thiruththoNDar purANam (periya purANam) panniraNDAm tirumuRai

(in tamil script, unicode format)


சேக்கிழார் அருளிய

திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்

பன்னிரண்டாம் திருமுறை

இரண்டாம் காண்டம்

9 கறைக் கண்டன் சருக்கம்

This page was originally provided by Project Madurai. The songs have been proof-read by thiruchchirrambalam arakkattalai, Kovilpatti.


திருச்சிற்றம்பலம் 
 


48 கணம்புல்ல நாயனார் புராணம்
 1. திருக்கிளர் சீர் மாடங்கள் திருந்து பெருங்குடி நெருங்கி 	4055-1
 பெருக்கு வட வெள் ஆற்றுத் தென் கரைப்பால் பிறங்கு பொழில் 	4055-2
 வருக்கை நெடுஞ்சுளை பொழிதேன் மடு நிறைத்து வயல் விளைக்கும் 	4055-3
 இருக்கு வேளூர் என்பது இவ் உலகில் விளங்கும் பதி 	4055-4

 2. அப்பதியில் குடி முதல்வர்க்கு அதிபராய் அளவு இறந்த 	4056-1
 எப்பொருளும் முடிவு அறியா எய்து பெரும் செல்வத்தார் 	4056-2
 ஒப்பில் பெருங்குணத்தினால் உலகில் மேம்பட நிகழ்ந்தார் 	4056-3
 மெய் பொருளாவன ஈசர் கழல் என்னும் விருப்பு உடையார் 	4056-4

 3. தாவாத பெரும் செல்வம் தலை நின்ற பயன் இது என்று 	4057-1
 ஓவாத ஒளிவிளக்குச் சிவன் கோயிலலுள் எரித்து 	4057-2
 நா ஆரப் பரவுவார் நல்குரவு வந்து எய்தத் 	4057-3
 தேவதி தேவர்பிரான் திருத்தில்லை சென்று அடைந்தார் 	4057-4

 4. தில்லை நகர் மணி மன்றுள் ஆடுகின்ற சேவடிகள் 	4058-1
 அல்கிய அன்புடன் இறைஞ்சி அமர்கின்றார் புரம் எரித்த 	4058-2
 வில்லியார் திருப் புலீச் சரத்தின் கண் விளக்கு எரிக்க 	4058-3
 இல்லிடை உள்ளன மாறி எரித்துவரும் அந்நாளில் 	4058-4

 5. ஆய செயல் மாண்டதற்பின் அயல் அவர் பால் இரப்பஞ்சி 	4059-1
 காய முயற்சியில் அரிந்த கணம் புல்லுக் கொடு வந்து 	4059-2
 மேய விலைக்குக் கொடுத்து விலைப் பொருளால் நெய்மாறித் 	4059-3
 தூயதிரு விளக்கு எரித்தார் துளக்கறு மெய்த் தொண்டனார் 	4059-4

 6. இவ்வகையால் திருந்து விளக்கு எரித்து வர அங்கு ஒரு நாள் 	4060-1
 மெய் வருந்தி அரிந்து எடுத்துக் கொடுவந்து விற்கும்புல் 	4060-2
 எவ்விடத்தும் விலை போகாது ஒழியவும் இப்பணி ஒழியார் 	4060-3
 அவ்வரிபுல் வினைமாட்டி அணி விளக்காயிட எரிப்பார் 	4060-4

 7. முன்பு திருவிளக்கு எரிக்கும் முறையாமம் குறையாமல் 	4061-1
 மென் புல்லும் விளக்கு எரிக்கப் போதாமை மெய்யான 	4061-2
 அன்பு புரிவார் அடுத்த விளக்குத் தம் திருமுடியை 	4061-3
 என்புருக மடுத்து எரித்தார் இருவினையின் தொடக்கு எரித்தார் 	4061-4

