎம் பெருமான்இங் கின்னும்அணைந்
திலன்என்றே ஏங்கி ஏங்கி
மன்னேஎன் மணியேகண் மணியேஎன்
வாழ்வேநல் வரத்தாற் பெற்ற
பொன்னேஅற் புதமேசெம் பொருளேஎன்
புகலேமெய்ப் போத மேஎன்
அன்னேஎன் அப்பாஎன் றழைத்தலன்றி
அடியேனால் ஆவ தென்னே.
2
3368 பொடிஎடுக்கப் போய்அதனை மறந்துமடி
எடுத்தரையில் புனைவேன் சில்லோர்
தடிஎடுக்கக் காணில்அதற் குளங்கலங்கி
ஓடுவனித் தரத்தேன் இங்கே
முடிஎடுக்க வல்லேனோ இறைவாநின்
அருள்இலதேல் முன்னே வைத்த
அடிஎடுக்க முடியாதே அந்தோஇச்
சிறியேனால் ஆவ தென்னே.
3
3369 பாட்டுவித்தால் பாடுகின்றேன் பணிவித்தால்
பணிகின்றேன் பதியே நின்னைக்
கூட்டுவித்தால் கூடுகின்றேன் குழைவித்தால்
குழைகின்றேன் குறித்த ஊணை
ஊட்டுவித்தால் உண்கின்றேன் உறக்குவித்தால்
உறங்குகின்றேன் உறங்கா தென்றும்
ஆட்டுவித்தால் ஆடுகின்றேன் அந்தோஇச்
சிறியேனால் ஆவ தென்னே.
4
3370 உடுப்பவனும் உண்பவனும் நானேஎன்
னவும்நாணம் உறுவ தெந்தாய்
தடுப்பவனும் தடைதீர்த்துக் கொடுப்பவனும்
பிறப்பிறப்புத் தன்னை நீக்கி
எடுப்பவனும் காப்பவனும் இன்பஅனு
பவஉருவாய் என்னுள் ஓங்கி
அடுப்பவனும் நீஎன்றால் அந்தோஇச்
சிறியேனால் ஆவ தென்னே.
5
3371 சாவதென்றும் பிறப்பதென்றும் சாற்றுகின்ற
பெரும்பாவம் தன்னை எண்ணி
நோவதின்று புதிதன்றே என்றும்உள
தால்இந்த நோவை நீக்கி
ஈவதுமன் றிடைநடிப்போய் நின்னாலே
ஆகும்மற்றை இறைவ ராலே
ஆவதொன்றும் இல்லைஎன்றால் அந்தோஇச்
சிறியேனால் ஆவ தென்னே.
6
3372 இசைத்திடவும் நினைத்திடவும் பெரிதரிதாம்
தனித்தலைமை இறைவா உன்றன்
நசைத்திடுபே ரருட்செயலால் அசைவதன்றி
ஐந்தொழில்செய் நாத ராலும்
தசைத்திடுபுன் துரும்பினையும் அகங்கரித்துத்
தங்கள்சுதந் தரத்தால் இங்கே
அசைத்திடற்கு முடியாதேல் அந்தோஇச்
சிறியேனால் ஆவ தென்னே.
7
3373 கல்லாய மனத்தையும்ஓர் கணத்தினிலே
கனிவித்துக் கருணை யாலே
பல்லாரும் அதிசயிக்கப் பக்குவந்தந்
தருட்பதமும் பாலிக் கின்றோய்
எல்லாஞ்செய் வல்லோய்சிற் றம்பலத்தே
ஆடல்இடு கின்றோய் நின்னால்
அல்லால்ஒன் றாகாதேல் அந்தோஇச்
சிறியேனால் ஆவ தென்னே.
8
3374 கரைசேரப் புரிந்தாலும் கடையேன்செய்
குற்றமெலாம் கருதி மாயைத்
திரைசேரப் புரிந்தாலும் திருவுளமே
துணைஎனநான் சிந்தித் திங்கே
உரைசேர இருத்தல்அன்றி உடையாய்என்
உறவேஎன் உயிரே என்றன்
அரைசேஎன் அம்மேஎன் அப்பாஇச்
சிறியேனால் ஆவ தென்னே.
9
3375 இன்பேநன் றருளிஅருள் இயற்கையிலே
வைத்தாலும் இங்கே என்னைத்
துன்பேசெய் வித்தாலும் என்செய்வேன்
நின்னருளே துணைஎன் றந்தோ
என்பேதை மனமடங்கி இருப்பதன்றி
எல்லாங்கண் டிருக்கும் என்றன்
அன்பேஎன் அம்மேஎன் அப்பாஇச்
சிறியேனால் ஆவ தென்னே.
