|
Home > Shaiva Siddhanta > Thirumurai
thiruththoNDar
purANam (periya purANam) panniraNDAm tirumuRai
(in tamil script, unicode format)
சேக்கிழார் அருளிய
திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்
பன்னிரண்டாம் திருமுறை
இரண்டாம் காண்டம்
11 பத்தராய்ப் பணிவார் சருக்கம்
This page was originally provided by Project Madurai. The songs have been proof-read by thiruchchirrambalam arakkattalai, Kovilpatti.
திருச்சிற்றம்பலம்
58 பத்தாராய்ப் பணிவார் புராணம்
1. ஈசருக்கே அன்பு ஆனார் யாவரையும் தாம் கண்டால் 4147-1
கூசி மிகக் குது குதுத்துக் கொண்டாடி மனம் மகிழ்வுற்று 4147-2
ஆசையினால் ஆவின்பின் கன்று அணைந்தால் போல் அணைந்து 4147-3
பேசுவன பணிந்த மொழி இனியனவே பேசுவார் 4147-4
2. தாவரிய அன்பினால் சம்பு வினை எவ்விடத்தும் 4148-1
யாவர்களும் அர்ச்சிக்கும் படி கண்டால் இனிது உவந்து 4148-2
பாவனையால் நோக்கினால் பலர் காணப் பயன் பெறுவார் 4148-3
மேவரிய அன்பினால் மேலவர்க்கும் மேல் ஆனார் 4148-4
3. அங்கணனை அடியாரை ஆராத காதலினால் 4149-1
பொங்கிவரும் உவகையுடன் தாம் விரும்பிப் பூசிப்பார் 4149-2
பங்கய மா மலர் மேலான் பாம்பு அணையான் என்று இவர்கள் 4149-3
தங்களுக்கும் சார்வரிய சரண் சாரும் தவம் உடையார் 4149-4
4. யாதானும் இவ் உடம்பால் செய்வினைகள் ஏறுயர்த்தார் 4150-1
பாதார விந்தத்தின் பால் ஆக எனும் பரிவால் 4150-2
காதார் வெண் குழையவர்க்காம் பணி செய்வார் கருக்குழியில் 4150-3
போதார்கள் அவர் புகழ்க்குப் புவனம் எல்லாம் போதாவால் 4150-4
5. சங்கரனைச் சார்ந்த கதை தான் கேட்கும் தன்மையராய் 4151-1
அங்கணனை மிக விரும்பி அயல் அறியா அன்பினால் 4151-2
கங்கை நதி மதி இதழி காதலிக்கும் திருமுடியார் 4151-3
செங்கமல மலர்ப் பாதம் சேர்வதனுக்கு உரியார்கள் 4151-4
6. ஈசனையே பணிந்து உருகி இன்பம் மிகக் களிப்பு எய்தி 4152-1
பேசினவாய் தழுதழுப்பக் கண்ணீரின் பெருந் தாரை 4152-2
மாசிலா நீறு இழித்து அங்கு அருவி தர மயிர் சிலிப்பக் 4152-3
கூசியே உடல் கம்பித்திடுவார் மெய்க் குணம் மிக்கார் 4152-4
7. நின்றாலும் இருந்தாலும் கிடந்தாலும் நடந்தாலும் 4153-1
மென்றாலும் துயின்றாலும் விழித்தாலும் இமைத்தாலும் 4153-2
மன்றாடும் மலர்ப்பாதம் ஒரு காலும் மறவாமை 4153-3
குன்றாத உணர்வு உடையார் தொண்டராம் குணம் மிக்கார் 4153-4
8. சங்கரனுக்காளான தவம் காட்டித் தாம் அதனால் 4154-1
பங்கம் அறப் பயன் துய்யார் படி விளக்கும் பெருமையினார் 4154-2
அங்கணனைத் திருவாரூர் ஆள்வானை அடிவணங்கிப் 4154-3
பொங்கி எழும் சித்தம் உடன் பத்தராய்ப் போற்றுவார் 4154-4
59 பரமனையே பாடுவார் புராணம்
1. புரம் மூன்றும் செற்றானைப் பூணாகம் அணிந்தானை 4155-1
உரனில் வரும் ஒரு பொருளை உலகு அனைத்தும் ஆனானைக் 4155-2
கரணங்கள் காணாமல் கண் ஆர்ந்து நிறைந்தானை 4155-3
பரமனையே பாடுவார் தம் பெருமை பாடுவாம் 4155-4