 8. தங்கள் பிரான் திரு உள்ளம் செய்து தலைத் திருவிளக்குப் 	4062-1
 பொங்கிய அன்புடன் எரித்த பொருவில் திருத்தொண்டருக்கு 	4062-2
 மங்கலமாம் பெரும் கருணை வைத்து அருளச் சிவலோகத்து 	4062-3
 எங்கள் பிரான் கணம் புல்லர் இனிது இறைஞ்சி அமர்ந்திருந்தார் 	4062-4

 9. மூரியார் கலி உலகின் முடி இட்ட திருவிளக்குப் 	4063-1
 பேரியாறு அணிந்தாருக்கு எரித்தார் தம் கழல் பேணி 	4063-2
 வேரியார் மலர்ச் சோலை விளங்கு திருக்கடவூரில் 	4063-3
 காரியார் தாம் செய்த திருத்தொண்டு கட்டுரைப்பாம் 	4063-4


49 காரிநாயனார் புராணம்
 1. மறையாளர் திருக்கடவூர் வந்து உதித்து வண் தமிழின் 	4064-1
 துறை ஆன பயன் தெரிந்து சொல் விளங்கிப் பொருள் மறையக் 	4064-2
 குறையாத தமிழ்க் கோவை தம் பெயரால் குலவும் வகை 	4064-3
 முறையாலே தொகுத்து அமைத்து மூவேந்தர் பால் பயில்வார் 	4064-4

 2. அங்கு அவர் தாம் மகிழும் வகை அடுத்தவுரை நயம் ஆக்கி 	4065-1
 கொங்கலர்தார் மன்னவர் பால் பெற்ற நிதிக் குவை கொண்டு 	4065-2
 வெம் கண் அராவொடு கிடந்து விளங்கும் இளம் பிறைச் சென்னிச் 	4065-3
 சங்கரனார் இனிது அமரும் தானங்கள் பல சமைத்தார் 	4065-4

 3. யாவர்க்கும் மனம் உவக்கும் இன்ப மொழிப் பயன் இயம்பத் 	4066-1
 தேவர்க்கு முதல்தேவர் சீர் அடியார் எல்லார்க்கும் 	4066-2
 மேவுற்ற இருநிதியம் மிக அளித்து விடையவர்தம் 	4066-3
 காவுற்ற திருக்கயிலை மறவாத கருத்தினர் ஆய் 	4066-4

 4. ஏய்ந்த கடல் சூழ் உலகில் எங்கும் தம் இசை நிறுத்தி 	4067-1
 ஆய்ந்த உணர்வு இடை அறா அன்பினராய் அணி கங்கை 	4067-2
 தோய்ந்த நெடும் சடையார்தம் அருள் பெற்ற தொடர்பினால் 	4067-3
 வாய்ந்த மனம் போலும் உடம்பும் வடகயிலை மலை சேர்ந்தார் 	4067-4

 5. வேரியார் மலர்க் கொன்றை வேணியார் அடிபேணும் 	4068-1
 காரியார் கழல் வணங்கி அவர் அளித்த கருணையினால் 	4068-2
 வாரியார் மதயானை வழுதியர் தம் மதி மரபில் 	4068-3
 சீரியார் நெடுமாறர் திருத்தொண்டு செப்புவாம் 	4068-4


50 நின்ற சீர் நெடுமாற நாயனார் புராணம்
 1. தடுமாறும் நெறி அதனைத் தவம் என்று தம் உடலை 	4069-1
 அடுமாறு செய்து ஒழுகும் அமண் வலையில் அகப்பட்டு அடைந்த 	4069-2
 விடுமாறு தமிழ் விரகர் வினை மாறும் கழல் அடைந்த 	4069-3
 நெடுமாறனார் பெருமை உலகு ஏழும் நிகழ்ந்ததால் 	4069-4

 2. அந்நாளில் ஆளுடைய பிள்ளையார் அருளாலே 	4070-1
 தென்னாடு சிவம் பெருகச் செங்கோல் உய்த்து அறம் அளித்து 	4070-2
 சொன்னாம நெறிபோற்றிச் சுரர் நகர்க்கோன் தனைக் கொண்ட 	4070-3
 பொன்னாரம் அணி மார்பில் புரவலனார் பொலி கின்றார் 	4070-4

