thiruththoNDar purANam (periya purANam) panniraNDAm tirumuRai

(in tamil script, unicode format)


சேக்கிழார் அருளிய

திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்

பன்னிரண்டாம் திருமுறை

முதற் காண்டம்

5 திருநின்ற சருக்கம்

This page was originally provided by Project Madurai. The songs have been proof-read by thiruchchirrambalam arakkattalai, Kovilpatti.


திருச்சிற்றம்பலம் 
 

5 திருநின்ற சருக்கம்

21 திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்
 1. திரு நாவுக்கு அரசர் வளர் திருத் தொண்டின் நெறி வாழ 	1266-1
 வரு ஞானத் தவமுனிவர் வாகீசர் வாய்மை திகழ் 	1266-2
 பெரு நாமச் சீர் பரவல் உறுகின்றேன் பேர் உலகில் 	1266-3
 ஒரு நாவுக்கு உரை செய்ய ஒண்ணாமை உணராதேன் 	1266-4

 2. தொன்மை முறை வரு மண்ணின் துகள் அன்றித் துகள் இல்லா 	1267-1
 நன்மை நிலை ஒழுக்கத்து நலம் சிறந்த குடி மல்கிச் 	1267-2
 சென்னி மதி புனையவளர் மணி மாடச் செழும் பதிகள் 	1267-3
 மன்னி நிறைந்து உளது திரு முனைப்பாடி வளநாடு 	1267-4

 3. புனப் பண்ணை மணியினோடும் புறவின் நறும் புதுமலரின் 	1268-1
 கனப்பெண்ணில் திரை சுமந்து கரை மருங்கு பெரும் பகட்டேர் 	1268-2
 இனப் பண்ணை உழும் பண்ணை எறிந்து உலவி எவ்வுலகும் 	1268-3
 வனப்பெண்ண வரும் பெண்ணை மா நதி பாய் வளம் பெருகும் 	1268-4

 4. காலெல்லாம் தகட்டு வரால் கரும்பு எல்லாம் கண் பொழி தேன் 	1269-1
 பாலெல்லாம் கதிர்ச் சாலி பரப்பு எல்லாம் குலைக் கமுகு 	1269-2
 சாலெல்லாம் தரள நிரை தடம் எல்லாம் செங்கழுநீர் 	1269-3
 மேலெல்லா ம் அகில் தூபம் விருந்து எல்லாம் திருந்து மனை 	1269-4

 5. கடைஞர் மிடை வயல் குறைத்த கரும்பு குறை பொழி கொழும் சாறு 	1270-1
 இடை தொடுத்த தேன் கிழிய இழிந்து ஒழுகு நீத்தம் உடன் 	1270-2
 புடை பரந்து ஞிமிறொலிப்பப் புதுப் புனல் போல் மடை உடைப்ப 	1270-3
 உடை மடையக் கரும்படு கட்டியின் அடைப்ப ஊர்கள் தொறும் 	1270-4

 6. கரும் கதலிப் பெருங்குலைகள் களிற்றுக் கைம் முகம் காட்ட 	1271-1
 மருங்கு வளர் கதிர்ச் செந்நெல் வயப் புரவி முகம் காட்டப் 	1271-2
 பெருஞ்சகடு தேர் காட்ட வினைஞர் ஆர்ப்பொலி பிறங்க 	1271-3
 நெருங்கிய சாதுரங்க பல நிகர்பனவாம் நிறை மருதம் 	1271-4

 7. நறையாற்றுங் கமுகு நவ மணிக் கழுத்தின் உடன் கூந்தல் 	1272-1
 பொறை ஆற்றா மகளிர் எனப் புறம்பு அலை தண்டலை வேலித் 	1272-2
 துறை ஆற்ற மணி வண்ணச் சுரும்பு இரைக்கும் பெரும் பண்ணை 	1272-3
 நிறை ஆற்று நீர்க் கொழுந்து படர்ந்தேறும் நிலைமையதால் 	1272-4

 8. மரு மேவு மலர் மேய மா கடலினுட் படியும் 	1273-1
 உரு மேகம் என மண்டி உகைத்த கரும் கன்று போல் 	1273-2
 வரு மேனிச் செங்கண் வரால் மட முட்டப் பால் சொரியும் 	1273-3
 கரு மேதி தனைக் கொண்டு கரை புரள்வ திரை வாவி 	1273-4

 9. மொய்யளி சூழ் நிரைநீல முழு வலயங்களின் அலையச் 	1274-1
 செய்ய தளிர் நறு விரலில் செழு முகையின் நகம் சிறப்ப 	1274-2
 மெய்யொளியின் நிழல் காணும் ஆடி என வெண் மதியை 	1274-3
 வைய மகள் கை அணைத்தால் போல் உயர்வ மலர்ச் சோலை 	1274-4

 10. எயில் குலவும் வளம் பதிகள் எங்கும் மணம் தங்கும் வயல் 	1275-1
 பயிர்க் கண்வியல் இடங்கள் பல பரந்து உயர் நெற் கூடுகளும் 	1275-2
 வெயில் கதிர்மென் குழை மகளிர் விரவிய மாடமும் மேவி 	1275-3
 மயில் குலமும் முகல் குலமும் மாறாட மருங்கு ஆடும் 	1275-4

 11. மறம் தரு தீ நெறி மாற மணிகண்டர் வாய்மை நெறி 	1276-1
 அறம் தரு நாவுக்கரசும் ஆலால சுந்தரரும் 	1276-2
 பிறந்து அருள உளதானால் நம் அளவோ பேர் உலகில் 	1276-3
 சிறந்த திருமுனைப் பாடித் திறம் பாடும் சீர்ப் பாடு 	1276-4

 12. இவ் வகைய திரு நாட்டில் எனைப் பல ஊர்களும்   என்றும் 	1277-1
 மெய் வளங்கள் ஓங்க வரும் மேன்மையன ஆங்கு அவற்றுள் 	1277-2
 சைவ நெறி ஏழ் உலகும் பாலிக்கும் தன்மையினால் 	1277-3
 தெய்வ நெறிச் சிவம் பெருக்கும் திருவாமூர் திருவாமூர் 	1277-4

 13.  ஆங்கு வன முலைகள் சுமந்து அணங்குவன மகளிர் இடை 	1278-1
 ஏங்குவன நூபுரங்கள் இரங்குவன மணிக் காஞ்சி 	1278-2
 ஓங்குவன மாட நிரை ஒழுகுவன வழுவில் அறம் 	1278-3
 நீங்குவன தீங்கு நெறி நெருங்குவன பெரும் குடிகள் 	1278-4

 14. மலர் நீலம் வயல் காட்டும் மைஞ்   ஞீலம் மதி காட்டும் 	1279-1
 அலர் நீடு மறு காட்டும் அணி ஊசல் பல காட்டும் 	1279-2
 புலர் நீலம் இருள் காட்டும் பொழுது உழவர் ஒலி காட்டும் 	1279-3
 கல நீடு மனை காட்டும் கரை காட்டாப் பெருவளங்கள் 	1279-4

 15. தலத்தின் கண் விளங்கிய அத் தனிப் பதியில் அனைத்து வித 	1280-1
 நலத்தின் கண் வழுவாத நடை மரபில் குடி நாப்பண் 	1280-2
 விலங்கின் மனை ஒழுக்கத்தின் மேதக்க ந்¢லைவேளாண் 	1280-3
 குலத்தின் கண் வரும் பெருமைக் குறுக்கையர் தம் குடி விளங்கும் 	1280-4

 16. அக் குடியின் மேல் தோன்றலாய பெரும் தன்மையினார் 	1281-1
 மிக்க மனை அறம் புரிந்து விருந்து அளிக்கும் மேன்மையினார் 	1281-2
 ஒக்கல் வளர் பெரும் சிறப்பின் உளர் ஆனார் உளர் ஆனார் 	1281-3
 திக்கு நிலவும் பெருமை திகழ வரும் புகழனார் 	1281-4

 17. புகழனார் தமக்கு உரிமைப் பொருவில் குலக்குடியின் கண் 	1282-1
 மகிழவரு மணம் புணர்ந்த மாதினியார் மணி வயிற்றில் 	1282-2
 நிகழும் மலர்ச் செங்கமல நிரை இதழின் அகவயினில் 	1282-3
 திகழ வருந் திரு அனைய திலகவதியார் பிறந்தார் 	1282-4

 18. திலகவதியார் பிறந்து சில முறை ஆண்டு அகன்றதன் பின் 	1283-1
 அலகில் கலைத் துறை தழைப்ப அரும் தவத்தோர் நெறிவாழ 	1283-2
 உலகில் வரும் இருள் நீக்கி ஒளி விளங்கு கதிர் போல் பின் 	1283-3
 மலரும் மருள் நீக்கியார் வந்து அவதாரம் செய்தார் 	1283-4

 19. மாதினியார் திரு வயிற்றின் மன்னிய சீர்ப் புகனார் 	1284-1
 காதலனார் உதித்த தற்பின் கடன் முறைமை மங்கலங்கள் 	1284-2
 மேதகு நல் வினை சிறப்ப விரும்பிய பாராட்டினுடன் 	1284-3
 ஏதமில் பல் கிளை போற்ற இளங் குழவிப் பதம் கடந்தார் 	1284-4

 20. மருள் நீக்கியார் சென்னி மயிர் நீக்கும் மணவினையும் 	1285-1
 தெருண் நீர்ப்பன் மாந்தர் எலாம் மகிழ் சிறப்பச் செய்து அதற்பின் 	1285-2
 பொருள் நீத்தம் கொள வீசிப் புலன் கொளுவ மன முகிழ்த்த 	1285-3
 சுருள் நீக்கி மலர் விக்கும் கலை பயிலத் தொடங்கு வித்தார் 	1285-4

 21. தந்தையார் களி மகிழ்ச்சி தலை சிறக்க முறைமையினால் 	1286-1
 சிந்தை மலர்ந்து எழும் உணர்வில் செழும் கலையின் திறங்கள் எல்லாம் 	1286-2
 முந்தை முறைமையில் பயின்று முதிர அறிவு எதிரும் வகை 	1286-3
 மைந்தனார் மறு ஒழித்த இளம் பிறை போல் வளர் கின்றார் 	1286-4

 22. அந்நாளில் திலகவதியாருக்கு ஆண்டு ஆறு இரண்டின் 	1287-1
 முன்னாக ஒத்த குல முதல் வேளாண் குடித் தலைவர் 	1287-2
 மின்னார் செஞ்சடை அண்ணல் மெய் அடிமை விருப்புடையார் 	1287-3
 பொன்னாரும் மணி மௌலிப் புரவலன் பால் அருள் உடையார் 	1287-4

 23.  ஆண் தகைமைத் தொழிலின் கண் அடல் அரியேறு என உள்ளார் 	1288-1
 காண் தகைய பெருவனப்பில் கலிப்பகையார் எனும் பெயரார் 	1288-2
 பூண்ட கொடைப் புகழனார் பால் பொருவின் மகள் கொள்ள 	1288-3
 வேண்டி எழுங் காதலினால் மேலோரைச் செலவிட்டார் 	1288-4

 24. அணங்கு அனைய திலகவதியார் தம்மை ஆங்கு அவர்க்கு 	1289-1
 மணம் பேசி வந்தவரும் வந்தபடி அறிவிப்பக் 	1289-2
 குணம் பேசிக் குலம் பேசிக் கோதில் சீர்ப் புகழனார் 	1289-3
 பணம் கொள் அரவு அகல் அல்குல் பைந் தொடியை மணம் நேர்ந்தார் 	1289-4

 25. கன்னித் திருத் தாதையார் மணம் இசைவு கலிப்பகையார் 	1290-1
 முன் அணைந்தார் அறிவிப்ப வதுவை வினை முடிப்பதன் முன் 	1290-2
 மன்னவற்கு வடபுலத்து ஓர் மாறு ஏற்க மற்றவர்மேல் 	1290-3
 அன்னவர்க்கு விடை கொடுத்தான் அவ்வினை மேல் அவர் அகன்றார் 	1290-4

 26. வேந்தற்கு உற்று உழி வினை மேல் வெஞ்சமத்தில் விடை கொண்டு 	1291-1
 போந்த வரும் பொரு படையும் உடன் கொண்டு சில நாளில் 	1291-2
 காய்ந்த சினப் பகைப் புலத்தைக் கலந்து கடும் சமர்க் கடலை 	1291-3
 நீந்துவார் நெடு நாள்கள் நிறை வெம் போர்த் துறை விளைத்தார் 	1291-4

 27.  ஆய நாள் இடை இப்பால் அணங்கு அனையாள் தனைப் பயந்த 	1292-1
 தூயகுலப் புகழனார் தொன்று தொடு நிலையாமை 	1292-2
 மேய வினைப் பயத்தாலே இவ் உலகை விட்டு அகலத் 	1292-3
 தீய அரும் பிணி உழந்து விண் உலகில் சென்று அடைந்தார் 	1292-4