2. தென் தமிழும் வட கலையும் தேசிகமும் பேசுவன 4156-1
மன்றின் இடை நடம் புரியும் வள்ளலையே பொருள் ஆக 4156-2
ஒன்றிய மெய் உணர் வோடும் உள் உருகிப் பாடுவார் 4156-3
பன்றியுடன் புட்காணாப் பரமனையே பாடுவார் 4156-4
60 சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் புராணம்
1. காரண பங்கயம் ஐந்தின் கடவுளர் தம் பதம் கடந்து 4157-1
பூரண மெய்ப் பரஞ்சோதி பொலிந்து இலங்கு நாதாந்தத்து 4157-2
ஆரணையால் சிவத்து அடைந்த சித்தத்தார் தனி மன்றுள் 4157-3
ஆரண காரணக் கூத்தர் அடித்தொண்டின் வழி அடைந்தார் 4157-4
61 திருவாரூர் பிறந்தார் புராணம்
1. அருவாகி உருவாகி அனைத்துமாய் நின்ற பிரான் 4158-1
மருவாருங் குழல் உமையாள் மணவாளன் மகிழ்ந்து அருளும் 4158-2
திருவாரூர்ப் பிறந்தார்கள் திருத் தொண்டு தெரிந்து உணர 4158-3
ஒரு வாயால் சிறியேனால் உரைக்கலாம் தகைமை அதோ 4158-4
2. திருக் கயிலை வீற்று இருந்த சிவபெருமான் திருக் கணத்தார் 4159-1
பெருக்கிய சீர்த் திருவாரூர்ப் பிறந்தார்கள் ஆதலினால் 4159-2
தருக்கிய ஐம் பொறி அடக்கி மற்றவர்தந் தாள் வணங்கி 4159-3
ஒருக்கிய நெஞ்சு உடையவர்க்கே அணித்து ஆகும் உயர் நெறியே 4159-4
62 முப்போதும் திருமேனி தீண்டுவார் புராணம்
1. எப்போதும் இனிய பிரான் இன் அருளால் அதி கரித்து 4160-1
மெய்ப் போத நெறி வந்த விதி முறைமை வழுவாமே 4160-2
அப்போதைக்கு அப்போதும் ஆர்வம் மிகும் அன்பினராய் 4160-3
முப்போதும் அர்ச்சிப்பார் முதல் சைவராம் முனிவர் 4160-4
2. தெரிந்து உணரின் முப்போதும் செல் காலம் நிகழ் காலம் 4161-1
வருங்காலம் ஆனவற்றின் வழிவழியே திருத்தொண்டின் 4161-2
விரும்பிய அர்ச்சனைகள் சிவ வேதியர்க்கே உரியன அப் 4161-3
பெரும் தகையார் குலப் பெருமை ஆம் புகழும் பெற்றியதோ 4161-4
3. நாரணர்க்கும் நான் முகர்க்கும் அறிய ஒண்ணா நாதனை எம் பெருமானை ஞானம் ஆன 4162-1
ஆரணத்தின் உள்பொருள்கள் அனைத்தும் ஆகும் அண்ணலை எண்ணிய காலம் மூன்றும் அன்பின் 4162-2
காரணத்தால் அர்ச்சிக்கும் மறையோர் தங்கள் கமல மலர்க் கழல் வணங்கிக் கசிந்து சிந்தைப் 4162-3
பூரணத்தால் முழு நீறு பூசி வாழும் புனிதர் செயல் அறிந்தவாறு புகலல் உற்றேன் 4162-4
63 முழுநீறு பூசிய முனிவர் புராணம்
1. ஆதாரமாய் அனைத்தும் ஆகி நின்ற அங்கணன் எம் பெருமான் நீர் அணிந்த வேணிக் 4163-1
காதார் வெண் திருக் குழையான் அருளிச் செய்த கற்பம் அநு கற்பம் உப கற்பம் தான் ஆம் 4163-2
ஆகாது என்று அங்கு உரைத்த அகற்பம் நீக்கி ஆமென்று முன் மொழிந்த மூன்று பேதம் 4163-3
மோகாதி குற்றங்கள் அறுக்கும் நீற்றை மொழிவது நம் இரு வினைகள் கழிவதாக 4163-4
2. அம்பலத்தே உலகுய்ய ஆடும் அண்ணல் உவந்து ஆடும் அஞ்சினையும் அளித்த ஆக்கள் 4164-1
இம்பர் மிசை அநா மயமாய் இருந்த போதில் ஈன்று அணிய கோமய மந்திரத்தினால் ஏற்று 4164-2
உம்பர் தொழ எழும் சிவ மந்திர ஓமத்தால் உற்பவித்த சிவாங்கிதனில் உணர்வுக்கு எட்டா 4164-3
