கச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம்

Kachi Anandarudresar pathikam

ஆசிரியர்: சிவஞானயோகிகள்


Acknowledgements:
Our Sincere thanks go to Digital Library of India for providing online a scanned image version of this literary work.
This etext has been prepared via Distributing Proof-reading implementation of PM.
We thank the following volunteers for their help in the preparation of the etext: V. Devarajan, Sakthikumaran, J.Mani, S. Karthikeyan
M. K. Saravanan, Nalini Karthikeyan, R. Navaneethakrishnan,
Ganesan, V.S. Kannan, and Nadesan Kugathasan
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2009
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

சிவஞான யோகிகள் அருளிய
பிரபந்தத் திரட்டு - பாகம் 5



கணபதி துணை
திருச்சிற்றம்பலம்.

5.2 கச்சிஆனந்தருத்திரேசர் பதிகம்.

ஐந்தையாறினையடக்கியருந்தவம்புரியாரேனும்
வந்தையாவெனவெல்லோரும்வணங்கிடவாழலாமால்
முந்தையாறிரண்டுதன்மமுதல்விசெய்மூதூர்வாழும்
எந்தையானந்தருத்திரேசனையிறைஞ்சினோர்க்கே.
(1)
குடங்களிற்பணைத்தணாந்தகொங்கைமால்களிறுமல்குற்
படங்களுங்கொடுமின்னார்செய்பருவரல்பாற்றலாமால்
மடங்களைந்தறிவான்மிக்கமாதவர்மனம்போற்காஞ்சி
இடங்கொளானந்தருத்திரேசனையிறைஞ்சினோர்க்கே.
(2)
வருந்தலாதெண்ணெண்கல்விவாய்க்குமெண்செல்வப்பேறு
பொருந்தவாயுகங்கணூறும்புகழுடன்பொலியலாமால்
திருந்தவால்வளையுமுத்துஞ்செய்தொறுஞ்செறிதென்காஞ்சி
இருந்தவானந்தருத்திரேசனையிறைஞ்சினோர்க்கே.
(3)
பொறைதவமறிவொழுக்கம்புத்திரமித்திராதி
குறைவறுசெல்வம்யாவுங்குலவவீற்றிருக்கலாமால்
மறையொலிமுரசந்துஞ்சாவளநகர்க்காஞ்சிவாழும்
இறைவனந்தருத்திரேசனையிறைஞ்சினோர்க்கே.
(4)
ஆசைவேரகழ்ந்துவெண்ணீறஞ்செழுத்தக்கமாலை
பூசியுச்சரித்துப்பூண்டபுனிதரோடிணங்கலாமால்
யோசனைகமழுய்யானமுடுத்திடுங்காஞ்சியூர்வாழ்
ஈசனானந்தருத்திரேசனையிறைஞ்சினோர்க்கே.
(5)
பானந்தங்கையிலேந்தும்பைந்துழாய்மார்பன்முன்னாம்
வானந்தங்கமரர்யாரும்வணங்கவாழ்ந்திருக்கலாமால்
கானந்தண்பொழிலிலாறுகால்செயுங்கச்சிமூதூர்
ஆனந்தருத்திரேசனடித்துணையிறைஞ்சினோர்க்கே.
(6)
கங்கணான்குள்ளான்முன்னுங்கருமமுங்காரானூர்தி
செங்கையார்பாசந்தன்னாற்சிமிழ்த்தலுந்தீரலாமால்
அங்களாலுயர்ந்தகாஞ்சியகநகரமர்ந்துவாழும்
எங்களானந்தருத்திரேசனையிறைஞ்சினோர்க்கே.
(7)
விழிகளான்மாதர்நாளும்விளைந்திடும்வேட்கையாய
குழிகளாடுற்றுவீழுங்கொடுந்துயர்குமைக்கலாமால்
வழிகளார்சோலைசூழ்ந்தமாமதிற்கச்சிவாழும்
எழில்கொளானந்தருத்திரேசனையிறைஞ்சினோர்க்கே.
(8)
இருக்கெலாமளவிட்டின்னுமினைத்தெனவறியவெட்டாத்
திருக்குலாவியபேரின்பச்செழுங்கடறிளைக்கலாமால்
மருக்கலாரங்கண்மொய்த்தவாவிசூழ்காஞ்சிவாழ்வுற்
றிருக்குமானந்தருத்திரேசனையிறைஞ்சினோர்க்கே.
(9)
மாந்தளிரியலார்செம்பொன்மண்ணெனுமார்வவாரி
நீந்திமேலானமுத்திநீள்கரையேறலாமால்
காந்துபொன்மாடஞ்சூழ்ந்தகச்சியம்பதிவாழ்கங்கை
ஏந்துமானந்தருத்திரேசனையிறைஞ்சினோர்க்கே.
(10)
ஆனந்தமலைபோலோங்குமம்பலத்துமையாணங்கை
ஆனந்தமகிழ்ச்சிபூப்பவானந்தவமிழ்தமூறி
ஆனந்தநிருத்தஞ்செய்யுமங்கணன்கச்சிமூதூர்
ஆனந்தருத்திரேசனடியிணைக்கன்புசெய்வோம்.
(11)

திருச்சிற்றம்பலம்.
மெய்கண்டதேவர் திருவடிவாழ்க.
சிவஞானயோகிகள் திருவடிவாழ்க.

This file was last updated on 1 April 2009.

Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page