10

திருச்சிற்றம்பலம்

11. அத்துவித ஆனந்த அனுபவ இடையீடு

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3376 திருத்தகுபொன் னம்பலத்தே திருநடஞ்செய் தருளும்
திருவடிகள் அடிச்சிறியேன் சென்னிமிசை வருமோ
உருத்தகுநா னிலத்திடைநீள் மலத்தடைபோய் ஞான
உருப்படிவம் அடைவேனோ ஒன்றிரண்டென் னாத
பொருத்தமுறு சுத்தசிவா னந்தவெள்ளம் ததும்பிப்
பொங்கிஅகம் புறங்காணா தெங்கு நிறைந்திடுமோ
அருத்தகும்அவ் வெள்ளத்தே நான்மூழ்கி நான்போய்
அதுவாகப் பெறுவேனோ அறிந்திலன்மேல் விளைவே.
1
3377 கரணமெலாம் கரைந்ததனிக் கரைகாண்ப துளதோ
கரைகண்ட பொழுதெனையுங் கண்டுதெளி வேனோ
அரணமெலாம் கடந்ததிரு வருள்வெளிநேர் படுமோ
அவ்வெளிக்குள் ஆனந்த அனுபவந்தான் உறுமோ
மரணமெலாம் தவிர்ந்துசிவ மயமாகி நிறைதல்
வாய்த்திடுமோ மூலமல வாதனையும் போமோ
சரணமெலாம் தரமன்றில் திருநடஞ்செய் பெருமான்
தனதுதிரு உளம்எதுவோ சற்றுமறிந் திலனே.
2
3378 நாதாந்தத் திருவீதி நடந்துகடப் பேனோ
ஞானவெளி நடுஇன்ப நடந்தரிசிப் பேனோ
போதாந்தத் திருவடிஎன் சென்னிபொருந் திடுமோ
புதுமையறச் சிவபோகம் பொங்கிநிறைந் திடுமோ
வேதாந்த சித்தாந்த சமரசமும் வருமோ
வெறுவெளியில் சுத்தசிவ வெளிமயந்தான் உறுமோ
பாதாந்த வரைநீறு மணக்கமன்றில் ஆடும்
பரமர்திரு உளம்எதுவோ பரமம்அறிந் திலனே.
3
3379 சிதம்பரத்தே ஆனந்த சித்தர்திரு நடந்தான்
சிறிதறிந்த படிஇன்னும் முழுதும்அறி வேனோ
பதம்பெறத்தேம் பழம்பிழிந்து பாலும்நறும் பாகும்
பசுநெய்யும் கலந்ததெனப் பாடிமகிழ் வேனோ
நிதம்பரவி ஆனந்த நித்திரைநீங் காத
நித்தர்பணி புரிந்தின்ப சித்திபெறு வேனோ
மதம்பரவு மலைச்செருக்கில் சிறந்தசிறி யேன்நான்
வள்ளல்குரு நாதர்திரு உள்ளம்அறி யேனே.
4
3380 களக்கமறப் பொதுநடம்நான் கண்டுகொண்ட தருணம்
கடைச்சிறியேன் உளம்பூத்துக் காய்த்ததொரு காய்தான்
விளக்கமுறப் பழுத்திடுமோ வெம்பிஉதிர்ந் திடுமோ
வெம்பாது பழுக்கினும்என் கரத்தில்அகப் படுமோ
கொளக்கருது மலமாயைக் குரங்குகவர்ந் திடுமோ
குரங்குகவ ராதெனது குறிப்பில்அகப் படினும்
துளக்கமற உண்ணுவனோ தொண்டைவிக்கிக் கொளுமோ
ஜோதிதிரு உளம்எதுவோ ஏதும்அறிந் திலனே.
5
3381 திருப்பொதுவில் திருநடம்நான் சென்றுகண்ட தருணம்
சித்திஎனும் பெண்ணரசி எத்திஎன்கை பிடித்தாள்
கருப்பறியா தெனைஅதன்முன் கலந்தபுத்தி எனும்ஓர்
காரிகைதான் கண்டளவில் கனிந்துமகிழ்ந் திடுமோ
விருப்பமுறா தெனைமுனிந்து விடுத்திடுமோ நேயம்
விளைந்திடுமோ இவர்க்குநிதம் சண்டைவிளைந் திடுமோ
தருப்பொதுவில் இருவர்க்கும் சந்ததிஉண் டாமோ
தடைபடுமோ திருஉளந்தான் சற்றும்அறிந் திலனே.
