tiruvarutpA of rAmalinga aTikaL
tirumuRai -V (verses 3029 - 3266)
(in tamil script, unicode format)

திருவருட்பா
இராமலிங்க அடிகள் (வள்ளலார்) அருளியது
ஐந்தாம் திருமுறை (பாடல்கள் 3029-3266)




Etext preparation (inaimathi format) Mr. Sivakumar of Singapore (www.vallalar.org)
Proof-reading: Mr. P.K. Ilango, Erode, Tamilnadu, India
PDF and Web version: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland

This webpage presents the Etext in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).

ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil fontchosen as the default font for the UTF-8 char-set/encoding view.
. In case of difficulties send an email request to kalyan@geocities.com or kumar@vt.edu

© Project Madurai 1999 - 2004
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website

http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

திரு அருட்பிரகாச வள்ளலார் இயற்றி அருளிய திருஅருட்பா
ஐந்தாம் திருமுறை (பாடல்கள் 3029 -3266)

    உள்ளுறை
    1. அன்பு மாலை 31 3029 - 3059
    2. அருட்பிரகாச மாலை 100 3060 - 3159
    3. பிரசாத மாலை 10 3160 - 3169
    4. ஆனந்த மாலை 10 3170 - 3179
    5. பக்தி மாலை 10 3180 - 3189
    6. சௌந்தர மாலை 12 3190 - 3201
    7. அதிசய மாலை 14 3202 - 3215
    8. அபராத மன்னிப்பு மாலை 10 3216 - 3225
    9. ஆளுடைய பிள்ளையார் அருண்மாலை 11 3226 - 3236
    10. ஆளுடைய அரசுகள் அருண்மாலை 10 3237 - 3246
    11. ஆளுடைய நம்பிகள் அருண்மாலை 10 3247 - 3256
    12. ஆளுடைய அடிகள் அருண்மாலை 10 3257 - 3266
அடிக்குறிப்புகளில் காணப்படும் பதிப்பாசிரியர்களின் பெயர்ச் சுருக்க விரிவு

1. தொ.வே --- தொழுவூர் வேலாயுத முதலியார்
2. ஆ.பா --- ஆ.பாலகிருஷ்ண பிள்ளை
3. ச.மு.க --- ச.மு.கந்தசாமி பிள்ளை
4. பி.இரா --- பிருங்கிமாநகரம் இராமசாமி முதலியார்
5. பொ.சு --- பொ.சுந்தரம் பிள்ளை