 28. மற்றவர் தாம் உயிர் நீப்ப மனைவியார் மாதினியார் 	1293-1
 சுற்றம் உடன் மக்களையும் துகளாவே நீத்துப் 	1293-2
 பெற்றிமையால் உடன் என்றும் பிரியாத உலகு எய்தும் 	1293-3
 கற்பு நெறி வழுவாமல் கணவனார் உடன் சென்றார் 	1293-4

 29. தாதையாரும் பயந்த தாயாரும் இறந்த அதன் பின் 	1294-1
 மாதரார் திலகவதியாரும் அவர் பின் வந்த 	1294-2
 காதலனார் மருண் நீக்கியாரும் மனக் கவலையினால் 	1294-3
 பேது உறு நல் சுற்றமொடும் பெரும் துயரில் அழுந்தினார் 	1294-4

 30. ஒருவாறு பெரும் கிளைஞர் மனம் தேற்றத் துயர் ஒழிந்து 	1295-1
 பெரு வானம் அடைந்தவர்க்குச் செய் கடன்கள் பெருக்கினார் 	1295-2
 மருவார்மேல் மன்னவற்காய் மலையப் போம் கலிப்பகையார் 	1295-3
 பொருவாரும் போர்க் களத்தில் உயிர் கொடுத்துப் புகழ் கொண்டார் 	1295-4

 31. வெம் முனை மேல் கலிப்பகையார் வேல் வேந்தன் ஏவப் போய் 	1296-1
 அம் முனையில் பகை முருக்கி அமர் உலகம் ஆள்வதற்குத் 	1296-2
 தம் உடைய கடன் கழித்த பெரு வார்த்தை தலம் சாற்றச் 	1296-3
 செம்மலர் மேல் திரு அனைய திலகவதியார் கேட்டார் 	1296-4

 32.  எந்தையும் எம் அனையும் அவர்க்கு எனக் கொடுக்க இசைந்தார்கள் 	1297-1
 அந்த முறையால் அவர்க்கே உரியது நான் ஆதலினால் 	1297-2
 இந்த உயிர் அவர் உயிரோடு இசைவிப்பன் எனத் துணிய 	1297-3
 வந்தவர் தம் அடி இணை மேல் மருண் நீக்கியார் விழுந்தார் 	1297-4

 33. அந் நிலையில் மிகப் புலம்பி அன்னையும் அத்தனும் அகன்ற 	1298-1
 பின்னையும் நான் உமை வணங்கப் பெறுதலின் உயிர் தரித்தேன் 	1298-2
 என்னை இனித் தனிக் கைவிட்டு ஏகுவீர் எனில் யானும் 	1298-3
 முன்னம் உயிர் நீப்பன் என மொழிந்து இடரின் அழுந்தினார் 	1298-4

 34.  தம்பியார் உளர் ஆக வேண்டும் என வைத்த தயா 	1299-1
 உம்பர் உலகு அணைய உறு நிலை விலக்க உயிர் தாங்கி 	1299-2
 அம் பொன் மணி நூல் தாங்காது அனைத்து உயிர்க்கும் அருள் தாங்கி 	1299-3
 இம்பர் மனைத் தவம் புரிந்து திலகவதியார் இருந்தார் 	1299-4

 35. மாசின் மனத் துயர் ஒழிய மருண் நீக்கியார் நிரம்பித் 	1300-1
 தேச நெறி நிலையாமை கண்டு அறங்கள் செய்வார் ஆய்க் 	1300-2
 காசினி மேல் புகழ் விளங்க நிதி அளித்துக் கருணையினால் 	1300-3
 ஆசில் அறச் சாலைகளும் தண்ணீர்ப் பந்தரும் அமைப்பார் 	1300-4

 36. கா வளர்த்தும் குளம் தொட்டும் கடப்பாடு வழுவாமல் 	1301-1
 மேவினர்க்கு வேண்டுவன மகிழ்ந்து அளித்தும் விருந்து அளித்தும் 	1301-2
 நாவலர்க்கு வளம் பெருக நல்கியும் நால் நிலத்து உள்ளோர் 	1301-3
 யாவர்க்கும் தவிராத ஈகை வினைத் துறை நின்றார் 	1301-4

 37. நில்லாத உலகு இயல்பு கண்டு நிலையா வாழ்க்கை 	1302-1
 அல்லேன் என்று அறத் துறந்து சமயங்களான வற்றின் 	1302-2
 நல்ல்லாறு தெரிந்துணர நம்பர் அருளாமை யினால் 	1302-3
 கொல்லாமை மறைந்து உறையும் அமண் சமயம் குறுகுவார் 	1302-4

 38. பாடலி புத்திரம் என்னும் பதி அணைந்து சமண் பள்ளி 	1303-1
 மாடணைந்தார் வல்லமணர் மருங்கு அணைந்து மற்றவர்க்கு 	1303-2
 வீடு அறியும் நெறி இதுவே என மெய் போல் தங்களுடன் 	1303-3
 கூடவரும் உணர்வு கொளக் குறி பலவும் கொளுவினார் 	1303-4

 39. அங்கு அவரும் அமண் சமயத்து அரும் கலை நூல் ஆன எலாம் 	1304-1
 பொங்கும் உணர்வுறப் பயின்றே அந் நெறியில் புலன் சிறப்பத் 	1304-2
 துங்க முழு உடல் சமணர் சூழ்ந்து மகிழ்வார் அவர்க்குத் 	1304-3
 தங்களில்ன் மேலாம் தரும சேனர் எனும் பெயர் கொடுத்தார் 	1304-4

 40. அத்துறையின் மீக் கூரும் அமைதியினால் அகல் இடத்தில் 	1305-1
 சித்த நிலை அறியாதாரையும் வாதின் கண் 	1305-2
 உய்த்த உணர்வினில் வென்றே உலகின் கண் ஒளி உடைய 	1305-3
 வித்தகராய் அமண் சமயத் தலைமையினில் மேம் பட்டார் 	1305-4

 41. அந் நெறியின் மிக்கார் அவர் ஒழுக ஆன்ற தவச் 	1306-1
 செந்நெறியின் வைகும் திலகவதியார் தாமும் 	1306-2
 தொன்னெறியின் சுற்றத் தொடர்பு ஒழியத் தூய சிவ 	1306-3
 நன்னெறியே சேர்வதற்கு நாதன் தாள் நண்ணுவார் 	1306-4

 42. பேராத பாசப் பிணிப்பு ஒழியப் பிஞ்ஞகன் பால் 	1307-1
 ஆராத அன்பு பெற ஆதரித்த அம் மடவார் 	1307-2
 நீரார் கெடில வட நீள் கரையில் நீடு பெரும் 	1307-3
 சீரார் திருவதிகை வீரட்டானம் சேர்ந்தார் 	1307-4

 43. சென்று திரு வீரட்டானத்து இருந்த செம் பவளக் 	1308-1
 குன்றை அடி பணிந்து கோதில் சிவ சின்னம் 	1308-2
 அன்று முதல் தாங்கி ஆர்வம் உறத் தம் கையால் 	1308-3
 துன்று திருப் பணிகள் செய்யத் தொடங்கினார் 	1308-4

 44. புலர்வதன் முன் திருவலகு பணி மாறிப் புனி அகன்ற 	1309-1
 நலம் மலி ஆன் சாணத்தால் நன்கு திரு மெழுக்கிட்டு 	1309-2
 மலர் கொய்து கொடு வந்து மாலைகளும் தொடுத்து அமைத்துப் 	1309-3
 பலர் புகழும் பண்பினால் திருப்பணிகள் பல செய்தார் 	1309-4

 45. நாளும் மிகும் பணி செய்து குறைந்து அடையும் நன்னாளில் 	1310-1
 கேளுறும் அன்புற ஒழுகும் கேண்மையினார் பின் பிறந்தார் 	1310-2
 கோளுறு தீவினை முந்தப் பர சமயம் குறித்து அதற்கு 	1310-3
 மூளும் மனக் கவலையினால் முற்ற வரும் துயர் உழந்து 	1310-4

 46. தூண்டு தவ விளக்கு அனையார் சுடர் ஒளியைத் தொழுது என்னை 	1311-1
 ஆண்டு அருளும் நீராகில் அடியேன் பின் வந்தவனை 	1311-2
 ஈண்டு வினைப் பர சமயக் குழி நின்றும் எடுத்து ஆள 	1311-3
 வேண்டும் எனப் பல முறையும் விண்ணப்பம் செய்தனரால் 	1311-4

 47.  தவம் என்று பாய் இடுக்கி தலை பறித்து நின்று உண்ணும் 	1312-1
 அவம் ஒன்று நெறி வீழ்வான் வீழாமே அருளும் எனச் 	1312-2
 சிவம் ஒன்று நெறி நின்ற திலகவதியார் பரவப் 	1312-3
 பவம் ஒன்றும் வினை தீர்ப்பார் திரு உள்ளம் பற்றுவார் 	1312-4

 48. மன்னு தபோ தனியார்க்குக் கனவின் கண் மழ விடையார் 	1313-1
 உன்னுடைய மனக் கவலை ஒழி நீ உன் உடன் பிறந்தான் 	1313-2
 முன்னமே முனியாகி எனை அடையத் தவம் முயன்றான் 	1313-3
 அன்னவனை இனிச் சூலை மடுத்து ஆள்வான் என அருளி 	1313-4

 49. பண்டு புரி நல் தவத்துப் பழுதின் அளவில் இறை வழுவும் 	1314-1
 தொண்டரை ஆளத் தொடங்கும் சூலை வேதனை தன்னைக் 	1314-2
 கண் தரு நெற்றியர் அருளக் கடும் கனல் போல் அடும் கொடிய 	1314-3
 மண்டு பெரும் சூலை அவர் வயிற்றின் இடைப் புக்கதால் 	1314-4

 50. அடைவில் அமண் புரி தரும சேனர் வயிற்று அடையும் அது 	1315-1
 வட அனலும் கொடு விடமும் வச்சிரவும் பிறவுமாம் 	1315-2
 கொடிய எலாம் ஒன்றாகும் எனக் குடரின் அகம் குடையப் 	1315-3
 படர் உழந்து நடுங்கி அமண் பாழியறை இடை விழுந்தார் 	1315-4

 51. அச் சமயத்து இடைத் தாம் முன் அதிகரித்து வாய்த்து வரும் 	1316-1
 விச்சைகளால் தடுத்திடவும் மேல் மேலும் மிக முடுகி 	1316-2
 உச்சம் உற வேதனை நோய் ஓங்கி எழ ஆங்கு அவர் தாம் 	1316-3
 நச்சரவின் விடம் தலைக் கொண்டு என மயங்கி நவையுற்றார் 	1316-4

 52. அவர் நிலைமை கண்ட அதற்பின் அமண் கையர் பலர் ஈண்டிக் 	1317-1
 கவர் கின்ற விடம் போல் முன் கண்டு அறியாக் கொடும் சூலை 	1317-2
 இவர் தமக்கு வந்தது இனி யாது செயல் என்று அழிந்தார் 	1317-3
 தவம் என்று வினைப் பெருக்கிச் சார்பு அல்லா நெறிசார்வார் 	1317-4

 53. புண் தலைவன் முருட்டு அமணர் புலர்ந்து செயல் அறியாது 	1318-1
 குண்டிகை நீர் மந்திரித்துக் குடிப்பித்தும் தணியாமை 	1318-2
 கண்டு மிகப் பீலி கொடு கால் அளவும் தடவி இடவும் 	1318-3
 பண்டையினும் நோவு மிகப் பரிபவத்தால் இடர் உழந்தார் 	1318-4

 54. தாவாத புகழ்த் தரும சேனருக்கு வந்த பிணி 	1319-1
 ஓவாது நின்று இடலும் ஒழியாமை உணர்ந்தாராய் 	1319-2
 ஆ!  ஆ! நாம் என் செய்கோம் என்று அழிந்த மனத்தினராய்ப் 	1319-3
 போவார்கள் இது நம்மால் போக்க அரிதாம் எனப் புகன்று 	1319-4

 55. குண்டர்களும் கை விட்டார் கொடும் சூலை மிசைக் கொண்டு 	1320-1
 மண்டி மிக மேல் மேலும் பெருகுதலால் மதி மயங்கிப் 	1320-2
 பண்டை உறவு உணர்ந்தார்க்குத் திலகவதியார் உளராகக் 	1320-3
 கொண்டு அவர்பால் ஊட்டுவான் தனைவிட்டார் குறிப்பு உணர்த்த 	1320-4

 56.  ஆங்கு அவன் போய்த் திருவதிகை தணை அடைய அரும் தவத்தார் 	1321-1
 பூங்கமழ் நந்தனவனத்தின் புறம்பு அணையக் கண்டு இறைஞ்சி 	1321-2
 ஈங்கு யான் உமக்கு இளையார் ஏவலினால் வந்தது எனத் 	1321-3
 தீங்கு உளவோ என வினவ மற்றவனும் செப்புவான் 	1321-4