 3. ஆய அரசு அளிப்பார் பால் அமர் வேண்டி வந்து ஏற்ற 	4071-1
 சேய புலத் தெவ்வர் எதிர் நெல்வேலிச் செருக் களத்துப் 	4071-2
 பாய படைக் கடல் முடுகும் பரிமாவின் பெரு வெள்ளம் 	4071-3
 காயும் மதக் களிற்றின் நிரை பரப்பி அமர் நடக்கின்றார் 	4071-4

 4. எடுத்துடன்ற முனைஞாட்பின் இருபடையில் பொரு படைஞர் 	4072-1
 படுத்த நெடுங் கரித்துணியும் பாய் மாவின் அறு குறையும் 	4072-2
 அடுத்து அமர் செய் வய்வர் கரும் தலையும் மலையும் அலை செந்நீர் 	4072-3
 மடுத்த கடல் மீளவும் தாம் வடிவேல் வாங்கிடப் பெருக 	4072-4

 5. வயப்பரியின் களிப்பு ஒலியும் மறவர் படைக்கல ஒலியும் 	4073-1
 கயப் பொருப்பின் முழக்கு ஒலியும் கலந்து எழு பல்லிய ஒலியும் 	4073-2
 வியக்குமுகக் கடை நாளின் மேக முழக்கு என மீளச் 	4073-3
 சயத்தொடர் வல்லியும் இன்று தாம் விடுக்கும் படி தயங்க 	4073-4

 6. தீயுமிழும் படை வழங்கும் செருக்களத்து முருக்கும் உடல் 	4074-1
 தோயும் நெடும் குறுதி மடுக் குளித்து நிணம் துய்த்து ஆடி 	4074-2
 போய பருவம் பணிகொள் பூதங்களே அன்றிப் 	4074-3
 பேயும் அரும் பணி செய்ய உணவு அளித்தது எனப் பிறங்க 	4074-4

 7. இனைய கடுஞ் சமர் விளைய இகலுழந்த பறந்தலையில் 	4075-1
 பனை நெடுங்கை மதயானைப் பஞ்சவனார் படைக் குடைந்து 	4075-2
 முனை அழிந்த வடபுலத்து முதல் மன்னர் படைசரியப் 	4075-3
 புனையும் நறும் தொடை வாகை பூழியர் வேம்புடன் புனைந்து 	4075-4

 8. வளவர் பிரான் திருமகளார் மங்கையருக்கு அரசியார் 	4076-1
 களப மணி முலை திளைக்கும் தடமார்பில் கவுரியனார் 	4076-2
 இளவள வெண் பிறை அணிந்தார்க்கு ஏற்ற திருத்தொண்டு எல்லாம் 	4076-3
 அளவில் புகழ் பெற விளங்கி அருள் பெருக அரசு அளித்தார் 	4076-4

 9. திரை செய் கடல் உலகின் கண் திருநீற்றின் நெறி விளங்க 	4077-1
 உரைசெய் பெரும்புகழ் விளக்கி ஓங்கு நெடு மாறனார் 	4077-2
 அரசு உரிமை நெடும் காலம் அளித்து இறைவர் அருளாலே 	4077-3
 பரசு பெரும் சிவலோகத்தில் இன் புற்று பணிந்து இருந்தார் 	4077-4

 10. பொன் மதில் சூழ் புகலி காவலர் அடிக்கீழ்ப் புனிதராந் 	4078-1
 தென்மதுரை மாறனார் செம் கமலக் கழல் வணங்கிப் 	4078-2
 பன்மணிகள் திரை ஓதம் பரப்பு நெடும் கடல் படப்பைத் 	4078-3
 தொல் மயிலை வாயிலார் திருத்தொண்டின் நிலைதொழுவாம் 	4078-4


