|
Home > Shaiva Siddhanta > Thirumurai
thiruththoNDar
purANam (periya purANam) panniraNDAm tirumuRai
(in tamil script, unicode format)
சேக்கிழார் அருளிய
திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்
பன்னிரண்டாம் திருமுறை
இரண்டாம் காண்டம்
8 பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்
This page was originally provided by Project Madurai. The songs have been proof-read by thiruchchirrambalam arakkattalai, Kovilpatti.
திருச்சிற்றம்பலம்
40 பொய்யடிமை யில்லாத புலவர் புராணம்
1. செய்யுள் நிகழ் சொல் தெளிவும் செவ்விய நூல் பல நோக்கும் 3939-1
மெய் உணர்வின் பயன் இதுவே எனத் துணிந்து விளங்கி ஒளிர் 3939-2
மை அணியும் கண்டத்தார் மலர் அடிக்கே ஆளானார் 3939-3
பொய் அடிமை இல்லாத புலவர் எனப் புகழ் மிக்கார் 3939-4
2. பொற்பு அமைந்த அரவாரும் புரிசடையார் தமை அல்லால் 3940-1
சொற்பதங்கள் வாய் திறவாத் தொண்டு நெறித் தலைநின்ற 3940-2
பெற்றியினில் மெய் அடிமை உடையாராம் பெரும் புலவர் 3940-3
மற்றவர் தம் பெருமையார் அறிந்து உரைக்க வல்லார்கள் 3940-4
3. ஆங்கு அவர் தம் அடி இணைகள் தலை மேல் கொண்டு அவனி எலாம் 3941-1
தாங்கிய வெண்குடை வளவர் குலம் செய்த தவம் அனையார் 3941-2
ஓங்கி வளர் திருத்தொண்டின் உண்மை உணர் செயல் புரிந்த 3941-3
பூம் கழலார் புகழ்ச் சோழர் திருத்தொண்டு புகல்கின்றாம் 3941-4
41 புகழ்ச் சோழ நாயனார் புராணம்
1. குலகிரியின் கொடுமுடிமேல் கொடி வேங்கைக் குறி எழுதி 3942-1
நிலவு தரு மதிக்குடைக் கீழ் நெடு நிலம் காத்து இனிது அளிக்கும் 3942-2
மலர் புகழ் வண் தமிழ்ச் சோழர் வளநாட்டு மாமூதூர் 3942-3
உலகில் வளர் அணிக்கெல்லாம் உள்ளும் உறையூராம் உறையூர் 3942-4
2. அளவில் பெரும் புகழ் நகரம் அதனில் அணிமணி விளக்கும் 3943-1
இள வெயிலின் சுடர்படலை இரவு ஒழிய எறிப்பனவாய்க் 3943-2
கிளர் ஒளி சேர் நெடு வானப் பேர் ஆற்றுக் கொடு கெழுவும் 3943-3
வளர் ஒளி மாளிகை நிரைகள் மருங்கு உடைய மறுகு எல்லாம் 3943-4
3. நாக தலத்தும் பிலத்தும் நானிலத்தும் நலம் சிறந்த 3944-1
போகம் அனைத்தினுக்கும் உறுப்பாம் பொருவிறந்த வளத்தினவாய் 3944-2
மாக நிறைந்திட மலிந்த வரம்பில் பல பொருள் பிறங்கும் 3944-3
ஆகரம் ஒத்து அளவில் ஆவண வீதிகள் எல்லாம் 3944-4
4. பார் நனைய மதம் பொழிந்து பனி விசும்பு கொள முழங்கும் 3945-1
போர் முக வெம் கறை அடியும் புடையினம் என்று அடையவரும் 3945-2
சோர் மழையின் விடு மதத்துச் சுடரு நெடுமின் ஓடைக் 3945-3
கார் முகிலும் பல தெரியா களிற்று நிரைகள் எல்லாம் 3945-4
5. படுமணியும் பரிச் செருக்கும் ஒலி கிளரப் பயில் புரவி 3946-1
நெடு நிரை முன் புல்லுண் வாய் நீர்த் தரங்க நுரை நிவப்ப 3946-2
விடு சுடர் மெய் உறை அடுக்கல் முகில் படிய விளங்குதலால் 3946-3
தொடு கடல்கள் அனைய பல துரங்க சாலைகள் எல்லாம் 3946-4
6. துளைக்கை ஐராவதக் களிறும் துரங்க அரசும் திருவும் 3947-1
விளைத்த அமுதும் தருவும் விழுமணியும் கொடுபோத 3947-2
உளைத்த கடல் இவற்று ஒன்று பெற வேண்டி உம்பரூர் 3947-3
வளைத்தது போன்று உளது அங்கண் மதில் சூழ்ந்த மலரக் கிடங்கு 3947-4
7. கார் ஏறும் கோபுரங்கள் கதிர் ஏறும் மலர்ச் சோலை 3948-1
தேர் ஏறும் அணி வீதி திசை ஏறும் வசையில் அணி 3948-2
வார் ஏறும் முலை மடவார் மருங்கு ஏறும் மலர்க்கணை ஒண் 3948-3
பார் ஏறும் புகழ் உறந்தைப் பதியின் வளம் பகர் அரிதால் 3948-4
8. அந் நகரில் பார் அளிக்கும் அடல் அரசர் ஆகின்றார் 3949-1
மன்னும் திருத் தில்லை நகர் மணி வீதி அணி விளங்கும் 3949-2
சென்னி நீடு அனபாயன் திருக்குலத்து வழி முதல்வோர் 3949-3
பொன்னி நதிப் புரவலனார் புகழ் சோழர் எனப் பொலிவார் 3949-4
9. ஒரு குடைக் கீழ் மண்மகளை உரிமையினில் மணம் புணர்ந்து 3950-1
பருவரைத் தோள் வென்றியினால் பார் மன்னர் பணி கேட்ப 3950-2
திருமலர்த்தும் பேருலகும் செங்கோலின் முறை நிற்ப 3950-3