 57.  கொல்லாது சூலை நோய் குடர் முடக்கித் தீராமை 	1322-1
 எல்லாரும் கை விட்டார் இது செயல் என் முன் பிறந்த 	1322-2
 நல்லாள் பால் சென்று இயம்பி நான் உய்யும்படி கேட்டு இங்கு 	1322-3
 அல்லாகும் பொழுது அணைவாய் என்றார் என்று அறிவித்தான் 	1322-4

 58. என்று அவன் முன் கூறுதலும் யான் அங்கு உன் உடன் போந்து 	1323-1
 நன்று அறியா அமண் பாழி நண்ணுகிலேன் எனும் மாற்றம் 	1323-2
 சென்று அவனுக்கு உரை என்று திலகவதியார் மொழிய 	1323-3
 அன்று அவனும் மீண்டு போய்ப் புகுந்தபடி அவர்க்கு உரைத்தான் 	1323-4

 59. அவ் வார்த்தை கேட்டலுமே அயர்வு எய்தி இதற்கு இனி யான் 	1324-1
 எவ்வாறு செய்வன் என ஈசர் அருள் கூடுதலால் 	1324-2
 ஒவ்வா இப் புன் சமயத்து ஒழியா இத்துயர் ஒழியச் 	1324-3
 செவ்வாறு சேர் திலக வதியார் தாள் சேர்வன் என 	1324-4

 60. எடுத்த மனக் கருத்து உய்ய எழுதலால் எழு முயற்சி 	1325-1
 அடுத்தலுமே அயர்வு ஒதுங்கத் திருவதிகை அணைவதனுக்கு 	1325-2
 உடுத்து உழலும் பாய் ஒழிய உறி உறு குண்டிகை ஒழியத் 	1325-3
 தொடுத்த பீலியும் ஒழியப் போவதற்குத் துணிந்து எழுந்தார் 	1325-4

 61. பொய் தரும் மால் உள்ளத்துப் புன் சமணர் இடம் கழிந்து 	1326-1
 மெய் தருவான் நெறி அடைவார் வெண் புடைவை மெய் சூழ்ந்து 	1326-2
 கை தருவார் தமை ஊன்றிக் காணாமே இரவின் கண் 	1326-3
 செய் தவ மாதவர் வாழும் திருவதிகை சென்று அடைவார் 	1326-4

 62. சுலவி வயிற்று அகம் கனலும் சூலை நோயுடன் தொடரக் 	1327-1
 குலவி எழும் பெருவிருப்புக் கொண்டு அணையக் குலவரை போன்று 	1327-2
 இலகு மணி மதில் சோதி எதிர் கொள் திருவதிகையினில் 	1327-3
 திலக வதியார் இருந்த திரு மடத்தைச் சென்று அணைந்தார் 	1327-4

 63. வந்து அணைந்து திலகவதியார் அடிமேல் உற வணங்கி 	1328-1
 நம் தமது குலம் செய்த நல் தவத்தின் பயன் அனையீர் 	1328-2
 இந்த உடல் கொடும் சூலைக் கிடைந்து அடைந்தேன் இனி மயங்காது 	1328-3
 உய்ந்து கரை ஏறுநெறி உரைத்து அருளும் என உரைத்து 	1328-4

 64. தாள் இணை மேல் விழுந்து அயரும் தம்பியார் தமை நோக்கி 	1329-1
 ஆள் உடைய தம் பெருமான் அருள் நினைந்து கை தொழுது 	1329-2
 கோளில் பரசமய நெறிக் குழியில் விழுந்து அறியாது 	1329-3
 மூளும் அரும் துயர் உழந்தீர்! எழுந்தீர்! என மொழிந்தார் 	1329-4

 65. மற்ற வுரை கேட்டலும் ஏ மருண் நீக்கியார் தாமும் 	1330-1
 உற்ற பிணி உடல் நடுங்கி எழுந்து தொழ உயர் தவத்தோர் 	1330-2
 கற்றை வேணியர் அருளே காணும் இது கழல் அடைந்தோர் 	1330-3
 பற்று அறுப்பார் தமைப் பணிந்து பணி செய்வீர் எனப் பணித்தார் 	1330-4

 66. என்ற பொழுது அவர் அருளை எதிர் ஏற்றுக் கொண்டு இறைஞ்ச 	1331-1
 நின்ற தபோதனியாரும் நின்மலன் பேர் அருள் நினைந்து 	1331-2
 சென்று திரு வீரட்டம் புகுவதற்குத் திருக் கயிலைக் 	1331-3
 குன்று உடையார் திரு நீற்றை அஞ்சு எழுத்து ஓதிக் கொடுத்தார் 	1331-4

 67. திரு வாளன் திரு நீறு திலகவதியார் அளிப்ப 	1332-1
 பெரு வாழ்வு வந்தது எனப் பெருந்தகையார் பணிந்து ஏற்ற அங்கு 	1332-2
 உருவார அணிந்து தமக்குற்ற இடத்து உய்யும் நெறி 	1332-3
 தருவாராய்த் தம் முன்பு வந்தார் பின் தாம் வந்தார் 	1332-4

 68. நீறு அணிந்தார் அகத்து இருளும் நிறை கங்குல் புறத்து இருளும் 	1333-1
 மாற வரும் திருப் பள்ளி எழுச்சியினில் மாதவம் செய் 	1333-2
 சீர் அடியார் திரு அலகும் திரு மெழுக்கும் தோண்டியும் கொண்டு 	1333-3
 ஆறு அணிந்தார் கோயிலின் உள் அடைந்தவரைக் கொடு புக்கார் 	1333-4

 69. திரைக் கெடில வீரட்டானத்து இருந்த செங்கனக 	1334-1
 வரைச் சிலையார் பெரும் கோயில் தொழுது வலம் கொண்டு இறைஞ்சித் 	1334-2
 தரைத் தலத்தின் மிசை வீழ்ந்து தம்பிரான் திரு அருளால் 	1334-3
 உரைத் தமிழ் மாலைகள் சாத்தும் உணர்வு பெற உணர்ந்து உரைப்பார் 	1334-4

 70. நீற்றால் நிறைவு ஆகிய மேனியுடன் நிறை அன்பு உறு சிந்தையில் நேசம் மிக 	1335-1
 மாற்றார் புரம் மாற்றிய வேதியரை மருளும் பிணி மாயை அறுத்திடுவான் 	1335-2
 கூற்று ஆயினவாறு விலக்ககிலீர் என நீடிய கோதில் திருப்பதிகம் 	1335-3
 போற்றால் உலகு ஏழின் வரும் துயரம் போமாறு எதிர் நின்று புகன்றனரால் 	1335-4

 71. மன்னும் பதிகம் அது பாடியபின் வயிறு உற்று அடு சூலை மறப்பிணிதான் 	1336-1
 அந் நின்ற நிலைக் கண் அகன்றிடலும் அடியேன் உயிரோடு அருள் தந்தது எனாச் 	1336-2
 செந் நின்ற பரம் பொருள் ஆனவர் தம் திருவாரருள் பெற்ற சிறப்பு உடையோர் 	1336-3
 முன் நின்ற தெருட்சி மருட்சியினால் முதல்வன் கருணைக் கடல் மூழ்கினாரே 	1336-4

 72. அங்கங்கள் அடங்க உரோமம் எலாம் அடையப் புளகம் கண் முகிழ்த்து அலரப் 	1337-1
 பொங்கும் புனல் கண்கள் பொழிந்து இழியப் புவி மீது விழுந்து புரண்டு அயர்வார் 	1337-2
 இங்கு என் செயல் உற்ற பிழைப்பு அதனால் ஏறாத பெருந்திடர் ஏறிட நின் 	1337-3
 தங்கும் கருணைப் பெரு வெள்ளம் இடத் தகுமோ என இன்னன தாம் மொழிவார் 	1337-4

 73. பொய் வாய்மை பெருக்கிய புன் சமயப் பொறியில் சமண் நீசர் புறத் துறையாம் 	1338-1
 அவ்வாழ் குழியின் கண் விழுந்து எழுமாறு அறியாது மயங்கி அவம் புரிவேன் 	1338-2
 மை வாச நறும் குழல் மா மலையாள் மணவாளன் மலர்க்கழல் வந்து அடையும் 	1338-3
 இவ் வாழ்வு பெறத் தரு சூலையினுக்கு எதிர்செய் குறை என் கொல் எனத் தொழுவார் 1338-4

 74. மேவுற்ற இவ் வேலையில் நீடிய சீர் வீரட்டம் அமர்ந்த பிரான் அருளால் 	1339-1
 பாவுற்று அலர் செந்தமிழின் சொல் வளப் பதிகத் தொடைபாடிய பான்மையினால் 	1339-2
 நாவுக்கு அரசு என்று உலகு ஏழினும் நின் நன்நாமம் நயப்புற மன்னுக என்று 	1339-3
 யாவர்க்கும் வியப்புற மஞ்சு உறைவான் இடையே ஒருவாய்மை எழுந்ததுவே 	1339-4

 75. இத் தன்மை நிகழ்ந்துழி நாவின் மொழிக்கு இறை ஆகிய அன்பரும் இந் நெடுநாள் 1340-1
 சித்தம் திகழ் தீவினையேன் அடையும் திருவோ இது என்று தெருண்டு அறியா 	1340-2
 அத்தன்மையன் ஆகிய இராவணனுக்கு அருளும் கருணைத் திறமான அதன் 	1340-3
 மெய்த் தன்மை அறிந்து துதிப்பதுவே மேல் கொண்டு வணங்கினர் மெய்யுறவே 	1340-4

 76.  பரசும் கருணைப் பெரியோன் அருளப் பறி புன் தலையோர் நெறி பாழ்பட வந்து 1341-1
 அரசு இங்கு அருள் பெற்று உலகு உய்ந்தது எனா அடியார் புடை சூழ் அதிகைப் பதி தான் 1341-2
 முரசம் பட கந்துடி தண்ணுமை யாழ் முழவம் கிளை துந்துபி கண்டை உடன் 	1341-3
 நிரை சங்கு ஒலி எங்கும் முழங்குதலால் நெடு மா கடல் என்ன நிறைந்துளதே 	1341-4

 77. மையல் துறை ஏறி மகிழ்ந்து அலர் சீர் வாகீசர் மனத்தொடு வாய்மையுடன் 	1342-1
 மெய் உற்ற திருப்பணி செய்பவராய் விரவும் சிவ சின்னம் விளங்கிடவே 	1342-2
 எய்துற்ற தியானம் அறா உணர்வும் ஈறு இன்றி எழும் திருவாசகமும் 	1342-3
 கையில் திகழும் உழவாரமுடன் கைக் கொண்டு கலந்து கசிந்தனரே 	1342-4

 78. மெய்ம்மைப் பணி செய்த விருப்பு அதனால் விண்ணோர் தனி நாயகனார் கழலில் 1343-1
 தம் இச்சை நிரம்ப வரம் பெறும் அத் தன்மைப் பதி மேவியதா பதியார் 	1343-2
 பொய்மைச் சமயப் பிணி விட்டவர் முன் போதும் பிணி விட்டருளிப் பொருளா 	1343-3
 எம்மைப் பணிகொள் கருணைத் திறம் இங்கு யார் பெற்றனர் என்ன இறைஞ்சினரே 1343-4

 79. இன்ன தன்மையில் இவர் சிவ நெறியினை எய்தி 	1344-1
 மன்னு பேர் அருள் பெற்று இடர் நீங்கைய வண்ணம் 	1344-2
 பன்னு தொன்மையில் பாடலி புத்திர நகரில் 	1344-3
 புன்மை யே புரி அமணர் தாம் கேட்டு அது பொறாராய் 	1344-4

 80. தரும சேனர்க்கு வந்த அத் தடுப்ப அரும் சூலை 	1345-1
 ஒருவராலும் இங்கு ஒழிந்திடாமையின் அவர் உய்யப் போய்ப் 	1345-2
 பெருகு சைவராய்ப் பெயர்ந்து தம் பிணி ஒழித்து உய்ந்தார் 	1345-3
 மருவு நம் பெரும் சமயம் வீழ்ந்தது என மருள்வார் 	1345-4

 81. மலையும் பல் சமயங்களும் வென்று மற்றவரால் 	1346-1
 நிலையும் பெற்ற இந்நெறி இனி அழிந்தது என்று அழுங்கிக் 	1346-2
 கொலையும் பொய்மையும் இலம் என்று கொடுமையே புரிவோர் 	1346-3
 தலையும் பீலியும் தாழ வந்து ஒரு சிறை சார்ந்தார் 	1346-4

 82. இவ்வகைப் பல அமணர்கள் துயருன் ஈண்டி 	1347-1
 மெய் வகைத் திறம் அறிந்திடில் வேந்தனும் வெகுண்டு 	1347-2
 சைவனாகி நம் விருத்தியும் தவிர்க்கும் மற்று இனி நாம் 	1347-3
 செய்வது என் என வஞ்சனை தெரிந்து சித்திரிப்பார் 	1347-4