51 வாயிலார் நாயனார் புராணம்
 1. சொல் விளங்கு சீர்த் தொண்டைநல் நாட்டின் இடை 	4079-1
 மல்லல் நீடிய வாய்மை வளம்பதி 	4079-2
 பல்பெரும் குடி நீடு பரம்பரைச் 	4079-3
 செல்வம் மல்கு திருமயிலா புரி 	4079-4

 2. நீடு வேலை தன் பால் நிதி வைத்திடத் 	4080-1
 தேடும் அப்பெரும் சேம வைப்பாம் என 	4080-2
 ஆடு பூங்கொடி மாளிகை அப்பதி 	4080-3
 மாடு தள்ளும் மரக்கலச் செப்பினால் 	4080-4

 3. காலம் சொரிந்த கரிக்கருங்கன்று முத்து 	4081-1
 அலம்பு முந்நீர் படிந்து அணை மேகமும் 	4081-2
 நலம் கொள் மேதி நல் நாகும் தெரிக்க ஒணா 	4081-3
 சிலம்பு தெண்திரைக் கானலின் சேண் எலாம் 	4081-4

 4. தவள மாளிகைச் சாலை மருங்கு இறைத் 	4082-1
 துவள் பதாகை நுழைந்து அணை தூமதி 	4082-2
 பவள வாய் மடவார் முகம் பார்த்து அஞ்சி 	4082-3
 உவளகம் சேர்ந்து ஒதுங்குவது ஒக்குமால் 	4082-4

 5. வீதி எங்கும் விழா அணிக் காளையர் 	4083-1
 தூது இயங்கும் சுரும்பு அணி தோகையர் 	4083-2
 ஓதி எங்கும் ஒழியா அணிநிதி 	4083-3
 பூதி எங்கும் புனை மணிமாடங்கள் 	4083-4

 6. மன்னு சீர் மயிலைத் திரு மாநகர்த் 	4084-1
 தொன்மை நீடிய சூத்திரத் தொல் குல 	4084-2
 நன்மை சான்ற நலம் பெறத் தோன்றினார் 	4084-3
 தன்மை வாயிலார் என்னும் தபோதனர் 	4084-4

 7. வாயிலார் என நீடிய மாக்குடித் 	4085-1
 தூய மா மரபின் முதல் தோன்றியே 	4085-2
 நயனார் திருத்தொண்டின் நயப்புறு 	4085-3
 மேய காதல் விருப்பின் விளங்குவார் 	4085-4

 8. மறவாமையான் அமைத்த மனக்கோயிலுள் இருத்தி 	4086-1
 உறவாதிதனை உணரும் ஒளி விளக்குச் சுடர் ஏற்றி 	4086-2
 இறவாத ஆனந்தம் எனும் திருமஞ்சனம் ஆட்டி 	4086-3
 அறவாணர்க்கு அன்பு என்னும் அமுது அமைத்து அர்ச்சனை செய்வார் 	4086-4

 9. அகம் மலர்ந்த அர்ச்சனையில் அண்ணலார் தமை நாளும் 	4087-1
 நிகழ வரும் அன்பினால் நிறை வழிபாடு ஒழியாமே 	4087-2
 திகழ நெடுநாள் செய்து சிவபெருமான் அடிநிழல் கீழ்ப் 	4087-3
 புகல் அமைத்துத் தொழுது இருந்தார் புண்ணிய மெய்த் தொண்டனார் 	4087-4

 10. நீராருஞ் சடையாரை நீடுமன ஆலயத்துள் 	4088-1
 ஆராத அன்பினால் அருச்சனை செய்து அடியவர்பால் 	4088-2
 பேராத நெறி பெற்ற பெருந் தகையார் தமைப்போற்றிச் 	4088-3
 சீர் ஆரும் திரு நீடூர் முனையடுவார் திறம் உரைப்பாம் 	4088-4