அருமறைச் சைவம் தழைப்ப அரசு அளிக்கும் அந்நாளில் 3950-4
10. பிறை வளரும் செம் சடையார் பேணும் சிவ ஆலயம் எல்லாம் 3951-1
நிறை பெரும் பூசனை விளங்க நீடு திருத்தொண்டர் தமைக் 3951-2
குறை இரந்து வேண்டுவன குறிப்பின் வழி கொடுத்து அருளி 3951-3
முறை புரிந்து திருநீற்று முதல் நெறியே பாலிப் பார் 3951-4
11. அங்கண் இனிது உறையும் நாள் அரசு இறைஞ்ச வீற்று இருந்து 3952-1
கொங்கரொடு குட புலத்துக் கோ மன்னர் திறை கொணரத் 3952-2
தங்கள் குல மரபின் முதல் தனி நகராம் கருவூரில் 3952-3
மங்கல நாள் அரசு உரிமைச் சுற்றம் உடன் வந்து அணைந்தார் 3952-4
12. வந்து மணி மதில் கருவூர் மருங்கு அணைவார் வானவர் சூழ் 3953-1
இந்திரன் வந்து அமரர் புரி எய்துவான் என எய்தி 3953-2
சிந்தை களி கூர்ந்து அரனார் மகிழ் திரு ஆன்நிலைக் கோயில் 3953-3
முந்துற வந்து இறைஞ்சி மொய் ஒளி மாளிகை புகுந்தார் 3953-4
13. மாளிகை முன் அத்தாணி மண்டபத்தின் மணிபுனை பொன் 3954-1
கோளரி ஆசனத்து இருந்து குட புல மன்னவர் கொணர்ந்த 3954-2
ஒளி நெடும் களிற்றின் அணி உலப்பில் பரி துலைக் கனகம் 3954-3
நீளிடைவில் விலகு மணி முதல் நிறையும் திறை கண்டார் 3954-4
14. திறை கொணர்ந்த அரசர்க்குச் செயல் உரிமைத் தொழில் அருளி 3955-1
முறை புரியும் தனித் திகரி முறைநில்லா முரண் அரசர் 3955-2
உறை அரணம் உளவாகில் தெரிந்து உரைப்பீர் என உணர்வு 3955-3
நிறை மதி நீடு அமைச்சர்க்கு மொழிந்து அருளி நிகழும் நாள் 3955-4
15. சென்று சிவகாமியார் கொணர் திருப்பள்ளித் தாமம் 3956-1
அன்று சிதறும் களிற்றை அற எறிந்து பாகரையும் 3956-2
கொன்ற எறி பத்தர் எதிர் எனையும் கொன்று அருளும் என 3956-3
வென்றி வடிவாள் கொடுத்துத் திருத்தொண்டில் மிகச் சிறந்தார் 3956-4
16. விளங்கு திரு மதிக் குடைக்கீழ் வீற்று இருந்து பார் அளிக்கும் 3957-1
துளங்கொளி நீள் முடியார்க்குத் தொன் முறைமை நெறி அமைச்சர் 3957-2
அளந்த திறை முறை கொணரா அரசன் உளன் ஒருவன் என 3957-3
உளம் கொள்ளும் வகை உரைப்ப உறுவியப் பால் முறுவலிப்பார் 3957-4
17. ஆங்கவன் யார் என்று அருள அதிகன் அவன் அணித்தாக 3958-1
ஓங்கு எயில் சூழ் மலை அரணத்துள் உறைவான் என உரைப்ப 3958-2
ஈங்கு நுமக்கு எதிர் நிற்கும் அரண் உளதோ படை எழுந்த 3958-3
பாங்கரணம் துகளாகப் பற்று அறுப்பீர் எனப் பகர்ந்தார் 3958-4
18. அடல் வளவர் ஆணையினால் அமைச்சர்களும் புறம் போந்து 3959-1
கடல் அனைய நெடும் படையைக் கைவகுத்து மேல் செல்வார் 3959-2
படர் வனமும் நெடும் கிரியும் பயில் அரணும் பொடி ஆக 3959-3
மிடல் உடை நால் கருவியுற வெஞ்சமரம் மிக விளைத்தார் 3959-4
19. வளவனார் பெரும் சேனை வஞ்சி மலர் மிலைந்து ஏற 3960-1
அளவில் அரண் அக்குறும்பில் அதிகர் கோன் அடல் படையும் 3960-2
உளம் நிறை வெம் சினம் திருகி உயர் காஞ்சி மிலைந்து ஏறக் 3960-3
கிளர் கடல்கள் இரண்டு என்ன இருபடையும் கிடைத்தனவால் 3960-4
20. கயமொடு கயம் எதிர் குத்தின 3961-1
அயமுடன் அயமுனை முட்டின 3961-2
வயவரும் வயவரும் உற்றனர் 3961-3
வியனமர் வியல் இடம் மிக்கதே 3961-4
21. மலையொடு மலைகள் மலைந்தென 3962-1
அலை மத அருவி கொழிப்பொடு 3962-2
சிலையினர் விசையின் மிசைத் தெரு 3962-3
கொலை மதக் கரிகொலை உற்றவே 3962-4
22. சூறை மாருதம் ஒத்து எதிர் 3963-1
ஏறு பாய் பரி வித்தகர் 3963-2
வேறு வேறு தலைப் பெய்து 3963-3
சீறி ஆவி செகுத்தனர் 3963-4
23. மண்டு போரின் மலைப்பவர் 3964-1
துண்டம் ஆயிட உற்று எதிர் 3964-2
கண்டர் ஆவி கழித்தனர் 3964-3
உண்ட சோறு கழிக்கவே 3964-4
24. வீடினார் உடலில் பொழி 3965-1
நீடுவார் குருதிப் புனல் 3965-2
ஓடும் யாறென ஒத்தது 3965-3
கோடு போல்வ பிணக் குவை 3965-4
25. வானிலாவு கருங்கொடி 3966-1
மேனிலாவு பருந்து இனம் 3966-2
ஏனை நீள் கழுகின் குலம் 3966-3
ஆன ஊணொடு எழுந்தவே 3966-4
26. வரிவில் கதை சக்கரம் உற்கரம் வாள் 3967-1
சுரிகைப் படை சத்திகழுக் கடைவேல் 3967-2