 83.  தவ்வை கைவத்து நிற்றலின் தரும சேனரும் தாம் 	1348-1
 பொய் வகுத்தது ஓர் சூலை தீர்ந்திலது எனப் போய் இங்கு 	1348-2
 எவ்வ மாக அங்கு எய்தி நம் சமய அங்கனமும் 	1348-3
 தெய்வ நிந்தையும் செய்தனர் எனச் சொலத் தெளிந்தார் 	1348-4

 84. சொன்ன வண்ணமே செய்வது துணிந்த துன் மதியோர் 	1349-1
 முன்னம் நாம் சென்று முறைப்படுவோம் என முயன்றே 	1349-2
 இன்ன தன்மையில் இருள் குழாம் செல்வது போல 	1349-3
 மன்னன் ஆகிய பல்லவன் நகரில் வந்து அணைந்தார் 	1349-4

 85. உடை ஒழிந்து ஒரு பேச்சு இடை இன்றி நின்று உண்போர் 	1350-1
 கடை அணைந்தவன் வாயில் காவலருக்கு நாங்கள் 	1350-2
 அடைய வந்தமை அரசனுக்கு அறிவியும் என்ன 	1350-3
 இடை அறிந்து புக்க வரும் தம் இறைவனுக்கு இசைப்பார் 	1350-4

 86. அடிகண்மார் எல்லாரும் ஆகுலமாய் மிக அழிந்து 	1351-1
 கொடி நுடங்கு திருவாயில் புறத்து அணைந்தார் எனக் கூற 	1351-2
 வடி நெடுவேல் மன்னவனும் மற்றவர் சார்பு ஆதலினால் 	1351-3
 கடிது அணைவான் அவர்க்கு உற்றது என் கொல் எனக் கவன்று உரைத்தான் 	1351-4

 87. கடை காவல் உடையார்கள் புகுத விடக் காவலன் பால் 	1352-1
 நடை ஆடும் தொழில் உடையார் நண்ணித் தாம் எண்ணியவாறு 	1352-2
 உடையார் ஆகிய தரும சேனர் பிணி உற்றாராய்ச் 	1352-3
 சடையானுக்கு ஆளாய் நின் சமயம் ஒழித்தார் என்றார் 	1352-4

 88. விரை அலங்கல் பல்லவனும் அது கேட்டு வெகுண்டு எழுந்து 	1353-1
 புரை உடைய மனத்தினராய் போவதற்குப் பொய்ப் பிணி கொண்டு 	1353-2
 உரை சிறந்த சமயத்தை அழித்து ஒழியப் பெறுவதே 	1353-3
 கரையில் தவத்தீர் இதனுக்கு என் செய்வது எனக் கனன்றான் 	1353-4

 89.  தலை நெறி ஆகிய சமயம் தன்னை அழித்து உன்னுடைய 	1354-1
 நிலை நின்ற தொல் வரம்பின் நெறி அழித்த பொறி இலியை 	1354-2
 அலை புரிவாய் எனப் பரவி வாயால் அஞ்சாது உரைத்தார் 	1354-3
 கொலை புரியா நிலை கொண்டு பொய் ஒழுகும் அமண் குண்டர் 	1354-4

 90. அருள் கொண்ட உணர்வு இன்றி நெறிகோடி அறிவென்று 	1355-1
 மருள் கொண்ட மன்னவனும் மந்திரிகள் தமை நோக்கித் 	1355-2
 தெருள் கொண்டோர் இவர் சொன்ன தீயோனைச் செறுவதற்குப் 	1355-3
 பொருள் கொண்டு விடாது என் பால் கொடுவாரும் எனப் புகன்றான் 	1355-4

 91. அரசனது பணிதலை நின்ற அமைச்சர்களும் அந்நிலையே 	1356-1
 முரசு அதிரும் தானையொடு முன் சென்று முகில் சூழ்ந்து 	1356-2
 விரை செறியும் சோலை சூழ் திருவதிகை தனை மேவி 	1356-3
 பரசமயப் பற்று அறுத்த பான்மையினார் பால் சென்றார் 	1356-4

 92. சென்று அணைந்த அமைச்சர் உடன் சேனை வீரரும் சூழ்ந்து 	1357-1
 மின் தயங்கு புரிவேணி வேதியனார் அடியவரை 	1357-2
 இன்று நுமை அரசன் அழைக்க எமை விடுத்தான் போதும் என 	1357-3
 நின்றவரை நேர் நோக்கி நிறை தவத்தோர் உரை செய்வார் 	1357-4

 93. நாம் ஆர்க்கும் குடி அல்லோம் என்று எடுத்து நான்மறையின் 	1358-1
 கோமானை நதியின் உடன் குளிர் மதி வாழ் சடை யானைத் 	1358-2
 தேமாலைச் செந்தமிழின் செழும் திருத் தாண்டகம் பாடி 	1358-3
 ஆமாறு நீர் அழைக்கும் அடைவிலம் என்று அருள் செய்தார் 	1358-4

 94.  ஆண்ட அரசருள் செய்யக் கேட்ட வரும் அடி வணங்கி 	1359-1
 வேண்டியவர்க் கொண்டு ஏக விடை உகைத்தார் திருத்தொண்டர் 	1359-2
 ஈண்டு வரும் வினைகளுக்கு எம்பிரான் உளன் என்று இசைந்து இருந்தார் 	1359-3
 மூண்ட சினப் போர் மன்னன் முன் அணைந்து அங்கு அறிவித்தார் 	1359-4

 95. பல்லவனும் அது கேட்டுப் பாங்கு இருந்த பாய் உடுக்கை 	1360-1
 வல் அமணர் தமை நோக்கி மற்று அவனைச் செய்வது இனிச் 	1360-2
 சொல்லும் என அறம் துறந்து தமக்கு உறுதி அறியாத 	1360-3
 புல் அறிவோர் அஞ்சாது நீற்று அறையில் இடப் புகன்றார் 	1360-4

 96. அருகு அணைந்தார் தமை நோக்கி அவ் வண்ணம் செய்க எனப் 	1361-1
 பெருகு சினக் கொடுங் கோலான் மொழிந்திடலும் பெருந் தகையை 	1361-2
 உருகு பெரும் தழல் வெம்மை நீற்று அறையின் உள் இருத்தித் 	1361-3
 திருகு கரும் தாள் கொளுவிச் சேமங்கள் செய்து அமைத்தார் 	1361-4

 97.  ஆண்ட அரசு அதன் அகத்துள் அணைந்த பொழுது அம்பலத்துத் 	1362-1
 தாண்டவம் முன் புரிந்து அருளும் தாள் நிழலைத் தலைக் கொண்டே 	1362-2
 ஈண்டு வரும் துயர் உளவோ ஈசன் அடியார்க்கு என்று 	1362-3
 மூண்டமனம் நேர் நோக்கி முதல்வனையே தொழுது இருந்தார் 	1362-4

 98. வெய்ய நீற்று அறையது தான் வீங்கு இளவேனில் பருவம் 	1363-1
 தை வரும் தண் தென்றல் அணை தண் கழுநீர்த் தடம் போன்று 	1363-2
 மொய் ஒளி வெண் நிலவு அலர்ந்து முரன்ற யாழ் ஒலியினதாய் 	1363-3
 ஐயர் திருவடி நீழல் அருள் ஆகி குளிர்ந்ததே 	1363-4

 99. மாசு இல் மதி நீடுபுனல் மன்னி வளர் சென்னியனைப் 	1364-1
 பேச இனியானை உலக ஆளுடைய பிஞ்ஞகனை 	1364-2
 ஈசனை எம்பெருமானை எவ் உயிரும் தருவானை 	1364-3
 ஆசை இல் ஆரா அமுதை அடி வணங்கி இனிது இருந்தார் 	1364-4

 100.  ஓர் எழுநாள் கழிந்து அதன்பின் உணர்வில் அமணரை அழைத்துப் 	1365-1
 பாரும் இனி நீற்று அறையை என உரைத்தான் பல்லவனும் 	1365-2
 கார் இருண்ட குழாம் போலும் உரு உடைய கார் அமணர் 	1365-3
 தேரும் நிலை இல்லாதார் நீற்று அறையைத் திறந்தார்கள் 	1365-4

 101.  ஆனந்த வெள்ளத்தின் இடை மூழ்கி அம்பலவர் 	1366-1
 தேன் உந்து மலர் பாதத்து அமுது உண்டு தெளிவு எய்தி 	1366-2
 ஊனம் தான் இலர் ஆகி உவந்து இருந்தார் தமைக் கண்டே 	1366-3
 ஈனம் தங்கியது இலதாம் என்ன அதிசயம் என்றார் 	1366-4

 102.  அதிசயம் அன்றிது முன்னை அமண் சமயச் சாதகத்தால் 	1367-1
 இது செய்து பிழைத்து இருந்தான் என வேந்தற்கு உரை செய்து 	1367-2
 மதி செய்வது இனிக் கொடிய வல் விடம் ஊட்டுவது என்று 	1367-3
 முதிர வரும் பாதகத்தோர் முடை வாயால் மொழிந்தார்கள் 	1367-4

 103.  ஆங்கு அது கேட்டலும் கொடிய அமண் சார்பால் கெடு மன்னன் 	1368-1
 ஓங்கு பெருமையினால் நஞ்சு ஊட்டும் என உரைப்பத் 	1368-2
 தேங்காதார் திருநாவுக்கரையரை அத் தீய விடப் 	1368-3
 பாங்கு உடைய பால் அடிசில் அமுது செயப் பண்ணினார் 	1368-4

 104.  நஞ்சும் அமுது ஆம் எங்கள் நாதன் அடியார்க்கு என்று 	1369-1
 வஞ்சம் மிகு நெஞ்சு உடையார் வஞ்சனையாம் படி அறிந்தே 	1369-2
 செஞ்சடையார் சீர் விளக்கும் திறல் உடையார் தீ விடத்தால் 	1369-3
 வெஞ்சமணர் இடுவித்த பால் அடிசில் மிசைந்து இருந்தார் 	1369-4

 105. பொடி ஆர்க்கும் திருமேனிப் புனிதர்க்குப் புவனம்கள் 	1370-1
 முடிவாக்கும் துயர் நீங்க முன்னை விடம் அமுதானால் 	1370-2
 படியார்க்கும் அறி அரிய பசுபதியார் தம் உடைய 	1370-3
 அடியார்க்கு நஞ்சு அமுதம் ஆவது தான் அற்புதமோ 	1370-4

 106. அவ் விடத்தை ஆண்ட அரசு அமுது செய்து முன் இருப்ப 	1371-1
 வெவ் விடமும் அமுது ஆயிற்று என அமணர் வெருக் கொண்டே 	1371-2
 இவ் விடத்தில் இவன் பிழைக்கில் எமக்கு எல்லாம் இறுதி எனத் 	1371-3
 தெவ் விடத்துச் செயல் புரியும் காவலற்குச் செப்புவார் 	1371-4

 107.  நஞ்சு கலந்து ஊட்டிடவும் நம் சமயத்தினில் விடம் தீர் 	1372-1
 தஞ்சமுடை மந்திரத்தால் சாதியா வகை தடுத்தான் 	1372-2
 எஞ்சும் வகை அவற்கு இலதேல் எம் உயிரும் நின் முறையும் 	1372-3
 துஞ்சுவது திடம் என்றார் சூழ் வினையின் துறை நின்றார் 	1372-4

 108. மற்றவர் தம் மொழி கேட்டு மதி கெட்ட மன்னவனும் 	1373-1
 செற்ற அவனை இனிக் கடியும் திறம் எவ்வாறு எனச் செப்ப 	1373-2
 உற்றவரும் மந்திர சாதகம் நாங்கள் ஒழித்திட நின் 	1373-3
 கொற்ற வயக் களிற்று எதிரே விடுவது எனக் கூறினார் 	1373-4

 109. மா பாவிக் கடை அமணர் வாகீசத் திருவடியாம் 	1374-1
 கா பாலி அடியவர் பால் கடக் களிற்றை விடுக என்னப் 	1374-2
 பூ பாலர் செயல் மேற்கொள் புலைத் தொழிலோன் அவர் தம் மேல் 	1374-3
 கோ பாதி சயமான கொலைக் களிற்றை விடச் சொன்னான் 	1374-4

 110. கூடத்தைக் குத்தி ஒரு குன்றம் எனப் புறப்பட்டு 	1375-1
 மாடத்தை மறத்திட்டு மண்டபங்கள் எடுத்து எற்றித் 	1375-2
 தாடத்தில் பரிக்காரர் தலை இடறிக் கடக் களிற்றின் 	1375-3
 வேடத்தால் வரும் கூற்றின் மிக்கது ஒரு விறல் வேழம் 	1375-4

