தலமர சிறப்புகள்

குருந்த மரம்குருந்து Atlantia missionis, Oliv.; Rutaceae. நிருத்தனே நிமலா நீற்றனே நெற்றிக் கண்ணனே விண்ணுளோர் பிரானே ஒருத்தனே யுன்னை யோலமிட் டலறி உலகெலாந் தேடியுங் காணேன் திருத்தமாம் பொய்கைத் திருப்பெருந் துறையிற் செழுமலர்க் குருந்தமே வியசீர் அருத்தனே யடியேன் ஆதரித் தழைத்தால் அதெந்துவே யென்றரு ளாயே. - மாணிக்கவாசகர்.

திருப்பெருந்துறை எனும் ஆவுடையார் கோயிலின் தலமரம் குருந்த மரமாகும். கொத்தான வெண்ணிற மலர்களையும் உருண்டை வடிவக் காய்களையும் உடைய முள்ளுள்ள எலுமிச்சை இன மரம். காட்டு எலுமிச்சை என்றும் காட்டு நாரங்கம் என்றும் குறிப்பிடப்பெறும். இதில் சிறுகுருந்து, பெருங்குருந்து எனும் வகைகள் தமிழகக் காடுகளில் காணப்படுகின்றன. இதன் இலை, பழம் முதலியன மருத்துவப் பயனுடையன.

உடல் வெப்பு அகற்றுதல், பசியைத் தூண்டி வயிற்று வாயுவை அகற்றுதல் ஆகிய மருத்துவக் குணங்களைக் கொண்டது.

திருமுறைகளில் குருந்து பற்றிய குறிப்புகள் :-

ஈர்க்கும் புனல்சூடி இளவெண்டிங்கள் முதிரவே
பார்க்கு மரவம்பூண் டாடிவேடம் பயின்றாருங்
கார்க்கொள் கொடிமுல்லை குருந்தமேறிக் கருந்தேன்மொய்த்
தார்க்கும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே.	1.45.5

பெருந்தண்சாரல் வாழ்சிறைவண்டு பெடைபுல்கிக்
குருந்தம்மேறிச் செவ்வழிபாடுங் குற்றாலம்
இருந்துண்தேரும் நின்றுண்சமணும் எடுத்தார்ப்ப
அருந்தண்மேய நன்னகர்போலும் அடியீர்காள்.	1.99.10

அருந்திறல் அவுணர்கள் அரணழியச்
சரந்துரந் தெரிசெய்த சங்கரனூர்
குருந்தொடு கொடிவிடு மாதவிகள்
திருந்திய புறவணி சிரபுரமே.	1.109.5

குருந்தவன் குருகவன் கூர்மையவன்
பெருந்தகை பெண்ணவன் ஆணுமவன்
கருந்தட மலர்க்கண்ணி காதல்செய்யும்
மருந்தவன் வளநகர் மாற்பேறே.		1.114.1

வரந்திகழு மவுணர் மாநகர்மூன் றுடன்மாய்ந் தவியச்
சரந்துரந் தெரிசெய்த தாழ்சடைச் சங்கரன் மேயவிடம்
குருந்தம் மல்லிகை கோங்குமா தவிநல்ல குராமரவந்
திருந்துபைம் பொழிற்கச்சி யேகம்பஞ் சேர விடர்கெடுமே.	1.133.2

விரிந்தனை குவிந்தனை விழுங்குயி ருமிழ்ந்தனை
திரிந்தனை குருந்தொசி பெருந்தகையு நீயும்
பிரிந்தனை புணர்ந்தனை பிணம்புகும யானம்
புரிந்தனை மகிழ்ந்தனை புரம்பய மமர்ந்தோய்.	2.30.3

குத்தங் குடிவே திகுடி புனல்சூழ் 
	குருந்தங் குடிதே வன்குடி மருவும்
அத்தங் குடிதண் டிருவண் குடியும் 
	அலம்புஞ் சலந்தன் சடைவைத் துகந்த
நித்தன் நிமலன் உமையோ டுங்கூட 
	நெடுங்கா லமுறை விடமென்று சொல்லாப்
புத்தர் புறங்கூ றியபுன் சமணர் 
	நெடும்பொய் களைவிட் டுநினைந் துய்ம்மினே.	2.39.10

கருந்த டங்கண்ணின் மாத ராரிசை 
	செய்யக் காரதிர் கின்ற பூம்பொழில்
குருந்த மாதவியின் விரைமல்கு கோட்டாற்றில்
	இருந்த எம்பெரு மானை யுள்கி 
இணையடி தொழு தேத்தும் மாந்தர்கள்
	வருந்துமா றறியார் நெறிசேர்வர் வானூடே.	2.52.01

தெரிந்த அடியார் சிவனே யென்று திசைதோறுங் 
குருந்த மலருங் குரவின் அலருங் கொண்டேந்தி 
இருந்து நின்றும் இரவும் பகலும் ஏத்துஞ்சீர் 
முரிந்து மேகந் தவழுஞ் சோலை முதுகுன்றே.	2.64.04

திருந்த மதிசூடித் தெண்ணீர் சடைக்கரந்து தேவி பாகம் 
பொருந்திப் பொருந்தாத வேடத்தாற் காடுறைதல் புரிந்த செல்வர் 
இருந்த இடம்வினவில் ஏலங்கமழ் சோலையின் வண்டு யாழ்செய் 
குருந்த மணம்நாறுங் குன்றிடஞ்சூழ் தண்சாரற் குறும்ப லாவே.	2.71.01