எரி முத்தலை கப்பணமெற் பயில் கோல் 3967-3
முரி உற்றன உற்றன மொய்க் களமே 3967-4
27. வடிவேல் அதிகன் படைமாள வரைக் 3968-1
கடிசூழ் அரணக் கணவாய் நிரவிக் 3968-2
கொடி மா மதில் நீடு குறும் பொறையூர் 3968-3
முடி நேரியனார் படை முற்றியதே 3968-4
28. முற்றும் பொரு சேனை முனை தலையில் 3969-1
கற்றிண் புரிசைப் பதி கட்டு அழியப் 3969-2
பற்றும் துறை நொச்சிப் பரிந்து உடையச் 3969-3
சுற்றும் படை வீரர் துணித்தனரே 3969-4
29. மாறுற்ற விறல் படை வாள் அதிகன் 3970-1
நூறுற்ற பெரும்படை நூழில் படப் 3970-2
பாறுற்ற எயில் பதி பற்று அற விட்டு 3970-3
ஏறுற்றனன் ஓடி இருஞ் சுரமே 3970-4
30. அதிகன் படை போர் பொருதற்றதலை 3971-1
பொதியின் குவை எண்ணில போயின பின் 3971-2
நிதியின் குவை மங்கையர் நீள் பரிமா 3971-3
எதிரும் கரி பற்றினர் எண்ணிலரே 3971-4
31. அரண் முற்றி எறிந்த அமைச்சர்கள் தாம் 3972-1
இரணத் தொழில் விட்டு எயில் சூழ் கருவூர் 3972-2
முரண் உற்ற சிறப்பொடு முன்னினர் நீள் 3972-3
தரணித் தலைவன் கழல் சார் உறவே 3972-4
32. மன்னும் கருவூர் நகர் வாயிலின் வாய் 3973-1
முன் வந்த கரும் தலை மொய் குவைதான் 3973-2
மின்னும் சுடர் மா முடிவேல் வளவன் 3973-3
தன் முன்பு கொணர்ந்தனர் தானை உளோர் 3973-4
33. மண்ணுக்கு உயிராம் எனும் மன்னவனார் 3974-1
எண்ணில் பெருகும் தலை யாவையினும் 3974-2
நண்ணிக் கொணரும் தலை ஒன்றின் அடுக் 3974-3
கண்ணுற்றது ஓர் புன் சடை கண்டனரே 3974-4
34. கண்ட பொழுதே நடுங்கி மனம் கலங்கிக் கைதொழுது 3975-1
கொண்ட பெரும் பயத்துடனும் குறித்து எதிர் சென்று அது கொணர்ந்த 3975-2
திண்டிறலோன் கைத் தலையில் சடை தெரியப் பார்த்து அருளி 3975-3
புண்டரிகத் திருக்கண்ணீர் பொழிந்து இழியப் புரவலனார் 3975-4
35. முரசுடைத்திண் படை கொடு போய் முதல் அமைச்சர் முனை முருக்கி 3976-1
உரை சிறக்கும் புகழ்வென்றி ஒன்று ஒழிய ஒன்றாமல் 3976-2
திரை சரிந்த கடல் உலகில் திருநீற்றின் நெறி புரந்துயான் 3976-3
அரசு அளித்தபடி சால அழகி! தென அழிந்து அயர்வார் 3976-4
36. தார் தாங்கிக் கடன் முடித்த சடைதாங்கும் சடை முடையார் 3977-1
நீர் தாங்கும் சடைப் பெருமான் நெறிதாம் கண்டவரானார் 3977-2
சீர் தாங்கும் இவர் வேணிச் சிரம் தாங்கி வரக் கண்டும் 3977-3
பார் தாங்க இருந்தேனோ பழிதாங்குவேன் என்றார் 3977-4
37. என்று அருளிச் செய்து அருளி இதற்கு இசையும் படி துணிவார் 3978-1
நின்ற நெறி அமைச்சர்க்கு நீள் நிலம் காத்து அரசு அளித்து 3978-2
மன்றில் நடம் புரிவார் தம் வழித் தொண்டின் வழி நிற்ப 3978-3
வென்றி முடி என் குமரன்தனைப் புனைவீர் என விதித்தார் 3978-4
38. அம்மாற்றம் கேட்டு அழியும் அமைச்சரையும் இடர் அதற்றிக் 3979-1
கை மாற்றும் செயல்தாமே கடனாற்றும் கருத்து உடையார் 3979-2
செம்மார்க்கம் தலை நின்று செந்தீ முன் வளர்ப்பித்துப் 3979-3
பொய்ம்மாற்றும் திருநீற்றுப் புனை கோலத்தினில் பொலிந்தார் 3979-4
39. கண்ட சடைச் சிரத்தினையோர் கனகமணி கலத்து ஏந்தி 3980-1
கொண்டு திருமுடித் தாங்கிக் குலவும் எரிவலம் கொள்வார் 3980-2
அண்டர் பிரான் திரு நாமத்து அஞ்சு எழுத்தும் எடுத்து ஓதி 3980-3
மண்டு தழல் பிழம்பின் இடை மகிழ்ந்து அருளி உள் புக்கார் 3980-4
40. புக்க பொழுது அலர் மாரி புவி நிறையப் பொழிந்து இழிய 3981-1
மிக்க பெரு மங்கல தூரியம் விசும்பின் முழக்கு எடுப்ப 3981-2
செக்கர் நெடும் சடை முடியார் சிலம்பு அலம்பு சேவடியின் 3981-3
அக்கருணைத் திருநிழல் கீழ் ஆராமை அமர்ந்திருந்தார் 3981-4
41. முரசங் கொள் கடல் தானை மூவேந்தர் தங்களின் முன் 3982-1
பிரசம் கொள் நறுந்தொடையல் புகழ்ச் சோழர் பெருமையினைப் 3982-2
பரசும் குற்றேவலினால் அவர் பாதம் பணிந்து ஏத்தி 3982-3
நரசிங்க முனையர் திறம் நாம் அறிந்தபடி உரைப்பாம் 3982-4
42 நரசிங்க முனையரைய நாயனார் புராணம்
1. கோடாத நெறி விளக்கும் குலமரபின் அரசு அளித்து 3983-1
மாடாக மணி கண்டர் திருநீறே மனம் கொள்வார் 3983-2