திருச்சிற்றம்பலம்

ஐந்தாம் திருமுறை

1. அன்பு மாலை

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3029 அற்புதப்பொன் அம்பலத்தே ஆடுகின்ற அரசே
ஆரமுதே அடியேன்றன் அன்பேஎன் அறிவே
கற்புதவு பெருங்கருணைக் கடலேஎன் கண்ணே
கண்ணுதலே ஆனந்தக் களிப்பேமெய்க் கதியே
வெற்புதவு பசுங்கொடியை மருவுபெருந் தருவே
வேதஆ கமமுடியின் விளங்கும்ஒளி விளக்கே
பொற்புறவே இவ்வுலகில் பொருந்துசித்தன் ஆனேன்
பொருத்தமும் நின்திருவருளின் பொருத்தமது தானே.
1
3030 நிறைஅணிந்த சிவகாமி நேயநிறை ஒளியே
நித்தபரி பூரணமாம் சுத்தசிவ வெளியே
கறைஅணிந்த களத்தரசே கண்ணுடைய கரும்பே
கற்கண்டே கனியேஎன் கண்ணேகண் மணியே
பிறைஅணிந்த முடிமலையே பெருங்கருணைக் கடலே
பெரியவரெல் லாம்வணங்கும் பெரியபரம் பொருளே
குறைஅணிந்து திரிகின்றேன் குறைகளெலாந் தவிர்த்தே
குற்றமெலாங் குணமாகக் கொள்வதுநின் குணமே.
2
3031 ஆண்பனைபெண் பனையாக்கி அங்கமதங் கனையாய்
ஆக்கிஅருண் மணத்தில்ஒளி அனைவரையும் ஆக்கும்
மாண்பனைமிக் குவந்தளித்த மாகருணை மலையே
வருத்தமெலாந் தவிர்த்தெனக்கு வாழ்வளித்த வாழ்வே
நாண்பனையுந் தந்தையும்என் நற்குருவும் ஆகி
நாயடியேன் உள்ளகத்து நண்ணியநா யகனே
வீண்பனைபோன் மிகநீண்டு விழற்கிறைப்பேன் எனினும்
விருப்பமெலாம் நின்அருளின் விருப்பம்அன்றி இலையே.
3
3032 சித்தமனே கம்புரிந்து திரிந்துழலுஞ் சிறியேன்
செய்வகைஒன் றறியாது திகைக்கின்றேன் அந்தோ
உத்தமனே உன்னையலால் ஒருதுணைமற் றறியேன்
உன்னாணை உன்னாணை உண்மைஇது கண்டாய்
இத்தமனே யச்சலனம் இனிப்பொறுக்க மாட்டேன்
இரங்கிஅருள் செயல்வேண்டும் இதுதருணம் எந்தாய்
சுத்தமனே யத்தவர்க்கும் எனைப்போலு மவர்க்கும்
துயர்தவிப்பான் மணிமன்றில் துலங்குநடத் தரசே.
4
3033 துப்பாடு திருமேனிச் சோதிமணிச் சுடரே
துரியவெளிக் குள்ளிருந்த சுத்தசிவ வெளியே
அப்பாடு சடைமுடிஎம் ஆனந்த மலையே
அருட்கடலே குருவேஎன் ஆண்டவனே அரசே
இப்பாடு படஎனக்கு முடியாது துரையே
இரங்கிஅருள் செயல்வேண்டும் இதுதருணங் கண்டாய்
தப்பாடு வேன்எனினும் என்னைவிடத் துணியேல்
தனிமன்றுள் நடம்புரியுந் தாண்மலர்எந் தாயே.
5
3034 கண்ணோங்கு நுதற்கரும்பே கரும்பினிறை அமுதே
கற்கண்டே சர்க்கரையே கதலிநறுங் கனியே
விண்ணோங்கு வியன்சுடரே வியன்சுடர்க்குட் சுடரே
விடையவனே சடையவனே வேதமுடிப் பொருளே
பெண்ணோங்கும் ஒருபாகம் பிறங்குபெருந் தகையே
பெருமானை ஒருகரங்கொள் பெரியபெரு மானே
எண்ணோங்கு சிறியவனேன் என்னினும்நின் னடியேன்
என்னைவிடத் துணியேல்நின் இன்னருள்தந் தருளே.
6
3035 திருநெறிசேர் மெய்அடியர் திறன்ஒன்றும் அறியேன்
செறிவறியேன் அறிவறியேன் செய்வகையை அறியேன்
கருநெறிசேர்ந் துழல்கின்ற கடையரினுங் கடையேன்
கற்கின்றேன் சாகாத கல்விநிலை காணேன்
பெருநெறிசேர் மெய்ஞ்ஞான சித்திநிலை பெறுவான்
பிதற்றுகின்றேன் அதற்குரிய பெற்றியிலேன் அந்தோ
வருநெறியில் என்னைவலிந் தாட்கொண்ட மணியே
மன்றுடைய பெருவாழ்வே வழங்குகநின் அருளே.
7
3036 குன்றாத குணக்குன்றே கோவாத மணியே
குருவேஎன் குடிமுழுதாட் கொண்டசிவக் கொழுந்தே
என்றாதை யாகிஎனக் கன்னையுமாய் நின்றே
எழுமையும்என் றனை ஆண்ட என்உயிரின் துணையே
பொன்றாத பொருளேமெய்ப் புண்ணியத்தின் பயனே
பொய்யடியேன் பிழைகளெலாம் பொறுத்தபெருந் தகையே
அன்றால நிழல்அமர்ந்த அருள்இறையே எளியேன்
ஆசையெலாம் நின்னடிமேல் அன்றிஒன்றும் இலையே.
8
3037 பூணாத பூண்களெலாம் பூண்டபரம் பொருளே
பொய்யடியேன் பிழைமுழுதும் பொறுத்தருளி என்றும்
காணாத காட்சியெலாங் காட்டிஎனக் குள்ளே
கருணைநடம் புரிகின்ற கருணையைஎன் புகல்வேன்
மாணாத குணக்கொடியேன் இதைநினைக்குந் தோறும்
மனமுருகி இருகண்ணீர் வடிக்கின்றேன் கண்டாய்
ஏணாதன் என்னினும்யான் அம்மையின்நின் அடியேன்
எனஅறிந்தேன் அறிந்தபின்னர் இதயமலர்ந் தேனே.
9
3038 அந்தோஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
அறிவறியாச் சிறியேனை அறிவறியச் செய்தே
இந்தோங்கு சடைமணிநின் அடிமுடியுங் காட்டி
இதுகாட்டி அதுகாட்டி என்நிலையுங் காட்டிச்
சந்தோட சித்தர்கள்தந் தனிச்சூதுங் காட்டி
சாகாத நிலைகாட்டிச் சகசநிலை காட்டி
வந்தோடு(184) நிகர்மனம்போய்க் கரைந்த இடங் காட்டி
மகிழ்வித்தாய் நின்அருளின் வண்மைஎவர்க் குளதே.
10
184. வந்து - காற்று. ச.மு.க.
3039 அன்பர்உளக் கோயிலிலே அமர்ந்தருளும் பதியே
அம்பலத்தில் ஆடுகின்ற ஆனந்த நிதியே
வன்பர்உளத் தேமறைந்து வழங்கும்ஒளி மணியே
மறைமுடிஆ கமமுடியின் வயங்குநிறை மதியே
என்பருவங் குறியாமல் என்னைவலிந் தாட்கொண்
டின்பநிலை தனைஅளித்த என்னறிவுக் கறிவே
முன்பருவம் பின்பருவங் கண்டருளிச் செய்யும்
முறைமைநின தருள்நெறிக்கு மொழிதல்அறிந் திலனே.
11
3040 பால்காட்டும் ஒளிவண்ணப் படிகமணி மலையே
பத்திக்கு நிலைதனிலே தித்திக்கும் பழமே
சேல்காட்டும் விழிக்கடையால் திருவருளைக் காட்டும்
சிவகாம வல்லிமகிழ் திருநடநா யகனே
மால்காட்டி மறையாதென் மதிக்குமதி யாகி
வழிகாட்டி வழங்குகின்ற வகையதனைக் காட்டிக்
கால்காட்டிக் காலாலே காண்பதுவும் எனக்கே
காட்டியநின் கருணைக்குக் கைம்மாறொன் றிலனே.
12
3041 என்னைஒன்றும் அறியாத இளம்பவருவந் தனிலே
என்உளத்தே அமர்ந்தருளி யான்மயங்குந் தோறும்
அன்னைஎனப் பரிந்தருளி அப்போதைக் கப்போ
தப்பன்எனத் தெளிவித்தே அறிவுறுத்தி நின்றாய்
நின்னைஎனக் கென்என்பேன் என்உயிர் என்பேனோ
நீடியஎன் உயிர்த்துணையாம் நேயமதென் பேனோ
இன்னல்அறுத் தருள்கின்ற என்குருவென் பேனோ
என்என்பேன் என்னுடைய இன்பமதென் பேனே.
13
3042 பாடும்வகை அணுத்துணையும் பரிந்தறியாச் சிறிய
பருவத்தே அணிந்தணிந்து பாடும்வகை புரிந்து
நாடும்வகை உடையோர்கள் நன்குமதித் திடவே
நல்லறிவு சிறிதளித்துப் புல்லறிவு போக்கி
நீடும்வகை சன்மார்க்க சுத்தசிவ நெறியில்
நிறுத்தினைஇச் சிறியேனை நின்அருள்என் என்பேன்
கூடும்வகை உடையரெலாங் குறிப்பெதிர்பார்க் கின்றார்
குற்றமெலாங் குணமாகக் கொண்டகுணக் குன்றே.
14
3043 சற்றும்அறி வில்லாத எனையும்வலிந் தாண்டு
தமியேன்செய் குற்றமெலாஞ் சம்மதமாக் கொண்டு
கற்றுமறிந் துங்கேட்டுந் தெளிந்தபெரி யவருங்
கண்டுமகி ழப்புரிந்து பண்டைவினை அகற்றி
மற்றும்அறி வனவெல்லாம் அறிவித்தென் உளத்தே
மன்னுகின்ற மெய்இன்ப வாழ்க்கைமுதற் பொருளே
பெற்றுமறி வில்லாத பேதைஎன்மேல் உனக்குப்
பெருங்கருணை வந்தவகை எந்தவகை பேசே.
15
3044 சுற்றதுமற் றவ்வழிமா சூததுஎன் றெண்ணாத்
தொண்டரெலாங் கற்கின்றார் பண்டுமின்றுங் காணார்
எற்றதும்பு மணிமன்றில் இன்பநடம் புரியும்