52 முனையடுவார் நாயனார் புராணம்
 1. மாறு கடிந்து மண்காத்த வளவர் பொன்னித் திரு நாட்டு 	4089-1
 நாறு விரைப்பூஞ் சோலைகளின் நனைவாய் திறந்து பொழி செழுந்தேன் 	4089-2
 ஆறு பெருகி வெள்ளம் இடும் அள்ளல் வயலின் மள்ளர் உழும் 	4089-3
 சேறு நறுவாசம் கமழும் செல்வ நீடூர் திருநீடூர் 	4089-4

 2. விளங்கும் வண்மை மிக்குள்ள வேளாண் தலைமைக்குடி முதல்வர் 	4090-1
 களம் கொள் மிடற்றுக் கண் நுதலார் கழலில் செறிந்த காதல் மிகும் 	4090-2
 உளம் கொள் திருத்தொண்டு உரிமையினில் உள்ளார் நள்ளார் முனை எறிந்த 	4090-3
 வளம் கொண்டு இறைவர் அடியார்க்கு மாறாது அளிக்கும் வாய்மையார் 	4090-4

 3. மாற்றார்க்கு அமரில் அழிந்துள்ளோர் வந்து தம்பால் மா நிதியம் 	4091-1
 ஆற்றும் பரிசு பேசினால் அதன் நடுவு நிலை வைத்து 	4091-2
 கூற்றும் ஒதுங்கும் ஆள்வினையால் கூலி ஏற்றுச் சென்று எறிந்து 	4091-3
 போற்றும் வென்றி கொண்டு இசைந்த பொன்னும் கொண்டு மன்னுவார் 	4091-4

 4. இன்ன வகையால் பெற்ற நிதி எல்லாம் ஈசன் அடியார்கள் 	4092-1
 சொன்ன சொன்ன படி நிரம்பக் கொடுத்துத் தூய போனகமும் 	4092-2
 கன்னல் நறு நெய் கறி தயிர் பால் கனியுள்ளுறுத்த கலந்து அளித்து 	4092-3
 மன்னும் அன்பின் நெறி பிறழா வழித் தொண்டு ஆற்றி வைகினார் 	4092-4

 5. மற்றிந் நிலை பல்நெடு நாள் வையம் நிகழச் செய்து வழி 	4093-1
 உற்ற அன்பின் செந்நெறியால் உமையாள் கணவன் திருஅருளால் 	4093-2
 பெற்ற சிவலோகத்து அமர்ந்து பிரியா உரிமை மருவினார் 	4093-3
 முற்ற உழந்த முனை அடுவார் என்னும் நாமம் முன்னுடையார் 	4093-4

 6. யாவர் எனினும் இகல் எறிந்தே ஈசன் அடியார் தமக்கு இன்பம் 	4094-1
 மேவ அளிக்கும் முனை அடுவார் விரைப் பூம் கமலக் கழல் வணங்கி 	4094-2
 தேவர் பெருமான் சைவநெறி விளங்கச் செம்கோல் முறை புரியும் 	4094-3
 காவல் பூண்ட கழற் சிங்கர் தொண்டின் நிலைமை கட்டுரைப்பாம் 	4094-4


சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி
 1. செறிவுண்டு என்று திருத்தொண்டில் சிந்தை செல்லும் பயனுக்கும் 	4095-1
 குறியுண்டு ஒன்றாகிலும் குறை ஒன்று இல்லோம் நிறை கருணையினால் 	4095-2
 வெறியுண் சோலைத் திருமுருகன் பூண்டி வேடர் வழிபறிக்க 	4095-3
 பறியுண்டவர் எம்பழவினை வேர் பறிப்பார் என்னும் பற்றாலே 	4095-4



திருச்சிற்றம்பலம் 


கறைக் கண்டன் சருக்கம் முற்றிற்று.


This webpage was last updated on 13 July 2004

See Also:
1. Stories of the nAyanmAr in English with Pictures

Back to periya purANam Page
Back to thirumuRai Page
Back to Shaiva Sidhdhantha Home Page