தேடாத பெருவளத்தில் சிறந்த திருமுனைப் பாடி 3983-3
நாடாளும் காவலனார் நரசிங்க முனையரையர் 3983-4
2. இம்முனையர் பெருந்தகையார் இருந்து அரசு புரந்து போய்த் 3984-1
தெம் முனைகள் பல கடந்து தீங்கு நெறிப் பாங்கு அகல 3984-2
மும்முனை நீள் இலைச் சூல முதல் படையார் தொண்டுபுரி 3984-3
அம் முனைவர் அடி அடைவே அரும் பெரும் பேரு என அடைவார் 3984-4
3. சின விடையார் கோயில் தொறுந் திருச் செல்வம் பெருக்குநெறி 3985-1
யனஇடை ஆர் உயிர் துறக்க வரும் எனினும் அவை காத்து 3985-2
மனவிடை ஆமைத் தொடையல் அணிமார்பர் வழித்தொண்டு 3985-3
கனவிடை ஆகிலும் வழுவாக் கடன் ஆற்றிச் செல்கின்றார் 3985-4
4. ஆறு அணிந்த சடை முடியார்க்கு ஆதிரை நாள் தொறும் என்றும் 3986-1
வேறு நிறை வழிபாடு விளக்கிய பூசனை மேவி 3986-2
நீறு அணியும் தொண்டர் அணைந்தார்க்கு எல்லாம் நிகழ் பசும் பொன் 3986-3
நூறு குறையாமல் அளித்து இன் அமுது நுகர்விப்பார் 3986-4
5. ஆன செயல் முறை புரிவார் ஒரு திருவாதிரை நாளில் 3987-1
மேன்மை நெறித் தொண்டர்க்கு விளங்கிய பொன் இடும் பொழுதில் 3987-2
மான நிலை அழிதன்மை வரும் காமக்குறி மலர்ந்த 3987-3
ஊனம் நிகழ் மேனியராய் ஒருவர் நீறு அணிந்து அணைந்தார் 3987-4
6. மற்று அவர் தம் வடிவு இருந்த படி கண்டு மருங்குள்ளார் 3988-1
உற்ற இகழ்ச்சியராகி ஒதுங்குவார் தமைக் கண்டு 3988-2
கொற்றவனார் எதிர் சென்று கைகுவித்துக் கொடு போந்தப் 3988-3
பெற்றியினார் தமை மிகவும் கொண்டாடிப் பேணுவார் 3988-4
7. சீலம் இலரே எனினும் திருநீறு சேர்ந்தாரை 3989-1
ஞாலம் இகழ்ந்த அருநரகம் நண்ணாமல் எண்ணுவார் 3989-2
பாலணைந்தார் தமக்கு அளித்தபடி இரட்டிப் பொன் கொடுத்து 3989-3
மேலவரைத் தொழுது இனிய மொழி விளம்பி விடை கொடுத்தார் 3989-4
8. இவ்வகையே திருத் தொண்டின் அருமை நெறி எந்நாளும் 3990-1
செவ்விய அன்பினில் ஆற்றித் திருந்திய சிந்தையர் ஆகிப் 3990-2
பை வளர் வாள் அரவு அணிந்தார் பாதமலர் நிழல் சோர்ந்து 3990-3
மெய் வகைய வழி அன்பின் மீளாத நிலை பெற்றார் 3990-4
9. விட நாகம் அணிந்த பிரான் மெய்த்தொண்டு விளைந்த நிலை 3991-1
உடனாகும் நரசிங்க முனையர் பிரான் கழல் ஏத்தித் 3991-2
தடநாகம் மதம் சொரியத் தனம் சொரியும் கலம் சேரும் 3991-3
கடனாகை அதிபத்தர் கடனாகைக் கவின் உரைப்பாம் 3991-4
43 அதிபத்த நாயனார் புராணம்
1. மன்னி நீடிய செங்கதிரவன் வழி மரபின் 3992-1
தொன்மையாம் முதல் சோழர் தம் திருக்குலத்து உரிமைப் 3992-2
பொன்னி நாடு எனும் கற்பகப் பூங்கொடி மலர் போல் 3992-3
நன்மை சான்றது நாகப் பட்டினத் திரு நகரம் 3992-4
2. தாம நித்திலக் கோவைகள் சரிந்திடச் சரிந்த 3993-1
தேமலர்க் குழல் மாதர் பந்து ஆடும் தெற்றிகள் சூழ் 3993-2
காமர் பொற் சுடர் மாளிகைக் கரும் கடல் முகந்த 3993-3
மாமுகில் குலம் மலை என ஏறுவ மருங்கு 3993-4
3. பெருமையில் செறி பேரொலி பிறங்கலின் நிறைந்து 3994-1
திருமகட்கு வாழ் சேர் இடம் ஆதலில் யாவும் 3994-2
தருதலின் கடல் தன்னினும் பெரிது எனத் திரை போல் 3994-3
கரி பரித் தொகை மணி துகில் சொரிவதாம் கலத்தால் 3994-4
4. நீடு தொல் புகழ் நிலம் பதினெட்டினும் நிறைந்த 3995-1
பீடு தங்கிய பல பொருள் மாந்தர்கள் பெருகிக் 3995-2
கோடி நீள் தனக் குடியுடன் குவலயம் காணும் 3995-3
ஆடி மண்டலம் போல்வது அவ்வணி கிளர் மூதூர் 3995-4
5. அந்நெடும் திரு நகர் மருங்கு அலை கடல் விளிம்பில் 3996-1
பன்னெடும் திரை நுரை தவழ் பாங்கரின் ஞாங்கர் 3996-2
மன்னும் தொன்மையின் வலை வளத்து உணவினில் மலிந்த 3996-3
தன்மை வாழ்குடி மிடைந்தது தட நுளைப் பாடி 3996-4
6. புயல் அளப்பன என வலை புறம்பு அணை குரம்பை 3997-1
அயல் அளப்பன மீன் விலைப் பசும் பொனின் அடுக்கல் 3997-2
வியல் அளக்கரில் விடுந்திமில் வாழ்நர்கள் கொணர்ந்த 3997-3
கயல் அளப்பன பரத்தியர் கரு நெடும் கண்கள் 3997-4
7. உணங்கல் மீன் கவர் உறு நசைக் குருகு உடன் அணைந்த 3998-1
கணம் கொள் ஓதிமம் கரும் சினைப் புன்னையங் கானல் 3998-2