6
3382 ஆனந்த நடம்பொதுவில் கண்டதரு ணத்தே
அருமருந்தொன் றென்கருத்தில் அடைந்தமர்ந்த ததுதான்
கானந்த மதத்தாலே காரமறை படுமோ
கடுங்கார மாகிஎன்றன் கருத்தில்உறைந் திடுமோ
ஊனந்த மறக்கொளும்போ தினிக்கரசம் தருமோ
உணக்கசந்து குமட்டிஎதிர் எடுத்திடநேர்ந் திடுமோ
நானந்த உளவறிந்து பிறர்க்கீய வருமோ
நல்லதிரு உளம்எதுவோ வல்லதறிந் திலனே.
7
3383 தாய்கொண்ட திருப்பொதுவில் எங்கள்குரு நாதன்
சந்நிதிபோய் வரவிடுத்த தனிக்கரணப் பூவை
காய்கொண்டு வந்திடுமோ பழங்கொண்டு வருமோ
கனிந்தபழங் கொண்டுவருங் காலதனை மதமாம்
பேய்கொண்டு போய்விடுமோ பிலத்திடைவீழ்ந் திடுமோ
பின்படுமோ முன்படுமோ பிணங்கிஒளித் திடுமோ
வாய்கொண்டு வென்றிடுமோ தோற்றிடுமோ என்னை
மறந்திடுமோ திருஉளத்தின் வண்ணம்அறிந் திலனே.
8
3384 தீட்டுமணிப் பொதுநடஞ்செய் திருவடிகண் டேத்தச்
செல்கின்றேன் சிறியேன்முன் சென்றவழி அறியேன்
காட்டுவழி கிடைத்திடுமோ நாட்டுவழி தருமோ
கால்இளைப்புக் கண்டிடுமோ காணாதோ களிப்பாம்
மேட்டினிடை விடுத்திடுமோ பள்ளத்தே விடுமோ
விவேகம்எனும் துணையுறுமோ வேடர்பயம் உறுமோ
ஈட்டுதிரு வடிச்சமுகம் காணவும்நேர்ந் திடுமோ
எப்படியோ திருஉளந்தான் ஏதும்அறிந் திலனே.
9
3385 ஞானமணிப் பொதுநடஞ்செய் திருவடிகண் டிடவே
நடக்கின்றேன் அந்தோமுன் நடந்தவழி அறியேன்
ஊனமிகும் ஆணவமாம் பாவிஎதிர்ப் படுமோ
உடைமைஎலாம் பறித்திடுமோ நடைமெலிந்து போமோ
ஈனமுறும் அகங்காரப் புலிகுறுக்கே வருமோ
இச்சைஎனும் இராக்கதப்பேய் எனைப்பிடித்துக் கொளுமோ
ஆனமலத் தடைநீக்க அருட்டுணைதான் உறுமோ
ஐயர்திரு உளம்எதுவோ யாதுமறிந் திலனே.
10

திருச்சிற்றம்பலம்

12. பிள்ளைச் சிறு விண்ணப்பம்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3386 தடித்தஓர் மகனைத் தந்தைஈண் டடித்தால்
தாயுடன் அணைப்பள்தாய் அடித்தால்
பிடித்தொரு தந்தை அணைப்பன்இங் கெனக்குப்
பேசிய தந்தையும் தாயும்
பொடித்திரு மேனி அம்பலத் தாடும்
புனிதநீ ஆதலால் என்னை
அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும்
அம்மைஅப் பாஇனி ஆற்றேன்.
1
3387 பெற்றதம் பிள்ளைக் குணங்களை எல்லாம்
பெற்றவர் அறிவரே அல்லால்
மற்றவர் அறியார் என்றனை ஈன்ற
வள்ளலே மன்றிலே நடிக்கும்
கொற்றவ ஓர்எண் குணத்தவ நீதான்
குறிக்கொண்ட கொடியனேன் குணங்கள்
முற்றும்நன் கறிவாய் அறிந்தும்என் றனைநீ
முனிவதென் முனிவுதீர்ந் தருளே.