 111. பாசத் தொடை நிகளத் தொடர்பறியத் தறி முறியா 	1376-1
 மீ சுற்றிய பறவைக் குலம் வெருவத் துணிவிலகா 	1376-2
 ஊசல் கரம் எதிர் சுற்றிட உரறிப் பரி உழறா 	1376-3
 வாசக் கட மழை முற்பட மதவெற்பு எதிர் வருமால் 	1376-4

 112. இடி உற்று எழும் ஒலியில் திசை இப உட்கிட அடியில் 	1377-1
 படி புக்கு உற நெளியப் படர் பவனக் கதி விசையில் 	1377-2
 கடிது உற்று அடு செயலில் கிளர் கடலில் படு கடையின் 	1377-3
 முடிவில் கனல் என முன் சினம் முடுகிக் கடுகியதே 	1377-4

 113. மாடு உற்று அணை இவுளிக் குலம் மறியச் செறி வயிரக் 	1378-1
 கோடுற்று இரு பிளவிட்டு அறு குறை கைக்கொடு முறியச் 	1378-2
 சாடுற்றிடு மதில் தெற்றிகள் சரியப் புடை அணி செற்று 	1378-3
 ஆடுற்று அகல் வெளியுற்று அது அவ்வடர் கைக்குல வரையே 	1378-4

 114. பாவக் கொடு வினை முற்றிய படிறுற்று அடு கொடியோர் 	1379-1
 நாவுக்கரசர் எதிர் முற்கொடு நணுகிக் கருவரை போல் 	1379-2
 ஏவிச் செறு பொருகைக் கரியினை உய்த்திட வெருளார் 	1379-3
 சேவிற்று திகழ்பவர் பொன் கழல் தெளிவு உற்றனர் பெரியோர் 	1379-4

 115. அண்ணல் அருந் தவ வேந்தர் ஆணை தம் மேல் வரக் கண்டு 	1380-1
 விண்ணவர் தம் பெருமானை விடை உகந்து ஏறும் பிரானைச் 	1380-2
 சுண்ண வெண் சந்தனச் சாந்து தொடுத்த திருப் பதிகத்தை 	1380-3
 மண் உலகு உய்ய எடுத்து மகிழ் உடனே பாடுகின்றார் 	1380-4

 116. வஞ்சகர் விட்ட சினப் போர் மதவெங் களிற்றினை நோக்கிச் 	1381-1
 செஞ்சடை நீள் முடிக் கூத்தர் தேவர்க்கும் தேவர் பிரானார் 	1381-2
 வெம்ஞ்சுடர் மூவிலைச் சுல வீரட்டர் தம் அடியோம் நாம் 	1381-3
 அஞ்சுவது இல்லை என்று என்றே அருந்தமிழ் பாடி உறைந்தார் 	1381-4

 117. தண் தமிழ் மாலைகள் பாடித் தம் பெருமான் சரணாகக் 	1382-1
 கொண்ட கருத்தில் இருந்து குலாவிய அன்புறு கொள்கைத் 	1382-2
 தொண்டரை முன் வலமாகச் சூழ்ந்து எதிர் தாழ்ந்து நிலத்தில் 	1382-3
 எண் திசையோர்களும் காண இறைஞ்சி எழுந்தது வேழம் 	1382-4

 118.  ஆண்ட அரசை வணங்கி அஞ்சி அவ் வேழம் பெயரத் 	1383-1
 தூண்டிய மேல் மறப் பாகர் தொடக்கி அடத்துத் திரிந்து 	1383-2
 மீண்டும் அதனை அவர் மேல் மிறை செய்து காட்டிட வீசி 	1383-3
 ஈண்டு அவர் தங்களையே கொன்று அமணர் மேல் ஓடிற்று எதிர்ந்தே 	1383-4

 119.  ஓடி அருகர்கள் தம்மை உழறி மிதித்துப் பிளந்து 	1384-1
 நாடிப் பலரையும் கொன்று நகரம் கலங்கி மறுக 	1384-2
 நீடிய வேலை கலக்கும் நெடும் மந்தரகிரி போல 	1384-3
 ஆடி அவ் யானையும் மன்னற்கு ஆகுலம் ஆக்கியது அன்றே 	1384-4

 120. யானையின் கையில் பிழைத்த வினை அமண் கையர்கள் எல்லாம் 	1385-1
 மானம் அழிந்து மயங்கு வருந்திய சிந்தையர் ஆகித் 	1385-2
 தானை நில மன்னன் தாளில் தனித் தனி வீழ்ந்து புலம்ப 	1385-3
 மேன்மை நெறி விட்ட வேந்தன் வெகுண்டு இனிச் செய்வது என் என்றான் 	1385-4

 121. நங்கள் சமயத்தின் நின்றே நாடிய முட்டி நிலையால் 	1386-1
 எங்கள் எதிர் ஏறு அழிய யானையால் இவ் வண்ணம் நின் சீர் 	1386-2
 பங்கப் படுத்தவன் போகப் பரிபவம் தீரும் உனக்குப் 	1386-3
 பொங்கழல் போக அதன் பின் புகை அகன்றால் என என்றார் 	1386-4

 122. அல்லிருள் அன்னவர் கூற அரும் பெரும் பாவத்தவன் தான் 	1387-1
 தொல்லைச் சமயம் அழித்துத் துயரம் விளைவித்தவன் தன்னைச் 	1387-2
 சொல்லும் இனிச் செய்வது என்னச் சூழ்ச்சி முடிக்கும் தொழிலோர் 	1387-3
 கல்லுடன் பாசம் பிணித்துக் கடல் இடைப் பாய்ச்சுவது என்றார் 	1387-4

 123.  ஆங்கு அது கேட்ட அரசன் அவ்வினை மாக்களை நோக்கித் 	1388-1
 தீங்கு புரிந்தவன் தன்னைச் சேமம் உறக் கொடு போகிப் 	1388-2
 பாங்கு ஒரு கல்லில் அணைத்துப் பாசம் பிணித்து ஓர் படகில் 	1388-3
 வீங்கு ஒலி வேலையில் எற்றி வீழ்த்துமின் என்று விடுத்தான் 	1388-4

 124. அவ் வினை செய்திடப் போகும் அவருடன் போயர் உகந்த 	1389-1
 வெவ்வினை யாளரும் சென்று மேவிட நாவுக்கரசர் 	1389-2
 செவ்விய தம் திரு உள்ளம் சிறப்ப அவருடன் சென்றார் 	1389-3
 பவ்வத்தில் மன்னவன் சொன்னபடி முடித்தார் அப்பாதகர் 	1389-4

 125. அப்பரிசு அவ்வினை முற்றி அவர் அகன்று ஏகிய பின்னர் 	1390-1
 ஒப்பரும் ஆழ் கடல் புக்க உறைப்பு உடை மெய்த்தொண்டர் தாமும் 	1390-2
 எப்பரிசு ஆயினும் ஆக ஏத்துவன் எந்தையை என்று 	1390-3
 செப்பிய வண் தமிழ் தன்னால் சிவன் அஞ்செழுத்தும் துதிப்பார் 	1390-4

 126.  சொல் துணை வேதியன் என்னும் தூய் மொழி 	1391-1
 நல் தமிழ் மாலை ஆம் நமச்சிவாய என்று 	1391-2
 அற்ற முன் காக்கும் அஞ்சு எழுத்தை அன்பொடு 	1391-3
 பற்றி உணர்வினால் பதிகம் பாடினார் 	1391-4

 127. பெருகிய அன்பினர் பிடித்த பெற்றியால் 	1392-1
 அருமலரோன் முதல் அமரர் வாழ்த்துதற்கு 	1392-2
 அரிய அஞ்சு எழுத்தையும் அரசு போற்றிடக் 	1392-3
 கரு நெடுங்கடலின் உட் கல் மிதந்ததே 	1392-4

 128. அப் பெருங்கல்லும் அங்கு அரசு மேல் கொளத் 	1393-1
 தெப்ப மாய் மிதத்தலில் செறிந்த பாசமும் 	1393-2
 தப்பியது அதன் மிசை இருந்த தாவில் சீர் 	1393-3
 மெய்ப் பெரும் தொண்டனார் விளங்கித் தோன்றினார் 	1393-4

 129. இருவினைப் பாசமும் மலக்கல் ஆர்த்தலின் 	1394-1
 வருபவக் கடலில் வீழ் மாக்கள் ஏறிட 	1394-2
 அருளும் மெய் அஞ்செழுத்து அரசை இக்கடல் 	1394-3
 ஒரு கல் மேல் ஏற்று இடல் உரைக்க வேண்டுமோ 	1394-4

 130. அருள் நயந்து அஞ்செழுத்து ஏத்தப் பெற்ற அக் 	1395-1
 கருணை நாவரசினைத் திரைக் கரங்களால் 	1395-2
 தெருள் நெறி நீர்மையின் சிரத்தில் தாங்கிட 	1395-3
 வருணனும் செய்தனன் முன்பு மா தவம் 	1395-4

 131. வாய்ந்த சீர் வருணனே வாக்கின் மன்னரைச் 	1396-1
 சேர்ந்தடை கருங்கலே சிவிகை ஆயிட 	1396-2
 ஏந்தியே கொண்டு எழுந்து அருள் வித்தனன் 	1396-3
 பூந்திருப் பாதிரிப் புலியூர்ப் பாங்கரில் 	1396-4

 132. அத் திருப் பதியினில் அணைந்த அன்பரை 	1397-1
 மெய்த் தவக் குழாம் எலாம் மேவி ஆர்த்தெழ 	1397-2
 எத் திசையைனும் அர என்னும் ஓசைபோல் 	1397-3
 தத்து நீர்ப் பெருங்கடல் தானும் ஆர்த்ததே 	1397-4

 133. தொழும் தகை நாவினுக்கு அரசும் தொண்டர் முன் 	1398-1
 செழும் திருப் பாதிரிப் புலியூர்த் திங்கள் வெண் 	1398-2
 கொழுந்து அணி சடையாரைக் கும்பிட்டு அன்புற 	1398-3
 விழுந்து எழுந்து அருள் நெறி விளங்கப் பாடுவார் 	1398-4

 134.  ஈன்றாளும் ஆய் எனக்கு எந்தையும் ஆகி என எடுத்துத் 	1399-1
 தோன்றாத் துணையாய் இருந்தனன் தன் அடியோங் கட்கு என்று 	1399-2
 வான் தாழ் புனல் கங்கை வாழ் சடையானை மற்று எவ் உயிர்க்கும் 	1399-3
 சான்றாம் ஒருவனைத் தண் தமிழ் மாலைகள் சாத்தினாரே 	1399-4

 135. மற்றும் இணையன வண் தமிழ் மாலைகள் பாடி வைகி 	1400-1
 வெற்றி மழவிடை வீரட்டர் பாதம் மிக நினைவால் 	1400-2
 உற்றதொர் காதலின் அங்கு நின்று ஏகி ஒன்னார் புரங்கள் 	1400-3
 செற்றவர் வாழும் திருவதிகைப் பதி சென்று அடைவார் 	1400-4

 136. தேவர் பிரான் திரு மாணிக் குழியும் தினை நகரும் 	1401-1
 மேவினர் சென்று விரும்பிய சொல் மலர் கொண்டு இறைஞ்சிப் 	1401-2
 பூவலர் சோலை மணமடி புல்லப் பொருள் மொழியின் 	1401-3
 காவலர் செல்வத் திருக் கெடிலத்தைக் கடந்து அணைந்தார் 	1401-4

 137. வெஞ்சமண் குண்டர்கள் செய்வித்த தீயம் இறைகள் எல்லாம் 	1402-1
 எஞ்ச வென்று ஏறிய இன் தமிழ் ஈசர் எழுந்து அருள 	1402-2
 மஞ்சிவர் மாடத் திருவதிகைப் பதி வாணர் எல்லாம் 	1402-3
 தம் செயல் பொங்கத் தழங்கு ஒலி மங்கலம் சாற்றல் உற்றார் 	1402-4

 138. மணி நெடுந் தோரணம் வண் குலைப் பூகம் மடற் கதலி 	1403-1
 இணையுற நாட்டி எழு நிலைக் கோபுரம் தெற்றி எங்கும் 	1403-2
 தணிவில் பெருகொளித் தாமங்கள் நாற்றிச் செஞ் சாந்து நீவி 	1403-3
 அணி நகர் முன்னை அணி மேல் அணி செய்து அலங்கரித்தார் 	1403-4

 139. மன்னிய அன்பின் வள நகர் மாந்தர் வயங்கு இழையார் 	1404-1
 இன்னிய நாதமும் ஏழ் இசை ஓசையும் எங்கும் விம்மப் 	1404-2
 பொன் இயல் சுண்ணமும் பூவும் பொரிகளும் தூவி எங்கும் 	1404-3
 தொல் நகரின் புறம் சூழ்ந்து எதிர் கொண்டனர் தொண்டரையே 	1404-4