அணங்கு நுண்ணிடை நுளைச்சியர் அசை நடைக் கழிந்து 3998-3
மணம் கொள் கொம்பரின் மருங்கு நின்று இழிய மருளும் 3998-4
8. வலை நெடும் தொடர் வடம் புடை வலிப்பவர் ஒலியும் 3999-1
விலை பகர்ந்து மீன் குவை கொடுப்பவர் விளி ஒலியும் 3999-2
தலை சிறந்த வெள் வளை சொரிபவர் தழங்கு ஒலியும் 3999-3
அலை நெடுங்கடல் அதிர் ஒலிக்கு எதிர் ஒலி அனைய 3999-4
9. அனையதாகிய அந்நுளைப் பாடியில் அமர்ந்து 4000-1
மனை வளம் பொலி நுளையர் தம் குலத்தினில் வந்தார் 4000-2
புனை இளம் பிறை முடி அவர் அடித்தொண்டு புரியும் 4000-3
வினை விளங்கிய அதி பத்தர் என நிகழ் மேலோர் 4000-4
10. ஆங்கு அன்பர் தாம் நுளையர் தம் தலைவராய் அவர்கள் 4001-1
ஏங்கு தெண் திரைக் கடல் இடைப் பலபட இயக்கிப் 4001-2
பாங்கு சூழ்வலை வளைத்து மீன் படுத்து முன் குவிக்கும் 4001-3
ஓங்கு பல் குவை உலப்பில உடையராய் உயர்வார் 4001-4
11. முட்டில் மீன் கொலைத் தொழில் வளத்தவர் வலை முகந்து 4002-1
பட்ட மீன்களில் ஒரு தலை மீன் படும் தோறும் 4002-2
நட்டம் ஆடிய நம்பருக்கு என நளிர் முந்நீர் 4002-3
விட்டு வந்தனர் விடாத அன்பு உடன் என்றும் விருப்பால் 4002-4
12. வாகு சேர் வலை நாள் ஒன்றில் மீன் ஒன்று வரினும் 4003-1
ஏக நாயகர் தங்கழற் கென விடும் இயல்பால் 4003-2
ஆகும் நாளில் அநேக நாள் அடுத்து ஒரு மீனே 4003-3
மேக நீர் படி வேலையில் பட விட்டு வந்தார் 4003-4
13. மீன் விலைப் பெருகு உணவினில் மிகு பெரும் செல்வம் 4004-1
தான் மறுத்தலின் உணவு இன்றி அரும் கிளை சாம்பும் 4004-2
பான்மை பற்றியும் வருந்திலர் பட்ட மீன் ஒன்று 4004-3
மான் மறிக் கரத்தவர் கழற்கு என விட்டு மகிழ்ந்தார் 4004-4
14. சால நாள் இப்படி வரத் தாம் உணவு அயர்த்து 4005-1
கோல மேனியும் தளரவும் தம் தொழில் குறையாச் 4005-2
சீலமே தலை நின்றவர் தம் திறம் தெரிந்தே 4005-3
ஆலம் உண்டவர் தொண்டர் அன்பு எனும் அமுது உண்பார் 4005-4
15. ஆன நாள் ஒன்றில் அவ்வொரு மீனும் அங்கு ஒழித்துத் 4006-1
தூ நிறப் பசும் கனக நல் சுடர் நவமணியால் 4006-2
மீன் உறுப்பு உற அமைத்து உலகு அடங்கலும் விலையாம் 4006-3
பான்மை அற்புதப் படியது ஒன்று இடுவலைப் படுத்தார் 4006-4
16. வாங்கு நீள் வலை அலைகடல் கரையில் வந்து ஏற 4007-1
ஓங்கு செஞ்சுடர் உதித்து என உலகெலாம் வியப்பத் 4007-2
தாங்கு பேரொளி தழைத்திடக் காண்டலும் எடுத்துப் 4007-3
பாங்கு நின்றவர் மீன் ஒன்று படுத்தனம் என்றார் 4007-4
17. என்று மற்று உளோர் இயம்பவும் ஏறு சீர்த் தொண்டர் 4008-1
பொன் திரள் சுடர் நவமணி பொலிந்தமீன் உறுப்பால் 4008-2
ஒன்றும் மற்றிது என்னை ஆள் உடையவர்க்கு ஆகும் 4008-3
சென்று பொன் கழல் சேர்க எனத் திரை யொடும் திரிந்தார் 4008-4
18. அகில லோகமும் பொருள் முதற்றாம் எனும் அளவில் 4009-1
புகலும் அப்பெரும் பற்றினைப் புரை அற எறிந்த 4009-2
இகலில் மெய்த் திருத் தொண்டர்முன் இறைவர் தாம் விடைமேல் 4009-3
முகில் விசும்பிடை அணைந்தார் பொழிந்தனர் முகைப்பூ 4009-4
19. பஞ்ச நாதமும் எழுந்தன அதிபத்தர் பணிந்தே 4010-1
அஞ்சலிக் கரம் சிரம் மிசை அணைத்து நின்று அவரை 4010-2
நஞ்சு வாண்மணி மிடற்று அவர் சிவலோகம் நண்ணித்து 4010-3
அஞ்சிறப்புடை அடியர் பாங்கு உறத்தலை அளித்தார் 4010-4
20. தம் மறம் புரி மரபினில் தகும் பெருந் தொண்டு 4011-1
மெய்ம்மையே புரி அதிபத்தர் விளங்கும் தாள் வணங்கி 4011-2
மும்மையாகிய புவனங்கள் முறைமையில் போற்றும் 4011-3
செம்மை நீதியார் கலிக்கம்பர் திருத்தொண்டு பகர்வாம் 4011-4
44 கலிக்கம்ப நாயனார் புராணம்
1. உரிமை ஒழுக்கம் தலை நின்ற உயர் தொல் மரபில் நீடு மனைத் 4012-1
தரும நெறியால் வாழ் குடிகள் தழைத்து வனரும் தன்மையதாய் 4012-2
வரும் மஞ்சு உறையும் மலர்ச் சோலை மருங்கு சூழ்ந்த வளம் புறவில் 4012-3
பெருமை உலகு பெற விளங்கும் மேல் பால் பெண்ணாகட மூதூர் 4012-4
2. மற்றப் பதியினிடை வாழும் வணிகர் குலத்து வந்து உதித்தார் 4013-1