2
3388 வெம்மதிக் கொடிய மகன்கொடுஞ் செய்கை
விரும்பினும் அங்ஙனம் புரியச்
சம்மதிக் கின்றார் அவன்றனைப் பெற்ற
தந்தைதாய் மகன்விருப் பாலே
இம்மதிச் சிறியேன் விழைந்ததொன் றிலைநீ
என்றனை விழைவிக்க விழைந்தேன்
செம்மதிக் கருணைத் திருநெறி இதுநின்
திருவுளம் அறியுமே எந்தாய்.
3
3389 பொய்பிழை அனந்தம் புகல்கின்றேன் அதில்ஓர்
புல்முனை ஆயினும் பிறர்க்கு
நைபிழை உளதேல் நவின்றிடேன் பிறர்பால்
நண்ணிய கருணையால் பலவே
கைபிழை யாமை கருதுகின் றேன்நின்
கழற்பதம் விழைகின்றேன் அல்லால்
செய்பிழை வேறொன் றறிகிலேன் அந்தோ
திருவுளம் அறியுமே எந்தாய்.
4
3390 அப்பணி முடி204என் அப்பனே மன்றில்
ஆனந்த நடம்புரி அரசே
இப்புவி தனிலே அறிவுவந் ததுதொட்
டிந்தநாள் வரையும்என் தனக்கே
எப்பணி இட்டாய் அப்பணி அலதென்
இச்சையால் புரிந்ததொன் றிலையே
செப்புவ தென்நான் செய்தவை எல்லாம்
திருவுளம் அறியுமே எந்தாய்.
5
204. அப்பணிசடை - ச. மு. க. பதிப்பு.
3391 முன்னொடு பின்னும் நீதரு மடவார்
முயக்கினில் பொருந்தினேன் அதுவும்
பொன்னொடு விளங்கும் சபைநடத் தரசுன்
புணர்ப்பலால் என்புணர்ப் பலவே
என்னொடும் இருந்திங் கறிகின்ற நினக்கே
எந்தைவே றியம்புவ தென்னோ
சொன்னெடு வானத் தரம்பையர் எனினும்
துரும்பெனக் காண்கின்றேன் தனித்தே.
6
3392 இன்னுமிங் கெனைநீ மடந்தையர் முயக்கில்
எய்துவித் திடுதியேல் அதுவுன்
தன்னுளப் புணர்ப்பிங் கெனக்கொரு சிறிதும்
சம்மதம் அன்றுநான் இதனைப்
பன்னுவ தென்னே இதில்அரு வருப்புப்
பால்உணும் காலையே உளதால்
மன்னும்அம் பலத்தே நடம்புரி வோய்என்
மதிப்பெலாம் திருவடி மலர்க்கே.
7
3393 அறிவிலாச் சிறிய பருவத்திற் றானே
அருந்தலில் எனக்குள வெறுப்பைப்
பிறிவிலா தென்னுட் கலந்ததீ அறிதி
இன்றுநான் பேசுவ தென்னே
செறிவிலாக் கடையேன் என்னினும் அடியேன்
திருவருள் அமுதமே விழைந்தேன்
எறிவிலாச் சுவைவே றெவற்றினும் விழைவோர்
எட்டுணை யேனும்இன் றெந்தாய்.
8
3394 இன்சுவை உணவு பலபல எனக்கிங்
கெந்தைநீ கொடுப்பிக்கச் சிறியேன்
நின்சுவை உணவென் றுண்கின்றேன் இன்னும்
நீதரு வித்திடில் அதுநின்
தன்சுதந் தரம்இங் கெனக்கதில் இறையும்
சம்மதம் இல்லைநான் தானே
என்சுதந் தரத்தில் தேடுவேன் அல்லேன்
தேடிய தும்இலை ஈண்டே.
9
3395 செறிவதில் மனத்தேன் காசிலே ஆசை
செய்திலேன் இந்தநாள் அன்றி
அறிவதில் லாத சிறுபரு வத்தும்
அடுத்தவர் கொடுத்தகா சவர்மேல்
எறிவதும் மேட்டில் எறிந்ததும் எனக்குள்
இருக்கின்ற நீ அறிந் ததுவே
பிறிவதில் லாநின் அருட்பெரும் பொருளைப்
பெற்றனன் பேசுவ தென்னே.
10
3396 பணத்திலே சிறிதும் ஆசைஒன் றிலைநான்
படைத்தஅப் பணங்களைப் பலகால்
கிணற்றிலே எறிந்தேன் குளத்திலும் எறிந்தேன்
கேணியில் எறிந்தனன் எந்தாய்
குணத்திலே நீதான் கொடுக்கின்ற பொருளை
எறிகலேன் கொடுக்கின்றேன் பிறர்க்க