 140. தூய வெண் நீறு துதைந்த பொன் மேனியும் தாழ் வடமும் 	1405-1
 நாயகன் சேவடி தைவரும் சிந்தையும் நைந்து உருகிப் 	1405-2
 பாய்வது போல் அன்பு நீர் பொழி கண்ணும் பதிகச் செஞ் சொல் 	1405-3
 மேய செவ்வாயும் உடையார் புகுந்தனர் வீதி உள்ளே 	1405-4

 141. கண்டார்கள் கை தலைமேல் குவித்து இந்தக் கருணை கண்டால் 	1406-1
 மிண்டாய செங்கை அமண்கையர் தீங்கு விளைக்கச் செற்றம் 	1406-2
 உண்டாய்¢ன வண்ணம் எவ் வண்ணம் என்று உரைப்பார்கள் பின்னும் 	1406-3
 தொண்டு ஆண்டு கொண்ட பிரானைத் தொழுது துதித்தனரே 	1406-4

 142. இவ் வண்ணம் போல எனைப் பல மாக்கள் இயம்பி ஏத்த 	1407-1
 மெய் வண்ண நீற்று ஒளி மேவும் குழாங்கள் விரவிச் செல்ல 	1407-2
 அவ் வண்ணம் நண்ணிய அன்பரும் வந்து எய்தி அம்பவளச் 	1407-3
 செவ் வண்ணர் கோயில் திரு வீரட்டானத்தைச் சேர்ந்தனரே 	1407-4

 143. உம்பர் தம் கோனை உடைய பிரானை உள் புக்கு இறைஞ்சி 	1408-1
 நம்புறும் அன்பின் நயப்புறு காதலினால் திளைத்தே 	1408-2
 எம் பெருமான் தனை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தது என்று 	1408-3
 தம் பரிவால் திருத் தாண்டகச் செந்தமிழ் சாற்றி வாழ்ந்தார் 	1408-4

 144. அரி அயனுக்கு அரியானை அடியவருக்கு எளியானை 	1409-1
 விரி புனல் சூழ் திருவதிகை வீரட்டானத்து அமுதைத் 	1409-2
 தெரிவரிய பெரும் தன்மைத் திருநாவுக் கரசு மனம் 	1409-3
 பரிவுறு செந்தமிழ்ப் பாட்டுப் பலபாடிப் பணி செயும் நாள் 	1409-4

 145. புல் அறிவில் சமணர்க்காப் பொல்லாங்கு புரிந்து ஒழுகும் 	1410-1
 பல்லவனும் தன்னுடைய பழவினைப் பாசம் பறிய 	1410-2
 அல்லல் ஒழிந்து அங்கு எய்தி ஆண்ட அரசினைப் பணிந்து 	1410-3
 வல்லமணர் தமை நீத்து மழவிடையோன் தாள் அடைந்தான் 	1410-4

 146. வீடு அறியாச் சமணர் மொழி பொய் என்று மெய் உணர்ந்த 	1411-1
 காடவனும் திருவதிகை நகரின் கண் கண் நுதற்குப் 	1411-2
 பாடலி புத்திரத்தில் அமண் பள்ளியொடு பாழிகளும் 	1411-3
 கூட இடித்துக் கொணர்ந்து குண பரவீச்சரம் எடுத்தான் 	1411-4

 147. இந் நாளில் திருப்பணிகள் செய்கின்ற இன் தமிழுக்கு 	1412-1
 மன்னான வாகீசத் திருமுனியும் மதிச் சடைமேல் 	1412-2
 பன்னாகம் அணிந்தவர் தம் பதி பலவும் சென்று இறைஞ்சிச் 	1412-3
 சொன்னாமத் தமிழ் புனைந்து தொண்டு செய்வான் தொடர்ந்து எழுவார் 	1412-4

 148. திருவதிகைப் பதி மருங்கு திரு வெண்ணெய் நல்லூரும் 	1413-1
 அருளும் திரு ஆமாத்தூர் திருக்கோவலூர் முதலா 	1413-2
 மருவு திருப்பதி பிறவும் வணங்கி வளத் தமிழ் பாடிப் 	1413-3
 பெருகு விருப்புடன் விடையார் மகிழ் பெண்ணாகிடம் அணைந்தார் 	1413-4

 149. கார் வளரும் மாடங்கள் கலந்த மறை ஒலி வளர்க்கும் 	1414-1
 சீர் உடை அந்தணர் வாழும் செழும் பதியின் அகத்து எய்தி 	1414-2
 வார் சடையார் மன்னு திருத் தூங்கானை மாடத்தைப் 	1414-3
 பார் பரவும் திருமுனிவர் பணிந்து ஏத்திப் பரவினார் 	1414-4

 150.  புன் நெறியாம் அமண் சமயத் தொடக்குண்டு போந்தவுடன் 	1415-1
 தன்னுடனே உயிர்வாழத் தரியேன் நான் தரிப்பதனுக்கு 	1415-2
 என்னுடைய நாயக நின் இலச்சினை இட்டு அருள் என்று 	1415-3
 பன்னு செழுந்தமிழ் மாலை முன் நின்று பாடுவார் 	1415-4

 151.  பொன் ஆர்ந்த திருவடிக்கு என் விண்ணப்பம் என்று எடுத்து 	1416-1
 முன் ஆகி எப் பொருட்கும் முடிவாகி நின்றானைத் 	1416-2
 தன் ஆகத்து உமை பாகம் கொண்டானைச் சங்கரனை 	1416-3
 நல் நாமத் திருவிருத்தம் நலம் சிறக்கப் பாடுதலும் 	1416-4

 152. நீடு திருத் தூங்கானை மாடத்து நிலவு கின்ற 	1417-1
 ஆடக மேருச் சிலையான் அருளால் ஓர் சிவபூதம் 	1417-2
 மாடொருவர் அறியாமே வாகீசர் திருத் தோலில் 	1417-3
 சேடுயர் மூவிலைச் சூலம் சின விடையின் உடன் சாத்த 	1417-4

 153.  ஆங்கவர் தம் திருத் தோளில் ஆர்ந்த திரு இலச்சினையைத் 	1418-1
 தாம் கண்டு மனம் களித்துத் தம் பெருமான் அருள் நினைந்து 	1418-2
 தூங்கருவி கண் பொழியத் தொழுது விழுந்து ஆர்வத்தால் 	1418-3
 ஓங்கிய சிந்தையர் ஆகி உய்ந்து ஒழிந்தேன் என எழுந்தார் 	1418-4

 154. தூங்கானை மாடத்துச் சுடர்க் கொழுந்தின் அடிபரவிப் 	1419-1
 பாங்காகத் திருத் தொண்டு செய்து பயின்று அமரும் நாள் 	1419-2
 பூங்கானம் மணம் கமழும் பொருவில் திரு அரத் துறையும் 	1419-3
 தேங்காவின் முகில் உறங்கும் திருமுது குன்றமும் பணிந்து 	1419-4

 155. வண்தமிழ் மென் மலர் மாலை புனைந்தருளி மருங்குள்ள 	1420-1
 தண் துறை நீர்ப் பதிகளிலும் தனி விடையார் மேவிடம் 	1420-2
 கொண்டருளும் தானங்கள் கும்பிட்டுக் குண திசை மேல் 	1420-3
 புண்டரிகத் தடம் சூழ்ந்த நிவாக் கரையே போதுவார் 	1420-4

 156.  ஆனாத சீர்த் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற 	1421-1
 வானாறு புடை பரக்கும் மலர்ச் சடையார் அடி வணங்கி 	1421-2
 ஊனாலும் உயிராலும் உள்ள பயன் கொள நினைந்து 	1421-3
 தேனாரும் மலர்ச் சோலைத் திருப்புலியூர் மருங்கு அணைந்தார் 	1421-4

 157. நாவுக் கரசரும் இருவர்க்கு அரியவர் நடம் ஆடிய திரு எல்லை பால் 	1422-1
 மேவித் தலம் உற மெய்யில் தொழுத பின் மேல் மேல் எழுதரும் விரைவோடும் 	1422-2
 காவில் களி மயில் மகிழ் உற்று எதிர் எதிர் ஆடக் கடி கமழ் கமலம் சூழ் 	1422-3
 வாவித் தடமலர் வதனம் பொலிவுறு மருதத் தண்பணை வழி வந்தார் 	1422-4

 158. முருகில் செறி இதழ் முளரிப் படுகரில் முது மேதிகள் புதுமலர் மேயும் 	1423-1
 அருகில் செறிவனம் என மிக்குயர் கழை அளவில் பெருகிட வளர் இக்குப் 	1423-2
 பெருகிப் புடை முதிர் தரளம் சொரிவன பெரியோர் அவர் திருவடிக் கண்டு 	1423-3
 உருகிப் பரிவுறு புனல் கண் பொழிவன என முன்புள வயல் எங்கும் 	1423-4

 159. அறிவில் பெரியவர் அயல் நெல் பணை வயல் அவை பிற்படும் வகை அணைகின்றார் 1424-1
 பிறவிப் பகை நெறி விடுவீர் இருவினை பெருகித் தொடர்பிணி உறுபாசம் 	1424-2
 பறிவுற்றிட அணையுமின் என்று இருபுடை பயில் சூழ் சினை மிசை குயில் கூவும் 	1424-3
 செறிவில் பலதரு நிலையில் பொலிவுறு திரு நந்தன வனம் எதிர் கண்டார் 	1424-4

 160. அவர் முன் பணிவொடு தொழுது அங்கு அணைவுற அணி கொம்பரின் மிசை அருகு எங்கும் 1425-1
 தவம் முன் புரிதலில் வரு தொண்டு எனும் நிலைதலை நின்று உயர் தமிழ் இறையோராம் 1425-2
 இவர் தம் திருவடிவது கண்டு அதிசயம் என வந்து எதிர் அரகர என்றே 	1425-3
 சிவ முன் பயில் மொழி பகர் கின்றன வளர் சிறை மென் கிளியொடு சிறு பூவை 	1425-4

 161. அஞ்சொல் திருமறை அவர் முன் பகர்தலும் அவரும் தொழுது முன் அளிகூரும் 	1426-1
 நெஞ்சில் பெருகிய மகிழ்வும் காதலும் நிறை அன்பொடும் உரை தடுமாறச் 	1426-2
 செஞ்சொல் திருமறை மொழி அந்தணர் பயில் தில்லைத் திரு நகர் எல்லைப்பால் மஞ்சில் 1426-3
 பொலி நெடு மதில் சூழ் குடதிசை மணி வாயில் புறம் வந்துற்றார் 	1426-4

 162. அல்லல் பவம் அற அருளும் தவ முதல் அடியார் எதிர் கொள அவரோடும் 	1427-1
 மல்லல் புனல் கமழ் மாடே வாயிலின் வழிபுக்கு எதிர் தொழுது அணை உற்றார் 	1427-2
 கல்வித் துறை பல வரு மா மறை முதல் கரை கண்டு உடையவர் கழல் பேணும் 	1427-3
 செல்வக் குடி நிறை நல் வைப்பு இடை வளர் சிவமே நிலவிய திருவீதி 	1427-4

 163. நவ மின் சுடர் மணி நெடு மாலையும் நறு மலர் மாலையும் நிறை திருவீதிப் 	1428-1
 புவனங்களின் முதல் இமையோர் தடமுடி பொருந்திய மணி போகட்டிப் 	1428-2
 பவனன் பணி செய வருணன் புனல் கொடு பணி மாறவும் அவை பழுதாம் என்று 	1428-3
 எவரும் தொழுது எழும் அடியார் திரு அலகு இடுவார் குளிர்புனல் விடுவார்கள் 	1428-4

 164. மேலம் பரதலம் நிறையும் கொடிகளில் விரி வெங்கதிர் நுழைவது அரிதாகும் 1429-1
 கோலம் பெருகிய திருவீதியை முறை குலவும் பெருமையர் பணிவுற்றே 	1429-2
 ஞாலம் திகழ் திரு மறையின் பெருகு ஒலி நலமார் முனிவர்கள் துதியோடும் 	1429-3
 ஓலம் பெருகிய நிலை ஏழ் கோபுரம் உறமெய் கொடு தொழுதுள்புக்கார் 	1429-4

 165. வளர் பொன் கனக மணி திரு மாளிகையினை வலம் வந்து அலமரு வரை நில்லா 1430-1
 அளவில் பெருகிய ஆர்வத்து இடை எழும் அன்பின் கடல் நிறை உடல் எங்கும் 	1430-2
 புளகச் செறி நிரை விரவத் திருமலி பொன் கோபுரம் அது புகுவார் முன் 	1430-3
 களனில் பொலிவிடம் உடையார் நடநவில் கனகப் பொது எதிர் கண்ணுற்றார் 	1430-4