என்னுடைய துரையேநான் நின்னுடைய அருளால்
கற்றதுநின் னிடத்தேபின் கேட்டதுநின் னிடத்தே
கண்டதுநின் னிடத்தேஉட் கொண்டதுநின் னிடத்தே
பெற்றதுநின் னிடத்தேஇன் புற்றதுநின் னிடத்தே
பெரியதவம் புரிந்தேன்என் பெற்றிஅதி சயமே.
16
3045 ஏறியநான் ஒருநிலையில் ஏறஅறி யாதே
இளைக்கின்ற காலத்தென் இளைப்பெல்லாம் ஒழிய
வீறியஓர் பருவசத்தி கைகொடுத்துத் தூக்கி
மேலேற்றச் செய்தவளை மேவுறவுஞ் செய்து
தேறியநீர் போல்எனது சித்தமிகத் தேறித்
தெளிந்திடவுஞ் செய்தனைஇச் செய்கைஎவர் செய்வார்
ஊறியமெய் அன்புடையார் உள்ளம்எனும் பொதுவில்
உவந்துநடம் புரிகின்ற ஒருபெரிய பொருளே.
17
3046 தருநிதியக் குருவியற்றச் சஞ்சலிக்கு மனத்தால்
தளர்ந்தசிறி யேன்தனது தளர்வெல்லாந் தவிர்த்து
இருநிதியத் திருமகளிர் இருவர்எனை வணங்கி
இசைந்திடுவந் தனம்அப்பா என்றுமகிழ்ந் திசைத்துப்
பெருநிதிவாய்த் திடஎனது முன்பாடி ஆடும்
பெற்றிஅளித் தனைஇந்தப் பேதமையேன் தனக்கே
ஒருநிதிநின் அருள்நிதியும் உவந்தளித்தல் வேண்டும்
உயர்பொதுவில் இனபநடம் உடையபரம் பொருளே.
18
3047 அஞ்சாதே என்மகனே அனுக்கிரகம் புரிந்தாம்
ஆடுகநீ வேண்டியவா றாடுகஇவ் வுலகில்
செஞ்சாலி வயலோங்கு தில்லைமன்றில் ஆடுந்
திருநடங்கண் டன்புருவாய்ச் சித்தசுத்த னாகி
எஞ்சாத நெடுங்காலம் இன்பவெள்ளந் திளைத்தே
இனிதுமிக வாழியவென் றெனக்கருளிச் செய்தாய்
துஞ்சாதி யந்தமிலாச் சுத்தநடத் தரசே
துரியநடு வேஇருந்த சுயஞ்சோதி மணியே.
19
3048 நான்கேட்கின் றவையெல்லாம் அளிக்கின்றாய் எனக்கு
நல்லவனே எல்லாமும் வல்லசிவ சித்தா
தான்கேட்கின் றவையின்றி முழுதொருங்கே உணர்ந்தாய்
தத்துவனே மதிஅணிந்த சடைமுடிஎம் இறைவா
தேன்கேட்கும் மொழிமங்கை ஒருபங்கில் உடையாய்
சிவனேஎம் பெருமானே தேவர்பெரு மானே
வான்கேட்கும் புகழ்த்தில்லை மன்றில்நடம் புரிவாய்
மணிமிடற்றுப் பெருங்கருணை வள்ளல்என்கண் மணியே.
20
3049 ஆனந்த வெளியினிடை ஆனந்த வடிவாய்
ஆனந்த நடம்புரியும் ஆனந்த அமுதே
வானந்த முதல்எல்லா அந்தமுங்கண் டறிந்தோர்
மதிக்கின்ற பொருளேவெண் மதிமுடிச்செங் கனியே
ஊனந்தங் கியமாயை உடலினிடத் திருந்தும்
ஊனமிலா திருக்கின்ற உளவருளிச் செய்தாய்
நானந்த உளவுகண்டு நடத்துகின்ற வகையும்
நல்லவனே நீமகிழ்ந்து சொல்லவரு வாயே.
21
3050 ஆரணமும் ஆகமமும் எதுதுணிந்த ததுவே
அம்பலத்தில் ஆடுகின்ற ஆட்டமென எனக்குக்
காரணமுங் காரியமும் புலப்படவே தெரித்தாய்
கண்ணுதலே இங்கிதற்குக் கைம்மாறொன் றறியேன்
பூரணநின் அடித்தொண்டு புரிகின்ற சிறியேன்
போற்றிசிவ போற்றிஎனப் போற்றிமகிழ் கின்றேன்
நாரணநான் முகன்முதலோர் காண்பரும்அந் நடத்தை
நாயடியேன் இதயத்தில் நவிற்றியருள் வாயே.
22
3051 இறைவநின தருளாலே எனைக்கண்டு கொண்டேன்
எனக்குள்உனைக் கண்டேன்பின் இருவரும்ஒன் றாக
உறைவதுகண் டதிசயித்தேன் அதிசயத்தை ஒழிக்கும்
உளவறியேன் அவ்வுளவொன் றுரைத்தருளல் வேண்டும்
மறைவதிலா மணிமன்றுள் நடம்புரியும் வாழ்வே
வாழ்முதலே பரமசுக வாரிஎன்கண் மணியே
குறைவதிலாக் குளிர்மதியே சிவகாமவல்லிக்
கொழுந்துபடர்ந் தோங்குகின்ற குணநிமலக் குன்றே.
23
3052 சத்தியமெய் அறிவின்ப வடிவாகிப் பொதுவில்
தனிநடஞ்செய் தருளுகின்ற சற்குருவே எனக்குப்
புத்தியொடு சித்தியும்நல் லறிவும்அளித் தழியாப்
புனிதநிலை தனிலிருக்கப் புரிந்தபரம் பொருளே
பத்திஅறி யாச்சிறியேன் மயக்கம்இன்னுந் தவிர்த்துப்
பரமசுக மயமாக்கிப் படிற்றுளத்தைப் போக்கித்
தத்துவநீ நான்என்னும் போதமது நீக்கித்
தனித்தசுகா தீதமும்நீ தந்தருள்க மகிழ்ந்தே.
24
3053 ஏதும்அறி யாதிருளில் இருந்தசிறி யேனை
எடுத்துவிடுத் தறிவுசிறி தேய்ந்திடவும் புரிந்து
ஓதுமறை முதற்கலைகள் ஓதாமல் உணர
உணர்விலிருந் துணர்த்திஅருள் உண்மைநிலை காட்டித்
தீதுசெறி சமயநெறி செல்லுதலைத் தவிர்த்துத்
திருஅருண்மெய்ப் பொதுநெறியில் செலுத்தியும் நான்மருளும்
போதுமயங் கேல்மகனே என்றுமயக் கெல்லாம்
போக்கிஎனக் குள்ளிருந்த புனிதபரம் பொருளே.
25
3054 முன்னறியேன் பின்னறியேன் முடிபதொன்று மறியேன்
முன்னியுமுன் னாதும்இங்கே மொழிந்தமொழி முழுதும்
பன்னிலையில் செறிகின்றோர் பலரும்மனம் உவப்பப்
பழுதுபடா வண்ணம்அருள் பரிந்தளித்த பதியே
தன்னிலையில் குறைவுபடாத் தத்துவப்பேர் ஒளியே
தனிமன்றுள் நடம்புரியஞ் சத்தியதற் பரமே
இந்நிலையில் இன்னும்என்றன் மயக்கமெலாந் தவிர்த்தே
எனைஅடிமை கொளல்வேண்டும் இதுசமயங் காணே.
26
3055 ஐயறிவிற் சிறிதும்அறிந் தனுபவிக்கக் தெரியா
தழுதுகளித் தாடுகின்ற அப்பருவத் தெளியேன்
மெய்யறிவிற் சிறந்தவருங் களிக்கஉனைப் பாடி
விரும்பிஅருள் நெறிநடக்க விடுத்தனைநீ யன்றோ
பொய்யறிவிற் புலைமனத்துக் கொடியேன்முன் பிறப்பில்
புரிந்ததவம் யாததனைப் புகன்றருள வேண்டும்
துய்யறிவுக் கறிவாகி மணிமன்றில் நடஞ்செய்
சுத்தபரி பூரணமாஞ் சுகரூபப் பொருளே.
27
3056 அருள்நிறைந்த பெருந்தகையே ஆனந்த அமுதே
அற்புதப்பொன் அம்பலத்தே ஆடுகின்ற அரசே
தெருள்நிறைந்த சிந்தையிலே தித்திக்குந் தேனே
செங்கனியே மதிஅணிந்த செஞ்சடைஎம் பெருமான்
மருள்நிறைந்த மனக்கொடியேன் வஞ்சமெலாங் கண்டு
மகிழ்ந்தினிய வாழ்வளித்த மாகருணைக் கடலே
இருள்நிறைந்த மயக்கம்இன்னுந் தீர்த்தருளல் வேண்டும்
என்னுடைய நாயகனே இதுதருணங் காணே.
28
3057 மன்னியபொன் னம்பலத்தே ஆனந்த நடஞ்செய்
மாமணியே என்னிருகண் வயங்கும்ஒளி மணியே
தன்னியல்பின் நிறைந்தருளுஞ் சத்துவபூ ரணமே
தற்பரமே சிற்பரமே தத்துவப்பே ரொளியே
அன்னியமில் லாதசுத்த அத்துவித நிலையே
ஆதியந்த மேதுமின்றி அமர்ந்தபரம் பொருளே
என்னியல்பின் எனக்கருளி மயக்கம்இன்னுந் தவிர்த்தே
எனைஆண்டு கொளல்வேண்டும் இதுதருணங் காணே.
29
3058 பூதநிலை முதற்பரம நாதநிலை அளவும்
போந்தவற்றின் இயற்கைமுதற் புணர்ப்பெல்லாம் விளங்க
வேதநிலை ஆகமத்தின் நிலைகளெலாம் விளங்க
வினையேன்றன் உளத்திருந்து விளக்கியமெய் விளக்கே
போதநிலை யாய்அதுவுங் கடந்தஇன்ப நிலையாய்ப்
பொதுவினின்மெய் அறிவின்ப நடம்புரியும் பொருளே
ஏதநிலை யாவகைஎன் மயக்கம்இன்னுந் தவிர்த்தே
எனைக்காத்தல் வேண்டுகின்றேன் இதுதருணங் காணே.
30
3059 செவ்வண்ணத் திருமேனி கொண்டொருபாற் பசந்து
திகழ்படிக வண்ணமொடு தித்திக்குங் கனியே
இவ்வண்ணம் எனமறைக்கும் எட்டாமெய்ப் பொருளே
என்னுயிரே என்னுயிர்க்குள் இருந்தருளும் பதியே
அவ்வண்ணப் பெருந்தகையே அம்பலத்தே நடஞ்செய்
ஆரமுதே அடியேனிங் ககமகிழ்ந்து புரிதல்
எவ்வண்ணம் அதுவண்ணம் இசைத்தருளல் வேண்டும்
என்னுடைய நாயகனே இதுதருணங் காணே.
31