கற்றைச் சடையார் கழற்காதலுடனே வளர்ந்த கருத்து உடையார் 4013-2
அற்றைக்கு அன்று தூங்கானை மாடத்து அமர்ந்தார் அடித்தொண்டு 4013-3
பற்றிப் பணி செய் கலிக்கம்பர் என்பார் மற்றோர் பற்று இல்லார் 4013-4
3. ஆன அன்பர் தாம் என்றும் அரனார் அன்பர்க்கு அமுது செய 4014-1
மேன்மை விளங்கு போனகமும் விரும்பு கறி நெய் தயிர் தீம் பால் 4014-2
தேனின் இனிய கனி கட்டி திருந்த அமுது செய்வித்தே 4014-3
ஏனை நிதியம் வேண்டுவன எல்லாம் இன்பமுற அளிப்பார் 4014-4
4. அன்ன வகையால் திருத்தொண்டு புரியுநாளில் அங்கு ஒரு நாள் 4015-1
மன்னும் மனையில் அமுது செய வந்த தொண்டர் தமை எல்லாம் 4015-2
தொன்மை முறையே அமுது செயத் தொடங்கு விப்பார் அவர் தம்மை 4015-3
முன்னர் அழைத்துத் திருவடிகள் எல்லாம் விளக்க முயல்கின்றார் 4015-4
5. திருந்து மனையார் மனை எல்லாம் திகழ விளக்கிப் போனகமும் 4016-1
பொருந்து சுவையில் கறி அமுதும் புனிதத் தண்ணீர் உடன் மற்றும் 4016-2
அருந்தும் இயல்பில் உள்ளனவும் அமைத்துக் கரக நீர் அளிக்க 4016-3
விரும்பு கணவர் பெருந்தவத்தாள் எல்லாம் விளக்கும் பொழுதின் கண் 4016-4
6. முன்பு தமக்குப் பணி செய்யும் தமராய் ஏவல் முனிந்து போய் 4017-1
என்பும் அரவும் அணிந்த பிரான் அடியார் ஆகி அங்கு எய்தும் 4017-2
அன்பர் உடனே திருவேடம் தாங்கி அணைந்தார் ஒருவர் தாம் 4017-3
பின்பு வந்து தோன்ற அவர் பாதம் விளக்கும் பெரும் தகையார் 4017-4
7. கையால் அவர் தம் அடி பிடிக்கக் காதல் மனையார் முன்பு ஏவல் 4018-1
செய்யாது அகன்ற தமர் போலும் என்று தேரும் பொழுது மலர் 4018-2
மொய்யார் வாசக் கரக நீர் வார்க்க முட்ட முதல் தொண்டர் 4018-3
மையார் கூந்தல் மனையாரைப் பார்த்து மனத்துள் கருதுவார் 4018-4
8. வெறித்த கொன்றை முடியார் தம் அடியார் இவர் முன் மேவு நிலை 4019-1
குறித்து வெள்கி நீர் வாராது ஒழிந்தாள் என்று மனம் கொண்டு 4019-2
மறித்து நோக்கார் வடிவாளை வாங்கிக் கரகம் வாங்கிக் கை 4019-3
தறித்துக் கரக நீர் எடுத்துத் தாமே அவர் தாள் விளக்கினார் 4019-4
9. விளக்கி அமுது செய்வதற்கு வேண்டுவன தாமே செய்து 4020-1
துளக்கில் சிந்தை உடன் தொண்டர் தம்மை அமுது செய்வித்தார் 4020-2
அளப்பில் பெருமை அவர் பின்னும் அடுத்த தொண்டின் வழி நின்று 4020-3
களத்தில் நஞ்சம் அணிந்து அவர் தாள்நிழல் கீழ் அடியாருடன் கலந்தார் 4020-4
10. ஓத மலிநீர் விடம் உண்டார் அடியார் என்றுணரா 4021-1
மாதரார் கை தடிந்த கலிக் கம்பர் மலர்ச் சேவடி வணங்கி 4021-2
பூத நாதர் திருத்தொண்டு புரிந்து புவனங்களில் பொலிந்த 4021-3
காதல் அன்பர் கலிநீதியார் தம் பெருமை கட்டுரைப்பாம் 4021-4
45 கலிய நாயனார் புராணம்
1. பேருலகில் ஓங்கு புகழ்ப் பெரும் தொண்டை நன்னாட்டு 4022-1
நீருலவும் சடைக் கற்றை நிருத்தர் திருப்பதியாகும் 4022-2
காருலவும் மலர்ச் சோலைக் கன்னிமதில் புடை சூழ்ந்து 4022-3
தேருலவு நெடு வீதி சிறந்த திருஒற்றியூர் 4022-4
2. பீடு கெழும் பெரும் தெருவும் புத்தர் உடன் பீலி அமண் 4023-1
வேடம் உடையவர் பொருள் போல் ஆகாசவெளி மறைக்கும் 4023-2
ஆடு கொடி மணி நெடுமாளிகை நிரைகள் அலை கமுகின் 4023-3
காடனைய கடல் படப்பை என விளங்கும் கவின் காட்டும் 4023-4
3. பன்னு திருப்பதிக இசைப் பாட்டு ஓவா மண்டபங்கள் 4024-1
அன்ன நடை மடவார்கள் ஆட்டு ஓவா அணி அரங்கு 4024-2
பன் முறை தூரியம் முழங்கு விழவு ஓவா பயில் வீதி 4024-3
செம் நெல் அடிசில் பிறங்கல் உணவு ஓவா திருமடங்கள் 4024-4
4. கெழு மலர் மாதவி புன்னை கிளைஞாழல் தளை அவிழும் 4025-1
கொழு முகைய சண்பகங்கள் குளிர் செருந்தி வளர் கைதை 4025-2
முழு மணமே முந் நீரும் கமழ மலர் முருகு உயிர்க்கும் 4025-3
செழு நிலவின் துகள் அனைய மணல் பரப்பும் திருப்பரப்பு 4025-4
5. எயிலணையும் முகில் முழக்கும் எறிதிரை வேலையின் முழக்கும் 4026-1
பயில் தரு பல்லிய முழக்கும் முறை தெரியாப் பதி அதனுள் 4026-2
வெயில் அணி பல் மணி முதலாம் விழுப்பொருள் ஆவன விளக்கும் 4026-3
