தகடூர் (தர்மபுரி)

Dhakadur (Dharmapuri)

 
இறைவர் திருப்பெயர்		: மல்லிகார்ச்சுனர். 
இறைவியார் திருப்பெயர்		: காமாட்சியம்மை. 
தல மரம்			: வேளா மரம். (தற்போதில்லை) 
தீர்த்தம்				: 
வழிபட்டோர்			: ஐராவதம், ராமர், துர்வாசர், அர்ச்சுனன் 
வைப்புத்தலப் பாடல்கள்		: சுந்தரர் - வீழக் காலனைக் (7-12-1). 
dharumapuri temple

தல வரலாறு

 • இப்பதி இன்று 'தர்மபுரி' என்று வழங்குகிறது. அதியமான் ஆண்ட நகரம்.

 • இங்குள்ள அதியமான் கோட்டை - சொல் வழக்கில் திரிந்து 'அதமன் கோட்டை' என்றாயிற்று.

 • அதியமான் கோட்டை - முழுவதுமாக அழிந்து சுவடுகள் மறைந்து போயின. ஒரு சிறு கிராமம் மட்டுமே அங்குள்ளது.

 • ஐராவதம், ராமர் துர்வாசர், அர்ச்சுனன் முதலியோர் வழிபட்ட தலம்.

சிறப்புக்கள்

 • இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

 • மூலவர் சிவலிங்கத் திருமேனி; சுயம்பு மூர்த்தி.

 • ஒளவைப் பெருமாட்டிக்குத் தமிழின்பால் கொண்ட விருப்பத்தால், கிடைத்தற்கரிய நெல்லிக் கனியை தான் உண்ணாது - ஈந்த அதியமான் ஆண்ட பகுதி - தகடூர்.

 • "நீலமாமிடற்று ஒருவன் போல, மன்னுக பெரும" - என்று தமிழ் மூதாட்டி - ஒளவையாரால் வாயாரப் புகழப்பட்ட அதியமான் சிறந்த வள்ளல் ஆவான்; அவன் அட்சிபுரிந்த பதி.

 • "கோட்டைக் கோயில்" - "கோட்டை ஈஸ்வரன் கோயில்" - "தகடூர் காமாட்சி கோயில்" என்று கேட்டால்தான் மக்களுக்குத் தெரிகிறது. "கோட்டை சிவன் கோயில்" என்றே இக்கோயில் வழங்குகிறது.

 • மக்கள் அம்பாளை - தகடூர் காமாட்சி என்றழைக்கின்றனர்.

 • தலமரம் வேளா மரமாதலின் (ஒரு காலத்தில் வேளா மரக்காடாக இருந்திருக்கலாம்) இப்பகுதிக்கு வேளாவனம் என்றும்; சுவாமிக்கு வேளாலீஸ்வரர் என்ற பெயரும் சொல்லப்படுகிறது.

 • கோயிலில் "காடு வெட்டிச் சித்தரின்" ஜீவ சமாதி என்று சொல்லப்படும் சித்தலிங்கேஸ்வரர் (சிவலிங்க) சந்நிதியுள்ளது. ஒவ்வொரு மாதப் பிறப்பிலும் முதல் வழிபாடு இவருக்குத்தான் நடத்தப் பெறுகிறது. சுவாமி சந்நிதி மகாமண்டபத்தில் உள்ள கல் தூண்கள் சிற்பக்கலை மிகுந்தவை - வரலாறுகளைக் கொண்டவை - யோக நரசிம்மர் உருவமும் உள்ளது.

 • வாயிலின் இடப்பால் வீரபத்திரர் மூலவர் - கம்பீரமான தோற்றத்துடன் காட்சியளிக்கிறார்.

 • இங்குள்ள பைரவர் சந்நிதி விசேஷமானது. வாகனத்துடன், சூரிய சந்திரர் இருபுறமும் விளங்க, கோயிலின் குபேர பாகத்தில் எழுந்தருளியுள்ளார்.

 • அம்பாள் சந்நிதி பட்டத்து யானைகள் 18 தாங்குகின்ற அமைப்பில் உள்ளது. அம்பாள் காமாட்சி கருங்கல்லாலான ஆதார பீடத்தில் நின்று தரிசனம் தருகிறாள்.

 • அம்பாள் சந்நிதியின் முன்பாக மகாமண்டபத்தின் மேற்புறத்தில் - நடுவில் உமேசராகப் பெருமான் விளங்க, சுற்றிலும் அஷ்டதிக்குப் பாலகர்கள் இடம் பெற்றுள்ள சிற்பம் அருமையிலும் அருமை.

 • சுவாமி சந்நிதியிலும் மகா மண்டபத்தின் மேற்புறத்தில் நடுவில் சிவ பெருமான் தாண்டவ மூர்த்தியாகத் திகழச் சுற்றிலும் அஷ்டதிக்குப் பாலகர்கள் இடம் பெற்றுள்ள சிற்பம் அழகாகவுள்ளது.

 • இங்குள்ள கல்வெட்டுக்களில் சுவாமி பெயர் இராஜராஜேஸ்வர முடையார் என்று குறிக்கப்பட்டுள்ளது.

dharumapuri temple dharumapuri temple

குறிப்பு

 • தகடூர் என்பது தற்போதைய தருமபுரி என்றும்; வேதாரண்யத்திற்கு அருகிலுள்ள தகட்டூர் என்றும் இருவேறு கருத்துக்கள் உள்ளன.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
தர்மபுரி பேருந்து நிலையத்திலிருந்து - திருப்பத்தூர் சாலையில் வந்து - வேல் பால் டிப்போ என்ற இடத்தில் பிரியும் சாலையில் - இடது புறமாகச் சென்றால் தெருவின் கோடியில் கோயிலை அடையலாம்.

< PREV <
தகட்டூர்
Table of Contents > NEXT >
தஞ்சாக்கை