திருச்சிற்றம்பலம்

2. அருட்பிரகாச மாலை

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3060 உலகமெலாம் உதிக்கின்ற ஒளிநிலைமெய் யின்பம்
உறுகின்ற வெளிநிலையென் றுபயநிலை யாகி
இலகியநின் சேவடிகள் வருந்தியிட நடந்தே
இரவில்எளி யேன்இருக்கும் இடந்தேடி அடைந்து
கலகமிலாத் தெருக்கதவங் காப்பவிழ்க்கப் புரிந்து
களித்தெனைஅங் கழைத்தெனது கையில்ஒன்று கொடுத்தாய்
அலகில்அருட் கடலாம்உன் பெருமையைஎன் என்பேன்
ஆனந்த வல்லிமகிழ் அருள்நடநா யகனே.
1
3061 ஒளிவண்ணம் வெளிவண்ணம் என்றனந்த வேத
உச்சியெலாம் மெச்சுகின்ற உச்சமல ரடிகள்
அளிவண்ணம் வருந்தியிட நடந்தருளி அடியேன்
அடைந்தவிடத் தடைந்துகத வந்திறக்கப் புரிந்து
களிவண்ணம் எனைஅழைத்தென் கையில்வண்ணம் அளித்த
கருணைவண்ணந் தனைவியந்து கருதும்வண்ணம் அறியேன்
தெளிவண்ண முடையர்அன்பு செய்யும்வண்ணம் பொதுவில்
தெய்வநடம் புரிகின்ற சைவபரம் பொருளே.
2
3062 திருமாலும் உருமாறிச் சிரஞ்சீவி யாகித்
தேடியுங்கண் டறியாத சேவடிகள் வருந்த
வருமாலை மண்ணுறுத்தப் பெயர்த்துநடந் தருளி
வஞ்சகனேன் இருக்குமிடம் வலிந்திரவில் தேடித்
தெருமாலைக் கதவுதனைத் திறப்பித்து நின்று
செவ்வண்ணத் திடைப்பசந்த திருமேனி காட்டிக்
குருமாலைப் பெருவண்ணக் கொழுந்தொன்று கொடுத்தாய்
குருமணிநின் திருவருளைக் குறித்துமகிழ்ந் தனனே.
3
3063 அன்றொருநாள் இரவிடைவந் தணிக்கதவந் திறப்பித்
தருண்மலர்ச்சே வடிவாயிற் படிப்புறத்தும் அகத்தும்
மன்றவைத்துக் கொண்டென்னை வரவழைத்து மகனே
வருந்தாதே இங்கிதனை வாங்கிக்கொள் ளென்ன
ஒன்றுசிறி யேன்மறுப்ப மறித்தும்வலிந் தெனது
ஒருகைதனிற் கொடுத்திங்கே உறைதிஎன்று மறைந்தாய்
இன்றதுதான் அனுபவத்துக் கிசைந்ததுநா யடியேன்
என்னதவம் புரிந்தேனோ இனித்துயரொன் றிலனே.
4
3064 இரவில்அடி வருந்தநடந் தெழிற்கதவந் திறப்பித்
தெனைஅழைத்து மகனேநீ இவ்வுலகிற் சிறிதும்
கரவிடைநெஞ் சயர்ந்திளைத்துக் கலங்காதே இதனைக்
களிப்பொடுவாங் கெனஎனது கைதனிலே கொடுத்து
உரவிடைஇங் குறைகமகிழ்ந் தெனத்திருவாய் மலர்ந்த
உன்னுடைய பெருங்கருணைக் கொப்பிலைஎன் புகல்வேன்
அரவிடையில் அசைந்தாட அம்பலத்தி னடுவே
ஆனந்தத் திருநடஞ்செய் தாட்டுகின்ற அரசே.
5
3065 இயங்காத இரவிடைஅன் றொருநாள்வந் தெளியேன்
இருக்குமிடந் தனைத்தேடிக் கதவுதிறப் பித்துக்
கயங்காத மலரடிகள் கவின்வாயிற் படியின்
கடைப்புறத்தும் அகத்தும்வைத்துக் களித்தெனைஅங் கழைத்து
மயங்காதே இங்கிதனை வாங்கிக்கொண் டுலகில்
மகனேநீ விளையாடி வாழ்கஎன உரைத்தாய்
புயங்காநின் அருளருமை அறியாது திரிந்தேன்
பொய்யடியேன் அறிந்தின்று பூரித்தேன் உளமே.
6
3066 ஒருநாளன் றிரவில்அடி வருந்தநடந் தடியேன்
உற்றஇடந் தனைத்தேடிக் கதவுதிறப் பித்து
மருநாள மலரடிஒன்றுள்ளகத்தே பெயர்த்து
வைத்துமகிழ்ந் தெனைஅழைத்து வாங்கிதனை என்று
தருநாளில் யான்மறுப்ப மறித்தும்வலிந் தெனது
தடங்கைதனிற் கொடுத்திங்கே சார்கஎன உரைத்தாய்
வருநாளில் அதனருமை அறிந்துமகிழ் கின்றேன்
மணிமன்றுள் நடம்புரியும் மாணிக்க மணியே.
7
3067 நெடுமாலும் பன்றிஎன நெடுங்காலம் விரைந்து
நேடியுங்கண் டறியாது நீடியபூம் பதங்கள்
தொடுமாலை யெனவருபூ மகள்முடியிற் சூட்டித்
தொல்வினையேன் இருக்குமிடந் தனைத்தேடித் தொடர்ந்து
கடுமாலை நடுஇரவிற் கதவுதிறப் பித்துக்
கடையேனை அழைத்தெனது கையில்ஒன்று கொடுத்துக்
கொடுமாலை விடுத்துமகிழ் எனத்திருவாய் மலர்ந்தாய்
குணக்குன்றே இந்நாள்நின் கொடையைஅறிந் தனனே.
8
3068 மறைமுடிக்கு மணியாகி வயங்கியசே வடிகள்
மண்மீது படநடந்து வந்தருளி அடியேன்
குறைமுடிக்கும் படிக்கதவந் திறப்பித்து நின்று
கூவிஎனை அழைத்தொன்று கொடுத்தருளிச் செய்தாய்
கறைமுடிக்குங் களத்தரசே கருணைநெடுங் கடலே
கண்ணோங்கும் ஒளியேசிற் கனவெளிக்குள் வெளியே
பிறைமுடிக்குஞ் சடைக்கடவுட் பெருந்தருவே குருவே
பெரியமன்றுள் நடம்புரியும் பெரியபரம் பொருளே.
9
3069 அன்றகத்தே அடிவருந்த நடந்தென்னை அழைத்திங்
கஞ்சாதே மகனேஎன் றளித்தனைஒன் றதனைத்
துன்றகத்துச் சிறியேன் நான் அறியாது வறிதே
சுழன்றதுகண் டிரங்கிமிகத் துணிந்துமகிழ் விப்பான்
இன்றகத்தே புகுந்தருளி எனக்கதனைத் தெரிவித்
தின்புறச்செய் தருளியநின் இரக்கம்எவர்க் குளதோ
மன்றகத்து நடம்புரிந்து வயங்கும்ஒரு குருவே
வல்லவரெல் லாம்வணங்கும் நல்லபரம் பொருளே.
10
3070 அன்பர்மனக் கோயிலிலே அமர்ந்தருளி விளங்கும்
அரும்பொருளாம் உனதுமல ரடிவருந்த நடந்து
வன்பர்களில் தலைநின்ற வஞ்சகனேன் இருந்த
மனைக்கதவு திறப்பித்து மகிழ்ந்தெனைஅங் கழைத்துத்
துன்பமெலாம் நீங்குகஇங் கிதுதனைவாங் குகநீ
தொழும்பன்என்ற என்னுடைய துரையேநின் னருளை
என்பகர்வேன் என்வியப்பேன் எங்ஙனம்நான் மறப்பேன்
என்உயிருக் குயிராகி இலங்கியசற் குருவே.
11
3071 ஞாலநிலை அடிவருந்த நடந்தருளி அடியேன்
நண்ணும்இடந் தனிற்கதவம் நன்றுதிறப் பித்துக்
காலநிலை கருதிமனங் கலங்குகின்ற மகனே
கலங்காதே என்றெனது கையில்ஒன்று கொடுத்துச்
சீலநிலை உறவாழ்க எனத்திருவாய் மலர்ந்த
சிவபெருமான் நின்பெருமைத் திருவருள்என் னென்பேன்
ஆலநிலை மணிகண்டத் தரும்பெருஞ்சீர் ஒளியே
அம்பலத்தில் திருநடஞ்செய் தாட்டுகின்ற அரசே.
12
3072 இருள்நிறைந்த இரவில்அடி வருந்தநடந் தடியேன்
இருக்குமிடந் தனைத்தேடிக் கதவுதிறப் பித்து
மருள்நிறைந்த மனத்தாலே மயங்குகின்ற மகனே
மயங்காதே என்றென்னை வரவழைத்துப் புகன்று
தெருள்நிறைந்த தொன்றெனது செங்கைதனிற் கொடுத்துத்
திகழ்ந்துநின்ற பரம்பொருள்நின் திருவருள்என் னென்பேன்
அருள்நிறைந்த மெய்ப்பொருளே அடிமுடிஒன் றில்லா
ஆனந்த மன்றில்நடம் ஆடுகின்ற அரசே.
13
3073 கன்மயமுங் கனிவிக்குந் திருவடிகள் வருந்தக்
கடைப்புலையேன் இருக்குமிடந் தனைத்தேடி நடந்து
தொன்மயமாம் இரவினிடைக் கதவுதிறப் பித்துத்
துணிந்தழைத்தென் கைதனிலே தூயஒன்றை யளித்து
வன்மயமில் லாமனத்தால் வாழ்கஎன உரைத்த
மாமணிநின் திருவருளின் வண்மையைஎன் என்பேன்
தன்மயமே சின்மயப்பொன் அம்பலத்தே இன்பத்
தனிநடஞ்செய் தருளுகின்ற தத்துவப்பே ரொளியே.
14
3074 பிரணவத்தின் அடிமுடியின் நடுவினும்நின் றோங்கும்
பெருங்கருணைத் திருவடிகள் பெயர்ந்துவருந் திடவே
கரணமுற்று நடந்தடியேன் இருக்குமிடந் தேடிக்
கதவுதிறப் பித்தருளிக் கடையேனை அழைத்துச்
சரணமுற்று வருந்தியஎன் மகனேஇங் கிதனைத்
தாங்குகஎன் றொன்றெனது தடங்கைதனிற் கொடுத்து
மரணமற்று வாழ்கஎனத் திருவார்த்தை அளித்தாய்
மன்றுடையாய் நின்அருளின் வண்மைஎவர்க் குளதே.
15
3075 ஒங்காரத் துள்ளொளியாய் அவ்வொளிக்குள் ஒளியாய்
உபயவடி வாகியநின் அபயபதம் வருந்த
ஈங்கார நடந்திரவில் யானிருக்கும் இடம்போந்
தெழிற்கதவந் திறப்பித்தங் கென்னைவலிந் தழைத்துப்
பாங்காரும் வண்ணம்ஒன்றென் கைதனிலே அளித்துப்
பண்பொடுவாழ்ந் திடுகஎனப் பணித்தபரம் பொருளே
ஆங்கார வண்ணம்அகன் றதைஅறிந்து மகிழ்ந்தே
அனுபவிக்கின் றேன்பொதுவில் ஆடுகின்ற அரசே.
16
3076 அரிபிரமா தியரெல்லாம் அறிந்தணுக ஒண்ணா
அரும்பெருஞ்சீர் அடிமலர்கள் அன்றொருநாள் வருந்தக்
கரிஇரவில் நடந்தருளி யானிருக்கு மிடத்தே
கதவுதிறப் பித்தெனது கையில்ஒன்று கொடுத்து
உரிமையொடு வாழ்கஎன உரைத்ததுவும் அன்றி
உவந்தின்றை இரவினும்வந் துணர்த்தினைஎன் மீது
பிரியமுனக் கிருந்தவண்ணம் என்புகல்வேன் பொதுவில்