தயில வினைத் தொழில் மரபில் சக்கரப் பாடி தெருவு 4026-4
6. அக்குலத்தின் செய்தவத்தால் அவனி மிசை அவதரித்தார் 4027-1
மிக்க பெரும் செல்வத்து மீக்கூர விளங்கினார் 4027-2
தக்க புகழ்க் கலியனார் எனும் நாமம் தலை நின்றார் 4027-3
முக்கண் இறைவர்க்கு உரிமைத் திருத் தொண்டின் நெறி முயல்வார் 4027-4
7. எல்லையில் பல் கோடி தனத்து இறைவராய் இப்படித்தாம் 4028-1
செல்வ நெறிப் பயன் அறிந்து திருஒற்றியூர் அமர்ந்த 4028-2
கொல்லை மழவிடையார் தம் கோயிலின் உள்ளும் புறம்பும் 4028-3
அல்லும் நெடும் பகலும் இடும் திருவிளக்கின் அணி விளைத்தார் 4028-4
8. எண்ணில் திரு விளக்கு நெடு நாள் எல்லாம் எரித்து வரப் 4029-1
புண்ணிய மெய்த் தொண்டர் செயல் புலப்படுப்பார் அருளாலே 4029-2
உண்ணிறையும் பெரும் செல்வம் உயர்த்தும் வினைச் செயல் ஓவி 4029-3
மண்ணில் அவர் இருவினை போல் மாண்ட மாட்சிமைத்தாக 4029-4
9. திருமலி செல்வத்துழனி தேய்ந்து அழிந்த பின்னையுந்தம் 4030-1
பெருமை நிலைத் திருப் பணியில் பேராத பேராளர் 4030-2
வருமரபில் உள்ளோர் பால் எண்ணெய் மாறிக் கொணர்ந்து 4030-3
தரும் இயல்பில் கூலியினால் தமது திருப்பணி செய்வார் 4030-4
10. வளம் உடையார் பால் எண்ணெய் கொடுபோய் மாறிக் கூலி 4031-1
கொள முயலும் செய்கையும் மற்று அவர் கொடாமையின் மாறத் 4031-2
தளருமனம் உடையவர் தாம் சக்கர எந்திரம் புரியும் 4031-3
களனில் வரும் பணி செய்து பெரும் கூலி காதலித்தார் 4031-4
11. செக்கு நிறை எள் ஆட்டிப் பதம் அறிந்து தில தயிலம் 4032-1
பக்கம் எழ மிக உழந்தும் பாண்டில் வரும் எருது உய்த்தும் 4032-2
தக்க தொழில் பெறும் கூலி தாம் கொண்டு தாழாமை 4032-3
மிக்க திரு விளக்கு இட்டார் விழுத்தொண்டு விளக்கிட்டார் 4032-4
12. அப் பணியால் வரும் பேறு அவ் வினைஞர் பலர் உளராய் 4033-1
எப்பரிசும் கிடையாத வகை முட்ட இடர் உழந்தே 4033-2
ஒப்பில் மனை விற்று எரிக்கும் உறு பொருளும் மாண்ட அதன் பின் 4033-3
செப்பருஞ் சீர் மனையாரை விற்பதற்குத் தேடுவார் 4033-4
13. மனம் மகிழ்ந்து மனைவியார் தமைக் கொண்டு வள நகரில் 4034-1
தனம் அளிப்பார் தமை எங்கும் கிடையாமல் தளர்வு எய்தி 4034-2
சின விடையார் திருக் கோயில் திரு விளக்குப் பணிமுட்டக் 4034-3
கன வினும் முன்பு அறியாதார் கை அறவால் எய்தினார் 4034-4
14. பணி கொள்ளும் படம் பக்க நாயகர்தம் கோயிலினுள் 4035-1
அணி கொள்ளும் திருவிளக்குப் பணிமாறும் அமையத்தில் 4035-2
மணி வண்ணச் சுடர் விளக்கு மாளில் யான் மாள்வன் எனத் 4035-3
துணிவுள்ளங் கொள நினைந்து அவ் வினை முடிக்கத் தொடங்குவார் 4035-4
15. திரு விளக்குத் திரி இட்டு அங்கு அகல் பரப்பிச் செயல் நிரம்ப 4036-1
ஒருவிய எண் ணெய்க்கு ஈடா உடல் உதிரம் கொடுநிறைக்கக் 4036-2
கருவியினால் மிடறு அரிய அக்கையைக் கண் நுதலார் 4036-3
பெருகு திருக் கருணையுடன் நேர்வந்து பிடித்து அருளி 4036-4
16. மற்றவர் தம் முன் ஆக மழ விடை மேல் எழுந்து அருள 4037-1
உற்றவூறு அது நீங்கி ஒளி விளங்க உச்சியின் மேல் 4037-2
பற்றிய அஞ்சலியினர் ஆய் நின்றவரைப் பரமர் தாம் 4037-3
பொற்புடைய சிவபுரியில் பொலிந்து இருக்க அருள் புரிந்தார் 4037-4
17. தேவர் பிரான் திருவிளக்குச் செயல் முட்ட மிடறு அரிந்து 4038-1
மே வரிய வினை முடித்தார் கழல் வணங்கி வியன் உலகில் 4038-2
யாவர் எனாது அரன் அடியார் தமை இகழ்ந்து பேசினரை 4038-3
நாவரியும் சத்தியார் திருத்தொண்டின் நலம் உரைப்பாம் 4038-4
46 சத்தி நாயனார் புராணம்
1. களமர் கட்ட கமலம் பொழிந்த தேன் 4039-1
குளம் நிறைப்பது கோல் ஒன்றில் எண் திசை 4039-2
அளவும் ஆணைச் சயத் தம்பம் நாட்டிய 4039-3
வளவர் காவிரி நாட்டு வரிஞ்சையூர் 4039-4
2. வரிஞ்சை ஊரினில் வாய்மை வேளாண் குலம் 4040-1
பெரும் சிறப்புப் பெறப் பிறப்பு எய்தினார் 4040-2
விரிஞ்சன் மால்முதல் விண்ணவர் எண்ணவும் 4040-3
அரும் சிலம்பு அணி சேவடிக்காள் செய்வார் 4040-4