 166. நீடும் திருவுடன் நிகழும் பெருகு ஒளி நிறை அம்பலம் நினைவுற நேரே 	1431-1
 கூடும் படி வரும் அன்பால் இன்புறு குணம் முன் பெறவரு நிலை கூடத் 	1431-2
 தேடும் பிரமனும் மாலும் தேவரும் முதலாம் யோனிகள் தெளிவு ஒன்றா 	1431-3
 ஆடுங்கழல் புரி அமுதத் திரு நடம் ஆரா வகை தொழுது ஆர்கின்றார் 	1431-4

 167. கையும் தலை மிசை புனை அஞ்சலியன கண்ணும் பொழி மழை ஒழியாதே 	1432-1
 பெய்யும் தகையன கரணங்களும் உடன் உருகும் பரிவின 	1432-2
 பேறு எய்தும் மெய்யும் தரைமிசை விழுமுன் பெழுதரும் மின்தாழ் சடையொடு 	1432-3
 ஐயன் திருநடம் எதிர் கும்பிடும் அவர் ஆர்வம் பெருகுதல் அளவு இன்றால் 	1432-4

 168. இத் தன்மையர் பல முறையும் தொழுது எழ என்று எய்தினை என மன்றாடும் 	1433-1
 அத்தன் திரு அருள் பொழியும் கருணையின் அருள் பெற்றிட வரும் ஆனந்தம் 	1433-2
 மெய்த் தன்மை யினில் விருத்தத் திருமொழி பாடிப் பின்னையும் மேல் மேலும் 	1433-3
 சித்தம் பெருகிய பரிவால் இன்புறு திரு நேரிசை மொழி பகர்கின்றார் 	1433-4

 169.  பத்தனாய்ப் பாட மாட்டேன் என்று முன் எடுத்துப் பண்ணால் 	1434-1
 அத்தா உன் ஆடல் காண்பான் அடியனேன் வந்தவாறு என்று 	1434-2
 இத்திறம் போற்றி நின்றே இன் தமிழ் மாலைப் பாடி 	1434-3
 கைத் திருத் தொண்டு செய்யும் காதலில் பணிந்து போந்தார் 	1434-4

 170. நீடிய மணியின் சோதி நிறை திரு முன்றின் மாடும் 	1435-1
 ஆடு உயர் கொடி சூழ் பொன் தேர் அணி திரு வீதி உள்ளும் 	1435-2
 கூடிய பணிகள் செய்து கும்பிடும் தொழிலர் ஆகிப் 	1435-3
 பாடிய புனித வாக்கின் பணிகளும் பயிலச் செய்வார் 	1435-4

 171. அருள் பெரு மகிழ்ச்சி பொங்க அன்னம் பாலிக்கும் என்னும் 	1436-1
 திருக் குறுந் தொகைகள் பாடித் திரு உழவாரங் கொண்டு 	1436-2
 பெருத்து எழு காதலோடும் பெரும் திருத் தொண்டு செய்து 	1436-3
 விருப்புறு மேனி கண்ணீர் வெண்ணீற்று வண்டலாட 	1436-4

 172. மேவிய பணிகள் செய்து விளங்குநாள் வேட்களத்துச் 	1437-1
 சேவுயர் கொடியார் தம்மைச் சென்று முன் வணங்கிப் பாடிக் 	1437-2
 காவியம் கண்டார் மன்னும் திருக்கழிப் பாலை தன்னில் 	1437-3
 நாவினுக்கு அரசர் சென்று நண்ணினார் மண்ணோர் வாழ 	1437-4

 173. சின விடை யேறுகைத் தோறும் மணவாள நம்பிகழல் சென்று தாழ்ந்து 	1438-1
 வன பவள வாய்திறந்து வானவர்க்கும் தான் அவனே என்கின்றாள் என்று 	1438-2
 அனைய திருப்பதிகம் உடன் அன்புறு வண் தமிழ் பாடி அங்கு வைகி 	1438-3
 நினைவரியார் தமைப் போற்றி நீடு திருப்புலியூரை நினைந்து மீள்வார் 	1438-4

 174. மனைப் படப்பில் கடல் கொழுந்து வளை சொரியும் கழிப் பாலை மழுங்கு நீங்கி 1439-1
 நனைச்சினை மென் குளிஞாழல் பொழில் ஊடு வழி கொண்டு நண்ணும் போதில் 	1439-2
 நினைப்பவர் தம் மனம் கோயில் கொண்டு அருளும் அம்பலத்து நிருத்தனாரைத் 	1439-3
 தினைத்தனையாம் பொழுது மறந்து உய்வேனோ எனப் பாடி தில்லை சார்ந்தார் 	1439-4

 175.  அரியானை என்று எடுத்தே அடியவருக்கு எளியானை அவர்தம் சிந்தை 	1440-1
 பிரியாத பெரிய திருத் தாண்டகச் செந்தமிழ் பாடிப் பிறங்கு சோதி 	1440-2
 விரியா நின்று எவ் உலகும் விளங்கிய பொன் அம்பலத்து மேலி ஆடல் 	1440-3
 புரியா நின்றவர் தம்மைப் பணிந்து தமிழால் பின்னும் போற்றல் செய்வார் 	1440-4

 176.  செஞ்சடைக் கற்றை முற்றத்து இளநிலா எறிக்கும் எனும் சிறந்த வாய்மை 	1441-1
 அருஞ்சொல் வளத் தமிழ் மாலை அதிசயமாம் படி பாடி அன்பு சூழ்ந்த 	1441-2
 நெஞ்சு உருகப் பொழி புனல்வார் கண் இணையும் பரவிய சொல் நிறைந்த வாயும் 	1441-3
 தம் செயலின் ஒழியாத திருப்பணியும் மாறாது சாரும் நாளில் 	1441-4

 177. கடையுகத்தில் ஆழியின் மேல் மிதந்த கழு மலத்தின் இருந்த செம்கண் 	1442-1
 விடை உகைத்தார் திரு அருளால் வெற்பரையன் பாவை திருமுலைப் பாலோடும் 	1442-2
 அடைய நிறை சிவம் பெருக வளர் ஞானம் குழைத்து ஊட்ட அமுது செய்த 	1442-3
 உடை மறைப் பிள்ளையார் திருவார்த்தை அடியார்கள் உரைப்பக் கேட்டார் 	1442-4

 178.  ஆழிவிடம் உண்ட வரை அம்மை திருப்பால் அமுதம் உண்ட போதே 	1443-1
 ஏழ் இசை வண் தமிழ் மாலை இவன் எம்மான் எனக் காட்டி இயம்பவல்ல 	1443-2
 காழி வரும் பெரும் தகை சீர் கேட்டலுமே அதிசயமாம் காதல் கூர 	1443-3
 வாழி அவர் மலர்க் கழல்கள் வணங்குவதற்கு மனத்து எழுந்த விருப்பு வாய்ந்த 	1443-4

 179. அப்பொழுதே அம்பலத்துள் ஆடுகின்ற கழல் வணங்கி அருள் முன் பெற்றுப் 	1444-1
 பொய்ப் பிறவிப் பிணி ஓட்டும் திருவீதி புரண்டு வலம் கொண்டு போந்தே 	1444-2
 எப் புவனங்களும் நிறைந்த திருப்பதியின் எல்லையினை இறைஞ்சி ஏத்திச் 	1444-3
 செப்பரிய பெருமையினார் திரு நாரையூர் பணிந்து பாடிச் செல்வார் 	1444-4

 180. தொண்டர் குழாம் புடை சூழத் தொழுத கரத்தொடு நீறு துதைந்த கோலம் 	1445-1
 கண்டவர் தம் மனம் கசிந்து கரைந்து உருகும் கருணை புறம் பொழிந்து காட்டத் 	1445-2
 தெண் திரைவாய்க் கல் மிதப்பில் உகைத்து ஏறும் திருநாவுக்கரசர் தாமும் 	1445-3
 வண் தமிழால் எழுது மறை மொழிந்த பிரான் திருப்புகலி மருங்கு சார்ந்தார் 	1445-4

 181. நீண்ட வரை வில்லியார் வெஞ்சூலை மடுத்து அருளி நேரே முன்னாள் 	1446-1
 ஆண்ட அரசு எழுந்து அருளக் கேட்டருளி ஆளுடைய பிள்ளையாரும் 	1446-2
 காண்டகைய பெரு விருப்புக் கைம் மிக்க திரு உள்ளக் கருத்தினோடு 	1446-3
 மூண்ட அருள் மனத்து அன்பர் புடை சூழ எழுந்து அருளி முன்னே வந்தார் 	1446-4

 182. தொழுது அணை உற்று ஆண்ட அரசு அன்பு உருகத் தொண்டர் குழாத்திடையே சென்று 1447-1
 பழுதில் பெரும் காதலுடன் அடிபணியப் பணிந்தவர்தம் கரங்கள் பற்றி 	1447-2
 எழுதரிய மலக்கையால் எடுத்து இறைஞ்சி விடையின் மேல் வருவார்தம்மை 	1447-3
 அழுது அழைத்துக் கொண்டவர்தாம் அப்பரே என அவரும் அடியேன் என்றார் 	1447-4

 183. அம்பிகை செம் பொன் கிண்ணத்து அமுத ஞானம் கொடுப்ப அழுகை தீர்ந்த 	1448-1
 செம்பவள வாய்ப்பிள்ளை திருநாவுக்கு அரசர் எனச் சிறந்த சீர்த்தி 	1448-2
 எம் பெரு மக்களும் இயைந்த கூட்டத்தில் அரன் அடியார் இன்பம் எய்தி 	1448-3
 உம்பர்களும் போற்றி இசைப்பச் சிவம் பெருகும் ஒலிநிறைத்தார் உலகம் எல்லாம் 	1448-4

 184.  பிள்ளையார் கழல் வணங்கப் பெற்றேன் என்று அரசு உவப்பப் பெருகு ஞான 	1449-1
 வள்ளலார் வாகீசர் தமை வணங்கப் பெற்றதற்கு மகிழ்ச்சி பொங்க 	1449-2
 உள்ளம் நிறை காதலினால் ஒருவர் ஒருவரில் கலந்த உண்மை யோடும் 	1449-3
 வெள்ள நீர் திருத்தோணி வீற்று இருந்தார் கழல் வணங்கும் விருப்பின் மிக்கார் 	1449-4

 185. அருள் பெருகு தனிக் கடலும் உலகுக்கு எல்லாம் அன்பு செறி கடலுமாம் எனவும் ஓங்கும் 1450-1
 பொருள் சமய முதல் சைவ நெறி தான் பெற்ற புண்ணியக் கண் இரண்டு எனவும் புவனம் உய்ய 1450-2
 இருள் கடு உண்டவர் அருளும் உலகம் எல்லாம் ஈன்றாள் தன் திரு அருளும் எனவும் கூடித் 1450-3
 தெருள் கலை ஞானக் கன்றும் அரசும் சென்று செம் சடை வானவர் கோயில் சேர்ந்தார் அன்றே 1450-4

 186. பண் பயில் வண்டு அறை சோலை சூழும் காழிப் பரமர் திருக் கோபுரத்தைப் பணிந்துள்புக்கு 	1451-1
 விண் பணிய ஓங்கு பெரு விமானம் தன்னை வலம் கொண்டு தொழுது விழுந்த எல்லைச் 1451-2
 சண்பை வரு பிள்ளையார் அப்பர் உங்கள் தம்பிரானாரை நீர் பாடீர் என்னக் 	1451-3
 கண் பயிலும் புனல் பொழிய அரசும் வாய்மை கலை பயிலும் மொழி பொழியக் கசிந்து பாடி 1451-4

 187. பெரிய பெருமாட்டியுடன் தோணி மீது பேணி வீற்று இருந்து அருளும் பிரான் முன் நின்று 1452-1
 பரிவுறு செந்தமிழ் மாலை பத்தி யோடும் பார் கொண்டு மூடி எனும் பதிகம் போற்றி 	1452-2
 அரிய வகை புறம் போந்து பிள்ளையார் திருமடத்தில் எழுந்து அருளி அமுது செய்து 1452-3
 மருவிய நண்புறு கேண்மை அற்றை நாள் போல் வளர்ந்து ஓங்க உடன் பல நாள் வைகும் நாளில் 1452-4

 188. அத்தன்மையினில் அரசும் பிள்ளையாரும் அளவளாவிய மகிழ்ச்சி அளவு இலாத 1453-1
 சித்த நெகிழ்ச்சியினோடு செல்லும் நாளில் திருநாவுக்கரசு திரு உள்ளம் தன்னில் 	1453-2
 மைத் தழையும் மணி மிடற்றர் பொன்னி மன்னிய தானங்கள் எல்லாம் வணங்கிப் போற்ற 1453-3
 மெய்த்து எழுந்த பெரும் காதல் பிள்ளையார்க்கு விளம்புதலும் அவரும் அது மேவி நேர்வார் 1453-4