பெருநடஞ்செய் அரசேஎன் பிழைபொறுத்த குருவே.
17
3077 காரணன்என் றுரைக்கின்ற நாரணனும் அயனும்
கனவிடத்துங் காண்பரிய கழலடிகள் வருந்த
ஊரணவி நடந்தெளியேன் உறையும்இடந் தேடி
உவந்தெனது கைதனிலே ஒன்றுகொடுத் திங்கே
ஏரணவி உறைகமகிழ்ந் தெனஉரைத்தாய் நின்சீர்
யாதறிந்து புகன்றேன்முன் யாதுதவம் புரிந்தேன்
பாரணவி அன்பரெலாம் பரிந்துபுகழ்ந் தேத்தப்
பணிஅணிந்து மணிமன்றுள் அணிநடஞ்செய் பதியே.
18
3078 துரியவெளி தனிற்பரம நாதஅணை நடுவே
சுயஞ்சுடரில் துலங்குகின்ற துணையடிகள் வருந்தப்
பிரியமொடு நடந்தெளியேன் இருக்குமிடந் தேடிப்
பெருங்கதவந் திறப்பித்துப் பேயன்எனை அழைத்து
உரியபொருள் ஒன்றெனது கையில்அளித் திங்கே
உறைகமகிழ்ந் தெனஉரைத்த உத்தமநின் னருளைப்
பெரியபொரு ளெவற்றினுக்கும் பெரியபொரு ளென்றே
பின்னர்அறிந் தேன்இதற்கு முன்னர்அறி யேனே.
19
3079 நீளாதி மூலமென நின்றவனும் நெடுநாள்
நேடியுங்கண் டறியாத நின்னடிகள் வருந்த
ஆளாநான் இருக்குமிடம் அதுதேடி நடந்தே
அணிக்கதவந் திறப்பித்துள் ளன்பொடெனை அழைத்து
வாளாநீ மயங்காதே மகனேஇங் கிதனை
வாங்கிக்கொள் என்றெனது மலர்க்கைதனிற் கொடுத்தாய்
கேளாய்என் உயிர்த்துணையாய்க் கிளர்மன்றில் வேத
கீதநடம் புரிகின்ற நாதமுடிப் பொருளே.
20
3080 சத்தஉரு வாமறைப்பொற் சிலம்பணிந்தம் பலத்தே
தனிநடஞ்செய் தருளும்அடித் தாமரைகள் வருந்த
சித்தஉரு வாகிஇங்கே எனைத்தேடி நடந்து
தெருக்கதவந் திறப்பித்தென் செங்கையில்ஒன் றளித்து
மத்தஉரு வாமனத்தால் மயக்கமுறேல் மகனே
மகிழ்ந்துறைக எனத்திருவாய் மலர்ந்தகுண மலையே
சுத்தஉரு வாய்ச்சுத்த அருவாகி அழியாச்
சுத்தஅரு உருவான சுத்தபரம் பொருளே.
21
3081 பலகோடி மறைகளெலாம் உலகோடி மயங்கப்
பரநாத முடிநடிக்கும் பாதமலர் வருந்தச்
சிலகோடி நடந்தெளியேன் இருக்குமிடத் தணைந்து
தெருக்கதவந் திறப்பித்தென் செங்கையில்ஒன் றளித்தே
அலகோடி வருந்தேல்இங் கமர்கஎனத் திருவாய்
அலர்ந்தஅருட் குருவேபொன் னம்பலத்தெம் அரசே
விலகோடி எனத்துயர்கள் ஒன்றொடொன்று புகன்று
விரைந்தோடச் செய்தனைஇவ் விளைவறியேன் வியப்பே.
22
3082 செய்வகைஒன் றறியாது திகைப்பினொடே இருந்தேன்
திடுக்கெனஇங் கெழுந்திருப்பத் தெருக்கதவந் திறப்பித்
துய்வகைஒன் றெனதுகரத் துவந்தளித்து மகனே
உய்கமகிழ்ந் தின்றுமுதல் ஒன்றும்அஞ்சேல் என்று
மெய்வகையில் புகன்றபின்னும் அஞ்சியிருந் தேனை
மீட்டும்இன்றை இரவில்உணர் வூட்டிஅச்சந் தவிர்த்தாய்
ஐவகையாய் நின்றுமன்றில் ஆடுகின்ற அரசே
அற்புதத்தாள் மலர்வருத்தம் அடைந்தனஎன் பொருட்டே.
23
3083 உள்ளிரவி மதியாய்நின் றுலகமெலாம் நடத்தும்
உபயவகை யாகியநின் அபயபதம் வருந்த
நள்ளிரவின் மிகநடந்து நான்இருக்கும் இடத்தே
நடைக்கதவந் திறப்பித்து நடைக்கடையில் அழைத்து
எள்ளிரவு நினைந்துமயக் கெய்தியிடேல் மகனே
என்றென்கை தனில்ஒன்றை ஈந்துமகிழ் வித்தாய்
அள்ளிரவு போல்மிடற்றில் அழகுகிளர்ந் தாட
அம்பலத்தில் ஆடுகின்ற செம்பவளக் குன்றே.
24
3084 விளங்கறிவுக் கறிவாகி மெய்த்துரிய நிலத்தே
விளையும்அனு பவமயமாம் மெல்லடிகள் வருந்தத்
துளங்குசிறி யேன்இருக்கும் இடந்தேடி நடந்து
தொடர்க்கதவந் திறப்பித்துத் தொழும்பன்எனை அழைத்துக்
களங்கமிலா ஒன்றெனது கைதனிலே கொடுத்துக்
களித்துறைக எனத்திருவாக் களித்தஅருட் கடலே
குளங்கொள்விழிப் பெருந்தகையே மணிமன்றில் நடஞ்செய்
குருமணியே அன்பர்மனக் கோயிலில்வாழ் குருவே.
25
3085 வேதமுடி மேற்சுடராய் ஆகமத்தின் முடிமேல்
விளங்கும்ஒளி யாகியநின் மெல்லடிகள் வருந்தப்
பூதமுடி மேல்நடந்து நானிருக்கு மிடத்தே
போந்திரவிற் கதவுதனைக் காப்பவிழ்க்கப் புரிந்து
நாதமுடி மேல்விளங்குந் திருமேனி காட்டி
நற்பொருள்என் கைதனிலே நல்கியநின் பெருமை
ஓதமுடி யாதெனில்என் புகல்வேன்அம் பலத்தே
உயிர்க்கின்பந் தரநடனம் உடையபரம் பொருளே.
26
3086 தங்குசரா சரமுழுதும் அளித்தருளி நடத்துந்
தாள்மலர்கள் மிகவருந்தத் தனித்துநடந் தொருநாள்
கங்குலில்யான் இருக்குமனைக் கதவுதிறப் பித்துக்
கையில்ஒன்று கொடுத்தஉன்றன் கருணையைஎன் என்பேன்
இங்குசிறி யேன்பிழைகள் எத்தனையும் பொறுத்த
என்குருவே என்உயிருக் கின்பருளும் பொருளே
திங்களணி சடைப்பவளச் செழுஞ்சோதி மலையே
சிவகாம வல்லிமகிழ் திருநடநா யகனே.
27
3087 மாமாயை அசைந்திடச்சிற் றம்பலத்தே நடித்தும்
வருந்தாத மலரடிகள் வருந்தநடந் தருளி
ஆமாறன் றிரவினிடை அணிக்கதவந் திறப்பித்
தங்கையில்ஒன் றளித்தினிநீ அஞ்சேல்என் றுவந்து
தேமாவின் பழம்பிழிந்து வடித்துநறு நெய்யுந்
தேனும்ஒக்கக் கலந்ததெனத் திருவார்த்தை அளித்தாய்
கோமான்நின் அருட்பெருமை என்உரைப்பேன் பொதுவில்
கூத்தாடி எங்களைஆட் கொண்டபரம் பொருளே.
28
3088 படைப்பவனுங் காப்பவனும் பற்பலநாள் முயன்று
பார்க்கவிரும் பினுங்கிடையாப் பாதமலர் வருந்த
நடைப்புலையேன் பொருட்டாக நடந்திரவிற் கதவம்
நன்குதிறப் பித்தொன்று நல்கியதும் அன்றி
இடைப்படுநா ளினும்வந்தென் இதயமயக் கெல்லாம்
இரிந்திடச்செய் தனைஉன்றன் இன்னருள்என் என்பேன்
தடைப்படுமா றில்லாத பேரின்பப் பெருக்கே
தனிமன்றில் ஆனந்தத் தாண்டவஞ்செய் அரசே.
29
3089 முன்னைமறை முடிமணியாம் அடிமலர்கள் வருந்த
முழுதிரவில் நடந்தெளியேன் முயங்குமிடத் தடைந்து
அன்னையினும் பரிந்தருளி அணிக்கதவந் திறப்பித்
தங்கையில்ஒன் றளித்தெனையும் அன்பினொடு நோக்கி
என்னைஇனி மயங்காதே என்மகனே மகிழ்வோ
டிருத்திஎன உரைத்தாய்நின் இன்னருள்என் என்பேன்
மின்னைநிகர் செஞ்சடைமேன் மதியம்அசைந் தாட
வியன்பொதுவில் திருநடஞ்செய் விமலபரம் பொருளே.
30
3090 மீதானத் தருள்ஒளியாய் விளங்கியநின் அடிகள்
மிகவருந்த நடந்திரவில் வினையேன்றன் பொருட்டாச்
சீதானக் கதவுதனைத் திறப்பித்துச் சிறியேன்
செங்கையில்ஒன் றளித்தினிநீ சிறிதுமஞ்சேல் இங்கு
மாதானத் தவர்சூழ வாழ்கஎன உரைத்தாய்
மாமணிநின் திருவருளின் வண்மைஎவர்க் குளதே
ஓதானத் தவர்தமக்கும் உணர்வரிதாம் பொருளே
ஓங்கியசிற் றம்பலத்தே ஒளிநடஞ்செய் பதியே.
31
3091 வேதாந்த சித்தாந்தம் என்னும்அந்தம் இரண்டும்
விளங்கஅமர்ந் தருளியநின் மெல்லடிகள் வருந்த
நாதாந்த வெளிதனிலே நடந்தருளும் அதுபோல்
நடந்தருளிக் கடைநாயேன் நண்ணும்இடத் தடைந்து
போதாந்த மிசைவிளக்குந் திருமேனி காட்டிப்
புலையேன்கை யிடத்தொன்று பொருந்தவைத்த பொருளே
சூதாந்த மனைத்தினுக்கும் அப்பாற்பட் டிருந்த
துரியவெளிக் கேவிளங்கும் பெரியஅருட் குருவே.
32
3092 ஒருமையிலே இருமைஎன உருக்காட்டிப் பொதுவில்
ஒளிநடஞ்செய் தருளுகின்ற உபயபதம் வருந்த
அருமையிலே நடந்தெளியேன் இருக்குமிடத் தடைந்தே
அணிக்கதவந் திறப்பித்தென் அங்கையில்ஒன் றளித்துப்
பெருமையிலே பிறங்குகநீ எனத்திருவாய் மலர்ந்த
பெருங்கருணைக் கடலேநின் பெற்றியைஎன் என்பேன்
கருமையிலே நெடுங்காலங் கலந்துகலக் குற்ற
கலக்கமெலாந் தவிர்த்தெம்மைக் காத்தருளும் பதியே.
33
3093 விந்துநிலை நாதநிலை இருநிலைக்கும் அரசாய்
விளங்கியநின் சேவடிகள் மிகவருந்த நடந்து
வந்துநிலை பெறச்சிறியேன் இருக்குமிடத் தடைந்து
மணிக்கதவந் திறப்பித்து மகனேஎன் றழைத்து
இந்துநிலை முடிமுதலாந் திருஉருவங் காட்டி
என்கையில்ஒன் றளித்தின்பம் எய்துகஎன் றுரைத்தாய்
முந்துநிலைச் சிறியேன்செய் தவமறியேன் பொதுவில்
முத்தர்மனந் தித்திக்க நிருத்தமிடும் பொருளே.
34
3094 நவநிலைக்கும் அதிகாரம் நடத்துகின்ற அரசாய்