3. அத்தர் ஆகிய அங்கணர் அன்பரை 4041-1
இத்தலத்தில் இகழ்ந்து இயம்பும் உரை 4041-2
வைத்த நாவை வலித்து அரி சத்தியால் 4041-3
சத்தியார் எனும் திருநாமமும் தாங்கினார் 4041-4
4. தீங்கு சொற்ற திருவிலர் நாவினை 4042-1
வாங்க வாங்கும் தண்டு ஆயத்தினால் வலித்து 4042-2
தாங்கு அயில் கத்தியால் அரிந்து அன்புடன் 4042-3
ஓங்கு சீர்த் தொண்டின் உயர்ந்தனர் 4042-4
5. அன்னதாகிய ஆண்மைத் திருப்பணி 4043-1
மன்னு பேருலகத்தில் வலி உடன் 4043-2
பண்னெடும் பெருநாள் பரிவால் செய்து 4043-3
சென்னி ஆற்றினர் செந்நெறி ஆற்றினர் 4043-4
6. ஐயம் இன்றி அரிய திருப்பணி 4044-1
மெய்யினால் செய்த வீரத் திருத்தொண்டர் 4044-2
வையம் உய்ய மணிமன்றுள் ஆடுவார் 4044-3
செய்ய பாதத் திருநிழல் சேர்ந்தனர் 4044-4
7. நாயனார் தொண்டரை நலம் கூறலார் 4045-1
சாய நாவரி சத்தியார் தாள் பணிந்து 4045-2
ஆய மா தவத்து ஐயடிகள் எனும் 4045-3
தூய காடவர் தம் திறம் சொல்லுவாம் 4045-4
47 ஐயடிகள் காடவர்கோன் நாயனார் புராணம்
1. வைய நிகழ் பல்லவர் தம் குலமரபின் வழித்தோன்றி 4046-1
வெய்ய கலியும் பகையும் மிகை ஒழியும் வகை அடக்கிச் 4046-2
செய்ய சடையார் சைவத் திரு நெறியால் அரசு அளிப்பார் 4046-3
ஐயடிகள் நீதியால் அடிப்படுத்தும் செங்கோலார் 4046-4
2. திருமலியும் புகழ் விளங்கச் சேணிலத்தில் எவ்வுயிரும் 4047-1
பெருமையுடன் இனிது அமரப் பிற புலங்கள் அடிப்படுத்துப் 4047-2
தருமநெறி தழைத்து ஓங்கத் தாரணிமேல் சைவமுடன் 4047-3
அருமறையின் துறை விளங்க அரசு அளிக்கும் அந்நாளில் 4047-4
3. மன்னவரும் பணி செய்ய வடநூல் தென்தமிழ் முதலாம் 4048-1
பன்னு கலைப் பணிசெய்யப் பார் அளிப்பார் அரசாட்சி 4048-2
இன்னல் என இகழ்ந்து அதனை எழில் குமரன் மேல் இழச்சி 4048-3
நன்மை நெறித் திருத்தொண்டு நயந்து அளிப்பார் ஆயினார் 4048-4
4. தொண்டுரிமை புரக்கின்றார் சூழ்வேலை உலகின் கண் 4049-1
அண்டர் பிரான் அமர்ந்து அருளும் ஆலயங்களான எலாம் 4049-2
கண்டிறைஞ்சித் திருத்தொண்டின் கடன் ஏற்ற பணி செய்த 4049-3
வண் தமிழின் மொழி வெண்பா ஓரொன்றா வழுத்துவார் 4049-4
5. பெருத்தெழு காதலினால் வணங்கிப் பெரும்பற்றத் தண்புலியூர்த் 4050-1
திருச்சிற்றம் பலத்து ஆடல் புரிந்து அருளும் செய்ய சடை 4050-2
நிறுத்தனார் திருக்கூத்து நேர்ந்து இறைஞ்சி நெடுந்தகையார் 4050-3
விருப்பின் உடன் செந்தமிழின் வெண்பா மென் மலர் புனைந்தார் 4050-4
6. அவ்வகையால் அருள் பெற்று அங்கு அமர்ந்து சில நாள் வைகி 4051-1
இவ் உலகில் தம் பெருமான் கோயில்கள் எல்லாம் எய்திச் 4051-2
செவ்விய அன்பொடு பணிந்து திருப்பணி ஏற்றன செய்தே 4051-3
எவ்வுலகும் புகழ்ந்து ஏத்தும் இன்தமிழ் வெண்பா மொழிந்தார் 4051-4
7. இந்நெறியால் அரன் அடியார் இன்பமுற இசைந்த பணி 4052-1
பன்னெடு நாள் ஆற்றியபின் பரமர் திருவடி நிழல் கீழ் 4052-2
மன்னு சிவலோகத்து வழி அன்பர் மருங்கு அணைந்தார் 4052-3
கன்னிமதில் சூழ் காஞ்சிக் காடவரை அடிகளார் 4052-4
8. பையரவ மணியாரம் அணிந்தார்க்குப் பாவணிந்த 4053-1
ஐயடிகள் காடவனார் அடி இணைத்தாமரை வணங்கிக் 4053-2
கையணிமான் மழு உடையார் கழல் பணி சிந்தனை உடைய 4053-3
செய்தவத்துக் கணம் புல்லர் திருத்தொண்டு விரித்து உரைப்பாம் 4053-4
சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி
1. உளத்தில் ஒரு துளக்கம் இலேம் உலகு உய்ய இருண்ட திருக் 4054-1
களத்தர் முது குன்றர் தரு கனகம் ஆற்றில் இட்டு 4054-2
வளத்தின் மலி ஏழ் உலகும் வணங்கு பெரும் திருவாரூர்க் 4054-3
குளத்தில் எடுத்தார் வினையின் குழிவாய் நின்று எனை எடுத்தார் 4054-4
திருச்சிற்றம்பலம்
பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம் முற்றிற்று.
This webpage was last updated on 13 July 2004
See Also:
1. Stories of the nAyanmAr in English with Pictures
Back to periya purANam Page
Back to thirumuRai Page
Back to Shaiva Sidhdhantha Home Page
|