எம்பெருமான் கழல் நினைந்து அங்கிட்ட தூ நீறு இது கற்பம் என்று எடுத்து இங்கு ஏத்தல் ஆகும் 4164-4
3. ஆறணியத்து உலர்ந்த கோமயத்தை கைக்கொண்டு அழகு உற நுண் பொடி ஆக்கி ஆவின் சுத்த 4165-1
நீரணிவித்து தந்திர மந்திரத்தினாலே நிசயம் உறப் பிடித்து ஓம நெருப்பில் இட்டுச் 4165-2
சீரணியும்படி வெந்து கொண்ட செல்வத் திருநீறாம் அநு கற்பம் தில்லை மன்றுள் 4165-3
வாரணியும் முலை உமையாள் காண ஆடும் மாணிக்கக் கூத்தர் மொழி வாய்மை யாலே 4165-4
4. அடவி படும் அங்கியினில் வெந்த நீறும் ஆனிலைகள் அனல் தொடக்க வெந்த நீறும் 4166-1
இட வகைகள் எரி கொளுவ வெந்த நீறும் இட்டி கைகள் சுட்ட எரி பட்ட நீறும் 4166-2
உடன் அன்றி வெவ்வேறே ஆவின் நீரால் உரை திகழும் மந்திரம் கொண்டு உண்டையாக்கி 4166-3
மடம் அதனில் பொலிந்து இருந்த சிவ அங்கி தன்னால் வெந்தது மற்று உபகற்பம் மரபின் ஆகும் 4166-4
5. இந்த வகையால் அமைத்த நீறு கொண்டே இரு திறமும் சுத்தி வரத் தெறித்த பின்னர் 4167-1
அந்தம் இலா அரன் அங்கி ஆறு மெய்ம்மை அறிவித்த குரு நன்மை அல்லாப் பூமி 4167-2
முந்த எதிர் அணியாதே அணியும் போது முழுவதும் மெய்ப் புண்டரம் சந்திரனில் பாதி 4167-3
நந்தி எரி தீபம் நிகழ் வட்டம் ஆக நாதர் அடியார் அணிவர் நன்மையாலே 4167-4
6. சாதியினில் தலை ஆன தரும சீலர் தத்துவத்தின் நெறி உணர்ந்தோர் தங்கள் கொள்கை 4168-1
நீதியினில் பிழையாது நெறியில் நிற்போர் நித்த நியமத்து நிகழ் அங்கி தன்னில் 4168-2
பூதியினைப் புதிய ஆசனத்துக் கொண்டு புலி அதளின் உடையானைப் போற்றி நீற்றை 4168-3
ஆதிவரும் மும்மலமும் அறுத்த வாய்மை அரு முனிவர் முழுவதும் மெய் அணிவர் அன்றே 4168-4
64 அப்பாலும் அடிச்சார்ந்தார் புராணம்
1. மூவேந்தர் தமிழ் வழங்கு நாட்டுக்கு அப்பால் முதல்வனார் அடிச்சார்ந்த முறைமை யோரும் 4169-1
நா வேய்ந்த திருத்தொண்டத் தொகையில் கூறும் நல் தொண்டர் காலத்து முன்னும் பின்னும் 4169-2
பூ வேய்ந்த நெடும் சடை மேல் அடம்பு தும்பை புதிய மதி நதி இதழி பொருந்த வைத்த 4169-3
சேவேந்து வெல் கொடியான் அடிச்சார்ந்தாரும் செப்பிய அப்பாலும் அடிச் சார்ந்தார் தாமே 4169-4
சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி
1. செற்றார் தம் புரம் எரித்த சிலையார் செல்வத் திருமுருகன் பூண்டியினில் செல்லும் போதில் 4170-1
சுற்றாரும் சிலை வேடர் கவர்ந்து கொண்டதொகு நிதியின் பரப்பு எல்லாம் சுமந்து கொண்டு 4170-2
முற்றாத முலை உமையாள் பாகன் பூத முதல் கணமே உடன் செல்ல முடியாப் பேறு 4170-3
பெற்றார் தம் கழல் பரவ அடியேன் முன்னைப் பிறவியினில் செய்த தவம் பெரியவாமே 4170-4
திருச்சிற்றம்பலம்
பத்தராய்ப் பணிவார் சருக்கம் முற்றிற்று.
This webpage was last updated on 13 July 2004
See Also:
1. Stories of the nAyanmAr in English with Pictures
Back to periya purANam Page
Back to thirumuRai Page
Back to Shaiva Sidhdhantha Home Page
|