நண்ணியநின் பொன்னடிகள் நடந்துவருந் திடவே
அவநிலைக்குங் கடைப்புலையேன் இருக்கும்இடத் திரவில்
அணைந்தருளிக் கதவுதிறந் தடியேனை அழைத்தே
சிவநிலைக்கும் படிஎனது செங்கையில்ஒன் றளித்துச்
சித்தமகிழ்ந் துறைகஎனத் திருப்பவளந் திறந்தாய்
பவநிலைக்குங் கடைநாயேன் பயின்றதவம் அறியேன்
பரம்பரமா மன்றில்நடம் பயின்றபசு பதியே.
35
3095 புண்ணியர்தம் மனக்கோயில் புகுந்தமர்ந்து விளங்கும்
பொன்மலர்ச்சே வடிவருத்தம் பொருந்தநடந் தெளியேன்
நண்ணியஓர் இடத்தடைந்து கதவுதிறப் பித்து
நற்பொருள்ஒன் றென்கைதனில் நல்கியநின் பெருமை
எண்ணியபோ தெல்லாம்என் மனமுருக்கும் என்றால்
எம்ப஦ருமான் நின்அருளை என்னெனயான் புகல்வேன்
தண்ணியவெண் மதிஅணிந்த செஞ்சடைநின் றாடத்
தனித்தமன்றில் ஆனந்தத் தாண்டவஞ்செய் அரசே.
36
3096 மூவருக்கும் எட்டாது மூத்ததிரு அடிகள்
முழுதிரவில் வருந்தியிட முயங்கிநடந் தருளி
யாவருக்கும் இழிந்தேன்இங் கிருக்கும்இடத் தடைந்தே
எழிற்கதவந் திறப்பித்துள் எனைஅழைத்து மகனே
தேவருக்கும் அரிதிதனை வாங்கெனஎன் கரத்தே
சித்தமகிழ்ந் தளித்தனைநின் திருவருள்என் என்பேன்
பூவருக்கும் பொழிற்றில்லை அம்பலத்தே நடனம்
புரிந்துயிருக் கின்பருளும் பூரணவான் பொருளே.
37
3097 கற்றவர்தம் கருத்தினின்முக் கனிரசம்போல் இனிக்கும்
கழலடிகள் வருந்தியிடக் கடிதுநடந் திரவில்
மற்றவர்கா ணாதெளியேன் இருக்கும்இடத் தடைந்து
மனைக்கதவு திறப்பித்து வலிந்தெனைஅங் கழைத்து
நற்றவர்க்கும் அரிதிதனை வாங்கெனஎன் கரத்தே
நல்கியநின் பெருங்கருணை நட்பினைஎன் என்பேன்
அற்றவர்க்கும் பற்றவர்க்கும் பொதுவினிலே நடஞ்செய்
அருட்குருவே சச்சிதா னந்தபரம் பொருளே.
38
3098 கருணைவடி வாய்அடியார் உள்ளகத்தே அமர்ந்த
கழலடிகள் வருந்தியிடக் கங்குலிலே நடந்து
மருணிறையுஞ் சிறியேன்நான் இருக்குமிடத் தடைந்து
மணிக்கதவந் திறப்பித்து மகிழ்ந்தழைத்து மகனே
பொருணிறையும் இதனைஇங்கே வாங்கெனஎன் கரத்தே
பொருந்தஅளித் தருளியநின் பொன்னருள்என் என்பேன்
அருணிறையும் பெருங்கடலே அம்பலத்தில் பரமா
னந்தவுரு வாகிநடம் ஆடுகின்ற அரசே.
39
3099 அருளுருவாய் ஐந்தொழிலும் நடத்துகின்ற அடிகள்
அசைந்துவருந் திடஇரவில் யானிருக்கும் இடத்தே
தெருளுருவின் நடந்துதெருக் கதவுதிறப் பித்துச்
சிறியேனை அழைத்தெனது செங்கையில்ஒன் றளித்து
மருளுருவின் மற்றவர்போல் மயங்கேல்என் மகனே
மகிழ்ந்துதிரு அருள்வழியே வாழ்கஎன உரைத்தாய்
இருளுருவின் மனக்கொடியேன் யாதுதவம் புரிந்தேன்
எல்லாம்வல் லவனாகி இருந்தபசு பதியே.
40
3100 முழுதும்உணர்ந் தவர்முடிமேல் முடிக்குமணி யாகி
முப்பொருளு மாகியநின் ஒப்பில்அடி மலர்கள்
கழுதும்உணர் வரியநடுக் கங்குலிலே வருந்தக்
கடிதுநடந் தடிநாயேன் கருதுமிடத் தடைந்து
பழுதுபடா வண்ணம்எனைப் பரிந்தழைத்து மகனே
பணிந்திதனை வாங்கெனஎன் பாணியுறக் கொடுத்துத்
தொழுதெனைப்பா டுகஎன்று சொன்னபசு பதிநின்
தூயஅருட் பெருமையைஎன் சொல்லிவியக் கேனே.
41
3101 மானினைத்த அளவெல்லாங் கடந்தப்பால் வயங்கும்
மலரடிகள் வருந்தியிட மகிழ்ந்துநடந் தருளிப்
பானினைத்த சிறியேன்நான் இருக்குமிடத் தடைந்து
பணைக்கதவந் திறப்பித்துப் பரிந்தழைத்து மகனே
நீநினைத்த வண்ணமெலாங் கைகூடும் இதுஓர்
நின்மலம்என் றென்கைதனில் நேர்ந்தளித்தாய் நினக்கு
நானினைத்த நன்றிஒன்றும் இலையேநின் அருளை
நாயடியேன் என்புகல்வேன் நடராஜ மணியே.
42
3102 சூரியசந் திரரெல்லாந் தோன்றாமை விளங்கும்
சுயஞ்சோதி யாகும்அடித் துணைவருந்த நடந்து
கூரியமெய் அறிவென்ப தொருசிறிதுங் குறியாக்
கொடியேன்நான் இருக்குமிடங் குறித்திரவில் நடந்து
காரியம்உண் டெனக்கூவிக் கதவுதிறப் பித்துக்
கையில் ஒன்றை அளித்தனைஉன் கருணையைஎன் என்பேன்
ஆரியர்தம் அளவுகடந் தப்பாலுங் கடந்த
ஆனந்த மன்றில்நடம் ஆடுகின்ற அரசே.
43
3103 தற்போதந் தோன்றாத தலந்தனிலே தோன்றும்
தாள்மலர்கள் வருந்தியிடத் தனித்துநடந் தருளி
எற்போதங் ககன்றிரவில் யானிருக்கு மிடம்போந்
தெழிற்கதவந் திறப்பித்திவ் வெளியேனை அழைத்துப்
பொற்போத வண்ணம்ஒன்றென் கைதனிலே அளித்துப்
புலையொழிந்த நிலைதனிலே பொருந்துகஎன் றுரைத்தாய்
சிற்போத மயமான திருமணிமன் றிடத்தே
சிவமயமாம் அனுபோகத் திருநடஞ்செய் அரசே.
44
3104 கற்பனைகள் எல்லாம்போய்க் கரைந்ததலந் தனிலே
கரையாது நிறைந்ததிருக் கழலடிகள் வருந்த
வெற்பனையும் இன்றிஒரு தனியாக நடந்து
விரைந்திரவிற் கதவுதனைக் காப்பவிழ்க்கப் புரிந்து
அற்பனைஓர் பொருளாக அழைத்தருளி அடியேன்
அங்கையில்ஒன் றளித்தனைநின் அருளினைஎன் புகல்வேன்
நற்பனவர் துதிக்கமணி மன்றகத்தே இன்ப
நடம்புரியும் பெருங்கருணை நாயகமா மணியே.
45
3105 ஒன்றாகி இரண்டாகி ஒன்றிரண்டின் நடுவே
உற்றஅனு பவமயமாய் ஒளிர்அடிகள் வருந்த
அன்றார நடந்திரவில் யானுறையும் இடத்தே
அடைந்துகத வந்திறப்பித் தன்பொடெனை அழைத்து
நன்றார எனதுகரத் தொன்றருளி இங்கே
நண்ணிநீ எண்ணியவா நடத்துகஎன் றுரைத்தாய்
இன்றார வந்ததனை உணர்த்தினைநின் அருளை
என்புகல்வேன் மணிமன்றில் இலங்கியசற் குருவே.
46
3106 எங்கும்விளங் குவதாகி இன்பமய மாகி
என்னுணர்வுக் குணர்வுதரும் இணையடிகள் வருந்த
பொங்குமிர விடைநடந்து நானுறையும் இடத்தே
போந்துமணிக் கதவுதனைக் காப்பவிழ்க்கப் புரிந்து
தங்குமடி யேனைஅழைத் தங்கையில்ஒன் றளித்தே
தயவினொடு வாழ்கஎனத் தனித்திருவாய் மலர்ந்தாய்
இங்குநின தருட்பெருமை என்னுரைப்பேன் பொதுவில்
இன்பநடம் புரிகின்ற என்னுடைநா யகனே.
47
3107 சித்தெவையும் வியத்தியுறுஞ் சுத்தசிவ சித்தாய்ச்
சித்தமதில் தித்திக்குந் திருவடிகள் வருந்த
மத்தஇர விடைநடந்து வந்தருளி அடியேன்
வாழுமனைத் தெருக்கதவு திறப்பித்தங் கடைந்து
அத்தகவின் எனைஅழைத்தென் அங்கையில்ஒன் றளித்தாய்
அன்னையினும் அன்புடையாய் நின்னருள்என் என்பேன்
முத்தர்குழுக் காணமன்றில் இன்பநடம் புரியும்
முக்கணுடை ஆனந்தச் செக்கர்மணி மலையே.
48
3108 சகலமொடு கேவலமுந் தாக்காத இடத்தே
தற்பரமாய் விளங்குகின்ற தாள்மலர்கள் வருந்தப்
பகலொழிய நடுவிரவில் நடந்தருளி அடியேன்
பரியுமிடத் தடைந்துமணிக் கதவுதிறப் பித்துப்
புகலுறுக வருகஎன அழைத்தெனது கரத்தே
பொருந்தஒன்று கொடுத்தனைநின் பொன்னருள்என் என்பேன்
உகல்ஒழியப் பெருந்தவர்கள் உற்றுமகிழ்ந் தேத்த
உயர்பொதுவில் இன்பநடம் உடையபரம் பொருளே.
49
3109 உள்ளுருகுந் தருணத்தே ஒளிகாட்டி விளங்கும்
உயர்மலர்ச்சே வடிவருந்த உவந்துநடந் தருளிக்
கள்ளமனத் தேனிருக்கும் இடந்தேடி அடைந்து
கதவுதிறப் பித்தருளிக் களித்தெனைஅங் கழைத்து
நள்ளுலகில் உனக்கிதுநாம் நல்கினம்நீ மகிழ்ந்து
நாளும்உயிர்க் கிதம்புரிந்து நடத்திஎன உரைத்தாய்
தெள்ளும்அமு தாய்அன்பர் சித்தம்எலாம் இனிக்கும்
செழுங்கனியே மணிமன்றில் திருநடநா யகனே.
50
3110 தன்னுருவங் காட்டாத மலஇரவு விடியுந்
தருணத்தே உதயஞ்செய் தாள்மலர்கள் வருந்தப்
பொன்னுருவத் திருமேனி கொண்டுநடந் தடியேன்
பொருந்துமிடத் தடைந்துகத வந்திறக்கப் புரிந்து
தன்னுருவம் போன்றதொன்றங் கெனை அழைத்தென் கரத்தே
தந்தருளி மகிழ்ந்திங்கே தங்குகஎன் றுரைத்தாய்
என்னுருவம் எனக்குணர்த்தி அருளியநின் பெருமை
என்னுரைப்பேன் மணிமன்றில் இன்பநடத் தரசே.
51
3111 அண்டவகை பிண்டவகை அனைத்தும்உதித் தொடுங்கும்
அணிமலர்ச்சே வடிவருத்தம் அடையநடந் தருளிக்