செம்பொ னார்தரு வேங்கையும் ஞாழலுஞ்
	செருந்திசெண் பகமானைக்
கொம்பும் ஆரமும் மாதவி சுரபுனை
	குருந்தலர் பரந்துந்தி
அம்பொன் நேர்வரு காவிரி வடகரை
	மாந்துறை யுறைகின்ற
எம்பி ரானிமை யோர்தொழு பைங்கழ
	லேத்துதல் செய்வோமே.	2.110.01

கோங்கு செண்பகங் குருந்தொடு பாதிரி
	குரவிடை மலருந்தி
ஓங்கி நீர்வரு காவிரி வடகரை
	மாந்துறை யுறைவானைப்
பாங்கி னாலிடுந் தூபமுந் தீபமும்
	பாட்டவி மலர்சேர்த்தித்
தாங்கு வாரவர் நாமங்கள் நாவினில்
	தலைப்படுந் தவத்தோரே.	2.110.05

குருந்தொடு மாதவி கோங்கு மல்லிகை
பொருந்திய பொழில்திருப் பூவ ணத்துறை
அருந்திறல் அவுணர்தம் அரணம் மூன்றெய்த
பெருந்தகை யடிதொழப் பீடை யில்லையே.	3.20.05

குருந்த மேறிக் கொடிவிடு மாதவி
விரிந்த லர்ந்த விரைகமழ் தேன்கொன்றை
திருந்து மாடங்கள் சூழ்திரு ஆரூரான்
வருந்தும் போதெனை வாடலெ னுங்கொலோ.	3.45.05

நேடும்அய னோடுதிரு மாலும்உண ராவகை நிமிர்ந்துமுடிமேல்
ஏடுலவு திங்கள்மத மத்தமித ழிச்சடையெம் ஈசனிடமாம்
மாடுலவு மல்லிகை குருந்துகொடி மாதவி செருந்திகுரவின்
ஊடுலவு புன்னைவிரி தாதுமலி சேருதவி மாணிகுழியே.	3.77.9

திருந்துமா களிற்றிள மருப்பொடு திரண்மணிச் சந்தமுந்திக்
குருந்துமா குரவமுங் குடசமும் பீலியுஞ் சுமந்துகொண்டு
நிரந்துமா வயல்புகு நீடுகோட் டாறுசூழ் கொச்சைமேவிப்
பொருந்தினார் திருந்தடி போற்றிவாழ் நெஞ்சமே புகலதாமே.	3.89.1

உரிந்துயர் உருவில் உடைதவிர்ந் தாரும் அத்துகில் போர்த்துழல் வாருந்
தெரிந்து புன்மொழிகள் செப்பின கேளாச் செம்மையார் நன்மையால் உறைவாங்
குருந்துயர் கோங்கு கொடிவிடு முல்லை மல்லிகை சண்பகம் வேங்கை
கருந்தடங் கண்ணின் மங்கைமார் கொய்யுங் கழுமல நகரென லாமே.	3.118.10

பரிந்துநன் மனத்தால் வழிபடும் மாணி தன்னுயிர் மேல்வருங் கூற்றைத்
திரிந்திடா வண்ணம் உதைத்தவற் கருளுஞ் செம்மையார் நம்மையா ளுடையார்
விரிந்துயர் மௌவல் மாதவி புன்னை வேங்கைவண் செருந்திசெண் பகத்தின்
குருந்தொடு முல்லை கொடிவிடும் பொழில்சூழ் கோணமா மலையமர்ந் தாரே.	3.123.6

குருந்தம தொசித்த மாலுங் 
	குலமலர் மேவி னானுந்
திருந்துநற் றிருவ டியுந் 
	திருமுடி காண மாட்டார்
அருந்தவ முனிவ ரேத்துந் 
	திருவையா றமர்ந்த தேனைப்
பொருந்திநின் றுன்னு நெஞ்சே 
	பொய்வினை மாயு மன்றே.	4.39.9

தொல்லைவான் சூழ்வினைகள் சூழப் போந்து
	தூற்றியே னாற்றியேன் சுடராய் நின்று
வல்லையே இடர்தீர்த்திங் கடிமை கொண்ட 
	வானவர்க்குந் தானவர்க்கும் பெருமான் றன்னைக்
கொல்லைவாய்க் குருந்தொசித்துக் குழலு மூதுங் 
	கோவலனும் நான்முகனுங் கூடி யெங்கும்
எல்லைகாண் பரியானை எம்மான் றன்னை
	ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே.	6.3.10

அருந்தவ மாமுனி வர்க்கரு 
	ளாகியோர் ஆலதன்கீழ்
இருந்தற மேபுரி தற்கியல் 
	பாகிய தென்னைகொலாங்
குருந்தய லேகுர வம்மர 
	வின்னெயி றேற்றரும்பச்
செருந்திசெம் பொன்மல ருந்திரு 
	நாகேச் சரத்தானே.	7.99.2

குருந்தின் கீழ் அன்றிருந்த கொள்கையும் 
பட்ட மங்கையில் பாங்காய் இருந்து அங்கு 
அட்ட மாசித்தி அருளிய அதுவும் 
வேடுவன் ஆகி வேண்டு உருக் கொண்டு 
காடு அது தன்னில் கரந்த உள்ளமும்	8.கீர்த்.-2.65
< PREV <
கிளுவைமரம்
Table of Content > NEXT >
கொன்றைமரம்