 189.  ஆண்ட அரசு எழுந்து அருளக் கோலக் காவை அவரோடும் சென்று இறைஞ்சி அன்புகொண்டு 	1454-1
 மீண்ட அருளினார் அவரும் விடை கொண்டு இப்பால் வேத நாயகர் விரும்பும் பதிகளான 1454-2
 நீண்ட கருப் பறியலூர் புன்கூர் நீடு திருக் குறுக்கை திரு நின்றி யூரும் 	1454-3
 காண் தகைய நனிபள்ளி முதலா நண்ணிக் கண்ணுதலார் கழல் தொழுது கலந்து செல்வார் 1454-4

 190. மேவு புனல் பொன்னி இரு கரையும் சார்ந்து விடை உயர்த்தார் திருச் செம் பொன் பள்ளிபாடிக் 	1455-1
 காவுயரும் மயிலாடுதுறை நீள் பொன்னிக் கரைத் துருத்தி வேள்விக்குடி எதிர் கொள் பாடி 1455-2
 பாவுறு செந்தமிழ் மாலை பாடிப் போற்றிப் பரமர் திருப்பதி பலவும் பணிந்து போந்தே 1455-3
 ஆவுறும் அஞ்சு ஆடுவார் கோடிகாவில் அணைந்து பணைந்து ஆவடு தண் துறையைச் சார்ந்தார் 1455-4

 191.  ஆவடு தண் துறையாரை அடைந்து உய்ந்தேன் என்ற அளவில் திருத் தாண்டகம் முன்அருளிச் செய்து 	1456-1
 மேவு திருக் குறுந்தொகை நேர் இசையும் சந்த விருத்தங்கள் ஆனவையும் வேறு வேறு 1456-2
 பாவலர் செந்தமிழ்த் தொடையால் பள்ளித் தாமம் பல சாத்தி மிக்கு எழுந்த பரிவின் ஓடும் 1456-3
 பூ வயலத்தவர் பரவப் பல நாள் தங்கிப் புரிஉறு கைத் தொண்டு போற்றிச் செய்வார் 1456-4

 192. எறி புனல் பொன் மணி சிதறும் திரை நீர்ப் பொன்னி இடை மருதைச் சென்று எய்திஅன்பினோடு 	1457-1
 மறி விரவு கரத்தாரை வணங்கி வைகி வண் தமிழ்ப் பாமாலை பல மகிழச் சாத்திப் 	1457-2
 பொறி அரவம் புனைந்தாரைத் திரு நாகேச்சுரத்துப் போற்றி அரும் தமிழ் மாலை புனைந்துபோந்து 	1457-3
 செறி விரை நன்மலர்ச் சோலைப் பழையாறு எய்தித் திருச்சத்தி முற்றத்திற் சென்று சேர்ந்தார் 1457-4

 193. சென்று சேர்ந்து திருச் சத்தி முற்றத்து இருந்த சிவக் கொழுந்தை 	1458-1
 குன்ற மகள் தன் மனக் காதல் குலவும் பூசை கொண்டு அருளும் 	1458-2
 என்றும் இனிய பெருமானை இறைஞ்சி இயல்பில் திருப்பணிகள் 	1458-3
 முன்றில் அணைந்து செய்து தமிழ் மொழி மாலைகளும் சாத்துவார் 	1458-4

 194.  கோவாய் முடுகி என்று எடுத்துக் கூற்றம் வந்து குமைப்பதன் முன் 	1459-1
 பூவார் அடிகள் என்று அலைமேல் பொறித்து வைப்பாய் எனப் புகன்று 	1459-2
 நாவார் பதிகம் பாடுதலும் நாதன் தானும் நல்லூரில் 	1459-3
 வா வா என்றே அருள் செய்ய வணங்கி மகிழ்ந்து வாகீசர் 	1459-4

 195. நன்மை பெருகஅருள் நெறியே வந்து அணைந்து நல்லூரின் 	1460-1
 மன்னு திருத் தொண்டனார் வணங்கி மகிழ்ந்து எழும் பொழுதில் 	1460-2
 உன்னுடைய நினைப்பதனை முடிகின்றோம் என்று அவர்தம் 	1460-3
 சென்னி மிசைப் பாத மலர் சூட்டினான் சிவபெருமான் 	1460-4

 196.  நனைந்தனைய திருவடி என்தலைமேல் வைத்தார் என்று 	1461-1
 புனையும் திருத்தாண்டகத்தால் போற்றி இசைத்துப் புனிதர் அருள் 	1461-2
 நினைந்து உருகி விழுந்து எழுந்து நிறைந்து மலர்ந்து ஒழியாத 	1461-3
 தனம் பெரிதும் பெற்று வந்த வறியோன் போல் மனம் தழைத்தார் 	1461-4

 197. நாவுக்கு மன்னர் திரு நல்லூரில் நம்பர் பால் 	1462-1
 மேவுற்ற திருப் பணிகள் மேவுற நாளும் செய்து 	1462-2
 பாவுற்ற தமிழ் மாலை பாடிப் பணிந்து ஏத்தித் 	1462-3
 தேவுற்ற திருத்தொண்டு செய்து ஒழுகி செல்லு நாள் 	1462-4

 198. கருகாவூர் முதலாகக் கண்ணுதலோன் அமர்ந்து அருளும் 	1463-1
 திருவாவூர் திருப் பாலைத்துறை பிறவும் சென்று இறைஞ்சிப் 	1463-2
 பெருகு ஆர்வத் திருத் தொண்டு செய்து பெருந்திரு நல்லூர் 	1463-3
 ஒரு காலும் பிரியாதே உள் உருகிப் பணிகின்றார் 	1463-4

 199.  ஆளுடைய நாயகன் தன் அருள் பெற்று அங்கு அகன்று போய் 	1464-1
 வாளை பாய் புனல் பழனத் திருப் பழனம் மருங்கு அணைந்து 	1464-2
 காளவிடம் உண்டு இருண்ட கண்டர் பணிக் கலன் பூண்டு 	1464-3
 நீள் இரவில் ஆடுவார் கழல் வணங்க நேர் பெற்றார் 	1464-4

 200. அப்பதியைச் சூழ்ந்த திருப்பதியில் அரனார் மகிழும் 	1465-1
 ஒப்பரிய தானங்கள் உள் உருகிப் பணிந்தணைவார் 	1465-2
 மெய்ப்பொருள்தேர் நாவினுக்கு வேந்தர் தாம் மேவினார் 	1465-3
 செப்பருஞ்சீர் அப்பூதி அடிகள் ஊர் திங்களூர் 	1465-4

 201. அந்தணரின் மேம்பட்ட அப்பூதி அடிகளார் 	1466-1
 தம் தனயருடன் சாலை கூவல் குளம் தரு தண்ணீர்ப் 	1466-2
 பந்தர் பல ஆண்ட அரசு எனும் பெயரால் பண்ணினமை 	1466-3
 வந்து அணைந்த வாகீசர் கேட்டு அவர் தம் மனை நண்ண 	1466-4

 202. மற்றவரும் மனம் மகிழ்ந்து மனைவியார் மைந்தர் பெரும் 	1467-1
 சுற்றமுடன் களி கூரத் தொழுது எழுந்து சூழ்ந்து மொழிக் 	1467-2
 கொற்றவரை அமுது செயக் குறை கொள்வார் இறைகொள்ளப் 	1467-3
 பெற்ற பெரும் தவத் தொண்டர் திரு உள்ளம் பெறப் பெற்றார் 	1467-4

 203. காண்டகைமை இன்றியுமுன் கலந்த பெருங் கேண்மையினார் 	1468-1
 பூண்ட பெரும் காதலுடன் போனகமும் கறி அமுதும் 	1468-2
 வேண்டுவன வெவ்வேறு விதங்கள் பெற விருப்பினால் 	1468-3
 ஆண்ட அரசு அமுது செயத் திரு அமுதாம் படி அமைத்து 	1468-4

 204. திருநாவுக்கரசு அமுது செய்து அருள மற்றவர் தம் 	1469-1
 பெருநாமம் சாத்திய அப்பிள்ளைதனை அழைத்து அன்பு 	1469-2
 தருஞானத் திருமறையோர் தண்டலையின் வண்கதலிக் 	1469-3
 குரு நாளக் குருத்து அரிந்து கொண்டு வர தனிவிட்டார் 	1469-4

 205.  ஆங்கு அவனும் விரைந்து எய்தி அம்மருங்கு தாழாதே 	1470-1
 பூங் கதலிக் குருத்து அரியப் புகும் அளவில் ஒரு நாகம் 	1470-2
 தீங்கு இழைக்க அது பேணான் திரு அமுது செய்து அருள 	1470-3
 ஓங்கு கதலிக் குருத்துக் கொண்டு ஒல்லை வந்து அணைந்தான் 	1470-4

 206. தீய விடம் தலைக் கொள்ளத் தெருமந்து செழும் குருத்தைத் 	1471-1
 தாயகரத்தினில் நீட்டித் தளர்ந்து தனைத் தழல் நாகம் 	1471-2
 மேயபடி உரை செய்யான் விழக் கண்டு கெட்டு ஒழிந்தோம் 	1471-3
 தூயவர் இங்கு அமுது செயத் தொடங்கார் என்று அது ஒளித்தார் 	1471-4

 207. தம் புதல்வன் சவம் மறைத்துத் தடுமாற்றம் இலராகி 	1472-1
 எம் பெருமான் அமுது செய வேண்டும் என வந்து இறைஞ்ச 	1472-2
 உம்பர் பிரான் திருத்தொண்டர் உள்ளத்தில் தடுமாற்றம் 	1472-3
 நம்பர் திருவருளாலே அறிந்து அருளி நவை தீர்ப்பார் 	1472-4

 208. அன்று அவர்கள் மறைத்த அதனுக்கு அளவு இறந்த கருணையராய்க் 	1473-1
 கொன்றை நறும் சடையார் தம் கோயிலின் முன் கொணர்வித்தே 	1473-2
 ஒன்று கொலாம் எனப் பதிகம் எடுத்து உடையான் சீர் பாடப் 	1473-3
 பின்றைவிடம் போய் நீங்கிப் பிள்ளை உணர்ந்து எழுந்து இருந்தான் 	1473-4

 209. அரும் தனயன் உயிர் பெற்ற அது கண்டும் அமுது செயாது 	1474-1
 இருந்ததற்குத் தளர்வு எய்தி இடர் உழந்தார் துயர் நீங்க 	1474-2
 வருந்தும் அவர் மனைப் புகுந்து வாகீசத் திருமுனிவர் 	1474-3
 விருந்து அமுது செய்து அருளி விருப்பினுடன் மேவும் நாள் 	1474-4

 210. திங்களூர் தனில் நின்றும் திருமறையோர் பின் செல்லப் 	1475-1
 பைங்கண் விடைத் தனிப்பாகர் திருப்பழனப் பதி புகுந்து 	1475-2
 தங்கு பெரும் காதலொடும் தம் பெருமான் கழல் சார்ந்து 	1475-3
 பொங்கிய அன்புற வணங்கி முன் நின்று போற்றி இசைப்பார் 	1475-4

 211. புடை மாலை மதிக்கண்ணிப் புரிசடையார் பொன் கழல் கீழ் 	1476-1
 அடை மாலைச் சீலம் உடை அப்பூதி அடிகள் தமை 	1476-2
 நடைமாணச் சிறப்பித்து நன்மை புரி தீந்தமிழின் 	1476-3
 தொடைமாலைத் திருப்பதிகச் சொன்மாலை பாடினார் 	1476-4

 212. எழும் பணியும் இளம்பிறையும் அணிந்தவரை எம் மருங்கும் 	1477-1
 தொழும்பணி மேற் கொண்டு அருளி திருச்சோற்றுத் துறை முதலாத் 	1477-2
 தழும்புறு கேண்மையில் நண்ணித் தானங்கள் பல பாடிச் 	1477-3
 செம்பழனத்து இறை கோயில் திருத் தொண்டு செய்து இருந்தார் 	1477-4

 213. சால நாள் அங்கு அமர்ந்து தம் தலைமேல் தாள் வைத்த 	1478-1
 ஆலமார் மணி மிடற்றார் அணி மலர்ச் சேவடி நினைந்து 	1478-2
 சேலுலாம் புனல் பொன்னித் தென்கரை ஏறிச் சென்று 	1478-3
 கோல நீள் மணி மாடத் திரு நல்லூர் குறுகினார் 	1478-4

 214. அங்கு அணைந்து தம் பெருமான் அடி வணங்கி ஆராது 	1479-1
 பொங்கிய அன்பொடு திளைத்துப் போற்றி இசைத்துப் பணி செயும் நாள் 	1479-2
 தங்கு பெரும் காதலினால் தாமரை மேல் விரிஞ்சனொடு 	1479-3
 செங்கண் மால் அறிவரியார் திருவாரூர் தொழ நினைந்தார் 	1479-4

 215. நல்லூரில் நம்பர் அருள் பெற்றுப் போய்ப் பழையாறை 	1480-1
 பல்லூர் வெண்டலைக் கரத்தார் பயிலும் இடம் பல பணிந்து 	1480-2
 சொல்லூர்