கண்டவருங் காணாத நடுஇரவு தனில்யான்
கருதுமிடத் தடைந்துகத வந்திறக்கப் புரிந்து
தொண்டனென எனையும்அழைத் தென்கையில்ஒன் றளித்தாய்
துரையேநின் அருட்பெருமைத் தொண்மையைஎன் என்பேன்
உண்டவர்கள் உணுந்தோறும் உவட்டாத அமுதே
உயர்பொதுவில் இன்பநடம் உடையபரம் பொருளே.
52
3112 அறிவுடையார் உள்ளகப்போ தலருகின்ற தருணத்
தருள்மணத்தே னாகிஉற்ற அடிஇணைகள் வருந்தப்
பிறிவுடையேன் இருக்குமிடந் தேடிநடந் தடைந்து
பெருங்கதவந் திறப்பித்துப் பேயன்எனை அழைத்துச்
செறிவுடையாய் இதுவாங்கென் றுதவவும்நான் மறுப்பத்
திரும்பவும்என் கைதனிலே சேரஅளித் தனையே
பொறிவறியேன் அளவினில்உன் கருணையைஎன் என்பேன்
பொற்பொதுவில் நடம்புரியும் பூரணவான் பொருளே.
53
3113 விடையமொன்றுங் காணாத வெளிநடுவே ஒளியாய்
விளங்குகின்ற சேவடிகள் மிகவருந்த நடந்து
கடையனையுங் குறிக்கொண்டு கருதுமிடத் தடைந்து
கதவுதிறப் பித்தெனது கையில்ஒன்று கொடுக்க
இடையின்அது நான்மறுப்ப மறுக்கேல்என் மகனே
என்றுபின்னுங் கொடுத்தாய்நின் இன்னருள்என் என்பேன்
உடையபரம் பொருளேஎன் உயிர்த்துணையே பொதுவில்
உய்யும்வகை அருள்நடனஞ் செய்யும்ஒளி மணியே.
54
3114 நான்தனிக்குந் தரணத்தே தோன்றுகின்ற துணையாய்
நான்தனியா இடத்தெனக்குத் தோன்றாத துணையாய்
ஏன்றருளுந் திருவடிகள் வருந்தநடந் தருளி
யானுறையும் இடத்தடைந்து கதவுதிறப் பித்து
ஆன்றஎனை அழைத்தெனது கையில்ஒன்று கொடுத்தாய்க்
கறிவிலியேன் செய்யும்வகை அறியேன்நின் கருணை
ஈன்றவட்கும் இல்லைஎன நன்கறிந்தேன் பொதுவில்
இன்பநடம் புரிகின்ற என்னுயிர்நா யகனே.
55
3115 அருள்விளங்கும் உள்ளகத்தே அதுஅதுவாய் விளங்கும்
அணிமலர்ச்சே வடிவருத்தம் அடையநடந் தருளிப்
பொருள்விளங்கா நடுஇரவில் நானுறையும் இடத்தே
போந்துதெருக் காப்பவிழ்க்கப் புரிந்தெனைஅங் கழைத்துத்
தெருள்விளங்கும் ஒருபொருள்என் செங்கைதனில் அளித்தாய்
சிவபெருமான் பெருங்கருணைத் திறத்தினைஎன் என்பேன்
மருள்விளங்கி உணர்ச்சியுறத் திருமணிமன் றிடத்தே
மன்னுயிர்க் கின்பருள வயங்குநடத் தரசே.
56
3116 பருவமுறு தருணத்தே சர்க்கரையும் தேனும்
பாலுநெய்யும் அளிந்தநறும் பழரசமும் போல
மருவும்உளம் உயிர்உணர்வோ டெல்லாந்தித் திக்க
வயங்கும்அடி யிணைகள்மிக வருந்தநடந் தருளித்
தெருவடைந்து நானிருக்கு மனைக்காப்புத் திறக்கச்
செய்தருளிப் பொருள்ஒன்றென் செங்கைதனில் அளித்தாய்
திருமணிமன் றிடைநடிக்கும் பெருமான்நின் கருணைத்
திறத்தினைஇச் சிறியேன்நான் செப்புதல்எங் ஙனமே.
57
3117 என்அறிவை உண்டருளி என்னுடனே கூடி
என்இன்பம் எனக்கருளி என்னையுந்தா னாக்கித்
தன்அறிவாய் விளங்குகின்ற பொன்னடிகள் வருந்தத்
தனிநடந்து தெருக்கதவந் தாள்திறப்பித் தருளி
முன்னறிவில் எனைஅழைத்தென் கையில்ஒன்று கொடுத்த
முன்னவநின் இன்னருளை என்எனயான் மொழிவேன்
மன்அறிவுக் கறிவாம்பொன் னம்பலத்தே இன்ப
வடிவாகி நடிக்கின்ற மாகருணை மலையே.
58
3118 பரயோக அனுபவத்தே அகம்புறந்தோன் றாத
பரஞ்சோதி யாகும்இணைப் பாதமலர் வருந்த
வரயோகர் வியப்பஅடி யேன்இருக்கும் இடத்தே
வந்துதெருக் கதவுதனைக் காப்பவிழ்க்கப் புரிந்து
திரயோகர்க் கரிதிதனை வாங்குகஎன் றெனது
செங்கைதனில் அளித்தாய்நின் திருவருள்என் என்பேன்
உரயோகர் உளம்போல விளங்குமணி மன்றில்
உயிர்க்கின்பந் தரநடனம் உடையபரம் பொருளே.
59
3119 சொன்னிறைந்த பொருளும்அதன் இலக்கியமும் ஆகித்
துரியநடு விருந்தஅடித் துணைவருந்த நடந்து
கொன்னிறைந்த இரவினிடை எழுந்தருளிக் கதவம்
கொழுங்காப்பை அவிழ்வித்துக் கொடியேனை அழைத்து
என்னிறைந்த ஒருபொருள்என் கையில்அளித் தருளி
என்மகனே வாழ்கஎன எழில்திருவாய் மலர்ந்தாய்
தன்னிறைந்த நின்கருணைத் தன்மையைஎன் புகல்வேன்
தனிமன்றில் ஆனந்தத் தாண்டவஞ்செய் அரசே.
60
3120 முத்திஒன்று வியத்திஒன்று காண்மின்என்றா கமத்தின்
முடிகள்முடித் துரைக்கின்ற அடிகள்மிக வருந்தப்
பத்திஒன்றும் இல்லாத கடைப்புலையேன் பொருட்டாப்
படிற்றுளத்தேன் இருக்கும்இடந் தனைத்தேடி நடந்து
சித்திஒன்று திருமேனி காட்டிமனைக் கதவம்
திறப்பித்தங் கெனைஅழைத்தென் செங்கையிலே மகிழ்ந்து
சத்திஒன்று கொடுத்தாய்நின் தண்ணருள்என் என்பேன்
தனிமன்றுள் ஆனந்தத் தாண்டவஞ்செய் அரசே.
61
3121 எனக்குநன்மை தீமையென்ப திரண்டுமொத்த இடத்தே
இரண்டும்ஒத்துத் தோன்றுகின்ற எழிற்பதங்கள் வருந்தத்
தனக்குநல்ல வண்ணம்ஒன்று தாங்கிநடந் தருளித்
தனித்திரவில் கடைப்புலையேன் தங்குமிடத் தடைந்து
கனக்குமனைத் தெருக்கதவங் காப்பவிழ்க்கப் புரிந்து
களிப்பொடெனை அழைத்தெனது கையில்ஒன்று கொடுத்து
உனக்கினிய வண்ணம்இதென் றுரைத்தருளிச் சென்றாய்
உடையவநின் அருட்பெருமை உரைக்கமுடி யாதே.
62
3122 இம்மையினோ டம்மையினும் எய்துகின்ற இன்பம்
எனைத்தொன்றும் வேண்டாத இயற்கைவருந் தருணம்
எம்மையினும் நிறைசொருப சுத்தசுகா ரம்பம்
இயற்சொருப சுத்தசுக அனுபவம்என் றிரண்டாய்ச்
செம்மையிலே விளங்குகின்ற திருவடிகள் வருந்தச்
சிறியேன்பால் அடைந்தெனது செங்கையில்ஒன் றளித்தாய்
உம்மையிலே யான்செய்தவம் யாதெனவும் அறியேன்
உயர்பொதுவில் இன்பநடம் உடையபரம் பொருளே.
63
3123 அன்பளிப்ப தொன்றுபின்னர் இன்பளிப்ப தொன்றென்
றறிஞரெலாம் மதிக்கின்ற அடிமலர்கள் வருந்த
என்பளித்த உடல்கள்தொறும் உயிர்க்குயிராய் இருக்கும்
எம்பெருமான் நடந்தருளிக் கதவுதிறப் பித்துத்
துன்பளிக்கும் நெஞ்சகத்தென் றனைக்கூவி அழைத்துத்
தூயஇள நகைமுகத்தே துளும்பஎனை நோக்கி
முன்பளித்த தென்றனது கையில்ஒன்றை அளித்தாய்
முன்னவநின் அருட்பெருமை முன்னஅறி யேனே.
64
3124 மோகஇருட் கடல்கடத்தும் புணைஒன்று நிறைந்த
மோனசுகம் அளிப்பிக்கும் துணைஒன்றென் றுரைக்கும்
யோகமலர்த் திருவடிகள் வருந்தநடந் தருளி
உணர்விலியேன் பொருட்டாக இருட்டிரவில் நடந்து
போகமனைப் பெருங்கதவந் திறப்பித்துட் புகுந்து
புலையேனை அழைத்தொன்று பொருந்தஎன்கை கொடுத்தாய்
நாகமணிப் பணிமிளிர அம்பலத்தே நடஞ்செய்
நாயகநின் பெருங்கருணை நவிற்றமுடி யாதே.
65
3125 காணுகின்ற கண்களுக்குக் காட்டுகின்ற ஒளியாய்க்
காட்டுகின்ற ஒளிதனக்குக் காட்டுவிக்கும் ஒளியாய்
பூணுகின்ற திருவடிகள் வருந்தநடந் தடியேன்
பொருந்துமிடத் தடைந்துகத வந்திறக்கப் புரிந்து
கோணுகின்ற மனத்தாலே நாணுவதேன் மகனே
குறைவறவாழ் கெனமகிழ்ந்து கொடுத்தனைஒன் றெனக்கு
மாணுகின்ற நின்னருளின் பெருமையைஎன் என்பேன்
மணிமன்றில் ஆனந்த மாநடஞ்செய் அரசே.
66
3126 ஆறாறு தத்துவத்தின் சொரூபமுதல் அனைத்தும்
அறிவிக்கும் ஒன்றவற்றின் அப்பாலே இருந்த
வீறாய தற்சொருப முதலனைத்தும் அறிவில்
விளக்குவிக்கும் ஒன்றென்று விளைவறிந்தோர் விளம்பும்
பேறாய திருவடிகள் வருந்தநடந் திரவில்
பேயடியேன் இருக்குமிடத் தடைந்தென்னை அழைத்துச்
சோறாய பொருள்ஒன்றென் கரத்தளித்தாய் பொதுவில்
சோதிநின தருட்பெருமை ஓதிமுடி யாதே.
67
3127 கருவிகளை நம்முடனே கலந்துளத்தே இயக்கிக்
காட்டுவதொன் றக்கருவி கரணங்கள் அனைத்தும்
ஒருவிஅப்பாற் படுத்திநமை ஒருதனியாக் குவதொன்
றுபயம்எனப் பெரியர்சொலும் அபயபதம் வருந்தத்
துருவிஅடி யேன்இருக்கும் இடத்திரவில் அடைந்து
துணிந்தெனது கையில்ஒன்று சோதியுறக் கொடுத்து
வெருவியிடேல் இன்றுமுதல் மிகமகிழ்க என்றாய்
வித்தகநின் திருவருளை வியக்கமுடி யாதே.
68
3128 ஆதியிலே கலப்பொழிய ஆன்மசுத்தி அளித்தாங்
கதுஅதுஆக் குவதொன்றாம் அதுஅதுவாய் ஆக்கும்
சோதியிலே தானாகிச் சூழ்வதொன்றாம் என்று
சூழ்ச்சிஅறிந் தோர்புகலும் துணையடிகள் வருந்த
வீதியிலே நடந்தடியேன் இருக்கும்இடந் தேடி
விரும்பிஅடைந் தெனைக்கூவி விளைவொன்று கொடுத்தாய்
பாதியிலே ஒன்றான பசுபதிநின் கருணைப்
பண்பைஅறிந் தேன்ஒழியா நண்பைஅடைந் தேனே.
69
3129 இருட்டாய மலச்சிறையில் இருக்கும்நமை எல்லாம்
எடுப்பதொன்றாம் இன்பநிலை கொடுப்பதொன்றாம் எனவே
பொருட்டாயர் போற்றுகின்ற பொன்னடிகள் வருந்தப்
பொறையிரவில் யானிருக்கும் இடந்தேடிப் புகுந்து
மருட்டாயத் திருந்தேனைக் கூவிவர வழைத்து
வண்ணம்ஒன்றென் கைதனிலே மகிழ்ந்தளித்தாய் நின்றன்
அருட்டாயப் பெருமைதனை என்னுரைப்பேன் பொதுவில்
ஆனந்தத் திருநடஞ்செய் தருளுகின்ற அரசே.
70
3130 உன்மனியின் உள்ளகத்தே ஒளிருவதொன் றாகி
உற்றஅதன் வெளிப்புறத்தே ஓங்குவதொன் றாகிச்
சின்மயமாய் விளங்குகின்ற திருவடிகள் வருந்தச்
சிறுநாயேன் பொருட்டாகத் தெருவில்நடந் தருளிப்
பொன்மயமாந் திருமேனி விளங்கஎன்பால் அடைந்து
பொருள்ஒன்றென் கைதனிலே பொருந்தஅளித் தனையே
நின்மலனே நின்னருளை என்புகல்வேன் பொதுவில்
நிறைந்தஇன்ப வடிவாகி நிருத்தம்இடும் பதியே.
71
3131 ஐவர்களுக் கைந்தொழிலும் அளித்திடுவ தொன்றாம்
அத்தொழிற்கா ரணம்புரிந்து களித்திடுவ தொன்றாம்
தெய்வநெறி என்றறிஞர் புகழ்ந்துபுகழ்ந் தேத்துந்
திருவடிகள் மிகவருந்தத் தெருவினிடை நடந்து
கைவரயான் இருக்கும்மணைக் கதவுதிறப் பித்துக்
களித்தெனைஅங் கழைத்தெனது கையில்ஒன்று கொடுத்தாய்
சைவமணி மன்றிடத்தே தனிநடனம் புரியும்
தற்பரநின் அருட்பெருமை சாற்றமுடி யாதே.
72
3132 அருளுதிக்குந் தருணத்தே அமுதவடி வாகி
ஆனந்த மயமாகி அமர்ந்ததிரு வடிகள்
இருளுதிக்கும் இரவினிடை வருந்தநடந் தருளி
யானிருக்கும் மனைக்கதவந் திறப்பித்தங் கடைந்து
மருளுதிக்கும் மனத்தேனை வரவழைத்து நோக்கி
மகிழ்ந்தெனது கரத்தொன்று வழங்கியசற் குருவே
தெருளுதிக்கும் மணிமன்றில் திருநடஞ்செய் அரசே
சிவபெருமான் நின்கருணைத் திறத்தைவியக் கேனே.
73
3133 நான்கண்ட போதுசுயஞ் சோதிமய மாகி
நான்பிடித்த போதுமதி நளினவண்ண மாகித்
தேன்கொண்ட பாலெனநான் சிந்திக்குந் தோறுந்
தித்திப்ப தாகிஎன்றன் சென்னிமிசை மகிழ்ந்து
தான்கொண்டு வைத்தஅந்நாள் சில்லென்றென் உடம்பும்
தகஉயிருங் குளிர்வித்த தாண்மலர்கள் வருந்த
வான்கொண்டு நடந்திங்கு வந்தெனக்கும் அளித்தாய்
மன்றில்நடத் தரசேநின் மாகருணை வியப்பே.
74
3134 யோகாந்த மிசைஇருப்ப தொன்றுகலாந் தத்தே
உவந்திருப்ப தொன்றெனமெய் யுணர்வுடையோர் உணர்வால்
ஏகாந்தத் திருந்துணரும் இணையடிகள் வருந்த
என்பொருட்டாய் யானிருக்கும் இடந்தேடி நடந்து
வாகாந்தச் சணிக்கதவந் திறப்பித்தங் கென்னை
வரவழைத்தென் கைதனிலே மகிழ்ந்தொன்று கொடுத்தாய்
மோகாந்த காரம்அறுத் தவர்ஏத்தப் பொதுவில்
முயங்கிநடம் புரிகின்ற முக்கனுடை அரசே.
75
3135 மகமதிக்கு மறையும்மறை யான்மதிக்கும் அயனும்
மகிழ்ந்தயனான் மதிக்கும்நெடு மாலும்நெடு மாலான்
மிகமதிக்கும் உருத்திரனும் உருத்திரனால் மதிக்கும்
மேலவனும் அவன்மதிக்க விளங்குசதா சிவனும்
தகமதிக்குந் தோறும்அவர் அவர்உளத்தின் மேலும்
தலைமேலும் மறைந்துறையுந் தாள்மலர்கள் வருந்த
அகமதிக்க நடந்தென்பால் அடைந்தொன்று கொடுத்தாய்
அம்பலத்தில் ஆடுகின்றாய் அருட்பெருமை வியப்பே.
76
3136 இருவினைஒப் பாகிமல பரிபாகம் பொருந்தல்
எத்தருணம் அத்தருணத் தியல்ஞான ஒளியாம்
உருவினையுற் றுள்ளகத்தும் பிரணவமே வடிவாய்
உற்றுவெளிப் புறத்தும்எழுந் துணர்த்திஉரைத் தருளும்
திருவடிகள் மிகவருந்த நடந்தெளியேன் பொருட்டாத்
தெருக்கவந் திறப்பித்துச் சிறியேனை அழைத்துக்
குருவடிவங் காட்டிஒன்று கொடுத்தாய் என்கரத்தே
குணக்குன்றே நின்னருட்கென் குற்றமெலாங் குணமே.
77
3137 தம்மடியார் வருந்திலது சகியாதக் கணத்தே
சார்ந்துவருத் தங்களெலாந் தயவினொடு தவிர்த்தே
எம்மடியார் என்றுகொளும் இணையடிகள் வருந்த
இரவினிடை நடந்தெளியேன் இருக்கும்இடத் தடைந்து
கம்மடியா(185)க் கதவுபெருங் காப்பவிழப் புரிந்து
கடையேனை அழைத்தெனது கையில்ஒன்று கொடுத்து
நம்மடியான் என்றெனையுந் திருவுளத்தே அடைத்தாய்
நடம்புரியும் நாயகநின் நற்கருணை வியப்பே.
78
    185. கம்மடியர் - தொ.வே. - அடிகளார் எழுத்து
    இவ் விரு வகையாகக் கொள்ளக் கிடக்கிறது.
    பொருத்தமான பொருள் தருவதைக் கொள்க. ஆ.பா.
3138 உம்பருக்குங் கிடைப்பரிதாம் மணிமன்றில் பூத
உருவடிவங் கடந்தாடுந் திருவடிக ளிடத்தே
செம்பருக்கைக் கல்லுறுத்தத் தெருவில்நடந் திரவில்
தெருக்கதவந் திறப்பித்துச் சிறியேனை அழைத்து
வம்பருக்குப் பெறலரிதாம் ஒருபொருள்என் கரத்தே
மகிழ்ந்தளித்துத் துயர்தீர்ந்து வாழ்கஎன உரைத்தாய்
இம்பருக்கோ அம்பருக்கும் இதுவியப்பாம் எங்கள்
இறைவநின தருட்பெருமை இசைப்பதெவன் அணிந்தே.
79
3139 உருவம்ஒரு நான்காகி அருவமும்அவ் வளவாய்
உருஅருஒன் றாகிஇவை ஒன்பானுங் கடந்து
துருவமுடி யாப்பரம துரியநடு விருந்த
சொருபஅனு பவமயமாந் துணையடிகள் வருந்தத்
தெருவமிசை நடந்துசிறு செம்பரற்கல் உறுத்தச்
சிறியேன்பால் அடைந்தெனது செங்கையில்ஒன் றளித்தாய்
மருவஇனி யாய்மன்றில் நடம்புரிவாய் கருணை
மாகடலே நின்பெருமை வழுத்தமுடி யாதே.
80
3140 பக்குவத்தால் உயர்வாழைப் பழங்கனிந்தாற் போலும்
பரங்கருணை யாற்கனிந்த பத்தர்சித்தந் தனிலே
பொக்கமில்அப் பழந்தனிலே தெள்ளமுதங் கலந்தாற்
போற்கலந்து தித்திக்கும் பொன்னடிகள் வருந்த
மிக்கஇருள் இரவினிடை நடந்தெளியேன் இருக்கும்
வியன்மனையில் அடைந்துகத வந்திறக்கப் புரிந்து
ஒக்கஎனை அழைத்தொன்று கொடுத்திங்கே இருஎன்
றுரைத்தனைஎம் பெருமான்நின் உயர்கருணை வியப்பே.
81
3141 உளவறிந்தோர் தமக்கெல்லாம் உபநிடதப் பொருளாய்
உளவறியார்க் கிகபரமும் உறுவிக்கும் பொருளாய்
அளவறிந்த அறிவாலே அறிந்திடநின் றாடும்
அடிமலர்கள் வருந்தியிட நடந்திரவில் அடைந்து
களவறிந்தேன் தனைக்கூவிக் கதவுதிறப் பித்துக்
கையில்ஒன்று கொடுத்தாய்நின் கருணையைஎன் என்பேன்
விளவெறிந்தோன் அயன்முதலோர் பணிந்தேத்தப் பொதுவில்
விளங்குநடம் புரிகின்ற துளங்கொளிமா மணியே.
82
3142 எவ்வுலகும் எவ்வுயிரும் எச்செயலும் தோன்றி
இயங்கும்இட மாகிஎல்லாம் முயங்கும்இட மாகித்
தெவ்வுலகும் நண்புலகுஞ் சமனாகக் கண்ட
சித்தர்கள்தம் சித்தத்தே தித்திக்கும் பதங்கள்
இவ்வுலகில் வருந்தநடந் தென்பொருட்டால் இரவில்
எழிற்கதவந் திறப்பித்தங் கென்கையில்ஒன் றளித்தாய்
அவ்வுலக முதல்உலகம் அனைத்துமகிழ்ந் தேத்த
அம்பலத்தே நடம்புரியும் செம்பவளக் குன்றே.
83
3143 மானினொடு மோகினியும் மாமாயை யுடனே
வைந்துவமும் ஒன்றினொன்று வதிந்தசைய அசைத்தே
ஊனினொடும் உயிருணர்வுங் கலந்துகலப் புறுமா
றுறுவித்துப் பின்கரும ஒப்புவருந் தருணம்
தேனினொடு கலந்தஅமு தெனருசிக்க இருந்த
திருவடிகள் வருந்தநடந் தடியேன்பால் அடைந்து
வானினொடு விளங்குபொருள் ஒன்றெனக்கும் அளித்தாய்
மன்றில்நடத் தரசேநின் மாகருணை வியப்பே.
84
3144 பசுபாச பந்தம்அறும் பாங்குதனைக் காட்டிப்
பரமாகி உள்ளிருந்து பற்றறவும் புரிந்தே
அசமான மானசிவா னந்தஅனு பவமும்
அடைவித்தவ் வனுபவந்தாம் ஆகியசே வடிகள்
வசுமீது வருந்தியிட நடந்தடியேன் இருக்கும்
மனையைஅடைந் தணிக்கதவந் திறப்பித்து நின்று
விசுவாச முறஎனைஅங் கழைத்தொன்று கொடுத்தா